PDA

View Full Version : கோபம்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-12-2008, 05:25 PM
வருதலையுணர்த்தியபடி இருக்கும்
பாதச்சுவடுகளோ இன்னும் சலசல ஓசைகளோ
நிரம்பியேற்ற வண்ணம் அவன் வருதலிருப்பதில்லை

விருந்து கழிந்த திருமணப் பந்தியாய்
பனிக்காற்று பாதித்த ஓரிரு மாத சிசுப் பிண்டமாய்
அறியா முகவரியின் நிர்க்கதியற்ற ஏழைக் குடியானாய்
தான் மறைந்தும் மறையாதொரு நோயை
நிறைவாய் நிறுத்திப் போகிறான் எல்லா முறையும்!

காரணங்களன்றி அவன் வருதலும்
மா ரணங்களன்றி அவன் செல்தலும் அமைவதில்லை

நாவுகள் முரண்பட்டு மோதும் எந்நேரமும்
சுக்கிரன் உச்சியிலிருப்பான் அவனுக்கு
உருவமற்ற தனியவனாகத்தான் உருப் பெறுகிறான்
எழுச்சியுறும் எப்பொழுதாவதான வேளைகளில்
இரண்டு கைகளில் இறுக்கித் திணித்து விடுகிறான்
இயலுமாக விளையாதோர் அசுர பலத்தை!

இரண்டு கால்களும் நமதென்றாலும்
இறுக்கி இருத்தியமர்த்திக்கொண்டிருந்தாலும்
உடைத்துச் சீறிப் புறப்பட்டு விடுகின்றன
அவன் வழிகாட்டுதல்கள் நோக்கி

உக்கிரக போதையிலான தொடர் குடிகாரனாய்
நின்று ஆண்டுச் சென்ற அவனைப் பற்றி
வழிந்தோடிக் கிடக்கும் குருதிகளையும்
சிதறிக் கிடக்கும் இறைச்சித் துண்டுகளையும்
அவன் சென்ற பின்னரே வலியுணர்ந்து
அழுதரற்ற முடிகிறது

இனியுமவனை ஒருமுறையேனும் அண்டச் செய்யேனென்ற
அவன் ஒவ்வொரு செல்கையிலும் தெளியும் புத்தி
மகுடிப் பாம்பாய் பம்மிப் போகிறது
அவன் ஒவ்வொரு வருதலிலும்.

பாலகன்
24-12-2008, 05:38 PM
அலைகடல் ஓய்வதில்லை அதுபோலத்தான்.....

புயலுக்கு பின் அமைதிதான்.. ஆனாலும் மீன்டும் புயல் வருகிறதே...

அருமையான வரிகள் நண்பரே.... தொடரட்டும் உங்கள் கவிதை பணி....

கவிதந்த உங்கள் கைவிரல்களுக்கு செல்ல முத்தங்கள்

தமிழ்தாசன்
24-12-2008, 05:44 PM
வருதலும் போதலும்
தருதலும் பறித்தலும்
விதைத்தலும் அறுத்தலும்
சிரித்தலும் அழுதலும்............
.....
விதம் விதமாய் உணர்வுகளுக்கு உயிரூட்டும் உங்கள் பணி தொடரட்டும்.