PDA

View Full Version : மாயா...மாயா...சாயா...சாயா...!!!சிவா.ஜி
23-12-2008, 03:08 AM
“உங்க பிள்ளைதான்....ஆனா...இப்ப... என்னோட சொல்லுக்கு கட்டுப்படறவர். இப்ப....இப்ப... நான் சொன்னா...உங்க எல்லாரையும் விட்டுட்டு அப்படியே என் கூட வரத் தயாரா இருக்காரு உங்க மகன்...பாக்கனுமா அத்தை....”

ஒரு அலட்சியப் பார்வையோடு தன் மாமியாரைப் பார்த்து கைச் சொடுக்கலிட்டு மருமகள் சொல்கிறாள். விதிர்த்துப்போன அந்த பெரியமனுஷி...

“பொண்டாட்டி தாசனாயிட்டான் என் மகன். அவனுக்கு உயிர் குடுத்து, உருவம் குடுத்து, என் ரத்தத்தை பாலாக் குடுத்து...வளத்ததுக்கு...அவன் காட்டுற நன்றிக்கடனை.....பாக்க வெச்சுட்டியே....ஆண்டவா....நான் இன்னும் இந்த உயிரை வெச்சுக்கிட்டு இருக்கனுமா...?”

“அதான் பாத்துக்கிட்டிருக்கீங்கள்ல....என் உயிரை எடுத்துக்கோன்னு சொல்றவங்க உயிரை அந்த ஆண்டவன் எடுத்துக்கறதில்ல. நீங்க ரொம்ப நாள் உயிரோட இருப்பீங்க...ஆனா....உங்க மகன் என்னோடத்தான் இருப்பாரு...”

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தானொரு மனிதப்பிறவியே இல்லையென்பதைப்போல அந்த மகன் நின்று கொண்டிருந்தான்.

“ம் என்ன...அம்மா அழுததைப் பாத்ததும் மனசு கேக்கலையோ....போய் நம்ம பெட்டிப் படுக்கையெல்லாம் எடுத்து வைங்க....இன்னும் கொஞ்ச நேரத்துல நாம கெளம்பனும்..”

மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மண்புழுவாய் அவன் தங்கள் அறை நோக்கி நடந்தான்.

கேமரா....அவனை தொடர்ந்து சென்று அறைக்குள் விட்டுவிட்டு....மாமியாரை குளோஸப்பில் காட்டியது. பழைய திரைப்பட நடிகை.....முகத்தில் உணர்ச்சிகளை வெகு சிரத்தையாகக் காட்டியதை அப்படியே விழுங்கிக்கொண்டது.

அடுத்து மருமகளை..பார்த்தது. அந்த சீரியலில் அவளது மேனரிஸமாகக் காட்டப்பட்ட கைச் சொடுக்குதலை மற்றொருமுறை நேயர்களின் கண்களுக்கு மிக அருகில் செய்து காட்டியதை பதிவு செய்து கொண்டது.

“கட் இட்”

படபிடிப்புத் தளத்திலிருந்த அனைவரும் ரிலாக்ஸ் ஆனார்கள்.

களைப்புடன் தன் நாற்காலிக்குத் திரும்பி அயர்வாய் அமர்ந்தவளுக்கு அவளது மாமியார் சூடான காஃபி கொடுத்தார்.

“ ரொம்ப நல்லாருந்ததுமா..பெர்ஃபார்மென்ஸ்...உனக்காகவே...நீ நடிக்கறதுக்காகவே, இந்த சீரியல் சக்ஸஸ், இந்த சேனலோட டி.ஆர்.பி ரேட்டிங் ஏகத்துக்கு எகிறிடிச்சி. என் மருமகள்ன்னு சொல்லிக்கவே எனக்கு பெருமையா இருக்கு”

சொல்லிமுடித்த மாமியாரையே பார்த்துக்கொண்டிருந்தவளின் கண்களிலிருந்து கிளிசரின் போடாமலேயே கண்ணீர் பெருகியது.

“நான் ரொம்ப கொடுத்து வெச்சவ அத்தை. அம்மா மாதிரி...இல்ல இல்ல அம்மாவுக்கும் மேலா ஒரு மாமியார்...,ஆனா....என் வளர்ச்சியை சாதகமாக்கிகிட்டு என் உழைப்பை உறிஞ்சுற உங்க பிள்ளை....சீரியல்லதான் என் புருஷன் எனக்கு அடங்கியிருக்கார்...எனக்கு நிஜத்துல அமைஞ்சவனோ.......”

மருமகள் உதிர்த்த கண்ணீரில் தனதையும் கலந்த மாமியார்...அவளைப் பார்த்த பார்வையில் பரிதாபம் மட்டுமல்ல....குற்ற உணர்ச்சியும் கலந்திருந்தது.


தளத்தின் மற்றொரு பகுதி. வேறொரு சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோட் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது....

“அத்தான்...நீங்க எங்க வேணுன்னாலும் போங்க யார்கிட்ட வேணுன்னாலும் பழகுங்க...ஆனா தயவுசெஞ்சி தினமும் வீட்டுக்கு வாங்க...பிள்ளைங்க அப்பாவப் பாத்தே பல நாள் ஆகுது. ஒவ்வொரு நாளும் அதுங்க கேக்கற கேள்விங்களுக்கு பதில் சொல்ல முடியல..”

“இங்க பாரு...என்னால அப்படியெல்லாம் நடக்க முடியாது. என் இஷ்டத்துக்குத்தான் நடப்பேன். இஷ்டமிருந்தா இரு...இல்லன்னா உன் புள்ளங்களைக் கூட்டிக்கிட்டு எங்கயாவது போயிடு. சாகும்போதும் எனக்கு நிம்மதியில்லாம எங்கப்பன் உன்னை என் தலையில கட்டி வெச்சுட்டான். மூஞ்சியைப்பாரு....அமாவாசைக்கு பொறந்தவமாதிரி ஒரு கலரு...ச்சே...”

விசும்பலுடன் தன் முகத்தை முந்தானையால் மூடிக்கொண்டு அழுதவள்..சற்று அழுதுவிட்டு,

“நீங்க என்ன வேணுன்னாலும் சொல்லிக்குங்க. உங்களைவிட்டா எனக்கு வேற உலகம் இல்லை. என்னை எட்டி உதைச்சாலும் உங்க காலடியிலத்தான் விழுந்துகிடப்பேன்”

“அப்படியே விழுந்துகிட...நான் ஸ்வப்னிகாகிட்ட போறேன்.”

அவளை அப்படியே விட்டுவிட்டு விருட்டென்று கிளம்பிப்போனவனை அதே வேகத்தில் படமாக்கிக்கொண்டது கேமரா.

திரும்ப அவளைக்காட்டியபோது...அவள் பூஜையறையில் இருந்தாள்.

“ஆண்டவா...அவருக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது...நல்லாயிருக்கனும்” வேண்டிக்கொண்டே தன் தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டதை பதித்துக்கொண்டது.

“கட் இட்....பொம்பளைங்க எல்லாம் பிழியப் பிழிய அழப்போறாங்க. கல்பனான்னா ஒரு ஹோம்லி இமேஜ் இருக்கு. சின்னத்திரையின் கண்ணகின்னு பட்டம்ன்னா சும்மாவா..அசத்திட்ட கல்பனா”

சொன்ன இயக்குநரைப் பார்த்து,

“இருக்குற இமேஜை அப்படியே காசாக்கிடனும் சார். இன்னைக்கு நீங்க ஃப்ரீயா...ரொம்பநாள் ஆச்சு உங்க ஃபார்ம் ஹவுஸ்க்கு போய். மொதல்லபோய் இந்த கறுப்பு மேக்கப்பை கலைக்கனும்..என்ன சார்,,,ஃப்ரீயா?”

அவள் கண்களில் இருந்தக் கிறக்கத்தைப் பார்த்ததும்....

பேக்கப்.....என்றார்.


“எங்கய்யா அந்த சுதாகர்? அடுத்தவாரத்துல நம்ம சீரியல் முடியுது. அடுத்த சீரியலுக்கு அட்வான்ஸும் வாங்கிட்டேன். இன்னும் கதை ரெடியாகல....போனைப்போடுய்யா...”

அலறிய பிரபல சீரியல் கதாசிரியர் காவிநிலாவின் நிலை பார்த்து உடனடியாக அந்த சுதாகரனை அழைக்க அலைபேசியின் பொத்தான்களை அமுக்கினார் அவரது உதவியாளர்.

“ஆப்பேய்...நேனு இக்கடனே உன்னானு....ஆஃப் பண்ணு நான் இங்கதான் இருக்கேன்”

என்று தெலுங்கில் சொல்லிக்கொண்டு வந்த சுதாகரன்,

“என்னா சார்...எனிக்கி ஒரு வாட்டி சொல்லிட்டா...எக்கடனிஞ்சாலும்...எவரையாயினு கொண்டார மாட்டனா? எந்துக்கு பந்தப்படுத்துன்னாவு...ஏம் சாரு எதிக்கி கவல..ஈ பின்னாடைச் ச்சூடு...பாரு சாரு....இந்த பையன்...கொத்ததா...அதான் சாரு புதுக் கதை வெச்சிருக்கான். மஞ்சி நல்ல ரைட்டரு...வைச்சிக்கோங்கோ சார்”

சுதாகரன் கொண்டு வந்த பையனைப் பார்த்த காவிநிலா...அவன் முகத்தில் ஒரு ஸ்பார்க்கைப் பார்த்து, உடனடியாக தீர்மானித்தார். தொடர்ந்து,

“என்னப்பா உன் பேரு?”

“மதிவாணன் சார்”

“சரி சுதாகர் எல்லாத்தையும் சொன்னாலில்ல?”

“சொன்னாரு சார்.”

“ உன் கதையையும் ஒரு நாள் நானே எடுக்கிறேன்யா...ஆனா அதுவரைக்கும் எனக்கு ரைட்டரா இரு. ஒரு எபிசோடுக்கு 500 ரூபா குடுக்கறேன். ஓக்கேவா”

மிக மிக அடிபட்ட வேதனையை முகத்தில் பிரதிபலித்த மதிவாணன்...வீட்டு நிலையை எண்ணி சரியென தலையாட்டினான்.

“சரி அப்புறமென்னய்யா...தம்பிகிட்ட இருக்கிற கதையை வாங்கிக்குங்க....சின்னத்திரைக்கு ஏத்த மாதிரி செண்டிமெண்ட் மிக்ஸ் பண்ணி ரெடி பண்ணுங்க...அப்புறம் பாக்கலாம்ப்பா....என்னா பேர் சொன்ன...”

“மதிவாணன் சார்”

பரிதாபமாக சொன்னவனைப் பரிகாசமாகப் பார்த்துவிட்டு...ப்ரொடெக்*ஷன் மேனேஜரிடம்,

“சாப்பிடலைப் போலருக்கு அட்வான்ஸா ஒரு 300 ரூபா குடுத்தனுப்பு சுந்தரம்”

தலையை சொறிந்துகொண்டு முன்னால் வந்து நின்ற சுதாகரனைப் பார்த்ததும்,

“அடடா...உன்ன மறந்துட்டேனேயா....சம்பத்...இவனுக்கு பத்தாயிரம் குடுத்தனுப்புயா...சர்தானா சுதாகரா...”

“அலாகே சார்...உங்குளுக்கு இல்லாம எவிரிக்கு நான் உத்வி ச்செய்யால...”

அப்படியே ஆகட்டும் சார். உங்களுக்கு இல்லாமல் வேறு யாருக்கு நான் உதவி செய்வேன்....என்று சொன்ன சுதாகர் ஒரு கதை புரோக்கர். இயக்குநராகும் ஆசையில் தன் கற்பனைகளை, தன் உழைப்பைக் காகிதத்தில் எழுத்தாக்கி பட்டணம் வரும் மதிவாணன் போன்ற இளைஞர்களை....எவ்வளவு முயன்றும் ஒரு எண்ட்ரி கிடைக்காத இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களது எழுத்துக்களை பிரபல கதாசிரியர்களுக்கு விற்கும் ஒரு தரகன்.


அடுத்த ஸ்டுடியோவில்...பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் மெகாத்தொடரின் படபிடிப்புத்தளம்.

வெள்ளியன்று கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடையளித்த நேயர்கள்......என்று உண்மையாகவே பதிலளித்த யார் பெயருமில்லாமல்.....

ஆர்.ஜெயலக்*ஷ்மி, பேராவூரணி
எஸ் சம்பத், திருவள்ளூர்
என். அங்கமுத்து, தண்டையார்பேட்டை....

அறிவிப்பு காமிராவில் பதிவானவுடன்..கலைமோகன் என்ற செய்தி தொடர்பாளன்,

”நீங்க குடுத்த லிஸ்ட் சரியாயிருக்காய்யா? ”
அப்பாறமா...என் வூட்டுக்காரி பேரு வர்ல...எங்க மச்சினிச்சி பேரு வர்லன்னு ராவுடி பண்ணக்கூடாது.”

என்று அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கேட்டதும்,

“அண்ணே என் ஆளு பேரு மட்டும் மிஸ்ஸிங்ன்னே...”

என்று அசடு வழிய சொன்ன லைட் பாயைப் பார்த்து...

“த்தோடா....பச்சப்புள்ளைக்கு ஒரு டாவா....எப்ட்றா மிஸ் ஆச்சு? என்னா பேரு?”

“திவ்யாண்ணே...அயனாவரம்....ரயில் கல்யாணமண்டபத்துக்கு பக்கத்துல கீறா....அவங்க நைனா கூட ஐ.சி.எஃப்ல கலாசியாக் கீறார்ண்ணே...”

“ஏம்ப்பா...இந்தபேரையும் சேத்துக்கப்பா....டைட்டில் சேகர் எங்கப்பா...டே.... பாடு...இத்தையும் சேத்துக்கடா”

‘சரிண்ணே..”

“ஸ்பான்ஸர்காரங்க அவங்களுக்கு பரிசு...இன்னாடா...கிப்ட்டுக்கு பரிசுதான?..அனுப்பிடுவாங்கோ...டே இன்னா திவ்யாவுக்கு பிரைஸ் கெடைச்சதும் எங்க இட்னு போற...?”

“போங்கண்ணே......”


இசையமைப்பாளர் மாணிக்ராஜ், தன் உதவியாளரிடம்,

“மணி.....அடையாறு ஆனந்தன்....தொந்துருவு குடுக்குருராருடா....அவரு சீரியலுக்கு டைட்டில் சாங் சும்மா நச்சுன்னு வோணுன்னு.....இன்னா பண்றதுன்னு தெர்ல....சரி ந்தா....இந்தப்பாட்டைக் கேளு....”

என்பதுகளில் எல்லோரையும் மயக்கிய ஒரு பாடல் ஒலித்தது....

‘சார் இது ராஜாசார் பாட்டுசார்”

‘தெரியுண்டா....டெம்போ 14...கீ ஃப்ளாட் மேஜர்.....அத்த அப்பிடியே உல்டா பண்ணு....ஃப்ளாட் மேஜரை சி மேஜராக்கு...டெம்ப்போவை 16 ஆக்கு...தின் தின் தினக்கு..தின்னாங்கறத... அப்பிடியே திந்தின்...தினக்கு திந்தின் தினக்கு தினக்கு தின்தின்...அப்டி போடு....அப்படியே டெம்போ எகுறனும்....ஒம்போதுமணிக்கு டி.வி ஆன் பண்ணா...நம்ம பாட்டு அதுரனும்”

சொன்ன மாணிக்ராஜை...கேவலமாய் நினைத்து...சிரிப்போடு பார்த்த மணி....ஆர்க்கெஸ்ட்ராவைக் கூட்டினான்.நானாட...நீயாட....நிகழ்ச்சிக்கு கைதட்ட வரவழைக்கப்பட்டவர்களில் நிகழ்ச்சி முடிந்து, பணத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்த ஷாகுல்...சத்தமாகப் பாடிக்கொண்டு வந்தான்......

“ஒண்ணுமே புரியல ஒலகத்துல
என்னமோ நடக்குது.....மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல ஒலகத்துல........”

ஆதவா
23-12-2008, 04:34 AM
அடுத்தடுத்த காட்சிகளை கண்முன் படமாக்கிவிட்டு, இழுத்துப் போர்த்திய முடிவை இழுக்காமல் கொடுத்த உங்களுக்கு எப்படி பாராட்டளிப்பதென்றே தெரியவில்லை.

முதல் சீரியலில் பொண்டாட்டி தாசனாயிட்டான் மகன் என்று உருகும் அன்னை... அவளின் சுயநலத்தை கவனிக்காமல் விட்டுவிட்டாளோ என்று அஞ்சவைக்கிறது.. ஏன்? திருமணம் ஆனபின்பும் அன்னையையே நினைத்து உருகவேண்டுமா என்ன?

சினிமா எனும் உலகில் நடக்கும் அவசர கொடுமைகள். எத்தனைப் பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ உடல் இழந்திருக்கலாம். அது பணயம் போன்றூ... அதை வைத்து அடுத்த மூவ்மெண்ட்...

மதிவாணன்///// (நம்ம மதியைத்தான் சொல்றீங்களா?)

அழகான மொழி கையாடல் கதையில் யதார்த்தமாக அமர்கிறது. எவ்வளவோ பெரிய ஹிட் கொடுத்த படங்களின் கதாசிரியர், அப்படம் பார்க்க எவ்வளவு சிரமப்பட்டாரோ என்னவோ?

அடுத்து, பரிசு ஏமாற்றல்.. இது நடக்கிறதோ எனும் சந்தேகம் இருக்கிறது... பலருக்கும். இசையமைப்பில் உருவல்... எத்தனை நாளைக்கு ?

மொத்தத்தில் வெகு யதார்த்தமாகக் கதையைப் பின்னி, அழகு முடிச்சு போட்டு, ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்தி... சினி உலகத்திற்கு பல சின்ன ஊசிகளைக் குத்தியதைப் போன்று இருக்கிறது கதை..

அழகான எழுத்து நடை, இயல்பான பாத்திரங்கள், மொழி லாவகம், சறுக்கிடாத பாந்தம், இறுதி வரையிலும் இழுத்து பொட்டில் அடிக்கும் சுரத்து, குறுங்கதைகள் இழைத்துப் பின்னிய கரு என அனைத்தும் அருமை..

வாழ்த்துக்கள்..

ராஜா
23-12-2008, 05:22 AM
தன் பெயருக்குப் பின்னால் மூன்றாவது கணவனின் பெயரைப் போட்டுக்கொண்டு, ( கதையில் வரும் கணவனின் இரண்டாவது திருமணத்தைச் சாடி கைதட்டல் வாங்கும்) பத்தினி வேடம் கட்டும் சிலரின் நிதர்சனம் காட்டும் நிஜம்....! (கதையல்ல.. நிஜம்..!)

நல்லா பார்த்தீங்களா சிவா..? பாடியது சாகுல்தானா.. இல்லே வேறு யாராவதா..?

:)

சிவா.ஜி
23-12-2008, 06:14 AM
நன்றி ஆதவா...அந்தத்துறையிலிருப்பவர்கள் சிலர் சொல்லியதைக் கேட்டும், எனக்குத் தெரிந்ததை வைத்தும் எழுதினேன். கோஸ்ட் ரைட்டர் என்பவர்கள் இப்போதும் திரைத்துறையில் இருக்கிறார்கள். யாரோ தயவால்..பெயர் வாங்கும் பெரியமனிதர்களும் நிறைய இருக்கும் அந்த உலகத்தின் மாயைகளில் இவை மிகச்சிலவே.

விளக்கமான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
23-12-2008, 06:15 AM
தன் பெயருக்குப் பின்னால் மூன்றாவது கணவனின் பெயரைப் போட்டுக்கொண்டு, ( கதையில் வரும் கணவனின் இரண்டாவது திருமணத்தைச் சாடி கைதட்டல் வாங்கும்) பத்தினி வேடம் கட்டும் சிலரின் நிதர்சனம் காட்டும் நிஜம்....! (கதையல்ல.. நிஜம்..!)

நல்லா பார்த்தீங்களா சிவா..? பாடியது சாகுல்தானா.. இல்லே வேறு யாராவதா..?

:)

ஹா...ஹா...அரசிகளின் பொழுதுபோக்கே கணவனை மாற்றுவதுதானே....

சாகுல் இல்லையென்றால் உங்கள் மனதில் யார் ராஜாசார்?

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

Narathar
23-12-2008, 07:46 AM
ஸ்டுடியோ புளோருக்கும்,
புரடக்ஷன் ஹவுஸ்களுக்கும்
எங்களை அழைத்துச்சென்றமைக்கு நன்றி சிவா.ஜி

உங்கள் கதையுத்தி புதிதாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள்.....

கனவுத்தொழிட்சாலைக்குள் நடக்கும் பல அநியாயங்களை கோடிட்டுக்காட்டியுள்ளீர்கள். ஆனால் இன்னும் ஆயிரம் அவலங்கள் அங்கு தொடரத்தான் செய்கின்றன்..

vijima
23-12-2008, 08:01 AM
நிதர்சனமான உண்மை

ரங்கராஜன்
23-12-2008, 10:08 AM
இந்த மாதிரி ஒரு கருவை யோசிச்சதுக்கு ஒரு சபாஷ், அதை வித்தியாசமான திரைகதையில் சொன்னது ஒரு சபாஷ். சின்னத்திரை நடிகர்களின் மனநிலையை கண்முன் கொண்டு வந்ததுக்கு ஒரு சபாஷ். தொடருங்கள்

நிரன்
23-12-2008, 07:38 PM
மற்றவர் உழைப்பை பணமாக்கும் வியாபாரிகள் மத்தியில் பகலில் தெரியும்
மின்மினிபோல இருக்கவேண்டியதுதான் சினிமாவில் இருக்கும் பலரின் வாழ்க்கை

தொழிலுக்கு மட்டுந்தான் பத்தினி வேடம் நியவாழ்க்கையில் அதை
எப்படிக் கூறுவது என எனக்குத்தெரியவில்லை.. ஒரு அப்பட்டமான
உண்மைக்கதை எவரும் மறைக்கவும் மறுக்கவும் முடியாத செயற்பாடுகள்....
இதில் செயல்படுபவா்கள் மட்டுமே மறைக்கப்படுகின்றனர்...


சிறிது நேரம் சினிமா உலகை மிதந்தது போன்றிருந்தது


நன்றி சிவா அண்ணா....

சிவா.ஜி
24-12-2008, 02:58 AM
கனவுத்தொழிட்சாலைக்குள் நடக்கும் பல அநியாயங்களை கோடிட்டுக்காட்டியுள்ளீர்கள். ஆனால் இன்னும் ஆயிரம் அவலங்கள் அங்கு தொடரத்தான் செய்கின்றன்..

ஆமாம் நாரதரே....இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இது மிகக்குறைவுதான். பாராட்டுக்கு நன்றி நாரதரே.

சிவா.ஜி
24-12-2008, 03:01 AM
நன்றி சகோதரி விஜிமா.

மிக்க நன்றி மூர்த்தி.(நீங்கள் டக்ஸ் ஆனாலும் எங்களுக்கு எப்போதும் மூர்த்திதான்)

மிக்க நன்றி நிரஞ்சன். போலிமுகங்கள் எங்குமுள்ளது. ஆனாலும், திரைத்துறையில் மிக அதிகம்

aren
24-12-2008, 03:12 AM
வாவ்!! என்று சொல்லவைக்கும் சிறுகதை. அருமையாக கதையை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
24-12-2008, 03:45 AM
வாவ்!! என்று சொல்லவைக்கும் சிறுகதை. அருமையாக கதையை எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

மிக்க நன்றி ஆரென்.

(பணி பளு அதிகமா....? எப்போது துபாய் வருகிறீர்கள்?)

மதி
24-12-2008, 04:16 AM
நேற்றே படித்தேன். பின்னூட்டமிட முடியவில்லை. வித்தியாசமான கதையோட்டம். வெவ்வேறு முகங்களின் பிரதிபலிப்பாக இந்தக்கதை. சின்னத்திரையும் வெள்ளித்திரையும் இப்படித் தான் போல என்று எண்ண வைக்கும் கதை.

வாழ்த்துகள் சிவாண்ணா.

அன்புரசிகன்
24-12-2008, 04:29 AM
திரைக்குப்பின்னான உண்மைகளை காட்டியிருக்கிறீர்கள். உங்க கதை என்றால் சொல்லவேண்டுமா........... அதுசரி மெய்யாலுமே கடைசியா பாட்டுப்படிச்சது யாரு???

சிவா.ஜி
24-12-2008, 04:47 AM
நன்றி மதி. இவ்வளவுதானா...இன்னும் என்னவெல்லாமோ நடக்குது....என்னத்தச் சொல்ல என்னத்த விட....முடி..................ல....

சிவா.ஜி
24-12-2008, 04:49 AM
அதென்ன அன்பு ராஜாசாரும் அப்படி கேட்டார்...நீங்களும் கேக்கறீங்க...அப்ப பாட்டு படிச்சது யாரு...யாரு....யாரு....???

நன்றி அன்பு.

அன்புரசிகன்
24-12-2008, 05:04 AM
அதென்ன அன்பு ராஜாசாரும் அப்படி கேட்டார்...நீங்களும் கேக்கறீங்க...அப்ப பாட்டு படிச்சது யாரு...யாரு....யாரு....???


எல்லாம் ஒரு டவுட்டுத்தான்... :D

poornima
24-12-2008, 06:45 AM
சின்னத்திரை - வண்ணத்திரையின் அடுத்தடுத்த பரிமாணங்களை அழகாய் அடுக்கி அதிலேயே ஒரு சிறுகதை செய்திருக்கிறீர்கள்.. பேசாமல் நிஜமும் நிழலும் என இந்த கதைக்கு பெயர் கொடுத்திருக்கலாம்..

பல்வேறு சம்பவங்கள் அப்படியும் - இப்படியுமாக.. இந்த சிறுகதையில் ஒரு சிறப்பு இருக்கிறது சிவாஜி.. சம்பவங்களை உண்மையாய் எழுதினாலும் - கற்பனையாய் எழுதினாலும் அல்லது கலந்து எழுதினாலும் கதை சொல்லும் நீதி மாறவே மாறாது..
நான் சொல்வது சரியா? :-)

சிவா.ஜி
24-12-2008, 03:05 PM
சின்னத்திரை - வண்ணத்திரையின் அடுத்தடுத்த பரிமாணங்களை அழகாய் அடுக்கி அதிலேயே ஒரு சிறுகதை செய்திருக்கிறீர்கள்.. பேசாமல் நிஜமும் நிழலும் என இந்த கதைக்கு பெயர் கொடுத்திருக்கலாம்..

பல்வேறு சம்பவங்கள் அப்படியும் - இப்படியுமாக.. இந்த சிறுகதையில் ஒரு சிறப்பு இருக்கிறது சிவாஜி.. சம்பவங்களை உண்மையாய் எழுதினாலும் - கற்பனையாய் எழுதினாலும் அல்லது கலந்து எழுதினாலும் கதை சொல்லும் நீதி மாறவே மாறாது..
நான் சொல்வது சரியா? :-)

உண்மைதான் பூர்ணிமா. நிஜமும் நிழலும் கலந்ததுதான் நாம் பார்க்கும் இந்த உலகம். உண்மையும் கற்பனையும் கலந்ததுதான் கதைகள். இதுவும் அதில் ஒன்றே. மிக்க நன்றி பூர்ணிமா.

(நீண்ட நாட்களாக உங்களைக் காண முடியவில்லையே....பணிப்பளுவா...அர்த்தம் பொதிந்த உங்கள் பின்னூட்டத்திற்காக பல படைப்புகள் இங்கே காத்திருக்கின்றன)

Keelai Naadaan
26-12-2008, 04:09 PM
நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையில் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது கதை.

திரைப்படம் உருவாகும் இடத்தில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வட்டார வழக்கு வசனங்கள்....

அருமை..பாராட்டுக்கள்:icon_b::icon_b:

சிவா.ஜி
27-12-2008, 04:03 AM
மிக்க நன்றி கீழைநாடான். உங்களின் பாராட்டுக்கள் உற்சாகப்படுத்துகிறது.

மதுரை மைந்தன்
27-12-2008, 05:57 AM
திரைகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்.

உங்க கதையை படித்த போது எனக்கு இந்த பழைய ஆனந்த விகடன் ஜோக் ஞாபகம் வந்தது.

நணபர் படத்தயாரிப்பாளரிடம்: உங்க படத்தில அடிக்கடி ஒரு டெம்போ குறுக்கே ஓடிக்கிட்டிருக்கே ஏன்

தயாரிப்பாளர்: என்னோட முந்தைய படத்தில டெம்போவே இல்லைனு விமரிச்சாங்க அதனால தான்.

நல்ல கதை பாராட்டுக்கள்

poornima
27-12-2008, 06:05 AM
(நீண்ட நாட்களாக உங்களைக் காண முடியவில்லையே....பணிப்பளுவா...

விசாரிப்புக்கு நன்றி.. கொஞ்சம் சுணக்கமாகத்தான் இருந்துவிட்டேன்.. இனி அடிக்கடி வர முயற்சிக்கிறேன்

அர்த்தம் பொதிந்த உங்கள் பின்னூட்டத்திற்காக பல படைப்புகள் இங்கே காத்திருக்கின்றன)

ஆ...ஆஆ.. இதானே வேணாங்கறது.. :-)

சிவா.ஜி
27-12-2008, 06:06 AM
ஹா...ஹா...நல்ல காமெடி. நானும் முன்பு வாசித்திருக்கிறேன். பாராட்டுக்கு நன்றி மதுரைமைந்தரே.

shibly591
27-12-2008, 07:27 AM
நல்லதொரு படைப்பு சிவா அண்ணா...

உங்கள் எழுத்தில் மின்னும் மறைப்பொருள் யதார்த்தம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது..அதுதான் உங்கள் சிறப்பு என்பது எனது அபிப்பிராயம்..

இதுபோல இன்னும் படைக்க வாழ்த்துகிறேன்..

சிவா.ஜி
27-12-2008, 07:56 AM
நல்ல படைப்பாளிகளின் பாராட்டைப் பெறுவது மனதுக்கு இதமான ஒன்று. உங்கள் பாராட்டிலும் அதைப் பெற்றேன். மிக்க நன்றி ஷிப்லி

MURALINITHISH
29-12-2008, 08:10 AM
நிழல்களுக்கு இருக்கும் மரியாதைகள் என்றுமே நிஜத்திற்க்கு கிடைப்பதில்லை கொட்ட கொட்ட குனியும் பெண்ணுக்கு கொட்டு கொண்டே இருக்கும் திமிராய் இருக்கும் அனைவருக்கும் அடங்கும் உலகம் நல்லவர்கள் தோற்பதில்லை அது அந்த காலம் நல்லவர்கள் நிம்மதியாக வாழ்வதில்லை

சிவா.ஜி
29-12-2008, 08:43 AM
நல்ல கருத்துக்கள் அடங்கிய உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் முரளி.

இளசு
01-04-2009, 08:24 PM
பலவித நிகழ்வுகள்...
நூலாய் ஊடாடும் முரண் எனும் உண்மையே கோர்ப்பு..

''திரைக்கதை'' யுத்தி - இக்கதையின் வெற்றிச் சக்தி!

பாராட்டுகள் சிவா!

samuthraselvam
02-04-2009, 08:00 AM
வித்யாசமான கதை சிந்தனை...
அதுவும் தலைப்பு மிகவும் பொருத்தம்...
பொது வாழ்வில் ஒரு மாதிரியும் சொந்த வாழ்வில் ஒரு மாதிரியும் வாழ்பவரின் சூழ்நிலைகளை வெவ்வேறு சூழலில் காட்டியமைக்குப் பாராட்டுக்கள் அண்ணா....

சிவா.ஜி
09-04-2009, 06:57 PM
இத்தனைநாள் என் கண்களில் படவேயில்லை மன்னிக்கவும் தங்கையே.

உன் பாராட்டுக்கு மிக்க நன்றி லீலும்மா.