PDA

View Full Version : நாமெல்லாம் தமிழர்கள்...சசிதரன்
22-12-2008, 01:21 PM
நமக்கு உண்ண உணவு கிடைக்கும் வரை...
எவன் பட்டினியில் செத்தால் நமக்கென்ன.
இறுக்க மூடியிருக்கும் நம் கண்களில் இருந்து...
இன்னும் ஏன் கண்ணீர் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழன் என்று சொல்லி எங்கு நிமிர்ந்தாலும்...
அங்கு அவர்கள் தலை கொய்யப்படுகிறது..
'செல்'லடிப்பதில் சிதறும் அவர்கள் உடல்கள்
நம் உணவு மேசைகளில் விழாதவரை...
அதைப்பற்றி நமக்கென்ன...

பிஞ்சுக் குழந்தைகளும் செத்து மடிகிறார்களாம்...
இங்கு வரை இரத்த வாடை வீசினாலும்...
நாம் மூக்கை மூடிக்கொள்வோம்.
நம் குழந்தையா என்ன...
இன்னுமா நமக்கு இதயம் உண்டென நம்புகிறார்கள்...

அங்கே இருப்பவர்கள் நம் உறவுகளாம்...
அங்கே சிந்துவது நம் சொந்தங்களின் இரத்தமாம்...
அங்கே வீடு இழந்து நிற்பது நம் சகோதரர்களாம்...
என்னவாயிற்று இவர்களுக்கு...
நம்மை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
தன் இனம் அழிவதை... தானே பார்க்கும் பெருமைமிக்க
தமிழர்கள் நாமென்பதை மறந்துவிட்டார்களா...

நம் வீட்டினில் குண்டு போடாத வரை...
நம் குழந்தைகள் காயப்படாதவரை...
நாம் உறவுகள் இழந்து தனியாகும் வரை...
நம் உடல்கள் சிதறி நாம் இறக்காத வரை...
நமக்கெதற்கு கவலை..

இன்னும் நம்மை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்......
நாமெல்லாம் 'மற'த்தமிழர்களாம்.
சீக்கிரமே மாற்ற சொல்வோமா......
அடி வாங்கி அடி வாங்கி...
மனமும் மானமும் மரத்துப் போன
'மர'த்தமிழன் என்று...

ரங்கராஜன்
23-12-2008, 02:52 PM
தமிழன் என்று சொல்லி எங்கு நிமிர்ந்தாலும்...
அங்கு அவர்கள் தலை கொய்யப்படுகிறது

அருமையான வரிகள், நண்பரே நீங்கள் இலங்கை தமிழரா?, வார்த்தைகளில் இருக்கும் வலிகள் படிக்கும் பொழுது கண்களின் வழியாக இதயத்தில் இறங்குகிறது இடியாக............ நல்ல படைப்புகளை பாராட்டும் நம் மன்ற உறவுகளின் கண்களில் இந்த கவிதை படவில்லையோ ??????????????????????

அக்னி
23-12-2008, 03:10 PM
”நாமெல்லாம் தமிழர்களா”
என்ற உங்கள் வேதனை,
”நாமெல்லோ தமிழர்கள்”
என்ற பெருமையாக மாறும்.

வலியில் வழி தேடும் வரிகள்...

புதைக்கப்பட்ட உணர்வுகள்
புதைந்தே போகவில்லை...

இது துளிர்க்கும் காலம்.
விரைவில் வரும் வசந்தகாலம்.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
அதுவரை எதிர்பார்த்திருப்போம்.

பாராட்டுக்கள் சசிதரன் அவர்களே...

நிரன்
23-12-2008, 03:18 PM
இக்கவியை படிக்கும் பொளுது தமிழீழத்தில் அல்லலுறும் நம் உறவுகள்
வாழ்க்கை கண்முன்னே தோன்றுகிறது.....

அருமையான வரிகளில் வலிகள்
பாராட்டுக்கள் சசி அவர்களே------:icon_b:

அதே வேளை எம்முறகளுகளுக்காக கண்ணீரும்

virumaandi
23-12-2008, 05:32 PM
இக்கவிதைகளை.. மற்றவர்களுக்கும்.. மின்னஞ்சல் அனுப்புங்கள்..

தமிழுணர்வு தலை காட்டினாலும்.. அதை.. தேச துரோகமாக மாற்ற செய்யும்.. தமிழர் அல்லாதவர்கல், மற்றும் கதர் சட்டை குண்டர்களை பற்றியும்.. மற்றவர்களுக்கும் புரிய வையுங்கள்..
கவிதை அருமை

என்னவன் விஜய்
23-12-2008, 06:17 PM
அனல் பறக்கும் உண்மை வரிகளுக்கு பாராட்டுக்கள்.

கண்ணீரை வரவைக்கும் உங்கள் கவிதைக்கு என் சிரந்தாழ்த்தி, நன்றிகள் பல.

தமிழ்தாசன்
23-12-2008, 06:55 PM
தமிழா! என விழித்தே!
படைத்தனை கவியே!
இது தமிழர்காலம் அது கூறும் வரலாறாகும்.
உலகே! என்செய்தாலும் விடியும் தமிழர்காலம்.

உம்வரிகள் வாசித்தும் உண்மைத்தமிழ்மனம் மாறும்.

சசிதரன்
24-12-2008, 08:35 AM
தங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல நண்பர்களே... :)

அன்புரசிகன்
24-12-2008, 09:23 AM
இப்படி பேசாமல் இருந்தாலும் பரவாயில்லையே..... அதிலும் மோசமாகவும் அல்லவா நடந்தேறுகிறது. உதவி இல்லாவிட்டாலும் உபத்திரவம் வேண்டாம் என்ற நிலை தானே இன்று தமிழீழத்தில்.......

விடிந்தால் தான் நிம்மதி. அன்று பழித்தவன் எல்லாம் விழிப்பான்...

ஆழமாக பதியும் வரிகள் நண்பா........

சசிதரன்
24-12-2008, 01:35 PM
மிக்க நன்றி அன்புரசிகன் அவர்களே... அனைவர் மனதிலும் பதிய வேண்டும் என்பதே எனது எண்ணமும்...:)

kampan
24-12-2008, 02:32 PM
தாயகத் தடம்புகளை புரிந்தும் பொதிசுமக்கும் புத்திஜீவிகள் வாசிக்க வேண்டிய கவிதை, நன்றி நண்பரே

சசிதரன்
25-12-2008, 02:05 PM
உணர்ந்து விமர்சித்த நண்பர் கம்பனுக்கு மிக்க நன்றி...:)

சிவா.ஜி
26-12-2008, 06:42 AM
கவிதையின் வரிகளில் இருக்கும் அழகு கருத்தில் இல்லையே. என்னால் இந்தக் கருவுடன் ஒத்துப்போக முடியவில்லை நன்பர்களே.

ஒட்டுமொத்த இந்தியத்தமிழர்களையும் கேவலப்ப்டுத்தும் இந்தக் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.

இலங்கை தமிழ் சகோதரர்களுக்கு சில கேள்விகள்.

எந்த அடிப்படையில் எங்களைக் குற்றம் சொல்கிறீர்கள்?

எதை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்?

எங்களுக்கும் துயரங்கள் நேர்வதுண்டு...அப்போது யார் அதற்கு அனுதாபக் குரலெழுப்பியுள்ளீர்கள்?

பெற்ற தாய் தந்தயைரை மரணப்பிடியில் விட்டுவிட்டு வெளிநாடுகளில் உயிர்காத்துக்கொள்ள வந்துவிட்ட உங்களுக்கு இல்லாத அக்கறை எங்களுக்கு இருக்கவேண்டுமென ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

1980 களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் சொந்தக் குடும்பம் விட்டு இயக்கத்தில் இணைவதற்காக எங்கள் தாய்தமிழகம் விட்டுப் போனார்கள். இன்றளவும் அவர்களின் நிலையறியாது கண்ணீர்விடும் பெற்றோரைப் பார்த்து வேதனைப்பட்டுள்ளேன்.

ஆனால் இன்று நாலுவரி என்று கவிதை எழுதி அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்தும் இந்த கவிஞர்....இலங்கைத் தமிழருக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்? உண்னாவிரத்தில் பங்கெடுத்தாரா...பிரம்மாண்ட மனித சங்கிலியில் கைகோர்த்தாரா....இல்லை என்றாவது அழுதாரா?

எங்களுக்கும் குழந்தை, குடும்பம் எல்லாமும் இருக்கிறது. அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அனைத்து இந்தியத் தமிழர்களும் யாழ் வந்து மரிக்க வேண்டுமென நினைக்கிறீர்களா?

Narathar
26-12-2008, 07:27 AM
சிவா அவர்களே சசிதரன் இந்தியர்களை மட்டும் சொல்லவில்லை...
ஒட்டு மொத்த தமிழர்களை குறை சொல்லியுள்ளார்........

ஈழத்தமிழர்கள் எப்போதுமே இந்திய தொப்புள் கொடி உறவுகளை உதாசீனப்படுத்தியவர்களல்லர். நடந்துமுடிந்துவிட்ட துன்பியல் சம்பவங்களை நினைத்து இன்றும் வருந்துபவர்கள்.

இக்கவிதையை நான் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்களுக்கும் கொழும்பில் சத்தம் போடாமல் அமைதிகாக்கும் வடக்கு தமிழர்களுக்குமாக எழுதப்பட்டதாக நான் பார்க்கின்றேன்..........

இந்தக்கவிதையை வாசிக்கும் போது... இது என்னை சுட்டி எழுத்ப்பட்டதாகக்கூட உணர்கின்றேன்....

ரங்கராஜன்
26-12-2008, 07:47 AM
கவிதையின் வரிகளில் இருக்கும் அழகு கருத்தில் இல்லையே. என்னால் இந்தக் கருவுடன் ஒத்துப்போக முடியவில்லை நன்பர்களே.

ஒட்டுமொத்த இந்தியத்தமிழர்களையும் கேவலப்ப்டுத்தும் இந்தக் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.

?

அன்புள்ள சிவா அண்ணானுக்கு
என்ன அண்ணா நீங்களா இப்படி பேசுறீங்க, புதியவர்களை விமர்சனங்களால் செம்மை படுத்தும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை நான் எதிர்பார்க்கவில்லை அண்ணா. உங்களின் கோபம் உண்மையானதாக இருந்தாலும், பெரியவராகிய உங்களின் வார்த்தைகளால் வளரும் கவிஞன் சசிதரனின் ஆற்றல்கள் குறைந்து போகும். தவறுகளை எப்போதும் போல உங்கள் பாணியில் கண்ணியமான முறையிலே வெளிப்படுத்துங்கள். நான் அதிகப்படியாக பேசுவதாக நினைக்கவேண்டாம். ஏனென்றால் உங்களால் செம்மைப்படுத்தப்பட்ட புதியவன் என்ற தகுதியில் சொல்கிறேன். பாவம் சசிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கட்டுமே.......................

சசிதரன்
26-12-2008, 09:00 AM
கவிதையின் வரிகளில் இருக்கும் அழகு கருத்தில் இல்லையே. என்னால் இந்தக் கருவுடன் ஒத்துப்போக முடியவில்லை நன்பர்களே.

ஒட்டுமொத்த இந்தியத்தமிழர்களையும் கேவலப்ப்டுத்தும் இந்தக் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.

இலங்கை தமிழ் சகோதரர்களுக்கு சில கேள்விகள்.

எந்த அடிப்படையில் எங்களைக் குற்றம் சொல்கிறீர்கள்?

எதை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்?

எங்களுக்கும் துயரங்கள் நேர்வதுண்டு...அப்போது யார் அதற்கு அனுதாபக் குரலெழுப்பியுள்ளீர்கள்?

பெற்ற தாய் தந்தயைரை மரணப்பிடியில் விட்டுவிட்டு வெளிநாடுகளில் உயிர்காத்துக்கொள்ள வந்துவிட்ட உங்களுக்கு இல்லாத அக்கறை எங்களுக்கு இருக்கவேண்டுமென ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

1980 களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் சொந்தக் குடும்பம் விட்டு இயக்கத்தில் இணைவதற்காக எங்கள் தாய்தமிழகம் விட்டுப் போனார்கள். இன்றளவும் அவர்களின் நிலையறியாது கண்ணீர்விடும் பெற்றோரைப் பார்த்து வேதனைப்பட்டுள்ளேன்.

ஆனால் இன்று நாலுவரி என்று கவிதை எழுதி அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்தும் இந்த கவிஞர்....இலங்கைத் தமிழருக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்? உண்னாவிரத்தில் பங்கெடுத்தாரா...பிரம்மாண்ட மனித சங்கிலியில் கைகோர்த்தாரா....இல்லை என்றாவது அழுதாரா?

எங்களுக்கும் குழந்தை, குடும்பம் எல்லாமும் இருக்கிறது. அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அனைத்து இந்தியத் தமிழர்களும் யாழ் வந்து மரிக்க வேண்டுமென நினைக்கிறீர்களா?

உங்களிடம் இருந்து இத்தனை கோபத்தை நான் எதிர்பார்க்கவில்லை நண்பரே... உங்கள் கோபத்திற்கு என் கவிதை காரணமெனில் அதற்க்கு நானே முழு பொறுப்பு.

முதலாய் நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் இலங்கையை சேர்ந்தவன் அல்ல... தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இலங்கை தமிழன் என்று ஒருவனை பிரித்து சொல்வதும் கூட என்னால் ஏற்க முடியாத கருத்து.

ஒட்டுமொத்த இந்திய தமிழர்களையும் கேவலப்படுத்துவதாக நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அப்படி ஒரு எண்ணம் துளியும் என்னில் இருந்ததில்லை. இயலாமையின் உச்சம் தொட்ட ஒரு தருணத்தில்.. எழுதிய வரிகளே இவை... இக்கவிதையின் வரிகளில் நான் சாடியிருப்பது என்னையும் சேர்த்தே.. அடுத்தவருக்காய் கருணை கூட காட்ட தயங்குகிறோம் என்ற ஆதங்கத்தில் எழுதினேனே தவிர... அவர்களுக்காக மட்டும் கருணை காட்டுங்கள் என்று சொல்லவில்லை...

மேலும் நான் என்ன பங்களித்திருக்கிறேன் என்று கேட்கிறீர்கள்.. செய்யும் உதவியை பட்டியலிட்டு சொல்வதென்பது மிக மிக தாழ்ந்த செயல் என்று கருதுபவன் நான். நான் செய்த உதவிகளை நானறிவேன்.

என் வரிகள் உங்களை காயப்படுத்தியிருக்கும் பட்சத்தில் மிகவும் வருந்துகிறேன். மன்னிப்பும் கோருகிறேன்..

அன்புள்ள நிர்வாகிக்கு...
இக்கவிதை யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதியதல்ல... இதனை நீக்கிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

மீண்டும் சொல்கிறேன் நண்பர் சிவாஜி அவர்களே... யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை... நான் மிகவும் வருந்துகிறேன்...

அக்னி
26-12-2008, 10:36 AM
சிவா.ஜி...
உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை எதிர்பார்க்கவில்லை.

ஒட்டுமொத்த இந்தியத்தமிழர்களையும் கேவலப்ப்டுத்தும் இந்தக் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.
இது இந்தியத் தமிழர்களைக் கேவலப்படுத்தும் கவிதை என்று எதை வைத்துச் சொல்கின்றீர்கள்?
உலகத் தமிழர்களைச் சாடும் கவிதையாகவே நான் பார்த்தேன்.
அதனால், இந்தியத் தமிழர்களும் அதற்குள் அடங்குவதும், சாடப்படுவதும் தவிர்க்க முடியாததே.

இதனை எடுத்துச் சொல்லவும், உங்கள் பதிவைக் குற்றம் சொல்லவும்,
எனக்குத் தகுதியில்லை என்பதை,

பெற்ற தாய் தந்தயைரை மரணப்பிடியில் விட்டுவிட்டு வெளிநாடுகளில் உயிர்காத்துக்கொள்ள வந்துவிட்ட உங்களுக்கு இல்லாத அக்கறை எங்களுக்கு இருக்கவேண்டுமென ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
மனதில் வலியோடு, தெளிவாகவே உணர்கின்றேன்.
ஆனால், கவிதையின் ஆழக் கருவையும் இந்த வரிகளாற் தொட்டுவிட்டீகள்.

இலங்கைத் தமிழர்கள்,
பணம் உழைக்கவும், உயிர் பிழைக்கவும் என, இருவகையாகப் புலம்பெயர்கின்றார்கள் என்பது உண்மை.

உயிர் பிழைக்கப் புலம்பெயர்ந்தவர்கள்தான் அதிகம் என்பதை அறுதியிட்டுக் கூற விரும்புகின்றேன்.

அடி, உதை, சித்திரவதைகளும்,
பாலியல் வன்புணர்வுகளும்,
சிறையும், கொலையும்
எனத்,
தம் கண்முன்னே தம் பிள்ளைகளுக்கு நிகழும் கொடூரங்களைப் பார்த்துச் சகிக்க முடியாத பெற்றோர்கள்,
இவை நிகழும் என்னும் மன அச்சத்திலும்,
இவை நிகழ்ந்த பின்னர் ஏற்படும் மன அதிர்ச்சியிலும்,
இவற்றையெல்லாம் தவிர்க்கும்முகமாகத்,
தம் மனம்வரை அடகு வைத்துத்,
தவிப்போடு பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றார்கள்.

நான் என் தாயகத்தில் இருந்தால்,
என்னாலும் என் தாய்க்கு அச்சமும் கவலையும்...
அங்கில்லாததால்,
என்னாலேனும் இல்லை இந்த அச்சமும் கவலையும்...

பாசம், சந்தோஷம், நிம்மதி என்றனைத்தையும் தொலைத்துவிட்டு,
வாழ்கின்றோம்,
நாமும், நம் பெற்றோரும்...

சிவா.ஜி
27-12-2008, 03:25 AM
தமிழன் என்று சொல்லி எங்கு நிமிர்ந்தாலும்...
அங்கு அவர்கள் தலை கொய்யப்படுகிறது..
'செல்'லடிப்பதில் சிதறும் அவர்கள் உடல்கள்
நம் உணவு மேசைகளில் விழாதவரை...
அதைப்பற்றி நமக்கென்ன...

அங்கே இருப்பவர்கள் நம் உறவுகளாம்...
அங்கே சிந்துவது நம் சொந்தங்களின் இரத்தமாம்...
அங்கே வீடு இழந்து நிற்பது நம் சகோதரர்களாம்...
என்னவாயிற்று இவர்களுக்கு...
நம்மை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
தன் இனம் அழிவதை... தானே பார்க்கும் பெருமைமிக்க
தமிழர்கள் நாமென்பதை மறந்துவிட்டார்களா...

நம் வீட்டினில் குண்டு போடாத வரை...
நம் குழந்தைகள் காயப்படாதவரை...
நாம் உறவுகள் இழந்து தனியாகும் வரை...
நம் உடல்கள் சிதறி நாம் இறக்காத வரை...
நமக்கெதற்கு கவலை..

இன்னும் நம்மை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்......
நாமெல்லாம் 'மற'த்தமிழர்களாம்.
சீக்கிரமே மாற்ற சொல்வோமா......
அடி வாங்கி அடி வாங்கி...
மனமும் மானமும் மரத்துப் போன
'மர'த்தமிழன் என்று...

அன்பு நாரதர் மற்றும் அன்பு அக்னி.....ஒட்டுமொத்த உலகத்தமிழர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? இந்தவரிகளை நன்றாகப் படியுங்கள்.

அங்கேயுள்ளவர்கள்...எனும்போதே யாரைக் குற்றம் சொல்கிறாரென்று தெரிகிறதா...?

மூர்த்தி, அக்னி, நாரதர்......உங்கள் அனைவரின் கருத்தையும் வாசித்து வருந்துகிறேன். இது இன்று நேற்றல்ல...நிறைய நாட்களாக மன்றத்தில் சில ஈழச் சகோதரர்கள் இந்தியத்தமிழரை இழிவு படுத்திக்கொண்டே வருகிறார்கள். இந்தக்கவிதைக்கு பின்னூட்டமிட்டவர்களைக் குறித்துதான் நான் கொஞ்சம் காட்டமாக சொல்லிவிட்டேன். என் அன்பின் அமரன். அக்னி, அன்பு, ஓவியன்...இவர்களெல்லாம் எந்த சூழலில் தாயகம் விட்டார்கள் என்ற கதையை கண்ணீர் மல்க வாசித்தவன் நான்.

அவர்களின் துயரம் எனக்குத் தெரியும். மற்றவர்களுக்கும் அந்த துயரம் இருக்கும் எனத்தெரியும். ஆனால் இவர்களைப் போல பொறுப்புணர்வுடன் எத்தனை பேர் நடந்து கொள்கிறார்கள்? எப்போதும் எங்களைக் குறை சொல்வதே அவர்களுக்கு வேலையாகிவிட்டது. இன்றுவரை இந்த நால்வரும், நாரதரும் ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசியதில்லை.

நமதுவீட்டில் பாம்பு நுழைந்தால் நாம்தான் அதைக் கொல்ல வேண்டும். அண்டைவீட்டுக்காரர் உதவிக்கு வந்தால் நன்றி கூறலாம்...ஆனால் வராதவரை திட்டமுடியுமா?

சசிதரன் அவர்களே....நான் சாதாரணமாக கடுமையாகப் பேசமாட்டேன். ஆனால்...எப்போது பார்த்தாலும் சிலர் மற்றவரைக் குறை சொல்லுவதையே தொடர்ந்து செய்கிறார்கள். நீட்டிய சுட்டு விரலுக்குப் பின்னால் மூன்று விரல்கள் அவர்களைக் காட்டுகிறது எனத்தெரியாமல்.

தமிழன் எத்தனைத் துயரங்களைத்தான் தாங்குவான் சசிதரன்? 6 கோடி இந்தியத்தமிழனில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அன்றாட உணவுக்கே அல்லல் படும் நிலை. மற்றவர்களுக்கோ வாழ்வை மேம்படுத்திக்கொள்ள போராட்டம்..அரசியல்வாதிகளின் அராஜகத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள போராட்டம், குண்டர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள போராட்டம்....

எத்தனைப் பேருக்கு உங்களையும் என்னையும் போல கவிதை எழுத நேரம் கிடைக்கிறது? இதில் அனைவரையும் குற்றம் சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

மிகுந்த திறமையுள்ள கவிஞர் நீங்கள். உங்கள் எழுத்தை ரசித்து ரசித்துப் புசிப்பவன் நான். வார்த்தைகள் உங்களுக்குக் கட்டுப்படுகின்றன, எனவே...மேலும் மேலும் ஆக்கப்பூர்வமாய் சமூக சிந்தனையுடனான கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

காட்டமாக எழுதிவிட்டதற்கு என்னை மன்னித்துவிடுங்கள்.

சசிதரன்
27-12-2008, 10:00 AM

உங்கள் விளக்கத்தில் உள்ள உண்மைகளை உணர்கிறேன். உங்கள் முதல் விமர்சனம் பார்த்ததும் மிகவும் வருத்தப்பட்டேன். இப்பொழுது நினைக்கையில்.. என் மீதும் தவறு என்பதை உணர்ந்து வருந்துகிறேன். இந்த மன்றத்தில் இனிய நண்பர்களை பெற வேண்டும் என்பது மட்டுமே எனது விருப்பம். இனியும் விளக்கங்கள் என்று கூறி இந்த விவாதத்தை நீட்டிப்பதில் நியாயமில்லை என கருதுகிறேன். இனி இது போல் ஒரு பிழை நேராமல் பார்த்துக் கொள்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் ஒரு முறை வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பரே...

அக்னி
27-12-2008, 12:38 PM
சிவா.ஜி...
இந்தியத் தமிழர்கள் மீதான சாடல்கள் இருப்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால், இந்தியத் தமிழர்களை மட்டும் சாடிநிற்கவில்லை என்பதையே எடுத்துக்கூறவிரும்பினேன்.

உங்கள் வரிகள், கடுமையானதாக இருந்தபோதிலும்,
நான் அவற்றை உங்கள் தன்மான உணர்வாகப் பார்த்தேனே தவிர,
இதை வைத்து உங்களை எடைபோடவில்லை.

அதனாற்தான் வழமைபோன்று சிவா.ஜி என்றே அழைத்தேன்.
இதனால், உங்களுக்கும் எனக்குமிடையில் இடைவெளி ஏற்பட்டிருக்குமாயின்,
தொடர்ந்து அண்ணா என்ற வார்த்தையையும் போட்டிருப்பேன்.

ஈழத்துப் பிரச்சினையில் தமிழகத்தைக் குறைகூற நான் என்றுமே நினைத்ததில்லை.

இதனை இத்துடன் விட்டுவிடுவோம்.

அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் ஒரு கோரிக்கையைத் தாழ்மையுடன் முன்வைக்கின்றேன்.
மன்றத்திற் தமிழால் மட்டும் ஒன்றிணைந்திருப்போம்.
உணர்வுகள் வெளிப்படுத்தப்படுமிடத்துப் பொறுமை காப்போம்.
அவ்வாறான வேளைகளில் அன்பாக உணர்த்துவோம்.
இயலாதபோது பெருந்தன்மையுடன் விலகிச் செல்வோம்.

நானும் இதனையே இயலுமானவரை கடைப்பிடிக்கின்றேன்.
இனிமேலும் கடைப்பிடிக்க முயற்சிப்பேன்.

நன்றி!

சிவா.ஜி
27-12-2008, 02:11 PM
அன்பு சசிதரனுக்கும், அன்பான அக்னிக்கும் என் மனம்நிறைந்த நன்றிகள். என்றும் உறவாய் இருப்போம். தமிழனாய் தமிழை சுவாசிப்போம்.

(சசிதரன்.....உங்கள் எழுத்துப்பயணம் இனிதே தொடர மனமார்ந்த வாழ்த்துகள்)

(அக்னி.....உங்கள் கருத்துக்களுக்கு மனதார செவி சாய்க்கிறேன். தொடர்வோம் உறவுகளாய்)

ரங்கராஜன்
27-12-2008, 02:45 PM
அன்பு நாரதர் மற்றும் அன்பு அக்னி.....ஒட்டுமொத்த உலகத்தமிழர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்? இந்தவரிகளை நன்றாகப் படியுங்கள்.

அங்கேயுள்ளவர்கள்...எனும்போதே யாரைக் குற்றம் சொல்கிறாரென்று தெரிகிறதா...?

மூர்த்தி, அக்னி, நாரதர்......உங்கள் அனைவரின் கருத்தையும் வாசித்து வருந்துகிறேன். இது இன்று நேற்றல்ல...நிறைய நாட்களாக மன்றத்தில் சில ஈழச் சகோதரர்கள் இந்தியத்தமிழரை இழிவு படுத்திக்கொண்டே வருகிறார்கள். இந்தக்கவிதைக்கு பின்னூட்டமிட்டவர்களைக் குறித்துதான் நான் கொஞ்சம் காட்டமாக சொல்லிவிட்டேன். என் அன்பின் அமரன். அக்னி, அன்பு, ஓவியன்...இவர்களெல்லாம் எந்த சூழலில் தாயகம் விட்டார்கள் என்ற கதையை கண்ணீர் மல்க வாசித்தவன் நான்.

அவர்களின் துயரம் எனக்குத் தெரியும். மற்றவர்களுக்கும் அந்த துயரம் இருக்கும் எனத்தெரியும். ஆனால் இவர்களைப் போல பொறுப்புணர்வுடன் எத்தனை பேர் நடந்து கொள்கிறார்கள்? எப்போதும் எங்களைக் குறை சொல்வதே அவர்களுக்கு வேலையாகிவிட்டது. இன்றுவரை இந்த நால்வரும், நாரதரும் ஒரு வார்த்தைகூட தவறாகப் பேசியதில்லை.

நமதுவீட்டில் பாம்பு நுழைந்தால் நாம்தான் அதைக் கொல்ல வேண்டும். அண்டைவீட்டுக்காரர் உதவிக்கு வந்தால் நன்றி கூறலாம்...ஆனால் வராதவரை திட்டமுடியுமா?

சசிதரன் அவர்களே....நான் சாதாரணமாக கடுமையாகப் பேசமாட்டேன். ஆனால்...எப்போது பார்த்தாலும் சிலர் மற்றவரைக் குறை சொல்லுவதையே தொடர்ந்து செய்கிறார்கள். நீட்டிய சுட்டு விரலுக்குப் பின்னால் மூன்று விரல்கள் அவர்களைக் காட்டுகிறது எனத்தெரியாமல்.

தமிழன் எத்தனைத் துயரங்களைத்தான் தாங்குவான் சசிதரன்? 6 கோடி இந்தியத்தமிழனில் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் அன்றாட உணவுக்கே அல்லல் படும் நிலை. மற்றவர்களுக்கோ வாழ்வை மேம்படுத்திக்கொள்ள போராட்டம்..அரசியல்வாதிகளின் அராஜகத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள போராட்டம், குண்டர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள போராட்டம்....

எத்தனைப் பேருக்கு உங்களையும் என்னையும் போல கவிதை எழுத நேரம் கிடைக்கிறது? இதில் அனைவரையும் குற்றம் சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

மிகுந்த திறமையுள்ள கவிஞர் நீங்கள். உங்கள் எழுத்தை ரசித்து ரசித்துப் புசிப்பவன் நான். வார்த்தைகள் உங்களுக்குக் கட்டுப்படுகின்றன, எனவே...மேலும் மேலும் ஆக்கப்பூர்வமாய் சமூக சிந்தனையுடனான கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

காட்டமாக எழுதிவிட்டதற்கு என்னை மன்னித்துவிடுங்கள்.

அன்புள்ள சிவா அண்ணனுக்கு
என்னையுடைய முந்திய கருத்தை நீங்கள் கவனித்தால், அதில் சிவாஜீ என்ற ஒரு மனிதனின் விமர்சனத்தை நான் விமர்சிக்கவில்லை. அதாவது நீங்கள் சொன்ன கருத்தை நான் எதிர்க்கவில்லை, ஆனால் சொன்ன விதத்தை தான் வருத்தமாக இருந்தது என்று கூறினேன். உங்களை விமர்சனம் செய்ய எனக்கு அனுபவமும் இல்லை, தகுதியும் இல்லை. உங்களை வருத்தப்பட வைக்கவும் நான் முயற்சிக்கவில்லை. நீங்கள் உங்களின் பார்வையை சொன்னீர்கள், அக்னி அவருடைய பார்வையை சொன்னார், நாரதரும் அதே தான் செய்தார், நண்பர் சசிதரனும் அதை தான் செய்தார். இந்த கவிதையின் முதல் விமர்சனம் நான் தான் செய்தேன், அப்பொழுது இருந்த மனநிலை, உங்கள் கருத்தை படித்தப்பின் இல்லை. உங்கள் வார்த்தையிலும் உண்மை இருக்க தான் செய்கிறது.

சசிதரன் அவர்களே

மூத்தவர்களின் வார்த்தைகளை புத்திசாலி தனமாக அணுகினால் அதில் உள்ள அருமையான கருத்து புலப்படும். நான் ஏன் இந்த விஷயத்தில் மூச்சை பிடித்துக் கொண்டு பேசுகிறேன் என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். காரணம் இருக்கு, ஒரு சர்வதேச பிரச்சனை பற்றிய ஒரு படைப்பை படைக்கும் முன், அதைப் பற்றி முழு விவரம் தெரியாமல் செய்யக்கூடாது. பாராட்டுகள், ஊக்கவிக்கும் விமர்சனங்களுக்கு ஆசைப்பட்டு தவறான ஒரு கருத்தை விதைக்க கூடாது. இதை சொல்ல எனக்கு உரிமை இருக்கு, ஏனென்றால் நான் இவைகளுக்கு ஆசைப்பட்டு எழுதிய ஒரு கதை தான் ஈழத்தாய், இந்த கதையும் இலங்கையை சேர்ந்த ஒரு தாயையும் மகனையும் மையமாக வைத்து எழுதினேன். இதுவரை இலங்கை போர் பற்றி எனக்கு தெரியாது, இலங்கை மனிதர்களை பற்றி தெரியாது, வழக்கு மொழி தெரியாது, ஆனால் தாய் மகனின் பாசத்தை பற்றி மட்டும் தெரியும். அப்படி ஏனோ தானோ என்று எழுதினேன். இன்று வரை நான் மனதுக்குள் புழுங்கும் ஒரு தவறு அது. அந்த அக்கறையில் தான் சொன்னேன் நண்பா, ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் படைக்கவும் கூடாது, விமர்சனம் செய்யவும் கூடாது. நன்றி

தீபா
28-12-2008, 05:27 AM
விமர்சனம் எனும் நிலைதாண்டி விவாதங்களுக்குள் புகுந்துவிட்டாலும் கவிதை கெடவில்லை.... உயிர் கெட்டி..

இந்தக் கவிதையின் கோணமே வேறு. சொல்லவந்தவர் தான் அப்படியெல்லாம் இல்லை, எனக்கு சொந்த அலுவல்கள் இருக்கின்றன என்று சொல்லிவிட்டு.... தன்னைத்தானே மரத்தமிழன் என்று குறைத்துக் கொள்கிறார்...

ஒன்றாவது, எதையும் குறித்து கவலைப்படாத மனிதர்கள் கோணத்தில் கவிதை எழுதப்பட்டிருந்தாலோ, இரன்டாவது, நம்மை சுண்டியிழுக்கும் விதத்தில் நம்மை நாமே திருந்திக் கொள்ளும் விதத்தில் எழுதியிருந்தாலோ...... சரி...

ஆனால்... கவிஞர் இரண்டையும் குழப்பிவிட்டார்...

அங்கிருப்பவர்களைப் பற்றி கவலை இல்லை என்று ஆரம்பித்தவர், இறுதியில் மானம் மரத்த மரத்தமிழன் என்று சொல்லுவது கவிதையில் இடிக்கிறது.

எடுத்துக் கொள்ளவேண்டிய வாசகர்கள், எதை எடுக்கவேண்டுமோ அதை எடுத்துக் கொண்டார்கள்.. இல்லையா பின்னூட்டமிட்டவர்களே!

சரி... இது விவாதப் பொருளல்ல.. ஏனெனில் இதற்கு முடிவு என்பது ஒவ்வொருவருடைய மனத்தில் உண்டானது.. அவரவர் இலக்கே அவரவர் முடிவு.

இலங்கைத் தமிழருக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்வதெல்லாம் வீண்.... எதற்காக தரவேண்டும்? அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, என் குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டுமா என்ன? அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.... உதவ முன்வருவது புத்திசாலித்தனம்... உயிர் தருவதெல்லாம் வீண்பேச்சு..

இன்றும் எனக்குப் பல இலங்கைத் தமிழர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்... அவர்களின் சோகக் கதையைக் கேட்கும்பொழுதெல்லாம் மனம் அடைப்பதில்லை... மாறாக... இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் கெஞ்சுகிறது... அதற்காக, நான் ஈழத்தமிழருக்காக உருகிவிட்டேன், என் உயிர் போனாலும் ஈழத்தமிழுக்கு பாடுபடுவேன் என்று சொல்வதெல்லாம் அடாவடி...

இந்தக் கருத்தை சொல்ல முற்பட்ட திரு.சசிதரன்,,, சற்றே பாதை விலகிவிட்டதால் ஏற்பட்ட பிரச்சனைகளே.... இவை..

எனினும்.... கவிதையும் அதன் பின் மறைந்திருக்கும் கருவும்... அபாரம்....

தொடர்க திரு.சசிதரன்

தமிழ்தாசன்
28-12-2008, 11:47 AM
நமக்கு உண்ண உணவு கிடைக்கும் வரை...
எவன் பட்டினியில் செத்தால் நமக்கென்ன.
இறுக்க மூடியிருக்கும் நம் கண்களில் இருந்து...
இன்னும் ஏன் கண்ணீர் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழன் என்று சொல்லி எங்கு நிமிர்ந்தாலும்...
அங்கு அவர்கள் தலை கொய்யப்படுகிறது..
'செல்'லடிப்பதில் சிதறும் அவர்கள் உடல்கள்
நம் உணவு மேசைகளில் விழாதவரை...
அதைப்பற்றி நமக்கென்ன...

பிஞ்சுக் குழந்தைகளும் செத்து மடிகிறார்களாம்...
இங்கு வரை இரத்த வாடை வீசினாலும்...
நாம் மூக்கை மூடிக்கொள்வோம்.
நம் குழந்தையா என்ன...
இன்னுமா நமக்கு இதயம் உண்டென நம்புகிறார்கள்...

அங்கே இருப்பவர்கள் நம் உறவுகளாம்...
அங்கே சிந்துவது நம் சொந்தங்களின் இரத்தமாம்...
அங்கே வீடு இழந்து நிற்பது நம் சகோதரர்களாம்...
என்னவாயிற்று இவர்களுக்கு...
நம்மை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
தன் இனம் அழிவதை... தானே பார்க்கும் பெருமைமிக்க
தமிழர்கள் நாமென்பதை மறந்துவிட்டார்களா...

நம் வீட்டினில் குண்டு போடாத வரை...
நம் குழந்தைகள் காயப்படாதவரை...
நாம் உறவுகள் இழந்து தனியாகும் வரை...
நம் உடல்கள் சிதறி நாம் இறக்காத வரை...
நமக்கெதற்கு கவலை..

இன்னும் நம்மை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்......
நாமெல்லாம் 'மற'த்தமிழர்களாம்.
சீக்கிரமே மாற்ற சொல்வோமா......
அடி வாங்கி அடி வாங்கி...
மனமும் மானமும் மரத்துப் போன
'மர'த்தமிழன் என்று...
தமிழா! என விழித்தே!
படைத்தனை கவியே!
இது தமிழர்காலம் அது கூறும் வரலாறாகும்.
உலகே! என்செய்தாலும் விடியும் தமிழர்காலம்.

உம்வரிகள் வாசித்தும் உண்மைத்தமிழ்மனம் மாறும்.

இப்டைப்புக்கு எனது பதிலும் அமைந்ததனால் இப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களில் எனக்கும் பதில் கூறும் பங்கு உண்டு என்பதாலும், தமிழ்மன்றம் தரும் களத்தினை சரியாகப்புரிதலுடன் தமிழுணர்வுப் படைப்புகளக்கான முன்னிலைப் படுத்தல்களின் அடிப்படையில் படைப்புகள் வலம் வருதலை உணர்கின்ற அதேநேரம், சில இடங்களில் இதுபோன்ற கருத்துப்பகிர்வுகள் தொடர்வது வருத்தத்தைத்தருகிறது.

காரணம் எனது வாழ்வும் ஒருதமிழனாக இருப்பதினால்.
தமிழ் ஒற்றுமைக்கு எப்படியெல்லாம் கஸ்டப்படவேண்டியுள்ளதை நினைக்கும்போது வேதனைப்படுகிறேன் ஒரு தமிழனாய்.

முதலாய் நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் இலங்கையை சேர்ந்தவன் அல்ல... தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இலங்கை தமிழன் என்று ஒருவனை பிரித்து சொல்வதும் கூட என்னால் ஏற்க முடியாத கருத்து.
மிகவும் சிறந்த எண்ணவெளிப்பாட்டைத்தரும் சசிதரன் அவர்களின் இக்கருத்தே நாம் அனைவரும் உணரவேண்டும்.

எல்லோரும் இவ்வுலகில் சரியாகத்தான் வாழ்கிறோம் என்று சொல்வதிற்கில்லை. உலக நாகரீகம் இன்று எங்கோபோகிறது.
அவரவர் ஆயுட்காலமே கொஞ்சம் என்பது உணராததல்ல. இல்லையா?
ஆகவே! கருத்து உள்வாங்கல், பின் வெளிப்படுத்தல் என்பது கவனிக்கப்படவேண்டியது.
அதிலும் வள்ளுவப்பெருந்தகை கூறும் பின் வருவன மேலும் தெளிவு படுத்தும் என நம்புகிறேன்.

1. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்.

௧. அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம், ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே, ஒருவன், ஒரு தொழிலுக்கு உரியவனாகத் தெளியப்படுவான்.

2, குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு.

௨. நல்ல குடியில் பிறந்து, குற்றங்களிலிருந்து நீங்கிப், பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற, நாணம் உடையவனையே, நம்பித் தெளியவேண்டும்.

3. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

௩. அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து, குற்றம் அற்றவரிடத்திலும், ஆராய்ந்து பார்க்குமிடத்தில், அறியாமை இல்லாதிருப்பது, அருமையாகும்.

4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

௪. ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு, குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால், தெளிந்துகொள்ள வேண்டும்.

5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தந்தம்
கருமமே கட்டளைக் கல்.

௫. மக்களுடைய குணங்களாகிய பெருமைக்கும், மற்றக் குற்றங்களாகிய சிறுமைக்கும், அவரவருடைய செயல்களே, தேர்ந்தறியும் உரைகல் ஆகும்.

6. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றிலர் நாணார் பழி.

௬. சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை, நம்பித் தெளியக் கூடாது; அவர், உலகத்தில் பற்று இல்லாதவராகையால், பழிக்கு நாண மாட்டார்.

7. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

��*. அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை, அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல், எல்லா அறியாமையும் கொடுக்கும்.

8. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

௮. மற்றவனைப்பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால், அது, அவனுக்கு மட்டும் அல்லாமல், அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும், தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

9. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

௯. யாரையும் ஆராயாமல் தெளியக் கூடாது; நன்றாக ஆராய்ந்தபிறகு, அவரிடம், தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத்
தெளிந்து நம்பவேண்டும்.

10. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

௧0. ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும், ஆகிய இவை, நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

மீண்டும் முதலில் நான் கூறிய .....முதலில் இந்தமன்றம். அதில் நாம் இணையக்காரணம் தமிழ்.
அதிலும் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கும் தளம் என்ற நம்பிக்கை எனக்கு கூடவே இருந்தது.

இப்போ அதில் ஏதோ குறை தென்படுவது போல அமைகிறது. இப் பக்க கருத்தாடல்.

என்னைப்பொருத்த வரையில் பொதுவான மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கப்பட வேண்டும்.

நமது தாயகப் பிரச்சினையின் ஆழ அகலங்களை அனைத்து தமிழ்பேசும் உலகத் தழிழர்கள் அனைவரும் தயவுடன் உணர்வுடன் அறிந்து கொள்ள வேண்டும். அதன் தன்மைகள் பற்றி விளக்கமில்லா கருத்துப் பகிர்வுகள் தவிர்க்கப்படவேண்டும்.

என்னைப் பொருத்தவரை தயவுடன் இந்த மன்றத்தின் பண்புகள் 'தமிழ்' என்ற உணர்வுடன் தொடர்வதே விருப்பம். அதில் இது போன்ற கருத்துரைகள் தவிர்க்கப்படல் நலம். மன்ற நிர்வாகிகள் கவணித்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். தயவுடன் இதைப் புரிந்த கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இதுவே தமிழ்மன்ற எதிர்பார்ப்பு என்றும் நம்புகிறேன்.

இளசு
29-12-2008, 09:08 PM
கறுப்பினம் கண்டால் வெள்ளையன் அடிமையாக்கினான்..
எல்லாரும் வெள்ளையா? - நிலச்சுவாந்தார் கூலியை அடிமையாக்கினான்..
ஏழைகள் குடும்பத்தில் - ஆண் பெண்ணை அடிமையாக்கினான்..

வெள்ளையன் இந்தியா வந்தான் - எல்லாரையும் அடிமையாக்கினான்..
அதற்குமுன் இந்தியன்?

சைவ -வைணவ மோதல்களால் பேதம் கண்டு முதன்மை எனக் காட்டிக்கொள்ள முயன்றான்..

வேறு மதம் வந்தால், மொத்த இந்துவும் மோதினான்..

எல்லாரும் இந்துவா?
நிறமும் பேதமில்லை..
மதமும் வேறு இல்லை..

ஆனாலும் அடுத்தவனை மிதிக்க வழி தேவை!

மேல் சாதி, கீழ்சாதி என்றான்..

மேல்சாதியிடம் மிதிபட்ட கீழ்ச்சாதி
தன்காலை
மிகக்கீழ்ச்சாதி என ஒன்றின் தலையில் வைத்தான்..

மனிதன் இன்னும் மிருகம்..

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவன் சகமனிதமிருகத்தை அடக்கி, ஒடுக்கி
தான் மேல் எனக் காட்ட முயன்றபடியே இருக்கும் மிருகம்..

அடக்கு அல்லது அடங்கு...

இரண்டு நிலைகள் மட்டுமே இயல்பாய் அமைந்த மிருகம்..

சக மனிதனை சமமாய் மதிப்பதும் ஒரு வழி...
இதுதான் எல்லா சமயங்களும் போதிக்கும் நெறி..

சிங்களன் இன்று தமிழனை அழிக்கிறான்..
தமிழராய் இக்கவிஞர் போல் நாமும் வெட்குகிறோம்..

இன்னும் மனிதராய் எண்ணினால்..

தமிழகத்தில் சகதமிழர்கள் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்கிறார்களா?
சட்டக்கல்லூரி சம்பவம் சொல்வது என்ன?

ஒரு கோயிலில் ஒரு சாதியினர் நுழைந்து வழிப்பட்டால்
மறு சாதிப் பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி!

என்ன பெருமை தெரியுமா எனக்கு .. தமிழனாய்.. மனிதனாய்!

உலகம் எங்கும் மிருகங்கள் ..
மாறி மனிதராகும் வரை..

இவ்வகைக் கவிதைகள்
மரத்தமிழனுக்கும்
மனமரத்த மனிதன் ஒவ்வொருவனுக்கும் பொருந்தும்..வாழ்த்துகள் சசீதரன்!

சசிதரன்
30-12-2008, 03:31 AM
நான் இதற்கு மேல் விளக்கம் தர விரும்பவில்லை. அது விவாதங்களுக்கு வழி வகுக்க கூடும். எனவே விமர்சித்த அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த மன்றத்தில் புதியவனாய் இருந்தாலும், என் வரிகளை பற்றி தங்கள் மனதுக்கு தோன்றிய கருத்துக்களை எடுத்துக் கூறியதற்கு மிகவும் நன்றி. என்னை மேம்படுத்த உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...:)

அய்யா
30-12-2008, 04:54 AM
கவிதையின் வரிகளில் இருக்கும் அழகு கருத்தில் இல்லையே. என்னால் இந்தக் கருவுடன் ஒத்துப்போக முடியவில்லை நன்பர்களே.

ஒட்டுமொத்த இந்தியத்தமிழர்களையும் கேவலப்ப்டுத்தும் இந்தக் கவிதையை புறக்கணிக்கவேண்டும்.

இலங்கை தமிழ் சகோதரர்களுக்கு சில கேள்விகள்.

எந்த அடிப்படையில் எங்களைக் குற்றம் சொல்கிறீர்கள்?

எதை எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்?

எங்களுக்கும் துயரங்கள் நேர்வதுண்டு...அப்போது யார் அதற்கு அனுதாபக் குரலெழுப்பியுள்ளீர்கள்?

பெற்ற தாய் தந்தயைரை மரணப்பிடியில் விட்டுவிட்டு வெளிநாடுகளில் உயிர்காத்துக்கொள்ள வந்துவிட்ட உங்களுக்கு இல்லாத அக்கறை எங்களுக்கு இருக்கவேண்டுமென ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?

1980 களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் சொந்தக் குடும்பம் விட்டு இயக்கத்தில் இணைவதற்காக எங்கள் தாய்தமிழகம் விட்டுப் போனார்கள். இன்றளவும் அவர்களின் நிலையறியாது கண்ணீர்விடும் பெற்றோரைப் பார்த்து வேதனைப்பட்டுள்ளேன்.

ஆனால் இன்று நாலுவரி என்று கவிதை எழுதி அவர்களின் தியாகங்களை கேவலப்படுத்தும் இந்த கவிஞர்....இலங்கைத் தமிழருக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்? உண்னாவிரத்தில் பங்கெடுத்தாரா...பிரம்மாண்ட மனித சங்கிலியில் கைகோர்த்தாரா....இல்லை என்றாவது அழுதாரா?

எங்களுக்கும் குழந்தை, குடும்பம் எல்லாமும் இருக்கிறது. அவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு அனைத்து இந்தியத் தமிழர்களும் யாழ் வந்து மரிக்க வேண்டுமென நினைக்கிறீர்களா?

சிவாண்ணாவின் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன். எம்மவரிடமிருந்து உதவிகளை யாரும் எதிர்பார்த்தால், அதைக் கோரிப்பெறும் முறை இதுவல்ல!.

இக்கருத்தை இங்கு பதிவுசெய்ய எனக்கு உரிமையிருப்பதை எவரும் மறுக்கமாட்டார்களென நம்புகிறேன்.

அன்புரசிகன்
30-12-2008, 05:16 AM
சிவாண்ணாவின் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன். எம்மவரிடமிருந்து உதவிகளை யாரும் எதிர்பார்த்தால், அதைக் கோரிப்பெறும் முறை இதுவல்ல!.

இக்கருத்தை இங்கு பதிவுசெய்ய எனக்கு உரிமையிருப்பதை எவரும் மறுக்கமாட்டார்களென நம்புகிறேன்.

நண்பரே... என்ன சொல்லவாறீங்க...? இந்த கவிதையில் உங்களிடம் யார் உதவி கேட்ப்பதாக கூறுகிறார்கள்? அல்லது இந்திய தமிழர்களையோ இந்தியர்களையோ தாக்குவதாக எங்கு வரி உள்ளது... வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இந்தியரை தாக்குவதாக எனக்கு தெரியவில்லை. முடிந்தால் சுட்டிக்காட்டுக்கள். பின்னர் உங்களுக்கு சசிதரன் தேவையில்லை. நானே தெளிவுபடுத்துகிறேன்.

முதலில் இந்த கவிதையை படித்துவிட்டு நான் வெட்க்கப்பட்டேன். பொதுவாக கொழும்பு வாழ்மக்களை குறிவைத்து எழுதப்பட்டதாகவே எனக்கு தோன்றியது... காரணம் தென்னிந்திய நாடகங்களால் இந்தியா எவ்வாறிருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் இலங்கையில் வெகுவாக பாதிக்கப்பட்டுவிட்டது. செய்தி நேரங்களில் தான் சமைக்கும் கேவலம் இன்று இலங்கை தமிழரிடம். விருந்தாளிகள் வந்தால் அவர்களுடன் கதைப்பது விளம்பர நேரங்களில் மட்டுமே.... பிள்ளைக்கு பாடசாலை அப்பியாசக்கொப்பிகளுக்கு பணம் இருக்காது. ஆனால் கேபிள் தொலைக்காட்சிகளுக்கு மாதாமாதம் சந்தா செலுத்த பணம் தாராளமாக இருக்கும். இவ்வாறு இருக்கும் இலங்கை மக்களை தாக்கி எழுதியதாக நான் நினைத்தேன். ஆனாலும் அதில் ஒரு நியாயம் இருந்ததால் தான் பதில் போடவில்லை.

சிவா.ஜி
30-12-2008, 05:32 AM
உங்கள் கருத்தும் சிந்திக்க வேண்டியவைதான் அன்பு. ஆனால் இந்தக் கவிதைக்கு விளக்கங்கள், பதில் விளக்கம், என நிறைய வந்துவிட்டதால்...இதன் கருவை விமர்சிக்காமல், கவிதையின் அழகை மட்டும் பார்ப்போம்.

(விவாதத்துக்கு வித்திட்டு தவறு செய்தவன் நானென்ற குற்ற உணர்வில்..இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.)

அய்யா
30-12-2008, 05:34 AM
வணக்கம் அன்பண்ணா!

மேலுள்ள கவிதையைப் படித்தவுடன், இந்தியத் தமிழர்களின் "பாராமுகத்தை"ச் சாடுவதாகவே நான் பொருள்கொண்டேன். திரு.அக்னி போன்றோரின் பின்னூட்டங்களும் என் விளங்குதலை பலப்படுத்தின. எனவே அவ்வாறு பின்னூட்டமிட்டேன்.

நீங்கள் சொல்லியிருப்பதுபோல, அது இலங்கையரை சாடும் கவிதையென்றால், (அங்குள்ள நிலைமையை நான் அறியாதிருக்கும்நிலையில்) அதுகுறித்து பதிவுசெய்ய என்னிடம் ஏதுமில்லை. புரிதலுக்கு நன்றி.

ரங்கராஜன்
03-04-2009, 05:36 PM
ஆனந்த விகடனில் உங்க கவிதை வந்து இருக்கு சசி, ஆனால் மரத்தமிழின் என்ற பெயரில் வந்து இருக்கு...............ஆனந்த விகடன் தளத்தில் வந்து இருக்கு வாழ்த்துக்கள்

ஆதவா
03-04-2009, 05:54 PM
ஆனந்த விகடனில் உங்க கவிதை வந்து இருக்கு சசி, ஆனால் மரத்தமிழின் என்ற பெயரில் வந்து இருக்கு...............ஆனந்த விகடன் தளத்தில் வந்து இருக்கு வாழ்த்துக்கள்

அது ஆனந்த விகடனில்லை இளமை விகடன் (Youthful Vikatan)

வாழ்த்துகள் சசிதரன்...

சசிதரன்
06-04-2009, 02:49 PM
மிகவும் நன்றி தக்ஸ் மற்றும் ஆதவா...:)