PDA

View Full Version : தோழியின் கதை.....



Nanban
05-04-2003, 10:42 AM
தோழியின் கதை.....

(சற்று நீளமானது..... 20 வருடக் கதையல்லவா?
வேளை குறித்து கூடி பெற்றவர் களிப்புற்று உண்டாக்கிய அபூர்வ குறிஞ்சியவள். இரு இனச் செடிகளைக் கூட்டி, புதுப் புஷ்பமாய் உண்டாக்கப் பட்டவன் அவன். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.....)


வசந்தத்தின் முதல் நாளில்
ஆரம்பித்தது.....

கசங்காத காட்டன் புடவை மணக்க
முதல் நாள் கல்லூரி வாசல்
கால் வைத்தவளை
கல்லூரியே விழுங்கப் பார்த்தது,
பால் வித்தியாசமின்றி -
என் தோழி அழகானவள்.

நண்பனொருவன் என்னிடம் சொன்னான் -
தவறாக நினைக்க வில்லையென்றால்
அவளிடம் சொல்
என் காதலை என்றான்.
தவறென்ன இதில் என்றே
நானும் அன்னமானேன் அவனுக்கு -
அன்றே எனக்குப் புரியவில்லை
மரபு திசைமாறிப் பயணிப்பதை.

நான் தப்பாகவும் நினைக்கவில்லை
நினைக்கவுமில்லை
புறாவாக உன்னை நினைத்தேன்
உன் அமைதியான நலத்தினால்,
தூது வரும் பாங்கினாலல்ல
என்றபொழுது
என் நண்பன் காதல்
வெப்பத் தகடிழந்த
கொலம்பியா விண்கலமானது
நடு வானில்......

சிலந்தியிடம் பாடம் கற்றவன் நண்பன்
சலிப்பின்றி தொடர்ந்திட்டான்
களிப்பின்றி வாழ்ந்திட்டான்.
கல்லூரி முடிந்தது -
வேடந்தாங்கல் கலைந்திட்டது.

கனவின் கடைசி அத்தியாயம்
முற்றுப் புள்ளியா, அரைப்புள்ளியா?
குழப்பமான கனவுகள்..
அவளுக்குப் பிடிக்காது என்றாலும்
மீண்டுமொரு புறாவானேன் -
தோல்வி நிச்சயமென்றாலும்
கர்ணன் போய்விடவில்லையே?

ஐயோ! நண்பனே -
எனக்குத் திருமணம்
என் தந்தையல்லவா
தீர்மானிக்க வேண்டும்?
தொந்தரவு தவிர்த்திடு -
நன்மகளாய் நானிருப்பதை
விட்டுத் தரமுடியாது -
வானுலகத் தேவனே வந்தாலும்.....

சரியடி பெண்ணே,
கப்பல் கரையேறவும்
கலங்கரை விளக்கம் வேண்டுமல்லவா?
அவனை வரச் சொல்கிறேன் -
அவனை பூமிக்கு கொணர்ந்தவர்களோடு.
ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிடு
உன் மூச்சால்
தன் சுவாசத்தை நடத்துவனிடமல்ல
உன் தந்தையிடம்.

யாசகத்தை மறுத்தாய்
நட்பை மறுத்தாய்
காதலை மறுத்தாய்.
வேடந்தாங்கல் பறவைகள்
இறங்காமலே திரும்பின
ஸைபீரிய பனிப்பாலைக்கு....

அவள் மறுக்கட்டும்,
கலங்காது நீ போ
உன் சொந்தத்தோடு
நந்தவனத்திற்கு -
வந்தால் வசந்தம்
போனால் -
திருப்பதியில் மொட்டை..

அவன் மறுத்திட்டான் -
அவளோ ஒருநதிப் பாசனப் பயிர்.
நானோ இருநதி கலப்பு.
கலப்பைக் குத்திக் கீற வேண்டாம்
நான் பிறந்த மண்ணை.
துடுப்பில்லா ஓடம் கரை சேராது.

நான் வேண்டி கிடைக்காத
பொருள் ஒன்றும் இல்லையென்ற
திருப்தியை என்னால்
சவக்குழியில் இடமுடியாதே
என்ன செய்வேன்?
கடைசிக் கண்ணீரை பொழிந்து
விடைப் பெற்றுப் போனான்
தன் முகவரியை நிரந்தரமாக
மாற்றிக் கொண்டு.

**********


அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மாலைப்பொழுதின் கருக்கலில்
நட்சத்திரங்கள் பரிகசித்தன என்னை-
தேடித் தேடி கருமை
பூசிக்கொள்ளும் வேளையில்
அன்னத்தின் அன்னம் கொடுத்தது
நீலக் கலர் கவரொன்று.

'பெற்றோர் பார்த்து நிச்சயித்தவனை
நிச்சயம் மணப்பேன் என்றேனே -
நீ உன் துர்யோதனனிடம் சொல்லவில்லையா?'

மேகத்திலிருந்து ஒரு துளி தானே வேண்டினான்?
நீ துணையிருப்பதை
உன் மனவிருப்பதை -
ஒரு புன்னகையாகச் சொல்லியிருந்தால் கூட
முத்தாயிருக்குமே இந்நேரம்?

யாரை நான் குறை சொல்வது.....?
பெற்றவர் பேச்சை மறுப்பதில்லை என்றவளையா....?
பெற்றவர் மனம் நோகிட நான் காரணம் கூடாதென்றவனையா....?
நான்கு ஆத்மாக்கள் மனம் நோகாமல்
பயணத்தை முடித்துக் கொண்டனர்.
அவர்கள் விட்டுச் சென்ற இரண்டோ..
நடுவே குறுக்குச் சுவர் எழுப்பப் பட்ட
சாலையில் எதிரும் புதிருமாய் பயணிக்கின்றனர் -
பழுது பட்ட வாகனத்தோடு.

ஆயிரம் காலக் குமுறல் கொண்ட நிலம்
வெடித்தது யாரிடமும் சொல்லாமலே!
பூகம்ப நடுக்கத்தில் கண்ணீர்ப் பைகள்
உடைப்பெடுத்தது.

எதற்கு அழுகிறேன் என்று தெரியாமலே
அழுதாள் -
என் மகளும் என்னைக் கட்டிக் கொண்டு.

என் மகளுக்குத் தெரியாது -
துர்யோதனனை
பாஞ்சாலி காதலித்திருக்க முடியுமா
என்ற என் மன நடுக்கத்தை!

rambal
05-04-2003, 10:49 AM
நல்ல கவிதை..
தளத்திற்கு வந்திருக்கும் மற்றொரு சிறந்த கவி..
வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறீர்..
பாராட்டுக்கள்..
தொடரட்டும் உங்கள் பணி..

anushajasmin
05-04-2003, 11:20 AM
உங்களின் முதல் கவிதை தந்ததை விட இரண்டாவது கவிதை அதிகம் சிந்திக்க வைத்தது. குறிப்பாக அந்த கடைசி கேள்வியை நீங்கள் யோசித்திருக்கும் கோணம் முற்றிலும் புதுமை. பாராட்டுகள்

discreteplague
06-04-2003, 04:18 AM
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்...பாரட்டுக்கள்....அரிவுபூர்வமாக இருக்கு

விஷ்ணு

aren
06-04-2003, 05:06 AM
மறுபடியும் மறுபடியும் படிக்கத்தூண்டுகிறது. அழகாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டப்பட வேண்டியவர். பாராட்டுக்கள். நீங்கள் நிறைய எழுதவேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கு என் வாழ்த்துக்கள்.

இளசு
06-04-2003, 02:41 PM
நண்பனே
முத்திரை பதித்துவிட்டீர்.
சில ஆணிவேர்ப் பிரச்னைகள்
அதன் மேற்கிளைப் பாதிப்புகள்
நல்லது எண்ணி அல்லதாய் முடியும் அவலங்கள்
சொல்வதைப் புதிராய்ச் சொல்லி வாழ்வின் அத்தியாயங்களை
அநியாயத்துக்கு மாற்றி எழுதிவிடும் அநியாயங்கள்....

எத்தனை எண்ண அலைகள் உம் கவி கண்டு
நல்ல படைப்பென்றால் இதுதானே அதன் பண்பு

மன்மதன்
23-11-2004, 02:57 PM
கவிதை பிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கவிதை..
அன்புடன்
மன்மதன்