PDA

View Full Version : நவீன கிந்தனார் சரித்திரம்-காமெடி சிறுகதைமதுரை மைந்தன்
20-12-2008, 12:41 AM
ஆதௌ கீர்த்தனாம்பரத்திலே நம்ம நவீன கீர்த்தனாரைப் பத்திக் கொஞசம் விரிவாக சொல்லணும். பழைய கிந்தனார் கல்வி கற்கும் ஆரவத்தில் தனது கிராமத்தை விட்டு பட்டணத்திற்கு ரயில் ஏறினார். நம்ம நவீன கிந்தனார் பள்ளிக்கூடத்துக்கு இனிமே போக வேண்டாம் என்ற நப்பாசையில் ரயில் ஏறினான்.

அதற்கு காரணம் என்னனு நீங்க கேட்கணும். அவனை கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பு வந்ததுதான் காரணம். தனது நண்பர்கள் மூலம் கோடீஸ்வரன் நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்ட நம்ம கிந்தனார் தனது தந்தை சுருட்டு வாங்குவதற்காக வேட்டியின்
மடிப்பில் சுருட்டி வைத்திருந்த பணத்தை அவர் தூங்கிக் கொண்டிருக்கும் சமயம் சுருட்டிக் கொண்டு போய் நண்பன் ஒருவன் கொடுத்த எண்ணிற்கு போன் செய்ய இவனின் அதிர்ஷடம் இவனிடம் கேட்கப் பட்ட கேள்வி " கம்ப ராமாயணத்தை எழுதியது யார்?" . பதில் தெரியாமல் கிந்தனார் "கம்ப...கம்ப...." என்று தடுமாற கேள்வி கேட்டவர் " கரெக்ட் சரியான விடையான கமபர் என்று சொன்ன உங்களுக்கு கோடீஸ்வரன்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கிறேன்" என்று சொல்ல கிந்தனாருக்கு என்ன சொல்வதென்றே தோணாமல் தலையாட்டினான். கிந்தனாரிடமிருந்து பதில் வராததால் மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாக எடுத்துக் கொண்டு அழைப்பு கடிதத்தை அனுப்பி வைத்தார்.

போன் நமபர் கொடுத்த நண்பன் இவனிடம் வந்து "ஏய் என்ன ஆச்சு?" என்று கேட்க நம்ம கிந்தனார் மூணாம் பேஸ்து அடிச்ச மாதிரி நிற்க நிலமையை புரிந்து கொண்டு "கை கொடுடா மச்சி. ஆஹா என்னோட நண்பன் கோடீஸ்வரனாகப் போகிறான்" என்று கும்மாளம் போட கிந்தனார் தரை இறங்கினான். " ஏய் கோடி ரூபாய் பணத்தை என்ன பண்ணப் போற" என்று கேட்டவுடன் தான் கிந்தனாருக்கு உறைத்தது தனக்கு வரப் போகும் அதிர்ஷத்தைப் பற்றி. " முதல்ல ஸ்கூலுக்கு போற அவஸ்தையை விடுவேன். அப்புறம் ஒரு பெரிய கலர் டி.வி.யும் டேப்பு போட்டு சினிமாப் படம் பார்க்கற பெட்டியையும் வாங்குவேன் (படித்தவர்களுக்கு அவன் சொல்வது டி.வி.டி என்று விளங்கும்). கால் மேல கால் போட்டு கிட்டு பழைய எம்.ஜி.ஆர் சிவாஜி படங்களை நாள் முழுக்க பார்ப்பேன். சார்மினார் சிகரெட் பெட்டி பெட்டியாக வாங்கி ஊதி தள்ளுவேன். பாரின் சரக்குகளையும் வாங்கி உள்ளே தள்ளுவேன்" இவ்வாறாக கிந்தனார் அடுக்கினான். அதை வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நண்பன் " மச்சி மச்சி எனக்கும் ஒரு பெக் கொடுக்கணும்" னு கேட்க "உனக்கில்லாததாடா" என்று கிந்தனார் சொன்னான்.

ஒரு நல்ல நாளில் நமது கிந்தனார் சென்னைக்கு ரயில் ஏறினான் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் பங்கு பெற அவனுடய நண்பனுடன். முதல் தடவையாக ரயிலில் பயணம் செய்யும் உற்சாகத்தில் கிந்தனார் பாடலானான்.

சிக்கு புக்கு ரயிலே சிக்கு புக்கு ரயிலே
கட கட வென்று தண்டவாளத்தில் ஓடும் ரயிலே
கட கட என்று கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லி
மட மடவென்று கோடீஸ்வரனாகி
நட நடவென்று நடந்தது போய்
பட படவென்று காரில் போகச் செய்வாய் ரயிலே

சென்னையை அடைந்த கிந்தனாரையும் அவனது நண்பனையும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கப்பல் போன்ற காரில் கூட்டி செல்ல கிந்தனாரும் அவனது நணபனும் ஆ என்று வாயை பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே நிகழ்ச்சி நடக்கும் ஸ்டுடியோவிற்கு போய் சேர்ந்தனர். அங்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கிந்தனார் தயாரானான். அவனை அழைத்துச் சென்று
நிகழ்ச்சி நடத்துனர் முன்னால் இருக்கையில் அமர்த்தினர். இனி நாம் நிகழ்ச்சிக்கு போவோம்.

நடத்துனர்: கோடீஸ்வரன் நிகழ்ச்சியின் இன்றைய பங்கேற்பவர் கிந்தனார். இவர் மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து வந்திருக்கிறார். இவருடன் இவரது நண்பரும் வந்திருக்கிறார். அதோ முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார்.

இந்த அறிமுகத்தின் பிறகு நடத்துனர் கிந்தனார் பக்கம் திரும்பி

நடத்துனர்: வணக்கம் கிந்தனார் அவர்களே. உங்க கிராமத்தில என்ன விளையாட்டு விளையாடுவிர்கள்? அதாவது கிரிக்கெட் டென்னிஸ் புட்பால் ஹாக்கி இப்படி ஏதாவது?

கிந்தனார்: நீங்க சொல்ற விளையாட்டெல்லாம் எனக்கு தெரியாதுங்க. நான் விளையாடறது ஈ-பாக்கு விளையாட்டு தான்.

நடத்துனர்: என்னது ஈ-பாக்குனு ஒரு விளையாட்டா? அது என்னனு நேயர்களுக்கு சொல்ல முடியமா?

கிந்தனார் (உற்சாகத்துடன்): இந்த விளையாட்டில நானும் சினேகதனும் உடகார்ந்து கிட்டு நடுவில ஆளுக் கொரு கொட்டை பாக்கை வைப்போம். அப்புறம் கையை கட்டிக்கிட்டு அதையே பாத்துகிட்டு இருப்போம். யார் பாக்கில முதல்ல ஈ வந்து உக்காருதோ அவனொட பாக்கு மத்தவனுக்கு. அப்புறம் இன்னோரு பாக்கை வைச்சு மறுபடியும் விளையாட்டை ஆரம்பிப்போம்.

நடத்துனர்: ஆஹா ரொம்ப வித்தியாசமான விளையாட்டு. இப்போ இங்கே நாம விளையாடப் போறதைப் பத்தி நான் சொல்றேன். உங்க கிட்ட சில கேள்விகள் கேப்போன். ஒவ்வொரு கேள்விக்கும் நாலு பதில்களை தருவேன். சரியான பதிலை நீங்க சொன்னா உங்களுக்கு பணம் கிடைக்கும். 1000 ரூபாயிலிருந்து ஆரம்பிச்சு 1 கோடி ரூபாய் வரை பணம் கூடிக் கிட்டே போகும். உங்களுக்கு பதில் தெரியலைனா உங்களுக்கு மூணு உதவிகள் கிடைக்கும். முதல் உதவில நீங்க பார்வையாளர்களிடம் பதில் கேட்டு சொல்லலாம். இரண்டாவது உதவில நீங்க உங்களுக்கு வேணப்பட்டவங்க கிட்ட போனில் பதிலை கேட்டு தெரிஞ்சுக்கலாம். மூணாவது உதவில 50-50 அதாவது நாலு பதில்களிலிருந்து இரண்டு தவறான பதில்களை நீக்க சொல்லலாம். சரி இப்போ நாம விளையாட்டுக்குள்ள போகலாமா?

நடத்துனர்: உங்களுக்கான் முதல் கேள்வி. இதற்கான பதிலை சரியாக சொன்னால் 1000 ரூபாய் வெல்லுவீர்கள். கேள்வி இது தான்.

"சூரியன் உதிப்பது எந்த திசையில்?".

உங்களுக்கான நான்கு பதில்கள் 1) மேற்கு 2) வடக்கு 3) கிழக்கு 4) தெற்கு.

கிந்தனாரிடமிருந்து சற்று நேரத்திற்கு பதில் வராமல் போகவே

நடத்துனர்: டைரக்டர் பாரதி ராஜாவின் கிழக்கே போகும் ரயில் படம்
பார்த்திருக்கிறீர்களா?

கிந்தனார் (வெகு யோசனையிலிருந்த திடீரென்று): சரியான விடை கிழக்கு

நடத்துனர்: சபாஷ். எப்படி சரியான விடையை கண்டு பிடிச்சீங்க?

கிந்தனார்: போன வருசம் எங்க கிராமத்தில தேர்தலுக்கு எங்கிட்ட ஒரு கட்சி காரரு போஸ்டருங்களைக் கொடுத்து நம்ம கட்சி இந்த தேர்தல்ல கட்டாயம் ஜெயிக்கணும் அதனால போஸ்டருங்களை கிழக்க பார்த்து ஒட்டுனு சொன்னாரு. போஸடர்ல சூரியனோட படம் இருந்திச்சு.

நடத்துனர் (சிரித்துக் கொண்டே): எப்படியோ சரியான பதிலை சொல்லி 1000 ரூபாய்களை ஜெயிச்சிருக்கீங்க. இனி அடுத்த கேள்வி. இந்த கேள்விக்கு சரியா பதிலை சொன்னீங்கனா 5000 ரூபாய் வெல்லுவீங்க. இதோ உங்களுக்கான கேள்வி.

" கிரிக்கெட் வீரர் டெண்டுல்கரின் முதல் பெயர் என்ன?"

உங்களுக்கான நாலு பதில்கள்.

1) ஆதி 2) கில்லி 3) சச்சின் 4) குருவி

கிந்தனார் ( கொஞசம் யோசிச்சு): சச்சின்

நடத்துனர்: பலே இந்த கேள்விக்கும் சரியா பதிலை தந்திருக்கீங்க எப்படி?

கிந்தனார்: இளைய தளபதி விஜய் நடிச்ச எல்லா படங்களையும் பாத்திருக்கேன் சச்சின் படத்தை தவிர.

நடத்துனர்: எப்படியோ அது தான் சரியான பதில் நீங்க 5000 ரூபாய் ஜெயிச்சிருக்கீங்க. அடுத்த கேள்விக்கு சரியான பதிலை சொன்னீங்கனா 10000 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். ரெடியா? இதோ உங்களுக்கான அடுத்த கேள்வி

" இவர் மதுரை நகரின் மேயராக இருந்தவர். இவர் யார்?". உங்களுக்கான நாலு பதில்கள் இதோ

1) மதுரை முத்து 2) கோவை குணா 3) ஈரோடு சீனு 4) திண்டுக்கல் லியோனி

கிந்தனார்( சற்று யோசித்த பின்): மதுரை முத்து

நடத்துனர்: எப்படி சரியான விடையை கண்டு பிடிச்சீங்க?

கிந்தனார்: நான் வாரா வாரம் சன் டி.வி.ல அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை தவறாம பார்ப்பேன். அதில மதுரை முத்து காமெடி ரொம்ப பிடிக்கும்.

இப்படியாக படிப் படியாக முன்னேறி கிந்தனார் கோடி ரூபாய் ஜெயிக்க கடைசி கேள்விக்கு தயாரானான்.

நடத்துனர்: ஆஹா எனக்கு ரொம்ப த்ரிலிங்கா இருக்கு. இந்த கடைசி கேள்விக்கு சரியான பதில் அளித்தீங்கனா நீங்க கோடீஸ்வரர். கிந்தனார் அவர்களே நீங்க எப்படி பீல் பண்றீங்க?

கிந்தனார்: சீக்கிரம் கேளுங்க. என்னோட இருதயம் பட படனு அடிச்சிக்கிட்டிருக்கு.

நடத்துனர்: சரி. இதோ உங்களை கோடீஸ்வரனாக ஆக்க வல்ல கேள்வி.

" இது விவசாயத்துக்கு பெரிதும் பயன் படுத்தப் படுகிறது. இது என்ன?".

உங்களுக்கான நாலு விடைகள் இதோ.

1) அகப்பை 2) கலப்பை 3) கருப்பை 4) பணப்பை

கிந்தனார் சீட்டின் விளிம்பில் வந்து விடைகளை திரும்ப திரும்ப படித்து தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

நடத்துனர்: உங்களிடம் இன்னும் மூன்று உதவிகள் பாக்கி இருக்கு. அதை ஏன் நீங்கள் பயன் படுத்தக் கூடாது?

கிந்தனாருக்கு அது சரியாக படவே: நான் பார்வையாளர்களின் உதவியை நாடுகிறேன்.

நடத்துனர்: பார்வையாளர்களே உங்களுக்கு 30 செகண்டு அவகாசம் தாப் படுகிறது. நாலு விடைகளில் சரியான விடையை பதிவு செய்யுங்கள். உங்களுக்கான நேரம் ஆரமபிக்கிறது.

பார்வையாளர்கள் விடையளிக்க அங்கிருந்த பெரிய திரையில் அவர்களின் விடைகளை பட்டியலிட்டு காணப் படுகிறது. நான்கு விடைகளுக்கும் கிட்டத்தட்ட சரி சமமாக அனைவரும் விடை அளித்திருந்தனர்.

அகப்பை விடை அளித்தவர்களின் வாதம் விவசாயி வயலில் பாடு படும் பொழுது அவர்களின் மனைவியார் அகப்பையினால் அவர்களுக்கு உணவு பறிமாறுவதால் அதுவே சரியான விடை.

கலப்பை விடை அளித்தவர்கள் அடித்து சொன்னார்கள் அதுவே சரியான விடை.

கருப்பை விடை அளித்தவர்களின் வாதம் விவசாயிகளை இந்த உலகிற்கு கொண்டு வந்த அவர்களின் தாயின் கருப்பையே சரியான விடை.

பணப்பை விடை அளித்தவர்களின் வாதம் விவசாயத்திற்கு வேண்டிய விதை உரம் மற்றும் வயலுக்கு நீர் பாய்ச்ச மின்சாரம் இவற்றிற்கு பயன் படுவதால் பணப்பையே சரியான விடை.

நடத்துனர்: ஆஹா இப்படி இக்கட்டில மாட்டி விட்டுடாங்களே பார்வையாளர்கள். இப்போ நீங்க என்ன பண்ணப் போறீங்க?

கிந்தனார்: நான் அடுத்த உதவியான நண்பருக்கு போன் பண்ணும் உதவியை பயன் படுத்த விரும்பறேன்.

நடத்துனர்: யார் கிட்ட பேச விரும்புறீங்க?

கிந்தனார்: எங்க ஊர் பஸ் ஸ்டாண்டல டீ கடை நாயருக்கு போன் போடுங்க. அவருக்கு தெரியாத விசயமே கிடையாது. அவர் கிட்ட போன் இல்லை. பக்கத்து போஸ்ட் ஆபீசுக்கு போன் போட்டு அவரை கூப்பிடுங்க.

நடத்துனர் (சில நிமிடங்கள் கழித்து): வணக்கம் நாயர் அவர்களே. நாங்க கோடீஸ்வரன் நிகழ்ச்சியிலிருந்து பேசறோம். எனக்கு மன்னாலே உங்க ஊர் கிந்தனார் இருக்காரு. அவர் கோடி ரூபாய் பரிசை வெல்ல நீங்க உதவணும். உங்க கிட்டே ஒரு கேள்வியும் அதற்கான நாலு விடைகளும் வைக்கப் படும். அதிலிருந்து சரியான விடையை உங்க நண்பருக்கு சொல்லணும். இதோ இப்போ கிந்தனார் உங்களொட பேசுவார். உங்களுக்கு கொடுக்கப்புடும் அவகாசம் 30 வினாடிகளே. உங்க டைம் ஆரம்பமாகிறது.

கிந்தனார்: நாயரண்ணே எனக்கு கோடி ரூபாய் ஜெயிக்க நீங்க தான் உதவணும். கேள்வி இது தான்...
கிந்தனார் கேள்வியை சொல்லுமுன் நாயர் அங்கிருந்த எல்லோரையும் கூப்பிட்டு நம்ம கிந்தனாருக்கு கோடி ரூபாய் கிடைக்க போறதாம் என்று பறை சாற்ற 30 வினாடி அவகாசம் முடிந்து விடுகிறது.

நடத்துனர்: ஐ ஆம் சாரி. நாயர் உங்களுக்கு உதவ முடியவில்லை. அடுத்து என்ன பண்ணப் போறீங்க?

கிந்தனார்: நான் 50-50 உதவியை விரும்புறேன்.

நடத்துனர்: உங்களுக்கான் 50-50 மூலம் இரண்டு தப்பான விடைகள் அகற்றப் பட்டு விட்டன. இப்போ விடைகள் 1) கலப்பை 2) கருப்பை.

கிந்தனாருக்கு இன்னும் சரியான விடை தெரியாததால் உதவிக்கு பார்வையாளர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் நண்பனை பார்க்க இதை கவனித்த நடத்துனர் நண்பரிடம் " நீங்க விடையை சொல்லக் கூடாது" என்று கட்டளையிட அவன் தன் ஒற்றை விரலால் வாயை பொத்திக் கொள்ள கிந்தனார் துள்ளி குதித்து " சரியான விடை முதல் விடை கலப்பை" என்று சொல்ல கிந்தனார் கோடீஸ்வரானாகிறான்.

இப்படியாகத் தானே நம்ம கிந்தனார் தனது பள்ளிக்கு செல்லும் அவஸ்தையிலிருந்து விடுதலை பெற்றாலும் பரிசை பெற்றுக் கொண்டதும் நடத்துனர் கேட்ட "இந்த பணத்தை எப்படி செலவு செய்யப் போறீங்க?" என்ற கேள்விக்கு " இந்த பணத்தைக் கொண்டு எங்க கிராமத்து ஏழை பசங்களுக்கு படிக்க வசதி செய்வேன். நான் தான் படிக்காத அறிவிலியா இருந்தாலும் மத்த பசங்க அப்படி ஆக கூடாது" என்றவுடன் பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.

அய்யா
20-12-2008, 03:29 AM
கிந்தனார் கோடீஸ்வரன் போட்டிக்கு தகுதி பெற்ற விதமும்,
அடுத்து போட்டிக்கேள்விகளுக்கு அவன் சொல்லும் விளக்கங்களும் நகைச்சுவையின் உச்சகட்டம்!

இறுதியில், கோடீஸ்வரனானபின் தன் ஆரம்பகாலத் திட்டங்களை ஒதுக்கிவிட்டு கல்விப்பணிக்கு பணத்தைத்தர முன்வருவது, உள்ளத்தைத் தொடுகிறது.

நல்ல சிந்தனையண்ணா உங்களுக்கு!

ராஜா
20-12-2008, 03:36 AM
நல்ல நகைச்சுவைக் கதை..!

சுருட்டி வைத்திருந்த சுருட்டுப்பணத்தை சுருட்டும் கிந்து, அதுக்கப்புறம் செய்யறான் ஏகப்பட்ட லந்து..!

போட்டியில் தான் சொன்ன பதில்களுக்கான காரணம் கூறுகையில் அருள்வடிவாக மிளிரும் கிந்து,

வென்ற தொகையை மற்றவர் அறியாமை போக்க அர்ப்பணிப்பது டச்சிங்..!

மதுரை மைந்தன்
20-12-2008, 09:23 AM
கிந்தனார் கோடீஸ்வரன் போட்டிக்கு தகுதி பெற்ற விதமும்,
அடுத்து போட்டிக்கேள்விகளுக்கு அவன் சொல்லும் விளக்கங்களும் நகைச்சுவையின் உச்சகட்டம்!

இறுதியில், கோடீஸ்வரனானபின் தன் ஆரம்பகாலத் திட்டங்களை ஒதுக்கிவிட்டு கல்விப்பணிக்கு பணத்தைத்தர முன்வருவது, உள்ளத்தைத் தொடுகிறது.

நல்ல சிந்தனையண்ணா உங்களுக்கு!

அன்பு நண்பர் அய்யா

நான் ஏற்கனவே கூறிய படி என்னுள் இருந்த நகைச்சுவை எழுத்துக்களை புரிந்து கொண்டு நீங்கள் தந்த வாய்ப்பின் மூலம் வந்த உந்துதலினால் இந்த கதையை எழுதினேன். உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
20-12-2008, 09:25 AM
நல்ல நகைச்சுவைக் கதை..!

சுருட்டி வைத்திருந்த சுருட்டுப்பணத்தை சுருட்டும் கிந்து, அதுக்கப்புறம் செய்யறான் ஏகப்பட்ட லந்து..!

போட்டியில் தான் சொன்ன பதில்களுக்கான காரணம் கூறுகையில் அருள்வடிவாக மிளிரும் கிந்து,

வென்ற தொகையை மற்றவர் அறியாமை போக்க அர்ப்பணிப்பது டச்சிங்..!


அன்பு நண்பர் ராஜா

எல்லேரையும் சிரிக்க வைக்கும் திறன் படைத்த உங்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Keelai Naadaan
20-12-2008, 01:37 PM
பார்வையாளர்களை போலவே நாங்களும் கிந்தனாரை கரகோஷம் செய்து பாராட்டுகிறோம்.

மதுரை மைந்தன்
21-12-2008, 09:39 AM
பார்வையாளர்களை போலவே நாங்களும் கிந்தனாரை கரகோஷம் செய்து பாராட்டுகிறோம்.

சங்கீத சீசனில் இசை மழையில் நனைந்து மன்றத்து பக்கம் வரமாட்டீரகள் அப்படியே வந்தாலும் என்னுடய இந்த நகைச்சுவை கதையை மற்றவர்கள் போல் நீங்களும் ஓரம் கட்டுவீரகள் என்று நினைத்தேன். உங்களுடய பின்னூட்டம் அவற்றை பொய்யாக்கி விட்டது. நன்றி.

சூரியன்
21-12-2008, 09:57 AM
நல்ல நகைச்சுவையாக இருந்தது,
கடைசியில் சொன்னானே ஒரு வார்த்தை சூப்பர்.

சிவா.ஜி
21-12-2008, 10:03 AM
நவீன நந்தனார்...ரொம்பவே நவீனமா இருக்கார். கேள்விகள் அடுக்கப்பட்ட விதமும், அதற்கு குருட்டாம்போக்கில் சரியான விடையளித்து, அதற்கான காரணத்தையும் சொல்வதைப் படித்தபோது உண்மையிலேயே சிரித்துவிட்டேன்.

முடிவு சூப்பர். நல்ல நகைச்சுவையுணர்வு உங்களுக்கு மதுரை மைந்தரே....பாராட்டுக்கள்.

அன்புரசிகன்
21-12-2008, 10:07 AM
அழகாக நகர்த்தி இறுதியில் ஒரு நச் அளித்திருக்கிறீர்கள். சூப்பர் மதுர அண்ணா.

மதுரை மைந்தன்
21-12-2008, 10:51 AM
நல்ல நகைச்சுவையாக இருந்தது,
கடைசியில் சொன்னானே ஒரு வார்த்தை சூப்பர்.

முதன் முறையாக எனது கதைக்கு பாராட்டியிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திருப்பூர் சூரியன் நண்பரே.

மதுரை மைந்தன்
21-12-2008, 10:53 AM
நவீன நந்தனார்...ரொம்பவே நவீனமா இருக்கார். கேள்விகள் அடுக்கப்பட்ட விதமும், அதற்கு குருட்டாம்போக்கில் சரியான விடையளித்து, அதற்கான காரணத்தையும் சொல்வதைப் படித்தபோது உண்மையிலேயே சிரித்துவிட்டேன்.

முடிவு சூப்பர். நல்ல நகைச்சுவையுணர்வு உங்களுக்கு மதுரை மைந்தரே....பாராட்டுக்கள்.

நன்கு ரசித்து பாராடடியதற்கு மிக்க நன்றி சிவா.ஜி சார்

மதுரை மைந்தன்
21-12-2008, 10:55 AM
அழகாக நகர்த்தி இறுதியில் ஒரு நச் அளித்திருக்கிறீர்கள். சூப்பர் மதுர அண்ணா.

உங்கள் பெயருக்கு ஏற்ற மாதிரி நீங்கள் ஒரு அன்புரசிகன் தான். நன்றி.

சூரியன்
21-12-2008, 10:56 AM
முதன் முறையாக எனது கதைக்கு பாராட்டியிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன். பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி திருப்பூர் சூரியன் நண்பரே.இன்றுதான் உங்களின் படைப்புகளை படிக்க முடிந்தது,
நிச்சயம் எனது ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும்.
தொடர்ந்து எழுதுங்கள் படித்து ரசிக்கின்றோம்.

பாரதி
21-12-2008, 12:33 PM
மிக நன்றாக இருந்தது மதுரை மைந்தரே...! அந்தக்கால கிந்தனாரும் சரி, இந்தக்கால கிந்தனாரும் சரி - சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள். சிரிப்புடன் கூடிய சிந்தனை எளிதில் மனதில் இடம்பிடிக்கும் அல்லவா..? உங்களின் வசனங்கள் சிறந்த பழைய படங்களில் வரும் அழியா நகைச்சுவைக் காட்சி போல சிறப்பாக இருக்கிறது. மனம்கனிந்த வாழ்த்து மைந்தரே.

ரங்கராஜன்
23-12-2008, 10:10 AM
இது ஒரு ஹய்-கிளாஸ் காமெடி கதை, வாழ்த்துக்கள் மதுரை மைந்தரே, நான் கேட்ட காதல் கதை என்ன ஆச்சு?

தீபா
23-12-2008, 10:26 AM
ஈ பாக்கு விளையாட்டு என்றதும் அதன் விளக்கம் கண்டு சிரிக்கவே தோன்றியது....

ஒரு முட்டாள்தனமான கேள்விகளுக்கு முட்டாள்தனமான பதில்கள்... ஒருவன் ஏமாளியானால்தான் ஜோக்கர் ஆகிறான்.. இல்லையா திரு.மதுரை அவர்களே? இக்கதை அப்படியே தொடரும் பட்சத்தில், முதல் வரிசையில் அமர்ந்து படிக்க நான் ரெடி..

அன்புடன்
தென்றல்

மதுரை மைந்தன்
25-12-2008, 12:21 AM
மிக நன்றாக இருந்தது மதுரை மைந்தரே...! அந்தக்கால கிந்தனாரும் சரி, இந்தக்கால கிந்தனாரும் சரி - சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள். சிரிப்புடன் கூடிய சிந்தனை எளிதில் மனதில் இடம்பிடிக்கும் அல்லவா..? உங்களின் வசனங்கள் சிறந்த பழைய படங்களில் வரும் அழியா நகைச்சுவைக் காட்சி போல சிறப்பாக இருக்கிறது. மனம்கனிந்த வாழ்த்து மைந்தரே.

உங்கள் பாராட்டுக்களுக்கும் ஐ காஷ் டொனேஷனுக்கும் மிக்க நன்றி நண்பர் பாரதி அவர்களே.

மதுரை மைந்தன்
25-12-2008, 12:26 AM
இது ஒரு ஹய்-கிளாஸ் காமெடி கதை, வாழ்த்துக்கள் மதுரை மைந்தரே, நான் கேட்ட காதல் கதை என்ன ஆச்சு?

உங்கள் பாராட்டு என்னை ஒன்பதாம் மேக மண்டலத்திற்கு (cloud nine) தூக்கியுள்ளது. காதல் கதை தயாரிக்கிட்டிருக்கிறது. விரைவில் பதிவு செய்வேன். மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
25-12-2008, 12:30 AM
ஈ பாக்கு விளையாட்டு என்றதும் அதன் விளக்கம் கண்டு சிரிக்கவே தோன்றியது....

ஒரு முட்டாள்தனமான கேள்விகளுக்கு முட்டாள்தனமான பதில்கள்... ஒருவன் ஏமாளியானால்தான் ஜோக்கர் ஆகிறான்.. இல்லையா திரு.மதுரை அவர்களே? இக்கதை அப்படியே தொடரும் பட்சத்தில், முதல் வரிசையில் அமர்ந்து படிக்க நான் ரெடி..

அன்புடன்
தென்றல்

கதையைப் பற்றிய உங்க விமரிசனம் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. உங்களுடய ஐடியாவான இக்கதையை தொடர்வது எனக்கு பிடித்திருக்கிறது. முயற்சிக்கிறேன். மிக்க நன்றி நண்பர் தென்றல் அவர்களே.

மதி
25-12-2008, 02:16 AM
மைந்தரே..
இப்போது தான் படித்தேன்... கிந்தனார் சரித்திரம் கலக்கல். அதிலேயும் கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு தேர்வான விதமும் அவனுக்கு கேட்கப்பட்ட கேள்விகளும் நிஜத்திலேயே நடப்பது போன்றிருந்தது...

பாராட்டுக்கள் அன்பரே.