PDA

View Full Version : சுட்டெரிக்கும் தனிமை...சசிதரன்
19-12-2008, 06:31 AM
தோட்டத்து செடிகளில் கூட...
முட்கள் மட்டுமே பூக்கிறது...

சிரித்த தருணங்களும் கூட...
இந்த கணம் நினைக்கையில்...
கண்ணீரின் பின்னணியில் தெரிகிறது..
மங்கலாக....

தனிமையின் வெறுமை...
சிறு நிழலென தொடங்கி...
பின்னிரவின் இருளென பரவுகிறது..

மின்விசிறியின் சத்தம் மட்டும் துணையாய் கொண்டு...
விழித்தபடியே கழிக்கும் இரவுகள்...
ஓங்கி ஒலிக்கும் நிசப்தத்தின் அதிர்வினில்...
அரண்டு போகிறது மனம்....

சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை...
எண்ணங்களை எழுதும் முன்னே எரிந்து போகிறது காகிதமும்...
எழுத்தில் வடிக்காத வார்த்தைகளை
உலர்ந்த உதட்டின் வழியே கசிய விடுகிறேன்...

காற்றில் கரைந்த வார்த்தைகள் எல்லாம்...
என்றேனும் ஒரு நாள்...
உங்களில் யாருக்கேனும் கிடைக்க கூடும்...
வானவில் மூலமோ.... வான்மழை மூலமோ...

Narathar
19-12-2008, 06:37 AM
அடடா!!!!!

மன்றத்தில் இன்னொறு கவிஞசர்..........
வரவேண்டும் வரவேண்டும்...

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை!
வாழ்த்துக்கள்!

அப்படியே நிழலுக்கு உயிர் என்று ஒரு கவிதை திரி இருக்கு. அங்கும் ஒரு விசிட் அடிங்க...........

சிவா.ஜி
19-12-2008, 07:16 AM
முதிர்ந்த வரிகள். சிறந்த அர்த்தங்கள். தனிமையில் தவித்தபோது உதிர்த்த வார்த்தைகள் வானவில்லின் மூலமோ, வான்மழையின் மூலமோ யாரையும் எட்டுவதற்குள், கவி வரிகளின் மூலம் காணப்பட்டது. விரைவிலேயே சூழ்ந்திருக்கும் தனிமை விலகி ஓடும்.

அருமையான கவிதை சசிதரன். பதித்த இரண்டு கவிதைகளுமே தனிமை சோகம் சொல்லுகின்றன. எனில் உங்கள் தனிமையின் கொடுமையை மனம் உணருகிறது. வெவ்வேறு கருக்களைக் கையாளுங்கள்...தனிமை பறந்தோடிவிடும்.

வாழ்த்துகள்.

சூரியன்
19-12-2008, 08:36 AM
அழகான வரிகள்.
மன்றத்திற்கு மேலும் ஒரு கவிஞர்.
வாழ்த்துக்கள்.

மதுரை மைந்தன்
19-12-2008, 09:56 AM
அழகான வரிகள். அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

சுஜா
19-12-2008, 11:04 AM
தனிமையின் வெறுமை...
சிறு நிழலென தொடங்கி...
பின்னிரவின் இருளென பரவுகிறது..

மின்விசிறியின் சத்தம் மட்டும் துணையாய் கொண்டு...
விழித்தபடியே கழிக்கும் இரவுகள்...
ஓங்கி ஒலிக்கும் நிசப்தத்தின் அதிர்வினில்...
அரண்டு போகிறது மனம்....

...

மிகவும் அருமையான கவிதை
வரிகள் .
இந்த குறிப்பிட்ட வார்த்தைகளை படிக்கையில்
எனது விடுதி வாசம் நிலவுகிறது .
இந்த கருப்பொருள் கரைபொருளாய்
மாறும்.வாழ்த்துகள்

நிரன்
19-12-2008, 12:27 PM
சுட்டெரிக்கும் தார் சாலையென நீழும் தனிமை..
அதி்ல் சுட்டுப்போட்ட உன் நினைவுகள்
எண்ணங்களை எழுதுமுன்னே எரிந்து போகிறது காகிதம்
என் கன்னங்களில் கை வைத்து கதறுகிறேன் தினம்.
எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தையை உதட்டில் வடிக்கிறேன்
உதட்டிலும் வடியா வார்த்தை என் கண்ணில் வடிக்கிறேன் தனிமையில்....

நன்றாக உள்ளது கவி வரிகள் தனிமையில் கொடுமையை நன்றாக உணா்த்துகிறது.... வாழ்துக்கள் சசிதரன் அவா்களே...
''கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது''
வறுமை மட்டுமல்ல இளமையில் தனிமையும் கொடிதே..
காதலி இருந்தால் தனிமைகூட இனிமை காதலி பிரிந்தால் தனிமையே கொடுமை...

தொடா்ந்தும் எழுதுங்கள்...

ஆதி
19-12-2008, 01:27 PM
மோன பசுவனத்தில்
ஆல பெருமரமாய்
எழுந்து நிற்கும் நிமிடங்கள்
அடியோடு சாய்ந்து
அழுத்தி புதைக்கின்றன என்னை..

சுரக்கும் தனிமை சுண்ணாம்பில்
வெறுமை புண் கொப்பளித்து
வேதனை குமிழ்கிறது மனதில்..

பேசுத்துணையற்ற நெடுவெளியில்
முறிந்த என் றெக்கைகளில்
முணுமுனுக்கின்றன
ஒட்டியிருக்கும் இறகுகள்
யாருமின்மையின் பாடலை..

வாழ்த்துக்கள் சசிதரன்.. நிறைய எழுதி எங்களுக்கு விருந்து படையுங்கள்..

சசிதரன்
19-12-2008, 05:11 PM
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே...:)

சசிதரன்
19-12-2008, 06:06 PM
மிக அருமையான வரிகள் நண்பர் ஆதி அவர்களே...

அமரன்
02-01-2009, 09:26 AM
ஹ. உங்களிடமிருந்து இன்னொரு தனிமைத்தாலாட்டு. இறுதியில் தூக்கம்தானே. தூங்குபவனுக்கு துக்கமில்லை. சுமப்பவனுக்கோ..

அழகு கொட்டிக் கிடக்கும் கவிதை. அதனாழத்தில் அமிழ்ந்திருக்கும் வேதனை.
பாராட்டுகள் சசிதரன்.

ஆதவா
08-01-2009, 09:23 AM
பாராட்டுக்கள் சசிதரன். தனிமையின் கொடுமை பற்றி வெகு அழகாக படைத்துவிட்டீர்கள். தனிமை என்பது எப்படி வரையறுக்க வேண்டும்? தனியாக இருந்தால் அது தனிமை ஆகிவிடமுடியுமா? நம்மை சுற்றிக் கொண்டிருக்கும் எண்ண அரக்கர்கள், புலமை நிறைந்த இயற்கையின் சீண்டல்கள், பின்னோக்கிச் செல்லமுடிகிற எண்ண அலைகள் என்று பலர் இருக்கையில் அது தனிமை ஆகிவிடமுடியுமா?

தோட்டத்துச் செடியில் முட்கள்.... குத்திக் காட்டவா? அதைவிட, உதிர்ந்து மொட்டையாகிப்போன செடியை ஒப்பிட்டிருக்கலாம். பிரிவுதான் தனிமைக்கு வழி.. முட்கள் கூட செடியின் இலைகள்தானே!

பின்னோக்கி இழுக்கும் நினைவுகளை வரப்பிரசாதமாகத் தருவதும் தனிமைதான்.. எனக்குப் பெரும்பாலான சிந்தனைகள் கழிவறையில் உதிக்கின்றன.. காரணம், எந்த காரணிகளும் எனை அண்டாத தனிமை. ஆனால், நினைவுகள் வெறும் வலிகளாக இருக்கும் பொழுது, உடன் யாருமின்மை, பொங்கி வழியும்... சில சமயம் ஆட்கள் இருக்கும்பொழுது, நம்மை அறியாமல் கொட்டச்செய்வதும் இதுவே...

தனிமையின் வெறுமை, யாதொன்றுமில்லாத வெற்றிடத்தை முன்னிருத்துகிறது.. நிழல்கள் சிறு இருள். அதன் நீட்சி பின்னிரவின் அடர் கரும்புகை. செல்லச் செல்ல, அது கதிர் நுழையா அடர்காட்டின் வன்மம்..

இந்த கவிதையில் நாயகனின் உணர்வை மட்டுமே சொல்லப்படுவதால், நாயகனின் இடம்பெயர்தலோ, அவனைப் பற்றிய விவரணைகளோ ஏதும் அவசியமற்றதாகி, கவிதையிலும் இடம்பெறாமல் போவது தனிச்சிறப்பு. அவன் கழிக்கும் இரவுகள், மின்விசிறியின் சப்தத்தைத் துணைகொள்கிறது ; அவன் தனிமையின் அடர்த்தி, அவனை மிரளச்செய்கிறது..

சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை...

இவ்வரிகள் சொல்லும் அர்த்தங்கள் இரண்டு... முதலாவது தனிமையின் நீட்சி. இரண்டாவது அதன் வன்மம். படுத்துருண்டு கொதிக்கும் வெங்கதிர்கள் தனிமையின் வன்மத்தை அல்லது வலியைச் சொல்லுகிறது, சாலையின் நீளம், தனிமை நீடிக்கும் காலம் பற்றி சொல்லுகிறது.

எண்ணங்களை எழுதும் முன்னே எரிந்து போகிறது காகிதமும்...

சிலசமயம், வெறுமையினால் ஏற்படும் இல்லாமை, நம்மை நிலைகுலையச் செய்யும், உதிக்கின்ற கவிதைகள், நீர்த்துப் போகும், வெளியின் எல்லையின்மை உணரும் கற்பனைகள் சிறகறுந்து போகும். எண்ணங்களைப் பதிவு செய்யுமுன்னரே காகிதங்கள் எரிந்தும் போகிறது.. இது ஒரு நல்ல வரி..

எழுத்தில் வடிக்காத வார்த்தைகளை
உலர்ந்த உதட்டின் வழியே கசிய விடுகிறேன்...

தனிமை வலியின் உச்சகட்டம், எழுதமுடியாத, எழுதத்தெரியாத எண்ணங்கள், உதடுகளைப் பிதுக்கி வெளியேறுகிறது நம்மை அறியாமலே! உலர்ந்த உதடு என்ற வார்த்தையை சற்று கவனிக்கலாம்.. யாருமற்றதால், பேசமுடியவில்லை, எதுவுமின்மையால் ரசித்து, நாக்கைச் சுழற்றமுடியவில்லை.. உதடுகள் ஈரம் காய்ந்து உலர்ந்து போகின்றன... தனிமை! தனிமை! தனிமை... தனிமை அன்றி வேறேதுமின்றி... இதற்கு அடுத்த வரிகள், கவிதையை மட்டுமே பேசுகின்றன. தனிமையின் உளறல்கள் யாருக்கோ, ஏதோ ஒரு வடிவில் கிடைக்கக்கூடும் என்ற நப்பாசையுடன் முடிகிறது.

மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டு நீண்ட நாட்களாக அலைந்து கொண்டிருக்கிறீர்களோ!!!

சசிதரன்
08-01-2009, 04:05 PM
ஹ. உங்களிடமிருந்து இன்னொரு தனிமைத்தாலாட்டு. இறுதியில் தூக்கம்தானே. தூங்குபவனுக்கு துக்கமில்லை. சுமப்பவனுக்கோ..

அழகு கொட்டிக் கிடக்கும் கவிதை. அதனாழத்தில் அமிழ்ந்திருக்கும் வேதனை.
பாராட்டுகள் சசிதரன்.

மிகவும் நன்றி அமரன் அவர்களே... நல்லதொரு பாராட்டிற்கு மிக்க நன்றி..:)

சசிதரன்
08-01-2009, 04:22 PM
பாராட்டுக்கள் சசிதரன். தனிமையின் கொடுமை பற்றி வெகு அழகாக படைத்துவிட்டீர்கள். தனிமை என்பது எப்படி வரையறுக்க வேண்டும்? தனியாக இருந்தால் அது தனிமை ஆகிவிடமுடியுமா? நம்மை சுற்றிக் கொண்டிருக்கும் எண்ண அரக்கர்கள், புலமை நிறைந்த இயற்கையின் சீண்டல்கள், பின்னோக்கிச் செல்லமுடிகிற எண்ண அலைகள் என்று பலர் இருக்கையில் அது தனிமை ஆகிவிடமுடியுமா?

தோட்டத்துச் செடியில் முட்கள்.... குத்திக் காட்டவா? அதைவிட, உதிர்ந்து மொட்டையாகிப்போன செடியை ஒப்பிட்டிருக்கலாம். பிரிவுதான் தனிமைக்கு வழி.. முட்கள் கூட செடியின் இலைகள்தானே!

பின்னோக்கி இழுக்கும் நினைவுகளை வரப்பிரசாதமாகத் தருவதும் தனிமைதான்.. எனக்குப் பெரும்பாலான சிந்தனைகள் கழிவறையில் உதிக்கின்றன.. காரணம், எந்த காரணிகளும் எனை அண்டாத தனிமை. ஆனால், நினைவுகள் வெறும் வலிகளாக இருக்கும் பொழுது, உடன் யாருமின்மை, பொங்கி வழியும்... சில சமயம் ஆட்கள் இருக்கும்பொழுது, நம்மை அறியாமல் கொட்டச்செய்வதும் இதுவே...

தனிமையின் வெறுமை, யாதொன்றுமில்லாத வெற்றிடத்தை முன்னிருத்துகிறது.. நிழல்கள் சிறு இருள். அதன் நீட்சி பின்னிரவின் அடர் கரும்புகை. செல்லச் செல்ல, அது கதிர் நுழையா அடர்காட்டின் வன்மம்..

இந்த கவிதையில் நாயகனின் உணர்வை மட்டுமே சொல்லப்படுவதால், நாயகனின் இடம்பெயர்தலோ, அவனைப் பற்றிய விவரணைகளோ ஏதும் அவசியமற்றதாகி, கவிதையிலும் இடம்பெறாமல் போவது தனிச்சிறப்பு. அவன் கழிக்கும் இரவுகள், மின்விசிறியின் சப்தத்தைத் துணைகொள்கிறது ; அவன் தனிமையின் அடர்த்தி, அவனை மிரளச்செய்கிறது..

சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை...

இவ்வரிகள் சொல்லும் அர்த்தங்கள் இரண்டு... முதலாவது தனிமையின் நீட்சி. இரண்டாவது அதன் வன்மம். படுத்துருண்டு கொதிக்கும் வெங்கதிர்கள் தனிமையின் வன்மத்தை அல்லது வலியைச் சொல்லுகிறது, சாலையின் நீளம், தனிமை நீடிக்கும் காலம் பற்றி சொல்லுகிறது.

எண்ணங்களை எழுதும் முன்னே எரிந்து போகிறது காகிதமும்...

சிலசமயம், வெறுமையினால் ஏற்படும் இல்லாமை, நம்மை நிலைகுலையச் செய்யும், உதிக்கின்ற கவிதைகள், நீர்த்துப் போகும், வெளியின் எல்லையின்மை உணரும் கற்பனைகள் சிறகறுந்து போகும். எண்ணங்களைப் பதிவு செய்யுமுன்னரே காகிதங்கள் எரிந்தும் போகிறது.. இது ஒரு நல்ல வரி..

எழுத்தில் வடிக்காத வார்த்தைகளை
உலர்ந்த உதட்டின் வழியே கசிய விடுகிறேன்...

தனிமை வலியின் உச்சகட்டம், எழுதமுடியாத, எழுதத்தெரியாத எண்ணங்கள், உதடுகளைப் பிதுக்கி வெளியேறுகிறது நம்மை அறியாமலே! உலர்ந்த உதடு என்ற வார்த்தையை சற்று கவனிக்கலாம்.. யாருமற்றதால், பேசமுடியவில்லை, எதுவுமின்மையால் ரசித்து, நாக்கைச் சுழற்றமுடியவில்லை.. உதடுகள் ஈரம் காய்ந்து உலர்ந்து போகின்றன... தனிமை! தனிமை! தனிமை... தனிமை அன்றி வேறேதுமின்றி... இதற்கு அடுத்த வரிகள், கவிதையை மட்டுமே பேசுகின்றன. தனிமையின் உளறல்கள் யாருக்கோ, ஏதோ ஒரு வடிவில் கிடைக்கக்கூடும் என்ற நப்பாசையுடன் முடிகிறது.

மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டு நீண்ட நாட்களாக அலைந்து கொண்டிருக்கிறீர்களோ!!!

தங்கள் பின்னூட்டம் மிகவும் உற்சாகத்தை தருகிறது ஆதவா... என் ஒவ்வொரு கவிதைகளுக்கும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்க வைக்கிறீர்கள்.

//தோட்டத்துச் செடியில் முட்கள்.... குத்திக் காட்டவா? அதைவிட, உதிர்ந்து மொட்டையாகிப்போன செடியை ஒப்பிட்டிருக்கலாம். பிரிவுதான் தனிமைக்கு வழி.. முட்கள் கூட செடியின் இலைகள்தானே!//
முற்றிலும் தனிமையை ஏற்க முடியாத மனநிலையை வெளிப்படுத்தவே முட்களை குறிப்பிட்டேன் நண்பா.

//இந்த கவிதையில் நாயகனின் உணர்வை மட்டுமே சொல்லப்படுவதால், நாயகனின் இடம்பெயர்தலோ, அவனைப் பற்றிய விவரணைகளோ ஏதும் அவசியமற்றதாகி, கவிதையிலும் இடம்பெறாமல் போவது தனிச்சிறப்பு.//

உணர்ந்த பாராட்டு வரிகளுக்கு மிக்க நன்றி ஆதவா. நாயகனின் உணர்வுகளை மட்டும் பதிவு செய்வதே என் முயற்சியாக இருந்தது. உங்கள் பாராட்டினால் அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளதாகவே கருதுகிறேன்.

//சுட்டெரிக்கும் தார் சாலையென நீள்கிறது தனிமை..//
இவ்வரிகளில் நீங்கள் குறிப்பிட்டது போல் நீண்ட தனிமையை குறிக்கவே பயன்படுத்தினேன். உங்கள் புரிதலுக்கு கோடி நன்றிகள். உண்மையில் நம் வரிகளின் அர்த்தங்கள் சரியாக உணரப்படும் போது... மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இல்லையா...

// உதடுகள் ஈரம் காய்ந்து உலர்ந்து போகின்றன... தனிமை! தனிமை! தனிமை... தனிமை அன்றி வேறேதுமின்றி... இதற்கு அடுத்த வரிகள், கவிதையை மட்டுமே பேசுகின்றன. தனிமையின் உளறல்கள் யாருக்கோ, ஏதோ ஒரு வடிவில் கிடைக்கக்கூடும் என்ற நப்பாசையுடன் முடிகிறது.//தனிமை மட்டுமே அதனை கொடிய ரணம் தரும் ஆயுதம் ஆதவா.. அதனை உணர்த்த விரும்பியே அவ்வரிகளை கையாண்டேன்..

//மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பை கையில் வைத்துக்கொண்டு நீண்ட நாட்களாக அலைந்து கொண்டிருக்கிறீர்களோ!!!//
ஹா ஹா... அப்படியெல்லாம் எதுவும் இல்லைங்க... நான் எழுத ஆரம்பிச்சதே கொஞ்ச மாதம் முன்னாடிதான். நல்ல ரசிகன் என்று என்னை என்னால் அடையாளப்படுத்த முடியும். நல்ல படைப்பாளி என்று பிறரால் நான் அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். அதற்கான முயற்சிகளே என் கவிதைகள்.. என் பாதையை எனக்கு அடையாளம் காட்டுகிறது உங்கள் விமர்சனங்கள்... தொடர்ந்து விமர்சியுங்கள்...:)