PDA

View Full Version : மரணம்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
18-12-2008, 02:34 PM
விரிந்த முடி கோலமாய் குருதியகன்ற விழிகளில்
ஒப்பாரி கலந்த ஓராயிரம் பிராதிட்டுச் செல்வது
எம் குல பெண்களுக்கு வாடிக்கையானது

குண்டு கிழித்த மாமன் மாரில் ஒரு நாள்
வெள்ளமடித்த மகனைப் பாடி மறு நாள்
இடி மடி சேர்ந்த மூப்பெய்யா சகோதரனையும்
பாதைவழிப் பேருந்து பரலோகமிட்ட சித்தப்பனையும்
அடுப்புத் தீயிலோ அல்லாது பிற கடுப்புத் தீயிலோ
தோலுரிந்துத் தொங்கும் ஒரு உறவுக்காரியையும்
இடை இடையே இழுத்து அழுது குறுகிக் குறுத்து
தன் தேவனைப் பாடி காலனைச் சாடி
இறுதியாய் விதியென்று கதி சேர்கையில்
குசலம் கேட்டு குட்டையின் அடி கிண்டுகிறார்கள்
அது ஓய்ந்து கழிந்த அடுத்தடுத்த நாட்களிலும்

கதவிடுக்குகளில் கதறும் காற்றொலிகளில்
இரவின் மௌனமுடைக்கும் ஜந்துக்களான ரீங்காரங்களில்
சூழ்ந்த கதிர்களுக்கு மத்தியிலான கதிரவனில்
மாண்டவர்கள் கரைந்து கொண்டிருப்பதாய்
அலறுகிறார்கள் அவர்களை ஆண்டவர்கள்

அதிக பட்சம் இன்னும் பத்து நாட்கள்
பேரிடி சூழல் அகற்றும் பேறு கால அவகாசங்களைப் போல்
மந்திரமோ தந்திரமோ இரண்டும் சேரா எந்திரமோ!
எதைக்கொண்டாயினும் அம்மரணத்தை
முயற்சியுங்கள் முன்னால் கூற!
ஊனறுக்கும் உரத்தலுக்கு உரித்தாக்கட்டும் தங்களை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
www.junaid-hasani.blogspot.com

ராஜா
23-12-2008, 01:09 PM
அடுப்புத் தீயிலோ அல்லாது பிற கடுப்புத் தீயிலோ...

அசத்தல் வரி..!

சபாஷ் ஹசனீ..!

நிரன்
23-12-2008, 01:20 PM
அடுப்புத் தீயிலோ அல்லாது பிற கடுப்புத் தீயிலோ


அதிக பட்சம் இன்னும் பத்து நாட்கள்
பேரிடி சூழல் அகற்றும் பேறு கால அவகாசங்களைப் போல்
மந்திரமோ தந்திரமோ இரண்டும் சேரா எந்திரமோ!
எதைக்கொண்டாயினும் அம்மரணத்தை
முயற்சியுங்கள் முன்னால் கூற!
ஊனறுக்கும் உரத்தலுக்கு உரித்தாக்கட்டும் தங்களை.




நன்றாக உள்ளது வரிகள் மற்றும் கவியில் காணப்படும் அடுக்குச்சொற்கள் என்பன ஒரு நயத்தைத் தருகிறது

பாரட்டுக்கள் ஹஸனீ
தொடருங்கள் அருமையான பதிப்புக்களுடன்:icon_b:

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-12-2008, 05:21 PM
சகோதரர் ராஜாவுக்கும் அன்பர் நிரஞ்சனுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

பாலகன்
24-12-2008, 05:33 PM
மாண்டவர்கள் கரைந்து கொண்டிருப்பதாய்
அலறுகிறார்கள் அவர்களை ஆண்டவர்கள்

இந்த இடம் என் சிற்றறிவுக்கு புரியவில்லை.. மற்றவை தெளிந்த நீரோடை..... .....

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-12-2008, 03:27 PM
மரணமானவர்களின் மிகவும் நெருங்கிய இரத்த உறவு உள்ளவர்களுக்கு எங்கு நோக்கினும் மரணித்தவர் பேசிக்கொண்டிருப்பது போன்ற பிரமிப்பு தவிர்க்க இயலாதது அதைத்தான் சொல்ல முயற்சித்தேன். மிக்க நன்றி தங்கள் கருத்துக்களுக்கு பிரபு.