PDA

View Full Version : நிலாச்சோறு...



mathuran
17-12-2008, 03:30 AM
முழுநிலவின் முன்னாலே
முத்தங்கள் பரிமாறி
மொத்தமாய் உன்னை
அணைத்திடத்தான் தவிக்கிறது
பித்தனின் உள்ளமிது...

மாடியில் உனைத்தேடி
ஓடிவந்த வேளையிலே
முழுநிலவு சாட்சி சொல்லும்
மீதிக்கதை கேட்டுப்பார்...
முத்தான உன் வியர்வை
முகத்தோரம் வடிகையிலே
முத்தத்தால் துடைத்திடவே
உள்மனது துடிதுடிக்கும்...

பாழ்பட்ட உலகத்திலே
பார்த்தாலே பாவமென
பலகதைகள் சொல்லிடுவர்...
உலகத்து நியதியிலே
நியாயங்கள் கண்டதனால்
நிஜமான உணர்வுகளை
நிழலாக நீந்தவிட்டு
நித்திரையில் நித்தமும்
நிலாச்சோறு உண்கின்றேன்...

ஓவியன்
17-12-2008, 04:35 AM
நிலாச் சோறு உண்ண
நீண்ட நாள் ஆசை,
அருமையாகக் கிடைத்தது
ஓரிரவு, ஆனால்
அன்று அமாவாசை....

என்று ஒருதடவை கவிஞர் மு. மேத்தா அவர்கள் எழுதிய ஞாபகம், ஆனால் இங்கு உலக நியதிகளுக்காக நிலாச் சோறு கனவாகிறது, எனக்கொரு சந்தேகம், வாழ்க்கையில் படிகள்தான் நியதிகளா, இல்லை நியதிகளுக்காகவே வாழ்க்கையா...??

கொஞ்சம் சிந்திக்க வேண்டும், சிந்தித்தால் அமாவாசை மட்டும்தான் நிலாச்சோற்றினைத் தடுத்திட முடியும்....

ஆதவா
17-12-2008, 09:54 AM
காதல் வரிகளாய் பொழிந்திருப்பது அனைத்தும் அருமை அருமை.. மாடியும் நிலாவும், முத்தமும் வியர்வையும் காதலுக்கு அவ்வவ்விடச் சின்னங்கள்..

சிந்தும் வேர்வை தீர்த்தமாகும் என்று பாடியிருக்கிறார்கள். அது காதலில் மட்டுமே சாத்தியமுமாகும்.

இப்படியே நிலாக்கனவு கண்டுகொண்டிருந்தால்??

கனவுக்கும் எல்லையுண்டு.

அன்புடன்
ஆதவன்.

நிரன்
17-12-2008, 10:06 AM
காதலின் உணர்வும் காதலியின் நினைவும் கவிதைக்கு அழகும்
வரிகளுக்கு அழுத்தமும் கொடுத்துள்ளது. மிக நன்றாக உள்ளது
கவிதை.

தொடருங்கள்....................:icon_b: