PDA

View Full Version : திருப்பாவையில் என் பார்வை



ஆதவா
16-12-2008, 07:59 AM
மார்கழி என்றாலே என் மாரெல்லாம் நனையும்... பனியாலே,,, காதல் பணியாலே.. ஆமாம் மக்களே. ஒருகாலத்தில் மார்கழியை மிகவும் நேசித்தவன் நான். இதைப் போன்றதொரு மார்கழி மாதத்தில் ஓர்நாள் நடந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்றும் எட்டு மணிக்கு எழும் நான், அன்று எழுந்ததோ ஐந்து மணிக்கு. அலுவலகத்தில் அப்போது அகலக்கற்றை இருந்தாலும் தமிழ்மன்றம் பற்றி அப்போது தெரியாது என்பதால் எனது விழிப்பு மன்றத்தின் முன் இருக்கவில்லை. முதலில் நன்கு முகத்தைக் கழுவிவிட்டு மேக்கப் பூசிக் கொண்டு, நேரே அலுவலகத்திற்குக் கீழ் இடதுபுறமுள்ள ஒரு பேக்கரிக்குச் சென்று கருந்தேநீர் அருந்தினேன்.. அப்பொழுது நல்ல குளிர். இதமாக தேநீர் இருக்கவும் தொண்டைக்குழியில் பட்ட சூடு உடலெங்கும் பரவ, ஆனந்த லயத்தில் அவளை எதிர்நோக்கி அமர்ந்திருந்தேன்.

சுமார் ஒன்றரை மணிநேரம்.. அதாவது ஆறரைக்குத்தான் எனக்குத் தரிசனம் கிடைத்தது.. அது வரைக்கும் என்னால் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன? அருகில் இருக்கும் தினசரியை சரியாகப் படித்தும் படிக்காமலும் வீதியைப் பார்த்தும் பார்க்காமலும் மனதில் வெறுமையை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். என் அலுவலகத்திற்கு மிக அருகே பிள்ளையார் கோவில் உண்டு. மார்கழி மாதம் தோறும் காலை நேரத்தில் பிள்ளையாருக்குத் திவ்ய தரிசனங்கள் கிடைப்பதுண்டு. ஊரிலுள்ள பெண்கள் எல்லாம் அங்கு கூடி பிள்ளையாருக்கு அபிஷேக முத்தம் அளிப்பார்கள். இவளும் அப்படித்தான் சென்றாள். ஒரு கையில் சில்வர் குடம் மறு கையில் ஒரு சில்வர் கூடை. அதில் பூ (மல்லிகை இருந்தது) வாழைப்பழம், ஊதுபத்தி, கற்பூரம் மற்றும் தீப்பெட்டி ஆகியவை அடங்கியிருந்தது. நான் அமர்ந்திருந்த பேக்கரியைத் தாண்டி அந்த விநாயகர் கோவிலுக்குச் செல்ல, எனக்கோ மனதுகுள்ளே பரபரப்பு... பின்னாடி யாராவது வருகிறார்களா என்று கவனித்துவிட்டு நான் சென்றேன்... ஆனால் கோவிலுக்குள் நுழைய எனக்கு பயமாக இருந்தது.. ஏனென்றால் எனது வீடும் அவளது வீடும் அருகருகே அமைந்திருந்தது. ஆகையால் என் வீட்டு நபர்களோ அவள் வீட்டு நபர்களோ வந்துவிட்டால் பெரும் பிரச்சனை ஆகிவிடும்.

மெல்ல நெருங்கிச் செல்கையில் பிள்ளையாரைக் கும்பிடுவதை விட்டுவிட்டு என்னைப் பார்த்துப் 'போ' "போ" என்று ஜாடை காட்டினாள். எனக்கோ தயக்கம்.. அதேசமயம் அங்கே அவளிடம் பேசிவிடவேண்டும் என்று பேராசை.. எத்தனை நாட்கள்தான் தொலைப்பேசியிலேயே அளாவளாவிக் கொண்டிருப்பது? நான் எங்கும் செல்லவில்லை. அவள் என்னை விரட்டுவதை விட்டுவிட்டு கையில் இருந்த சில்வர் குடத்தால் பிள்ளையாரை குளிப்பாட்டினாள்.. தாயின் மடியில் குளிக்கும் குழந்தையைப் போன்று, வெகு அமைதியாக பிள்ளையார் பார்த்துக் கொண்டிருக்க.. பின்னர் மேக்கப் ஆரம்பமானது பிள்ளையார் கொண்டையில் பூ சுற்றினாள்.. ஊதுபத்தி, கற்பூரம் என அக்கோவிலை பக்தி மார்க்கத்துக்குள் திணித்து, தானும் ஏதோ ஆண்டாளைப் போன்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அட... அவ்வளவுதாங்க.. ஆனா அடுத்து இருக்கு பாருங்க சுவாரசியம்..

வீட்டுக்கு அவள் முன்னே செல்ல, பின்னே நான் சென்றேன். கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிப்பதற்கு அமர்ந்து கொண்டாள். என் தங்கையை விட்டு அவளிடம், " மார்கழி மாசம்னா திருப்பாவை பாடணும்.. அது தெரியாதா" என்று கேட்கச் சொன்னேன்.

"திருப்பாவையெல்லாம் தெரியாது.. சொல்லித் தந்தா முணுமுணுப்பேன்.. பாடவெல்லாம் தெரியாது" என்று பதில் அனுப்பினாள்.

நமக்கு எப்போது தெரியும் திருப்பாவை.!!.. எனக்குத் திருப்பாவையில் முதலிரு வரிகள் மட்டுமே தெரியும்.. அதைவைத்து டெவலப் செய்து அனுப்பலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்... அம்மாவின் கையில் மீண்டும் ஒரு கருங்காப்பி கிடைத்தது. (அப்பொழுதெல்லாம் பால் எனக்கு ஒவ்வாது.)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்...........
சீர்மல்கும் ஆயர்ப்பாடிச் செல்வ.....................

அவ்வளவுதான் தெரியும்.. அன்றைய நாட்களில் எனக்கு இணையத்தில் இதுபோன்று கிடைக்கும் என்பது தெரியாது... தெரியாது என்பதைவிட முயற்சி செய்யவில்லை என்பதே சரியானது. இரண்டு வரிகளை வைத்து நாம் என்ன அனுப்புவது? யாரிடம் போய்க் கேட்பது என்று ஒரே குழப்பம்... சரி... எனக்கும் தெரியாது, அவளுக்கும் தெரியாது... ஆகையால் நாமாகவே முயற்சி செய்து ஏதாவது அனுப்புவோம் என்று முடிவுக்கு வந்து,

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில்
சீர்மல்கும் ஆயர்ப்பாடிச் செல்வக் குமரிகளைத்
தேரிழுத்தத் தேன்மாயன் ஆயர்குலச் செல்வன்
மார்நிறை மாயக்கண்ணன் தேடுவான் ஒளிக
ஊரவர் சொற்கள் உறைந்து போமுன்
......................................................
...................................................
...................................... எம்பாவாய்..


இப்படி நானே எழுதிக் கொடுத்தேன்.. துரதிஷ்டவசமாக பாதிக்கும் மேல் எனக்குத் தெரியவில்லை... (இப்பொழுது எழுதியிருப்பதில் சில வார்த்தைகள் ஒரு Guess தான்..)

அவள் படித்தாலோ பாடினாலோ என்னவோ தெரியாது.. அன்று இக்கவிதையை எழுதிக் கொடுக்கும்பொழுது ஏற்பட்ட நடுக்கமும் அச்சமும் எனக்கு மட்டுமே தெரியும். பிறகு மார்கழி முடிந்ததும் தரிசனம் கிடைக்காமல் நானும் பிள்ளையாரும் அமர்ந்தழுததை யாரிடம் போய்ச் சொல்ல??


சரி இப்பொழுது எல்லாம் கைவசம் கிடைக்கிறது. (அவளைத் தவிர:() ஆகவே திருப்பாவையின் முதல் பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.............................


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்."


ஆண்டாள் பாடிய திருப்பாவையின் முதற்பாடலான இப்பாடல் பற்றி எனக்குத் தெரிந்த வகையில் விளக்கம் தருகிறேன்.. இதில் தவறு இருந்தால் திருத்துக.

மார்கழித் திங்கள் என்பது மார்கழி மாதம் என்று சொல்லப்படும். திங்கள் என்பதற்கு நாள், மாதம், ஆதவன், என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. மதிநிறைந்த நன்னாளால் எனப்படுவது, பெளர்ணமி தினத்தைக் குறிக்கும்.. மதி என்பது நிலவு.. அது நிறைந்திருப்பது பெளர்ணமியில்.

நீராட - குளிக்க... போதுவீர் - போகிறவர்கள்.. அதாவது நீராடப் போகிறவர்கள்.. போதுமினோ, போகலாம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

நேரிழையீர்.. நேர்+இழையீர்.. எனக்கு சரியாக அர்த்தம் தெரியாவிடினும்... இழை என்பது நகைகளைக் குறிப்பிடலாம். ஆகவே செழிப்பு மிகுந்த நகைகளை அணிந்தவர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் என்ற வரிகள், ஆயர்பாடியில் வாழும் சீர்மிகுந்த செல்வச் சிறுமிகளே என்ற அர்த்தத்தைத் தருகிறது. சிறுமீர்காள் என்பது விளிப்புச் சொல்.. அருகே ஒரு வியப்புக் குறி இருப்பதைக் கவனிக்க.

கூர்வேல் கொடுந்தொழிலன் - முதலில் நான் நினைத்தது வேல் செய்யும் கொல்லன் என்று (பிறவிப் புத்தி :D) அதற்கு அடுத்த வரிகளான நந்தகோ பன்குமரன்.. என்ற வார்த்தைகளால் ஒரு அரசன் என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருக்கிறாள் என்பது தெளிவாகிறது......... நந்தகோபன் குமரன் என்றுப் பிரித்துப் படியுங்கள்.. நந்தரின் மகன் கண்ணன் அல்லவா.... அடுத்து வரிகளைக் கவனிப்போம்.

ஏரார்ந்த கண்ணி - ஏர் ஆர்ந்த கண்ணி.. ஆர்ந்த - பரந்த, ஆழ்ந்த என்ற அர்த்தம் வருகிறது.. நாம் "மனமார்ந்த நன்றி" என்று சொல்கிறோம் அல்லவா... அதாவது "உள்ளம் நிறைந்த நன்றி" என்ற பொருளில் சொல்கிறோம்.. கண்ணி என்பது கண்ணை உடையவள் என்ற அர்த்தம் தருவதால்... ஏரார்ந்த கண்ணி என்பது அழகு ததும்பும் கண்களை உடையவள் என்று நாம் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்..

யசோதை, கண்ணனின் தாய். யசோதை இளஞ்சிங்கம் என்றால்... யசோதை பெற்ற இளஞ்சிங்கம் என்றாகும்.

கார்மேனி - கார் என்பது கருப்பு,மேகம் என்று பொருளுண்டு. மேகம் போன்ற மென்மை என்றோ, அல்லது கருந்திரள் மேகம் போன்று கருத்தோ (கருமை நிறக்கண்ணா என்று விளிப்பதுண்டு)

செங்கண் - செம்மை+கண் = சிவந்த கண்களை உடையவன்... முன்பு கருமை நிறத்தவன் என்ற ஆண்டாள் பின் கண்களைச் சொல்லும்பொழுது சிவந்த கண்களை உடைய கண்ணன் என்கிறாள். கதிர்மதியம் என்ற சொல்லே புதுமை வாய்ந்தது. கதிர் என்பது சூரியனைக் குறிக்கும்.. சூரியன் மதிய நேரத்தில் எப்படி பிரகாசமாக இருப்பானோ அதைப் போன்று.... கதிர்மதியம் போல் முகத்தான்..... பிரகாசமான முகத்தை உடையவன்.. என்று சொல்கிறாள்.

சரி, இத்தனையை வருணித்தாளே... யாரை? நாராயணனை... அவனே நமக்கெல்லாம் பறை தருவான்.. பறை என்பது ஒருவகை வாத்தியக் கருவி என்பது நாம் அறிந்ததே..

பாரோர் - பாரில் உள்ளோர்.... இந்த உலகில் உள்ளோர் புகழ....

படிந்தேலோர்.... படிந்து - ஏலோர் = இந்த புவியில் உள்ளோர் புகழ... கண்ணன் அடி பிடித்து நடப்போம்...

எம்பாவாய்..... பாவையெனும் விரதம் கொண்டாதாக...

ஏதோ விளங்கியதா மக்களே.... சரி... நேராக விளக்கத்தை மட்டும் கீழே எழுதுகிறேன்..

மார்கழி மாதம் பெளர்ணமி நாளில் குளிக்கப் போகும் சீர்மிகுந்த ஆயர்பாடியின் செல்வச் சிறுமிகளே! கூர்ந்த வேல் கொண்டு ராஜதொழில் செய்யும் நந்தகோபம் மகனும் அழகான கண்களைக் கொண்ட யசோதையின் இளஞ்சிங்கமுமான, கருமைநிறம் கொண்ட உடலும் சிவந்த கண்களையும் பிரகாசமான முகத்தைக் கொண்டவனுமான நாராயணன் நமக்குப் பறை (வாத்தியம்) தருவான். (அதைக் கொண்டு) உலகில் உள்ள மக்கள் புகழ நாராயணன் அடிதொட்டு வழிபாடுவோம் மக்களே!

..... சரிசரி.... கொஞ்சம் ஓவரா பேசிட்டன்... :redface: இல்ல???

anna
16-12-2008, 08:07 AM
மார்கழி வந்திருச்சா அதான் காலங்காத்தால அருகில் உள்ள கோவிலில் பாடல் பாடிக்கொண்டு இருந்ததா? உண்மையிலயே மார்கழி மாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜில்லென்ற அந்த காலை குளிர்,காலையில் வீட்டின் முன்புறம் மா கோலம். அதிலே பூசனிப்பூ. இளம் பெண்கள் கோல போடும் அந்த அழகை காண (சைட் அடிக்க) சென்ற காலம் எல்லாம் என் மனதில் மீண்டும் ரீங்காரம் இடுகிறது.
ஆனால் முன் போல் எழமுடியவில்லை. அப்போ பேச்சுலர் இப்ப பேமிலி ஆகி போச்சு அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்கு வந்தாச்சு.

ஓவியன்
16-12-2008, 09:07 AM
மார்கழி மாதமென்றாலே இதுவரை எனக்கு குளிர், மழை, திருவெம்பாவை, பூசனிப் பூக் கோலங்கள் என்று ஒரு வரிசை தொடர்ச்சியாக ஞாபக அலைக்குள் சிக்கும், இன்று முதல் ஆதவனுக்கு தரிசனம் கொடுத்த பாவையும் அதனுடன் இணைந்த ஆண்டாளின் திருப்பாவையும் ஆதவ திருப்பாவையும்(:D) என் ஞாபக அலைக்குள் சிக்கும்....

நிரம்பவே இரசித்தேன் ஆதவா உங்கள் குறும்பு வரிகளையும், தெளிந்த விளக்கப் பார்வையையும், பாராட்டுக்கள்....

சூரியன்
16-12-2008, 09:15 AM
இதே போல் நானும் மார்கழியில் காலையில் நேரத்தில் எழுவேன் ,
காரணம் மார்கழியில் தினமும் கோவிலுக்கு சென்று வா என்று வீட்டில் கட்டாயப்படுத்துவதால் வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றதுன்டு.

அழகான நிகழ்ச்சியுடன் திருப்பாவையையும் சொல்லி கொடுத்தமைக்கு நன்றி அண்ணா.

ஆதவா
16-12-2008, 11:19 AM
மார்கழி வந்திருச்சா அதான் காலங்காத்தால அருகில் உள்ள கோவிலில் பாடல் பாடிக்கொண்டு இருந்ததா? உண்மையிலயே மார்கழி மாசம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜில்லென்ற அந்த காலை குளிர்,காலையில் வீட்டின் முன்புறம் மா கோலம். அதிலே பூசனிப்பூ. இளம் பெண்கள் கோல போடும் அந்த அழகை காண (சைட் அடிக்க) சென்ற காலம் எல்லாம் என் மனதில் மீண்டும் ரீங்காரம் இடுகிறது.
ஆனால் முன் போல் எழமுடியவில்லை. அப்போ பேச்சுலர் இப்ப பேமிலி ஆகி போச்சு அடக்கி வாசிக்க வேண்டிய நிலைக்கு வந்தாச்சு.

நமக்கு இன்னமும் இருக்கு சார்.. அந்தக் காலத்தில நல்லா அனுபவிச்சிருக்கீங்க போல :D:D


மார்கழி மாதமென்றாலே இதுவரை எனக்கு குளிர், மழை, திருவெம்பாவை, பூசனிப் பூக் கோலங்கள் என்று ஒரு வரிசை தொடர்ச்சியாக ஞாபக அலைக்குள் சிக்கும், இன்று முதல் ஆதவனுக்கு தரிசனம் கொடுத்த பாவையும் அதனுடன் இணைந்த ஆண்டாளின் திருப்பாவையும் ஆதவ திருப்பாவையும்(:D) என் ஞாபக அலைக்குள் சிக்கும்....

நிரம்பவே இரசித்தேன் ஆதவா உங்கள் குறும்பு வரிகளையும், தெளிந்த விளக்கப் பார்வையையும், பாராட்டுக்கள்....

ஹி ஹி... நன்றி நண்பா.... எப்படி நம்ம திருப்பாவை?? திருப்பாவை (செல்வம் மிகுந்தவள்) கண் திருப்பாததால் தெருப்பாவையாக மாறி அலையவேண்டியதாக இருக்கிறது :D:D:D


இதே போல் நானும் மார்கழியில் காலையில் நேரத்தில் எழுவேன் ,
காரணம் மார்கழியில் தினமும் கோவிலுக்கு சென்று வா என்று வீட்டில் கட்டாயப்படுத்துவதால் வேண்டா வெறுப்பாக எழுந்து சென்றதுன்டு.

அழகான நிகழ்ச்சியுடன் திருப்பாவையையும் சொல்லி கொடுத்தமைக்கு நன்றி அண்ணா.

நன்றி சூரியன்.. அண்ணன் என்று அழைக்காதீர்கள்..

அன்புடன்
ஆதவன்

சூரியன்
16-12-2008, 11:31 AM
நன்றி சூரியன்.. அண்ணன் என்று அழைக்காதீர்கள்..

அன்புடன்
ஆதவன்
வயதில் மூத்தவர்களை அவ்வாரு தானே அழைக்க வேண்டும்?
ஏதேனும் தவ*றிருந்தால் மன்னிக்கவும்.:frown:

ஆதவா
17-12-2008, 03:43 AM
மார்கழி என்றவுடனே நமக்கு ஞாபகம் வருவது குளிர். ஆகையால் போர்வையை நன்கு இழுத்துப் போர்த்தி நித்திரை கொள்வது என்பது என் வழக்கமாக இருந்தது. ஒருவேளை நேரமாகவே எழுந்தால், இரவெல்லாம் சொட்டச் சொட்ட நனைந்திருக்கும் எங்கள் வீட்டுப் பின்பக்கத்து களைப்புற்களை நான் அருகே சென்று தொட்டு ரசிப்பதுண்டு. நுனியில் அமர்ந்திருக்கும் சொட்டுக்கள் நான் தொட்டு ஒழுகுவதைக் காணும் பொழுது மனம் அப் புல்லுக்குள் அமர்ந்து லயிக்கும்.

வெகுகாலத்திற்கு முன்பு பக்தி மார்க்கமாக இருந்த எங்களது இல்லம் ஏன் இப்படி மாறியது என்றால் அதற்குப் பெரியார், கம்யூனிசம் ஆகியவை காரணம் என்று சொல்லிவிடலாம். இருந்தாலும் பக்தி குறைந்துவிடவில்லை.. ஆனால் எனது தலைமுறையில், எனது மகன், பேரன் ஆகியோர் தலைமுறையில் இன்னமும் மாற்றம் ஏற்படலாம். பக்தி குறையலாம்.

பொதுவாக குளிர்காலம் என்பதால் மார்கழியில் நேரமே எழுவதில்லை. என் அக்கா (கஸின்) வெகு நேரமே எழுந்து காலையில் வாசல் தெளித்து, கோலம் வரைந்து, குளித்து, பல்துலக்கி, கோவிலுக்குச் சென்று எல்லா பெண்களைப் போன்றே வழிபடுவாள். என்னைக் கூப்பிடும் பொழுதெல்லாம் நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருப்பேன். வரமாட்டேன் என்று சொல்லிவிடுவேன். கோவிலுக்குச் சென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பூஜைகள் செய்வார்கள். பொங்கல், பிரசாதம், (ஏதாவது ஒரு சாப்பாடு) பஞ்சாமிர்தம் என்று வழங்குவார்கள். (இதுகுறித்து இனியொருநாள் சொல்லுகிறேன்) தூங்கி எழுந்த எனக்கு மார்கழியில் காலை உணவு பிரசாதங்கள் தான்.. அதிலும் ஒவ்வொருநாளும் விதவிதமான சுவையில் பொங்கலும், மற்ற சாப்பாடுகளும் சாப்பிடும்பொழுது அதன் ஆனந்த ருசியே தனிதான்..

மார்கழி முழுவதும் சைவ உணவுகளே சமைக்கப்படும். காலையில் சுமார் பத்து மணிக்குள்ளாக ஊதுபத்தி ஏற்றப்பட்டு வீடு மணக்கச் செய்வார்கள். எனக்குப் புகை அலர்ஜி என்பதால் நான் விரும்பமாட்டேன். தவிர, இந்தமாதிரி சம்பிரதாய வழிபாடுகள் எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. எங்கள் வீட்டுப் பெண்கள் காலை நேரமே குளித்து, சுத்தமாகி இறைவனை வழிபடுவார்கள். இதில் எங்கள் வீட்டு ஆண்கள்தான் விலக்கு.. இதுவரையிலும் எந்த மார்கழியிலும் மாமிசம் சாப்பிட்டதில்லை. கொஞ்சம் நாக்கை அடக்கி வைத்துத்தான் இருக்கவேண்டியிருக்கிறது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லாவிடினும், பூஜை புனஸ்கார அலங்காரத்தில் வீடு திளைத்திருக்கும் பொழுது நாம் மட்டும் மாமிசம் உண்டு கவிச்சி வாடையுடன் வீட்டுக்குள் நுழைந்தால் அது நன்றாக இருக்குமா என்று யோசிப்பதுண்டு.

வீட்டில் விளக்கு வழிபாடு என்பது எனக்குத் தெரிந்து இம்மாத காலத்திலும் உண்டு. (தீட்டுக்கும் விளக்கு வைப்பார்கள்.) தீபாராதனைகள் சிலர் வீட்டில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். தீபம் ஏற்றுவதற்கு முன் நாம் நம் இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.. வீட்டில் அசைவப் பொருட்கள் (முட்டை), அழுக்குகள், குப்பைகள், ஆகியவை ஒழிக்கப்பட்டிருக்கவேண்டும். வழிபாடு என்பது நாம் நமக்குள்ளாக ஏற்படுத்திக் கொண்டதுதான். அது நிரல்நிறையாக அடுக்கி விதிகளை விதித்து பலர் வழிபடும்பொழுது ஒருசிலர் (என்னைப் போன்றவர்கள்) வழிவிடுவதுதான் சாலச்சிறந்தது. ஆகவே சுத்தமே நமக்கு முதல் கடவுள்.

திருப்பாவை இல்லாத மார்கழியா? இதோ, அடுத்த பாவைப்பாடல் ஒன்று...

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

நான் இதுவரை குறிப்பிட்டவற்றை எல்லாம் ஆண்டாள் இப்பாடல் வழியே குறிப்பிடுவதைப் பாருங்கள்... எத்தனை தெளிவாகப் பாடியிருக்கிறாள்....!!!!

வையத்து வாழ்வீர்காள் - வையம் என்றால் உலகம்.. உலகத்தில் வாழும் மக்களே என்று நாம் நேரடியாகப் பொருள் எடுத்துக் கொள்ளலாம். நாமும் நம்பாவைக்கு - பாவை என்பது நோன்பு ; அதாவது பொருள் இல்லை. பாவை என்ற பெயரிலான நோன்பு. ஆக நம் நோன்பிற்கு என்கிறாள் ஆண்டாள்.. அடுத்து..

செய்யும் கிரிசைகள் - நோன்பிற்குச் செய்யவேண்டிய முறைகள்.. கிரிசைகள் என்பது முறைகள் என்று கொள்ளலாம்.. இவ்வழக்கினை எங்கோ படித்ததாக ஞாபகம் உண்டு. கேளீரோ! -- கேளுங்கள் தோழிகளே என்று சொல்கிறாள்..

உலக மக்களே, நம் நோன்பிற்குச் செய்யவேண்டிய வழிபாட்டு முறைகள் அல்லது சடங்குகள் என்னவென்று சொல்லுகிறேன் கேளுங்கள் என்று கூவல் விடுக்கிறாள்.. சரி... அப்படி என்ன செய்யவேண்டுமாம்?

பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி - பாற்கடல், பரந்தாமன் உறங்கும் இடம் என்பது ஆன்மீக அறிவு சிறிது உள்ளவர்களுக்கே தெரிந்த விசயம்.. அங்கே அக்கடவுள் எப்படி உறங்குகிறாராம்? பையத் துயின்ற - பைய என்ற சொல் இன்னும் கிராமத்தில் புழக்கத்தில் உள்ளது. அதாவது மெல்ல என்று பொருள். துயின்ற - துயில் - தூக்கம்.. அல்லது உறக்கம். மெதுவாக உறங்கிய என்ற பொருள்.. பரமனடி பாடி - பரமன் என்பது நாராயணன்.. அவன் அடி அதாவது கால்கள்தான் பரமனடி (பரமன்+அடி) பாடி - பாட ஆரம்பிப்போம்.... என்ன பாடப்போகிறாள் ஆண்டாள்?

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் - நெய்யும் பாலும் சாப்பிடமாட்டோம்.. என்கிறாள். இக்காலத்தில் நெய்யை தனியே தின்பவர் யாராகிலும் இருக்கிறார்களா என்ன? நெய், சாப்பாட்டுடன் குழப்பிச் சாப்பிடப்படுகிறதல்லவா... ஆக, உணவு உண்ணமாட்டோம் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். பாலுண்ணோம் என்ற சொல்லையும் கவனிக்க, உணவு உண்ணாமல் இருந்தால் மட்டும் போதுமா? திரவப் பொருட்களையும் உண்டு வயிறை நிரப்பக் கூடாது என்கிறாள் ஆண்டாள்.. ஆக பாலுணவும் ஆகாது.

நாட்காலே நீராடி - நாள்+காலை விடியற்காலை. விடியலில் எழுந்து (நீராடி,) குளிப்போம்.. மையிட்டு எழுதோம் - அக்காலத்தில் கண்களுக்கு மையிடுவது என்பது பிரசித்தி பெற்ற முகாலங்கார முறை. அப்படி நம்மை நாமே அலங்கரிப்பதை விடுப்போம்..

மலரிட்டு நாம்முடியோம் - தலையில் பூ வைத்து கூந்தலை முடித்துக் கொள்ளமாட்டோம்..

தமிழில் எதிர்மறைச் சொற்களை ஒரேயொரு எழுத்தில் திருப்பிவிடலாம்... முடிப்போம் - ஒரு செயலைச் செய்து முடிப்போம்.. உறுதியான நிலை. முடியோம்.. அச்செயலைச் செய்து முடிக்கமாட்டோம்.... இப்படி பலச் சொற்கள் உண்டு
உதாரணத்திற்கு:

முடியோம் - முடிப்போம்
செய்யோம் - செய்வோம்
வேண்டோம் - வேண்டுவம்
காணோம் - காண்போம்...

முந்தையது முடியாத நிலை... (can't) என்னால் செய்யமுடியாது என்பது, பிந்தையது முடியும் என்ற நிலை (can)

ஆனால் பாருங்கள் ஆண்டாள் எழுதிய முடியோம் கான அர்த்தம் வேறு.... நாம் கூந்தலைப் பின்னுகிறோம் அல்லவா? அல்லது கொண்டைவைத்து வாருகிறோம் அல்லவா? அது முடித்தல் என்ற பெயரில் தமிழில் வழங்கப்படும்.

செய்யாதன செய்யோம் - எதுவெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்யமாட்டோம்.. அக்கால வரைமுறைகள் என்னென்னவெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டனவையோ அத்தனையும் செய்தல் தவிர்ப்போம்..

தீக்குறளைச் சென்றோதோம் - இவ்வார்த்தையில் எனக்கு சந்தேகம் தான்... விளக்கம் எடுக்க சற்று நேரம் பிடித்தது.. இருந்தாலும் ஒரு அனுமானத்தில் சொல்கிறேன்.

குறள் என்பது சொற்கள் அல்லது பேச்சு என்று எடுத்துக் கொள்வோம். தீக்குறள் என்பது தீமையான பேச்சுக்கள் என்று பொருளாகிவிடும். சென்றோதோம் - சென்று+ஓதோம்.. ஓதோம் என்றால் சொல்லமாட்டோம் என்று பொருளாகும். சென்றோதோம் என்ற பதத்தால் நாமாக வழுக்கட்டாயமாகச் சென்று தீமைமிகுந்த பேச்சுக்களை பேசமாட்டோம் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம்..

ஐயமும் பிச்சையும்... ஐயம் என்ற பொருள் எடுப்பதிலும் சிரமம் இருக்கிறது... பிச்சையும் என்ற பொருளில் பிறருக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறார்.. ஐயம் என்பதற்கு அச்சம் என்ற பதம் உண்டு... ஒருவேளை இன்னாருக்குத் தரக்கூடாது என்ற அச்சமா? இல்லை பயபக்தியா என்று தெரியவில்லை.

ஆந்தனையும் கைகாட்டி - ஆக+அனையும், வறியவர்களுக்குக் கொடுப்பது முதலான அத்தனையும் என்று பொருள் கொள்ளலாம். கைகாட்டி என்றால் செய்து என்று எடுப்பதைவிட, வழிகாட்டுதல் என்ற பொருள் கூடப் பொருத்தம்தான். தன் தோழியொருத்தியால் பிச்சை தர இயலாவிடினும் அவள் கைகாட்ட, இன்னொருவள் தருவாளேயானால் அதுகூட சரிதான் என்று ஆண்டாள் பாடுகிறாள் என எண்ணுகிறேன்.

உய்யுமா றெண்ணி - உய்யுமாறு + எண்ணி , மேற்படி வழிமுறைகளைக் கடைபிடித்து, உய்தல் - சேருதல்.. அவனைச் (கண்ணன்) அடையுமாறு நம் மனதுள் எண்ணி

உகந்தேலோர் எம்பாவாய். - உகந்து+ஏலோர் - உகந்ததைச் செய்வோமடி என்று ஆண்டாள் பாடுகிறாள். நாராயண மூர்த்தியை மனதுள் எண்ணி அவனை அடையுமாறு மேற்படி விரதம் பூண்டு உகந்ததை எல்லாம் செய்யுங்களடி தோழிகளே என்று இறுதியாக முடிக்கிறாள் ஆண்டாள். உகந்து என்ற சொல்லுக்கு மகிழ்ந்து என்றும் கூட பொருளுண்டு. உகழ்ச்சி = மகிழ்ச்சி.. அப்படியும் சொல்லலாம்..

சரி, முழுமையாக...

உலகமக்களே, நம் பாவை விரதத்திற்கு நாம் செய்யவேண்டிய வழிமுறைகளைப் பற்றிச் சொல்லுகிறேன் கேளுங்கள், பாற்கடலில் உறங்கிக் கொண்டிருக்கும் விஷ்ணுவின் கால்கள் வணங்கிவிட்டு, இனிமேல் நெய் பால் போன்ற திட, திரவ உணவுகளை உண்ணாமல், விடியற்காலை நேரமே எழுந்து குளித்து, அலங்காரம் செய்யாமல், கூந்தல் முடிக்காமல், செய்யக்கூடாதவைகளைச் செய்யாமல் தீச்சொற்களைப் பேசாமல் வறியவர்களுக்குத் தானதர்மங்களும் இன்னபிற நல்ல செயல்களையும் செய்து அல்லது செய்யவைத்து, அவனை அடையுமாறு எண்ணி மகிழ்வுடன் செய்வோம் தோழிகளே!!

ஆண்டாளுக்குத் திருமணமாகியிருக்கவில்லை. ஆதலால் விரதத்தில் தாம்பத்திய உறவுகளைச் சேர்க்கவில்லையோ என்று எண்ணினாலும், ஆண்டாள் எழுப்புவது அவள் வயது ஒத்த தோழிகளை என்பதால் இது திருமணமான பெண்களுக்கு ஒத்துவராது என்று நினைத்தோமேயானால் அது தவறு.. செய்யாதன செய்யோம் என்ற ஒற்றை வரிகளில் அவள் எல்லா செயல்களையும் அடக்கிவிடுகிறாள். விலாவாரியாகச் சொல்லவேண்டிய அவசியம் கவிதைக்கு இல்லை. மாறாக ஒற்றை வார்த்தையில் விபரமான கருத்தெடுக்கும் உரிமை வாசகனுக்கு உண்டு. மேலும் ஆண்டாள் ஏன் மலரைச் சூடக்கூடாது என்கிறாள் என்பது புரியவில்லை. கோவிலுக்குச் செல்லும்பொழுது பெண்கள் கேசம் முடிக்காமலும் பூச்சூடாமலும் செல்லுதல் அதாவது குளித்தவுடன் அலங்கரிக்காமல் செல்லுவது என்பது அக்காலத்து நடைமுறையாக இருக்கலாம். அல்லது பெருமாள் பூச்சூடும் முன் தாம் ஏன் செய்யவேண்டும் என்றோ, பெருமாள்தான் தமக்குப் பூச்சூடவேண்டும் என்றோ நினைத்திருக்கலாம்.

சரி.... மீண்டும் சந்திப்போம் மக்களே!

(ஓவரா அரைச்சிட்டேன்ல!!)

ராஜா
17-12-2008, 04:51 AM
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாளின் திருப்பாவையை பதம் (பிரித்து) பார்ப்பது சற்று இடர்ப்பாடான செயலே...!

நல்ல முயற்சி ஆதவா..!

செந்தமிழரசி
17-12-2008, 05:16 AM
ஐயம் - தபசிகள் ஏந்தும் கலம்

"ஐயமிட்டு உண்" - தமிழ்கிளவி மொழி நோக்குக

சிறப்பாக உள்ளது திரு.ஆதவா, தொடர்க.

நன்றி.

ஆதவா
17-12-2008, 05:36 AM
நன்றி ராஜாண்ணா... முயற்சி திருவினையாக்கும் என்பதால் இது என்னை நானே வளர்த்திக் கொள்ளும் முயற்சியில் திருவினைஞன் ஆவேன்... :D



ஐயம் - தபசிகள் ஏந்தும் கலம்

"ஐயமிட்டு உண்" - தமிழ்கிளவி மொழி நோக்குக

சிறப்பாக உள்ளது திரு.ஆதவா, தொடர்க.

நன்றி.

நன்றி செந்தமிழரசி. என்னிடம் அகராதி இல்லை. இருந்திருந்தால் கவனித்திருப்பேன்.

ஐயமிட்டு உண் எனும் கிளவிக்கும் இன்று அர்த்தம் தெளிந்தேன்..

மேலும் திருப்பாவை விளக்கம் முழுக்க, என் சொந்த அறிவை மட்டுமே உபயோகிப்பதால் பல தவறுகள் நிகழ வாய்ப்புண்டு. நேரம் வாய்ந்தால் தவறு களைக்க வேண்டுகிறேன்.

சிவா.ஜி
17-12-2008, 06:24 AM
பள்ளிக்காலங்களில் அருகிருந்த பஜனைமடத்து பெரியவர்களுடன், சிறுவர்கள் நாங்களும் பாடிக்கொண்டே வீதி வலம் வருவோம். அந்த அதிகாலை குளிரிலும் அவர்களுடன் செல்வது....திரும்பி மடம் வந்ததும் கிடைக்கும் சுண்டலுக்காகத்தான். அவ்ளோ சூப்பரா இருக்கும்.

ஆதவாவின் எழுத்தில் மார்கழிப் பனி மன்றத்திலும் பொழிகிறது. திருப்பாவையை தன் திருப்பார்வையால் திரும்பிப்பார்க்க வைக்கும் எழுத்து அழகாக இருக்கிறது. தொடர்ந்து ஜமாயுங்க ஆதவா....!!!

ஆதவா
17-12-2008, 06:29 AM
பள்ளிக்காலங்களில் அருகிருந்த பஜனைமடத்து பெரியவர்களுடன், சிறுவர்கள் நாங்களும் பாடிக்கொண்டே வீதி வலம் வருவோம். அந்த அதிகாலை குளிரிலும் அவர்களுடன் செல்வது....திரும்பி மடம் வந்ததும் கிடைக்கும் சுண்டலுக்காகத்தான். அவ்ளோ சூப்பரா இருக்கும்.

ஆதவாவின் எழுத்தில் மார்கழிப் பனி மன்றத்திலும் பொழிகிறது. திருப்பாவையை தன் திருப்பார்வையால் திரும்பிப்பார்க்க வைக்கும் எழுத்து அழகாக இருக்கிறது. தொடர்ந்து ஜமாயுங்க ஆதவா....!!!

ஹி ஹி ஹி....

நமக்கும் இப்படித்தான்... விதவிதமா கிடைக்கும்... நன்றி அண்னே!! :)

(இங்கேயும் ஒருத்தர் அப்படித்தான் திரிகிறாராமே!!!:))

ஆதவா
18-12-2008, 05:43 AM
மார்கழி மாதம் பனிபொழியும் அளவுக்கு மழையும் பொழியும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. என்றாலும் மழை நின்று பனி ஆரம்பிக்க, பனிவிலகி வெயில் படர வழிவகுக்கும் மாதம். ஆலங்கட்டி மழை எங்கள் ஊரில் பெய்து பல வருடங்கள் ஆகின்றன என்றாலும் எனக்கு ஞாபகம் தெரிந்து பலவருடங்களுக்கு முன்பு அப்படியொரு மழை பெய்திருக்கிறது. கட்டிகள் ஒவ்வொன்றும் தலைமீது தெறித்து காயங்கள் ஏற்படும் அளவுக்கு படுவேகமாக விழுந்திருக்கின்றன.. அப்பொழுது ஜன்னலருகே ஒழுகும் நீர் துடைத்து இடுக்கில் விழும் பனிக்கட்டிகளைப் பொறுக்கித் தின்போம். அப்பொழுதெல்லாம் அது ஒரு அலாதி இன்பம். கையில் விழுந்து தெறிக்கும் கட்டிகளால் ஏற்படும் சிறுவலிகளும் இன்பமாகவே இருக்கும்.

தெப்பமாகத் தெரு இருக்க, வீடு மிதக்கும். காற்றடித்த காயத்தில் மரம் அழுது, நிழல் மறைக்கும். சூரியனின் கடைக்கண் பார்வை கூட பூமியவளுக்கு விழாமல் மழை தடுக்கும். ஒருவித ரம்மியமான சூழல் ஏற்பட்டு வீடு முழுவதும் குளிர் பாயும்.. அடடா!!! அப்படியொரு சூழ்நிலை திரும்பவும் ஏற்படவில்லை என்றாலும் கடலோர ஊர்களில் தற்பொழுது ஏற்படும் மழையும் வெள்ளமும் பார்க்கையில், தலைவிரித்து ஆடும் மழையின் கோரத்தனத்தை ரசிக்கவும் முடிவதில்லை...

நள்ளிரவு முழுக்க, பனிபாய்ந்து கரும் இருட்டுக்குள் வெண்மைப் பேய் பாய்ந்ததைப் போன்றதொரு உணர்வு ஏற்படும்.. சில்லிட்ட அதிகாலையில் காதல் பெருகும்..

அவள் எழும் நேரம் ஐந்து... மார்கழி மட்டுமல்ல மற்ற எல்லா நாட்களிலும்.. கல்லூரிக்கு இறுதிப் பேருந்து காலை ஏழுமணிக்கு என்பதால் நேரமே எழவேண்டிய கட்டாயம்... எப்படி அத்தனை நேரத்தில் எழுந்து குளித்து செல்ல முடிகிறது என்று வியப்பேன். பலமுறை இக்கேள்வியை அவளிடம் கேட்டிருக்கிறேன். ஒருமுறை நீ நேரமாக எழுந்து குளித்துப் பார் என்றாள்..

இதை ஒரு சவாலாகவே நினைத்து ஒருநாள் ஐந்து மணிக்கு எழுந்து குளிக்கச் சென்றேன்.. ஐந்து மணிக்கு எழுவது ஒன்றும் பெரிய விசயமில்லை.. ஆனால் எப்படி குளிப்பது? அதுவும் குளிர்ந்த நீரில் (எவ்வளவு குளிர் என்றாலும் நான் வெந்நீரில் குளிப்பதில்லை ; ) நீரைத் தொட்டால் ஏதோ ஃப்ரீஜருக்குள் கையை விட்டதைப் போன்ற உணர்வு.. குளிர்ந்த நீரைத் தொட்ட விரலைப் பார்த்தால் விறைத்து நடுங்கிக் கொண்டிருந்தது... ஆஹா.... இவளைத் திருமணம் செய்து கொண்டால் மார்கழியில் விறைத்துதான் அலையவேண்டும் போலிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டேன்.. இருந்தாலும் செய்த செயலில் பின்வாங்குவதில்லை என்ற முடிவொடு, குளியலறைக்குச் சென்று ஆடைகளைக் களைந்து மெல்ல நீரை மேனியில் படர்த்தினேன்....

அவ்வளவுதான்.. கடுமையான நடுக்கம்... அய்யோ என்று கூச்சலிட்டும் விட்டேன். நல்லவேளை அருகில் யாரும் இல்லாததால் தப்பித்தேன்.. சரி.... வேறு வழியில்லை... நான் எழுந்து குளியலறைக்குச் சென்றதை நிச்சயம் அவள் கவனித்திருக்கக் கூடும். ஆகவே பின்வாங்குவதில்லை என்ற மனத்திடத்தில் அந்தப் பனிக்குளியல் போட்டுவிட்டுத் திரும்பினேன்...

அவள் என்னைக் கண்டு சிரித்தாள்... "என்ன பச்சைத் தண்ணியிலயா குளிச்ச?" என்று நக்கலாகக் கேட்டாள்.. "ஆமா" என்றேன் பெருமையோடு....

அவள் வெந்நீர் வாளியைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.. நடுக்கத்துடன் அதிர்ந்து போய் வீட்டுக்குள் சென்றேன்...

இன்றைய பாவைப்பாடல் # 3

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்."


முதல் பாடலில் ஆண்டாள் மற்ற பெண்களை பாவைநோன்பிற்காகக் கூப்பிட, இரண்டாம் பாடலில் விரத முறைகள் சொல்ல, அடுத்த பாடலான மூன்றாம் பாடலில் விரதம் இருந்தால் என்னென்ன நடக்கும் எனும் விளைவுகளைச் சொல்லுகிறாள். அதை எவ்வளவு அழகாக நயமாகச் சொல்லுகிறாள் பாருங்களேன்.

ஓங்கி உலகளந்த - உலகத்தை அளந்த என்ற இரண்டாம் வார்த்தை தெளிவாக விளங்குவதால் ஓங்கி எனும் சொல், உயர்ந்து என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் போட்டி ஏற்பட்டு சுயரூபம் காண்பித்த கதை கேள்விப்பட்டதுண்டு. அப்பொழுது விஷ்ணுவின் உயரம் இந்த உலகையே அளப்பதைப் போன்று இருந்ததாம். யார் அளந்தார்கள்? உத்தமன்.. விஷ்ணு, அவனதுபேர்பாடி, அதாவது புகழ்பாடி.. நம்பாவைக்குச் சாற்றி - நாம் செய்யும் பாவை நோன்பின் வழி அதாவது விஷ்ணுவின் புகழை பாவை நோன்பின்வழி நாம் பாடி, என்பதாக அர்த்தம். நன்கு கவனியுங்கள். விஷ்ணுவின் புகழ் பாடுதல் நீராடும் பொழுதிருந்தே நடைபெற வேண்டும் என்பதால், நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் என்று சொல்லுகிறாள்.

ஆண்டாள் இனி விளைவுகளைப் பற்றிச் சொல்லுகிறாள்.

தீங்கின்றி - எந்த வித தீங்கும் இல்லாமல், இந்த நாடுமுழுவதும், திங்கள்மும் மாரிபெய்து - திங்கள் + முன்று+மாரி ; திங்கள் என்பது நாள்/தினம்/மாதம் என்று முன்பே சொல்லியிருக்கிறேனல்லவா? மாரி என்றால் மழை.. 'இந்த நாடுமுழுக்க மாதம் மும்முறை' என்று அர்த்தமாகிறது.

ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு - ஓங்கிய, உயர்ந்த நெடுநெடுவென வளர்ந்த என்ற சொல்லே, ஓங்கு ஆகும்.. பெரும்+செம்மை+நெல்+ஊடு - அதாவது ஓங்கிய பெரும் செந்நெல்லின் ஊடே... நெற்பயிர் இடையே என்று பொருள்... ஆண்டாள் சொல்லவருவது அடுத்த சொல்லில் தெளிவாகிவிடும். கயலுகள - கயல்+உகள கயல் என்றால் மீன், உகள என்றதன் அர்த்தம் எடுப்பதற்கு முன்னர், ஆண்டாள் சொன்ன இவ்வரிகளை இணைத்துப் பாருங்கள்.

"ஓங்கிய பெரும் செந்நெற்பயிரின் ஊடாக, மீன்" என்று நிற்கிறது உகள என்பது நீந்துதல் என்ற அர்த்தத்தில்தான் வரவேண்டும். ஆக, மும்மாரி பெய்ததால் நெற்பயிரில் தேங்கிய நீரில் மீன்கள் நீந்தும் என்று வெகு அழகாகச் சொல்லுகிறார். அடுத்து...

பூங்குவளைப் போதில் - பூ+குவளை = குவளை என்பது ஒருவகையானப் பூ... ஆக பூ என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கவேண்டும். மலர்ந்த குவளைப் பூவா? அழகிய குவளைப் பூவா? ஏற்கனவே மழை பெய்து இருப்பதாகச் சொல்லுவதால் புத்துணர்ச்சியாய் மலர்ந்த குவளைப் பூ என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்.. போதில் என்பது அந்தப் பூவில் என்று அர்த்தம் வருகிறது.

பொறிவண்டு கண்படுப்ப - பொறி+வண்டு. தீப்பொறிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.. பொறிபறக்குது, தீப்பொறி, போன்ற சொற்கள், ஒளிச்சிதறலைக் குறிப்பிடுகின்றனவா அல்லது ஒளிமிகுந்த எனும் அர்த்தமா.. அறிஞர்கள்தான் சொல்லவேண்டும். எனினும் கண்கவர்ந்த எனும் சொல் எனக்குப் பிடித்தமாக இருக்கிறது. பொறிவண்டு என்றால் கண்கவரும் வண்டு என்று சொல்வோம். கண்படுப்ப - கண்கள் நித்திரையில் ஆழ.. அதாவது

அழகிய குவளைப் பூவில் கண்கவரும் வண்டு உறங்கும் என்று சொல்கிறாள் ஆண்டாள்... என்ன ஒரு நுணுக்கமான பார்வை பாருங்கள்.

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி - தேங்காதே என்ற சொல்லுக்கு அர்த்தம் தேவையில்லை. புக்கிருந்து என்றால் உள்ளிருந்து, உள்ளுக்குள் இருந்து எனும் அர்த்தம். சீர்த்த முலைபற்றி என்று சொல்வதால் பால் மிகுந்த பருத்த முலை என்று அர்த்தமாகிறது.. பசுவின் மடியை விவரிக்கும் பொழுது தெளிவாகவும் அழகாகவும் சொல்லும் ஆண்டாள், பின் வரும் வரிகளில்,வாங்கக் குடம்நிறைக்கும்என்று முடிக்கிறாள். முலை சீர்த்து பால் கொட்ட, குடமே நிறைந்துவிடுமாம். வள்ளல் பெரும்பசுக்கள் அவ்வாறெனில் பசுக்கள் எல்லாம் எப்படி ஆரோக்கியமாகவும், வள்ளல்தன்மை மிகுந்ததாகவும் இருந்திருக்க வேண்டும்!!

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். - என்றென்றும் நீங்காத செல்வம் நிறையும் என்று பாடலை முடிக்கிறாள்.

இப்பொழுது முழுமையான விளக்கம் காண்போம்.

தன் சுயரூபத்தால் உயர்ந்து இப்பேருலகையே தன் தலைமுட்ட வைத்த பெருமாளின் புகழைப் பாடி நாமெல்லாம் பாவை விரதம் பூண்டு நீராடினால் எந்தவித தீங்குமில்லாமல் நாடெல்லாம் தினமும் மழை பெய்யும். நன்கு செழித்து வளர்ந்த செந்நெல்காட்டில் மீன்கள் துள்ளி விளையாடும். மலர்ந்த குவளைப் பூவில் அழகுமிகு வண்டு நித்திரை கொள்ளும், பசுக்களின் மடியில் பால் தேங்காமல் குடம் நிறைக்கும் நீங்காத செல்வம் நிறையும்..

ஓகே! இனி என் கருத்து..

தீங்கின்றி மும்மாரி என்று ஆண்டாள் எழுதியிருப்பதன் நோக்கம், மழை சீராகப் பெய்யவேண்டும் என்பதே, நெடுமழை பெய்து பயிர்கள் நாசமாகிவிடக்கூடாது என்ற உள்ளர்த்தத்தில் எழுதியிருக்கிறாள். ஆக அங்கே சமூக அக்கறையும் அவளிடம் மிகுந்திருக்கிறது. அடுத்து பசுவை விவரிக்கும் பொழுது எத்தனை அழுத்தம்!! பசுக்கள் வள்ளல்களாக மாறுகிறார்கள். அவைகளின் மடி பருத்து இருக்குமாம், பால் கறக்கும் பொழுது நன்கு சீர்க்குமாம். மேலும் பால் மடியிலேயே தேங்காமல் குடம் நிறைக்குமாம்..

நம்பாவைக்குச் சாற்றி எனும் சொல்லினால் பரந்தாமன் புகழ்பாடுதல் கட்டாயம் என்று வலியுறுத்துகிறாள். சாற்றுதல் என்பது சூடுதல் எனும் சொல்லுக்கு உகந்ததாகும். புகழ்மாலையை சூடுதலே முதலாவதாக இருக்கிறது. எதுகைகள் "ங்"காரமாக இருப்பதும் சிறப்புதான். வார்த்தைகளை நன்கு தேர்ந்து பாடப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது. அதிலும் பெய்த மழையால் தேங்கிய நீரில் மீன்கள் துள்ளும் என்று சொல்லியிருப்பது கற்பனையின் உச்சம்.

இனி நாளை சந்திப்போம்.. அதற்குள் அறிஞர்கள் தவறு இருப்பின் களைவீர்களாக...

சிவா.ஜி
18-12-2008, 07:25 AM
”மார்கழியில் குளித்து பாரு குளிரு பழகி போகும்
ஆதவனாய் வாழ்ந்து பாரு மார்கழி பிடிச்சு போகும்”

அழகான பதிவு ஆதவா. ரசித்து வாசிக்கிறேன். என் மூத்த அண்ணன் முதல்முறை ஐயப்பனுக்கு மாலை போட்டபோது அவருக்கு துணையாக நானும் குட்டிச் சாமியாக கொஞ்சநாள் இருந்தேன். அப்போது அனுபவித்திருக்கிறேன்,,,,மார்கழியின் அதிகாலைக் குளியலை. அதுவும் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு பரதநாட்டியம் ஆடிய கைகளையும் கால்களையும் நிலைக்குக் கொண்டுவர சிரமப்பட்டதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

இப்போதும் குளிர்ந்த நீர்தானென்றாலும், மார்கழி அதிகாலைக் குளியல் என்ற ரிஸ்க் எடுக்க துணிவில்லை. தொடர்ந்து மார்கழி பதிவுகள் வரட்டும், திருப்பாவையை ரசித்துக்கொண்டே உடன் வருகிறேன்.

ஆதி
18-12-2008, 07:47 AM
வள்ளல் பெரும்பசுக்கள்

பெரும்பசுக்கள் - மரியாதக்குரிய பசுக்கள் என்றும் அர்த்தப்படுத்தலாம் அல்லவா ?

வள்ளல் பெரும்பசுக்கள் : நாம் சுயநலம் மிக்கவர்கள், நமக்கு பயனில்லை எனும் எந்த உயிரையும் பொருளையும் நாம் ஆதரிப்பதில்லை, பசுகளையும் நம் சுயநலத்துக்காகவே வளர்க்கிறோம் ஆனால் அவைகள் எந்த சுயநலமும் இல்லாமல் நமக்கு பால் கொடுக்கின்றன அதனாலேயே ஆண்டாள் அவற்றை வள்ளல் பெரும்பசுக்கள் என்று பெருமை படுத்துகிறாள்..

அதுபோல் மாதம் மும்மாரி பொழியும் இடங்களில் நீர்தேங்களில் நிரந்தரமாய் நீர்களை தேக்கிவைப்பதில்லை, அவற்றை திறந்துவிடுவோம்..

அந்த நீர்கள் வயலுக்கு பாய்வதால் கயல்களும் வயல்களில் புகுந்திருக்கின்றன என்று ஆண்டாள் பாடுகிறாளோ என்பது என் கருத்து, இதுவும் சாத்தியம் தானே..

எனக்கு திருப்பாவை மீது தீராத மையல் உண்டு, அந்த மையல் இன்னும் அதிகமாகிறது உங்கள் எழுத்து நடையில்..

பாராட்டுக்கள்..
தொடருங்கள் ஆதவா..

பாரதி
18-12-2008, 11:44 AM
அன்பு ஆதவா,உங்கள் நடையில் அமைந்த மார்கழிக்குளிரை அனுபவித்து வரும் நண்பர்களில் நானும் ஒருவன். இது சரியா என்றெல்லாம் எண்ணாமல், இப்படியாக இருக்கும் என்று யோசித்து உங்கள் கோணத்தில் தரும் விளக்கங்களை ரசிக்கிறேன். திருப்பாவை குறித்த உங்கள் திருப்பார்வை மார்கழி முழுதும், முழுவதும் தொடரட்டும்.இன்று வலைப்பூக்களில் உலாவும் போது திரு. நா.கணேசன் அவர்களும் திருப்பாவையை அலச ஆரம்பித்திருப்பதைக் கண்ணுற்றேன். அதில் "பறை" என்பதை தானியத்தில் படிந்து அளக்க பயன்பட்ட ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். மேலும் சில சுவையான குறிப்புகளும் அதில் இருக்கின்றன.உங்களுக்கு சில நேரங்களில் அது பயன்படக்கூடும் என்பதால் அதன் சுட்டியை இங்கு இணைக்கிறேன். (தேவையில்லை என கருதினால் நீக்கி விடலாம்.)நன்றி:http://nganesan.blogspot.com/2008/12/parai-etymology.html

ஆதவா
18-12-2008, 12:07 PM
மிக்க நன்றி அண்ணா.. முழுக்க முழுக்க என்று சொல்லமுடியாது... தொண்ணூறு சதம் எனது அனுமானத்தில் எழுதுகிறேன். மீதி பத்து சதம் கூகிளாண்டவர் இருக்கிறார்...

வலைப்பக்கங்களைச் சீண்டுவது கிடையாது... முதலில் வலைப்பக்கங்களில் ஆன்மீகமெல்லாம் எழுதுகிறார்களா என்றே நான் அறிந்துகொள்ள முயற்சிக்கவில்லை..

அடுத்து... பறை குறித்து....

போற்றப் பறைதரும் புண்ணியனால்
பறைகொள்வான்*
இற்றைப் பறைகொள்வான்

ஆகிய தொடர்கள், பறை ஒரு வாத்தியமல்ல என்று உணர்த்துகிறது. கையில் ஒரு அகராதி இருந்தால் சவுகரியம்....

நீங்கள் தந்த இணைப்பைச் சொடுக்குகிறேன்..

ஆதவா
19-12-2008, 11:06 AM
சிவா.ஜி அண்னாவுக்கும் ஆதிக்கும் நன்றி நவிழ்ந்து......

நான் சொல்லப்போவது மார்கழி மாதமா அல்லது அதற்கு முந்தைய,பிந்தைய மாதங்களா என்று தெரியாது. ஆனால் கிட்டத்தட்ட குளிர்கால நாட்களில் நடந்ததுதான் சொல்லப்போகிறேன். அப்பொழுது கடுங்குளிர்.. வெளியே சென்ற நான் வீட்டிற்குச் செல்லமுடியாத அளவுக்குக் கடும் மழை. நடுக்காட்டில் திக்கறியாமல் நிற்கும் குழந்தையைப் போன்று எத்திசை செல்லவேண்டும் என்று தெரியாமலும், புகைமூண்ட சுடுகாட்டைப் போன்று காணும் திசையெல்லாம் படர்ந்திருக்கும் பனியைக் கண்டு அச்சப்பட்டும் ஓரிடத்தில் முடங்கிக் கிடந்தேன். மழையோ என்னை விட்டமாதிரித் தெரியவில்லை.. என் கைகளில் முளைத்திருக்கும் முடிகளைச் சுண்டி இழுத்தது பனி. உடலுக்குள் எல்லாம் கொதிக்க, உடலுக்கு வெளியே குளிரடிக்க, இந்த போராட்டத்தில் முடிவு தெரியாமல் மழையோடு மழையாக வீட்டுக்குச் சென்று பதுங்கிக் கொண்டேன். அப்பொழுது வீட்டுக் கூரை பிய்ந்து அதை அடைக்கப் போராடிக் கொண்டிருந்தார்கள்.. எனக்கோ ஜூரம் வந்துவிட்டது. திண்ணையில் படுத்துக் கொண்டேன். அங்கும் சாரல் அடித்தது. சமையலறையில் படுக்கலாம் என்று சென்றால், அங்கே படுப்பதற்கு இடமில்லாமல் பொருட்களை அடுக்கி வைத்திருந்தார்கள்.

அவ்வளவுதான்... எனக்கோ சரியான கோபம்... வீட்டிலுள்ளவர்கள் மீதல்ல.. மழை மீது. வீடிருந்தும் நிம்மதியாக உறங்கவிடாத மழைமேலேயே இப்படிக் கோபம் வருகிறதே, கடலோர மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு வீடே அடித்துவிட்டுச் செல்லும் மழையை எப்படித் தாங்குவது என்று நினைத்தேன்.

என் அப்பா வந்தார் " உடம்பு சரியில்லையா" என்றார். "ஆமாம்" என்றேன். அவர் கைவசம் எப்பொழுதும் மருத்துவக் குறிப்புகள் வைத்திருப்பார். ஒரு மாத்திரையின் பெயரைச் சொல்லி அதை வாங்கிச் சாப்பிடச் சொன்னார். மழை நிற்கும் வரை அவஸ்தையை நன்கு அனுபவித்து விட்டு,

நேரே ஒரு கூல்ட்ரிங் கடைக்குச் சென்று ஒரு ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டேன்..

அடுத்தநாள் எப்பொழுதும் போல எழுந்து வேலைக்குச் சென்றேன்... :)

சரி, மழையைப் பற்றி ஆண்டாள் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்.

(பாடல் 4)

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பெருமாளை ஆண்டாள் எப்படியெல்லாம் மழை பொழிவிக்க வேண்டும் என்று வேண்டுகிறாள் தெரியுமா?

ஆழிமழைக் கண்ணா.. இங்கே கண்ணனை அதாவது நாராயணனை மழைக்கண்ணன் என்று பெருமையோடு அழைக்கிறாள். அதாவது மழைக்குக் காரணமானவன் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆழங்கட்டி மழை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆழ்+கட்டி+மழை. கடுமழையில்தான் கட்டிகள் விழும். ஆக ஆழ் என்ற பதம், மழையைக் குறிப்பிடுகிறது. ஆழி என்பதற்கு கடல் என்றும் அர்த்தம் உண்டு. ஆனால் இங்கே இந்த அர்த்தத்தை எடுத்துக் கொள்ள முடியாது,.

ஒன்று நீகை கரவேல் - கரவேல். - இயல்வது கரவேல் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது இருப்பதை மறைக்காதே என்று பொருள்படும். ஆக, கரவேல் என்பது மறைக்காதே என்ற எதிர்மறை வார்த்தை.. ஒன்று நீ கைகரவேல் என்று சற்று திருத்தினோமெனில்

கைகரவேல் என்ற சொல், கைகளில் இருப்பதை மறைக்காதே என்றும், ஒன்று நீ என்பது, " நீ ஒன்றும்" என்றும் பொருள்படும்.. ஆக, கைகளில் இருக்கும் எதையும் மறைக்காமல் என்றோ, அல்லது கைகளில் எதுவும் இல்லாமல் என்றோ எடுத்துக் கொள்ளலாம்.

ஆழியுள் புக்கு - ஆழியென்றால் கடல், புக்கு என்றால் புகுந்து.. கடலுக்குள் புகுந்து. முகந்துகொ டார்த்தேறி -முகந்து +கொடு+ஆர்த்து+ஏறி - கடலுக்குள் இருக்கும் நீரை மொண்டு எடுத்து, கொடு என்பதற்கு கொண்டு என்றும் அர்த்தமுண்டு. ஆர்த்தேறி என்பது கடலுள் புகுந்த பரந்தாமன் சீறி மேலே விண்ணுக்குச் சென்று என்று பொருள் கொள்வோம்.

ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி - கடலுள் புகுந்து நீரை மொண்டு அதைக் கொண்டு விண்ணுக்குச் சென்று

ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப் - ஊழிக்காலம் என்று சொல்வார்கள். ஊழி என்பது ஒருவகை ஆரம்பக் காலம். காலகட்டம். அல்லது சகாப்தம். முதல்வன் எனும் சொல்லைக் குறிப்பிடும்பொழுது, சகாப்தத்தின் முதல்வனே என்று விளிப்பதாக உள்ளது. சகாப்தத்தின் முதல்வன் கண்ணனே, அவன் மெய் எப்படிகறுத்துப் போய் இருக்கிறதோ, அதைப் போன்றே இருந்து.... கொஞ்சம் குழப்பமாக இருந்தால் சுருக்கமாக்கி கீழே சொல்லுகிறேன்..

கடலுக்குள் புகுந்து நீரை மொண்டு எடுத்து விண் ஏறி கண்ணனைப் போன்று கறுத்து....

பாழியந் தோளுடைப் - பாழி+அந்(த) தோள்+உடைய - பாழி என்பது, பரந்த என்று பொருள்படும். (பொதுவாக, தோள்களைக் குறிப்பிடும் கவிகள், பரந்த தோள்கள் என்றுதான் குறிப்பிடுவார்கள்) பரந்த தோள்களை உடைய பற்பனாபன் - பத்மம்+நாபன். அதாவது தாமரை இதழைத் தொப்புளாகக் கொண்டிருக்கும் நாராயணன்... நாபன் = நாபி (கமலம்)

கையில் ஆழிபோல் மின்னி - பத்மனாபன் கையில் இருக்கும் சக்கரம் சுழலும்போது ஏற்படும் ஒளியைப் போன்று மின்னி.. வலம்புரிபோல் நின்றதிர்ந்து - வலம்புரிச் சங்கைப் போன்று அதிர்ந்து,

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

தாழாத சார்ங்க - தளர்ச்சி அடையாத சார்ங்க வில்லைப் போன்று... நிற்க.

சார்ங்க என்பது வில் (நாண்) (?).. கீழ்காணும் சுலோகத்தில், விஷ்ணுவைப் பற்றிச் சொல்லும்பொழுது,

சங்கசக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீரூபே நாராயணி நமோஸ்துதே

சங்கு, சக்கரம், கதாயுதம், மற்றும் வில் என்று சார்ங்க என்ற சொல்லைச் சேர்த்தியிருப்பதைக் கவனிக்கலாம். (ஆனால் இந்த ஸ்லோகத்திற்கான விளக்கத்தில் வில் எனும் சொல் கிடைக்கவில்லை) சார்ங்க என்றால் வில் என்று எப்படி எடுத்துக் கொள்வது? சங்கரம் போல மின்னி, சங்கைப் போல அதிர்ந்து வில்லைப் போல் மழை பொழிந்து என்று ஆண்டாள் பாடியிருக்கவேண்டும்... அதே சமயம்

சாரங்கபாணி என்று விஷ்ணுவை குறிப்பிடுவதுண்டு. அதாவது வில்லாளன் என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா? பாணம் என்பது வில் என்று குறிப்பிடுவார்கள் என்றால், சாரங்கம் என்றால் வில் என்று அர்த்தம் வாராது...... ஒருவேளை சாரங்க நாணோ? யாரேனும் சார்ங்க என்ற சொல்லுக்குச் சரியான விளக்கம் தாருங்கள்..

சார்ங்கம் உதைத்த சரமழை - அந்த சாரங்க நாண் பொழிந்த (உதைத்த) சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் - வாழ்வதற்கு உலகினில் பெய்திடுவாய் ;

நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். - நாங்கள் அனைவரும் மார்கழியில் நீராடி மகிழ்திடத்தான் கேளடிப் பாவைப்பெண்ணே என்று முடிக்கிறாள்..

ஓரளவு விளக்கப்பட்டிருந்தாலும், முழுமை விளக்கம் பெறும்பொழுதுதான் முழுமையாக விளங்கவும் செய்யும்.

பெய்யும் மழைக்கெல்லாம் அதிபனே, நீ கையில் இருக்கும் ஆயுதங்களை விடுத்து, கடலுக்குள் புகுந்து (கை நிறைய) மொண்டு விண்ணுக்குச் சென்று உன்னுருவம் போன்றே மேகத்தைக் கறுக்கச் செய்து, பரந்த தோளுடைய பத்மனாபன் கையில் மின்னும் சக்கரம் போன்று மின்னலை உருவாக்கி, இன்னொரு கையில் இருக்கும் வலம்புரிச் சங்கினைப் போன்று இடி இடித்து, சாரங்க நாண் தொடுக்கும் சரமழை போன்று இந்த உலகுக்கு மழையாக பெய்துவிடு ; நாங்களும் நீராடி மகிழ்வோம்.

சரி இனி நம்ம கருத்து...

கண்ணனையே மழையாகப் பெய்யச் சொல்லும் ஆண்டாளின் காதல் எப்படிப்பட்டது!!! அதுவும் அவன் கையிலிருக்கும் ஆயுதங்களான சாரங்க நாணும், வலம்புரிச் சங்கும், சக்கரமும், மழை பொழிவிப்பதற்காக உபயோகப்படவேண்டும் என்று கனக் கச்சிதமாக முடித்திருக்கிறாள் பாருங்கள்.

மேலும், உலகோர் வாழப் பெய்துவிடு, என்று சொல்லிவிட்டு, நாங்களும் மகிழ்வோம் என்று சொல்லியிருப்பது சிறப்பு.. சமூக அக்கறையும் ஆண்டாளின் பார்வையிலிருந்து தப்பவில்லை. உலகோர் பயனுக்குப் பின்னரே நாங்கள் மகிழ்வோம் என்று பாடுகிறாள்.ழகர எதுகைகள் வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கிறாள். ஆழி எனும் சொல்லே மீண்டும் மீண்டும் வந்து பல பொருள் தந்திருப்பது சிறப்பு.. மூன்றாம் பாடலைப் போன்றே மழை எனும் சிறப்பு இப்பாடலிலும் தூவப்பட்டிருக்கிறது.
முதல் பாடலில் நமக்கே பறைதருவான் என்று சுயநலமாகச் சொன்ன ஆண்டாள், பின்வரும் பாடல்களில் உலகோர் வாழவேண்டும் என்றும், மழை பொழிந்து செழித்து, நாமும் மகிழவேண்டும் என்று சொல்லுகிறாள்...

ஆண்டாளுக்கு புகழ்பாடுவது தானாக (தாங்களாக) இருக்கவேண்டும், மகிழ்வுறுவது மக்களாக இருக்கவேண்டும் என்ற அக்கறையாக இருக்கலாம்.. மேலும் இதுவரை கண்ட பாடலெல்லாம் துயிலெழுப்பும் பாடல்களாக இருக்கின்றன. இதைப்போன்று இன்னும் சில பாடல்கள் உண்டு.. ஆக இவை காலையில் பாடப்பட்டிருக்கலாம்..

விஷ்ணு விண்ணின் மேல் நின்று தன் இருகையால் கடலில் மொண்டெடுத்த நீரை பூமிக்கு ஊற்றி, அதில் நீராடவேண்டும் என்ற காதல் உணர்வு ஆண்டாளுக்கு எப்படி வந்திருக்கிறது!!? விஷ்ணுவின் கையால் நீரை உருவாக்கி பொழியச் சொல்லவில்லை கவனித்தீர்களா? பூமிக்கும் வானுக்கும் உள்ள சைக்ளிங் முறையை நன்கு அறிந்த ஆண்டாள், அந்த விஞ்ஞானத்தை ஆன்மீகத்திற்குள் புகுத்தியிருக்கிறாள் என்றே சொல்லவேண்டும்.. பூமியில் இருக்கும் நீரையே உபயோகப்படுத்தி மழை பொழியவை என்கிறாள்... இதுவும் எப்பேற்பட்ட சிந்தனை!!!

ஆண்டாள்.... உன் கவிதை படித்ததிலிருந்து நானும் காதலிக்கிறேன்.................. உன்னை..

அக்னி
19-12-2008, 12:01 PM
ஆதாவாவின் அனுபவமும், இலக்கியமும்
பிணைந்த புதுமை,
இனிமையாகத்தான் இருக்கின்றது.

முழுவதையும் சுவத்தேன்.
இன்னுமொரு முறை, ஆற அமரச் சுவைத்தாலே,
சுவையை முழுவதுமாக உணர முடியும் என்று எண்ணுகின்றேன்.

தொடர்ந்து செல்லுங்கள்.
மீண்டும் முதலிலிருந்து, உங்கள் தடம் தொடர்கின்றேன்.

ஆதவா
19-12-2008, 12:42 PM
ஆதாவாவின் அனுபவமும், இலக்கியமும்
பிணைந்த புதுமை,
இனிமையாகத்தான் இருக்கின்றது.

முழுவதையும் சுவத்தேன்.
இன்னுமொரு முறை, ஆற அமரச் சுவைத்தாலே,
சுவையை முழுவதுமாக உணர முடியும் என்று எண்ணுகின்றேன்.

தொடர்ந்து செல்லுங்கள்.
மீண்டும் முதலிலிருந்து, உங்கள் தடம் தொடர்கின்றேன்.

நன்றி அக்னி.... இன்னும் ஒருநாளைக்கு மட்டுமே எனது அனுபவம் சொல்லப் போகிறேன்.. என்னால் சமாளிக்க முடியவில்லை.. பாடலும் விளக்கமும் மட்டுமே தருவேன்....

தொடர்ந்து சுவையுங்கள்.

நிரன்
21-12-2008, 09:31 PM
நன்றாக உள்ளது அதவா........
மார்கழி மாதத்திற்கு ஏற்ற வகையில் கொடுத்து மார்கழியையே
கலக்கிக் கொண்டிருக்கிறீங்க...

ஊா்ல இருந்த ஞாபங்களை எல்லாம்
கிளப்பி விட்டுட்டீங்க.... இங்க என்ன மார்களி மாதம் சித்திரை மாதம்
என்று பிரிச்சா பாக்க முடியும் நம்ம நாட்டில மழையோட சோ்ந்து
ஒரு குளிர் அடிக்கிறதும் ஒரு சுகம்தான் அதை வா்ணிக்கவே முடியாது.
அது ஒரு காலம்..... இதுவும் ஒருகாலம் பனிமலைச் சூரியனை மட்டும்தான்
காண முடிகிறது.... சுட்டெரிக்கும் சூரியகைக்காணவே முடியல்ல

இதுபோன்றவற்றை சுவைக்க அக்னி மற்றைய நண்பா்களுடன் நானும் காத்திருக்கிறேன்:4_1_8:

ஆதவா
22-12-2008, 11:13 AM
முதல் பாடல் தரும்பொழுது, வெறும் அனுபவத்தோடும் முதல் பாடலோடும் நின்றுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் பாருங்கள், ஆண்டாள் எனை ஆண்டு தினமொரு கதை எழுதென்கிறாள். நேரம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஐயப்படவில்லை.. எழுதும் வரை எழுதுவோம்.. எல்லா நாட்களிலும் மார்கழி அனுபவம் கிடைக்க வாய்ப்பில்லை.. எனக்கு கொஞ்சம் ஞாபக வியாதி உண்டென்பது மன்றம் அறிந்த வரலாறு. சரி எதாவது சொல்லவேண்டுமே!

என் புதுக்காதலி ஆண்டாள் குறித்து கொஞ்சம் பேசுவோமே,

ஆண்டாள் குறித்து பேசுவோம் என்று சொன்னதும் வரலாறா என்று சலிப்பவர்களுக்கு, நிச்சயம் அது இல்லை என்று தைரியம் தருகிறேன். நான் ஆண்டாளை என்னவெல்லாம் நினைக்கிறேன் என்பது குறித்துத்தான் பேசப்போகிறேன். முதலில் எனக்கும் ஆண்டாளுக்குமான சொல் தொடர்பு எப்படி இருந்தது?

திருப்பாவை எனும் சொல் எப்பொழுது கேள்விப்பட்டேனோ அப்பொழுதே ஆண்டாள்தான் இந்நூலை எழுதினாள் என்று அறிந்து கொண்டேன். ஆண்டாள் ஒரு பெண் என்பதால் அவள் பாடல்களில் இருந்த வசீகரமும், பெயரும், அவளை ஒரு அழகு தேவதையாகவே எனக்குக் காண்பித்தது. ஆண்டாளின் பாடல்களில் இருக்கும் சொல்நயமும் புதுமையும் இப்பொழுதுதான் கற்றுவருகிறேன். அவளின் நுணுக்கப் பார்வையும் சமூக அக்கறையும் காதல் பொழிவும் மதி மயங்க வைக்கின்றன. ஆண்டாளின் இன்னொரு படைப்பான நாச்சியார் திருமொழியில் காதலைப் பிழிந்துச் சொட்டச் சொட்ட இறைவனை நனைத்திருக்கிறார்.... அதில் சில கவிதைகளில் மிரட்டலான காதலையும் முன்வைத்துப் பாடுகிறாள். அதாவது செல்லமாகக் கடிந்துகொள்கிறாள்.. பெண் நளினம் சொல்லும் பாடல்களாக இருக்கின்றன. அவள் சராசரிப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறாள்.

நாச்சியார் திருமொழி மொத்தம் நூற்றிநாற்பத்தி மூன்று பாடல்கள்.. எண்களாகச் சொல்லவேண்டுமானால் 143/ I love you என்பதன் குறியீடாக 1 4 3 ஐக் குறிப்பிடுவதுண்டு...கண்ணனைக் காதலிப்பவள், பாடல்களின் எண்ணிக்கையிலும் கூட காதலைச் சொல்லுகிறாளோ? நாச்சியார் தெரிந்தோ தெரியாமலோ நூற்றி நாற்பத்தி மூன்றோடு நிறுத்திவிட்டாலும் நம் குறுக்குப் புத்தி எப்படியெல்லாம் யோசிக்கிறது பாருங்கள் :D

ஒரு காதல் படைப்பாளியாக ஆண்டாளை நாம் பார்க்கும் பொழுதும், அவர் பல இடங்களில் வீராப்பு மிகுந்தவராகவும், பிடிவாதம் மிகுந்தவராகவும் இருந்திருக்கிறார். படைப்புகளை மட்டும் வைத்து ஒரு மனிதரின் குணாதிசயங்களைத் தீர்மானிக்க முடியாது என்றாலும், இயல்பாகவே (மனதில் ) இருக்கும் குணங்கள்தான் தப்பித் தவறிப் படைப்புகளாக வெளியே வரும். ஆண்டாளின் வரலாற்றைக் கவனிக்கும் பொழுது கூட, அவளின் விளையாட்டும், பிடிவாதமும் காணலாம். அரங்கநாதனுக்குச் சூடவேண்டிய மாலையை தாம் சூடிக் கொண்டது ஆண்டாளின் விளையாட்டுப் புத்தியா? அல்லது காதலா?

காதலாக இருப்பின், தனக்கு முதலில் சூடிக் கொண்டது, தனக்குப் பிறகுதான் பரந்தாமன் என்று பறைசாற்றவா? குழந்தைத் தனமாக இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் ஆண்டாள் அப்பொழுது நன்கு தமிழில் பரிச்சயம் பெற்றவளாக இருந்திருக்கிறாள். ஆண்டாளின் வரலாற்றைக் கவனிக்கும் பொழுது அவள் மீறிப்போனால் இருபத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவராக இருந்திருக்கவேண்டும். ஆகையால் மாலை சூடிக் கொண்டது பெண்களுக்குப் பிறகுதான் ஆண்கள், அது ஆண்டவனேயாகிலும் என்று உலகுக்குச் சொல்லவா?

ஆண்டாளின் கற்பனை, உலகு விரிந்து பரந்து இருப்பதைப் போன்று அளவற்று இருக்கிறது. அவள் உவமைப்படுத்துவதும், உருவகப்படுத்துவதும் பிரம்மாண்டமாக இருக்கிறது. அவள் பேச்சு தென் தமிழகத்தை நினைவுபடுத்துகிறது
(எல்லே! உறங்குதியோ?) அவள் சொல்நயம் புதுமைப்பெண்பாரதியை நினைவுபடுத்துகிறது. முலை போன்ற வார்த்தைகளை அநாயசமாக அவள் உபயோகப்படுத்தும் பொழுது, கவிதையில் கசப்பு தோணுவதில்லை ; மாறாக இன்றைய பல கவிஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பாடல்களில் காணப்படும் நுணுக்கமும் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்தியிருப்பதும் எளிமையும் அவளின் சிறப்பு..

சரி... போதும் போதும் ஆண்டாள் புராணம் என்று சொல்பவர்களுக்கு.... ஐந்தாம் பாவைப்பாடல்

"மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்று அணிவிளக்கை
தாயை குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்."


மாயனை - மாயங்கள் புரிபவனே மாயன், மன்னு வடமதுரை - மன்னுதல் எனும் சொல்லுக்குப் பொருந்துதல் அல்லது போற்றுதல் என்று அர்த்தமிருக்கிறது. மன்னு மிமயமலை எங்கள் மலையே என்று பாரதி பாடியிருப்பதை நினைவுகூறுகிறேன்.. போற்றுதலுக்குரிய வடமதுரை.. இங்கே கவனிக்க வேண்டிய சொல், வடமதுரை... கண்ணன் வளர்ந்து அரசனான துவாரகை வடக்கில் இருக்கும் காரணத்தால் வடக்கு மதுரை என்று தமிழ்நாட்டு ஊர்பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறாள். மைந்தனை - அந்த நகருக்கே குமாரனானவனை

தூய பெருநீர் யமுனை - தூய்மை மிகுந்த பெரிய ஆறான யமுனை, துறைவனை - யமுனைத் துறையின் தலைவனை,

ஆயர் குலத்தினில் தோன்று அணிவிளக்கை - ஆயர்குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை, அணி என்றால் நகை என்று பொருளுண்டு. நகையணிந்ததால் சிந்தும் ஒளி, விளக்கு எரிவதைப் போன்று இருக்கும். ஆகவே அணிவிளக்கை...

தாயை குடல்விளக்கம் - என்னதான் யசோதா எடுத்து வளர்த்தாலும், கண்ணனைப் பெற்றவள் தேவகிதான். ஆனால் கண்ணனின் தாய் யார் என்று கேட்கும்பொழுது நாம் யசோதா என்றே சொல்கிறோம். தேவகியை அடையாளம் காட்ட ஆண்டாள் சொல்லும் சொல், குடல்விளக்கம் என்பது. குடல் எனும் சொல், கருப்பப்பை என்றும் சொல்லலாம். கருப்பப்பை கூட குடல்தானே, விலக்கம் அல்ல விளக்கம்.. விளங்க எனும் சொல்லின் பொருளே விளக்கம் சொல்லிற்கும் பொருளாகும். அதாவது பிரகாசமாக, சுத்தமாக, (பாத்திரம் விளக்கணும்னு சொல்லுவோமே, விளக்கம் என்றால் பிரகாசப்படுத்துதல் ஆகும்.) ஆக, யசோதா தூக்கி வளர்த்தவளாக இருந்தாலும் தேவகியே வயிற்றில் சுமந்தவள் என்பதால் அவள் கருப்பபையை பிரகாசப்படுத்தியவன் கண்ணன் ஆவான் அல்லவா?

தாமோதரனை - கண்ணனை, தேவகியின் வயிற்றில் உதித்த கருநிற வண்ணனை, தூயோமாய் - தூயோம்+ஆய் - தூய்மையாக மாறி. வந்துநாம் தூமலர் தூவித் தொழுது - தூ எனும் எழுத்தே தூய்மை ஆகும். தூமலர் என்றால் தூய்மை மிகுந்த மலர்.. அம்மலர் கசங்கியோ, நாற்றம் இழந்தோ, தூசுபட்டோ இருக்கக்கூடாது, அம்மலரைத் தூவித் தொழுது....

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க வாய்விட்டு பாடவேண்டுமாம்... மனதிற்குள் பாடி சிந்திப்பதைக் காட்டிலும் வாய்விட்டுப் பாடுதல் இன்னும் இனிமை வாய்ந்தது. வெறும் வாய்ப்பாட்டு மட்டும் போதாது... மனம் அவனையே சிந்திக்கவும் வேண்டுமாம். சரி இப்படியெல்லாம் செய்தால்??

போய பிழையும் - போய - சென்ற , இதற்கு முன் நாம் செய்த பிழைகளும், புகுதருவான் - புகு+தருவான் - புகு என்பது புகுதல் எனும் சொல்லின் பகுதி. இனி புகுந்து வரும் பிழையும். நின்றனவும் + நின்று+அனவும் - தற்சமயம் இருப்பவையும், அதாவது,
கண்ணனைப் பாடுவதற்கு முன்பிருந்த பிழைகளும், பின்பு வரப்போகும் பிழைகளும், தற்சமயம் ஏற்பட்ட பிழைகளும் (நோன்பினால் தெரியாமல் ஏற்பட்டவைகள்)

தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்." - தீயினில் கருகி சாம்பலாகிப் போவதைப் போன்று பிழைகள் நீங்கிவிடும்.. நமக்கு மன்னிப்பு கிட்டும்... செப்பு - சொல்லுக...

முழுவிளக்கம்:

மாயங்கள் மிகுந்தவனை, போற்றுதலுக்குரிய துவாரகை மைந்தனை, தூய்மை மிகுந்த யமுனை நிலையத் துறைவனை, ஆயர்குலத்தினில் தோன்றிய அணிவிளக்கை, தாய் தேவகியின் வயிற்றில் உதித்து அவள் வயிற்றை பிரகாசப்படுத்திய தாமோதரனை தூய்மையாக நாம் வந்து தூய்மைமிகுந்த மலர்களைத் தூவித் தொழுது வாயினால் பாடி, மனதால் சிந்தித்தால், முன்னெப்போதோ செய்தபிழைகளும் பின்வரும் பிழைகளும், தெரியாமல் செய்தவைகளும் தீயினில் கருகி சாம்பலாகிவிடும் ஆக, பாடுங்கள் பாவைப் பெண்களே...

என் கருத்து :

ஆண்டாளின் மொழிப்பற்று நாம் அறிந்ததே, அதைப் போன்றே அவள், வடமதுரை என்று துவாரகையைக் குறிப்பிடுவதன் மூலம், தமிழக தேசப்பற்றையும் வைத்திருக்கிறாள். மன்னு துவாரகை மைந்தனை என்று எழுதிவிடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும்? பாண்டிய நாட்டைச் சார்ந்தவள் ஆண்டாள் ஆகவே பாண்டிய நாட்டுத் தலைநகரை துவாரகைக்கு ஒப்பிடுகிறாள்..

யமுனையைப் பற்றி சொல்லும்பொழுது, தூய பெருநீர் என்கிறாள். அக்காலத்தில் அவள் யமுனை வரை சென்று பார்த்தாளோ என்னவோ தெரியாது, ஆனால் யமுனை குறித்த அவளின் எண்ணம், தூய்மையானது என்றும், பெருநீர் எனும் சொல்லால், நீர் நிறைந்த பேராறு, வற்றாதது என்றும் உயர்த்தியே சொல்லுகிறாள்.. இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? அன்றைய காலங்களில் அடுத்த தேசத்தைப் போற்றிப் புகழுதல் என்பது மிகவும் அரிதானது. இளங்கோ இவ்வேலையைச் செய்திருக்கிறார். யமுனை நதி தன்நாட்டில் பாயாவிடினும் அந்நதி கண்ணனைப் பெற்ற நதி என்ற உயர்வான எண்ணம் அவளுள் இருந்திருக்கிறது.

அணிவிளக்கு என்ற சொல்லின் நயமும் புதைந்திருக்கும் கருத்தும் ஆழமானவை. விளக்கு எரிந்தால் ஒளிரும் ஒளியைப் போன்று நகைகள் அணிந்திருப்பதால் கண்ணன் மேலும் ஒளிருகிறானாம்..

குடல்விளக்கம் - இச்சொல்லுக்கு வேறுவழியின்றி கூகிளாண்டவரை நாடவேண்டியிருந்தது. குடல் என்பதும் கருப்பபை என்பதும் (Uterus) ஒன்றுதான்.. ஆண்டாள் திருமணமாகாதவள் என்பது குறிப்பிடத்தக்கது, அவள் குழந்தை வயிற்றில் வளர்கிறது என்று மெத்தமாகச் சொல்லாமல் நன்கு ஆய்ந்தறிந்தவளாக இருப்பதால் குடலில் வளர்கிறது என்கிறாள்.. அவளின் அறிவும் இங்கே புலனாகிறது.

தூயோமாய் - இங்கே நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே தருகிறேன். இன்றும் பெண்கள் மாதவிலக்கு என்றால் சுத்தமில்லாத நிலை என்று வீட்டிற்குள் நுழைவதில்லை.. கோவிலுக்குள் விடாய்நாட்களில் எந்தப் பெண்களும் வருவதில்லை. ஆக, தூய்மை என்பது மனதளவிலும் மாத்திரமல்ல, உடலளவிலும் இருக்கவேண்டும் என்று நன்குணர்ந்தவளாக, இக்குறியீட்டு வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கவேண்டும். நான் எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், நீராடுதல் குறித்து ஆண்டாள் முன்பே சொல்லிவிட்டாள். நீராடித்தான் கோவிலுள் புகுதல் வேண்டும் என்று சொன்னவள், விடாய் காலங்களில் தூய்மை நிறைந்தபின் (குளித்தபிறகோ?) செல்லவேண்டும் என்று சொல்லியிருக்கலாம். நீங்கள் இன்னொன்று கவனிக்கவேண்டும், "கோவிலுக்குள் புகுந்து" என்ற வார்த்தைகளை அவள் உபயோகிக்கவில்லை... ஆனால், மலர் தூவி பாட வேண்டும் என்று சொல்லுகிறாள்.. மலர் தூவவேண்டுமெனில் அருகே சிலை இருக்கவேண்டும்... சிலை இருக்குமிடம் கோவில் அன்றோ?

ஆதவா
23-12-2008, 05:16 AM
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

புள்ளும் சிலம்பின - புள் என்றால் பறவை.. புள்ளிசை என்று பறவையெழுப்பும் ஒலியைக் குறிப்பிடுவதுண்டு. சிலம்பின.. சிலம்புதல்.. வாயால் ஒலியெழுப்புதல்.. காண் பார்.. பறவை ஒலியெழுப்புதல் எப்பொழுது? அதிகாலையில். ஆண்டாள், ஒலியைக் கேள் என்று சொல்லாமல் ஏன் காண் என்று சொல்லவேண்டும்? தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்பி, அதோ பாருங்கள் பறவைகள் பறந்துகொண்டு ஒலியெழுப்புகின்றன என்று சொல்லுகிறாள்..

புள்ளரையன் கோவில் - புள்+அரையன் - புள் என்பது பறவை என்று நாம் அறிந்ததே, அரையன் என்றால், அரசன் என்று பொருள் படும். அரையன் என்ற சொல்லே அரசன் என்று மருவி வந்திருக்கிறது. (வல்லவரையன்,முத்தரையன்,) ஆக, பறவைகளின் அரசன் யார்? நம் கழுகார்தான்.. கழுகு கோவில் என்று குறிப்பிடுகிறாள் (தளி எனும் சொல்லும் கோவிலைக் குறிப்பிடும்)

வெள்ளை விளிசங்கின் பேரரவம். - வெள்ளை நிறத்திலான சங்கு, அதாவது வெண்சங்கு.. விளிசங்கு என்று குறிப்பிடுவதன் நோக்கம், விளி என்றால் கூப்பிடு எனும் அர்த்தமுண்டு. நம்மை கூப்பிடும் வெள்ளைச் சங்கு என்று ஆண்டாள் விவரமாகச் சொல்லுகிறாள். பேரரவம் - பெரிய+அரவம் அரவம் என்றால் ஒலி.. பேரரவம் என்றால் பேரொலி... வெண்சங்கிலிருந்து கூப்பிடும் பேரொலி கேட்டிலையோ? -- கேட்கவில்லையா?

பிள்ளாய் - பிள்ளையே! பெண்ணே, பாவையே... நீங்கள் எந்த அர்த்தம் வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எழுந்திராய்... எழுந்திடு பெண்ணே....

பேய்முலை நஞ்சுண்டு - பேய் - அரக்கி... அரக்கியின் முலை.. நஞ்சுண்டு... அம்முலையில் சுரக்கும் நஞ்சு கலந்த பாலை உண்டு... கள்ளச் சகடம் - கள்ளத்தனமான சக்கரம் கலக்கழியக் காலோச்சி - கலக்கு+அழிய சக்கரத்தை சுக்காக நொறுக்கி அழிய, கால்+ஓச்சி - காலால் உதைத்து...

பூதனை (சரியா என்று சொல்லுங்கள்..) எனும் பேயரக்கி கம்சனால் அனுப்பப்பட்டவள். அவள் குழந்தை கண்ணனுக்குப் பாலூட்டும் அன்னை போல் உருவெடுத்து நஞ்சைக் கலந்த முலைகொண்டவளாக வந்தாள். கண்ணனோ, அவள் முலைப்பாலைக் குடித்து அவளை வதம் செய்தான்... சகடம் பூட்டியவன் வரலாறு எனக்குத் தெரியாது என்றாலும் அவனும் கம்சனால் அனுப்பப்பட்டவனாகத்தான் இருப்பான். அச்சக்கர வண்டியை உதைத்து வதம் செய்தான் கண்ணன்... ஆக, ஆண்டாள் இவ்விரு நிகழ்வுகளையும் சொல்லி....

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த - வெள்ளை+த(அ)ரவு - அடுத்த வரியை கவனிக்கும்பொழுது (துயிலமர்ந்த) வெள்ளத்தரவு என்பது வெள்ளைப் பாம்பு என்பது புலனாகிறது.. அரவம் என்றால் பாம்பு வெள்ளைப் பாம்பு என்பது ஆதிகேசனைக் குறிப்பிடுகிறது. அப்பாம்பை மெத்தையாக்கி, துயிலமர்ந்த, அதாவது உறங்கிய...

வித்தினை.. இங்கேதான் பிரச்சனையே,.. வித்து என்பது மூலம் அல்லது அணு என்று சொல்லலாமா? அனைத்துக்கும் மூலமானவர் என்று ஆண்டாள் சொல்லுகிறாள்.. அல்லவா?

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் - மூலாதரமான இறைவனை முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் கொண்டு...மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் - மெள்ள/மெல்ல, மெதுவாக?? அரி என்ற பேரரவம்... முனிவர்களின் உள்ளத்தில் எழுந்த பேரொலி... ஆண்டாளின் வளமிக்க கற்பனைத் திறனைக் காணுங்களேன்..... :)

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். - உள்ளம் புகுந்து குளிர்ந்தது.... பாவைப் பெண்ணே


முழுவிளக்கம்.

பறவைகள் அதிகாலையிலேயே ஒலியெழுப்புகின்றன காணுங்கள் பாவைகளே, பறவைகளின் அரசன் கழுகாரின் கோவிலில் எழுப்பப்படும் வெண்சங்கின் பேரொலியைக் கேட்கவில்லையா? (இன்னமும் உறக்கமா?) அடிப்பெண்ணே.... எழுந்திடு.. அரக்கியின் முலைப்பாலை உண்டு, சகடக்காரனை உதைத்து வதம் செய்து ஆதிசேஷனை மெத்தையாக்கி உறக்கும் மூலக்கடவுளை உள்ளத்தில் கொண்டு முனிவர்களும் யோகிகளும் எழுப்பும் ஹரி எனும் பேரொலி நம் உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறது பெண்களே!

என் கருத்து :

உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களை ஆண்டாள் எழுப்புவதாக இப்பாடல் இருக்கிறது. இதுமட்டுமல்ல, இதற்கு முன்னர் நாம் பார்த்த பாடல்களும் அந்த ரகத்தைச் சார்ந்தவைதான்.

எல்லா பெண்களுக்கும் முன்னரே ஆண்டாள் எழுந்து இப்பாடலைப் பாடி எழுப்புகிறாள். அன்றைய பொழுதில் கழுகு கோவில் இருந்திருக்கவேண்டும். கழுகு, விஷ்ணுவின் வாகனம் என்பது நாமறிந்ததே. அன்றைய காலத்தில் சங்கொலி ஊதப்படுதல் வழக்கமாக இருந்திருக்கவேண்டும். அதிகாலையில் நம்மை பறவைகள் (சேவல்) எழுப்புவது போல, சங்கொலி ஊதப்பட்டிருக்கவேண்டும். அக்கால நடைமுறைகள் சில ஆண்டாளின் இப்பாடல் மூலம் நமக்குக் கிடைக்கிறது. புள்ளரையன் எனும் சொல்லே புதுமை வாய்ந்ததாக இருக்கிறது. ஆக, புள்ளரையன் கோவில் எனும் சொல்லினால் பழங்காலத்திய ஆன்மீக நடவடிக்கைகளையும் சம்பிரதாயங்களையும் நம்மால் காணமுடிகிறது. வரலாற்று ஆசிரியருக்கு ஆண்டாள் துமியேனும் உதவியிருக்கிறாள்.

வித்தினை எனும் சொற்பதம் விஷ்ணு என்ற சொல்லுக்கு ஈடா என்று கூட நாம் நினைக்கலாம். வித்து என்பது மனித உயிர் தோன்ற மூலாதாரமாக விளங்குவது என்பது நாமறிந்ததே.. ஆண்டாளுக்கு மருத்துவ அறிவும் தெரிந்திருக்கிறது. பிள்ளை பிறப்பது மனித விந்தினால் என்பதை அறிந்து வைத்திருக்கிறாள்.. அனைத்துக்கும் மூலாதாரமாக என்று இச்சொல்லை ஆண்டு நாராயணனை வழிபடுகிறாள்.

இன்னொன்று நீங்கள் கவனிக்க வேண்டியது.. ஆண் பெண்களுக்கு உடலுறவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று எத்தனையோ ஊடகங்கள் உள்ளன. அன்று ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் தவிர இச்செய்தியை அவளுக்குச் சொல்ல வேறு யாருண்டு? கலவிக் கல்வியும் அவளுக்குப் புகுத்தப்பட்டிருக்குமோ? அதுவும் அவளது அப்பாவிடமிருந்து.....???

முனிவர்கள் வேறு யோகிகள் வேறு.. ஒரேசொல்லைக் கையாள ஆண்டாள் விரும்பவில்லை. முனிவர்கள் தவம் செய்பவர்கள், யோகிகள் தியானம் செய்பவர்கள். அவர்கள் சும்மா ஒன்றும் அரி என்ற சொல்லை உச்சரிக்கவில்லை. நாராயணனை மனதில் வைத்துக் கொண்டு சொல்கிறார்கள்.. அதனால்தான் உள்ளத்துக் கொண்டு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறாள். பேரரவம் எனும் சொல்லும் புதுமை வாய்ந்தது. அவர்கள் வாயாரப் பாடும் அரிநாமம் நம் உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறது என்று முடிக்கிறாள். முனிவர்களை அவள் கண்டிருப்பாளோ அல்லது மாட்டாளோ என்று சர்ச்சை எழுவதைவிட, யோகிகளைக் கண்டிருப்பாள் என்று உணரமுடிகிறது. யோகிகள் இன்றைய (வேதாத்திரி மகரிஷி) தியான ரிஷிகளைப் போன்று கற்பிதம் செய்துவந்திருக்கலாம்.

பெண்கள் முனிவர்களாகவோ, யோகிகளாகவோ ஆனதாக இதுவரை படித்ததில்லை.. ரிஷிகளுக்கு மனைவி என்றாலும் தனித்தன்மை பெற்ற முனி என்ற பட்டம் இதுவரையிலும் எந்த பெண்ணும் பெறவில்லை... ஆகவே ஆண்டாள் அந்த முனிவர்கள் எழுப்பும் சப்தத்தை மனதில் கொண்டாலே மோட்சம் என்று மறைமுகமாச் சொல்லுகிறாள்..

வெள்ளத்தரவு - வெள்ளத்து+அரவு - வெள்ளம் எங்கிருக்கும்? கடலில் அல்லவா.. கடலில் மிதக்கும் பாம்பு என்று கூட அர்த்தப்படுத்தலாம் இல்லையா? இப்பாடல் முழுக்க புதுமை மிகுந்த சொற்களைப் பயன்படுத்திய ஆண்டாளின் அடியைத் தழுவி முத்தமிடலாமா என்று ஏங்குகிறேன்.

ஆதவா
23-12-2008, 07:06 AM
கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.


சென்ற பாவைப் பாடல்களில் என் அனுபவமும் கோர்த்து எழுதியிருந்தேன். நேரமின்மையாலும், சென்னை சந்திப்பில் இருநாட்கள் எழுதமுடியாமல் போனதாலும் அனுபவங்களை விடுத்து, விளக்கங்களை மட்டும் எழுதலாம் என்றூ இருக்கிறேன்.
பொதுவாக ஒரு தொடர் ஆரம்பித்து, பின்னூட்டம் கிடைக்கிறதோ இல்லையோ எனக்கு சலிப்பு ஏற்படும் வரையிலும் எழுதுவேன். ஆனால் சலிப்பில்லாமல் எழுதத் தூண்டுவது நம் ஆண்டாளின் கைங்கரியம்.

ஆண்டாள் தன் தோழிகளை எழுப்புவது இன்னமும் விட்டபாடில்லை. ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாக எழுப்புகிறாள். ஆண்டாளைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் நித்திரை விரும்பிகளோ என்னவோ, அப்படியொரு பேய்த்தூக்கம் போடுகிறார்கள். அந்தப் பேய்ப்பெண்களை எப்படி எழுப்புவது என்று பாடலாகப் பாடிக் குவிக்கிறாள் பாருங்களேன்.

ஆனைச்சாத்தன் - கருங் குருவி/தவிட்டுக் குருவி/வலியன் குருவி மாதிரி ஒரு குட்டிப் பறவை! கிராமத்துல கரிச்சான் குஞ்சு என்று சொல்லுவார்கள் (நன்றி : மாதவிப்பந்தல்) அக்குருவி எப்படி கத்துகிறது? கீசுகீசு என்று.. நாம் சொல்லுவோமே, கீச் கீச் என்று கத்துகிறது என... அதை அப்படியே ஆண்டாள் பயன்படுத்தியிருப்பதைக் காணுங்கள். எனக்குத் தெரிந்து ஆண்டாளுக்குப் பிறகு பாரதி பயன்படுத்தியிருக்கிறார், பறவைகளின் ஒலியை கவியில் புகுத்தும் புதுமை ஆண்டாளிடமிருந்துதான் துவங்குகிறதோ?

ஆனைச்சாத்தன் பறவைகள் நித்திரைக்குச் செல்லுகின்றன. அவை எழும் நேரம் அதிகாலை.. அவை பேசிக் கொள்கின்றன. சும்மா ஒன்றும் பேசவில்லை நண்பர்களே, கலந்து பேசியிருக்கின்றன. அவைகள் எங்கும் எழுந்து ஒன்று கூடி பேசியதால் ஏற்படும் அரவம் அதாவது பேரொலி கேட்டிலையோ என்று பெண்களைக் கடிகிறாள். அடிப் பெண்களே, அந்தக் குருவிகள் கூட அத்தனை ஒலியெழுப்பப் பேசுகின்றன உனக்கென்னடி தூக்கம், நாராயணனைத் தொழச் செல்லும் நேரம் ஆகவில்லையாடி என்று உரிமையோடு கடிந்து பேய்ப்பெண்ணே என்று செல்லமாகத் திட்டுகிறாள்.

காசும் பிறப்பும் - காசு = கழுத்து மாலை, நாண் வழிக் காசு என்பார்கள்! காசு மாலை போல இருக்கும்! நான்கு வழிகளில் அதைக் கோர்த்துக் கொள்ளலாம்! அச்சுத் தாலி-என்றும் சொல்லுவார்கள்
பிறப்பு = ஒரு வகை சிறிய கழுத்து அணிகலன். பொடிப்பொடியாக விதைகள் போல கோர்த்து இருக்கும்! ஆனால் ஜல்-ஜல் தொங்கட்டான்கள் பொடிசு பொடிசா தொங்கும்! ஆமைத்தாலி-என்றும் சொல்லுவார்கள். (நன்றி : மாதவிப்பந்தல்)

காசு மற்றும் பிறப்பு ஆகிய நகைகள் கலகலக்கின்றன. எப்படித் தானாகக் கலகல என்று சத்தமிடும்? கைபேர்த்து கடைந்த தயிரினால்... ஆயர் பெண்கள் குளித்து, நகைகள் அணிந்து அலங்காரம் செய்து (ஆய்ச்சியர்) மத்தினால் தயிர் கடையும் பொழுது தயிர் அரவம் கேட்கிறது... பெண்கள் குளித்துவிட்டார்கள் என்பதை எப்படிச் சொல்லுவாய் என்று கேட்பவர்களுக்கு, சற்று முன்னுள்ள வரிகளைப் படித்தால் விளங்கும்.. வாசநறும் குழல் - குழல் என்பது கூந்தல். அது நறுமணம் தருகிறது என்றால் பெண்கள் குளித்துவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்? அவரவர் பணிகளை சீக்கிரமே தொடங்கிவிட்டார்கள்.. ஓசை படுத்த - தயிர் கடையும் பொழுது ஏற்படும் சத்தம் கூட கேட்கிறது...கேட்டிலையோ பெண்ணே? இன்னும் என்ன உறக்கம்?

நாயகப் பெண்பிள்ளாய் - நாயகம் என்பது முன்னின்று செய்பவர் என்று சொல்லலாம்.. "அந்தக் கூட்டத்தில் அவர் நடுநாயகமாக விளங்கினார்" என்று கூறுகிறோம்.. அப்படி முன்னின்று செய்பவர்கள் ஊர் பெரியவர்களாகவோ அல்லது பணக்காரர்களாகவோ இருக்கலாம். அடி நாயகப் பெண்ணே என்று விளிக்கிறாள்.

நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ? - நாராயணன், மூர்த்தி, கேசவன் என்று முவ்விதமாக அவன் நாமம் உச்சரித்து, அவனைப் பாடவும் நீ கேட்டுக்கொண்டே இருந்துவிடலாம் என்று நினைத்தாயோ? கிடத்தியோ? கிடக்கிறாயோ? என்கிறாள். அவன் புகழை நாங்கள் பாடி நீ சும்மா கேட்டு விடலாம் என்று மட்டும் நினைக்காதே, நீயும் எங்களுடன் வந்து பாடு என்கிறாள்.

தேச முடையாய் - தேசம்+உடையாய் - தேசம் என்பது தேஜஸ் என்ற வடமொழிச் சொல்லின் தமிழ்வடிவம். தேஜஸ் என்பது பிரகாசிப்பு என்று சொல்லுவோம். முகத்தில் தேஜஸ் உடைய பெண்ணே, திறவேலோர்- திறவு+ஏலோர், திறந்துவிடு.. எதை? உன் உள்ளத்தை.. நீ நாராயணனை வழிபட மனம் திறந்து வா.. என்று ஆண்டாள் முடிக்கிறாள்..

முழுமை:

கீச் கீச் என்று எல்லா ஆனைச்சாதன் பறவைகள் ஒன்றுகூடி கலந்து பேசிய பேரொலி உனக்குக் கேட்கவில்லையா பேய்ப்பெண்ணே, காசுமாலையையும் பிறப்பு நகையையும் சப்தமிசைக்க, கைகளை வைத்து, நறுமண கூந்தல் கொண்ட ஆய்ச்சியர்கள் கடையும் மத்தினால் ஏற்படும் தயிர் ஓசைகூட உனக்குக் கேட்கவில்லையா? பெரியவீட்டுப் பெண்ணே, நாராயணனை நாங்கள் பாட நீ கேட்டுக் கிடப்பாயோ? தேஜஸ்வினியே, உள்ளத்தைத் திறந்து வழிபடுவாய்

என் கருத்து :

பறவைகளின் ஒலியை படம்பிடித்துக் காட்டிய ஆண்டாளுக்கு மேலும் ஒரு !ஓ!.. அவைகளின் ஒலி, கீசுகீசு என்று சொல்லுவது, பெண்களின் குரலைப் போன்றதொரு ஒப்புமையால் இருக்கலாம். மேலும் ஆனைச்சாத்தன் என்ற ஒரு பறவை இருப்பதை ஆண்டாள் நமக்குக் காண்பிக்கிறாள்.. ஒவ்வொரு பறவைகளுக்கும் அழகுதமிழில் பெயர் வைத்து அழைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆனைச்சாத்தன் பறவைகள் கலந்து ஒலியெழுப்பும் என்பதை எவ்வளவு கூர்ந்து கவனித்திருக்கிறாள்!! அவையெழுப்பும் ஒலி, காலைப் புலர்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக இருக்கிறது என்பதோடு அல்லாமல்,

பேய்ப்பெண்ணே என்று திட்டுகிறாள். ஒரு கவிதையில், ஒலியையும் உணர்வுகளையும் புகுத்துவது என்பது எவ்வளவு கடினம்? ஆண்டாள் செய்கிறாள்.

வாசநறுங் குழல் என்பது சிலர், ஆய்ச்சியர்கள் தயிர் கடையும் பொழுது தன் கைகளினால் தலையைத் தேய்க்க, எழும் தயிர் வாசம் என்று குறிப்பிடுகிறார்கள்.. ஆனால் ஆண்டாள் குறித்த அவ்வரிகள் குறித்த என் அனுமானம் அப்படியல்ல. ஆய்ச்சியர்கள் தூய்மையாக குளித்து, அலங்காரங்கள் புனைந்து பின்னரே கடைகிறார்கள் என்பேன். தயிர் கடையும் பொழுது, சலக் சலக் எனும் சத்தம் எழும்புகிறது. அச்சத்தங்கள் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்ப ஆண்டாள் உபயோகிக்கிறாள்.

நாயகப் பெண் - ஆண்டாள் ஒருவளையும் விடவில்லை, நீ ஏழை பணக்காரன், உள்ளவள், இல்லாதாள், என்ற பேத வித்தியாசம் பார்க்கவில்லை.. யாராக இருந்தாலும் தனக்கு ஒன்றுதான்.. அது நாராயணனைத் தொழவேண்டும் என்றுதான் என்கிறாள்.

தாமரை
23-12-2008, 07:18 AM
பேய்ப் பெண்கள் தூங்குகின்றனர். ஆனால் ஆய்ச்சியர் தயிர்கடைகின்றனர். அப்படின்னா ஆய்ச்சியர் எழுந்து குளித்து முடித்து அலங்காரங்கள் முடிந்து தங்கள் வேலையைத் தொடங்கி விட்டனர்.


ஆண்டாள் ஆய்ச்சியரை ஏன் அழைக்கவில்லை எனக் கேள்வி எழுகிறதா ஆதவா?

ஆதவா
23-12-2008, 07:33 AM
பேய்ப் பெண்கள் தூங்குகின்றனர். ஆனால் ஆய்ச்சியர் தயிர்கடைகின்றனர். அப்படின்னா ஆய்ச்சியர் எழுந்து குளித்து முடித்து அலங்காரங்கள் முடிந்து தங்கள் வேலையைத் தொடங்கி விட்டனர்.


ஆண்டாள் ஆய்ச்சியரை ஏன் அழைக்கவில்லை எனக் கேள்வி எழுகிறதா ஆதவா?


இப் பாவைப்பாடலைக் கண்டதும் எனக்குத் தோன்றியது.... புராண அறிவு குறைவென்பதாலோ, அல்லது விளக்கம் தவறாக இருக்குமோ என்ற அச்சத்தாலோ அதை மழுப்பிவிட்டேன்....

நன்றி அண்ணா.

தாமரை
23-12-2008, 07:42 AM
தயிர்கடையும் ஒவ்வொரு ஆய்ச்சியிடமும் கண்ணன் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறான்..:)

அதுதான், தயிகடையும் ஓசைக் கேட்டால் கண்ணன் நினைவு வரவேண்டும்..

ஆனைச்சாத்தான்கள் கீச்சு கீச்சென பேசுவதும்,
ஆய்ச்சியர் தயிர்கடைவதும்
ஆண்டாள் பாடுவதும்

இவை அனைத்தும் கண்ணன் புகழே.. கண்ணன் எண்ணம் மனதில் உண்டாக்குபவையே..

ஆனைச்சாத்தான் என ஏன் சொன்னார்?

ஆனை - ஆதி மூலமே என்று அழைத்த யானை.. அந்த ஆனையை உடனே வந்து காத்த பரம்பொருள் ஆனைச்சாத்தான் அவனல்லவா?
ஆனைச்சாத்தானின் ஒலி கேட்டால் அப்பரமனின் நினைவு வருமே..


பரமனை நினைவு படுத்தும் இவ்வொலிகளை கேட்ட பின்னருமா உறக்கம்?

ஆதவா
23-12-2008, 07:54 AM
தயிர்கடையும் ஒவ்வொரு ஆய்ச்சியிடமும் கண்ணன் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறான்..:)

அதுதான், தயிகடையும் ஓசைக் கேட்டால் கண்ணன் நினைவு வரவேண்டும்..

ஆனைச்சாத்தான்கள் கீச்சு கீச்சென பேசுவதும்,
ஆய்ச்சியர் தயிர்கடைவதும்
ஆண்டாள் பாடுவதும்

இவை அனைத்தும் கண்ணன் புகழே.. கண்ணன் எண்ணம் மனதில் உண்டாக்குபவையே..

ஆனைச்சாத்தான் என ஏன் சொன்னார்?

ஆனை - ஆதி மூலமே என்று அழைத்த யானை.. அந்த ஆனையை உடனே வந்து காத்த பரம்பொருள் ஆனைச்சாத்தான் அவனல்லவா?
ஆனைச்சாத்தானின் ஒலி கேட்டால் அப்பரமனின் நினைவு வருமே..


பரமனை நினைவு படுத்தும் இவ்வொலிகளை கேட்ட பின்னருமா உறக்கம்?

இந்த விளக்கத்தை எதிர்பார்க்கவேயில்லை.... ஆனால்.... ஆனைச்சாத்தான் பேசின பேச்சொலி என்று ஆண்டாள் தெளிவாகக் குறிப்பிடுகிறாளே!

அவ்வப்போதத தடுக்கி விழும் நேரங்களில் தூக்கி விட்டால் இத்திரி இன்னும் நன்ற்றாக இருக்கும்

அன்புட்ன்
ஆதவன்

தாமரை
23-12-2008, 08:08 AM
இந்த விளக்கத்தை எதிர்பார்க்கவேயில்லை.... ஆனால்.... ஆனைச்சாத்தான் பேசின பேச்சொலி என்று ஆண்டாள் தெளிவாகக் குறிப்பிடுகிறாளே!

அவ்வப்போதத தடுக்கி விழும் நேரங்களில் தூக்கி விட்டால் இத்திரி இன்னும் நன்ற்றாக இருக்கும்

அன்புட்ன்
ஆதவன்

அதிகாலையில் சேவல்கள் கூவும். சிட்டுக் குருவிகள் ஒலியெழுப்பும். காகங்கள் கரையும்.. இப்படி பல பறவைகள் ஒலியெழுப்பும். இருந்தும், ஆனைச்சாத்தானை மட்டும் சொல்லக் காரணம் அதுதான்.

தடுக்கி விழுவதல்ல ஆதவா. உட்பொருள் காணுதல் இது,,,

பல பிரசங்கம் செய்பவர்களே ஆனைச்சாத்தான் என்பது ஒரு குருவி வகை என்பதோடு நின்று விடுவார்கள். ஆனால் மூன்று தனித்தனிச் சம்பவங்கள் பொருளால் எந்த இடத்தில் இணைகின்றன என்பதை காணும் ஆசை யாருக்கும் இருந்ததில்லை என்றே சொல்லலாம்.

மூன்றும் கண்ணனை நினைவுறுத்தும் ஒலிகள் என்ற ஒற்றுமைதான் இங்கு பிரதானம். ஆய்ச்சிகளையும், பக்திப் பாடலையும் சட்டென இணைத்துவிடலாம். ஆனைச்சாத்தானை அறிய இப்படிச் சற்று புராணமும் சொல்வளமும் தேவைப்படுகின்றது. எனக்கே இங்கு பதியும் அந்த நொடி வரை தெரியாது. ஒரு வினாடி நேரத்தில் தோன்றிய விரிவு இது..

ஒரு சுற்று வருகிறேன்..

தாமரை
23-12-2008, 08:32 AM
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்."


ஆண்டாள் பாடிய திருப்பாவையின் முதற்பாடலான இப்பாடல் பற்றி எனக்குத் தெரிந்த வகையில் விளக்கம் தருகிறேன்.. இதில் தவறு இருந்தால் திருத்துக.

மார்கழித் திங்கள் என்பது மார்கழி மாதம் என்று சொல்லப்படும். திங்கள் என்பதற்கு நாள், மாதம், ஆதவன், என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. மதிநிறைந்த நன்னாளால் எனப்படுவது, பெளர்ணமி தினத்தைக் குறிக்கும்.. மதி என்பது நிலவு.. அது நிறைந்திருப்பது பெளர்ணமியில்.

நீராட - குளிக்க... போதுவீர் - போகிறவர்கள்.. அதாவது நீராடப் போகிறவர்கள்.. போதுமினோ, போகலாம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

நேரிழையீர்.. நேர்+இழையீர்.. எனக்கு சரியாக அர்த்தம் தெரியாவிடினும்... இழை என்பது நகைகளைக் குறிப்பிடலாம். ஆகவே செழிப்பு மிகுந்த நகைகளை அணிந்தவர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் என்ற வரிகள், ஆயர்பாடியில் வாழும் சீர்மிகுந்த செல்வச் சிறுமிகளே என்ற அர்த்தத்தைத் தருகிறது. சிறுமீர்காள் என்பது விளிப்புச் சொல்.. அருகே ஒரு வியப்புக் குறி இருப்பதைக் கவனிக்க.

கூர்வேல் கொடுந்தொழிலன் - முதலில் நான் நினைத்தது வேல் செய்யும் கொல்லன் என்று (பிறவிப் புத்தி :D) அதற்கு அடுத்த வரிகளான நந்தகோ பன்குமரன்.. என்ற வார்த்தைகளால் ஒரு அரசன் என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருக்கிறாள் என்பது தெளிவாகிறது......... நந்தகோபன் குமரன் என்றுப் பிரித்துப் படியுங்கள்.. நந்தரின் மகன் கண்ணன் அல்லவா.... அடுத்து வரிகளைக் கவனிப்போம்.

ஏரார்ந்த கண்ணி - ஏர் ஆர்ந்த கண்ணி.. ஆர்ந்த - பரந்த, ஆழ்ந்த என்ற அர்த்தம் வருகிறது.. நாம் "மனமார்ந்த நன்றி" என்று சொல்கிறோம் அல்லவா... அதாவது "உள்ளம் நிறைந்த நன்றி" என்ற பொருளில் சொல்கிறோம்.. கண்ணி என்பது கண்ணை உடையவள் என்ற அர்த்தம் தருவதால்... ஏரார்ந்த கண்ணி என்பது அழகு ததும்பும் கண்களை உடையவள் என்று நாம் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்..

யசோதை, கண்ணனின் தாய். யசோதை இளஞ்சிங்கம் என்றால்... யசோதை பெற்ற இளஞ்சிங்கம் என்றாகும்.

கார்மேனி - கார் என்பது கருப்பு,மேகம் என்று பொருளுண்டு. மேகம் போன்ற மென்மை என்றோ, அல்லது கருந்திரள் மேகம் போன்று கருத்தோ (கருமை நிறக்கண்ணா என்று விளிப்பதுண்டு)

செங்கண் - செம்மை+கண் = சிவந்த கண்களை உடையவன்... முன்பு கருமை நிறத்தவன் என்ற ஆண்டாள் பின் கண்களைச் சொல்லும்பொழுது சிவந்த கண்களை உடைய கண்ணன் என்கிறாள். கதிர்மதியம் என்ற சொல்லே புதுமை வாய்ந்தது. கதிர் என்பது சூரியனைக் குறிக்கும்.. சூரியன் மதிய நேரத்தில் எப்படி பிரகாசமாக இருப்பானோ அதைப் போன்று.... கதிர்மதியம் போல் முகத்தான்..... பிரகாசமான முகத்தை உடையவன்.. என்று சொல்கிறாள்.

சரி, இத்தனையை வருணித்தாளே... யாரை? நாராயணனை... அவனே நமக்கெல்லாம் பறை தருவான்.. பறை என்பது ஒருவகை வாத்தியக் கருவி என்பது நாம் அறிந்ததே..

பாரோர் - பாரில் உள்ளோர்.... இந்த உலகில் உள்ளோர் புகழ....

படிந்தேலோர்.... படிந்து - ஏலோர் = இந்த புவியில் உள்ளோர் புகழ... கண்ணன் அடி பிடித்து நடப்போம்...

எம்பாவாய்..... பாவையெனும் விரதம் கொண்டாதாக...

ஏதோ விளங்கியதா மக்களே.... சரி... நேராக விளக்கத்தை மட்டும் கீழே எழுதுகிறேன்..

மார்கழி மாதம் பெளர்ணமி நாளில் குளிக்கப் போகும் சீர்மிகுந்த ஆயர்பாடியின் செல்வச் சிறுமிகளே! கூர்ந்த வேல் கொண்டு ராஜதொழில் செய்யும் நந்தகோபம் மகனும் அழகான கண்களைக் கொண்ட யசோதையின் இளஞ்சிங்கமுமான, கருமைநிறம் கொண்ட உடலும் சிவந்த கண்களையும் பிரகாசமான முகத்தைக் கொண்டவனுமான நாராயணன் நமக்குப் பறை (வாத்தியம்) தருவான். (அதைக் கொண்டு) உலகில் உள்ள மக்கள் புகழ நாராயணன் அடிதொட்டு வழிபாடுவோம் மக்களே!

..... சரிசரி.... கொஞ்சம் ஓவரா பேசிட்டன்... :redface: இல்ல???

நீராடப் போதுவீர் - குளிக்க வாருங்கள்..
போதுமினோ - போகலாமா?
நேரிழையீர் - திருத்தமான - நேர்த்தியான உடைகளை அணிந்த பெண்களே..

கதிர்மதியம் - சூரியசந்திரன். சூரியனைப் போன்ற ஒளி, சந்திரனைப் போன்ற குளிர்ச்சி.. அவன் முகம் காண கண்கள் கூசுவதில்லை. கண்களுக்கு குளுமையாக இருக்கிறது. ஆனால் அதன் ஒளியோ சூரியனுக்கு ஒப்பாக இருக்கிறது.. அதனால் கதிர்மதியம் போல் முகத்தான். மத்தியானச் சூரியன் அல்ல

பறை என்றால் வாத்தியம் இந்த இடத்தில் பொருந்துவதில்லை.
பறை என்றால் சொல் என்று பொருள்..

நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

நமக்கு பறை அதாவது உரை அதாவது கீதை அதாவது நன்மொழிகள் தருவான்.. உலகோர் புகழ அதன்படி படிந்து உயர்வோம்.

இப்படித்தான் எனக்குத் தோணுது..

ஆதவா
23-12-2008, 08:54 AM
நீராடப் போதுவீர் - குளிக்க வாருங்கள்..
போதுமினோ - போகலாமா?
நேரிழையீர் - திருத்தமான - நேர்த்தியான உடைகளை அணிந்த பெண்களே..

கதிர்மதியம் - சூரியசந்திரன். சூரியனைப் போன்ற ஒளி, சந்திரனைப் போன்ற குளிர்ச்சி.. அவன் முகம் காண கண்கள் கூசுவதில்லை. கண்களுக்கு குளுமையாக இருக்கிறது. ஆனால் அதன் ஒளியோ சூரியனுக்கு ஒப்பாக இருக்கிறது.. அதனால் கதிர்மதியம் போல் முகத்தான். மத்தியானச் சூரியன் அல்ல

பறை என்றால் வாத்தியம் இந்த இடத்தில் பொருந்துவதில்லை.
பறை என்றால் சொல் என்று பொருள்..

நாரா யணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

நமக்கு பறை அதாவது உரை அதாவது கீதை அதாவது நன்மொழிகள் தருவான்.. உலகோர் புகழ அதன்படி படிந்து உயர்வோம்.

இப்படித்தான் எனக்குத் தோணுது..

கதிர்+மதி+அம்... இப்பொழுது விளங்குகிறது.. மாற்றுப் பொருள் யோசிக்காததன் விளைவு...

பறை குறித்து, பாரதி அண்ணா சுட்டியிருந்தார்... நான் தவறாக பொருள் கொண்டுவிட்டேன்.. மலையாளத்தில் பறை என்றால் சொல் என்று அர்த்தம். தமிழில் இருந்து பிரிந்த மலையாளம் என்று அறிந்த நான் பறை எனும் வார்த்தை மலையாளத்திற்கு மட்டும் சொந்தம் என்று நினைத்தது தவறாகப் போயிவிட்டது..

நேரிழையீர் (சரியென்று பொருள் பார்த்து தெரிந்துகொண்டேன்) நேர்+இழையீர் - நேர் என்பது நேர்த்தியான எனும் சொல்லைத் தருகிறது இல்லையா அண்ணா?
விளக்கத்திற்கும் மாற்றுபார்வைக்கும் மிகுந்த நன்றி... :icon_b:

ரங்கராஜன்
23-12-2008, 11:03 AM
ஆதவா உன்னை பார்த்த பின் உன் எழுத்துக்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது, நீயாஆஆஆஆஆஆஆஆ இதை யெல்லாம் எழுதுகிறாய் என்று, ஆச்சர்யமான பாராட்டுகள்

ஆதவா
23-12-2008, 11:21 AM
பாவை 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.


அப்பப்பா... இந்தப் பாடலுக்கு விளக்கம் எடுப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டதய்யா... ஒன்று எடுத்தால் ஒன்று குறைகிறது. ஒன்று குறைய, ஒன்று நீள்கிறது... எனக்கென்னவோ, ஆண்டாள் இந்தப் பாடலில் சொற்கட்டில் குறைவைத்து விட்டாளோ என்றூ கூட தோன்றியது.. நடக்கட்டும். நடக்கட்டும்.

அட, துயில் எழுப்பும் பாடல்கள் இன்னும் முடியலையோ... எழுந்து செல்லுங்களடி ஆண்டாளோடு என்று நாமே சொல்லும் அளவுக்கு ஆண்டாள் பாடிவிட்டாள்.. ஆண்டாளின் பாடல்களில் அதிகாலை வந்து செல்கிறது, இயற்கையை துணைக்கழைக்கிறாள். அநேகமாக ஆண்டாள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இதைப் பாடியிருக்கவேண்டும் போல... ஒரு ஆய்ச்சியர் வீட்டுக்குச் சென்று தயிர்கடையும் சத்தம் கேட்டு எழவில்லையா என்று கடிந்து கொண்டு, அப்படியே நேராக எருமை மேய்ப்பவர் வீட்டுக்கு வந்துவிட்டாள் போலும்.. அட, இம்முறை அவள் மட்டும் வரவில்லை.. அவளுடன் ஒரு பட்டாளமே வந்து நிற்கிறது.. அங்கிருந்து ஒரு பாட்டு.,

கீழ்வானம் - வானத்தைத்தான் சொல்லுகிறாள். கீழ்வானம் என்பது கடைக்கோட்டு வானம், நம் தலையை உயர்த்தி மேலே பார்க்கும் வானம் அல்ல. நமது அகலப்பார்வைக்குள் அகப்பட்ட வானம். கீழ்வானத்தை நாம் கவனிக்கும் நேரங்கள் காலையும் மாலையும்..

வெள்ளென்று - வெள்+என்று - வெள்? வெள்ளை? பிரகாசம்? புலர்வு? அதிகாலையில் வானம் பிரகாசமடையத் துவங்குகிறது.. புலர்வுக்கான அறிகுறி. எருமை சிறுவீடு - எருமையை அடைக்கும் வீடு, கொல்லை என்று சொல்வார்கள். ஆட்டுக்கு மந்தை என்று நினைக்கிறேன். மந்தை எனும் சொல் பொதுச்சொல்லா?

மேய்வான் பரந்தன - எருமைகள் மேய்ந்தன... அவை ஓரிடத்தில் மேயவில்லை.. பரந்து மேய்ந்தன.. எருமை சிறுவீடு மேய்வான் என்ற சொல் கொஞ்சம் குழப்பம் தந்தாலும் கிட்டத்தட்ட இந்த அர்த்தமே சுற்றிச் சுற்றி வருகிறது.. எருமை ஏன் மேய்கிறது? கீழ்வானம் வெள்ளென்று இருக்க... அது தானாக புற்களை மேயச் செல்லுகிறது. காண் - பாரடி.. அந்த எருமைகள் கூட மேய்வதற்குச் சென்றுவிட்டன. நீ கவனி.. வந்து பார்.

மிக்குள்ள பிள்ளைகளும் - மிக்குள்ள - மிஞ்சியுள்ள/எஞ்சியுள்ள/(என்னைத் தவிர) மீதியுள்ள... இந்த அதிகாலை நேரத்தில் உன்னைப் போன்றே பெண்பிள்ளைகள் என்னோடு வந்து நிற்கிறார்கள்.. அவர்களும்,

போவான் போகின்றாரைப் போகாமல்காத்து - போகவேண்டிய சிலரைப் போகவிடாமல் தடுத்து... எங்கே போகவேண்டும்? நாராயணனைத் தொழ நீராடப் போகவேண்டும்.. ஆரம்பம் முதலே ஆண்டாள் அழைப்பு விடுவது அதற்குத்தானே.. பிள்ளைகளே, எழுந்து வாருங்கள், என்னுடன் நிறைய பேர் வந்திருக்கிறார்கள், போகவேண்டிய பல பெண்கள் போகாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.. ஏன்? ஏன்?

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் - உன்னைக் கூவி அழைத்துச் செல்ல வந்து நிற்கிறோம்.. வாடி! வெளியே என்று அழைக்கிறாள்.. அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் பெண்கள் தனியே ஓரிடத்திற்குச் செல்லுவதைக் காட்டிலும் ஒரு கும்பலாகச் செல்லுவதையே விரும்புகிறார்கள். இந்தப் பழக்கம் ஆண்டாள் காலத்திற்கு முன்னம் இருந்தே இருந்திருக்கவேண்டும். நீயும் வா, ஒன்றாகச் செல்லுவோம் என்று வாசலில் நின்று அழைக்கிறாள்..

கோதுகலம் உடைய பாவாய்! - கோதும்+கலம் - கோதுகலம் கூந்தலில் சிக்கெடுக்க பயன்படுத்தப்படும் ஒருவகை கலம். இக்காலத்திலும்
அதன் பயன்பாடு உண்டு.. கிராமங்களில் மயிருகோதி என்று சொல்லுவார்கள். இன்னொன்றும் உண்டு.. அது சீப்பு.. கூந்தல் கோத வைத்திருக்கும் கலனே, சீப்பு.// அதை வைத்திருக்கும் பாவையே!! எழுந்திராய் - எழுந்திடு.. பாடிப் பறை கொண்டு - பாடிக்கொண்டு... பறை எனும் பதம் வேண்டுதல் என்றும் பொருந்தும்.. பறை ஒரு வாத்தியமும் ஆகும்.. இருவகையிலும் இப்பதத்தினைப் பொருத்தலாம்.

மாவாய் பிளந்தானை - மா+வாய் ; மா என்பது பறவை.. பறவை அரக்கனாக கம்சன் அனுப்பிய அசுரனின் வாயைப் பிளந்தவன் கிருஷ்ணன்.. அப்படி வதம் செய்தவனை, மாவாயிற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு.. மா+வாய் = மா என்றால் பெரிய என்று அர்த்தம்... பெரிய வாய் பிளந்து தன் அன்னைக்கு உலகம் காண்பித்தவனை என்று கூட சொல்லலாம். இவ்விரண்டில் எதையும் எடுத்துக் கொள்வது வாசகர் எண்ணம்.. ஆனால் ஆண்டாள் எதைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்?

மல்லரை மாட்டிய - மல்லர்கள்.. மல்யுத்தம் செய்பவர்கள். கிருஷ்ணன் மல்யுத்தம் செய்து கம்சனை அழித்தான்.. ஆனால் ஆண்டாள் வெகு தெளிவாக கம்சனைக் குறிப்பிடவில்லை.. ஆக, கிருஷ்ணன் மல்யுத்த வீரர்களை மட்டும்.. மாட்டிய - கொன்ற.. மாட்டுதல் - வீரத்தோடு கொல்லுதல்.. மாட்டல் - சிக்குதல். சிக்கிக் கொல்லுதல்..

ஆண்டாள் இரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறாள். முதலாவது பறவை அரக்கனை வதம் செய்தல், இரண்டாவது மல்லர்களை வதம் செய்தல்.. மாவாய் என்று வாய்திறந்து உலகு காண்பிக்கும் நிகழ்வும் பொருந்தினாலும், வதம் எனும் சொல்லால் முன்னமிரண்டும் ஒன்றாகின்றன. ஆண்டாள் வதம் செய்யும் நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிடுகிறாள்.

தேவாதி தேவனை - தேவர்களுக்கெல்லாம் தேவன்... பரந்தாமன்.. அவனே முதல் என்பதும், எல்லாருக்கும் முதல் என்பதும் ஆண்டாள் அடிக்கடி குறிப்பிடும் குறிப்புகள். சென்று நாம் சேவித்தால் - நாராயணனை நாம் போய் வணங்கினால்????

ஆவாவென்று ஆராய்ந்து அருள்- ஆ+வா+என்று - இங்கேயும் சில அர்த்தங்கள்... ஆ என்று வியந்து அருளினான் என்று சொல்லுகிறார்கள்.. இறைவன் எதற்கு ஆ என்று வாய்பிளந்து வியக்க வேண்டும்? அருளேலோர் எனும் சொல்.. அருள்+ஏலோர்... அதாவது ஆண்டவன் அருள்வான் தெரிந்துகொள் பெண்ணே என்று ஆண்டாள் முடிக்க, ஆராய்ந்தருள்வான் என்று விளக்கியிருக்கிறாள்.. ஆக, ஆராய்பவனுக்கு ஆ என்று விளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆ = யா , அதாவது யாசித்தல்.. பெறுதல்... வா - பெறுதலுக்கென வா என்று.. ஆர்+ஆய்ந்து.. ஆர் என்றால் நிறைந்த எனும் சொல்லுண்டு (ஏர்+ஆர்ந்த கண்ணி) ஆய்ந்து... ஆராய்ந்து... எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்..

அருள்... அருள்க.. ஏலோர் எம்பாவாய் - சொல்லுவது கேட்க பெண்களே..

கொஞ்சம் சுற்றி வளைத்தாலும் முழுப்பொருளில் எல்லாம் விளங்கிவிடும்..

கீழ்வானம் வெண்மையடையப் போகிறது, பிரகாசிக்கப் போகிறது.. கொல்லையில் அடைபட்டிருந்த எருமைகள் புற்களை மேய்கின்றன.. பாரடிப் பெண்ணே!! எம்மோடு வந்திருக்கும் பெண்பிள்ளைகளும், நீராடித் தொழச் செல்லும் பெண்களையும் போகாமல் தடுத்து, உனக்காக காத்து நிற்கிறோம்.. நீ கோதுகலத்தை வைத்துக் கொண்டு இருக்கிறாய்.. எழுந்திடு பெண்ணே, நாம் ஒன்றாக நினைந்து, வேண்டுதல் பெற, பறவை அரக்கனின் வாய் பிளந்தவனை, மல்யுத்த வீரர்களைக் கொன்று குவித்தவனை, தேவர்களுக்கெல்லாம் தேவர் ஆனவனை சேவிப்போம்... பெற்றுக்கொள்ள வா என்று ஆய்ந்து அருள்வான் இறைவன், மனதிற்கொள்க பெண்களே!


என் கருத்து :

அதிகாலையில் ஆண்டாள் கும்பல் சேர்க்கிறாள். இறைவனைத் தொழ, ஒருவளையும் விட்டு வைப்பதில்லை. உன் ஒருத்திக்காக நான் காத்திருக்கிறோம் என்று அழைக்கும் பொழுது எந்தப் பெண்ணும் வரத்தயங்கமாட்டாள். ஆண்டாளின் பாடல்களை கவனிக்கும் பொழுது அவள் வீடு வீடாகச் சென்று பாடியிருப்பாளோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் இயற்கை நிகழ்வுகளையோ, இயற்கை காரணிகளையோ, அஃறிணைகளையோ அவள் அழைக்கும் பொழுது அவள் கவிதையில் இயற்கை எவ்வளவு தூரத்தில் ஒன்றி இருக்கிறது என்பது புலனாகிறது.

எருமை, சிறுவீடு மேய்வான் என்பது சற்றே படிக்கப் பொருளெடுக்க கடினமாக இருக்கிறது.. மேலோட்டமாக இதுதான் அர்த்தம் என்று சொல்லிவிட்டாலும்... ஏதோ வார்த்தைகளை வைத்து ஒட்ட வைத்ததைப் போன்று இருக்கிறது. இது என் கருத்து மட்டுமே.

கோதுகலம் என்பதற்கு குதூகலம் என்று கூட பொருள் எடுக்கிறார்கள். குதூகலம் எப்பொழுது வரும்? ஏதாவது ஒரு நிகழ்ச்சி அதீத மகிழ்வை ஏற்படுத்தும் பொழுது வரும். ஆனால் இந்த பெண்களுக்கு அப்படி ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பிறகெப்படி குதூகலம் ஏற்படும்? கோதுகலம் மட்டும் எப்படி பொருந்தும் என்பவர்களுக்கு... பெரும்பாலும் பெண்கள் எழுந்ததும் கண்ணாடி முன் நிற்பார்கள்... அப்பொழுது தூங்கியெழுந்ததால் கலைந்திருக்கும் கூந்தலைச் சரிபடுத்த சீப்பை உபயோகிப்பார்கள். அந்த நேரத்தில் ஆண்டாள் வந்து சீப்பு எல்லாம் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாயே அடிப் பெண்ணே, எழுந்து வா இறைவனைத் தொழுது அவனருள் பெறச் செல்லுவோம் என்கிறாள்.

ஆவாவென்று - ஆவா என்பதே ஒருவகை வியப்புக்குறியீடுதான்.. ஆஹா காரம் சொல்லுகிறோம் அல்லவா... இறைவன் இத்தனை பெண்கள் நம்மை சேவிக்க வந்திருக்கிறார்களே, ஆஹா என்ன இனிமை என்று ஆராய்ந்து அருள் தருகிறானாம்.. எது எப்படியென்றாலும் ஆவாவென்று என்பதற்கு பலவித அர்த்தங்கள் உண்டு.

ஆண்டாள் ஆறாம் பாடலில், பூதனையையும், சக்கர அரக்கனான சகடாசுவரனையும் வதம் செய்த கிருஷ்ணனைக் குறிப்பிடுகிறாள் பின் இப்பாடலில் பறவை அரக்கனையும் (பகாசுரன்) மல்லர்களையும் வதம் செய்வதைக் குறிப்பிடுகிறாள். கிருஷ்ணனின் அவதார நோக்கங்களை ஒவ்வொன்றாக அம்மணி குறிப்பிடுகிறாள்..

எப்படியோ.. சென்னைப் பயணத்தில் விட்ட பாகங்களை இன்று நிறைத்துவிட்டேன்... இனி நாளை கவனிப்போம்..

ஆதவா
23-12-2008, 11:31 AM
ஆதவா உன்னை பார்த்த பின் உன் எழுத்துக்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது, நீயாஆஆஆஆஆஆஆஆ இதை யெல்லாம் எழுதுகிறாய் என்று, ஆச்சர்யமான பாராட்டுகள்

நன்றி மூர்த்தி. உருவத்தில் எதுவும் இல்லை... நீ இன்னமும் என் பழைய கவிதைகள் படித்து மனம் குழம்பவில்லை என்று நினைக்கிறேன்..:aetsch013:

அன்புடன்
ஆதவன்.

நிரன்
23-12-2008, 12:21 PM
ஆதவா உன்னை பார்த்த பின் உன் எழுத்துக்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது, நீயாஆஆஆஆஆஆஆஆ இதை யெல்லாம் எழுதுகிறாய் என்று, ஆச்சர்யமான பாராட்டுகள்


மூா்த்தி அண்ணா ஆதவா ஞனப்பழம் ஆகிட்டார் நாங்களும் அப்பழத்தை இடைவிடாது சுவைக்க ஆரம்பித்து விட்டோம்

பழம் ரொம்ப டேஸ்டா இருக்கு;):icon_b:

ஆதவா
24-12-2008, 03:14 AM
திருப்பாவை 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


ஒவ்வொருவராக எழுப்பியாயிற்று... ஆனால் இன்னும் சிலர் உறங்குகிறார்கள். எப்படி எழுப்ப? அவர்களுடைய அப்பாவையும் அம்மாவையும் தான் இனி துணைக்கழைக்க வேண்டும்.. பொறுத்தது போதும் பொங்கியெழு என்று ஆண்டாள் மாமியிடம் முறையிடுகிறாள்.. எப்படி?

தூமணி மாடத்து - தூ+மணி.. தூ எனும் சொல், தூய்மை எனும் பதம் தரும். தூய்மையான மணி.. அதென்ன மணி? அணி.. நகைகள். மணிமாலை என்பது என்ன? ஜுவல்ஸ் தானே? தூய்மையான மணிகள் நிறைந்த மாடம்.. மாடம் என்றால் ஹால்.. (மாடத்திலே கன்னி மாடத்திலே என்று தொடங்கும் பாடல்கள் உண்டு) கன்னி மாடம் என்பது கலியாணம் முடிக்காத பெண்கள் நிறைந்திருக்கும் ஒரு பேரறை.... ஹால்.

சுற்றும் - சுற்றுவதல்ல (Spin) சுற்றிலும்... ஒவ்வொரு இடத்திலும், அந்த மாடத்தின் புறத்திலும்... விளக்கெரிய - விளக்கு எரிய.. ஏன் விளக்கு எரிகிறது? சொல்கிறேன். மின்சாரம் ஆண்டாள் காலத்தில் இல்லை என்பது யாவரும் அறிந்த விசயம்.. மின்சாரத்திற்குப் பதிலாக, இருளைப் போக்கும் விளக்குகளைத்தான் உபயோகித்திருப்பார்கள். பெரிய வீடுகளில் மாடத்தைச் சுற்றிலும் விளக்குகளை ஏற்றிவிட்டு, நித்திரைக்குச் செல்லுவார்கள், இரவில் தடுமாறி எங்கும் இடறி விழுந்துவிடக்கூடாது என்பது அவர்களது நோக்கம்.

தூபம் கமழ - தூபம்.. புகை. புகை எங்கிருந்து வளரும்? தீ ஒரு பொருளை எரிக்கும் பொழுது.. விளக்கு எரிந்து, எண்ணெய் தீர்ந்து திரியும் எரிந்துவிட்டது.. புகை கிளம்பிவிட்டது.. முதல்நாள் இரவு அகல் (விளக்கு) முழுவதும் எண்ணெய் ஊற்றி திரியேற்றி விட்டு படுத்திருப்பார்கள், அது கிட்டத்தட்ட காலை வரையிலும் எரிந்துகொண்டிருக்கும்.. கொஞ்சம் பெரிய விளக்குதான்.. இருந்தாலும் எண்ணெய் தீர்ந்துவிட்டால்?? தூபம் கமழும்.. அதாவது பரவும்.. பெரிய வீட்டு மாடத்து விளக்குகள் தூபம் கமழும் முன்னரே அணைக்கப்படும். இல்லையேல் அம்மாடத்துச் சுவர் புகைபட்டு கருப்பாக மாறிவிடும், அல்லது வீடு முழுவதும் புகை கிளம்பி மூச்சுத் திணறல் ஏற்படும். ஆக, பெண்கள், சீக்கிரமே எழுந்து திரியை அணைப்பது அவசியமாகும்..

இன்னும் ஒரு அர்த்தமுண்டு.. தூபம் என்பது புகை.. ஊதுபத்தி கூடத்தான் புகை... கமழும் என்றால் வாசம் உமிழும் என்றர்த்தம்.. ஏற்கனவே விளக்கெரிய என்று ஆண்டாள் சொல்லிவிட்டதால் திரி அணைந்திருக்கிறது என்று சொல்லாமல், தூபம் கமழுகிறது என்கிறாள்.. ஆக, விளக்கும் எரிகிறது, வாசம் மிகுந்த புகையில் வருகிறது...

துயிலணை மேல் - துயில்+அணை.. எவ்வளவு அழகான தமிழ்... நாம் தலையணை என்கிறோம்.. அது தலைக்கு வைக்கும் பஞ்சு.. துயிலணை என்பது பஞ்சு பொதிந்த மென் கட்டில்.. (Bed) கண்வளரும் - முந்தி பொறிவண்டு கண்படுப்ப என்று ஆண்டாள் குறிப்பிட்டிருப்பதை நினைவு படுத்துகிறேன். கண்படுப்ப, கண்வளர... எல்லாமே நித்திரையைக் குறிப்பிடுகிறது.. தூக்கத்தில் இருக்கும் மாமான் மகளே!! மணிக் கதவம் - மணி என்பது ஜுவல் என்று சொல்லியிருந்தேன்.. அவள் நித்திரை அறையில் கூட ஜுவல்ஸ்களால் பதிக்கப்பட்ட கதவுகளாக மிளிருகிறது. தாழ் திறவாய்... பூட்டிய கதவைத் திற அடிப் பெண்ணே! தாழ் என்பது அடைப்பு.. அடைப்பை நீக்கு என்கிறாள் ஆண்டாள்.

மாமீர் அவளை எழுப்பீரோ? - மாமி!! அவளை எழுப்ப மாட்டீர்களோ? எங்களுடன் அனுப்ப மாட்டீர்களோ? மாமியைப் பார்த்துக் கேட்கிறாள் ஆண்டாள்.. கதவுக்கு பின் நின்று அவளை அழைக்கும் ஆண்டாள், மாமியைத் தவிர, வேறு எவரை வேண்டுவது? சீக்கிரம் கதவைத் திறக்கச் சொல்லி அவளை எங்களுடன் அனுப்புங்கள் என்கிறாள்..

உன் மகள்தான் ஊமையோ? - இங்கே எதற்கு ஆண்டாள் ஊமை என்று சொல்லவேண்டும்? தாழ் திறடி என் தோழியே, என்றும் மாமியை விட்டு எழுப்பச் சொல்லியும் அவள் எழும்பவில்லை... இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.. அட, ஒரு பதில் கூட காணோமே! அவள் என்ன ஊமையா? அன்றி செவிடோ? - நான் சொல்வதெல்லாம் கேட்கமுடியாத செவிட்டுப் பெண்ணா?

ஆண்டாளே கோவப்படாதே!!

அனந்தலோ - அனந்தம், அனந்தன், அனந்தல் - மயக்கம்... சோம்பல் அல்லது பெருந்தூக்கம்.. ஸ்ரிவிஷ்ணுவை அனந்தன் என்று சொல்வதுண்டு.. அதாவது துயில் கொள்பவன் என்று அர்த்தம். அனந்தல் எனும் சொல்லில்... மயக்கம் அல்லது சொல்லிக் கேட்காமை என்று பொருளெடுக்கலாம்.. இத்தனை சொல்லியும் ஊமையாக, செவிடாக, பெருந்தூக்கத்தினால் எதுவும் செய்யமுடியாத சோம்பேறியாக இருக்கிறாளோ?

ஏமப் பெருந்துயில் - ஏமம் + பெரிய + துயில் = ஏமம் என்பது இன்பம்.. ஏமுறுதல் - இன்புறுதல்.. பாதுகாவல் என்று பல அர்த்தங்களுண்டு.. இன்பத் தூக்கம் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாளோ? மந்திரப் பட்டாளோ? - யாராவது மந்திரம் செய்துவிட்டார்களோ? இப்படி பேய்த்தூக்கம் தூங்குகிறாளே! இவளுக்கு செய்வினை வைத்துவிட்டார்களோ? கேள்விகளையெல்லாம் மாமியிடம் கேட்கிறாள்... இத்தனை திட்டுக்கள் வாங்கின பின்பு அவள் சும்மாவா இருப்பாள்... எழுந்திருப்பாள்..

மாமாயன் மாதவன் - மா - பெரிய.. மாயன்.. மாயங்கள் செய்யும் மாதவன்.. - பெரும் மாயங்கள் செய்யும் மாதவனான கண்ணனை நீ ஏமாற்றிவிடமுடியுமா? வைகுந்தன் - வைகுந்தத்தில் வாழ்பவன்... என்றென்று - என்று+என்று... இப்படியெல்லாம் சொல்லி...

மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றெல்லாம் சொல்லி, நாமம் பலவும் நவின்று - அவனுடைய பெயர்கள் பல சொல்லி சிறப்புற வாழ்வோம்...

முழுவிளக்கம்

தூய்மை மிகுந்த மாடத்தில் சுற்றிலும் விளக்கெரிய, சில விளக்குகள் அணைந்து புகை மிகுந்து, மெத்தையில் உறங்கும் மாமன் மகளே, நீ பொற்கதவின் தாழைத் திற, மாமி!! அவளை எழுப்ப மாட்டீர்களோ? உங்கள் மகள் நாங்கள் சொல்வதைக் கேட்டு பதில் சொல்லமுடியாத ஊமையோ? அல்லது கேட்கும் திறனற்ற செவிடா? சோம்பேறித்தனம் மிகுந்தவளா? அல்லது பேரின்ப உறக்கத்தை அடைய மந்திரம் செய்துவிட்டார்களா? பெரும் மாயங்கள் செய்யும் மாதவனை, வைகுந்தனை, என்றென்றும் அவனின் நாமங்கள் பல சொல்லி நவில்வோம் பெண்களே!!!

என் கருத்து :

மிக எளிமையான இப்பாடல், சிறு பிள்ளைகள் கூட புரியும் வகையில் ஆண்டாள் அமைத்திருப்பது சிறப்பு.. அவள் எழுப்பப் போவது ஒரு பணக்காரப் பெண்ணை, அது அவள் மாமன் பெண்ணாக இருக்கலாம்.. ஏனெனில் அக்காலத்தில் எல்லாரும் ஒருங்கிணைந்து உறவுப் பெயர் சொல்லி வாழ்ந்தார்கள், இன்றும் அக்ரஹார வீதிகளில் இந்த உறவுமுறையைக் காணலாம். அப்படி ஒருவள், மெத்தையில் துயில்வதால் நன்கு இன்பத்தோடு உறங்குகிறாள்.. ஆண்டாள் காலத்தில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று அதை கவனித்திருக்கிறாள்.

தூமணி மாடம், மணிக்கதவம் போன்ற சொற்கள், செழுமையைக் குறிப்பிடுகின்றன. எளிமை மிகுந்து இருந்தாலும் சொற்களின் ஆழம், செழுமையைக் கண்முன்னே நிறுத்துகிறது. இதற்கு மேல் பொறுப்பதில்லை, இனி மாமியை அழைக்கவேண்டியதுதான் என்று முடிவெடுத்தவளாக மாமீர் என்று விளிக்கிறாள்.

மாமீர் எனும் சொல், மிகுந்த மரியாதை நிறைந்த சொல்லாக இருக்கிறது. மாமி என்று நிறுத்தாமல், மாமீர் என்று சொல்கிறாள். ஆண்டாளின் மரியாதை இதன்மூலம் தெளிவாகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக, ஆண்டாள் கோபப்படுகிறாள், ஊமை, செவிடு, சோம்பேறி என்று சொல்லிக் கொண்டே வந்தவள், இறுதியில் அவளுக்கு என்ன மந்திரம் போட்டு வைத்திருக்கிறார்களா என்று கடிகிறாள்? இதென்ன இப்படி ஒரு பேயுறக்கம்? நான் இதுவரையிலும் கண்டதில்லையே, கொஞ்சம் எடுத்துச் சொல்லி அவளை எழுப்புங்கள் அத்தை என்று முடித்துவிடுகிறாள்.

முன்பு, ஒரு எருமை வீட்டுப் பெண்ணுக்காக அறைகூவல் விடுத்தவள், பின்னர், ஒரு பணக்காரப் பெண்ணிடம் கூவல் விடுக்கிறாள். பேதமின்றி கலப்போம் என்று ஆன்மீகக் கூடலில் உயர்ந்தவளாக இருக்கிறாள். நீ யாராக வேண்டுமென்றாலும் இருந்துவிடு, ஆனால் வைகுந்தன் நாமம் வழிபட, எழுந்து வா என்பதே ஆண்டாளின் பெரிய நோக்கம்..

நாளை சந்திப்போம்...

poornima
24-12-2008, 06:53 AM
நல்ல பதிவு.. பாராட்டுகள் ஆதவன்..

இதே பாடலை சற்று மாற்றி சங்கமம் படத்தின் சரணத்திற்கு முன்னதான வரிகளாக இசையமைப்பாளர் பயன்படுத்திக் கொண்டிருப்பார்.. எளிமையான-பரவலான ஊடகம் என்பதால் இந்த மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் வரிகள் எல்லோரிடமும் போய் பக்தி பரவசமாய் சேர்ந்தது என்றால் அது மிகையில்லை..

ஆண்டாளின் அந்த ஏக்க வரிகள் அவர் எப்படி காதலை வெளிப்படுத்தினாரோ இல்லையோ அதை திரைப்பட நடிகை விந்தியா கொணர்ந்த தருணத்தில் இந்த பாடலின் மொத்த வீரியத்தையும் அப்போது நான் அனுபவித்தேன்.. என்னுடைய விருப்ப பாடல் பட்டியலில் மார்கழித் திங்கள் அல்லவா பாடலும் ஒன்று

மார்கழி மாதத்து தென்னிந்திய தினங்கள் மிக சுகமானவை.. அந்த சுகத்தை இந்த பதிவுகளிலும் அனுபவிக்கிறேன்..பாராட்டுகள்

ஆதவா
25-12-2008, 08:31 AM
திருப்பாவை 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


அடுத்த வீடு... ஆண்டாள் ஒருத்தியைக் கூட விட்டுவைக்க மனமில்லாமல்... அடுத்தவளை எப்படி எழுப்புகிறாள்?

நோற்றுச் சுவர்க்கம் - அதென்ன நோற்றுச் சுவர்க்கம்?? நோற்றல் என்றால் என்ன? கடைபிடித்தல் என்று சொல்வோமா? நோன்பு நோற்றல்.. விரதம் கடைபிடித்தல்.. கடைபிடித்தல் எனும் சொல்லுக்கு என்ன வரையறை? ஒரு செயலை விடாமல் செய்வது.. அதன் நோக்கங்களுக்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை மீறாமல் செய்வது... நோற்றுச் சுவர்க்கம்?? கடைபிடித்து சுவர்க்கம் எய்துவது... எதைக் கடைபிடிக்க? பாவை விரதம்... பாவை விரதம் என்னென்ன என்று கேட்பவருக்கு இரண்டாம் பாடல் வழிகாட்டும்..

புகுகின்ற அம்மனாய்!! இத்தனை விதிகள் விதித்து விரதம் கடைபிடிப்பது எதற்கு? சுவர்க்கம் சென்று நாராயணனைத் தரிசிப்பதற்கே! அடிப் பெண்களே, விரதம் நோற்று சுவர்க்கம் புகுங்களடி...,... அம்மனாய் எனும் சொல் விளிச் சொல்லா? அல்லது ஆய் எனும் உறுபு வைத்து வழங்கப்படும் சொல்லா? ஆராய்வோமே

மாற்றமும் தாராரோ? - ஏதாவது மாற்றம் தரமாட்டியோ? என்ன மாற்றம்? நீ துயில் எழுந்து வருகிறாயா? அல்லது ஏதாவது சொல்லி மழுப்புகிறாயா? ஒன்றும் சொல்லாமல் இந்த நிசப்தத்தையே கடைபிடிக்கிறாயே!! உன் நிலையை நீ மாற்று... ஆராய்வோம் என்றூ சொல்லிவிட்டு அடுத்த வரிக்குத் தாவிவிட்டாயே என்று நொந்துவிடவேண்டாம்... தொடங்கிவிட்டேன்.

அம்மனாய் என்று விளிக்கும் பொழுது, மேற்கூறிய வரிகள் அப்படியே பொருந்தும்.. பெண்களே!! மாற்றம் விரும்புங்கள்.. உங்களை மாற்றிக் கொள்ள விரும்புங்கள்..

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ? - நோன்பு நோற்று சுவர்க்கம் புகுகின்ற பெண்மணியாக (அம்மனாய்) மாற்றம் கொள்ளமாட்டாயோ? அப்படியே சாதாரணப் பெண்ணாக இருந்துவிடுவாயோ?? என்று ஒரு அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம்..

வாசல் திறவாதார்... வாசலைத் திறக்காதவர்கள்.. இதற்கு முந்தைய வரிகளோடு இணைத்துப் படிக்க இவ்வரிகள் முடிவுறும்.. மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?? இத்தனை நேரம் யாரைச் சொல்லிக் கொண்டிருந்தோம்? தூங்கி வழியும் சோம்பேறிப் பெண்களை... வாசல் கதவைத் திறந்து காலைச் சூரியனைக் காண வாராதவர்களை...


நாற்றத் துழாய்முடி - நாற்றம் + துழாய்+முடி.. நாற்றம் என்றால் வாசனை என்று பொருள்... துழாய் - குழைந்த, வாசம் குழைந்த முடி.. (துழாய் என்பதற்கு துளசி என்றும் வழங்குகிறார்கள், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல் (மால்+அலங்கல்), விஷ்ணுபிரியா, போன்றவை துளசியைக் குறிக்கின்றன.. )

துளவே துழாய்எனத் துலங்குமோர் பகுதியும்
திரிவுஎனில் தகுமே

போன்ற பாக்கள், துளசியை துழாய் என்று சரியாக வழங்குகிறார்கள். திருமாலின் தலையில் துளசி கமழ்ந்து கொண்டிருக்குமாம்..
துழாய்முடி நாராயணன்
நம்மால் போற்ற - துளசி முடியானவன் நாராயணன் நம்மாம் போற்றப்பட்டால்..?? பறைதரும் புண்ணியனால் - அவனை வழிபட்டு ஆராதித்து போற்ற அவன் நமக்குப் பறை தருவான்.. அதாவது வேண்டுதலை நிறைவேற்றுவான்... அப்படிப்பட்ட ஒரு புண்ணியனால்..

பண்டொரு நாள் - பண்டைய+ஒருநாள் - நீண்ட நாட்களுக்கு முன்னர்.. பண்டைய காலத்தில்.. பண்டு என்றால் பழைய என்று அர்த்தம். கூற்றத்தின் வாய்வீழ்ந்த - கூற்றம்? குற்றமா? இல்லை.. வதம்.. கூற்றம் என்பது மரணம் அல்லது அடித்துக் கொல்லுதல்.. அல்லது விதியால் வீழுதல்.. கூற்றத்தின் வாயில் வீழ்ந்துவிட்ட.. கும்ப கரணனும், கும்ப கர்ணனைப் பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை... நித்திரைக்கு அரசன் அவன்.. அவனை நித்திரையிலிருந்து எழுப்புவது எத்தனை கடினம்!!! ஆண்டாள் எங்கே தொட்டு எங்கே வருகிறாள் பாருங்கள். கொஞ்சம் குழப்பமாக இருந்தால் இதுவரையில் விளக்கிய வரிகளை ஒருமிக்கிறேன்.

சுவர்க்கம் போகவேண்டிய மாற்றத்தை விரும்பமாட்டீர்களோ தாழ்திறவா பெண்களே!! முடியில் நாற்றம் கமழும் துளசியைக் கொண்ட நாராயணனால், நாம் போற்றி நமக்கு வேண்டியதையெல்லாம் தரும் புண்ணியனால் பழங்காலத்தில் விதியின் வலிமையால் வீழ்ந்த கும்பகர்ணன்,......

தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? - அட, கும்ப கர்ணனே தோற்றுப் போகும் அளவுக்கு தூங்குகிறாயோ? பெருந்துயில் என்றால் பேருறக்கம்.. அளவிடமுடியாத உறக்கம்.. ஆழ்ந்த உறக்கம். அவன் உனக்குத் தந்துவிட்டுப் போனானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! - அனந்தல் என்றால் சோம்பல் என்று முன்பே பார்த்தோம்.. ஆற்ற அனந்தல்... மிகுதியான சோம்பல்.. அருங்கலமே! - அடி அருமைப் பெண்ணே, ஆண்டாள் செல்லமாகச் சொன்னாலும், அருங்கலம் என்பது ஒரு அர்த்தம் தரக்கூடியதுதான்.. அருமை+கலம்... அரும்+கலம்,... கலத்திற்கு பல அர்த்தங்கள் உண்டு... உலோகம் (வெண்கலம்) தட்டு, கலைமிகுந்தது, போன்ற பல அர்த்தங்கள்.. அரும் என்றால்.. அவ்வளவாக கிடைக்க முடியாத (அரிய), அருமையான... போன்றவை... எதை எதோடு பொருத்த?

ஆண்டாள்! நீ எதைப் பாடி வைத்தாய்..??? பல அர்த்தங்கள் விழுகின்றனவே!

தேற்றமாய் - தோற்றம் தெரியும்.. அதென்ன தேற்றம்? சுறுசுறுப்பாக... நல்ல விழிப்பு நிலையில்... அல்லது செய்ய வேண்டிய செயலில் உறுதி.. அதுதான் தேற்றம்... கீழ்காணும் குறளை துணைக்கழைப்போம்.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

அன்பு, அறிவு, உறுதி, ஆசையின்மை ஆகிய நான்குதான் தெளிவுக்கான வழி... இதில் மூன்றாவதான உறுதியே ஆண்டாள் பயன்படுத்தியிருக்கும் தேற்றம்.. தேற்றமாய் வந்து திறவு.. எதைத் திறக்க? கதவை.. அட இன்னமும் உறங்கிக் கொண்டுதான் இருக்கிறாள். கதவைத் திற பெண்ணே! அணிவகுத்து நிற்கிறோம் அல்லவா??

முழு விளக்கம்:


பாவை விரத நோன்பினால் சுவர்க்கம் புகுகின்ற பெண்களைப் போன்று மாற்றம் விரும்பமாட்டாயோ வாசலைத் திறவாத பெண்ணே! துளசிமுடிநாதன் நாராயணனால், நாம் போற்றி நமக்கு வேண்டுதல் தரும் புண்ணியனால் அன்றொருநாள் விதியின் வலிமையில் வதப்பட்ட கும்பகர்ணன்கூட தூக்கத்தில் தோற்று அவனது உறக்கத்தை உனக்குத் தந்துவிட்டானோ? அட சோம்பேறிப் பெண்ணே... என் அருமை கலையரசியே, மனதில் உறுதி பூண்டு, வந்து கதவைத் திற பெண்ணே!!

என் கருத்து :

முந்திய பாவைப்பாடல் எத்தனை எளிதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளமுடிந்ததோ அத்தனை கடினமாக இது அமைந்திருக்கிறது (எனக்கு) ஒருசில வார்த்தைகள் இரு அர்த்தங்களைத் தாங்கி நிற்பதால் இரண்டில் எதை எடுப்பது எதை விடுப்பது என்ற மாயகுழப்பங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும் ஆண்டாளின் சொல்லாளுமையில் எல்லா அர்த்தங்களும் நாராயணனை நோக்கியே!

ஆண்டாள் எங்கு சுற்றி எங்குவந்தாலும் நாராயணன் வாசம் விடுவதில்லை. அவள் மூச்சும் கூட நாராயணன் புகழைப் பாடியதோ என்னவோ? ஆண்டாளின் எண்ணத்தைக் கவனியுங்கள்.. நோன்பு நோற்று சுவர்க்கம் புகவேண்டுமாம்.. ஏன்? போகக்கூடாதா? அவள் மட்டும் செல்வது சுயநலமாகக் கருதினாளோ என்னவோ, மற்றப் பெண்களையும் அழைத்துச் செல்லுகிறாள்? சுவர்க்கம் புகுதல் எதற்காகவாம்? நாராயணன் சுவர்க்கத்தில் அல்லவா இருக்கிறான்.. நரகம்??? ஆண்டாள்! ஏன் நாராயணன் நரகத்தில் இல்லை??

மாற்றமும் தாராரோ? ஆண்டாள் விரும்புவது மாற்றம்.. என்ன மாற்றம்? சுவர்க்கப் புகுதலான மாற்றம். பெண்களை அம்மனாய் என்று விளிக்கிறாள்.. அல்லது புகப்போகும் பெண்களாய் என்று அம்மன் எனும் சொலும் பெண்களைக் குறிப்பதாக எழுதியிருக்கிறாள்.. அம்மன் இன்று தெய்வமாக வணங்கப்படுகிறது.. பெண்கள் எல்லாரும் தெய்வம் என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாளா?

வாசல் திறவாதார், ஆண்டாள் பல பெண்களோடு ஒரு செல்வந்தப் பெண்ணை எழுப்புதல் கண்டோம்.. இம்முறை, வாசலில் நிற்கிறாள். வாசல் என்பது வாயில்.. அதாவது ஒரு இல்லத்தின் நுழைவாயில்.. சென்றமுறை மணிக்கதவைத் திற என்றவள், இம்முறை வாசலைத் திற என்கிறாள்.. வீட்டை விட்டு வெளியே வா என்று அர்த்தம்.. அல்லது அது சிறுவீடாக இருக்கும் பட்சத்தில் அவ்வீட்டின் கதவே, வாசலாக எண்ணப்படும்... அவள் எங்கெங்கெல்லாம் அழைக்கச் சென்றிருக்கிறாள் என்பது இதன்மூலம் புலப்படலாம்.

துழாய் முடி - எவ்வளவு யோசித்தும் கிடைக்காத வார்த்தை.. துழாய் என்றால் தேடு என்று கூட அர்த்தம் இருக்கிறது. (துழா, தேடு, துழாவு(திரிந்த சொல்) ) ஸ்ரிவிஷ்ணுவின் தலைமுடியில் துளசி கமழ்கிறதா அல்லது, குழாவு என்ற பதத்தை ஆண்டாள் உபயோகித்திருக்கிறாளா? நாற்றம் குழைந்த முடிகொண்ட நாராயணன் என்று சொல்கிறாளா?

கும்பகர்ணனை அலேக்காக இழுத்து வந்து இங்கே சேர்க்கிறாள். கும்பகர்ணனைத் தெரியாதார் இலர். ஆறுமாதங்கள் நன்கு அயர்ந்து தூங்குவானாம்.. அவனை எழுப்புதல் ரொம்பவே கடினம்.. மேலும் அவனது உருவம் மிகப்பெரியது. அப்படிப்பட்ட கும்பகர்ணனை தோழியோடு ஒப்பிடுகிறாள்.. உருவத்தால் அல்ல, உறக்கத்தால்.. அவனது உறக்கம் கூட தோற்றுவிடும் போல இருக்கிறதே என்று ஆச்சரியப்படுகிறாள்.

தேற்றம்- மனதில் உறுதியோடு... எந்த உறுதி? நாராயணனைக் காண சுவர்க்கம் செல்லும் உறுதியோடு.... கவிதை எங்கு முடிச்சு போட்டு எங்கு அவிழ்கிறது தெரிகிறதா? சிலர் தேற்றம் என்றால் பிரகாசம் என்கிறார்கள்.. இல்லை... தவறு. நித்திரையில் ஆழ்ந்து கதவைத் திறப்பவள் பிரகாசமாகவா இருப்பாள்?

இளசு
25-12-2008, 10:28 AM
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஆதவா..

தமிழே தனி அழகு..

வெப்பம் குறைந்த, ஓசோன் மிகுந்த மார்கழியும்
பக்தியும் வாசமும் சுத்தமும் நிறைய..
மனங்கவர்ந்தவளும், மாலை சூடியவளும் துணைக்குவர..

ஆதவனின் தீந்தமிழுக்கு கூட்டணிபலம் சேர்ந்தால்?

பேரழகு!

பாவையை வாய்விட்டு வாசித்தால் -
தமிழால் மனம் மணக்கும்.. இளகும்.. வளரும்!

காற்று செய்த காயம் என்னும் உன் பார்வையால்
மார்கழியைப் பார்த்தால் காதலையும் விஞ்சும் உன்னத உணர்வுகள் எழுகின்றன ஆதவா..

ஆண்டாளிடம் பூத்த சொற்பூக்களின் மடல் அவிழ்த்து, அமிழ்ந்து
தேன் துளிகளைத் தேடிதரும் தும்பியாய் நீ..

உன் ரீங்காரத்தில் மயங்கிப் பின்வரும் நான்..

தொடர்க உன் தமிழ்நீராடலை!

( இரு ஆண்டுகளுக்குமுன் நம் இராகவன் அளித்த பாவை விருந்து இங்கே -
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5998 )

Keelai Naadaan
25-12-2008, 12:20 PM
மிகவும் கடினமான பணி ஆதவன்.
உங்களுடைய தமிழ் ஆர்வம் உண்மையில் வியக்க வைக்கிறது.

சிறுவயது முதல் மார்கழி மாதம் மனம் குதூகுலமான மாதமாக இருக்கிறது.
பனியை பொருட்படுத்தாமல் விடியற்காலையில் முக்காடு போட்டுக்கொண்டு தெருவில் கோலம் போடும் பெண்கள்,
சரண கோஷம் சொல்லும் சபரிமலை பக்தர்கள்
கோவில்களில் பாடும் பக்தி பாடல்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
பக்ரீத் பண்டிகை
ஆங்கில புது வருட பிறப்பு
என மார்கழி மாதம் மனம் கவர்ந்த மாதம்

கண்ணணிடம் காதல் கொண்ட ஆண்டாளின் பாடல்களில் மனம் மயங்கியது உண்டு.
ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் தரும் விளக்கங்கள்
ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
நிதானமாய் மீண்டும் படிக்க வேண்டும்

வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்:icon_b::icon_b:

தாமரை
22-11-2012, 10:38 AM
பாவை 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.



கீழ்வானம் - வானத்தைத்தான் சொல்லுகிறாள். கீழ்வானம் என்பது கடைக்கோட்டு வானம், நம் தலையை உயர்த்தி மேலே பார்க்கும் வானம் அல்ல. நமது அகலப்பார்வைக்குள் அகப்பட்ட வானம். கீழ்வானத்தை நாம் கவனிக்கும் நேரங்கள் காலையும் மாலையும்..

வெள்ளென்று - வெள்+என்று - வெள்? வெள்ளை? பிரகாசம்? புலர்வு? அதிகாலையில் வானம் பிரகாசமடையத் துவங்குகிறது.. புலர்வுக்கான அறிகுறி. எருமை சிறுவீடு - எருமையை அடைக்கும் வீடு, கொல்லை என்று சொல்வார்கள். ஆட்டுக்கு மந்தை என்று நினைக்கிறேன். மந்தை எனும் சொல் பொதுச்சொல்லா?

மேய்வான் பரந்தன - எருமைகள் மேய்ந்தன... அவை ஓரிடத்தில் மேயவில்லை.. பரந்து மேய்ந்தன.. எருமை சிறுவீடு மேய்வான் என்ற சொல் கொஞ்சம் குழப்பம் தந்தாலும் கிட்டத்தட்ட இந்த அர்த்தமே சுற்றிச் சுற்றி வருகிறது.. எருமை ஏன் மேய்கிறது? கீழ்வானம் வெள்ளென்று இருக்க... அது தானாக புற்களை மேயச் செல்லுகிறது. காண் - பாரடி.. அந்த எருமைகள் கூட மேய்வதற்குச் சென்றுவிட்டன. நீ கவனி.. வந்து பார்.

மிக்குள்ள பிள்ளைகளும் - மிக்குள்ள - மிஞ்சியுள்ள/எஞ்சியுள்ள/(என்னைத் தவிர) மீதியுள்ள... இந்த அதிகாலை நேரத்தில் உன்னைப் போன்றே பெண்பிள்ளைகள் என்னோடு வந்து நிற்கிறார்கள்.. அவர்களும்,

போவான் போகின்றாரைப் போகாமல்காத்து - போகவேண்டிய சிலரைப் போகவிடாமல் தடுத்து... எங்கே போகவேண்டும்? நாராயணனைத் தொழ நீராடப் போகவேண்டும்.. ஆரம்பம் முதலே ஆண்டாள் அழைப்பு விடுவது அதற்குத்தானே.. பிள்ளைகளே, எழுந்து வாருங்கள், என்னுடன் நிறைய பேர் வந்திருக்கிறார்கள், போகவேண்டிய பல பெண்கள் போகாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள்.. ஏன்? ஏன்?

உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் - உன்னைக் கூவி அழைத்துச் செல்ல வந்து நிற்கிறோம்.. வாடி! வெளியே என்று அழைக்கிறாள்.. அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் பெண்கள் தனியே ஓரிடத்திற்குச் செல்லுவதைக் காட்டிலும் ஒரு கும்பலாகச் செல்லுவதையே விரும்புகிறார்கள். இந்தப் பழக்கம் ஆண்டாள் காலத்திற்கு முன்னம் இருந்தே இருந்திருக்கவேண்டும். நீயும் வா, ஒன்றாகச் செல்லுவோம் என்று வாசலில் நின்று அழைக்கிறாள்..

கோதுகலம் உடைய பாவாய்! - கோதும்+கலம் - கோதுகலம் கூந்தலில் சிக்கெடுக்க பயன்படுத்தப்படும் ஒருவகை கலம். இக்காலத்திலும்
அதன் பயன்பாடு உண்டு.. கிராமங்களில் மயிருகோதி என்று சொல்லுவார்கள். இன்னொன்றும் உண்டு.. அது சீப்பு.. கூந்தல் கோத வைத்திருக்கும் கலனே, சீப்பு.// அதை வைத்திருக்கும் பாவையே!! எழுந்திராய் - எழுந்திடு.. பாடிப் பறை கொண்டு - பாடிக்கொண்டு... பறை எனும் பதம் வேண்டுதல் என்றும் பொருந்தும்.. பறை ஒரு வாத்தியமும் ஆகும்.. இருவகையிலும் இப்பதத்தினைப் பொருத்தலாம்.

மாவாய் பிளந்தானை - மா+வாய் ; மா என்பது பறவை.. பறவை அரக்கனாக கம்சன் அனுப்பிய அசுரனின் வாயைப் பிளந்தவன் கிருஷ்ணன்.. அப்படி வதம் செய்தவனை, மாவாயிற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு.. மா+வாய் = மா என்றால் பெரிய என்று அர்த்தம்... பெரிய வாய் பிளந்து தன் அன்னைக்கு உலகம் காண்பித்தவனை என்று கூட சொல்லலாம். இவ்விரண்டில் எதையும் எடுத்துக் கொள்வது வாசகர் எண்ணம்.. ஆனால் ஆண்டாள் எதைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்?

மல்லரை மாட்டிய - மல்லர்கள்.. மல்யுத்தம் செய்பவர்கள். கிருஷ்ணன் மல்யுத்தம் செய்து கம்சனை அழித்தான்.. ஆனால் ஆண்டாள் வெகு தெளிவாக கம்சனைக் குறிப்பிடவில்லை.. ஆக, கிருஷ்ணன் மல்யுத்த வீரர்களை மட்டும்.. மாட்டிய - கொன்ற.. மாட்டுதல் - வீரத்தோடு கொல்லுதல்.. மாட்டல் - சிக்குதல். சிக்கிக் கொல்லுதல்..

ஆண்டாள் இரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறாள். முதலாவது பறவை அரக்கனை வதம் செய்தல், இரண்டாவது மல்லர்களை வதம் செய்தல்.. மாவாய் என்று வாய்திறந்து உலகு காண்பிக்கும் நிகழ்வும் பொருந்தினாலும், வதம் எனும் சொல்லால் முன்னமிரண்டும் ஒன்றாகின்றன. ஆண்டாள் வதம் செய்யும் நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிடுகிறாள்.

தேவாதி தேவனை - தேவர்களுக்கெல்லாம் தேவன்... பரந்தாமன்.. அவனே முதல் என்பதும், எல்லாருக்கும் முதல் என்பதும் ஆண்டாள் அடிக்கடி குறிப்பிடும் குறிப்புகள். சென்று நாம் சேவித்தால் - நாராயணனை நாம் போய் வணங்கினால்????

ஆவாவென்று ஆராய்ந்து அருள்- ஆ+வா+என்று - இங்கேயும் சில அர்த்தங்கள்... ஆ என்று வியந்து அருளினான் என்று சொல்லுகிறார்கள்.. இறைவன் எதற்கு ஆ என்று வாய்பிளந்து வியக்க வேண்டும்? அருளேலோர் எனும் சொல்.. அருள்+ஏலோர்... அதாவது ஆண்டவன் அருள்வான் தெரிந்துகொள் பெண்ணே என்று ஆண்டாள் முடிக்க, ஆராய்ந்தருள்வான் என்று விளக்கியிருக்கிறாள்.. ஆக, ஆராய்பவனுக்கு ஆ என்று விளிக்க வேண்டிய அவசியமில்லை. ஆ = யா , அதாவது யாசித்தல்.. பெறுதல்... வா - பெறுதலுக்கென வா என்று.. ஆர்+ஆய்ந்து.. ஆர் என்றால் நிறைந்த எனும் சொல்லுண்டு (ஏர்+ஆர்ந்த கண்ணி) ஆய்ந்து... ஆராய்ந்து... எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்..

அருள்... அருள்க.. ஏலோர் எம்பாவாய் - சொல்லுவது கேட்க பெண்களே..

கொஞ்சம் சுற்றி வளைத்தாலும் முழுப்பொருளில் எல்லாம் விளங்கிவிடும்..

கீழ்வானம் வெண்மையடையப் போகிறது, பிரகாசிக்கப் போகிறது.. கொல்லையில் அடைபட்டிருந்த எருமைகள் புற்களை மேய்கின்றன.. பாரடிப் பெண்ணே!! எம்மோடு வந்திருக்கும் பெண்பிள்ளைகளும், நீராடித் தொழச் செல்லும் பெண்களையும் போகாமல் தடுத்து, உனக்காக காத்து நிற்கிறோம்.. நீ கோதுகலத்தை வைத்துக் கொண்டு இருக்கிறாய்.. எழுந்திடு பெண்ணே, நாம் ஒன்றாக நினைந்து, வேண்டுதல் பெற, பறவை அரக்கனின் வாய் பிளந்தவனை, மல்யுத்த வீரர்களைக் கொன்று குவித்தவனை, தேவர்களுக்கெல்லாம் தேவர் ஆனவனை சேவிப்போம்... பெற்றுக்கொள்ள வா என்று ஆய்ந்து அருள்வான் இறைவன், மனதிற்கொள்க பெண்களே!


என் கருத்து :

அதிகாலையில் ஆண்டாள் கும்பல் சேர்க்கிறாள். இறைவனைத் தொழ, ஒருவளையும் விட்டு வைப்பதில்லை. உன் ஒருத்திக்காக நான் காத்திருக்கிறோம் என்று அழைக்கும் பொழுது எந்தப் பெண்ணும் வரத்தயங்கமாட்டாள். ஆண்டாளின் பாடல்களை கவனிக்கும் பொழுது அவள் வீடு வீடாகச் சென்று பாடியிருப்பாளோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் இயற்கை நிகழ்வுகளையோ, இயற்கை காரணிகளையோ, அஃறிணைகளையோ அவள் அழைக்கும் பொழுது அவள் கவிதையில் இயற்கை எவ்வளவு தூரத்தில் ஒன்றி இருக்கிறது என்பது புலனாகிறது.

எருமை, சிறுவீடு மேய்வான் என்பது சற்றே படிக்கப் பொருளெடுக்க கடினமாக இருக்கிறது.. மேலோட்டமாக இதுதான் அர்த்தம் என்று சொல்லிவிட்டாலும்... ஏதோ வார்த்தைகளை வைத்து ஒட்ட வைத்ததைப் போன்று இருக்கிறது. இது என் கருத்து மட்டுமே.

கோதுகலம் என்பதற்கு குதூகலம் என்று கூட பொருள் எடுக்கிறார்கள். குதூகலம் எப்பொழுது வரும்? ஏதாவது ஒரு நிகழ்ச்சி அதீத மகிழ்வை ஏற்படுத்தும் பொழுது வரும். ஆனால் இந்த பெண்களுக்கு அப்படி ஏதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பிறகெப்படி குதூகலம் ஏற்படும்? கோதுகலம் மட்டும் எப்படி பொருந்தும் என்பவர்களுக்கு... பெரும்பாலும் பெண்கள் எழுந்ததும் கண்ணாடி முன் நிற்பார்கள்... அப்பொழுது தூங்கியெழுந்ததால் கலைந்திருக்கும் கூந்தலைச் சரிபடுத்த சீப்பை உபயோகிப்பார்கள். அந்த நேரத்தில் ஆண்டாள் வந்து சீப்பு எல்லாம் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாயே அடிப் பெண்ணே, எழுந்து வா இறைவனைத் தொழுது அவனருள் பெறச் செல்லுவோம் என்கிறாள்.

ஆவாவென்று - ஆவா என்பதே ஒருவகை வியப்புக்குறியீடுதான்.. ஆஹா காரம் சொல்லுகிறோம் அல்லவா... இறைவன் இத்தனை பெண்கள் நம்மை சேவிக்க வந்திருக்கிறார்களே, ஆஹா என்ன இனிமை என்று ஆராய்ந்து அருள் தருகிறானாம்.. எது எப்படியென்றாலும் ஆவாவென்று என்பதற்கு பலவித அர்த்தங்கள் உண்டு.

ஆண்டாள் ஆறாம் பாடலில், பூதனையையும், சக்கர அரக்கனான சகடாசுவரனையும் வதம் செய்த கிருஷ்ணனைக் குறிப்பிடுகிறாள் பின் இப்பாடலில் பறவை அரக்கனையும் (பகாசுரன்) மல்லர்களையும் வதம் செய்வதைக் குறிப்பிடுகிறாள். கிருஷ்ணனின் அவதார நோக்கங்களை ஒவ்வொன்றாக அம்மணி குறிப்பிடுகிறாள்..

எப்படியோ.. சென்னைப் பயணத்தில் விட்ட பாகங்களை இன்று நிறைத்துவிட்டேன்... இனி நாளை கவனிப்போம்..

கீழ்வானம் என்றால் கிழக்கு வானம். கீழைக்காற்று என்றால் கிழக்கிலிருந்து வீசும் காற்று. மேல் நாடுகள், மேலை நாடுகள், மேல்வானம் எல்லாம் மேற்கைக் குறிக்கும். ஜப்பான் மேல்நாடல்ல... :)

மாவாய் பிளந்தானை... மா என்றால் விலங்கு. கேசி என்னும் அசுரன் குதிரையாய் வந்து கிருஷ்ணனை அழிக்க நினைக்க, அதன் வாயைப் பிளந்து கொன்றான் கேசவன்.. கேசியைக் கொன்றதால் கேசவன். கம்சனை அழிக்கப் போகும் முன்னால் பிருந்தாவனத்தில் கடைசியாய் அழித்த அசுரன்.

கிருஷ்ணன் மதுரையில் முதலில் குவலயபீடம் என்னும் பட்டத்து யானையை வீழ்த்தினான். பின்னர் சானூரன், முஷ்டிகன் என்னும் மல்லர்களை வீழ்த்தினான்.. இவர்களையே ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.

ஜானகி
23-11-2012, 12:37 AM
திருப்பாவையில் உங்கள் திறந்த பார்வை கண்டு வியக்கிறேன் !

ஆழ்கடலில் முத்து எடுப்பதுபோல, திருப்பாவையில் மூழ்கினால்...வலம்புரி சங்கே கிடைக்கும்.....தேடுங்கள் !

மார்கழி வந்துகொண்டே இருக்கிறது...திரியை மேலெழுப்பலாமே?.......துயிலெழலாமே....