PDA

View Full Version : நினைவுகள்



ஆதி
09-12-2008, 12:32 PM
நினைவை விதைத்து
நினைவை வளர்க்கும்

நினைவைப் புதைத்து
நினைவை சமாதியாக்கும்..

கண்ணாடி சில்லாய்
மனதை அறுக்கும்
அறுப்பட்ட இதழ்களில்
பனித்துளியாகவும் துளிக்கும்..

வெண்பா போன்று
நினைவுக்கும் இலக்கணம் உண்டு

நேர்முன் எதிர்வரும்..
எதிர்முன் நேர்வரும்..

குறள்பா போல குறுகும் சில நினைவுகள்

பஃறொடை போல நீளும் சில நினைவுகள்..

நிழற் போல
நேரத்திற்கு ஏற்பவும்
சில நினைவுகள்..

வெயில் நேர ஓட்டு வீடாய்
சில நினைவுகள்..

முள்ளைப் போல
நினைவுகளையும்
நினைவால்தான் எடுக்க வேண்டும்..

முள் எடுக்கும் வரை வலிக்கும்
நினைவு எடுத்த பிறகும் வலிக்கும்..

ஆதவா
09-12-2008, 01:05 PM
நினைவுகளைக் கொஞ்சம் நினைக்க வைத்துவிட்டீர்கள்.. இதைப் போன்று டிஸ்க்ரைப் கவிதைகள் நமக்கு சரியாக வருவதில்லை. முதலில் நினைவைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதைவிட, நினைக்கத் தெரியவேண்டும்.. ஓவியனுக்கு நினைவுகள் தான் நிஜம்.. சிலர் நினைவுகளோடு வாழ்கிறார்கள்.. சிலர் நினைவுகளாகவே வாழ்கிறார்கள்.


கண்ணாடி சில்லாய்
மனதை அறுக்கும்
அறுப்பட்ட இதழ்களில்
பனித்துளியாகவும் துளிக்கும்..

நினைவு பிறந்து, நினைவு இறக்கும்... நல்ல ஆரம்பம் ஆதி. நம்மை முட்டி நிற்கும் நினைவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுமாய் அழுத்தி நம் நினைவு நரம்புகளைத் தூண்டும். அவை எப்படிப்பட்டவை என்று புரிவதுமில்லை.. சிலநேரங்களில் அழச்செய்யும், சிலநேரங்களில் புன்னகை தூவும்.


நேர்முன் எதிர்வரும்..
எதிர்முன் நேர்வரும்..

நினைவுகளும் சிலநேரம் உறங்கும். அந்த பொழுதிய வெறுமையை உணரமுடியாமல் மனம் கதறும்... சிலநேரங்கள் நம் கற்பனை விளிம்பைத் தாண்டி வழியும். வழிந்த நினைவுகளை ஏந்தமுடியாமல் மனம் துடிக்கும்... நேரும் எதிருமாய் மாறிவரும்.. பாஸிடிவ் நெகட்டிவாய் குறுக்கிடும்.


வெயில் நேர ஓட்டு வீடாய்
சில நினைவுகள்..

மூளையின் அடுக்குகளிலும் இடுக்குகளில் காய்ந்து நிற்கும் நினைவுகள், வெயிலடித்து எரிக்கும், நிழலடித்து குளிர்விக்கும்...... நினைவுகள் ஒரு மீன் வலை.. சிக்கும் வரைக்கும் மீனுக்குப் பிரச்சனை இல்லை... சிக்கினால்.........

உங்கள் விவரிப்புக்கள் அனைத்தும் அருமை ஆதி. நல்ல தரம்வாய்ந்த இலக்கியம் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. தொடருங்கள்..........

நினைவுகள் பற்றி இக்கவிதைக்கு


4 ஸ்டார்கள்
200 மின்பணம்

நிரன்
09-12-2008, 01:29 PM
முள்ளைப் போல
நினைவுகளையும்
நினைவால்தான் எடுக்க வேண்டும்..

முள் எடுக்கும் வரை வலிக்கும்
நினைவு எடுத்த பிறகும் வலிக்கும்..

நன்றாக இருக்கிறது ஆதி அண்ணா. கடைசி வரியை படிக்கும் பொழுது திருவள்ளுவரின்
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. எனும் குறள்தான் ஞபகம் வருகிறது
இரண்டுமே வலி எனும் ஒரே விடயம்தான். நல்ல நினைவுகள் புதுப்பிக்கப்பட வேண்டியவை. வலியிலும் விழி சிந்தும் கண்ணீரிலும் சுகம் உண்டு.