PDA

View Full Version : பள்ளிப்படை கோவில்

ஆதவா
08-12-2008, 09:01 AM
மேற்கூரை சுமையினைத்
தாங்கமுடியாத மண்டபத்தூணருகே
தூங்கி வழியும் கோட்டான்களின்
நிழலசைவை ரசித்தபடி
வடிந்து கிடந்தது பகல்நிலவு

சிதிலமடைந்த மேற்புறச் சுவர்முட்டும்
காட்டுமரத்தின் கிளையொன்று
ஆகமவிதிகள் எழுதிய இலக்கணத்தை
மாற்றியமைத்துக் கொண்டிருந்தது

கல்லிடுக்குகள் சிதைந்து
தூணிட்ட முத்தம் தவிர்த்து
இணையில்லா இதழ் பிரித்து
யார் மீதும் எப்போதும்
விழத் தயாராக இருந்தது
கோவிலுறுப்புகள்

இருட்டும் சூன்யமும்
ஒன்றையொன்று
முட்டிக் கொண்டிருக்கும்
கருவறையின் வெற்றிடத்தை
பறவைகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்க

யாருக்கோ ரகசியத்தைக்
கசிய வைத்தபடி காத்திருக்கிறது
பள்ளிப்படை கோவில்

ராஜா
08-12-2008, 09:26 AM
பறவைகளின் எச்சங்களையும் ..
ரகசியத்தின் மிச்சங்களையும்
தன்னுள்ளே வைத்திருக்கும் பள்ளிபடைக் கோவில் கவிதை,

இன்னதென்று சொல்லவியலா அமானுஷ்ய உணர்வை மனதுக்குள் தோற்றுவிக்கிறது.

மிரட்டல் கவிதை ஆதவா..!

Keelai Naadaan
08-12-2008, 02:01 PM
பாழடைந்த பள்ளிப்படை கோயிலை கண்முன் காட்டியது கவிதை.

பாரதி
08-12-2008, 03:03 PM
கவிதையின் கருவை விட அதைத்தந்த விதமே என்னை வியக்க வைக்கிறது.

வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும் விதம் அருமை. வடியும் நிலா, இதழ் பிரித்து விழத்தயாராக இருக்கும் கோயில் உறுப்புகள் .... என நன்றாக வந்திருக்கிறது.

காரணம் தெரியாமலே கவர்ந்திழுக்கும் - கவிதை என்பதற்கு இக்கவிதையும் ஓர் உதாரணம்.

இதயங்கனிந்த பாராட்டு ஆதவா.

சாம்பவி
08-12-2008, 11:17 PM
முதலில்...
பள்ளிப்படை கோவிலைப்
பாடியதற்கு பிடியுங்கள்....
பாராட்டுக்களை... !!!!!

மேற்கூரை சுமையினைத்
தாங்கமுடியாத மண்டபத்தூணருகே
தூங்கி வழியும் கோட்டான்களின்
நிழலசைவை ரசித்தபடி
வடிந்து கிடந்தது நிலவு

கோட்டான்கள் தூங்கி வழியும் போது
நிலவெங்கே வந்தது நண்பரே... ???
பகலில் ஒரு நிலவா... ?
காதலி நினைப்போ...
கவனம் தப்புதே....!!!!!
கவிதைக்குப் பொய்யழகாகலாம்...
பொய்யே அழகாகாதில்லையோ....!!!

மேற்புறச் சுவர்முட்டும்
காட்டுமரத்தின் கிளையொன்று
சிதிலமடைந்த ஆகமவிதிகள்
எழுதிய இலக்கணத்தை
மாற்றியமைத்துக் கொண்டிருந்தது

சொல்ல வரும் கருத்து...
அபாரம் ஆதவன்.....
அதற்கும் பாராட்டத் தோன்றுகிறது...
ஆனால்.....
கவிதை அதைச் சொல்லாமல்
போனதன் சோகம்
முகத்தில் அறைகிறது... !!!....

சிதிலமடைந்தது எது.,.. ?
மேற்புறச் சுவரா...
காட்டு மரமா...
அதன் முட்டிய கிளையா...
ஆகம விதிகளா... ?
இல்லை அது எழுதிய
இலக்கணமா... ?

இல்லை...

இது எதுவுமேயில்லை...
இன்னும் வேறே ஏதோ ஒன்று...
அது என்ன...
எங்கே அது....
கவிதை அதைச் சொல்ல மறந்துவிட்டதோ...
கவிஞர் மறந்துவிட்டாரோ....
விளக்கம் வேண்டி.........!!!

கல்லிடுக்குகள் சிதைந்து
தூணிட்ட முத்தம் தவிர்த்து
இணையில்லா இதழ் பிரித்து
யார் மீதும் எப்போதும்
விழத் தயாராக இருந்தது
கோவிலுருப்புக்கள்

உறுப்புகள்... ?
கோவில் உறுப்புகள்... ??

நிஜமாகவே...
இக்கவிதையைப்
ப்ரசவித்தது தாங்கள் தானா..... ?

கற்பனை ச்ண்டித்தனம்
பண்ணியதோ....
வார்த்தைகள்
வறண்டிருக்கிறதே ஆதவன்.... !@

இருட்டுகள் ஒன்றையொன்று
முட்டிக் கொண்டிருக்கும்
கருவறையின் வெற்றிடத்தை
பறவைகளின் புழுக்கைகள்
நிரப்பிக் கொண்டிருக்க
[/COLOR]

அதென்ன பன்மை...
இருட்டுகள்... !!
இருட்டு......
ரொம்பவே இருட்டா இருந்தா...
கும்மிருட்டு...
மையிருட்டு....,

"இருட்டுகள்"
இது உங்களுக்கே
கொஞ்சம் ஓவராத் தெரியலையா...... !!!!

யாருக்கோ ரகசியத்தைக்
கசிய வைத்தபடி காத்திருக்கிறது
பள்ளிப்படை கோவில்

கருவறை வெற்றிடமா இருப்பதைச்
சொல்லி இருக்கிறீர்கள்...
ஆகவே
வீர மரணத்துடன் கூடிய*
வேறு சில ரகசியத்தையும்
கசிய வைத்திருக்கலாம்...
ஆனால்...
காத்திருக்கிறதா....????
எதற்கு... யாருக்கு... ??

பள்ளிப்படை கோவில்கள்...
வீரத்தைப் பறைச்சாற்றுபவை... நண்பரே
பயத்தை ஊட்டுபவையல்ல....

அதையும் மீறி..
காத்திருக்குமேயானால்...
அதன்
பிண்ணனிக் கதை விளக்கத்திற்காக*
( பொன்னியின் சொல்வனா.... ;) )
நாங்களும்
காத்திருக்கிறோம்.... !!!!

களைகளைக் களைந்து
நல்லதொரு
கவிதையை மீட்டுத் தருவீர்கள்
என்ற நம்பிக்கையுடன்..........!!!!

ஆதவா
09-12-2008, 03:22 AM
பறவைகளின் எச்சங்களையும் ..
ரகசியத்தின் மிச்சங்களையும்
தன்னுள்ளே வைத்திருக்கும் பள்ளிபடைக் கோவில் கவிதை,

இன்னதென்று சொல்லவியலா அமானுஷ்ய உணர்வை மனதுக்குள் தோற்றுவிக்கிறது.

மிரட்டல் கவிதை ஆதவா..!

மிக்க நன்றி ராஜா அண்ணா... அந்த உணர்வே என் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது...

அன்புடன்
ஆதவன்

பாழடைந்த பள்ளிப்படை கோயிலை கண்முன் காட்டியது கவிதை.

மிக்க நன்றி கீழைநாடான்..

கவிதையின் கருவை விட அதைத்தந்த விதமே என்னை வியக்க வைக்கிறது.

வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும் விதம் அருமை. வடியும் நிலா, இதழ் பிரித்து விழத்தயாராக இருக்கும் கோயில் உறுப்புகள் .... என நன்றாக வந்திருக்கிறது.

காரணம் தெரியாமலே கவர்ந்திழுக்கும் - கவிதை என்பதற்கு இக்கவிதையும் ஓர் உதாரணம்.

இதயங்கனிந்த பாராட்டு ஆதவா.

மிக்க நன்றி அண்ணா... நேரடியாகவே பாராட்டியபோது எனக்குள்ளே ஒரு சபாஷையும் போட்டுக் கொண்டேன்.

ஆதவா
09-12-2008, 03:40 AM
முதலில்...
பள்ளிப்படை கோவிலைப்
பாடியதற்கு பிடியுங்கள்....
பாராட்டுக்களை... !!!!!

களைகளைக் களைந்து
நல்லதொரு
கவிதையை மீட்டுத் தருவீர்கள்
என்ற நம்பிக்கையுடன்..........!!!!

ரசித்து ருசித்து உண்ட சாம்பவி அவர்களுக்கு மிகுந்த நன்றி..

கவனம் திருப்பிய பிழைகளுக்கு மிக்க நன்றி....

மாற்றவேண்டியவை :

வடிந்து கிடந்த நிலவை, சூரியனாக மாற்றிவிடுகிறேன்.... ஏனெனில் அதற்கு மாற்று கருத்தே இல்லை.., கோவிலுருப்புக்கள் = கோவிலுறுப்புகள் ஆக மாற்றிவிடுகிறேன்..

சிதிலமடைந்த மேற்புறச் சுவர்முட்டும் என்று எழுதியிருக்க வேண்டும்... தவறை உணருகிறேன்.. அல்லது சிதிலமடைந்த என்ற வார்த்தையைத் தூக்கியெறியவேண்டும்..

இருட்டுகள் என்று எழுதியபோதே பாரதி அண்ணா சொன்னார்.. அது சந்தேகமான வார்த்தை என்று.... எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. அதையும் தகுந்த வார்த்தைக்கு மாற்றிவிடுகிறேன்.

பள்ளிப்படை கோவில்கள் வீரமரணத்திற்காகக் கட்டப்படுபவை... எனக்கு பொன்னியின் செல்வனில் தான் அதன் முதல் பரிச்சயம்.. அதில் சொல்லப்பட்டிருக்கும் கும்மிருட்டும் காடும் தான் அக்கோவில்களுக்கான கற்பனை உலகம்... தனியே செல்லும் எவருக்கும் எச்சலனமும் அச்சம்தான்... ஆனால் நான் சொல்லவந்தது அச்சமோ வீரமோ அல்ல...

யாருக்கோ என்பது யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நீங்களாகவும் இருக்கலாம்...... யாரும் தொடாத பள்ளிப்படைக் கோவில், ஆராய்வாளன் தொட்டபின் ரகசியத்தைக் கசியவிடுகிறது... அந்த "யார்" யாரென்று யாருக்கும் தெரிவதில்லை...

பெரும்பாலான பள்ளிப்படைக் கோவில்களில் கருவறையில் லிங்கங்களை வைத்து அதைக் கோவில்களாக மாற்றிவிடுவதுண்டு.. ஆக, அது பள்ளிப்படையாக இருப்பதில்லை.

மிக்க நன்றி சாம்பவி... இத்தனை பிழைகளோடு எழுதியிருக்கிறேனா எனும்போது வெட்கப்படுகிறேன்.

அன்புடன்
ஆதவன்.

சிவா.ஜி
09-12-2008, 05:03 AM
கவிதையைப் படித்ததும் பிழைகாண முடியாமல் ரசிக்கத்தான் முடிந்தது என்பது உண்மை. சிதிலமடைந்த பள்ளிப்படைக் கோவிலை வருத்தத்துடன் தரிசிக்க வைத்த காட்சிப்பா....பிரமாதம்.

பின்னால் வந்த சாம்பவியின் நீண்ட பின்னூட்டமும், அதன் ஏற்புரையாக வந்த ஆதவாவின் பின்னூட்டமும் நம் மன்றத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.

பாராட்டுக்கள் ஆதவா....கவிதைக்கும், பிழையேற்ற பெருந்தன்மைக்கும்....

aren
09-12-2008, 07:51 AM
ஆதவா அபாரம். சாம்பவியின் விமர்சனம் சுடச்சுட. வாவ்!!!

நம்ம எழுதிறதை யாரும் படிப்பதேயில்லை. அதுவும் சாம்பவி அவர்கள் இப்படி பிரித்து பிரித்து எடுத்து, பல விஷயங்கள் எனக்குப் புரிந்தது.

ஆதவா
09-12-2008, 12:11 PM
கவிதையைப் படித்ததும் பிழைகாண முடியாமல் ரசிக்கத்தான் முடிந்தது என்பது உண்மை. சிதிலமடைந்த பள்ளிப்படைக் கோவிலை வருத்தத்துடன் தரிசிக்க வைத்த காட்சிப்பா....பிரமாதம்.

பின்னால் வந்த சாம்பவியின் நீண்ட பின்னூட்டமும், அதன் ஏற்புரையாக வந்த ஆதவாவின் பின்னூட்டமும் நம் மன்றத்தின் பெருமையை பறைசாற்றுகிறது.

பாராட்டுக்கள் ஆதவா....கவிதைக்கும், பிழையேற்ற பெருந்தன்மைக்கும்....

மிக்க நன்றி சிவா. அண்ணா... உங்கள் பாராட்டு மழையில் ஜலதோஷம் இல்லாமல் நனைகிறேன் :)

ஆதவா அபாரம். சாம்பவியின் விமர்சனம் சுடச்சுட. வாவ்!!!

நம்ம எழுதிறதை யாரும் படிப்பதேயில்லை. அதுவும் சாம்பவி அவர்கள் இப்படி பிரித்து பிரித்து எடுத்து, பல விஷயங்கள் எனக்குப் புரிந்தது.

மிக்க நன்றி ஆரென் அண்ணா. என் பக்கம் உங்கள் வருகை, கோடைகாலத்து ஜில் மழையைப் போன்று சுகமாக இருக்கிறது.

இளசு
12-12-2008, 05:11 AM
பாரதியை உள்வாங்கியதால்
ஆதவனுக்கு, சொல்புதிது -புதிதன்று..

கல்கியின் கதைவாசித்து வந்த பிம்பத்தை
மனஓவியமாக்கிய தூரிகை எழுத்துக்கு வந்தனம் ஆதவா..

சாம்பவியின் உளிபட்டு மெருகேறும் உன் படைப்பு - கற்றளி..
என் போன்ற மண்பாண்ட வனைவோருக்கு இத்திரி ஒரு மனப் -பாடம்!

சிலிர்க்கிறேன் இந்த இரு உயர்ந்த உள்ளங்களை எண்ணி!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-12-2008, 11:22 AM
அபாரம் ஆதவா. கரு மிக உச்சிதம். அதற்கான உங்கள் வார்த்தைக் கையாடல்கள் கனக் கச்சிதம். படித்த உடனேயே சட்டென்று பிடி படி வில்லை. ஆனாலும் அதைப் படிக்கும் பொழுதே ஒரு ஆனந்தம் கூடியது.அது விளங்குகையில் இன்னும் பல ஆனந்தங்கள். பாராட்டுக்கள் ஆதவா.

ஆதவா
12-12-2008, 02:21 PM
பாரதியை உள்வாங்கியதால்
ஆதவனுக்கு, சொல்புதிது -புதிதன்று..

கல்கியின் கதைவாசித்து வந்த பிம்பத்தை
மனஓவியமாக்கிய தூரிகை எழுத்துக்கு வந்தனம் ஆதவா..

சாம்பவியின் உளிபட்டு மெருகேறும் உன் படைப்பு - கற்றளி..
என் போன்ற மண்பாண்ட வனைவோருக்கு இத்திரி ஒரு மனப் -பாடம்!

சிலிர்க்கிறேன் இந்த இரு உயர்ந்த உள்ளங்களை எண்ணி!

நீண்ட நாட்கள் கழித்து என் மனப் பக்கத்தில் முத்தமிட்டிருக்கும் உங்களை வரவேற்போடு நன்றி நவிழ்கிறேன்..... யாரோடும் ஒட்டும் ஒட்டுண்ணியான எனக்கு பாதிப்புக்கள் இருப்பது சாத்தியமே,,,, நன்றி அண்ணா.

ஆதவா
12-12-2008, 02:24 PM
அபாரம் ஆதவா. கரு மிக உச்சிதம். அதற்கான உங்கள் வார்த்தைக் கையாடல்கள் கனக் கச்சிதம். படித்த உடனேயே சட்டென்று பிடி படி வில்லை. ஆனாலும் அதைப் படிக்கும் பொழுதே ஒரு ஆனந்தம் கூடியது.அது விளங்குகையில் இன்னும் பல ஆனந்தங்கள். பாராட்டுக்கள் ஆதவா.

மிக்க நன்றி ஜுனைத்... நேரம் கிடைக்கும் பொழுது மன்றம் அடிக்கடி வாருங்கள்..