PDA

View Full Version : அக்காலக் காலைப் பொழுதுகள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
05-12-2008, 04:05 PM
ஆயிரத்தெட்டு மதுக் குப்பிகள் சேர்ந்து
பிணைந்து கூடிக் கலந்த போதையை
இரண்டு கண்களில் இறுக்கித் திணித்து
கை கொட்டிச் சிரிக்கும் காலைப் பொழுதுகள்
சோம்பலானது தூங்கியெழுந்தவன் போலவே
இரவில் எட்டி இழுத்த போர்வையை
இறக்க ஆரம்பித்திருப்பான் சூரியன்
பாதியுறக்கம் இடறிய காட்டத்தால்
வெளித்துச் சிவந்திருக்கும் கண்களோடு
இறங்கிய கொண்டை ஏற்றி நிறுத்தி
நெட்டி முறித்த சேவல்கள்
துவக்கியிருக்கும் தங்கள் கூவல்களை
பூஜ்யம் ஒன்றாகி
ஒன்று ஐந்தாகி
ஐந்து பத்தாகி
சிறுந்தூறல்கள் வலுத்த பெரு மழையாய்
தெருவில் பெருகிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்
கறுமையடர்ந்த இல்லத்தறைகளை
சாத்தப்பட்ட ஜன்னல் பொந்துகளினூடே
வெள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள்
என்னைத் தவிர எல்லாம் எழுந்ததாய்
கால்மாட்டிலமர்ந்து கெஞ்சுமம்மாவை
பொய்யளாக்கும்
அடுத்துறங்கும் அக்காளை எழுப்பும்
அப்பாவிற்கான கூப்பாடுகள்
ஐயா ராசா செல்லம்
கோப்பையில் வழியும் தேநீரோடு
அவளுதடுகளில் வழியும் வார்த்தைகள்
எத்தனைக் காலைகள் கண்டும்
இதமளிக்கவில்லை எக்காலைகளும்
அக்காலைகளைப் போல்.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

ஆதவா
08-12-2008, 10:49 AM
ஜுனைத்,.. உங்களை ரொம்பவே மிஸ் பண்ணியாச்சு.. காணாமல் போனவர் பட்டியலில் இப்பொழுது நீங்களும் இருக்கிறீர்கள்... :(

அந்தக் காலைப் பொழுதின் விவரிப்பு வெகு பிரமாதம். பிறப்பும் இறப்பும் மயக்கமானவை.. அது ஆதவனில் ஆரம்பித்து, ஆதாம் வரையிலும். சூரியக்கதிர்கள் தழுவும் பொழுது அந்த வெட்கத்தில் மயங்கிக் கிடக்கும் பூமிப்பந்தின் ஒருகாலைப் பொழுதை அழகாக விவரித்து விட்டீர்கள்.

கதிர்களால் முத்தமிட்டு காமக்கிடங்கைத் திறந்துவிட்டதை ஒருபக்கம் அறியக்கூடாதென்பதாலோ சூரியன் போர்த்துக்கிறான் போர்வை.. அதை காட்சி விளக்கத்தில் அதகளப்படுத்தியிருக்கிறீர்கள். சேவல்களின் பாடல்கள் இப்படித்தான்... (சில)பெண்கள் நொடிக்கொருமுறை சரிசெய்யும் முக அலங்காரம்போல கொண்டையை சரிசெய்து கூவும் கோழிகளின் ராகங்களும், அடுத்தாற்போல, கூட்டம் பெருகுதலை பூஜ்ஜியம் தொடங்கி பெருமழையைப் போன்றும் என்று சொன்னதும் கவிதையின் அடுத்தடுத்த சிக்ஸர்கள். தீண்டிய கதிர் சிலிர்த்து முகம் வெளிரும் வீட்டுச் சுவர்களைத்தான் எப்படி வருணீக்கிறீர்கள்!!!!

நேற்று பாரதி அண்ணாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.. பழைய காலங்களைப் போன்று இப்பொழுதெல்லாம் இருப்பதில்லை என்று.. ஆனால் உண்மை என்ன... அவ்வப்பொழுதுகளை நாம் உணர்ந்து கொள்ளவில்லை என்றார்... ஒவ்வொரு நொடிகளும் நம்மை விட்டு நீங்கும்பொழுது நீங்கிய நொடிகளை எண்ணிக் கொண்டிருப்போம்.. அக்காலைப் பொழுதுகளை நீங்களாவது அனுபவித்திருக்கிறீர்களே!!! :)

முட்டையை உடைத்து கோழிக்குஞ்சு வெளியே வருவதைப் போல, பூமியில் மெல்ல இருளை உடைத்து காலைக்குஞ்சாக வெளியே வரும் சூரியனின் பிறப்பை இதுவரையிலும் அருகே நின்று பார்த்தது ரொம்பவே குறைவு.... :(

கவிதையில் பத்தி பிரியுங்கள்... முதல்முறை படிக்கும்பொழுது இடையில் சட்டெனப் புரியாமல் இருந்தது..

அடக்கி எழுதப்பட்ட வார்த்தைகள், அதில் ஆழப்புதைந்திருக்கும் வருணிப்புகள், மிகச்சாதாரணக் கருவையும் உயரத்தில் ஏற்றி வைத்திருக்கும் கவிதையின் கட்டுக்கோப்பு என அத்தனையும் கவர்ந்திழுக்கும் இக்கவிதைக்கு


4 ஸ்டார்கள்
200 ஐகாசுகள்
மின்னிதழ் பரிந்துரை

selvanntamil
08-12-2008, 12:00 PM
வாழ்க்கையில் பெரிய சாதனைகள் நம்மை கர்வப்படுத்துகின்றன. சின்ன சின்ன நிகழ்வுகளே நம்மை மகிழ்விக்கின்றன என்று எப்போதோ படித்திருக்கிறேன்.உங்கள் கவிதைக் கண்ணாடியில் என் சிறு வயது சந்தோசத்தை பார்த்து மகிழ்ந்து கொண்டேன்.
கவிதை மிக நன்று.

பாரதி
08-12-2008, 01:28 PM
ரொம்ப நல்லா இருக்கு ஜுனைத்.
வர்ணனைகள் அருமையாக வந்திருக்கிறது.
இன்னும் கொஞ்ச நேரம்... இன்னும் கொஞ்ச நேரம் என்று போர்வையை மூடி போர்த்திக்கொண்டு தூங்கும் அந்த காலைத்தூக்கமும், காப்பியின் மணமும், அம்மாவின் குரலும்... ! பாராட்டுகிறேன்.

பணியிடத்தில் இருக்கும் போதெல்லாம் பெரும்பாலும் நான்தான் சூரியனை துயில் எழுப்புவேன்!

Keelai Naadaan
08-12-2008, 01:53 PM
அழகான கவிதை.
அக்கால காலை பொழுதை அருமையாய் படம் பிடித்து காட்டுகிறது

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
11-12-2008, 03:35 PM
மிக்க நன்றி ஆதவா உங்கள் கருத்துக்களுக்கு.ஒன்றுசேர்ந்த பல அலுவல் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மன்றத்திற்குள் வர இயலவில்லை.வலையில்லாக் காட்டிற்குள் இருக்கிறேன் இப்பொழுது. உங்களைப் போன்ற ஏனைய சகோதரர்களையும் இழப்பது எனக்கும் மிகவும் வருத்தமான விஷயமே.உங்களது பின்னூட்டம் மன நிகழ்வை தருகிறது. பாரதி செல்வா கீழை அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.