PDA

View Full Version : பாம்பும் கடலும்ம் - சிலேடை -6

ஆதி
05-12-2008, 09:00 AM
பேனாவும் பெண்விழியும்

நீண்டிருக்கும் சுற்றும் நிலம்நோக்கும் மைப்பூணும்
ஆண்டிருப் போனாட்சி சாய்க்கும் ஜெகமதிர்த்தும்
சொல்லா தனசெய்யும் சொல்லுக பேனாவும்
பொல்லாத பெண்விழியும் ஒன்று!

பிகு:- பேனா - ballpoint என கொள்க.. தவறுகள் இருந்தாலும் சுட்டுக மக்கா..

ஆதவா
05-12-2008, 09:38 AM
நீண்டிருக்கும்???

சில(ர்) விழிகள் குறுகியும்.....

அழகிய சிலேடை........... ஆதி.

தொல்லா யுதமும் விளிம்பு தெறித்தழைக்கும்
கொல்லா யுதமும் அரசு கவிழ்ந்தோடும்
பொல்லா யுதமும் கவர்ந்தவர் கைகளுக்கு
நல்லா யுதமுமது வாம்

இதுக்கு தலைப்பு வெச்சா என்ன வைப்ப்பீங்க???:aetsch013:

ஆதி
05-12-2008, 09:49 AM

எனக்கும் அந்த நெருடல் இருந்தது ஆதவா.. நீண்டும் சில விழிகள் இருக்கே என்பதை மெஜாரிடியா எடுத்துக்கிட்டேன் :)

உங்கள் சிலேடை அள்ளுது ஆதவா.. அருமை..

வில்லும் வாளும் விழியும் வேலும் நேரே

பாராட்டுக்கள் ஆதவா..

ஆதி
09-12-2008, 09:06 AM
சுழிவிழும் கட்டவிழ்க்கும் சொக்கவைக்கும் காற்றில்
நெளியும்; மலரும்; நிழலும் - வெளிறும்
உடைவுற சோறுகெடும் உச்சிப் பிறக்கும்
அடர்குழலும் ஆறுமாகும் நேர்

ஆதவா
09-12-2008, 09:23 AM
சுழிவிழும் கட்டவிழ்க்கும் சொக்கவைக்கும் காற்றில்
நெளியும்; மலரும்; நிழலும் - வெளிறும்
உடைவுற சோறுகெடும் உச்சிப் பிறக்கும்
அடர்குழலும் ஆறுமாகும் நேர்

அழகு அழகு........ தொடர்ந்து சிலேடைகள் வழங்கி வரும் உங்களுக்கு சபாஷ்,..
தொடர்ந்து பெண்பா படைப்புக்களாக வழங்கி வரும் உங்களுக்கு மீண்டும் ஒரு ஓ!!

சுழிவிழும்
கட்டவிழ்கும்
சொக்கவைக்கும்
நெளியும்
மலரும் (கொஞ்சம் விளக்கிடுங்கள்..:))
வெளிறும்
உடைவுற சோறுகெடும் (அட்டகாசம்...)
உச்சிப் பிறக்கும்

என்று ஒப்பிய அனைத்தும் ஒப்பற்றவை.............................

ஆற்றுக்கும் அவள் குழலுக்கும் இடையே உங்களைப் போன்றே எனக்கும் ஓர் தொடர்பு உண்டு.....

அஃதிங்கே:

பொங்கு நுரையாற்றை அங்குயர் மாமலைமேல்
அங்கியாய் போற்றி விடுப்ப - மலையிடுக்கே
தொங்கி நெடுந்தொலை வீழும் கருங்குழலே
நங்கையர் கொள்ளும் சிறப்பு

இக்கவிதையை ஒரு போட்டிக்கு அனுப்பி, என்னை திருவிளையாடல் கவிஞர் என்று சொல்லி, மனதைத் தொடும் கரு இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பிவிட்டார்கள் :D

இக்கவிதையை என் சகோதரிக்குப் படித்துக் காண்பிக்க,
என்னை கிண்டல் செய்கிறாயா என்று செல்லக்கோபமாகத் திருப்பிக் கேட்டார்களே பாருங்கள்>.....

ஒரே சிப்புத்தான்...

இலக்கியம் கொழிக்கும் இக்கவிதைக்கு

5 விண்மீன்கள்
300 மின்பணம்

ஆதி
09-12-2008, 09:59 AM
அழகு அழகு........ தொடர்ந்து சிலேடைகள் வழங்கி வரும் உங்களுக்கு சபாஷ்,..
தொடர்ந்து பெண்பா படைப்புக்களாக வழங்கி வரும் உங்களுக்கு மீண்டும் ஒரு ஓ!!

சுழிவிழும்
கட்டவிழ்கும்
சொக்கவைக்கும்
நெளியும்
மலரும் (கொஞ்சம் விளக்கிடுங்கள்..:))
வெளிறும்
உடைவுற சோறுகெடும் (அட்டகாசம்...)
உச்சிப் பிறக்கும்

என்று ஒப்பிய அனைத்தும் ஒப்பற்றவை.............................

மலரும் - ஆற்றோர மரங்களில் அலர்ந்த பூக்கள் உதிர்ந்து மிதக்கும்..

பொங்கு நுரையாற்றை அங்குயர் மாமலைமேல்
அங்கியாய் போற்றி விடுப்ப - மலையிடுக்கே
தொங்கி நெடுந்தொலை வீழும் கருங்குழலே
நங்கையர் கொள்ளும் சிறப்பு

வெண்பாவின் சொல்லாடலில் சொக்கி போனேன் ஆதவா..

அதுவும் "மாமலைமேல் அங்கியாய்" - அபாரம்..

நெடுந்தொலை வீழும் கருங்குழலே - அருவியையும் நெடுங்கூந்தலையும் கண்முன் காட்சி படுத்துகின்றன..

ஏன் கவிதை திருப்பி அணுப்பப்பட்டது என்றே கேட்க தோன்றுகிறது..

பாராட்டுக்கள் ஆதவா...

பின்னூட்டத்திற்கு நன்றிகளும்..

சிவா.ஜி
09-12-2008, 10:51 AM
ரெண்டு பேரும் பின்றாங்கப்பா....படிக்க படிக்க நல்லாருக்கு. ( நமக்கு படிக்க மட்டும்தான் தெரியும் வடிக்கத் தெரியாது.)

இரு மகாகவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஆதவா
09-12-2008, 12:04 PM
மலரும் - ஆற்றோர மரங்களில் அலர்ந்த பூக்கள் உதிர்ந்து மிதக்கும்..

.

கொஞ்சம் சந்தேகம் தான்.... யாராச்சும் விளக்கலாம்...

ரெண்டு பேரும் பின்றாங்கப்பா....படிக்க படிக்க நல்லாருக்கு. ( நமக்கு படிக்க மட்டும்தான் தெரியும் வடிக்கத் தெரியாது.)

இரு மகாகவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

அண்ணே,, மகாகவியா என்னன்னு தெரியாது... ஆனா, நான் ஒரு மோககவி ன்னு வேணா சொல்லலாம்... (அட, கவிதை மோகம்தான்.. :D)

எனக்கும் அந்த நெருடல் இருந்தது ஆதவா.. நீண்டும் சில விழிகள் இருக்கே என்பதை மெஜாரிடியா எடுத்துக்கிட்டேன் :)

உங்கள் சிலேடை அள்ளுது ஆதவா.. அருமை..

வில்லும் வாளும் விழியும் வேலும் நேரே

பாராட்டுக்கள் ஆதவா..

சந்தடி சாக்குல இந்த பின்னூட்டத்தை மறந்துட்டேன் பாருங்க...

அந்த சிலேடைக்கு நீங்க சொன்ன தலைப்புதான் சரி... ஆனா இந்தக் கவிஞன் எதை மனசுல வெச்சுட்டு எழுதினான் பாருங்க......

அந்த ஆயுதம் "மது" தான்..... :D :D அதுசரி, மதுவா இருந்தா என்ன மாதுவா இருந்தா என்ன, இரண்டுமே கொல்லும் ஆயுதம் (மன்னிக்க சகோதரிகளே:D) தான்... :)

தமிழ்தாசன்
10-12-2008, 08:40 PM
விந்தைதரும் விடுகதையின் விம்பம்தரும்
சிந்தைதரும் நெடுவழியில் சந்தம்தரும்
முந்தைவரும் கடுகதியில் பந்தம்பெறும்
எந்தைக்கவிகளே! கலக்குகிறீர் தமிழ்த்திறமே!

பாராட்டுக்கள் இருவக்கும்.
தொடருங்கள்...

ஆதி
09-02-2009, 02:16 PM
குழந்தையும் தீவிரவாதமும்

நாட்டின் தொகையதிகம் நாளும் அதன்பேச்சாம்
கூட்டு தொகையாலே கூடுமாம் - பாட்டு
தலையாகும் கைக்குண்ட தையெறியும் நெஞ்சை
நிலைகுலைக்கும் தெய்வமும் ஆகும்

செல்வா
09-02-2009, 02:34 PM
அடடா... இத்தனை நாளும் இந்தத் திரியைப் பாராமல் விட்டேனே...
கலக்குறீங்கப்பா ரெண்டு பேரும்.....
கத்துக்குடுங்க அந்த வித்தையக் கொஞ்சம்.
வாழ்த்துக்கள்..... மின்னிதழுக்கு இந்த ஐந்து கவிகளையும் பரிந்துரைக்கிறேன்.
ரெண்டு பேரோ அல்லது ஒருத்தரோ கவிதையையும் கவிப்பொருளையும் தொகுத்துக் கொடுங்கப்பா....

இளசு
10-02-2009, 07:26 PM
ஆதியின் சொல்லாற்றலும்
(குறிப்பாய் உச்சி பிறக்கும், உடைந்தால் சோறுகெடுக்கும்..)

ஆதவாவின் கவி -மோகமும்
(மதுவாயுதன், மாமலை)

தமிழ்தாசனின் கவிவாழ்த்தும்...

அட அட அட..

வியந்து (விலகி இருந்து( ரசிக்கிறேன் மக்கா..

தொடர்ந்து தமிழ் பொழிந்து கலக்குங்க. வாழ்த்துகள்!

ஆதவா
11-02-2009, 06:04 AM
நாட்டின் தொகை அதிகம் (எண்ணிக்கை அதிகம்)

நாளும் அதன் பேச்சு ( ஓவரா வாயடிப்பாங்க )

தொகையால் கூடும் ( பணத்தால் கூடுவார்கள் / குழந்தைங்க மெயிண்டனன்ஸ் ஜாஸ்தியில்ல... )

பாட்டு தலையாகும் ( ? )

கைக்குண்டு(அதை) எறியும் (கையில இருக்கிறத எறிவாங்க... / கைக்குண்டு எறிவாங்க )

நெஞ்சை நிலைகுலைக்கும் ( பஜக் பஜக்.. இது சொல்லவே வேண்டாம்.. ஒண்ணு பதட்டம், இன்னொன்னு மகிழ்ச்சி )

தெய்வமும் ஆகும்... ( கொயந்தங்க கடவுளாம்... வடிவேலு நகைச்சுவை பார்க்கவும்.. / தற்கொலை தாக்குதல் )

உங்க வரிசையில இது மூணாவது இல்லையா? எனக்குத் தெரிஞ்சு, இந்த கவிதையை தலைப்பில்லாம படிச்சா, யாருக்கும் விளங்காது.. ஏன்னா, நீங்க இதற்கு இது நிகர் னு பாட்டுல சொல்லல... ஆனா அது ஒண்ணும் தப்பா தெரியலை.

சில சந்தேகங்கள், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்தான்.... தீவிரவாதத்தின் எண்ணிக்கையுமா?? 'பாட்டு தலையாகும்' ன்ன எப்படி சொல்றீங்க?? தொகையால் (பணம்) கூடுவது தீவிரவாதம் ஓகே... குழந்தை எப்படி???

ஆதி
11-02-2009, 07:03 AM
நாட்டின் தொகை அதிகம் (எண்ணிக்கை அதிகம்)

நாளும் அதன் பேச்சு ( ஓவரா வாயடிப்பாங்க )

தொகையால் கூடும் ( பணத்தால் கூடுவார்கள் / குழந்தைங்க மெயிண்டனன்ஸ் ஜாஸ்தியில்ல... )

பாட்டு தலையாகும் ( ? )

கைக்குண்டு(அதை) எறியும் (கையில இருக்கிறத எறிவாங்க... / கைக்குண்டு எறிவாங்க )

நெஞ்சை நிலைகுலைக்கும் ( பஜக் பஜக்.. இது சொல்லவே வேண்டாம்.. ஒண்ணு பதட்டம், இன்னொன்னு மகிழ்ச்சி )

தெய்வமும் ஆகும்... ( கொயந்தங்க கடவுளாம்... வடிவேலு நகைச்சுவை பார்க்கவும்.. / தற்கொலை தாக்குதல் )

சில சந்தேகங்கள், குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்தான்.... தீவிரவாதத்தின் எண்ணிக்கையுமா?? 'பாட்டு தலையாகும்' ன்ன எப்படி சொல்றீங்க?? தொகையால் (பணம்) கூடுவது தீவிரவாதம் ஓகே... குழந்தை எப்படி???

நானே பொருள் தர வேண்டும் என்று எண்ணி இருந்தேன் ஆதவா, மாங்கனியோடு மையல் கொண்டாடி கொண்டிருக்குறேன் அதான் முடியல.. :)

உண்மையில் இந்த தலைப்பை கொடுத்து சிலேடை எழுத சொல்லி இருந்தார்கள் ஒரு தளத்தில்.. நான் தலைப்பை தாமதமாகதான் பார்த்தேன் எனக்கு முந்தியே பலர் சிலேடை எழுதிட்டாங்க அவங்க விட்டதா நினைச்சதை எழுதினேன், 5 நிமிடத்தில் பிறந்த அவசர சிலேடை வெண்பா.. அதனால் தடுமாற்றம் கொஞ்சம் இருக்கும் னு நினைக்கிறேன்..

நாட்டின் தொகையதிகம் - திவிரவாத நிறைந்த நாட்டின் எண்ணிக்கை அதிகம் என்று சொன்னே, திவிரவாத குழுக்கலின் எண்ணிக்கையும் நம் நாட்டில் அதிகம் தானே..

கூட்டு தொகையால் கூடும் - ஆண் பெண் இருவரின் கூட்டு தொகையால் கரு கூடியதுதானே குழந்தை :)

பாட்டு தலையாகும் - உலக மேடைகள் பாடும் வாய்ப்பாட்டின் தலையங்கமே இன்று திவிரவாதம் தானே.. / தாலட்டு பாடலின் பாட்டுடை தலைவன் தலைவியாக குழைந்தைகள் தானே இருக்கின்றன..

//உங்க வரிசையில இது மூணாவது இல்லையா? எனக்குத் தெரிஞ்சு, இந்த கவிதையை தலைப்பில்லாம படிச்சா, யாருக்கும் விளங்காது.. ஏன்னா, நீங்க இதற்கு இது நிகர் னு பாட்டுல சொல்லல... ஆனா அது ஒண்ணும் தப்பா தெரியலை//

ஆமா ஆதவா நீங்க சொல்ரது சரியே, ஆனா பாருங்க சிலேடை என்றாலே காளமேகன் தான் வர்ரான், ஏன் அவன் பாணியை பின்பற்றி "நிகர்" "நேர்" னு போடனும், தலைப்பில் சிலேடை பொருள்களை சொல்லீட்டு, பாட்ட எழுதினா போதாதா னு நினைச்சேன்..

சிலேடைகளை இன்னும் எளிமையாக்கி எல்லாரையும் ரசிக்க வைக்க என்ன செய்யலாம் ஆதவா ? எதாவது யோசனை இருந்தா சொல்லுங்களேன்..

விளக்கம் கொடுத்து வேலையை மிச்சமாக்கியத்துக்கு தனி நன்றி ஆதவா.. :)

செல்வா
11-02-2009, 07:12 AM
அடடா.... நான் மின்னிதழுக்குத் தொகுத்துத் தரச்சொல்லிக் கேட்டேன்.... இங்கேயே விளக்கம் கொடுத்திட்டீங்களா?
சரி சரி இதுவும் நல்லதிற்குத்தான் என்ன மாதிரி புரியாதவங்க புரிஞ்சுக்க வசதியா இருக்கும்.

samuthraselvam
11-02-2009, 07:18 AM
ஆத்தி....!!!!!:ohmy:. சின்ன வயசுல தமிழ் புத்தகத்துல படிச்சது, சிலேடை அப்பிடிங்கற வார்த்தை. இந்த காலத்திலையும் சிலேடை கவிகள் இருக்கிறது எனக்கு தெரியவே இல்லை... நானும் அமர்ந்து யோசிக்கிறேன்:icon_hmm:. என்ன யோசிக்கப் போறாள் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். சின்ன வயசுல என்ன தலைப்பில் படித்தோம் என்பதைத்தான்:icon_nono:. ஹி.. ஹி.. ஹி..ஹி..
கலக்குறீங்க...... கலக்குங்கள்.:icon_b:

பாரதி
11-02-2009, 07:26 AM
விளக்கத்திற்கு நன்றி ஆதி.

"நாட்டின் தொகையதிகம்" என்பதும் "தெய்வமும் ஆகும்" என்பது குழந்தைகளைப் பொறுத்த மட்டில் பொருந்தி வருகிறது. ஆனால் தீவிரவாதம் என்பதற்கு முழுமையாக பொருந்தவில்லையோ எனத்தோன்றுகிறது.

எளிதில் எண்ணத்தில் தோன்றாதவற்றை சிலேடையாக்கும் உங்களை வாழ்த்துகிறேன்.

தொடருங்கள்.

ஆதி
11-02-2009, 07:43 AM

சிலேடையை பழுதுபார்க்கிறேன் அண்ணா, பிசிராத சிலேடைகளை மீண்டும் இத்தலைப்பில் எழுதி பதிக்கிறேன் அண்ணா..

நெருடல்களை நேரிட்டு காண்பித்தமைக்கும் வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் அண்ணா..

ஆதவா
11-02-2009, 08:38 AM
ஆதி.... அதுக்குள்ள சின்ன வேலை.... நாளை, (முடிந்தால் இன்றூ) வருகிறேன்...

ஆதி
11-02-2009, 10:09 AM
தோடும் யானையும் - சிலேடை -4

காதாடும் முத்துறும்க னங்குழை என்றுபடும்
சேதாரம் செய்யும்ஊ சிக்கடங்கும் - ஆகாரம்
தேடகடை ஏறும் குழியில் பிடிபடும்
தோடணியும் யானையும் நேர்

காதாடும் - யானை தூங்கும் போதும் காதாடும் / தோடு காதிலாடும்

முத்துறும் - தந்தத்தில் முத்து இருக்கும் / முத்துக்கள் பதித்து இழைத்திருப்பர்

கனங்குழை என்றுபடும் - துதிகை கனமான குழைப்போல் இருக்கும் / கனங்குழை என்றும் தோடை அழைப்பர்

சேதாரம் செய்யும்/B] - மதம் பிடித்தால் யாவையும் மோதி அழிக்கும் / கனங்குழை அணிவதால் காது தொங்கு போல் சேதாரமாகும்..

[B]ஊசிக்கடங்கும் - அங்குசம் எனும் ஊசியால் மதத்தை அடக்குவர் / காது குற்றுதல்

ஆகாரம் தேட கடை ஏறும் - தம்முடைய ஆதாயத்துக்காக யானை பிச்சை எடுக்க வைப்பவரும் உண்டு / வறுமை காலத்தில் கடைக்கு அடகுக்கு போகும்

குழியில் பிடிபடும் - யானை குழிவெட்டி பிடிப்பர் / திருகாணி குழியில் திருகி தோடை அணிவர்..

ஆதி
11-02-2009, 11:19 AM
ஆத்தி....!!!!!:ohmy:. சின்ன வயசுல தமிழ் புத்தகத்துல படிச்சது, சிலேடை அப்பிடிங்கற வார்த்தை. இந்த காலத்திலையும் சிலேடை கவிகள் இருக்கிறது எனக்கு தெரியவே இல்லை... நானும் அமர்ந்து யோசிக்கிறேன்:icon_hmm:. என்ன யோசிக்கப் போறாள் என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். சின்ன வயசுல என்ன தலைப்பில் படித்தோம் என்பதைத்தான்:icon_nono:. ஹி.. ஹி.. ஹி..ஹி..
கலக்குறீங்க...... கலக்குங்கள்.:icon_b:

சிலேடை எழுததான் யோசிக்க போறிங்களோ னு நெனைச்சு ஏமாந்துட்டேன்.. :)

நன்றி சகோதரி..

பாரதி
11-02-2009, 02:51 PM
தோடும் யானையும் - சிலேடை -4

காதாடும் முத்திருக்கும் கனங்குழை என்றுபடும்
சேதாரம் செய்யுமூசிக் கடங்கிடும் - ஆதாயம்
தேடிகடை ஏறும் குழியில் பிடிபடும்
தோடணியும் யானையும் நேர்

காதாடும் - யானை தூங்கும் போதும் காதாடும் / தோடு காதிலாடும்

முத்திருக்கும் - தந்தத்தில் முத்து இருக்கும் / முத்துக்கள் பதித்து இழைத்திருப்பர்

கனங்குழை என்றுபடும் - துதிகை கனமான குழைப்போல் இருக்கும் / கனங்குழை என்றும் தோடை அழைப்பர்

சேதாரம் செய்யும்/B] - மதம் பிடித்தால் யாவையும் மோதி அழிக்கும் / கனங்குழை அணிவதால் காது தொங்கு போல் சேதாரமாகும்..

ஊசிக்கடங்கிடும் - அங்குசம் எனும் ஊசியால் மதத்தை அடக்குவர் / காது குற்றுதல்

ஆதாயம் தேடி கடை ஏறும் - தம்முடைய ஆதாயத்துக்காக யானை பிச்சை எடுக்க வைப்பவரும் உண்டு / வறுமை காலத்தில் கடைக்கு அடகுக்கு போகும்

[B]குழியில் பிடிபடும் - யானை குழிவெட்டி பிடிப்பர் / திருகாணி குழியில் திருகி தோடை அணிவர்..

நல்ல சிலேடை ஆதி.

கனங்குழை என்பது தோடைக்குறிக்கும் என்பதை அறியத்தந்ததற்கு நன்றி.

ஊசிக்கடங்கும் என்பதில் தோடுக்கு ஊசி போன்ற திருகாணியை பயன்படுத்துதல் என்றும் பொருள் கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

குழியில் பிடிபடும் என்பதற்கும் காது குத்தியதன் காரணமாக ஏற்பட்ட குழியில் தோடு பிடிபடும் என்றும் பொருள் கொள்ளலாமா?

ஆனால் காதாடும் என்பதும் காதிலாடும் என்பதும் வேறுபடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

தொடரட்டும் சிலேடைகள்.

தாமரை
12-02-2009, 02:43 AM
கடலாடுதல் - கடலில் நீராடுதல்.. கடல் குலுங்குவது அல்ல.
குன்றாடல் - குன்றுகளில் விளையாடுவது. நில நடுக்கம் அல்ல
அலையாடல் - அலைகளோடு விளையாடுதல்.. சுனாமி அல்ல
நீராடல் - நீரில் ஆடுவது (:D)
உறவாடல் - உறவு கொள்ளுதல் - உறவுகள் ஆட்டம் கொள்ளுதல் அல்ல
பகையாடல் - பகை கொள்ளுதல் - பகைவர்கள் ஆட்டம் போடுவது அல்ல.
சொல்லாடல் - சொற்களைப் பிரயோகித்தல் உபயோகித்தல். திக்கித் திக்கிப் பேசுவது அல்ல
ஊஞ்சலாடுதல் - ஊஞ்சலில் ஆடுவது..முன்னும் பின்னும் ஊஞ்சல் போல ஆடுவது. ஊஞ்சல் மட்டுமல்ல.. ஊஞ்சலோடு நாமும் ஆட வேண்டும்.
சிலம்பாடுதல் - சிலம்புக் கம்பை கையில் வைத்துக் கொண்டு சுழற்றுவது

இப்படி பல ஆடல்கள் உண்டு. ஆகவே தோடு காதில் ஆடுவதை காதாடுதல் என்று சொல்வது சரிதான்,

ஆனால்,

ஆதாயம் தேடி கடை ஏறும் - இதில் பொருள் மாறுபாடு வந்து விடுகிறது. தங்கத் தோடாயினும் சரி, யானையும் சரி, தமது சுய ஆதாயத்திற்காகவோ, அல்லது தம் உரிமையாளரின் ஆதாயத்திற்கோ கடை ஏறுவதில்லை. அவரின் பசி தீர்க்க, துன்பம் போக்கவே கடை ஏறுகின்றன. ஆதாயம் என்பது லாபம் ஆகும். கடன் தீர்த்தல், பசி தீர்த்தல் போன்றவை துயர் துடைத்தல் ஆகும்.

ஆதாயம் என்ற சொல் இடறுகிறது இங்கே.

தங்கம் அடகு கடைக்குச் செல்வதால் அதன் மதிப்பு குறைகிறது. ஆதாயமில்லை.
ஆனை கடைகளில் (தும்பிக்) கை நீட்டுவதும் அப்படித்தான்.

ஆனைகளை விட

வறுமையின் பிடியில் சிக்கித் திணறி உண்ணவும், நோயில் விழுந்த உயிர் காக்கவும்..

மதுவின் போதைக்கேங்கி உழைக்க மறந்தோர் மதியிழப்பால் அடகு கடைக்கும் போகும் பிறந்த வீட்டுச் சீதனத் தோடுகளுக்கு

ஆதாயம் என்ற சொல் -- நிச்சயமாக பொருந்தாது ஆதி.

ஆதி
12-02-2009, 07:24 AM
தளை தட்டிய இடங்களை சரி செய்துவிட்டேன், (சாம்பவி பார்த்திருந்தா த(லை)ளை தட்(டி)டுதலை சொல்லியிருப்பார்.. :D )

//ஆதாயம் என்ற சொல் -- நிச்சயமாக பொருந்தாது ஆதி//

ஆகாரம் தேட கடை ஏறும் என்று தற்சமயத்துக்கு மாற்றி இருக்கிறேன் அண்ணா

தவறை தெளிவாக சுட்டி தெளிவாக்கியமைக்கு நன்றிகள் அண்ணா..

ஆதி
13-02-2009, 12:36 PM
இரயிலும் காதலும்

எண்ணைசிந்த சுற்றாது பின்னை இழுத்தோடும்
கண்ணைசிந்த வும்வைக்கும் சொந்தங்கள் சேர்த்திடும்
தொந்தரவும் ஆகும் தனிமையில் நீங்கிதூரம்
சென்றபினும் உண்டு அதிர்வு!

எண்ணைசிந்த சுற்றாது - இரயில் தண்டவாளத்தில் எண்ணை சிந்திவிட்டால், சக்கரங்கள் சுழலாது / எண்ணத்தை காதலில் விட்டுவிட்டால் காலத்தின் சுழற்சி தெரியாது

பின்னை இழுத்தோடும் - பின்னிருக்கு பெட்டிகளை இழுத்தோடும் / சோடியை இழுத்தோடுவர்

கண்ணை சிந்தவும் வைக்கும் - ஜென்னலோரத்தில் கண்ணை சிந்தவைக்கும் அல்லது தூசி புகையால் கண்ணை சிந்த வைக்கும் / கண்ணீர் இல்லாத காதல் உப்பிலாத காதல் :)

சொந்தங்கள் சேர்க்கும் - தூரத்தில் இருக்கும் சொந்தங்களை பார்க்க கொண்டு சேர்க்கும் / புது சொந்தங்களை உருவாக்கி தரும்..

தொந்தரவும் ஆகும் தனிமை - தனிமையான பொழுதகளில் கடந்து செல்லும் இரயிலின் ஓசை அமைதியை கெடுக்கும் / தனிமை கொடுமை காதலில்

நீங்கிதூரம் சென்றபினும் உண்டு அதிர்வு - இரயில் கடந்துவிட்ட பின்னும் தண்டவாளங்கள் அதிரும் / தூர இருக்கையிலும், காதல் முறிந்து பிரிகையிலும் நினைவுகளால் காதலின் இதயம் அதிர்ந்த வண்ணமே இருக்கும்

ஆதவா
13-02-2009, 01:08 PM
முந்தைய சிலேடைகளைக் காட்ட்லும் இது அவ்வளவு சிறப்பாக இல்லை ஆதி..

எண்ணை. - எண்ணெய்...

நானும் எண்ணை என்ற பதம் உபயோகித்திருக்கிறேன்... ஆனால் இலக்கணப்படி அது சரியா என்று தெரியவில்லை. சரிபாருங்கள்.

உங்களின் விடாமுயற்சிக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்.

ஆதி
13-02-2009, 02:35 PM
முந்தைய சிலேடைகளைக் காட்ட்லும் இது அவ்வளவு சிறப்பாக இல்லை ஆதி..

எண்ணை. - எண்ணெய்...

நானும் எண்ணை என்ற பதம் உபயோகித்திருக்கிறேன்... ஆனால் இலக்கணப்படி அது சரியா என்று தெரியவில்லை. சரிபாருங்கள்.

உங்கள் பின்னூட்டங்களில் எனக்கு மிக பிடித்தது இந்த நேரடிதான்.. நன்று என்றால் நன்று.. இல்லை என்றால் இல்லை..

இந்த பின்னூட்டம் என் சிந்தையை தீட்டி கொள்ளாய் அமைந்தது ஆதவா..

எண்ணை - எண்ணெய்

இலக்கணமும் இதை அனுமதிக்கிறேது, ஒரு அகரமுதலியில் பார்த்தேன் ஆதவா..

மிக்க நன்றி ஆதவா..

ஆதி
15-02-2009, 08:53 PM
பாம்பும் கடலும்

ஊர்ந்து அலைந்திடும் ஊரடித்து கொல்லும்,மண்
சார்ந்திருக்கும் சுற்றி படுத்திருக்கும் - கார்நிறமும்
உற்றிருக்கும் நச்சமுண்டாம் முற்றி யமணியும்
பெற்றெடுக்கும் பாம்புகடல் நேர்.

ஆதவா
16-02-2009, 02:00 PM
பாம்பும் கடலும்

ஊர்ந்து அலைந்திடும் ஊரடித்து கொல்லும்,மண்
சார்ந்திருக்கும் சுற்றி படுத்திருக்கும் - கார்நிறமும்
உற்றிருக்கும் நச்சமுண்டாம் முற்றி யமணியும்
பெற்றெடுக்கும் பாம்புகடல் நேர்.

முற்றிய மணி பெற்றெடுக்கும்!!! எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று முடிவுக்கு வரமுடியவில்லை.

மற்றபடி, வழக்கமாக அருமையாக வந்திருக்கிறது.

சிலேடைகள் நன்கு வருகின்றன உங்களுக்கு. தொடருங்கள் ஆதி.!!!

ஆதி
17-02-2009, 09:26 AM
முற்றிய மணி பெற்றெடுக்கும்!!! எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று முடிவுக்கு வரமுடியவில்லை.

மற்றபடி, வழக்கமாக அருமையாக வந்திருக்கிறது.

சிலேடைகள் நன்கு வருகின்றன உங்களுக்கு. தொடருங்கள் ஆதி.!!!

முற்றிய மணிப்பெற்றெடுக்கும் - பாம்பு மாணிக்ககல் கொண்டிருக்கும் / கடல் விளைந்த முத்து கொண்டிருக்கும்

மாணிக்க கல் - விடத்தால் உருவாவதல்ல.. செரிமானத்திற்காக பாம்புகள் உட்கொள்ளும் குழாங்கற்களால் உருவாவது..

தொடர்ந்து வரும் ஊக்கத்திற்கு நன்றிகள் ஆதவா..

poornima
17-02-2009, 09:36 AM
அருமையாக இருக்கிறது ஆதி.. தொடருங்கள்..
சிலேடை வெண்பாவில் சிலேடை சொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல..
நானும் நிறைய முயன்றிருக்கிறேன் :-) பலன் இல்லை..
உங்களுக்கு அழகாக வருகிறது.பாராட்டுகள்

ஆதவா
17-02-2009, 09:38 AM
முற்றிய மணிப்பெற்றெடுக்கும் - பாம்பு மாணிக்ககல் கொண்டிருக்கும் / கடல் விளைந்த முத்து கொண்டிருக்கும்

மாணிக்க கல் - விடத்தால் உருவாவதல்ல.. செரிமானத்திற்காக பாம்புகள் உட்கொள்ளும் குழாங்கற்களால் உருவாவது..

தொடர்ந்து வரும் ஊக்கத்திற்கு நன்றிகள் ஆதவா..

நான் அதுவாகத்தான் இருக்குமென்று அறிந்தேன். ஆனால் பாம்பு, மாணிக்கக் கல் எல்லாம் கட்டுக்கதை!!! (அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன்!!!) எனக்குத் தெரிந்து யாரும் அப்படி எடுத்ததில்லை....

தாமரை அண்ண இதற்கு பதில் சொல்லக்கூடும்!!

ஆதி
17-02-2009, 09:51 AM

இதை பற்றி நிறைய ஆராய்சிகள் நடந்தவண்ணம் உள்ளன ஆதவா..

பொதிகையில் பாம்புகளை பற்றிய ஒரு குறும்படத்தில் தான் மாணிக்கம் குழாங்க கற்கலால் உருவாகிறது என்று கேள்வி பட்டேன்..

என் அப்பா சொல்லுவார் தோட்டத்து வீட்டில் இருக்கையில் இரவில் ஒரு குறிப்பட்ட நேரத்தில் ஜன்னல் வழி வீட்டுள் ஒரு மெல்லிய ஒளிப்படருமாம், அதை பார்த்தது தாத்தா கொஞ்ச நேரத்திற்கு யாரையும் வெளியே போக வேண்டாம் என்று சொல்லுவாராம்.. பாம்பு ஆகாரம் தேடுது என்பாராம்..

மாணிக்க கல் இருப்பது உண்மைதான் ஆதவா.. ஆனால் அதை பற்றிய கட்டுக்கதைகள் பொய்..

விஷத்தால் மாணிக்கம் உருவாவது என்பதை ஒற்றுக் கொள்ள இயலவே இயலாது.. பாம்பு விஷத்தை பல்வழியாய் செலவு செய்கிறது.. விஷத்திற்கு என்று ஒரு தனி பையும் கொண்டுள்ளது.. விஷம் கட்டியாகிவிட்டால் பைக்குள்ளேயே தங்கிவிடும்.. வெளியேறவும் ஏறாது..

சரி இதுவரை செலவாகத விடம் கட்டிக்கொண்டது என்று வைத்துக் கொண்டாலும் இனி சுரக்க போகிற விடம் என்னவாகும் என்று ஒரு கேள்வி எழும்..

அதனால் விடத்தால் மாணிக்கம் என்பது ஏற்க முடியாத ஒன்று..

மாணிக்கம் இருக்கால் இல்லையா.. மாமலர் வந்து பதில் தரட்டுமே.. :)

இல்லைனா.. கேள்வி பதில் திரில போட்டுவிடலாம்..

ஆதி
18-02-2009, 05:50 AM
அருமையாக இருக்கிறது ஆதி.. தொடருங்கள்..
சிலேடை வெண்பாவில் சிலேடை சொல்வது என்பது அவ்வளவு எளிதானதல்ல..
நானும் நிறைய முயன்றிருக்கிறேன் :-) பலன் இல்லை..
உங்களுக்கு அழகாக வருகிறது.பாராட்டுகள்

தங்களின் பின்னூட்டம் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது..
பாரட்டுக்கும் ஊக்கத்திற்கு மிக்க நன்றிகள் பூர்ணிமா..