PDA

View Full Version : 'குடி'மகன்



mathuran
03-12-2008, 03:21 AM
''மதுவோடு பழகும் மதுவே
உனக்கிது தகுமா...?
குடியில்லை என்றால்
குடியொன்றும் கெட்டிடாதே...
படிப்படியாய் விட்டுவிடு...''
பணிவோடு தட்டிவைத்த
என்னவளின் குரல் இன்னும்
என்காதில் ஒலிக்கிறது...

அன்பைப் பகிரும்
அருமை நேரத்தில்
விரும்பிப் பருகும்
விஷ பானம்...
உள்ளுக்குள் சென்றதும்
உணர்வுகள் பெருகிடும்
உபத்திரவ பானம்...

தவிர்க்கமுடியா விருந்துகளை
தவிப்போடு தவிர்த்திடவே
பலருக்கு வருத்தம் என்மேல்
எனக்கோ பிடிக்கும்
என்னவள் அன்புதனை...

அன்பென்னும்
போதைக்கு முன்னால்
எப்போதை வந்தாலும்
சப்பென்று ஆகிவிடும்...

பொங்கிவரும்
போதைதனை பார்க்கையிலே
பொங்குகின்ற என்னவளின்
பாசமுகம் கூட வரும்...

என்னசெய்ய
போதையா... பேதையா...
எடைபோட்டு பார்க்கையிலே
என் செல்லத்தின் பாசம்தான்
பொங்கிவருகிறது...

அமரன்
03-12-2008, 08:12 AM
குடிக்காதே என்று காதலி வாயிலாகச் சொல்லி அதனால் சில நட்புகளுக்குள் ஏற்படும் விரிசலை சொல்லி குடியை மறப்பதே மேலெனக் காட்ட காதலை, மாதை துணைக்கழைத்து நல்ல கருத்தை நயமாகச் சொன்னதில் மிளிர்கிறது கவிதை.

காதல்...
குடிமகனை பெருங்குடிமகனாக்கும்
என்பதுக்கு இன்னொரு சான்று.

காதலும் ஒருவிதத்தில் கத்திதான்.
நல்லது கெட்டது அதை வீசும் உத்தியில்தான்.

வற்புறுத்தும் நட்பு உண்மையான நட்பல்ல. அந்த மாதிரியான நட்புகள் இல்லாமல் போவது மேல்.

பாராட்டுகள் மதுரன்.

ஆதவா
03-12-2008, 09:01 AM
பேதைக்கும் போதைக்குமான போட்டியில் மதுவை மாது வென்றதா?
மதுரன் சார், மதுவைக் காட்டிலும் போதையானது மாது (என்பார்கள்)

நல்ல தலைப்புடன் தான் வந்திருக்கிறீர்கள். எல்லோராலும் இப்படி இருக்க முடிவதில்லை. (என்ன காரணம்?)

கவிதை அழகு... கொஞ்சம் வளர்த்தி எழுதியிருந்தாலும் வார்த்தைக் கட்டமைப்புக்களைப் பார்க்கும்பொழுது ஒரு நல்ல கவிஞனுக்குண்டான தகுதி தெரிகிறது... தெரிந்தோ தெரியாமலோ கட்டமைக்கப்பட்டிருக்கும் மோனைகள் கவிதையில் கவர்ச்சி போதை. கீப் இட் அப் :)

அடுத்தடுத்து கருக்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது இன்னும் வலுவாகத் தேர்ந்தெடுத்து வார்த்தைகளால் வட்டமிடுங்கள்.. இலக்கிய உலகம் உங்கள் வசமும்..


///காதலும் ஒருவிதத்தில் கத்திதான்.
நல்லது கெட்டது அதை வீசும் உத்தியில்தான்.///

யோவ் அமரா.... இப்படி எழுதிகிட்டே போனீரென்றால்.... நாங்களெல்லாம் என்னய்யா எழுதறது????? அட போமய்யா..

Narathar
07-12-2008, 10:18 AM
காதல்போதையில்
போதையின் காதலை
விட்டிருக்கின்றிர்கள்
வாழ்த்துக்கள்!!!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-12-2008, 06:15 PM
///காதலும் ஒருவிதத்தில் கத்திதான்.
நல்லது கெட்டது அதை வீசும் உத்தியில்தான்.///

யோவ் அமரா.... இப்படி எழுதிகிட்டே போனீரென்றால்.... நாங்களெல்லாம் என்னய்யா எழுதறது????? அட போமய்யா..

அதான! நாலு வார்த்தை கேட்டாலும் நல்லா கேட்டீங்க ஆதவா.