PDA

View Full Version : ஒண்ணே ஒண்ணு...கண்ணே கண்ணு...!!!சிவா.ஜி
29-11-2008, 09:45 AM
அக்கா வீட்டுக்கு வந்ததிலிருந்து அவளின் பாச உபசரிப்பு பாலுவை திணறடித்தது. மணிக்கொருமுறை ஏதாவது சாப்பிடச் சொல்லி கொடுத்துக்கொண்டேயிருந்தாள். திருமணமாகி இந்த எட்டு வருடங்களில் பலமுறை வந்திருக்கிறான். எப்போதுமே அதே அன்பான உபசரிப்பு. தம்பிமேல் அந்தளவுக்குப் பாசம். அக்கா கணவரும் குறைந்தவரல்ல. அலுவலகம் முடிந்து வரும்போது ஏதாவது திண்பண்டங்களை வாங்கிக்கொண்டு வருவார்.

”நான் என்ன சின்னக் குழந்தையா...?” என்று அவன் கேட்டால்,

”ஆமாடா எனக்கு இன்னும் நீ குட்டித்தம்பிதான்.” என்று சொல்வாள்.

ஆறு வயதில் ஒரு மகன். அவன் மட்டுமே போதுமென்று முடிவு செய்துவிட்டார்கள். நகரத்தில் ஒரு பிள்ளையை வளர்ப்பதே பெரும்பாடாக இருக்கிறது என்றும், தனக்குக் கிடைக்கும் சம்பளத்தில் இவன் ஒருவனை மட்டுமே நல்லபடியாக வளர்க்க முடியும் என்று நினைத்து ஒன்றே போதுமென்று முடிவெடுத்துவிட்டார்கள்.

அதில் பாலுவுக்கும், அவனுடைய பெற்றோருக்கும் வருத்தம்தான். தம்பியோ தங்கையோ இன்னும் ஒரு குழந்தையாவது இருந்தால் தானே அவனுக்கும் மற்ற உறவுகள் கிடைக்கும். சிந்தித்துக்கொண்டேயிருந்தவனின் நினைவுகள் பின்னோக்கி ஓடி அவனது ஆறாவது வயதில் நின்றது....................

”என்னடா இது எப்பப்பாரு அக்காவோட பாவாடையைப் பிடிச்சிக்கிட்டே இருக்கே. பொம்பளப்பிள்ளைங்க விளையாட்டுல உனக்கென்னடா வேலை..? போ போய் மத்த பசங்களோட விளையாடு”

என்று அம்மா திட்டினாலும் போக மாட்டான். எப்போதும் அக்கா, அக்காவின் தோழிகளோடுதான் அவனுக்கு விளையாட்டு.

பாண்டிக்கட்டம் போட்டு, நெற்றிமீது ஓட்டாஞ்சில்லை வைத்துக்கொண்டு ரைட்டா...ரைட்டா என்று ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து, நொண்டியடித்து ஆட்டத்தை முடிப்பதில் அவனுக்கு அத்தனை ஆர்வம். அஞ்சாங்கல்லு, தாயம், பல்லாங்குழி என்ற உள்விளையாட்டானாலும் சரி,

“ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம், ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டேப்பூ பூத்திச்சாம்.....” என்ற வெளிவிளையாட்டானாலும் சரி, அக்காவோடுதான் அவனுக்கு விளையாட்டெல்லாம். நான்கு வயது மூத்தவள் என்பதால் இன்னும் நெருக்கம் அதிகம்.

அண்ணன் கொஞ்சம் முசுடு. ஆனாலும் பாசம் நிறைய இருக்கும். அன்றைக்கு அப்படித்தான் அண்ணனும் அவனது நன்பர்களும் ஊருக்கு வெளியே இருக்கும் கிணற்றுக்கு குளிக்கப் போகும்போது நானும் வருவேன் என்று தயாரானவனைப் பார்த்து...

“நீ எதுக்குடா எங்களோட வர..? உனக்குதான் இன்னும் நீச்சலே தெரியலயே அங்க வந்து என்னா பண்ணப்போறே?...போடா...வீட்டுக்குப் போ” என்று விரட்டினான்.

அவர்கள் அந்த கிணற்றில் விளையாடுவதைப் பார்க்கும் ஆர்வம் பாலுவுக்கு. அதிலும் அந்த எட்டணா நாணயத்தை கிணற்றில் போட்டுவிட்டு மூழ்கிச் சென்று அதை வேகமாய் எடுத்து வரும் போட்டியில் அவனுடைய அண்ணனே எப்போதும் ஜெயிப்பதைப் பார்க்க அவனுக்குப் பெருமையாய் இருக்கும். அண்ணன் சொல்லியும் அவர்கள் பின்னாலேயே போனவனை திரும்பிப்பார்த்து கத்தினான்.

“சொல்லச் சொல்ல கேக்காம வரியா? போடான்னா...”

“நான் வந்தா உனக்கென்னா...நான் சும்மா வேடிக்க பாக்கறேன்....”

அவன் இப்படி சொல்லவும், அண்னனுடைய நன்பன் ஒருவன்,

“அவனும் வரட்டுமேடா...நம்ம துணியெல்லாம் பாத்துக்குவான் இல்ல..”

என்று சொன்னதும், அவனைப் பார்த்து முறைத்துவிட்டு,

“இவன் என்ன உங்களுக்கெல்லாம் வேலைக்காரனா...? போனவாட்டியே அவன் அப்படி காவக்காரன் மாதிரி உக்காந்திருந்தது எனக்குப் பிடிக்கல...அதனாலத்தான் அவனை வரவேணான்னு சொன்னேன். போடா வீட்டுக்கு”

என்று சொல்லிவிட்டுப் போனவனை அழுகையோடு பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வந்து அம்மாவிடம் புகார் சொன்னான். அதற்கு அம்மா,

“உன் மேல உங்கண்ணனுக்கு எவ்ளோ பாசம் பாருடா. தம்பியைக் காவக்காரனா பாக்கக்கூட அவனுக்குப் பிடிக்கல....நல்ல பையண்டா அவன். சரி வா அம்மா உனக்கு பலகாரம் செஞ்சு தரேன்”

என்று சொன்னதும் அண்ணன் மீது கொஞ்சம் கோபமும், கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

அடுத்த வாரத்தில் ஒருநாள் சித்தப்பா வந்திருந்தார். அவர் சின்ன வயதிலேயே மும்பைக்கு சென்று வியாபாரம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது ஒரு முறை வந்து போவார்.
திருமணமாகி பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டிருந்தது. இன்னும் குழந்தைகள் இல்லை. இனி பிறக்கவும் வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். வியாபாரத்தில் ஏராளமாய் சேர்த்த சொத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்று இருவருக்குமே மிகுந்த வருத்தம்.

அதுமட்டுமில்லாமல் கடைசிகாலத்தில் தங்களுக்குத் துணையாக யாருமே இல்லையே என்ற குறையும் சேர்ந்துகொள்ள அண்ணனிடம் வந்து புலம்புவார். அதற்கு பாலுவின் அப்பா,

“என் பிள்ளைகளும் உனக்குப் குழந்தைகள் தானேப்பா....ஏன் கவலைப் படறே?”

என்று சொல்வார். அது கொஞ்சம் அவருக்கு ஆறுதலைக் கொடுத்தாலும், மீண்டும் வரும்போது அதையே புலம்புவார். ஆனால் இந்த முறை ஏதோ முடிவோடு வந்திருக்கிறாரென்று தெரிந்தது. அண்ணனும் தம்பியும் நீண்டநேரம் உள் அறையிலிருந்து விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இடையில் தன் மனைவியை பாலுவின் அப்பா அழைத்தார். சிறிது நேரத்தில் முந்தானையால் வாயை மூடிக்கொண்டு அறையிலிருந்து அழுதுகொண்டே வெளியே வந்த அம்மாவைப் பார்த்து பாலுவுக்கும் அழுகை வந்தது.

பாலுவின் அண்ணனும், அக்காவும் எதுவும் புரியாமல் விழித்துக்கொண்டு இருந்தார்கள். முடிவில் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலுவை சித்தப்பாவுக்கு தத்துக் கொடுக்கப் போகிறார்கள். அம்மாவை செண்டிமெண்ட்டாகப் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். சித்தப்பா சித்தியின் காலத்துக்குப் பிறகு யாருக்கோப் போகப்போகிற சொத்து நம் குடும்பத்துக்கு கிடைக்கட்டுமே என்ற காரணமும் அம்மா அப்பாவை சம்மதிக்க வைத்தது.

பாலு சித்தப்பாக்கூட போகவே முடியாது என்று அழுது அடம் பிடித்தான். அவனுக்கு மும்பையைப் பற்றி சொல்லி, விளையாட்டு, கார் பயணம் என்று என்னவெல்லாமோ ஆசை காட்டி ஒருவழியாய் அமைதியாக்கி சம்மதிக்க வைத்தார்கள்.

அடுத்தநாள் முறைப்படி எல்லாம் முடிந்து, ஊரார் முன்னிலையில் தத்துகொடுக்கும் வைபவமும் நடந்தேறியது. மும்பைக்கு புறப்பட தயாரானார்கள். அழுதுகொண்டே புறப்பட்ட பாலு கார்க்கதவைத் திறந்து உள்ளே போய் உட்காரவே மனமில்லாதவனாய் மலங்க மலங்க விழித்துக்கொண்டு அம்மா, அப்பா, அண்ணன், அக்கா அனைவரையும் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தான்.

“பாலு சீக்கிரம் ஏறுப்பா...டைம் ஆச்சு..”

என்று சித்தப்பா சொன்னதும், அதுவரை கட்டுப்பாடாய் நின்றுகொண்டிருந்த அக்காவும், அண்ணனும் ஓடிச்சென்று பாலுவின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு,

“நாங்க பாலுவ போகவிடமாட்டோம். எங்க தம்பி எங்களோடத்தான் இருக்கனும்”

என்று கத்திக் கூப்பாடு போட்டு ரகளை செய்தார்கள். இதை எதிர்பார்க்காத பாலுவின் பெற்றோரும், புதிய அப்பாவும் திகைத்துப் போய்விட்டார்கள். பாலுவின் அண்ணன் ஓடிச் சென்று காருக்கு முன்னால் ரோட்டில் படுத்துக்கொண்டான்.

இத்தனை தீவிர எதிர்ப்பை யாரும் எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லியும் அவர்களை சமாதானப் படுத்த முடியவில்லை. பாலுவும் தன் முடிவை மாற்றிக்கொண்டு பெட்டியைத் தூக்கி வீட்டுக்குள் எறிந்துவிட்டு போகவே முடியாது என்று அலறினான்.

வேறு வழியில்லாமல் சித்தப்பா, சித்தப்பாவாகவே திரும்பிப்போனார். பாலுவின் அப்பா அம்மாவுக்கு ஆத்திரம் வந்தாலும், சற்று நேரத்திலேயே பிள்ளைகள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து ஆனந்தப்பட்டார்கள்.


அந்த நிகழ்ச்சியை எப்போது நினைத்துக்கொண்டாலும் பாலுவுக்கு கண்கள் கலங்கிவிடும். இப்போதும் அப்படித்தான். கண்ணீரைத் துடைத்துக்கொள்வதைப் பார்த்துவிட்ட அக்கா, என்னவோ ஏதோ என்று பதறிவிட்டாள்.

“என்னடா பாலு என்ன ஆச்சு, ஏன் அழற..”

“ஒன்னுமில்லக்கா...என்ன தத்துக்குடுத்த அன்னைக்கு நடந்ததை நெனைச்சுப் பாத்தேன் அதான் கண்ணு கலங்கிடிச்சி...”

அதைக் கேட்டதும் அவளுக்கும் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

“நல்ல வேளைடா...அன்னைக்கு மட்டும் நீ போயிருந்தியினா...எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்.”

“நீயும் அண்ணனும் அன்னைக்கு காட்டின எதிர்ப்புல எவ்ளோ பாசம் இருந்திச்சி....அக்கா ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே...”

“என்னடா புதுசா கேக்கற..?”

“புதுசு ஒன்னுமில்லக்கா....நிறைய வாட்டி உன்கிட்ட சொன்னதுதான். ஏன்க்கா நீயும் மாமாவும் ஒரே குழந்தை போதும்ன்னு முடிவு பண்ணீங்க? நமக்குள்ள இருக்கிற இந்த பாசமும், அன்பும் அவனுக்கு கிடைக்குமாக்கா? அண்ணன், தங்கை, அக்கா, தம்பி அப்படின்னு எந்த உறவுமே இல்லாம அவன் வளருனுமா? அதுமட்டுமா..? அவனுக்குக் கல்யாணம் ஆனா அவனோட குழந்தைங்களுக்கு மாமா, சித்தி, அத்தை, சித்தப்பா, பெரியப்பான்னு எந்த உறவுமே இல்லாம போயிடுமே...? யோசிச்சிப் பாருக்கா”

பாலு சொல்லி முடித்ததும் திகைத்து நின்றுவிட்டாள். ஏற்கனவே நிறைய முறை எல்லோரும் சொன்னதுதானென்றாலும், தம்பி நினைவுபடுத்திய அந்த பழைய நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து இன்னும் விலகாத நிலையில் அவன் சொன்ன எல்லாமும் சிந்திக்க வேண்டியவை என்பதை உணர்ந்தாள்.

அலுவலகம் முடிந்து வந்த தன் கணவனிடம் பேசினாள். தம்பியை அழைத்துப் பேசச் சொன்னாள். அவன் தங்கள் குழந்தைப் பருவத்தின் சந்தோஷத்தைச் சொன்னான். அவருடையதையும் நினைத்துப்பார்க்கச் சொன்னான். மெள்ள அவரது முகம் மாறுவதைப் பார்த்ததுமே பாலுவுக்குப் புரிந்துவிட்டது.

இன்னொரு மருமகனோ, மருமகளோ கிடைக்கப்போவது நிச்சயம். மனம் முழுக்க சந்தோஷத்தில் எழுந்தான்.

மதி
29-11-2008, 10:27 AM
உறவுகளின் அன்பின் வெளிப்பாடு சொல்லும் அழகான கதை. பாராட்டுக்கள் சிவாண்ணா. ஆயினும் ஒரு செல்ல சந்தேகம். நாட்டுல ஜனத்தொகை இருக்கற நிலைமைக்கு எல்லோரும் ரெண்டு, மூணு குழந்தைங்கன்னு இருந்தா என்ன தான் பண்றது. :)

சிவா.ஜி
29-11-2008, 10:35 AM
ரொம்ப நல்ல சந்தேகம்தான். மூணெல்லாம் ஜாஸ்திதான். ஆனா ரெண்டு நிச்சயம் வேணும். ஜனத்தொகையையே நாட்டோட மிகப்பெரிய சக்தியா மாத்திக்காட்டிக்கிட்டிருக்கிற சைனா மாதிரி நாமும் மாத்தலாமே....

பின்னூட்ட ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி மதி.

செல்வா
29-11-2008, 01:58 PM
ஆனா ரெண்டு நிச்சயம் வேணும்.
ஆமா அண்ணா... குறைந்த பட்சம் ரெண்டு பேராவது இருக்கணும். இல்லண்ணா கஷ்டம் தான்.

கதை நல்லாருக்கு அண்ணா... தேவையானக் கருத்தும் கூட. வாழ்த்துக்கள் அண்ணா...

Keelai Naadaan
29-11-2008, 03:09 PM
சகோதர உணர்வையும், குழந்தைகளின் பாசபினைப்பையும் சொல்லும் அழகிய கதை.

பால்யகாலத்தை நினைவு படுத்தியது. இரண்டு பிள்ளைகளாவது வேண்டும். அப்போது தான் குழந்தைகளுக்கு தனிமை உணர்வு தவிர்க்கப்படும்.

எல்லோருமே ஒரு பிள்ளை மட்டுமே பெற்றால் ஐம்பது நூறு ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணன் தம்பி அக்கா தங்கை, பெரியப்பா, சித்தப்பா, அத்தை....
என்ற உறவு முறையெல்லாம் தெரியாமல் போய்விடும் ... இல்லையா..?

சிவா.ஜி
30-11-2008, 04:59 AM
பின்னூட்டக் கருத்துக்களுக்கு மிக்க நன்றி செல்வா மற்றும் கீழைநாடான்.

SivaS
30-11-2008, 11:17 AM
மிக அருமையான கதை.
வளர்ந்துவரும் உலகத்தில் இரண்டு குழந்தைகளே அளவானது

Narathar
30-11-2008, 11:53 AM
உறவுகளின் தேவையை உரக்கச்சொல்லியிருக்கின்றீர்கள் சிவா....
மிக அருமையாக கதையை நகர்த்தியிருக்கின்றீர்கள், திருப்பங்கள்
எதுவுமில்லாத நீரோடை போல தெளிவாக செல்கின்றது கதை!
ஆனால் அதுதான் கதையின் பலமே.........

வாழ்த்துக்கள்! உங்கள் கதை நாயகனின் நினைவுகளில் என்னையும்
சிறுவயதுக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்

சிவா.ஜி
30-11-2008, 12:27 PM
மிக அருமையான கதை.
வளர்ந்துவரும் உலகத்தில் இரண்டு குழந்தைகளே அளவானது

சரியான கருத்து சிவா. மிக்க நன்றிகள்.

சிவா.ஜி
30-11-2008, 12:28 PM
வாழ்த்துக்கள்! உங்கள் கதை நாயகனின் நினைவுகளில் என்னையும்
சிறுவயதுக்கு கூட்டிக்கொண்டு போய் விட்டீர்கள்.
வாழ்த்துக்கள்

எழுதும்போது நானும்கூட அந்த வயதுக்கு சென்று மகிழ்ந்தேன் நாரதரே....

அழகான உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

ரங்கராஜன்
01-12-2008, 04:05 AM
ரொம்ப நல்லா இருக்கு திரு.சிவா பளிங்கு மாதிரி அழகாக சொல்ல வந்த கருத்தை சொல்லிட்டீங்க, தனியாக ஒரு குழந்தை வளர்வதற்க்கும் கூட்டு குடும்பத்தில் வளர்வதற்க்கு நிறைய வித்தியாசம் இருக்கும். மனநிலை, பழக்க வழக்கம், அன்பு என்று இரு வேறு நிலையில் வாழும் குழந்தைகளில் நிறைய வித்தியாசம் இருக்கும். அதை அழகாக சொல்லி இருக்கீங்க. மிகைபடுத்தாத வார்த்தைகள் ஈர்த்தது. இந்த கதை எங்காவது நடந்து நேரில் பார்த்தீர்களா?, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் வாழ்க்கையில் நடந்ததா?. ஏனென்றால் நீங்கள் எழுதி இருக்கும் வார்த்தைகளில் நிஜத்தை தவிர எந்த கற்பனையும் இல்லை, சபாஷ். நான் நினைக்கிறேன் இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் நீங்களும் ஒருவர், அது யார் என்று தெரியவில்லை?

அமரன்
01-12-2008, 09:45 AM
தலைப்பே சொல்லுதே ரெண்டு வேண்டும் என்று. ஒற்றைக் கண்ணோடு எப்படி..

ஒற்றுமையான சமுதாயச் சிகரத்தின் அகரம் "உள்ளக உறவுகளே". அந்த உறவுகள் தூய்மையாகவும் வலுவாகவும் பிணைக்கப்படுமேயானால் பல்தரப்பட்ட சிக்கல்கள் தீரும் என்பது இங்கே பலராலும் விதைக்கப்பட்டிருக்கும் கருத்து. சித்தப்பா, சின்னம்மா போன்ற உறவுமுறைகளும் ஒற்றைப்பிள்ளைகளால் அற்றும் போய்விடும் என்பதும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது. சரியாகத்தான் படுகிறது உற்றுப் பார்க்கும் வரை.

உள்ளக உறவுகள் தரும் சோதர பாசத்தை விட தனியனாக பிறந்து தனியனாக வளராத, வாழாத தனயனில் உள்ளூறும் பாசம் வலிமையானதும் ஆரோக்கியமானதுமான சமுதாயக் கட்டமைப்பின் அடிநாதம். இங்கே முக்கியம் தனிமை தவிர்க்கப்படல். அதை சொல்லுவதால் தலை நிமிர்த்தி நிற்கிறது கதை.

மாமா, மாமி, சிற்றப்பா, சின்னம்மா என அத்தனை உறவுகளும் ஒருவனுக்குக் வீட்டுக்குள்ளயே கிடைக்க வேண்டுமானால் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனையோ பிள்ளைகள் இருத்தல் அவசியம். பெண்பிள்ளை மனம் விட்டுப் பேச இன்னொரு பெண்பிள்ளை கட்டாயம் வேண்டும் என்ற வாத மேலீட்டால் ஒன்பது ஆண்மகவையும் ஒரே ஒரு பெண்மகவையும் ஈன்ற தாயை எங்களூரில் கண்டிருக்கிறேன். அதன் பின் அவங்க பட்டபாடு (ஒன்பது பொடியள்ள. நல்லாப் பட்டிருப்பாங்கன்னு யாரோ முணுமுணுப்பது கேட்கிறது).

அரியதொரு கருத்தைச் சொன்னமைக்கு மனமார்ந்த பாராட்டுகள் சிவா.

சிவா.ஜி
01-12-2008, 11:11 AM
தனியாக ஒரு குழந்தை வளர்வதற்க்கும் கூட்டு குடும்பத்தில் வளர்வதற்க்கு நிறைய வித்தியாசம் இருக்கும். மனநிலை, பழக்க வழக்கம், அன்பு என்று இரு வேறு நிலையில் வாழும் குழந்தைகளில் நிறைய வித்தியாசம் இருக்கும்.

ஆம் மூர்த்தி. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தனியாய் வளரும் குழந்தைகளின் சில செயல்களில், மூர்க்கமும், தனக்கு மட்டுமே எல்லாம் எனும் மனப்பாங்கையும் பார்த்திருக்கிறேன்.

நான் நினைக்கிறேன் இந்த கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் நீங்களும் ஒருவர், அது யார் என்று தெரியவில்லை?

பாலுவுக்குள்ளேயே சில இடங்களில் நானிருக்கிறேன்....நீங்களும் இருக்கிறீர்கள்....அனைவருமே இருப்பார்கள்....உண்மைதானே...?மிக அழகான பின்னூடத்துக்கு மிக்க நன்றி மூர்த்தி.

சிவா.ஜி
01-12-2008, 11:16 AM
ஒற்றுமையான சமுதாயச் சிகரத்தின் அகரம் "உள்ளக உறவுகளே". அந்த உறவுகள் தூய்மையாகவும் வலுவாகவும் பிணைக்கப்படுமேயானால் பல்தரப்பட்ட சிக்கல்கள் தீரும் என்பது இங்கே பலராலும் விதைக்கப்பட்டிருக்கும் கருத்து. சித்தப்பா, சின்னம்மா போன்ற உறவுமுறைகளும் ஒற்றைப்பிள்ளைகளால் அற்றும் போய்விடும் என்பதும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது. சரியாகத்தான் படுகிறது உற்றுப் பார்க்கும் வரை.உங்கள் பாணியே தனிதான் அமரன். பின்னூட்டத்தில பின்னுறீங்க..:icon_b:

உற்றுப்பார்க்கும் போது பல வேற்றுக் கருத்து தோன்றும் என்பது உண்மைதான். ஆனால் உள்ளக உறவுகளைப் பலப்படுத்த உடன்பிறப்புக்களின் ரத்தபாசம் மிகவும் உதவுகிறது என்பதும் உண்மைதான்.

ஊக்க பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி பாஸ்.

ரங்கராஜன்
01-12-2008, 12:03 PM
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. தனியாய் வளரும் குழந்தைகளின் சில செயல்களில், மூர்க்கமும், தனக்கு மட்டுமே எல்லாம் எனும் மனப்பாங்கையும் பார்த்திருக்கிறேன்.

பாலுவுக்குள்ளேயே சில இடங்களில் நானிருக்கிறேன்....நீங்களும் இருக்கிறீர்கள்....அனைவருமே இருப்பார்கள்....உண்மைதானே...?

நீங்கள் கூறுவதுப் போல நான் இரண்டாம் வாக்கியத்தில் இல்லை திரு.சிவா, நான் முதல் வாக்கியத்தில் தான் இருக்கிறேன்.

சிவா.ஜி
01-12-2008, 12:09 PM
உங்கள் உணர்வை புரிந்துகொள்ள முடிகிறது மூர்த்தி.
(பெயருக்கு முன்னால் திரு வேண்டாமே...)

MURALINITHISH
29-12-2008, 10:33 AM
இப்போ நிலைமை அப்படிதான் இருக்கு ஒரு குழந்தைக்கே பள்ளிகூட பீஸ் கட்டி மீள முடியலை இதில் 2வதே அதிகம்தான் ஆனால் நாளை பிள்ளைகளுக்கு பாசம் மட்டுமில்லை பின்னாளில் உதவி தேவை எனில் கூட யாரையும் தேட முடியாது அதற்க்காகவது 2 குழந்தைகள் அவசியம் ஆனால் இந்த காலத்தில் இருக்கும் விலைவாசியில் 2க்கு மேல் வேண்டவே வேண்டாம் தாங்காது சாமி

அன்புரசிகன்
29-12-2008, 11:18 AM
அப்பப்பா...................... !!!!!!!!!!!!!!!! இப்படி ஒரு பாசமலர் எனக்கு கிடைக்கவில்லையே........ :(