PDA

View Full Version : இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா?sarathecreator
29-11-2008, 04:52 AM
இந்தியாவில் 35 மாநில / யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் நாம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி / கலாச்சாரம் / பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறோம்.

ஒரு மாநிலத்தவரின் மொழி அடுத்தவருக்குப் புரிவதில்லை. இவரை அவரும், அவரை இவரும் புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து மடிகிறோம்.

குறிப்பாக கர்நாடகாவில் வாழும் கன்னடர்களுக்குப் பல்வேறு மொழிகள் தெரிந்திருந்தாலும், அவர்கள் தமிழ் என்று உச்சரிக்காமல், “தெமிலு” என்றே எப்போதும் உச்சரித்து நம்மை வெறுப்படிக்கிறார்கள்.

அவர்களுடைய மொழி உச்சரிப்பில் - எல்லா வார்த்தைகளுக்குப் பின்னாலும் ஒரு ‘ஊ’ சேர்த்துக்கொள்வார்கள். காரூ, பஸ்ஸூ, ஸ்கூலூ, - என ஆங்கில வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு ஊ சேர்த்து நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள்.

இந்தியாவில் சாதாரணமாக 200+ தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கின்றன.

நாம் தமிழர்களாக இருக்கிற காரணத்தால் - நமது மொழிப்புலமையின் காரணத்தால் (!) 200+ அலைவரிசைகளில் அதிகபட்சம் 10 அல்லது 15 ஐ மட்டும் பார்த்துப் பிற அலைவரிசைகளைக் கண்ணுறாமல் காலம் கழிக்கிறோம். ( எனது மனைவி 3 சேனல்களை மட்டும்தான் பார்க்கிறார். மகனுக்கு ஒரே ஒரு போகோ போதும்.)

ஆனால் இந்த விளம்பரதாரர்கள் 200+ அலைவரிசைகளிலும் விளம்பரங்கள் கொடுத்துத் தீரவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் பலவித சேனல்கள். ஒவ்வொரு சேனல்களுக்கும் விளம்பரம் கொடுத்தே தீருகிறார்கள். அதாவது 200+ அலைவரிசைகளுக்கும் விளம்பரதாரர்களால் நல்ல வருவாய்தான். இது டிவி காரர்களுக்குக் கொண்டாட்டம்.

ஆனால் நாம் கண்ணுறுவது எத்தனை சேனல்களை? எனக்கு ஒரு 10 சேனல், என் மனைவிக்கு 1 முதல் 3. மகனுக்கு ஒன்றே ஒன்று.

மீதி சேனல்களைக் கண்ணுறும் அளவுக்குப் பொறுமை இங்கே எங்கள் குடும்பத்தில் இல்லை.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதே நிலைமையாகத் தான் இருக்கும் என்பதில் ஐயமும் இல்லை. ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கே பேச வரவில்லை.

சரி விசயத்திற்கு வருகிறேன்.

விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் காண்பித்தால் தொலைக்காட்சிகளுக்கு லாபம். அதில் சந்தேகம் இல்லை. இலாபம் இல்லாவிட்டால் இத்தனை தொலைக்காட்சிகள் இந்தியாவில் வந்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் விளம்பரதாரர்களுக்கு? அவர்களுக்கு செலவு இருக்கிறது என்பது எனது வாதம் இல்லை.

பிறகு என்னதான் கூற வருகிறேன்.ஒவ்வொரு சேனல்களுக்கும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்களை கம்பெனிகள் கொடுக்கின்றன. அந்தப் பணத்தின் மூலம் எங்கே இருந்து வருகிறது?

பொருட்களின் விலையை ஏற்றி நமது தலையில் கைவைத்து, நம்முடைய பணத்தை அதிகம் வசூல் செய்து, அதை தொலைக்காட்சிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள் - உற்பத்தி நிறுவனங்கள்.

3 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு,இந்தியா முழுவதும் 200+ சேனல்களில், பல்வேறு மொழிகளில் விளம்பரம் செய்வதற்காக, உற்பத்தியாளர்கள் அந்தப் பொருளின் மதிப்பை 30 ரூபாய்க்கு ஏற்றிவிடுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை.

ஷாப்பிங்க் மால்களின் கவுண்டர்களில். அங்கேயும் ஒரு பெரிய ப்ளாஸ்மா / எல்சிடி தொலைக்காட்சியைத் தொங்கவிட்டிருப்பார்கள். இந்த அதிகப்படியான 27 ரூபாய் துகையை அந்த மால்களில் இருக்கும் டிவியைப் பார்த்துக்கொண்டே, பல்லை இளித்துக்கொண்டே இந்தத் தொகையைச் செலுத்துகிறோம்.

ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் நபரும், அங்கே இருக்கும் மளிகைக் கடையில் இதே 27 ரூபாய் அதிகரிக்கப்பட்ட துகையைக் கட்டுகிறார் என்பதை மறுக்க இயலுமா?

ஒட்டுமொத்த இந்தியாவில் இத்தனை மொழிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு மொழி - அது தமிழ் / தெலுங்கு / இந்தி / இங்கிலீஷ் - எதோ ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்.

ஒரே ஒரு மொழி - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருந்தால் 200+ வந்திருக்குமா?
”அரைத்த மாவை அரைப்போமா? துவைச்ச துணியைத் துவைப்போமா?” என எல்லா சேனல்களிலும் எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்புவார்கள்?

மிஞ்சி மிஞ்சிப் போனால் 10 முதல் 30 சேனல்கள் இருந்திருக்கும். பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் இந்த 30 சேனல்களுக்குக் கொடுக்கும் விளம்பரக் கட்டணம் குறைவாகத் தான் இருந்திருக்கும்.

3 ரூபாய் பொருளை அதிகபட்சம் 9 ரூபாய்க்கு நாம் வாங்கலாம்.

நண்பர் குமாரின் வீட்டில் தொலைக்காட்சியே இல்லை என்று வைத்துக்கொள்வோம். அவருமே 3 ரூபாய் பொருளை இப்போது 30 ரூபாய்க்குத்தானே வாங்குகிறார். அதை என்னவென்று சொல்வது?

இங்கே அவருக்காக நாம் எல்லோரும் சொல்லவேண்டியது : “என்ன கொடுமை சார் இது?”..

சரி இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

எங்கேயாவது குண்டுவெடிப்பு / குண்டுவீச்சு நடந்துவிட்டால் ஆட்சியாளர்கள் முதலில் என்ன செய்கிறார்கள். “குண்டு வெடிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்”, என ஒரு அறிக்கை வாசித்துவிட்டுப் போவார்கள்.

இங்கே இந்தியாவில் ஆட்சியாளர்கள் மாறுவார்கள். ஆட்சித்தலைமை மாறும். மக்களும் மாறுவார்கள். ஆனால் எந்த ஆட்சியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் - இந்தக் கண்டன அறிக்கை வாசகம் மட்டும் மாறாது.

வருமுன் காப்போம் என்பார்கள். இங்கே நமக்கு இவ்வளவு தொல்லை ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்.

”காலத்தின் கையில் அது இருக்கு!” என உச்சநடிகரின் பாட்டைப் பாடிக்கொண்டு நடையைக் கட்டவேண்டியதுதானா?


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ, அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டுயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாதோ, அதி இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொருநாள், அது வேறோருவருடையாதாகும்.

” இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமாகும் “


--- http://vijaybalajithecitizen.blogspot.com

க.கமலக்கண்ணன்
29-11-2008, 11:09 AM
முடியாது நண்பா அமெரிக்காவில் ஒபாமா போல இந்தியாவிற்கு வலுவானா ஒருவர் வந்தால் ஒரு வேளை தீர்வு கிடைக்கலாம் உங்களின் குமுறல்கள்...

ராஜா
29-11-2008, 01:41 PM
பார்வையாளர்களின் எண்ணிக்கை விகிதத்துக்கேற்ப, தொலைக்காட்சிகள் விளம்பரக்கட்டணத்தை உயர்த்திவிடும். ( உதாரணமாக, அதிக டி.ஆர்.பி. ரேட்டிங் உள்ள சன் டிவி ப்ரைம் டைம் விளம்பரக் கட்டணத்தைவிட....
குறைவான பார்வையாளர்கள் கொண்ட மெகா டிவியின் விளம்பரக் கட்டணம் பன்மடங்கு குறைவு.)

எனவே எல்லோரும் சில சானல்களை மட்டும் பார்த்தால், பொருட்களின் விலை குறையும் என்பது ஏற்கவியலாத ஒன்று.

கண்மணி
01-12-2008, 04:50 AM
ஒரு பக்கத்தை பார்க்கிற நீங்கள் மறுபக்கத்தைப் பார்க்கலியே..

100 சேனல்கள் 18 மொழிகள்.. விதவிதமான விளம்பரங்கள்.. எத்தனை வேலைவாய்ப்பு பாருங்கள்.

ஒரே விளம்பரத்தை மொழி மாற்றம் செய்தாலும் கூடுதலாக ஒவ்வொரு மொழிக்கும் குறைந்த பட்சம் இருவருக்கு வேலை கிடைக்கிறதே.

உள்ளூர் ஊறுகாய் விளம்பரம் டெல்லி வரை செய்ய வேண்டுமென்றால் அந்தச் சிறு தொழிலதிபர் பாவம் பணத்திற்கு எங்கே போவார்?

அட நீங்களே லோக்கலில் ஒரு பியூட்டி பார்லர் ஆரம்பித்தால் எங்கே எப்படி விளம்பரம் செய்யறது? பட்ஜெட் தாங்குமா?

திருவிழா மேடைகளில் ஆடிக்கொண்டிருப்பவர்கள் திரைப்படங்களில் வருவதெப்படி? பல சேனல்கள் இருப்பதால்தானே பலரின் திறமைகள் வெளியே வருகின்றன,

அடிக்கிற கைதான் அணைக்கும். தமிழன் இந்தப் பழமொழியைத் தெரியாமச் சொல்லலை. ஒரு விஷயத்தில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். நல்லதை நாசூக்காப் பயன்படுத்திகிட்டு கெட்டதை தள்ளி வைக்கிறதுக்குத்தான் நமக்கு பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கு.

உங்களுக்கு சக்க்தி மசாலாவும் ஆச்சி மிளகாய்தூளும் எம்.டி.ஆருக்கு போட்டியா எப்படி சந்தையில் வந்துச்சு தெரியுமா? ஆரம்பக் காலத்தில லோகல் சேனல் விளம்பரம். உள்ளூர் மார்க்கெட்டைப் பிடிச்சு அப்புறம் மாநிலம், இந்தியா அப்படின்னு போயி இப்போ இண்டர்நேஷனல் மார்க்கெட்டைப் பிடிச்சிருக்கு.

ம்ம்ம்... என்ன சொல்றது விட்டா நாட்ல ரேஷன் கடை மட்டும் போதும் சில்லறை மளிகை வியாபாரம் கூட இருக்கக் கூடாது அப்படின்னு சொல்வீங்க போல இருக்கு,

அதாவது சுருக்கமா சொன்னா..

வருமானம் - செலவு இரண்டுக்கும் ஒரு பேலன்ஸ் இருக்கணும்.. அது நல்லது..

வருமானமே இல்லாம செலவைக் குறைக்க திட்டம் போடறது ஆகற காரியமில்லை.

lolluvathiyar
02-12-2008, 02:46 PM
ஒரே மொழி கொன்டு வருவது சாத்தியமில்லாதது. அனைவரும் பல இந்திய மொழி கத்துக்க வேன்டும். அது தனி.
விளம்பரத்துக்காக ஒரே மொழி என்பது பயனில்லை.

அய்யா
02-12-2008, 07:42 PM
100 கோடி மக்களும் ஒரே மொழியில் பார்த்தாலும் 200 அலைவரிசைகள் வரை உருவாக வாய்ப்பிருக்கிறதே. அப்போதும் விளம்பரக்கட்டணம் அதிகரிக்குமே. அப்போது 10 சானல்கள்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு விதிப்பீர்களா?

selvanntamil
07-12-2008, 06:08 PM
இந்தியாவில் ஒரே மொழி கொண்டு வரவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.அப்படி ஏற்றுக்கொண்டால் எந்த மொழியை ஏற்றுக்கொள்வது? நம் தமிழை விட்டுக் கொடுத்து விடலாமா? அது சாத்தியமா? இப்போதே உலக மொழியாக ஆங்கிலமும் இந்திய மொழியாக இந்தியும் உள்ளதே! அதையே பயன்படுத்தலாமே. பன்மொழியே இந்தியத் தாயின் அழகு. . ”வேற்றுமையில் ஒற்றுமை” அதுவே சிறந்தது.

miindum
11-12-2008, 07:13 AM
நான் சொல்ல வருவது...தேசம் என தனியா பிரிவினையை உண்டுபண்ணுரீங்க...உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துவிட்டு ஒரே மொழி பேசுவோம்...அதான் மனித ஒற்றுமை...

போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா....!!!!!!


நடக்காத விஷய்த்தை ஏன் வெட்டியா கிளருறீங்க...

எலிவளையானாலும் தனி வளையா இருக்குனுமோல்ல.....

பால்ராஜ்
15-09-2009, 04:35 PM
மௌனம் நல்ல மொழி...
எங்கேயோ வாசித்தது ஞாபகம் வருகிறது

எனது மௌனத்தை புரிந்து கொள்ளாவிட்டால்
எனது வார்த்தையை ஒரு நாளூம் புரிய மாட்டாய்...

என்பது..

வெற்றி வாசன்
18-09-2009, 09:16 AM
விலை வாசி குறைக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் ந்யயமானது. அனால் அதற்கும் ஒரே மொழி தீர்வு ஆகாது.

சன் டிவி இல வரும் விளம்பரம் கலைஞர் டிவி அல்லது ஜெயா டிவி இல வரத்து என்ற உத்திரவாதம் உள்ளதா என்ன .

வேண்டுமானால் இப்படி சொல்லலாம், ஒரு மொழி, ஒரு சேனல் என்ற கிள்கை ஒருஅளவுக்கு உங்கள் என்னத்தை நிறைவேற்றும்.

வியாசன்
24-09-2009, 05:46 AM
நண்பர்களே இப்போதும் இந்தியநாட்டில் ஒருமொழிதானே ஆட்சியாக இருக்கின்றது. இந்த தலைப்பை தொடங்கிய நண்பர் விளம்பரத்தினால்தான் பொருட்களின் விலை ஏறுகின்றது என்று குறிப்பிடுவது தவறு. பலநிறுவனங்கள் வரிகட்டுவதை குறைப்பதற்காகத்தான் அதிக விளம்பரம் செய்கின்றது. இந்திய பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கே அனுமதியில்லை. அப்படியானல் ஒரு மொழிதானே இருக்கின்றது.

கண்மணி
24-09-2009, 05:51 AM
3 ரூபாய் பொருளை ஒருவர் 30 ரூபாய்க்கு விற்கிறார் என்றால் அதை ஒரு பிரச்சனையா பார்க்கறதை விட ஒரு வாய்ப்பா பார்க்கலாம்.

அந்த மூணு ரூபாய் பொருள் என்ன? அதை எப்படித் தரமாக தயாரிப்பது என்று தெரிஞ்சு சொன்னீங்கன்னா,

குடிசைத் தொழிலா ஒரு மகளிர் சுய உதவிக் குழு மூலமா செஞ்சு லோக்கல் நியூஸ்பேப்பர், லோக்கல் கேபிள் டி.வி மூலம் மட்டுமே விளம்பரம் செஞ்சு 6 ரூபாய்க்கு விக்கலாம்.

என்ன செய்யறதுன்னே தெரியாம முழிக்கறவுங்க பலர் இருக்கற இடத்தில, இப்படிப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக்குவீங்களா, அதை விட்டுட்டு மொழிகள் மேல பழியைப் போட்டுட்டு வழியை பாத்துக்கிட்டு போறீங்களே!!!

கண்மணி
24-09-2009, 06:08 AM
. இந்திய பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கே அனுமதியில்லை. அப்படியானல் ஒரு மொழிதானே இருக்கின்றது.


இது தவறான தகவல். பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர். ஒரு எம்.பி இவற்றில் எதில் வேணும்னாலும் பேசலாம். அதன் ஹிந்தி / ஆங்கில மொழி பெயர்ப்பு ஹெட்ஃபோனில் கிடைக்கும்.

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மந்திரிகள் மாத்திரமே ஹிந்தி / ஆங்கிலத்தில் பதில் சொல்லும் மரபை கடை பிடிக்கிறார்கள். காரணம் உடனடி மொழி பெயர்ப்பில் சிறிதேனும் பிழை ஏற்பட்டால் பொருள் மாறிவிடும் அல்லவா!

வியாசன்
24-09-2009, 02:18 PM
இது தவறான தகவல்.

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மந்திரிகள் மாத்திரமே ஹிந்தி / ஆங்கிலத்தில் பதில் சொல்லும் மரபை கடை பிடிக்கிறார்கள். காரணம் உடனடி மொழி பெயர்ப்பில் சிறிதேனும் பிழை ஏற்பட்டால் பொருள் மாறிவிடும் அல்லவா!

கண்மணி எனக்கும் தெரியும் அமைச்சர்கள் மட்டும் பதிலளிக்கமுடியாது என்பது. இந்தி மொழியில் பதிலளிக்க அனுமதித்தவர்கள் ஏன் மற்றையமொழியில் அனுமதிக்க கூடாது. அப்படியானால் எல்லோரும் இந்தி கற்கவேண்டும். பிறகென்ன ஒருமொழிதானே? :lachen001:

aren
24-09-2009, 03:45 PM
ராஜா அவர்கள் கூறும் கருத்துத்தான் என்னுடையதும். அதிகமாக ஒரு டிவியை மக்கள் பார்த்தால் அதில் வரும் விளம்பரங்களுக்கு வியாபாரிகள் அதிகம் பணம் கொடுக்கவேண்டும். ஆகையால் அவர்கள் இதேமாதிரியான தொகையையே அப்பொழுதும் செலுத்துவார்கள்.

இந்த தொலைகாட்சிகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில்மட்டும் இருந்தால் ஒரு மொழி கொள்கையை நான் ஒப்புக்கொள்கிறேன்.

கண்மணி
24-09-2009, 03:46 PM
அனுமதி இல்லைன்னு யார் சொன்னது? அப்படி ஒரு சட்டமும் இல்லை, அது மரபு மாத்திரமே... அதை தெளிவா எழுதி இருக்கனே!!!

கண்ணைத் துடைச்சிகிட்டுப் படிங்க... காரணம் என்னன்னும் சொல்லி இருக்கேன்,,

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மந்திரிகள் மாத்திரமே ஹிந்தி / ஆங்கிலத்தில் பதில் சொல்லும் மரபை கடை பிடிக்கிறார்கள். காரணம் உடனடி மொழி பெயர்ப்பில் சிறிதேனும் பிழை ஏற்பட்டால் பொருள் மாறிவிடும் அல்லவா!

அரசு நிலத்தை பதவியிலிருப்போர் வாங்கக்கூடாது என்பது நடத்தை வழிமுறையே தவிர சட்டம் அல்ல. அதனால் இன்னார் நிலம் வாங்கி இருந்தாலும் அது குற்றம் இல்லை என தமிழக உயர் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உங்களுக்கு நினைவு கூர விழைகிறேன். அதாவது இந்தியாவில் மரபை உடைப்பது குற்றமே இல்லைங்க வியாசன்,


இதை எல்லோருமே கண்டுக்கலை.. எதிர்க்கலை என்பதையும் நினைவு கொள்ளவும்..:D :D :D

aren
24-09-2009, 03:52 PM
கண்மணி எனக்கும் தெரியும் அமைச்சர்கள் மட்டும் பதிலளிக்கமுடியாது என்பது. இந்தி மொழியில் பதிலளிக்க அனுமதித்தவர்கள் ஏன் மற்றையமொழியில் அனுமதிக்க கூடாது. அப்படியானால் எல்லோரும் இந்தி கற்கவேண்டும். பிறகென்ன ஒருமொழிதானே? :lachen001:

எனக்கும் இது கொஞ்சம் உறுத்துகிறது. ஏன் இந்தி பேசுபவர்கள் தன் தாய் மொழியில் பதில் சொல்கிறார்கள், ஆனால் அது மற்றவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

மொழி பெயர்ப்பாளர்கள் இருப்பதால் ஒரு சில வார்த்தைகள் தவிற மொத்தத்தில் என்ன பேசுகிறார் என்று தெரிந்துகொள்ளமுடியும். தமிழும் ஆங்கிலமும் தெரிந்த தமிழ் எம்.பிக்கள் இந்தியில் நிகழ்த்தும் உரைகளை எப்படி புரிந்துகொள்ளமுடியும், அங்கு உட்காருவதே வீணாகிவிட்டதே.

அப்படியென்றால் ஆங்கிலத்தில் மட்டுமே மந்திரிகள் பேசவேண்டும் என்று சொன்னால் இது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

தாமரை
24-09-2009, 04:10 PM
மத்திய ஆட்சி மொழி என்ற அந்தஸ்தை ஹிந்திக்கு 90 சதவிகித மாநிலங்கள் கொடுத்து விட்டன. தமிழ்நாடு மட்டும்தான் அங்கீகாரம் கொடுக்கலை தெரியுமா?

ஒரு வெளிநாட்டு மொழி ஏன் இந்தியாவின் ஆட்சி மொழியா இருக்கணும்? இந்தியாவில் மொழி வளமே இல்லையா என்ன?

நிறைய மொழிகள் கற்பவர்களின் வளர்ச்சி முதல் இரண்டு மூன்று வருடங்கள் குறைவா இருந்தாலும் அதன் பிறகு பிரம்மிக்கும் வகையில் இருக்கு என்று ஆராய்ட்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் அமெரிக்கா, ஐரோப்பா முழுதுமே மக்கள் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்க ஆரம்பித்து விட்டனர்.

நிறைய மொழி படித்தவர்கள் விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பாணியே அலாதிதானுங்க,

1. மத்திய ஆட்சி மொழியாக ஒரு மொழி
2. மாநில ஆட்சி மொழியாக இன்னொரு மொழி
3. தங்கள் சமூக இனங்களுக்காக ஒரு மொழி
4. உலகை அறிந்து கொள்ள ஒரு மொழி
5. தொழிலுக்காக சில மொழிகள்

இப்படி ஒருவர் சில மொழிகளை ஒருவர் தெரிந்து கொள்வது முக்கியமா பகுத்தறிவை வளர்க்கும்.. தனி மனிதனுக்கு அது மிக மிக முக்கியம்.

வாழ்க்கை எளிதா இருக்கும் என்பதை விட அர்த்தமுள்ளதா இருக்கணும்.

அதுக்கு பலமொழிகள் மிக மிக அத்தியாவசியம்.

அறிஞர்
24-09-2009, 04:20 PM
இந்தி தெரியாவதர்கள் என்றால்.. தமிழர்கள் தான் என்ற நிலை உள்ளது. அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் தமிழை வளர்க்கிறோம் என்று இந்தியை வரவிடாமல் செய்துவிட்டனர்.

ஒரு நாட்டிற்கு ஒரு மொழியென்று இருந்தால் நன்றாக இருக்கும். மாநில மொழிகள் தொடர்ந்து செயல்படுவதில் தவறில்லை.

aren
24-09-2009, 05:18 PM
தமிழ்நாட்டை வடநாட்டு மன்னர்கள் யாரும் ஆட்சி செய்யவில்லை ஆகையால் நம்முடைய மொழி அப்படியே இருந்தது, ஆனால் மற்ற மாநிலங்களில் வடநாட்டு மன்னர்களின் ஆட்சி இருந்ததால் அவர்களுடைய மொழியும் கலாச்சாரமும் எளிதாக அந்த மாநிலங்களில் ஏற்பட்டுவிட்டது.

இப்பொழுது இருக்கும் இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெறும்பொழுது வடநாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழர்களையும் இதில் சேர்ந்துகொள்ளச்சொன்னார்கள். அதுவரை நாம் தனித்தே இருந்தோம். அப்படி சேரும்பொழுதும்கூட சுதந்திரம் பெறும் லட்சியம் ஒன்றே பெரிதாக இருந்தது.

பிரிட்டனிமிருந்து நாம் சுதந்திரம் பெரும்பொழுது காந்தி நேரு ஆகியோர் மிகப்பெரிய தலைவர்களாக ஆகிவிட்டார்கள் ஆனால் தமிழ்நாட்டில் பெரியார் மட்டுமே இருந்தார். ராஜாஜி காமராஜர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்கள் ஆகையால் அவர்கள் நேருவையும் காந்தியையும் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுடைய கொள்கையை அப்படியே பின்பற்றினார்கள்.

ராஜாஜி அவர்கள் வடநாட்டினருடன் சேர்ந்துகொண்டு இந்தியை தமிழகத்தில் கட்டாயப்பாடமாக்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள் பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும்.

பின்னர் எதிர்ப்பு வலுவாகவே, ராஜாஜி அவர்கள் இந்தி விஷயத்தில் கொஞ்சம் பின்வாங்கினார்.

தமிழகம் எப்பொழுதும் தனித்தே இருந்திருக்கிறது. நம் மொழி மற்றும் கலாச்சாரம் அப்படியே நம்மிடமே இருக்கிறது.

இதனால்தான் இந்தியை ஆட்சி மொழியாக தமிழகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இனிமேலும் இந்தியை தமிழகத்தில் திணிக்கமுடியாது. அப்படி முயற்சித்தால் பிரிவினை எதிர்ப்பு மறுபடியும் தலைதூக்கும்.

ஒரே வழி, இந்திக்கு நிகராக ஆங்கிலத்தையும் வைத்திருப்பதுதான் என்பது என்னுடைய கருத்து.

வியாசன்
24-09-2009, 08:08 PM
பலமொழிகள் பேசப்படும் இடத்தில் ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது பிரிவினைக்கு வழிவகுக்கும். இதுவும் ஒருவகை அடக்கு முறையே. அறிஞர் அவர்களும் தாமரை அவர்களும் ஒரு மொழி போதுமென்கின்றார்கள். அப்படி ஒருமைப்பாடு மற்றவிடயங்களில் காணமுடியவில்லையே. பொதுவாக தமிழ்நாட்டுக்கு இதுவரையும் காவிரிப்பிரச்சனையில் தீர்வுகாணமுடியவில்லை. ஒருமைப்பாடு காண்பதாயின் இந்த நதிநீர்ப்பிரச்சனையை மத்திய அரசு தீர்த்து வைக்க முடியுமல்லவா?
தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தினந்தோறும் தாக்கப்படுகின்றனர். கேட்பதற்கு நாதியில்லை. நண்பர்களே மொழியும் மதமும் ஒவ்வொரு இனத்தின் தனித்தன்மை இதை இழப்பது நல்லதல்ல.
ஒரே மதமாக இருந்தால் விடுமுறைகள் குறையும் அதனால் உற்பத்தி அதிகரிக்கும் அதற்கும் நீங்கள் தயாரா?

கண்மணி
25-09-2009, 02:42 AM
இதுதாங்க கூத்துன்னு சொல்றது.. பிரச்சனை மாநிலத்துக்கு மாநிலம் மட்டுமல்ல மாவட்டத்துக்கு மாவட்டம், ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு ஏன் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் ஏன் அண்ணன் தமபிகளுக்கு உள்ளயே கூட இருக்கு.

சொத்துத்தகராறு, வரப்புதராறு, தண்ணீர் வண்டித் தகராறு, ஆஸ்பத்திரி தகராறு, கால்வாய் தகராறு இப்படி நமக்குள்ள எத்தனைத் தகராறு இருக்குன்னு மறந்து போச்சா?

ஒருமைப்பாடு எங்கயும் மனசு இருந்தாதான் காணமுடியுமே தவிர "ஸேம் பிஞ்ச்" போட்டுக் காணமுடியாது.

இப்போ ஆரென் அண்ணா சொன்னதைக் கேட்டீங்க இல்லையா? மத்த மாநிலங்களெல்லாம் ஒரு காலத்தில் வடநாட்டவரால் ஆளப்பட்டது. அதனால அவர்கள் ஹிந்தியை ஏற்றுகிட்டாங்க.. நாம ஆங்கிலேயரால் ஆளப்பட்டோம் அதனால் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வோம் என்கிறார்.
:D :D :D
எத்தனை மொழி தெரிந்து கோள்கிறோம் என்பது பெரிய பிரச்சனையே அல்ல.. நம் மொழியை பிழையில்லாமல் கற்று அதற்கு நல்ல படைப்புகள் தந்து வாழ வைக்கிறோமா என்பதுதான் முக்கியம். ஹிந்தி கத்துக்க மாட்டேன் என்றால் தமிழ் வளர்ந்து விடாது...

ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்க மாட்டாங்க.. காரணம் தமிழைக் காக்க பிறமொழி எதிர்ப்பு என்பது வழியே அல்ல..

ஏனுங்க மெசினோட பாஷையெல்லாம் "சி" சி++, பேஸிக், பாஸ்கல், கோபால், ஜாவா அது இதுன்னு படிக்கறீங்களே, மனுஷனோட பாஷையை படிச்சா குறைஞ்சா போயிடுவோம்?

அதுவுமில்லாம 8 கோடிப் பேர்ல அங்கப் போறது ஒரு 80 பேர். அந்த 40 பேர்கூட ஒரு பொதுமொழி படிக்கலைன்னா கேலிக்கூத்தா இல்லையா? (மேல் சபை கீழ்சபை அது இது எல்லாம் சேர்த்து)அதுக்கப்புறம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு தேடறவங்க..

இன்னொரு மொழியை நாம எதிர்க்கறோம் என்றால் அதுக்கு காரணம் நம்முடைய தாழ்வு மனப்பான்மைதான்.

கண்மணி
25-09-2009, 02:51 AM
ஆரம்ப நோக்கத்தில் இருந்து திரி விலகிப் போகுதுன்னு நினைக்கிறேன்.

இந்தியாவிற்கு ஒரே மொழி போதாது என்பதுதான் பலரின் வாதமா இருக்கு,,

மத்திய ஆட்சி மொழியாக ஒண்ணு அல்லது இரண்டு மொழிகள் இருக்கலாம்.

மற்றபடி மொழிகள் உபயோகத்தை அவரவர் விருப்பத்துக்கு விட்டு விடுவது நல்லது என நினைக்கிறேன்,

ஒரே மொழி என்பதால் இதுவரை எந்த பயனையும் (படிக்க எளிது என்பது தவிர (அதாவது அதில் கூட அறிவு வளர்ச்சி குறைவு என்பதைச் சொல்லி) )காணவில்லை.

அதனால் ஒரே மொழி என முயற்சி எடுப்பது வீண்முயற்சி..அந்த நேரத்தில் நாலு நல்ல காரியம் பார்க்கலாம்,

aren
25-09-2009, 04:39 AM
கண்மணி அவர்கள் சொல்வதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன், இந்தி பேசுபவர்கள் ஒரு தென்னிந்திய மொழியையும் கற்றுக்கொள்வதாக இருந்தால்.

அவர்கள் அவர்களுடைய தாய் மொழியில் மட்டும் பேசுவார்களாம் ஆனால் மற்ற மொழிக்காரர்கள் இந்தியை கற்றுக்கொள்ளவேண்டுமாம்.

வியாசன்
25-09-2009, 06:20 AM
கண்மணி அவர்கள் சொல்வதை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கிறேன், இந்தி பேசுபவர்கள் ஒரு தென்னிந்திய மொழியையும் கற்றுக்கொள்வதாக இருந்தால்.

அவர்கள் அவர்களுடைய தாய் மொழியில் மட்டும் பேசுவார்களாம் ஆனால் மற்ற மொழிக்காரர்கள் இந்தியை கற்றுக்கொள்ளவேண்டுமாம்.

உங்கள் கருத்துதான் எனது கருத்தும்.எல்லோரும் எல்லா மொழிகளும் கற்பதாக இருந்தால் அவர்கள் கூறுவது ஏற்புடையது. இந்திக்காரர்கள் வேறுமொழி கற்கமாட்டார்கள் ஆனால் மற்ற மொழிக்காரர்கள் இந்தி கற்கவேண்டுமாம். நாங்கள் இந்த விளையாட்டுக்கு வரமாட்டமில்ல
இதை நீங்கள் தாழ்வுமனப்பான்மை என்றால் அப்படியே இருந்துவிடுகின்றோம். இப்படித்தான் ஒரு இனம் அடுத்த இனத்தின் மீது அடக்குமுறையை பிரயோகிக்கின்றது.
இந்திக்காரர்களின் மனதில் கள்ளம் இல்லையென்றால் அவர்கள் மற்றமொழிகளையும் அங்கீகரிக்கலாம்தானே. மற்றமொழிகளையும் ஏற்றுக்கொள்ளலாம்தானே.

யாரோ ஒருவர் சொன்னதுபோன்று
தாய்மொழி கண்போன்றது பிறமொழிகண்ணாடி போன்றது எங்களுடைய கண்நன்றாக இருக்கும்போது எதற்கு நாம் கண்ணாடியை போடவேண்டும்
பலமொழி பேசப்படும் எந்த ஒரு நாட்டிலும் ஒரு மொழி என்றால் பலநாடுகள் உருவாகும். அதையே பலமொழி என்று வைத்துக்கொண்டால் ஒருநாடாக இருக்கும். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக சுவிற்சலாந்தை கொள்ளமுடியும். 4 மொழிகள் அமைதியான ஒருநாடு..........

கண்மணி
25-09-2009, 06:55 AM
அடடே! அடடே!!

கம்முன்னு 15 மொழியும் தெரிஞ்சா தான் மத்திய அரசு வேலைன்னு மாத்திடலாமா? (அரசாங்கம் செயல்பட மட்டும்தான் ஒரு பொதுமொழி தேவைப்படுது)


தமிழ் நாட்டின் ஆட்சி மொழி ஹிந்தி என அறிவிப்பு கொண்டு வந்தாதான் அது ஆதிக்கம்.


ஹிந்திக்காரர்கள் என்று நீங்க சொல்றது யாரை? காஷ்மீரிகள், பஞ்சாபிகள், ராஜஸ்தானிகள், பீகாரிகள், வங்காளிகள், மராட்டியர்கள், மணிப்பூரிகள், குஜராத்திகள், உருது பேசுபவர்கள் இப்படி பல மொழிகளும் கலந்த கலவைகள். :D :D :D

தென்னிந்திய மொழிகளான தெலுகு, கன்னடம், மலையாளம், கொங்கணி, துளு இவர்கள் உங்க வாதத்தை ஒத்துக்கலை என்றாலும் அவங்களை உங்களோட சேர்த்துக்க முயற்சி செய்யறீங்க.. சரியா...?

இப்போ இருக்கற நிலைமை எல்லா மாநிலங்களுக்காகவும் ஹிந்தி, தமிழ் நாட்டுக்காக ஆங்கிலம். சரியா?


தென்னிந்திய மாநிலங்கள் ஒரே ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்த மொழியும் மட்டும் ஆட்சி மொழியா இருக்கட்டும்னு கூடச் சொல்லலாமே? சொல்லுவாங்களா? முடியுமா?

ஏன் தமிழ் நாட்டில் கூடத்தான் பல மொழி பேசுபவர்கள் இருக்கோம். கூட மாநில ஆட்சி மொழியா தெலுகையோ கன்னடத்தையோ சேர்த்துக்கலாமே? ஏன் தமிழ் மட்டும்?

நாம் மற்றவங்களுக்கு என்ன அறிவுரை சொல்றோமோ அதை ஏன் நாம முதல்ல உபயோகிக்கக் கூடாது?

வியாசன்
25-09-2009, 09:23 AM
கண்மணி நீங்கள் தவறாக விளங்கிக்கொள்கின்றீர்கள். ஒருவர் எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறல்ல. ஆனால் திணிப்பது என்பது வேறுவிடயம். உங்களுக்கு தெரியுமா ஒரு நாட்டில் ஆட்சிப் பொறுப்பு (ஆட்சியில் இருக்கும் கட்சியினது) உறுப்பினர்களுக்கு மாறிச்செல்கின்றது. தேர்தல் நடப்பதே ஒன்றும் பெரிதாக தெரியாது. நீங்கள் என்னதான் சொன்னாலும் பலமொழி பேசுகின்ற நாட்டில் ஒருமொழி ஆட்சிமொழியாக இருந்தால் அது அடக்குமறையை நோக்கித்தான் செல்லும்.
இந்தி பேசாத மாநிலங்களில் ரயில் நிலையங்களில் இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இதனால் இந்தி பேசுகின்ற மக்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் மற்றமொழி பேசுகின்றவர்கள் இந்தி அல்லது ஆங்கிலம் கற்க வேண்டியவர்களாகின்றனர். இந்தியநாட்டில் படிக்காத பாமரர்கள்தானே அதிகம்.
இது ஒரு மொழிபேசுகின்றவர்களுக்கு கிடைக்கின்ற சலுகை.
என்னைப்பொறுத்தவரை எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். ஆட்சிமொழியாக ஒருமொழியை ஏற்றுக்கொள்ளவே முடியாது

கண்மணி
25-09-2009, 09:41 AM
நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கீங்க. பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் இந்த நிலை மாறிடுமா என்ன?

அடக்கு முறைக்கும் ஒற்றை மொழிக்கும் சம்மந்தமில்லாமல் சம்மந்தப்படுத்திறீங்க..

நான் மேலே சொல்லி இருக்கிற மாதிரி தமிழ்நாட்டில் உள்ள கன்னட / தெலுகு / ஹிந்தி பேசும் மக்களை அந்த அளவா அடக்கி ஆதிக்கம் செஞ்சுகிட்டு இருக்கீங்க? யோசிச்சுப் பாருங்க..

நாம அடிபணிஞ்சு போகிற வரைக்கும் மற்றவங்க நம்மளை அடக்க முடியாது..

ஆங்கிலத்தை நாம் ஏன் தூக்கி எறியலை? அது மட்டும் ஆதிக்கம் இல்லையா??

அதை மறந்திட்டீங்களா?

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் - இணைப்பு மொழி ஆங்கிலம்...

இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி - இணைப்பு மொழி ஆங்கிலம்

(மக்கள் தொடர்பு கொண்ட) எந்த அரசு அதிகாரியும் அவர் எந்தப் பகுதியில் பணி செய்கிறாரோ

அந்தப் பகுதியில் உள்ளூர் மொழி, ஹிந்தி, ஆங்கிலம் மூன்றையும் அறிந்திருக்க வேண்டும்.

இதுக்கு அர்த்தம் தமிழ் நாட்டில் உள்ள கடைசிக் குடிமகன் வரை ஹிந்தி மட்டுமே படிக்கணும் பேசணும் என்பது அல்ல. அப்படிப் புரிஞ்சுக்கறதினால தான் இப்படிப் பேசறீங்க...

அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி," அவர்களுடைய உள்ளூர் மொழி" கட்டாயமாக்கப் படவேண்டும்.
மற்றவர்கள் அவங்க தேவைக்கேற்ப கற்க வேண்டும். அதுதான் நியாயம் தர்மம்.

நான் தமிழ் மட்டும்தான் படிப்ப்பேன் என பொறுப்பில்லாம பேசறவங்களை பாராளுமன்றத்துக்கு ஏன் அனுப்பனும்? அதை முதல்ல யோசிங்க. தன்னுடைய தொகுதி மக்களுக்காக ஒரே ஒரு மொழியை கத்துக்க விரும்பாதவங்களை, அதாவது சின்னத்தியாகம் கூட செய்யத் தயாராக இல்லாதவங்களை எதுக்கு அனுப்பனும்?

அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு மூணு பாஷை கட்டாயம், மத்தவங்க தேவைக்கேற்ப என்றால் அதுதான் சரியான வாதம்.

குடிமக்கள் அனைவரும் கட்டாயம் ஹிந்தி படிக்கணும் என்றால்தான் அது அடக்கு முறையின் ஆரம்பம். ஹிந்தி மட்டும்தான் படிக்கணும் என்றால்தான் அடக்கு முறை.

ஒவ்வொரு நகரத்திலும் அரசு அலுவலர்களுக்கு உள்ளூர் மொழி கத்து கொடுத்தா (தினம் ஒரு மணி நேரம்) நான் சொன்ன திட்டம் அமுலாகிடும்.

அரசியல்வாதிகளும் அதீகாரிகளும் தங்கள் சோம்பேறித்தனத்தை மறைக்கச் சொல்லும் காரணத்தை நீங்களும் பிடிச்சுகிட்டு தொங்கறீங்களே என்பதுதான் வருத்தமா இருக்கு.

வியாசன்
25-09-2009, 09:51 AM
நீங்கள்தான் தவறாக புரிந்து கொண்டிருக்கீங்க. பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் இந்த நிலை மாறிடுமா என்ன?

அடக்கு முறைக்கும் ஒற்றை மொழிக்கும் சம்மந்தமில்லாமல் சம்மந்தப்படுத்திறீங்க..

நான் மேலே சொல்லி இருக்கிற மாதிரி தமிழ்நாட்டில் உள்ள கன்னட / தெலுகு / ஹிந்தி பேசும் மக்களை அந்த அளவா அடக்கி ஆதிக்கம் செஞ்சுகிட்டு இருக்கீங்க? யோசிச்சுப் பாருங்க..

மற்றவங்க நம்மளை நாம அடிபணிஞ்சு போகிற வரைக்கும் அடக்க முடியாது..

ஆங்கிலத்தை நாம் ஏன் தூக்கி எறியலை? அது மட்டும் ஆதிக்கம் இல்லையா??இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி - இணைப்பு மொழி ஆங்கிலம்

(மக்கள் தொடர்பு கொண்ட) எந்த அரசு அதிகாரியும் அவர் எந்தப் பகுதியில் பணி செய்கிறாரோ

அந்தப் பகுதியில் உள்ளூர் மொழி, ஹிந்தி, ஆங்கிலம் மூன்றையும் அறிந்திருக்க வேண்டும்.

இதுக்கு அர்த்தம் தமிழ் நாட்டில் உள்ள கடைசிக் குடிமகன் வரை ஹிந்தி மட்டுமே படிக்கணும் பேசணும் என்பது அல்ல. அப்படிப் புரிஞ்சுக்கறதினால தான் இப்படிப் பேசறீங்க...

அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி, அவர்களுடைய உள்ளூர் மொழி கட்டாயமாக்கப் படவேண்டும்.


உங்கள் எண்ணம் அதுவாக இருந்தால் நிச்சயமாக எந்தஒரு அரச அலுவலகத்திலும் யாராவது ஒருவர் அங்கீகாரம் பெற்ற மொழிகளை பேசுபவர் ஒருவர் இருக்கவேண்டும்.

உதாரணமாக

இந்தி+ஆங்கிலம்+தமிழ்
இந்தி +ஆங்கிலம்+தெலுங்கு
இந்தி+ஆங்கிலம்+மலையாளம்

என்று இருக்க வேண்டும். அப்படியில்லாமல் தனியாக இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்று சொல்வது தவறான கருத்தாகும். நேர்மையான அரசாக இருந்தால் இதை செயற்படுத்த வேண்டும். அப்படியில்லாமல் தனியே இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல

கண்மணி
25-09-2009, 10:08 AM
நான் சொன்னதை நீங்க கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரம்பித்து இருக்கீங்க..

இன்னும் கொஞ்சம் தெளிவா..

தமிழ் நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு தமிழ் + ஆங்கிலம் + ஹிந்தி தெரிஞ்சிருக்கணும்

பஞ்சாபில் உள்ள அதிகாரிக்கு பஞ்சாபி + ஆங்கிலம் + ஹிந்தி தெரிஞ்சிருக்கனும்.

அதே மாதிரி உள்ளூர் அரசியல்வாதிக்கு உள்ளூர் மொழியும் தேசிய அரசியல்வாதிக்கு உள்ளூர் மொழி தேசிய மொழி இரண்டும் கூடவே ஆங்கிலமும் தெரிய வேண்டும்..

ஹிந்தி என்பது தமிழ் தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு 95 சதவிகிதம் நாட்டில் பரவி விட்டதால் ஹிந்தி மைய ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெறுகிறது..

தமிழ் தெரியாத தமிழ் நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தாவே நான் சொன்ன நிலைமை வந்திடும்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அதிகாரிக்கு இரண்டு பாஷைதானா என உடனே அழக்கூடாது.. மத்திய பிரதேசத்தில் உள்ள நம்ம அதிகாரி புதுசா ஒரு பாஷையும் கத்துக்க வேணாம் அப்படின்னு சந்தோஷப் படணும். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அந்த எல்லையைத் தாண்டி ரசு வேலைக்குப் போனா இன்னொரு பாஷை கத்துகிட்டே ஆகணுமே என்றும் சந்தோஷப் படணும்.

டெல்லி போன்ற தலைநகரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்ய என மட்டும் முக்கிய அலவலுகங்களில் சில மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கலாம். இவர்கள் நீங்க சொல்றாமாதிரி தமிழ் நாட்டு அதிகாரி ஒருவர், கேரள அதிகாரி ஒருவர் இப்படி இருக்கலாம். இதனால் மக்கள் பயன் பெறுவார்கள்.

ஆனால் மக்கள் கேள்வி கேட்க முடியாத.. பாராளுமன்ற விவாதங்கள் எந்த பாஷையில் இருந்தா என்ன? நம்ம தியாகி அரசியல்வாதி அந்த பாஷையைக் கத்துகிட்டு நமக்குத் தொண்டு செய்யட்டும்..

எவ்வளவோ செய்யறாங்க.. இதைச் செய்ய மாட்டாங்களா என்ன?

வியாசன்
25-09-2009, 10:13 AM
கண்மணி ஏன் பாராளுமன்றத்தில் மற்றமொழி பேசக்கூடாது என்கின்றீர்கள். அதையும் அனுமதிப்பதுதான் நல்லது. இப்போதெல்லாம் பாராளுமன்ற நிகழ்ச்சிகள் நேரடியாக ஒலிபரப்பாகின்றது. அதை மக்கள் புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் தாய்மொழியில் பேசுவதுதான் நல்லது.

கண்மணி
25-09-2009, 10:22 AM
அதை நம்ம ஒளிபரப்பாளர்கள் மொழிமாற்றி உபயோகித்து ஒளிபரப்பலாமே!!!

அப்ப பெங்காளிகள் கூட அட இந்தத் தமிழன் இவ்வளவு அருமையான கருத்தைச் சொல்கிறாரே என வியப்பார்களே மக்கா!!! அப்போது ஒரு தமிழன் பேசியதை ஒவ்வொரு இந்தியனும் கேட்டு ரசிக்கலாமில்லையா!

உதாரணமாக நீங்கள் சொன்ன காவிரிப் பிரச்சனையைப் பற்றி பாராளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கர்நாடக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கேரள, பாண்டிச்சேரி அரசியல்வாதிகள் என்ன பேசுகிறார்கள், மத்திய மந்திரிசபையின் பதில் என்ன என பாமரனுக்கும் புரியுமே..

வியாசன்
25-09-2009, 12:13 PM
அதை நம்ம ஒளிபரப்பாளர்கள் மொழிமாற்றி உபயோகித்து ஒளிபரப்பலாமே!!!

அப்ப பெங்காளிகள் கூட அட இந்தத் தமிழன் இவ்வளவு அருமையான கருத்தைச் சொல்கிறாரே என வியப்பார்களே மக்கா!!! அப்போது ஒரு தமிழன் பேசியதை ஒவ்வொரு இந்தியனும் கேட்டு ரசிக்கலாமில்லையா!

உதாரணமாக நீங்கள் சொன்ன காவிரிப் பிரச்சனையைப் பற்றி பாராளுமன்றத்தில் தமிழக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கர்நாடக அரசியல்வாதி என்ன பேசுகிறார், கேரள, பாண்டிச்சேரி அரசியல்வாதிகள் என்ன பேசுகிறார்கள், மத்திய மந்திரிசபையின் பதில் என்ன என பாமரனுக்கும் புரியுமே..

கண்மணி சுத்தி சுத்தி கடைசியில் நாம் ஆரம்பித்த இடத்துக்கு வந்துவிட்டோம். தலைப்பை ஒரு தடவை படியுங்கள் தொலைக்காட்சியில்தான் போய் முடிகின்றது. எனக்கென்னவோ இந்த விவாதம் அபத்தமாக போகின்றதுபோல் ஒரு உணர்வு. இதை தொலைக்காட்சிகள் செய்வதைவிட பாராளுமன்றத்தில் அமுல்படுத்துவது மேலாக தெரிகின்றது.
இலங்கையிலும் இப்படித்தான் சிங்களத்தை கட்டாயமாக அமுல்படுத்தினார்கள்.பிறகு புத்தமதத்தை பிரதானப்படுத்தினார்கள்................இப்போது தீர்க்கமுடியாமல் வந்து நிற்கின்றது.

கண்மணி
26-09-2009, 11:50 AM
நீங்கள் இந்தியாவைப் பற்றி அறியாதவர் மாதிரி பேசுகிறீர்கள்.

இந்தியாவின் ஜனத்தொகை 110 கோடி. அதில் படிக்காதவர்கள் 60 சதவிகிதம். (பெயர் எழுதத் தெரிந்தவர்கள் எல்லாம் படிக்கத் தெரிந்தவர்கள் அல்ல). தனது பகுதியில் புழக்கத்தில் இல்லாத ஒரு மொழியை இந்த 110 கோடிப் பேர் தெரிஞ்சுக்கணும் என்று சொல்கிறீர்கள். நான் சொல்வது 540 + 540 அதாவது 1080 பேர் மட்டும் ஹிந்தி ஆங்கிலம் படித்தால் போதும் என்கிறேன். வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். (ஒரு வேளை நீங்க அரசியல்வாதியோ.. நான் ஹிந்தி கத்துக்க மாட்டேன்.. பள்ளியே இல்லாத,, பள்ளி இருந்தாலும் ஆசிரியர் இல்லாத.. ஆசிரியர் இருந்தாலும் கட்டிடமில்லாத,.. கட்டிடமிருந்தாலும் கூரையில்லாத.. கூரை இருந்தாலும் புத்தகம் இல்லாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே.. ஒரே ஒரு மொழி கத்துக்குங்க என்று சொல்வது போல இருக்கு… யோசிச்சுப் பாருங்க நடக்கற காரியமா அது? தொலைகாட்சியில் பொதுமொழி என்றால் பாராளுமன்றத்தில் எதுக்கு 15 மொழி?)

இந்த 110 கோடி பேர்களுக்கு தகவல் தரும் தொலைகாட்சி ஒரே ஒருமொழிதான் பேசனுமாம்.ஆனால் 540 பேர் உள்ள பாராளுமன்றத்தில் அவரவர் மொழி பேசலாமாம்..இதுக்கு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்வாங்க.

கிடக்கறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வை..

பாராளுமன்றத்தில் மந்திரி பதிலளிக்கும் போது அவர் ஒரு மாநிலத்திற்கு பதில் அளிப்பதில்லை. இந்தியா முழுமைக்கும் பதில் அளிக்கிறார் என்பதை நினைவில் கொள்க. அதனால் அவர் 90 சதம் மக்கள் ஒப்புக் கொண்ட ஹிந்தியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பதில் சொல்வதுதான் முறை.

பாராளுமன்றத்தில் சொந்த மொழியில் பேசவேண்டும் என்பது வறட்டு கௌரவம். வெட்டி பந்தா. அதனால பைசா பிரயோசனம் இல்லை. பாராளுமன்றத்தில் என்ன பேசுகிறோம் எப்படி பேசுகிறோம் என்பதுதான் முக்கியமே தவிர எந்த பாஷையில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை. (இது அரசியல்வாதிகள் காட்டும் மாயாஜாலப்படம் – புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.).

பலமொழி தொலைகாட்சிகள் போனால்தான் மொழிகள் அழிய ஆரம்பிக்கும். அந்த ஒரு மொழி எந்த மொழி என்று சண்டை உண்டானால் அதை தீர்த்து வைக்க அமரனால் கூட முடியாது,,

தொலைகாட்சியில் ஒரே மொழி என்பதால் எந்தப் பொருளின் விலையும் குறையாது.. ஒரு 3 ரூபாய் பொருளை ஒருவன் 30 ரூபாய்க்கு விற்றால், நீங்கள் தொழில் தொடங்கி அதை 6 ரூபாய்க்கு விற்கத் தொடங்குங்கள். அதனால் மட்டுமே விலை குறையும். போட்டிகளால் மட்டுமே விலைவாசியைக் குறைக்க இயலும் என்பதை ஆழமாய் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்...

வியாசன்
26-09-2009, 04:03 PM
கண்மணி உங்களை நினைத்த அழுவதா இல்லை சிரிப்பதா? நான் சொல்லவில்லையே தொலைக்காட்சிகள் ஒருமொழியில் ஒளிபரப்பவேண்டுமென்று. நான் சொன்னது தொலைக்காட்சிகள் மொழி பெயர்ப்பு செய்வதைவிட பாராளுமன்றத்தில் மொழிபெயர்ப்பு செய்வதுதான் நல்லது என்று.
இந்தியாவில் ஏதாவது சட்டம் இருக்கின்றதா ஆங்கிலம் அல்லது இந்திமொழி தொந்தவர்கள்தான் பாராளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடலாம் என்று.
இப்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த இரண்டு மொழிதெரியாதவர்கள் கூட மந்திரியாகமுடியும். பலமில்லா மத்தியஅரசாங்கத்தை சிறுகட்சிகள் மிரட்டி தங்களுக்கு தேவையான பதவிகளை பெற்றுக்கொள்முடியும்.
ஐ.நாவில் கூட எந்தமொழியிலும் பேசக்கூடியதாக இருக்கின்றது. 15 மொழிபேசுகின்ற நாட்டில் இரண்டு மொழி என்றால் உங்களுக்கே உங்களுடைய வாதம் அபத்தமாக தெரியவில்லையா? முகவரியை இழக்க தயராக இருக்கின்றீர்கள் என்பது தெரிகின்றது.
சரி மொழியை விடுவோம் தமிழக மீனவர்கள் தினந்தோறும் தாக்கப்படுகின்றனரே இதுவே இந்தி பேசுகின்ற மக்களாக இருந்தால்? அவுஸ்திரேலியாவில் பம்பாய்காரர்கள் ஒருசிலர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். தென்பகுதியில் தமிழகமீனவர்கள் ஆடைகள் உரியப்பட்டு தாக்கப்படுகின்றனர் இந்தி கிருஸ்ணபரமாத்மாக்கள் துகிலுரிவதை தடுக்க மறுக்கின்றனர். உங்கள் புள்ளிவிபரங்கள் நன்றாகத்தான் இருக்கின்றது. ஏட்டுசுரைக்காய் கறிக்குதவாது.
இப்போதே இந்த கீழானநிலை இருக்கின்ற தங்கள் முகவரியை (மொழியையும்) இழந்துவிட்டால் போதுமய்யா போதும்.
இந்தியா பலநாடுகளாக இருந்தால் பலமாக இருக்கும் ஒருநாடாக இருந்தால் தானே அழிந்து போகும்

கண்மணி
27-09-2009, 10:52 AM
நன்றி வியாசன்.. நீங்களே எனக்காக வாதாடியதற்கு. மராட்டியர்கள் தாக்கப்பட்டதுக்கு கண்டனம் என்றீர்களே சூப்பர்...

பாராளும்ன்றத்தில் லல்லு பிரசாத் ஹிந்தியில் பேசுவதை, மம்தா பெங்காலியில் பேசுவதை தமிழச்சியாகிய நான் எப்படிப் புரிந்து கொள்வது என்று நீங்க சொல்லவே இல்லையே!

பாராளுமன்றத்தில் தமிழில் பேசினால் நீங்கள் சொன்ன அத்தனைப் பிரச்சனையும் தீர்ந்து விடுமா?

அப்பட்யென்றால் இப்பொழுது கூட பேசலாம். மரபை உடைக்கலாம் என்றுதான் ஏறகனவே சொல்லி இருக்கிறேனே..

வழி முறைகளை நீங்களே அலசிச் சொல்லுங்கள்.. நான் மௌனமாக கேட்கிறேன்.

வியாசன்
27-09-2009, 07:33 PM
உங்களுடன் விவாதிப்பதைவிட வேறு ஏதாவது செய்யலாம் குழந்தையைவிட கேவலம் உங்களுக்கு சார்பானதைமட்டும்தான் எடுக்கின்றீர்கள். மற்றவற்றை அம்னீசியா வந்ததுபோல் மறந்துவிடுகின்றீர்கள்.
இந்த பகுதியிலிருந்து விடைபெறுகின்றேன் நண்பியே. தயவுசெய்து இனிமேல் ஒரு இடமும் விவாதிக்க போகாதீர்கள்.
நன்றி

aren
28-09-2009, 07:49 AM
இந்த விவாதம் முதலில் தொடங்கியது தொலைகாட்சி விளம்பரங்களுக்காக. ஆனால் நாம் பாதை மாறி சென்றுவிட்டோம் என்றே நினைக்கிறேன்.

இதை தனி திரியாக மாற்றிவிடலாமே

அய்யா
05-10-2009, 07:26 AM
ஒருவர் எத்தனைமொழிகளையும் கற்றுக்கொள்ளலாம் அது தவறல்ல. ஆனால் திணிப்பது என்பது வேறுவிடயம்.

:icon_b::icon_b::icon_b:

பிரம்மத்ராஜா
07-10-2009, 03:57 PM
உங்களுடன் விவாதிப்பதைவிட வேறு ஏதாவது செய்யலாம் குழந்தையைவிட கேவலம் உங்களுக்கு சார்பானதைமட்டும்தான் எடுக்கின்றீர்கள். மற்றவற்றை அம்னீசியா வந்ததுபோல் மறந்துவிடுகின்றீர்கள்.
இந்த பகுதியிலிருந்து விடைபெறுகின்றேன் நண்பியே. தயவுசெய்து இனிமேல் ஒரு இடமும் விவாதிக்க போகாதீர்கள்.
நன்றி

வியாசன் உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு அதே வேளை கண்மணி சொல்வதிலும் சில நியாயங்கள் இருக்கின்றன விவாதிப்பது என்பது எவ்வளவு ஆரோக்கியமான விஷயம் விவாதிக்கும்போதுதான் நமக்கு தெரியாத பல சங்கதிகளை தெரிந்து கொள்கிறோம் ஒன்றுபட்ட இந்தியா என்பது வரமா சாபமா என்று தெரியவில்லை காலம்தான் பதில் சொல்லும் ஆனால் இப்போது உருவாகியிருக்கும் அரசியல் கலாசாரம் எங்கே கொண்டு செல்கிறது இந்தியாவை மாநிலங்களுக்கு இடையிலான உரசல் நாளுக்கு நாள் அதிகமாகிகொண்டுதானே இருக்கிறது ரஷியா உடைந்து தனி நாடுகளாக பிரிந்தது நாம் அறிந்ததுதானே அரோக்கியமான விவாதங்கள் தொடர்வதில் சந்தோசமே
தொடரட்டும் விவாதம் :icon_rollout:

சுகந்தப்ரீதன்
08-10-2009, 10:37 AM
கண்மணி அக்கா மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளின் அற்பத்தனமான கொள்கைகளை தூக்கி பிடிப்பதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை.!! மாறாக உங்கள் வாதத்தின் நோக்கம் நன்மைக்குதான் என்றறிந்தாலும் அதன் போக்கில் சில இடங்களில் முரண்பாடு இருப்பதாக எனக்கு தோன்றுகிறது... அதை உரைத்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன்.. மற்றபடி இந்ததிரியில் மென்மேலும் விவாதத்தை வளர்ப்பது எனது நோக்கமல்ல..!!

இப்போ ஆரென் அண்ணா சொன்னதைக் கேட்டீங்க இல்லையா? மத்த மாநிலங்களெல்லாம் ஒரு காலத்தில் வடநாட்டவரால் ஆளப்பட்டது. அதனால அவர்கள் ஹிந்தியை ஏற்றுகிட்டாங்க.. நாம ஆங்கிலேயரால் ஆளப்பட்டோம் அதனால் ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வோம் என்கிறார். .
அப்படியென்று நீங்களே அர்த்தபடுத்தி கொண்டால் எப்படியக்கா..?? உண்மையில் தமிழ்நாடு ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் ஏன் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க வேண்டும்..?! அரேன் அண்ணா சொன்னதன் அடிப்படை மற்ற மாநிலங்கள் வடநாட்டவரின் ஆளுகைக்கு உட்பட்டபோதே அந்த மொழியின் ஆளுமைக்கும் உட்பட்டுவிட்டதால் சுதந்திரத்திற்க்கு பின் எளிதாக ஹிந்தியை ஏற்றுக்கொண்டன...!! ஆனால் தமிழகம் அத்தகைய ஆளுமைகளுக்கு உட்படாததால் ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் செய்ததே போதும்.. இன்னொரு ஆதிக்கத்திற்க்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்..?! வேண்டுமானால் சுதந்திரப்போராட்டத்தில் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து போராடியதுக்கு தண்டனையாக ஹிந்தியை கற்க வேண்டும் என்று சொல்லுங்கள் நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்பதுதான்..!!!!


எத்தனை மொழி தெரிந்து கோள்கிறோம் என்பது பெரிய பிரச்சனையே அல்ல.. நம் மொழியை பிழையில்லாமல் கற்று அதற்கு நல்ல படைப்புகள் தந்து வாழ வைக்கிறோமா என்பதுதான் முக்கியம். ஹிந்தி கத்துக்க மாட்டேன் என்றால் தமிழ் வளர்ந்து விடாது...
நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து..!!

ஹிந்தியை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்க மாட்டாங்க.. காரணம் தமிழைக் காக்க பிறமொழி எதிர்ப்பு என்பது வழியே அல்ல..
ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு… எல்லாம் அறிந்த கண்மணி அக்காவா இப்படி பேசுவது..?? தமிழை காக்க பிறமொழி எதிர்ப்பு என்பது வழியே அல்ல என்ற உங்கள் வாதத்தை முற்றிலும் ஏற்க்கிறேன்..!! ஆனால் ஹிந்தியை எதிர்த்தவர்கள் ஆங்கிலத்தை எதிர்க்க மாட்டார்கள் என்பது முற்றிலும் தவறான வாதம்…!! ஏனென்றால் தமிழக மக்கள் எந்த காலத்திலும் மற்றமொழியை எதிர்த்தவர்கள் கிடையாது…!! "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பண்பாடும் இன்றும் தமிழர்களிடம் பாழ்பட்டுவிடவில்லை என்றே நான் எண்ணுகிறேன்..!! அப்படியானால் தமிழர்கள் எதைத்தான் எதிர்த்தார்கள் என்பதை கொஞ்சம் நீங்களே யோசியுங்கள்.. நான் பின்னாடி சொல்லுகிறேன்..!!

ஏனுங்க மெசினோட பாஷையெல்லாம் "சி" சி++, பேஸிக், பாஸ்கல், கோபால், ஜாவா அது இதுன்னு படிக்கறீங்களே, மனுஷனோட பாஷையை படிச்சா குறைஞ்சா போயிடுவோம்?
கண்டிப்பா இல்லை மாறாக வளருவோம்.!! அதனாலதான் இப்ப தமிழ்நாட்டுல ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியா ஹிந்திய தங்கள் குழந்தைகள் தெரிஞ்சுக்கனும்ன்னு பெற்றோர்கள் விரும்புறாங்க போலிருக்கு..!!

அதுவுமில்லாம 8 கோடிப் பேர்ல அங்கப் போறது ஒரு 80 பேர். அந்த 40 பேர்கூட ஒரு பொதுமொழி படிக்கலைன்னா கேலிக்கூத்தா இல்லையா? (மேல் சபை கீழ்சபை அது இது எல்லாம் சேர்த்து)அதுக்கப்புறம் மத்திய அரசின் வேலைவாய்ப்பு தேடறவங்க.. இந்த விசயத்தில் உங்கள் கருத்துடன் ஒத்துபோவதால் இதில் மறுப்பதற்க்கு ஒன்றுமில்லை…!!

இன்னொரு மொழியை நாம எதிர்க்கறோம் என்றால் அதுக்கு காரணம் நம்முடைய தாழ்வு மனப்பான்மைதான்
நான் பின்னாடி சொல்லுறேன்னு முன்னாடி சொன்னது இந்த இடத்தைதான்…!! அதாவது ஒரு மொழியை நாம் எதிர்க்கிறோம் என்றால் அதற்கு காரணம் நம்முடைய தாழ்வு மனப்பான்மை… அதேபோல் ஒருமொழி சார்பு கொள்கையை எதிர்க்கிறோம் என்றால் அதற்கு காரணம் நம்முடைய தனித்தன்மை..!!

தமிழர்கள் எதிர்த்தது ஒருமொழி சார்பு கொள்கையைத்தானே தவிர ஒரு மொழியை அல்ல..!! ஹிந்திக்கு பதிலாக அந்த இடத்தில் வேறெந்த மொழியிருந்தாலும் தமிழகம் எதிர்த்திருக்கும்… எதிர்த்துக்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை…!! இந்த இடத்தில் வட இந்தியர் பட்டியலில் நீங்கள் இணைத்து கொண்டிருக்கும் வங்கதேசத்தவரும் ஹிந்தியை எதிர்த்தார்கள் என்பதையும் நினைவில் கொள்க..!!

ஆனால் இந்த ஒருமொழி சார்பு கொள்கை எதிர்ப்பு போராட்டத்தை ஒருமொழிக்கு எதிரானா போராட்டமாக சித்தரிக்கும் போக்கு அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து வருகிறது..!! இதனால் தமிழர்கள் என்றாலே ஹிந்திக்கும் ஹிந்திக்காரர்களுக்கும் எதிரானவர்கள் என்ற ஒரு எண்ணப்பாடு இன்றைக்கும் வட இந்தியர்களிடம் இருந்துக்கொண்டிருக்கிறது..!! இத்தனைக்கும் இந்தியாவின் இன்றைய வளர்ச்சியில் தமிழகம் பெரும் பங்களிப்பை தந்துக்கொண்டிருக்கிறது…!!

ஒருமொழி சார்பு கொள்கை எதிர்ப்பு போராட்டம் ஒரு மொழிக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றுஇ அப்போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்கள் தங்களுக்கான ஆதரவை பெருக்க வேண்டிஇ "ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும்" என்ற தவறான கூற்றின் மூலம் சாதாரண மக்களின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டதுதான்..!!
அவர்களின் கூற்றை உண்மையென நம்பி அவர்களிடம் ஏமாந்ததை தவிர வேறெந்த தவறையும் செய்யாதவர்கள் தமிழக மக்கள்..!!

தமிழை முன்னிலை படுத்தி அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழின் வளர்ச்சியையோ தமிழர்களின் பொருளாதார வளர்ச்சியையோ கருத்தில் கொள்ளாமல் தங்களின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டதன் விளைவு தமிழர்கள் பொருளாதார நலன்களுக்காக தமிழகத்தை விட்டு மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் இடம்பெயர வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்..!! இப்படி தமிழை மட்டுமே அறிந்து வைத்துக்கொண்டு அவர்கள் வெளியிடங்களுக்கு போகும்போது படும் அவலங்கள் பாவம் பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்…!! தமிழகத்துக்குள் இருந்துக்கொண்டு அரசியல்பண்ணும் அரசியல்வாதிகளுக்கு அவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை…!!

தமிழிக்காக ஹிந்தியை எதிர்த்து போராடியதாக சொல்லி ஆட்சியில் அமர்ந்த அரசியல்வாதிகள் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி அவர்கள் தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டிய அவசியமே இல்லாமல் செய்திருந்தால் தமிழும் வளர்ந்திருக்கும்.. தமிழகமும் வளர்ந்திருக்கும்..!! ஆனால் அப்படி செய்யாமல் இன்றைக்கு அவர்களை பிச்சைகாரர்கள் போல் இலவசத்துக்கு கையேந்த விட்டுவிட்டு யாரோ ஒரு ஹிந்தி தெரியாத ஒரு அரசியல்வாதி டெல்லிக்கு போனதும் மறுபடியும் பழைய சங்கை எடுத்து ஊதபார்க்கிறார்கள் என்றால் ஏற்கனவே ஏமாந்தவர்கள் என்ற வகையில் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மக்களே..!!


இதை நீங்கள் தாழ்வுமனப்பான்மை என்றால் அப்படியே இருந்துவிடுகின்றோம்..
வியாசன் அண்ணா.. இப்படியெல்லாம் தன்னிச்சையா முடிவெடுத்து சட்டுன்னு போயி சரணடைஞ்சிரக்கூடாது….!! கண்மணி அக்காவின் அந்த கூற்று ஒரு மொழியை எதிர்ப்பவர்களுக்குதான்… ஒருமொழி சார்பு கொள்கையை எதிர்ப்பவர்களுக்கு அல்ல….!! ஆகையால் தாழ்வுமனப்பான்மை அது இதுன்னு சொல்லி உங்களோட தனித்தன்மையை நீங்களே விட்டு கொடுத்துறாதீங்க சரியா..?!

ஹிந்திக்காரர்கள் என்று நீங்க சொல்றது யாரை? காஷ்மீரிகள், பஞ்சாபிகள், ராஜஸ்தானிகள், பீகாரிகள், வங்காளிகள், மராட்டியர்கள், மணிப்பூரிகள், குஜராத்திகள், உருது பேசுபவர்கள் இப்படி பல மொழிகளும் கலந்த கலவைகள். :D :D :D

தென்னிந்திய மொழிகளான தெலுகு, கன்னடம், மலையாளம், கொங்கணி, துளு இவர்கள் உங்க வாதத்தை ஒத்துக்கலை என்றாலும் அவங்களை உங்களோட சேர்த்துக்க முயற்சி செய்யறீங்க.. சரியா...?
தவறு..!! திராவிட இயக்கங்கள் ஹிந்திமொழி எதிர்ப்பை முன்னின்று நடத்தியதால் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்…!! திராவிட இயக்கங்கள் மொழிவாரி மாநிலம் தோன்றுவதற்க்கு முன்பே தோன்றியிருந்தாலும் அவை அதன்பிறகு தமிழகம் என்ற எல்லைக்குள் மட்டுமே வேரூன்றியிருந்தன..!! ஆகையால்தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் மட்டும் பலமாக இருந்தது… ஆந்திராவில் தமிழக அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு ஹிந்தி எதிர்ப்பு அந்த காலக்கட்டத்தில் இருக்கத்தான் செய்தது..!!

இப்போ இருக்கற நிலைமை எல்லா மாநிலங்களுக்காகவும் ஹிந்தி, தமிழ் நாட்டுக்காக ஆங்கிலம். சரியா? சரியா தவறா என்று எப்படி சொல்ல முடியும்... ஒரு பொதுநலனுக்காக சுயநலனை விட்டுக்கொடுப்பதில் தவறில்லை.. அந்த அடிப்படையில்தான் இன்றைக்கு தமிழக மக்கள் ஹிந்தியை கற்க ஆவல்படுகிறார்கள்..!! ஆனால் தங்களின் சுயநலனுக்காக மற்றவனின் சுயமரியாதையை இழக்க சொல்வது எந்தவிதத்தில் சரியாகும்..? அந்த அடிப்படையில்தான் அன்றைக்கு ஹிந்தியை தமிழர்கள் எதிர்த்தார்கள்...!! சரியோ தவறோ அன்றைக்கு தமிழகம் காட்டிய எதிர்ப்பால்தான் இன்றைக்கும் இந்தியா பன்மொழி கலாச்சாரத்துடன் திகழ்ந்து வருகிறது... அப்படியில்லாமல் அவர்களும் அடங்கி போயிருந்தால் அதற்கடுத்த பத்தாண்டுகளில் ஹிந்தியை இந்திய மாநிலங்களின் ஆட்சிமொழியாகவும் ஆக்கியிருப்பார்கள்.. அதற்கடுத்த இருபதாண்டுகளிலேயே இந்ததிரி மன்றத்தில் தோன்ற வேண்டிய அவசியமே இல்லாமல் செய்திருப்பார்கள்..!!

தென்னிந்திய மாநிலங்கள் ஒரே ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், ஹிந்தி மற்றும் இந்த மொழியும் மட்டும் ஆட்சி மொழியா இருக்கட்டும்னு கூடச் சொல்லலாமே? சொல்லுவாங்களா? முடியுமா? ஹி…ஹி.. ஆனாலும் உங்களுக்கு ஆசை அதிகமக்கா…!! அண்டை மாநில அரசியல்வாதிகள் அவ்வளவு இளிச்சவாயர்களா என்ன…?! அதுவுமில்லாமல் தென்னிந்திய மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் அப்புறம் அவர்கள் எங்குபோய் அரசியல் நடத்துவார்களாம்..?? அவர்களை வரவேற்க்கக்கூடிய வள்ளல்தன்மை வட இந்திய அரசியல்வாதிகளிடம் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை…!!


ஏன் தமிழ் நாட்டில் கூடத்தான் பல மொழி பேசுபவர்கள் இருக்கோம். கூட மாநில ஆட்சி மொழியா தெலுகையோ கன்னடத்தையோ சேர்த்துக்கலாமே? ஏன் தமிழ் மட்டும்?
நாம் மற்றவங்களுக்கு என்ன அறிவுரை சொல்றோமோ அதை ஏன் நாம முதல்ல உபயோகிக்கக் கூடாது

நல்லதொரு கேள்வியிது…!! இன்றைக்கு தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தமிழர்கள் பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் விளைவாக இங்கு வந்து சேர்ந்தவர்கள்..!! அப்போது அவர்கள் ஆள்பவர்களாக இருந்தபோதும் அவர்களால் தமிழர்களின் பகுதியில் தங்கள் மொழியை நிலைநாட்ட முடியாமல் போனதால் இல்லம் என்ற எல்லைக்குள் அதை வைத்துக்கொண்டு சமூகம் என்ற எல்லைக்குள் தமிழையையே உபயோகித்து வந்தனர்…!! அதுமட்டுமில்லாமல் கடந்த ஆறேழு நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் சமூகத்தில் ஒன்றிணைந்துவிட்ட அவர்களை தெலுங்கு கன்னடம் என்று பிரித்து பார்ப்பதே தவறென்று எண்ணுகிறேன்..!! ஏனென்றால் தமிழகத்தில் இருக்கும் தெலுங்கு கன்னடம் பேசும் தமிழர்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் உள்ளவர்களுக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக நான் உணர்கிறேன்..!!

உதாரணத்திற்க்கு மேலே நீங்களே ஓரிடத்தில் தென்னிந்திய மொழிகளான தெலுங்குஇ கன்னடம்இ மளையாளம்இ கொங்கணிஇ துளு இவர்கள் உங்கள் வாத்ததை ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள்..!! ஆனால் தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் தமிழர்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்பதை நீங்களும் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன்..!! ஆகையால் இனி இதை மன்றத்தில் அடிக்கடி அழுத்தி சொல்வதை தயவுசெய்து தவிர்த்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் கண்மணியக்கா..!!

அதுமட்டுமில்லாமல் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து நாற்பதாண்டுகளுக்கு மேலாகியும் மொழிவாரி மாநிலங்கள் தோன்றுவதற்க்கு முன்பிருந்த அதே இட ஒதுக்கீட்டுமுறையைத்தான் இன்றைக்கும் தமிழக அரசு பின்பற்றி வருகிறது..!! அதன் அடிப்படையில் தமிழகத்தை சாராத ஆந்திரஇ கர்நாடக மற்றும் கேரள மக்கள் இன்றைக்கும் தமிழக அரசு பணியில் சேரமுடியும்..!! இத்தகையநிலை தமிழகம் தன் பகுதியை தாரைவார்த்துக் கொடுத்த அண்டை மாநிலங்களில் இல்லை...!!

இதை தமிழக மக்கள் தலையில் திராவிட கட்சிகள் மிளகாய் அரைக்கின்றன என எடுத்துக்கொள்வதா..?? இல்லை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக இருக்கிறது என்று கொள்வதா…?! யூகங்களை அவரவர் விருப்பத்திற்க்கே விட்டுவிடுகிறேன்…!!

வியாசன்
08-10-2009, 11:06 AM
சுகந்தப்பிரீதன் நீண்ட கருத்துக்கள் உண்மையான வாதம் நாங்கள் ஏதாவது கூறினால் ஈழத்தவர்கள் என்ற கருத்தை வைத்துவிடுகின்றார்கள். வரவேற்கின்றேன். உங்கள் கருத்தை உங்களுக்கு நிறையவிடயங்கள் தெரிந்துள்ளது கூறமுடிகின்றது. மற்றையது பல நண்பர்களின் அறிவுரை இணையத்தில் ஈழ , இந்திய பிரச்சனைகள் முன்பு எழுந்தாக அதனால்தான் தொடர்ந்து இந்த திரியில் எழுதமுடியவில்லை. என்னால் பிரச்சனைகள் எழுவதை விரும்பவில்லை.
வாதாட முடியாதவர்கள்தான் இந்த பிரச்சைனயை எழுப்புகின்றார்கள். கருத்துக்களுக்கு கருத்தியல் வறுமையானவர்கள் விவாதிக்காமல் ஒதுங்கியிருந்தால் பிரச்சனைகள் எழமாட்டாது .விவாதியுங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
ஒருவரும் கருத்துக்களை பதிக்காமல் இருந்தமையால் நான் யாவரும் ஒருமொழி கொள்கையை ஆதரிக்கின்றார்கள் என்று நினைத்தவிட்டேன். இப்போதுதான் தெரிகிறது நிஜம்

பால்ராஜ்
03-08-2010, 06:45 AM
எது எப்படியோ... பல மொழி / பல மதங்கள் / பல நம்பிக்கைகள் / பல சாதிகள் (இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்) என்ற ஒரு சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.. இன்னும் வாழ்ந்துதான் தீர வேண்டும்.

திடீர் என்றி ஸ்விச் போட்டமாதிரி ஒரு மொழி / ஒரு மதம் என்று வருவதற்கான சாத்தியக் கூறுகள் பெரிய பெரிய பூஜ்யம் ..

இருப்பதை ரசிப்போம்.. ருசிப்போம்.. வாழ்வதில் (உண்மையான வாழ்க்கையில்.. ஏனோதானோ என்றல்ல) தீவிரம் காண்பிப்போம்..