PDA

View Full Version : ஒரு நண்பனை இழந்தேன்-இறுதி பாகம்



மதுரை மைந்தன்
23-11-2008, 12:15 AM
" நீங்க தமிழரா?"

மும்பை அலுவலகத்தின் காண்டீனில் மதிய உணவிற்காக க்யூவில் எனக்கு பின் நினற நண்பரிடமிருந்து வந்த கேள்வி என் நினைவுகளை பின் நோக்கி தள்ளியது.

பார்த்தசாரதியும் இதே கேள்வியை என்னிடம் கேட்டான்.

" எப்படி சொலகிறீர்கள் நான் தமிழன் என்று" சிரித்துக் கொண்டே நான் பதிலுக்கு கேட்டேன்.

" அதுதான் முகத்தில எழுதி ஒட்டியிருக்கே"

ஹா ஹாஹ ஹா நான் பெரிதாக சிரித்தேன். அன்றிலிருந்து நாங்கள் நல்ல நண்பர்களானோம். பார்த்தசாரதியும் மதுரைக்காரர் அதுவும் நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்று தெரிந்தவுடன் எங்களது நட்பு இன்னும் பலமாயிற்று.

இருவரும் சேர்ந்து மாதுங்காவிலிருந்த அரோரா ரிவோலி தியேட்டரகளைப் படை எடுத்து தமிழ்ப் படங்களை ஒன்று விடாமல் பார்த்தோம். சௌபாட்டி பீச்சின் ஓரமாக விடுமுறை நாட்களில் மாலை வேளைகளில் அங்கிருந்த கடலைப் பிரிக்கும் குட்டிச்சுவரின் மீது அமர்ந்து மணிக் கணக்கில் அளவளாவினோம். மழைக் காலங்களில் பெரிதக எழும் கடலலைகள் குட்டிச்சுவரின் மீது அமர்ந்திருக்கும் எங்களை நனைப்பதை ரசித்தோம்.

" ஊரிலிருந்து அப்பா அம்மாவை வரவழைச்சு அவங்களைப் பாத்துக்கணும். அதுக்கு வாடகைக்கு ஒரு வீடு கிடைக்க நீங்க உதவ முடியுமா?" .

என்னிடம் பார்த்தசாரதி கேட்டதற்கு காரணம் அவனுக்கு முன்னாலேயே மும்பை வந்து முல்லுண்டில் ஒரு வாடகை வீட்டில் நான் வசித்து வந்ததுதான். அவன் மாதுங்காவில் சில நண்பர்களுடன் ரூம் மேட்டாக இருந்தான்.

" நிச்சயமா நான் உங்களுக்கு உதவுவேன். எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து சொல்கிறேன்"

அவனுடய அதிர்ஷ்டம் நான் குடியிருந்த பகுதியிலேயே ஒரு வீடு கிடைத்தது. நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வீட்டை நானே சுத்தம் செய்து கொடுத்தேன். வீட்டில் குடியேறும் முன் பால் காய்ச்சி சாப்பிடணும் என்றேன் ஒரு நல்ல நாளில் ஒரு கடவுள் படமும் பழம் பால் ஸடவ் அடப்பு சகிதமாக பால் காய்ச்ச புது வீட்டிற்கு சென்றோம். அவன் வாங்கியிருந்த 2 லிட்டர் பாலைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. அழைத்திருந்த சில நண்பர்கள் வராததால் நாங்கள் இருவருமே கப் கபபாக அநத பாலைக் குடித்ததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.

புது வீட்டில் குடியேறி சில நாட்கள் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். பார்த்தவர்களிடமெல்லாம் என்னால் தான் வீடு கிடைத்தது என்று சொல்லி நன்றியுடன் என்னைப் பார்த்தான்.

ஊரில் நோய் வாய்ப் பட்ட தந்தையைப் பார்க்க நான் விடுப்பில் மதுரை செல்ல நேரிட்டது. நல்ல மருத்துவ மனையில் அவரை சேர்த்து அவரது உடல் நிலை சீரடைந்தவுடன் மும்பை திரும்பினேன்.

பார்த்த சாரதி பெற்றோர்களை அழைத்து வந்திருப்பான் மறுநாள் அவன் வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கடைக்கு சென்று பால் தயிர் போன்றவற்றை வாங்கி வரலாம் என்று புறப்பட்டேன்.

அப்போது இரவு 8 மணியாயிருந்தது. வீட்டிலிருந்து கிளம்பி கடைக்கு நடக்கும்போது யாரோ என்னைப் பின் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். நின்று திரும்பி பார்த்தால் அங்கு பார்த்த சாரதி நின்று கொண்டிருந்தான்.

" ஏய் பார்த்தா இன்னிக்குத்தான் ஊரிலிருந்து வந்தேன். உன்னோட அப்பா அம்மா வந்துட்டாங்களா?"

பார்த்தசாரதி பதிலெதுவும் சொல்லாமல் என்னையே கோபமாக முறைத்துக் கொண்டிருந்தான்.

அதிர்ச்சியுற்ற நான் " ஏய் என்ன ஆச்சு உனக்கு" என்றேன்.

" இப்போ நீ போ. அப்பறம் வந்து பேசிக்கிறேன்" என்று சொல்லி அவன் போன பின் அதிர்ச்சியில் நான் கல்லாய் சமைந்தேன.

தொடரும்.....

மதி
23-11-2008, 02:02 AM
அதிர்ச்சியுடன் முடித்திருக்கிறீர்கள்..?
பார்த்தசாரதிக்கு என்ன ஆயிற்று..????

அப்புறம்.. குட்டித் தொடர்கதை என்று போட்டிருக்கீங்க....? இரண்டு பாகங்களில் முடித்துவிடப்போகிறீர்களா..??

தொடர்ந்து எழுதுங்கள் மதுரைமைந்தரே...

ரங்கராஜன்
23-11-2008, 02:34 AM
எந்த ஒரு கலப்படம் இல்லாத ஒரு கதை, ரா ரைட்டீங் வகையை சார்ந்தது, மிகவும் ரசித்தேன். சூப்பர், தொடருங்கள்

மதுரை மைந்தன்
23-11-2008, 03:47 AM
அதிர்ச்சியுடன் முடித்திருக்கிறீர்கள்..?
பார்த்தசாரதிக்கு என்ன ஆயிற்று..????

அப்புறம்.. குட்டித் தொடர்கதை என்று போட்டிருக்கீங்க....? இரண்டு பாகங்களில் முடித்துவிடப்போகிறீர்களா..??

தொடர்ந்து எழுதுங்கள் மதுரைமைந்தரே...


உங்களுடய பின்னூட்டத்திற்கு நன்றி மதி அவர்களே. இந்தக் கதை சில உண்மையில் நடந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது என்பதை துவக்கத்தில் கூற தவறி விட்டேன். குட்டித் தொடர்கதை என்று போட்டதறகான காரணம் இந்தக் கதையை 2 அல்லத 3 பகுதிகளில் முடித்து விடலாம் என்று தான்.

மதுரை மைந்தன்
23-11-2008, 03:50 AM
எந்த ஒரு கலப்படம் இல்லாத ஒரு கதை, ரா ரைட்டீங் வகையை சார்ந்தது, மிகவும் ரசித்தேன். சூப்பர், தொடருங்கள்


உங்களைப் போன்ற தேர்ந்த எழுத்தாளரிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி murthy அவர்களே.

சிவா.ஜி
23-11-2008, 04:09 AM
பழகிய சூழல், கதைபோல இல்லாமல் நிஜ நிகழ்வாய் சரளமாய்ச் செல்லும் கதையோட்டம் அருமை மதுரை மைந்தரே. என்ன ஆச்சு பார்த்தாவுக்கு..? ஏன் இந்த கோபம்...? தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டிவிட்டது நீங்கள் முடித்திருந்தவிதம். தொடருங்கள். வாழ்த்துகள்.

(மும்பை அலுவலக கேண்டீன்....BARC கேண்டீனா? CC யா Modular lab ஆ)

மதுரை மைந்தன்
23-11-2008, 04:38 AM
பழகிய சூழல், கதைபோல இல்லாமல் நிஜ நிகழ்வாய் சரளமாய்ச் செல்லும் கதையோட்டம் அருமை மதுரை மைந்தரே. என்ன ஆச்சு பார்த்தாவுக்கு..? ஏன் இந்த கோபம்...? தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டிவிட்டது நீங்கள் முடித்திருந்தவிதம். தொடருங்கள். வாழ்த்துகள்.

(மும்பை அலுவலக கேண்டீன்....BARC கேண்டீனா? CC யா Modular lab ஆ)


இந்த கதை சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதால் அவற்றை ஒரு கதை வடிவில் சொல்லுகிறேன். நீங்கள் BARC ல் பணியாற்றியவரா? நீங்கள் BARC ல் பணியாற்றியவர் எனறால் கோல் காண்டீனை விட்டு விட்டீர்களே?

மிக்க மகிழ்ச்சி அடைகிறென். பின்னூட்டத்திற்கு நன்றி.

சிவா.ஜி
23-11-2008, 07:26 AM
கோல் கேண்டீனா....நல்ல இயற்கை சூழல்ல இருக்குமே. சின்ன குன்று ஏறி போவதைப்போல இருக்கும்.(நான் BARC யில் 11 வருடங்கள் பணிபுரிந்தேன்)

அடுத்த பாகம் வாசிக்க ஆவலுடன்....

அன்புரசிகன்
23-11-2008, 07:55 AM
ஆனாலும் ரொம்ப நேரம் கல்லாய் நிற்கிறீங்க.... இரண்டாம் பாகத்தை படிக்கும் ஆவலில்....

மதுரை மைந்தன்
23-11-2008, 10:02 AM
பாகம்-2

அன்றிரவு எனக்கு தூக்கம் சரியில்லை. கண் மூடினால் கோபமான பார்த்தசாரதி என்னை முறைத்துப் பார்த்தது வந்து அவஸ்தைப் பட்டேன். மறு நாள் அலுவலகத்திற்குச் சென்று முதலில் சில முக்கியமான பணிகளை செய்து விட்டு பார்த்தசாரதி வேலை பார்க்கும் பிரிவுக்குச் சென்றேன். அவனைப் பார்த்து ஏன் என்னுடன் கோபமாயிருக்கிறான் என்று அறிந்து அவனை சமாதானப் படுத்தா விட்டால் எனக்கு நிம்மதி ஆகாது.

அவனுடய பிரிவில் நான் சென்ற போது அவன் அங்கு இல்லை. அவனோட பக்கத்து சீட் நண்பர் (அவரும் தமிழர்) இருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் " சார் வாங்க மதுரையில அப்பாவொட உடல் நிலை சரியாயிடுச்சா?" என்று கேட்டார்.

" ஆமாம் சார. அவர் இப்போ நல்ல குணமாகி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும். பார்த்தசாரதிக்கு என்ன ஆச்சு. என் மேல ஒரே கோபமா இருக்கான்"

" அப்படியா. எங்க கிட்டெல்லாம் சாதாரணமாகத் தானே இருக்கிறான். ஆனால் அவனைப் பத்தி ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்ல வேணும்" . அவர் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பார்த்தசாரதி புயலென அறைக்குள் நுழைந்தான். என்னைப் பார்த்து பற்களை நற நற என்று கடித்துக் கொண்டு ராஸ்கல் உன்னை என்ன பண்றேன் பார்னு சொல்லிக் கொண்டு அவனது காலணிகளைக் கழட்டிக் கொண்டு என்னை அடிக்க முன்னேறினான். பக்கத்து சீட் நண்பரும் அங்கிருந்த வேறு சிலரும் நிலைமையை உணர்ந்து அவனை வழி மறித்து கட்டிப்பிடித்து பக்கத்து அறைக்குள் கூட்டிச் சென்றனர். அவர்களில் ஒருத்தர் " ஆப் இதர் ஸே ஜாயியே நஹி தோ வொ ஆப்கோ பிர் சே மார்னேக்கேலியே ஆயேகா (நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். இல்லையேல் அவன் மறுபடியும் உங்களை அடிக்க வருவான்) என்றார். பதறிப் போயிருந்த நான் நிற்க முடியாமல் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தேன்.

பார்த்த சாரதியின் பக்கத்து சீட் நணபர் (மோகன் என்று பெயர்) வந்து " சார் வாங்க காண்டீனுக்குப் போகலாம். அங்கே உங்களுக்கு எல்லா விவரத்தையும் சொல்றேன்" அவருடன் காண்டீனுக்குச் செல்கையில் பக்கத்து அறையைக் கடக்கும் போது நான் கண்ட காட்சி என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அங்கே பார்த்தசாரதி ஒரு மேஜையின் மேல் தலையைக் கவிழ்த்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான்.

காண்டீனுக்குச் சென்ற நாங்கள் காபியை வாங்கிக் கொண்டு ஒரு மேஜையில் சென்று அமர்ந்தோம்.

" நீங்க மதுரைக்குப் போயிருக்கச்சே மும்பையில் மதக் கலவரங்கள் நடந்ததைக் கேள்விப்பட்டீர்களா?"

" என்னோட அப்பாவின் உடல் நிலை மோசமானதால் அவரை ஒரு நர்ஸிங் ஹோமில் சேர்த்து அலைந்து கொண்டிருந்ததில் செய்தித் தாள்களைப் படிக்கவோ டி.வி. பார்க்கவோ கூட நேரமில்லாமல் இருந்தது. ஆனாலும் போனில் சில நண்பர்கள் சொல்லி மும்பையில் பாபர் மசூதி இடிந்த பின் மதக்கலவரங்கள் மூண்டன என்று கேள்விப் பட்டேன். நான் இங்கே வருவதற்குள் அந்த கலவரங்கள் நல்ல வேளையாக அடங்கி இருந்தன. இப்போ சொல்லுங்க பார்த்தசாரதிக்கும் இந்த மதக்கலவரங்களுக்கும் என்ன தொடர்பு?"

" பார்த்தசாரதி அந்த கலவரங்கோளட ஒரு விக்டிம்"

நான் பதைபதைத்துப் போய் எப்படி என்று கேட்டேன்.

" கலவரங்களில் மதவெறி பிடித்த கும்பல்கள் பல தாக்குதல்களை நடத்தினர். எங்க காலனில நாங்க எல்லோரும் சேர்ந்து இரவு நேரங்களில் ரோந்து வந்தோம் இந்த கும்பல்களிலிருந்து காலனி மக்களை பாதுகாக்க. ஒரு நாள் பார்த்தசாரதி ஒரு டாக்ஸில சயான் பக்கம் போயிட்டிருந்தப்போ ஒரு மதவெறிக் குமபல் டாக்ஸியை வழி மறிச்சு டிரைவரையும் பார்த்தசாரதியையும் கீழே இறக்கி அவர்களுடய பாண்ட்டை அவிழ்த்து பார்த்தனர். அதில் அந்த டிரைவர் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும் அவரை டாக்ஸிக்குள்ளே தள்ளி பெட்ரோல் ஊற்றி டாக்ஸியைக் கொளுத்தினர். கும்பல்ல ஒரு முரடன் 'சல் பாக்' என்று பார்த்தசாரதியை வயிற்றில் எத்த பார்த்தசாரதி நினைவிழந்து கீழே விழுந்தான். கீழே விழும் முன்னால் அந்த டாக்ஸி டிரைவர் கதற கதற எரிந்து போனதைப் பார்த்த அவன் புத்தி பேதலித்து விட்டது. அங்கு வந்த போலிஸ் அவனை சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கே பார்த்தசாரதியை பரிசோதித்த டாகடர்கள் அவனுக்கு மூளை கலங்கியிருக்குனு சொல்லி தாணா பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள். நான்கைந்து நாட்கள் கழித்து எங்களுக்கு தாணா ஆஸ்பத்திரியிலிருந்து போன் வந்தது. அதில் அவர்கள் பார்த்தசாரதியை நாங்கள் அழைத்துச் செல்லலாம் என்றார்கள். நான் தான் அங்கு சென்றேன். டாக்டர் என்னிடம் பார்த்தசாரதிக்கு குணமாகி விட்டதாகவும் ஆனாலும் சில சமயங்களில் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்று சொன்னார். அவன் என்னிடம் நன்றாகப் பேசினான். என்கைகளைப் பற்றிக் கொண்டு நான் உங்களுடன் தங்கலாமா என்றான். குடும்பஸ்தனாகிய நான் அவனை சில நண்பர்களுடன் தங்க ஏற்பாடு செய்தேன். தற்சமயம் அவன் பழைய வீட்டிற்கே பொய் விட்டான். இன்று வரை அமைதியாகத் தான் இருந்தான். யாரிடமும் அதிகம்.பேசுவதில்லை. அவனுடய வயதான பெற்றோர்களுக்கு நாங்கள் விவரத்தை தெரிவிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவெ மும்பை செய்திகளைக் கேட்டு பதை பதைத்து போயிருப்பார்கள்" என்று சொல்லி முடித்தார்.

நடந்தவற்றைக் கேட்டு பேச்சற்றுப் போன நான் மெதுவாக என்னைத் தேற்றிக் கொண்டு " பாவம் பார்த்தசாரதி. அவனுக்கு நேர்ந்த அனுபவங்கள் கொடுமை. ஆனாலும் அவன் என்னை ஏன் தாக்க வந்தான் என்று நினைத்து ஆச்சரியமாக இருக்கு" என்றேன்.

" கவலைப் படாதீங்க. எனக்கு தெரிஞ்ச மனோ தத்துவ நிபுணர் ஒருத்தர் செம்பூர்ல இருக்கார். நாம் அவரைப் போய் பார்ப்போம்" என்றார் மோகன்.

தொடரும்.....

மதி
23-11-2008, 10:54 AM
மதுரை மைந்தரே.. என்ன இப்படி பதை பதைக்க வச்சுட்டீங்க...??
பார்த்தசாரதிக்கு என்ன தான் கோபம் உங்கள் மேல் என்று அறியும் ஆவலில்..

சிவா.ஜி
23-11-2008, 11:50 AM
மதியின் நிலைதான் எனக்கும். பார்த்தாவுக்கு என்ன கோபம்? மனநிலை பிறழ்ந்த நிலையிலும் உங்களை குறிபார்த்து தாக்குவது ஏன்? பதிலகளை காண ஆவல் மதுரைமைந்தரே.

ரங்கராஜன்
23-11-2008, 01:00 PM
சார் உண்மையில் ரொம்ப நல்லா எழுதறீங்க சார். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ஹேராம் படம் பார்த்துட்டு நான் என்ன மனநிலையில் இருந்தேனோ அப்படி இருக்கு சார். உங்களின் எழுத்தில் எந்த விதமான செயற்கை ஒப்பனைகள் இல்லாமல் எழுதுகிறீர்கள், அதான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சி இருக்கு. அப்புறம் கதையை தவிர வேறு எங்கும் திசை திருப்பாத வார்த்தைகள், அது இன்னும் அசத்தல். சொல்ல வந்த கதையை அழகாக நகர்த்தி செல்கிறீர்கள். சஸ்பன்ஸ் தாங்க முடியவில்லை. ஏன் அவர் உங்கள் மீது கோபமாக இருக்கார்.........ப்ளீஸ் சீக்கிரம் எழுதுங்க சார்.

Keelai Naadaan
23-11-2008, 01:19 PM
நல்ல விறுவிறுப்புடனும் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாகவும் உள்ளது.

அவருடைய கோபத்துக்கான காரணத்தை அறிய ஆவலுடன்...

மதுரை மைந்தன்
24-11-2008, 12:53 AM
இறுதி பாகம்


மோகனும் நானும் அன்று சாயங்காலமே சென்று அந்த மனோ தத்துவ நிபுணரைச் சந்தித்தோம். முன்பாகவே மோகன் போனில் அவரிடம் பார்த்தசாரதியைப் பற்றி சொல்லி அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருந்தார்.

எங்களை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்ன பின் அவர் ஆரம்பித்தார்

" மிஸ்டர் மோகன் நீங்க சொன்ன விவரங்களை அலசி ஆராய்ந்தேன். வன்முறையை நேரில் கண்ட உங்கள் நண்பர் பார்த்தசாரதியின் மூளை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். தாணா ஆஸ்பத்திரி டாக்டர்கள் இவர் குணமடைந்து விட்டதாக சொல்வதற்கு காரணம் இவர் 95 சதவிகித நேரங்களில் சாதாரணமாக இருக்கிறார். மீதி 5 சதவிகித நேரத்தில் இவர் தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் வன்முறையில் ஈடுபடக்கூடும். இதை ஆங்கிலத்தில் paranoid Scizhophrenic என்று கூறுவார்கள்."

அவரை இடைமறித்த நான் " எக்ஸ்க்யூஸ்மி டாக்டர். நீங்கள் சொல்வது ஓரளவு புரிகிறது. ஆனால் அவன் என்னை ஏன் தாக்க வர வேண்டும்?" என்று கேட்டேன்.

" அவருடய நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதானது. வன்முறையில் ஒரு ஆளை தன கண்முன் எரித்துக் கொல்லப் படுவதைப் பார்த்த அதிர்ச்சி, தனது கையாலாகாமை இவற்றோடு அந்த வன்முறைக் கும்பல் வேறு மதத்தைசார்ந்திருந்தால் அந்த டிரைவருக்கு பதிலாக தன்னை எரித்திருப்பாரகள் என்ற பீதி இவற்றால் அவர் நான் கூறிய 5 சதவிகித நேரங்களில் பழி வாங்கும் மனோ நிலைக்கு தள்ளப் படுகிறார். அந்த சமயத்தில் அவரது மனம் அந்த வன்முறைக் குமபலகாரர்களின் முகங்களை ஞாபகப் படுத்த முயனறு தோற்கிறது. அந்த வனமுறையாளர்கள் இவருக்கு முகம் தெரியாத எதிரிகள். இந்த நிலையில் அவரது மனம் தனது ஆற்றாமைக்கு வடிகாலாக ஒரு முகத்தை தேடுகிறது. அப்போது அவருக்கு யார் நெருங்கி பழகினார்களோ அவர்களது முகங்கள் தோன்றி அவர்கள் மீது அந்த ஆத்திரம் திரும்புகிறது. அப்படித்தான் அவர் உங்களைத் தாக்க வந்தார். உங்கள் மீது தனிப் பட்ட கோபம் கிடையாது அவருக்கு. அந்த 5 சதவிகித நேரம் வெகு சீக்கிரமே மறைந்து அவர் சாதாரண நிலைக்கு வரும் போது அவருக்கு தான் ஏதோ செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் பரிதாப நிலைக்கு தள்ளப் பட்டு அழக்கூட செய்யலாம். அமெரிக்காவில் இத்தகைய நோயாளிகள் தnது சொந்த மனைவி மக்களையே கொல்லும் அளவிற்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் பயப்படத்தேவையில்லை. ஏனெனில் அடிப்படையில் பார்த்தசாரதி மிகவும் சாதுவானவர். ஆகவே இது ஒரு வகையான நோய் எனபதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்." என்று சொன்னார்.

அவர் சொன்னவற்றை ஆழ்ந்து சிந்தித்த பின் " இதற்கு நிவாரணம் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

" நிவாரணம் உங்கள் அணுகுமுறையில் இருக்கிறது. உங்களைக் காரணமில்லாமல் தாக்க வருவதாக நீங்கள் நினைத்து அதனால் அவர் மீது ஒரு வெறுப்பு வருமானால் அவர் உங்களை விட்டு விலகி மேலும் வன்முறையில் ஈடுபடக்கூடும். அவர் நிலமையைப் புரிந்து அவரிடம் இன்னும் அன்பாக அணுகுவீரகளேயானால் நிச்சயம் அவரது போக்கில் மாறுதல்கள் ஏறபட்டு சகஜ நிலமைக்குத் திரும்புவார். எதற்கும் அவரை எப்படியாவது என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அவரிடம் பேச்சுக் கொடுத்து உங்களை ஒரு மாய எதிரியாக நினைப்பதை மாற்ற முயற்சிக்கிறேன். மேல் நாடுகளில் இந்த வியாதிக்கு மருந்துகள் கூட கண்டுபிடித்திருக்கிறார்கள். தேவைப் பட்டால் நான் அந்த மருந்துகளைத் தரவழைத்து கொடுக்கிறேன்."

அந்த டாக்டரிடம் பேசியது மனதை லேசாக ஆக்கியது. அவரிடமிருந்து விடை பெற்று வீடு திரும்பிய நான் வரும் வழியில் பார்த்தசாரதி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். லேசாக வியர்க்கத் தொடங்கியது எனக்கு. அவனை அணுகியதும் அவன் ஒரு புன்முறுவலுடன் என்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுற்றேன். " என்ன சார் எப்படி இருக்கீங்க" என்று சாதரணமாக பேசியதைப் பார்த்து அந்த மனோதத்துவ டாக்டர் சொன்னதை நினைத்து " நான் நல்லா இருக்கேன் பார்த்தா. நீ சாப்பிட்டயா? அரோரா தியேட்டர்ல புதசா தமிழ்ப் படம் போட்டிருக்காங்க. நாளைக்கு போவோமா?" என்று முன்போல் பேசினேன். அவனும் சிரித்துக் கொண்டே " கண்டிப்பா நாளைக்கு போகலாம்" னு சொன்னதம் இரவு நேரமாகி விட்டதால் அவனிடமிருந்து விடை பெற்று வீடு திரும்பினேன். அன்று இரவு தூங்குமுன் என் மனம் மகிழ்வுற்றிருந்தது. இடையில் ஏறபட்ட சின்ன குழப்பங்கள் நீங்கி பழைய படி நாங்கள் நண்பர்களானது சுகமாக இருந்தது.

மறு நாள் அதி காலையில் என் வீட்டுக் கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு எழந்து சென்று கதவைத் திறந்தேன். அங்கு மோகன் நின்று கொண்டிருந்தார். " ஒரு கெட்ட செய்தி. போலிஸிடமிருந்து தகவல் வந்தது. Juhu பீச்சின் ஓரமாக ஒரு பாடி கிடைச்சிருக்கு. அதில் பார்த்தசாரதியின் அடையாள அட்டை இருந்ததால் போலிஸ் பாடியை அடையாளம் காட்ட என்னைக் கூப்பிட்டார்கள். நான் உங்களையும் அழைத்து போக வந்திருக்கேன். " எனக்கு ஒரே அதிர்ச்சி. அவருடன் கிளம்பி செல்லுகையில் முந்தைய இரவு அவனை சந்தித்ததையும் அவன் சகஜமாக பேசிக் கொண்டிருந்ததையும் கூறினேன். அவன் இப்படி திடீரென்று தற்கொலை செய்து கொள்வான் என்று நான் கனவிலும் எதிர் பார்க்க வில்லை.

Juhu பீச்சை அடைந்த எங்களுக்கு போலிஸ் காரர்கள் ஒரு பாலிதின் ஷீட'டில் சுற்றப்பட்ட உடல் உப்பிய பாடியைக் காட்டி முகப் பகதியை விலக்கி அடையாளம் காட்டச் சொன்ன போது என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. " நான் உனக்கு என்ன கெடுதல் செஞசேன் இப்படி மோசம் பண்ணிட்டயே பார்த்தா" என்று கதறினேன்.

இன்று வரை அவனுடய தற்கொலை எனக்கு வேதனை தரும் புதிர்.

மதி
24-11-2008, 01:04 AM
உண்மைச் சம்பவத்தை உள்ளடக்கி தந்திருக்கிறீர்கள். பார்த்தாவின் நிலைமையை நினைக்கையில் மனது கஷ்டப்படுகிறது.

அவர் தற்கொலைக்கான காரணம் புரியாமல் இருப்பதும் கஷ்டம் தான்.

நல்ல கதைக்கு பாராட்டுகள் மதுரைமைந்தரே

அன்புரசிகன்
24-11-2008, 02:33 AM
கலவரங்களினால் ஒரு நண்பனை இழந்தகதை... கதையாக பார்க்கத்தோன்றவில்லை...

கலவரங்களில் இறந்தவர்களைப்பற்றித்தான் செய்தி வரும். கலவரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்படுபவர்களின் நிலை பரிதாபம் தான்... அவனுக்கும் வலி். அருகிலிருப்பவர்களுக்கும் வலி...

சம்பவங்களை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள்...

ரங்கராஜன்
24-11-2008, 02:56 AM
உங்களுடன் நானும் சேர்ந்து கதறினேன் சார், இது உண்மை சம்பவம் என்பதால் என்னுடைய கதறல் அதிகமாகிறது. எப்பொழுதும் சுய வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதும் பொழுது, தான் சம்பந்தபட்டிருக்கும் காட்சிகளை கொஞ்சம் ஹீரோயிஸத்தோடு எழுது பழக்கம் எல்லாருக்கும் உண்டு, அதாவது எழுதுபவரின் தன்மானம், கெட்டு போகாத வண்ணம் எழுதுவார்கள். ஆனால் நீங்கள்

1. அவன் செருப்பை தூக்கிக் கொண்டு என்னை அடிக்கவந்தான்.
2. அவன் செயலை கண்டு பக்கத்து சீட்டில் அப்படியே சாய்ந்தேன்
3. அவனை பார்த்தவுடன் எனக்கு வியர்க்க துடங்கியது.

இந்த வார்த்தைகள் அனைத்தும் அருமை அருமை, ஒரு நிகழ்கால சாதாரண மனிதன் என்ன செய்வானோ அதை செஞ்சிருக்கீங்க, உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சிது, உங்கள் எழுது அதைவிட ரொம்ப ரொம்ப பிடிச்சிது, நிறைய கத்துக்கிட்டேன்.

நன்றி

சிவா.ஜி
24-11-2008, 03:57 AM
மனதை உலுக்கும் சம்பவம், மதுரைமைந்தரின் எழுத்துவன்னத்தில் நேரில் நிகழ்வதைப்போல உணர முடிந்தது. யாரோ செய்த பாவத்துக்கு தன் உயிரைவிட்ட பார்த்தாவின் மீது பரிதாபம் தோன்றுகிறது.

அன்பு சொன்னதைப்போல கலவரத்தால் அந்த நிமிடமே இறந்துவிடுபவர்களின் வேதனையைக் காட்டிலும் பன்மடங்கானது பார்த்தாவைப்போலுள்ளோரின் வேதனை.

நிஜ எழுத்தின் வீரியமுள்ள கதை. வாழ்த்துகள்.

மதுரை மைந்தன்
24-11-2008, 08:49 AM
உண்மைச் சம்பவத்தை உள்ளடக்கி தந்திருக்கிறீர்கள். பார்த்தாவின் நிலைமையை நினைக்கையில் மனது கஷ்டப்படுகிறது.

அவர் தற்கொலைக்கான காரணம் புரியாமல் இருப்பதும் கஷ்டம் தான்.

நல்ல கதைக்கு பாராட்டுகள் மதுரைமைந்தரே

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி மதி அவர்களே

மதுரை மைந்தன்
24-11-2008, 08:54 AM
கலவரங்களினால் ஒரு நண்பனை இழந்தகதை... கதையாக பார்க்கத்தோன்றவில்லை...

கலவரங்களில் இறந்தவர்களைப்பற்றித்தான் செய்தி வரும். கலவரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்படுபவர்களின் நிலை பரிதாபம் தான்... அவனுக்கும் வலி். அருகிலிருப்பவர்களுக்கும் வலி...

சம்பவங்களை அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள்...

நண்பர் அன்புரசிகன் அவர்களே

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அண்மைக்காலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் பாதிக்கப் பட்டோர உடல் அளவில் மட்டுமல்ல உள்ளத்து ரீதியிலும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். உங்கள் பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
24-11-2008, 08:58 AM
உங்களுடன் நானும் சேர்ந்து கதறினேன் சார், இது உண்மை சம்பவம் என்பதால் என்னுடைய கதறல் அதிகமாகிறது. எப்பொழுதும் சுய வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதும் பொழுது, தான் சம்பந்தபட்டிருக்கும் காட்சிகளை கொஞ்சம் ஹீரோயிஸத்தோடு எழுது பழக்கம் எல்லாருக்கும் உண்டு, அதாவது எழுதுபவரின் தன்மானம், கெட்டு போகாத வண்ணம் எழுதுவார்கள். ஆனால் நீங்கள்

1. அவன் செருப்பை தூக்கிக் கொண்டு என்னை அடிக்கவந்தான்.
2. அவன் செயலை கண்டு பக்கத்து சீட்டில் அப்படியே சாய்ந்தேன்
3. அவனை பார்த்தவுடன் எனக்கு வியர்க்க துடங்கியது.

இந்த வார்த்தைகள் அனைத்தும் அருமை அருமை, ஒரு நிகழ்கால சாதாரண மனிதன் என்ன செய்வானோ அதை செஞ்சிருக்கீங்க, உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சிது, உங்கள் எழுது அதைவிட ரொம்ப ரொம்ப பிடிச்சிது, நிறைய கத்துக்கிட்டேன்.

நன்றி

நண்பர் murthy அவர்களே,

உங்களது பின்னூட்டம் என்னை மிகவும் உற்சாகப் படுத்தியுள்ளது. தேர்ந்த எழுத்தாளரான உங்களது பாராட்டுக்கள் நடிகர் திலகம் கையால் சிறந்த நடிப்பிற்கான விருதைப் பெற்றது போல் உள்ளது. மிக்க நன்றி;

மதுரை மைந்தன்
24-11-2008, 09:00 AM
மனதை உலுக்கும் சம்பவம், மதுரைமைந்தரின் எழுத்துவன்னத்தில் நேரில் நிகழ்வதைப்போல உணர முடிந்தது. யாரோ செய்த பாவத்துக்கு தன் உயிரைவிட்ட பார்த்தாவின் மீது பரிதாபம் தோன்றுகிறது.

அன்பு சொன்னதைப்போல கலவரத்தால் அந்த நிமிடமே இறந்துவிடுபவர்களின் வேதனையைக் காட்டிலும் பன்மடங்கானது பார்த்தாவைப்போலுள்ளோரின் வேதனை.

நிஜ எழுத்தின் வீரியமுள்ள கதை. வாழ்த்துகள்.

அன்பு நண்பர் சிவா.ஜி அவர்களே

உங்களது பாராட்டுக்கள் எனக்கு ஒரு டானிக் போல் சக்தியை கொடுத்துள்ளது. மிக்க நன்றி

சுகந்தப்ரீதன்
24-11-2008, 09:21 AM
யாரோ செய்யும் தவறுக்கு யார்யாரோ வலியையும் வேதனையையும் வாழ்வில் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.. நெஞ்சை தொடும் நல்லதொரு யதார்த்தமான படைப்பு நண்பரே..!! கதையில் வழக்கம்போல உங்களுக்கே உரிய அறிவியல் செய்தியை கலந்து அளித்திருப்பது இன்னும் சிறப்பு..!! இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..!!

வாழ்த்துக்கள் மதுரை மைந்தரே... தொடருங்கள்..!!

மதுரை மைந்தன்
24-11-2008, 09:26 AM
யாரோ செய்யும் தவறுக்கு யார்யாரோ வலியையும் வேதனையையும் வாழ்வில் அனுபவிக்க வேண்டியிருக்கிறது.. நெஞ்சை தொடும் நல்லதொரு யதார்த்தமான படைப்பு நண்பரே..!! கதையில் வழக்கம்போல உங்களுக்கே உரிய அறிவியல் செய்தியை கலந்து அளித்திருப்பது இன்னும் சிறப்பு..!! இன்னும் நிறைய எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..!!

வாழ்த்துக்கள் மதுரை மைந்தரே... தொடருங்கள்..!!

உங்களது பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சுகந்தப்ரீதன் அவர்களே