PDA

View Full Version : நெஞ்சம் ஏதோ உயிர்த்தேடிkulirthazhal
23-11-2008, 12:14 AM
தவழும் உலகினை
நிலவில் நின்று காண்கிறேன்
ஓர் புள்ளியாய்.
நிலவின்
உயிர்குடித்து மலரும்
பூக்கள்,
குயிலின் அடிநெஞ்சில்
உயிர்க்கும்
சுரங்கள்,
தற்கொலை முயற்சியில்
பிறக்கும்
அருவிகள்,
கனந்து சிவந்த
இரவைக்கொன்ற
விடியல்,

எல்லாமே
மறித்துப்போயின
மாயமாய்..,
நெஞ்சம் ஏதோ
உயிர்த்தேடி......,

இடியென ஓர்
மின்கீதம்
என் நெஞ்சில்,
விழிவானம் கொன்ட
கருமேகம் மோதி
மின்னலாய் விழுந்ததோ..

உடைந்த பாறைக்குள்
சிற்பமாய்,
கலையும் மேகங்களுக்குள்
ஓவியமாய்,
பொருள்விளங்கா சொற்களுக்குள்
கவிதையாய்,
உயிர்துறந்த கனவுக்குள்
கற்பனையாய்,
வானின்று போர்தொடுக்கும்
மின்னலாய்
அவள் பிம்பங்கள்....,

விருச்சங்களை
விதைக்குள் பதிக்கிறேன்,
இமயத்தை
தூரிகையில் கட்டுகிறேன்,
நதிகளை
மழைத்துளிக்குள் அடைக்கிறேன்,
இயற்கையினை
உயிர் கொண்டு கொல்கிறேன்,
பிரபஞ்சம் தீண்டிவிட்டாலும்
இன்பம் சொல்லா
வெற்றிக்களிப்பு...

என்னுள்
காதலென்ற சொல்லொன்று
நோய் என்று
நிற்கிறது,
துடிக்கும் நெஞ்சை
நொடிக்கச்செய்து
நோய் செய்தாய் நீ...

உயிரைக்கிள்ளும்
வலியைத்தந்து
மலராய் எதிர்நின்றாய்,
மருந்தையும் கையில்கொண்டு..,
ஏனோ
விலையை மட்டும்
வெளியே விட்டுவிட்டாய்
சுற்றமும், நட்புமாய்.....

-குளிர்தழல்.

ஆதவா
10-12-2008, 06:33 AM
குளிர்தழல்.... என்னவொரு அருமையான பெயர்!! முரண்பட்ட அன்பைப் பொழியும் கணவன் மனைவியாய்..........

கவிதை காணாமல் போனது குறித்து சற்று வருத்தம்தான்... இது குளிர்காலம்........ அனைவரும் குளிருக்குப் பயந்து நெருப்பில் தலையை நீட்டும் காலம்.....


உயிர்குடித்து மலரும்
பூக்கள்,
குயிலின் அடிநெஞ்சில்
உயிர்க்கும் சுரங்கள்,
தற்கொலை முயற்சியில்
பிறக்கும் அருவிகள்,
இரவைக் கொன்ற விடியல்,முரணுக்கு முரணாக ஒன்றையொன்று முந்திக் கொண்டு மோதிக் கொண்டு இணைந்த பிணைப்பில் வெளிறி வெளியேறி பிறந்திருக்கின்றன வார்த்தைகள். நேரெதிர் சென்றால் எதிர்நேர் செல்லும் கோணக் கவிதைகள் பலவற்றுள் முரண் தொடை தன் மெய் காட்டியலைவதுண்டு. மென்மையல்ல, குருதி குடிக்கும் கொடூரப் பூக்கள், அதக்கித் துப்ப அடிமுனையில் ஜனனிக்கும் குயில் ராகம், என்று எடுத்த வார்த்தைகள் 'அட இவ்வளவு தான்' என்று இலக்கணம் எழுதிவிட்டுச் செல்கின்றன. அருவிகள் குதித்து பிறக்கும் விடியல் கொலைசெய்து பிறக்கும்... எந்த ஒரு மென்மையான விசயத்தையும் கொடூரமாகச் சொல்லும் திறன் கவிதைக்கு உண்டு என்பதால் அவை வாய்க்கின்றன... மேலும் அது உங்களுக்கென்றே!

மறித்து - மரித்து ? இரண்டில் இரண்டாவதே சரியெனப்படுகிறது :icon_b:

நம்முள் காட்சிகள் ஒழுகும், மாயைக்குள் தலை நுழைத்து மீண்டு வரும்பொழுது காட்சிகளோடு நெஞ்சமும் ஒழுகும். இந்த மாயை என்பது என்ன? நமக்குள் ஏற்படும் மனப்பிரளல். ஒன்றுக்கொன்று தான் வெற்றியடைந்ததை முரசு கொட்டுவதைப் போன்று மனத்தைக் கொட்டுவதால் ஏற்படும் பிரமை. நமக்கு இருக்கும் வரையிலும் அதன் அருமை தெரிவதில்லை.. எல்லாமே அழிந்து போனால் மொட்டைப் பூமியில் மூலை முடுக்கெல்லாம் தேடியலைவோம்... உயிர்தேடி..........


//உடைந்த பாறைக்குள்
சிற்பமாய்,
கலையும் மேகங்களுக்குள்
ஓவியமாய்,
பொருள்விளங்கா சொற்களுக்குள்
கவிதையாய்,
உயிர்துறந்த கனவுக்குள்
கற்பனையாய்,
வானின்று போர்தொடுக்கும்
மின்னலாய்
அவள் பிம்பங்கள்....,//


சரி, அவள் பிம்பங்கள் எங்கெல்லாம் விதைக்கப்பட்டனவோ அங்கெல்லாம் துளிர்க்கப்பட்டன. சிற்பமாய் ஓவியமாய் இன்ன பிறவுமாய் அல்லாமல் எல்லாமுமாய்.
தேடிக் கிடைத்த இன்பத்தை எப்படி கொண்டாடுவோம்? தலைகீழ் புராணம்தான் அதன் இலக்கணம். நீங்கள் காட்டை உங்கள் மூட்டைக்குள் பொத்தி வைக்கிறீர்கள்... தாங்கமுடியாத இன்பம்.. அவ்வின்பம்தான் நோய்க்கான ஊற்று.....

அடுத்து நீங்கள் வரும் வரிகளும் நோய்குறித்து...

விலையை மட்டும்
வெளியே விட்டுவிட்டாய்
சுற்றமும், நட்புமாய்.....


ஆனால் பாருங்கள், நோய் என்பது நாமாகப் போய் பெறுவது..... அவளைத் தேடிய அவன் பெற்ற நோய் அது.. மருந்துக்கு அவளையே நாடவேண்டிய கட்டாயம்.. கிடைத்ததா என்றால்.. ஆம் என்கிறீர்கள். ஆனால் விலை எதற்கு? (காதலைப் பொறுத்தவரையில்..:D)

நல்லதொரு கவிதை குளிர்தழல்.. நமக்காக மட்டுமல்ல, நம்மை அண்டியிருப்பவர்களுக்காகவும் நாம் காதலிப்பது அல்லது காதல் தவிர்ப்பது வேண்டியதாக இருக்கிறது... இறுதி வரி திருப்பம் அலாதியானது. வாழ்வுப்பக்கத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் இம்மாதிரி திருப்பம் இருப்பதும் அலாதியே!!!

வார்த்தை எழிலும் நயமும் வழுக்கிச் செல்லும் கருவுமாய் காதல் படித்த இக்கவிதைக்கு


4 ஸ்டார்கள்
250 மின்பணம்

kulirthazhal
21-12-2008, 03:29 AM
ஆதவன் அவர்களுக்கு வணக்கம்.
ரசித்தற்கு நன்றி,
ஆழ்ந்துப் படித்து விமர்சித்த வார்த்தைகள் எனக்கு மகுடங்கள்,

ஊக்கப்படுத்தியதற்கு மகிழ்கிறேன்...

சசிதரன்
21-12-2008, 03:55 AM
மிக அருமையான கவிதை குளிர்தழல்.... மிக சிறந்த விமர்சனம் ஆதவன் அவர்களே...:)