PDA

View Full Version : தமிழ் மூச்செழுந்து எரிகிறது!தமிழ்தாசன்
22-11-2008, 10:31 AM
வானம் கிழிந்தது!
பூமிப்பந்தின் தமிழ் மூச்செழுந்து எரிகிறது!
வெட்டிப்பேச்சும்,வெறும்பேச்சும்
வெறுத்துப்போச்சு.
குட்டிபோட்ட பூனையின் நிலையா நம் வாழ்வு?
தட்டிக் கேட்கும் தன்மானக் குணம் எங்கே போச்சு?

கிட்டிபொல்லும், கிளித்தட்டும்
கெந்திபிடித்த மணல் விளையாட்டும்,
குந்தியிருந்து வானத்து நிலாவுக்கு கூடிக்கொடுத்த
முற்றத்து முத்தமும்,
தென்னோலைக் கீற்று விரித்து
பாக்குரலில் இடித்துக்கொண்டே
பொக்கைவாய் பொன்னம்மாப்பாட்டி வாய் சிரித்து
பாடிய காலங்கள் மறந்துபோச்சா?

வெள்ளுடை உடுத்தி
மெல்லநடை நடந்து
பள்ளிபோனதும்,
பக்கத்து வாங்கு பகீரதனை பார்த்து நெளித்துபோனதும் நினைவிழந்தாச்சா?

தமிழ் வாத்தியார் பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை சொல்லிதந்த இலக்கியப்பாடம் இலக்கிழந்து போச்சா?

எகிறி எகிறி எத்தணித்தாலும்,
எல்லாம் மாறினாலும்,
என்னவோவெல்லாம் மறந்து போனாலும்,
தமிழ்க் குணமும்,வடிவமும்
மாறிடாது.

பார் முகத்தை கண்ணாடியில் வடிவாய்ப்பார்.
அப்போதாவது தெரியாவிட்டாலும்
என்ன செய்ய?
பார்த்தால்.
வெட்கித் தலை குனியும்பார்.

தமிழைநேசித்தால் போதாது
தமிழ்வாழ தேசமன்றோ வேண்டும்.

ஆதவா
22-11-2008, 11:09 AM
வாழ்த்துக்கள் தமிழ்தாசன் ஐயா.

மெல்லத் தமிழினி சாகும் என்றான் பாரதி. அப்படித்தான் தோன்றுகிறதோ என்கிற மாயை ஏற்படலாம். ஆனால் தமிழ் நேற்று முளைத்து இன்று குடை சாயும் காளான் அல்ல. அது இயற்கையும் அழிக்கவியலா உன்னத மொழி..

நீங்கள் மறந்து போச்சா? நினைவிழந்தாச்சா என்று கேட்கிறீர்கள்..

இல்லை.. தமிழ் அப்படிமங்களைக் கடந்து வந்திருக்கிறது.. அவ்வளவே. தமிழ் ஒவ்வொரு இடத்திலும் பாத்திரத்திற்கேற்ப நீர் வ்டிவம் பெறுவது போல தங்கி வருகிறது. அன்று திண்ணையில் தமிழ் ஓதினார்கள், இன்றூ திண்ணை.காமில் எழுதுகிறார்கள். அன்று மன்றம் அமைத்து தமிழ் வளர்த்தார்கள். இன்று தமிழ்மன்றம்.காம் அமைத்து வளர்க்கிறார்கள்..

இது நாளை எப்படிவேண்டுமென்றாலும் மாறலாம்.. ஏன்? கவிதைகளுக்கென தனிமன்றம் அமையப்பெறலாம்.. அங்கே விவாதங்கள் நடைபெறலாம்..

உடல் ஒன்றுதான்.. உடுத்தும் உடைதான் வெவ்வேறு.

உங்கள் கவிதை வரிகளில் காரம் தூக்கல்... தமிழ் மொழி மென்மை ஐயா.. உங்கள் காரத்தில் மென்மை அரித்துவிடப்போகிறது. கொஞ்சம் வார்த்தைகளை ஒடுக்குங்கள்.

நீங்கள் இலங்கைத் தமிழர் என்பது மாத்திரம் தெரிகிறது. அதனால்தான் அந்த வீரமும் கவிதையில் கலந்து இருக்கிறது.

பகீரதன், பண்டிதர் ஈஸ்வரநாதபிள்ளை ஆகியோரைப்பற்றி சற்று கூறுங்கள்.

உங்கள் அவதார் ஓவியம் அருமை :)

Keelai Naadaan
22-11-2008, 01:55 PM
வாழ்த்துக்கள் தமிழ்தாசன் ஐயா.

மெல்லத் தமிழினி சாகும் என்றான் பாரதி. அப்படித்தான் தோன்றுகிறதோ என்கிற மாயை ஏற்படலாம்.
சிறு விளக்கம் ஆதவன்

"தமிழ்த்தாய்" என்ற தலைப்பில்
ஆதிசிவன் பெற்று விட்டான் - என்ற பாடலில்
.........
......
.....
........
இன்றொரு சொல்லினை கேட்டேன்! - இனி
ஏது செய்வேன் என் தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்!


"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்ககளின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசை யெனக் கெய்திட லாமோ!
சென்றி டுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

தந்தை அருள்வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

என்கிறது அந்த பாடல்

ஆதவா
22-11-2008, 02:22 PM
"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்ககளின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசை யெனக் கெய்திட லாமோ!
சென்றி டுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

யாரோ சொன்னார்களாம்... தமிழ் செத்து மேற்கு மொழிகள் ஆதிக்கம் செலுத்தும் என்று..... பாரதி இல்லை சாகாது என்று அடம் பிடிக்கவில்லை...
தமிழ் சாகக் கூடாது என்றால் எல்லா கலைச் செல்வங்களையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறார் கீழைநாடான்.

அதையேத்தான் நானும் சொல்கிறேன். தமிழ் சாகாது என்று உறுதியாக பாரதியால் சொல்லமுடியவில்லை... ஏனெனில் அப்பொழுது அழிந்துகொண்டிருந்தது..

அவ்வளவு ஏங்க....

எத்தனை காலம் ஆனாலும் மருத்துவம் படிக்க ஜெர்மனில் தான்(சரியாகத் தெரியவில்லை) படிக்கவேண்டும்..

முழுக்க தமிழில் படிக்க இயலுமா?

அதைத்தான் முதல் வரியிலேயே சொல்லிவிட்டார்... அவர் சொன்னதை நாம் நிறைவேற்றவில்லை என்பதே உண்மை

Keelai Naadaan
22-11-2008, 03:16 PM
நீங்கள் சொல்வது உண்மை தான் ஆதவன்.

மெல்ல தமிழ் இனி சாகும் என பாரதி சாபம் இடவில்லை என்பதை குறிப்பிடவே விளக்கம் தந்தேன்

தமிழ்தாசன்
22-11-2008, 10:30 PM
வாழ்த்துக்கள் தமிழ்தாசன் ஐயா.
:)

மிக்க மகிழ்ச்சி
ஆதவா அவர்களே
உங்கள் மூத்த வாழ்த்துகளுக்கு.
---------------
எனது எழுத்துப் படைப்புக்கு தொடர்ந்து உங்கள் பார்வையூடான விளக்கப்பார்வைக்கு பதில் தரும் எண்ணம் எழுந்தமையால் தொடர்கிறேன்.மெல்லத் தமிழினி சாகும் என்றான் பாரதி. அப்படித்தான் தோன்றுகிறதோ என்கிற மாயை ஏற்படலாம். ஆனால் தமிழ் நேற்று முளைத்து இன்று குடை சாயும் காளான் அல்ல. அது இயற்கையும் அழிக்கவியலா உன்னத மொழி..

நீங்கள் மறந்து போச்சா? நினைவிழந்தாச்சா என்று கேட்கிறீர்கள்..
இல்லை.. தமிழ் அப்படிமங்களைக் கடந்து வந்திருக்கிறது.. அவ்வளவே. தமிழ் ஒவ்வொரு இடத்திலும் பாத்திரத்திற்கேற்ப நீர் வ்டிவம் பெறுவது போல தங்கி வருகிறது. அன்று திண்ணையில் தமிழ் ஓதினார்கள், இன்றூ திண்ணை.காமில் எழுதுகிறார்கள். அன்று மன்றம் அமைத்து தமிழ் வளர்த்தார்கள். இன்று தமிழ்மன்றம்.காம் அமைத்து வளர்க்கிறார்கள்..

இது நாளை எப்படிவேண்டுமென்றாலும் மாறலாம்.. ஏன்? கவிதைகளுக்கென தனிமன்றம் அமையப்பெறலாம்.. அங்கே விவாதங்கள் நடைபெறலாம்..

உடல் ஒன்றுதான்.. உடுத்தும் உடைதான் வெவ்வேறு.

:)
எனது இவ்வெழுத்துப் படைப்பாக்கத்தில் எனது சொல்லாடல் கருத்தாக்கம் தமிழ்மொழிக்கானதன்று. தன்மான உணர்வு, நடந்தவைகளின் நினைவு,இவை எங்கே போனதென்ற சுட்டுதலைப்புரியலாம்.------
தட்டிக் கேட்கும் தன்மானக் குணம் எங்கே போச்சு?
------- காலங்கள் மறந்துபோச்சா?
----------- நினைவிழந்தாச்சா?
.
அத்தோடு எம்மவர் கலை இலக்கிய 'இலக்கு' அதாவது 'கற்க.... ...நிற்க அதற்குத்தக'..என்பதற்கேற்ப இலக்கு எதுவோ அதைச்சுட்டுகிறது.


---- சொல்லிதந்த இலக்கியப்பாடம் இலக்கிழந்து போச்சா?
.
அடுத்து


எகிறி எகிறி எத்தணித்தாலும்,
எல்லாம் மாறினாலும்,
என்னவோவெல்லாம் மறந்து போனாலும்,
தமிழ்க் குணமும்,வடிவமும்
மாறிடாது.
.
என்பது இலகுவாகப்புரியும்.
,எத்தணித்தாலும்,மாறினாலும்,மறந்தாலும்,
(குணம்)தமிழர்க்கான பண்புகள் அனைத்தும் அடக்கம்.
(வடிவம்)மொழியும் மாறாது - அழியாது என்றுவிட்டு


பார் முகத்தை கண்ணாடியில் வடிவாய்ப்பார்.
அப்போதாவது தெரியாவிட்டாலும்
என்ன செய்ய?
பார்த்தால்.
வெட்கித் தலை குனியும்பார்.
.
எனும் வரிகளினூடே.. அப்டியான நிலைக்குள் செல்லும் அம் முகங்கள் கண்ணாடி பார்த்தால் தலைக்குணிவே. என்கின்றன வரிகள்.


---குட்டிபோட்ட பூனையின் நிலையா நம் வாழ்வு?
--------
தமிழைநேசித்தால் போதாது
தமிழ்வாழ தேசமன்றோ வேண்டும்.
என்பவைதான் எழுத்துப்படைப்பின் ஏக்கம்.

நீங்கள் சொன்ன..'உடல் ஒற்றுதான் ..உடுத்தும் உடைதான் வேறு' எனும் விடயம்பரவாயில்லை. ஆனால் 'உடலினையே மாற்ற நினைப்பதென்ற எண்ணம் கொள்ளுதலே நல்லதல்லவே.!.......கவிதை வரிகளில் காரம் தூக்கல்... தமிழ் மொழி மென்மை -- மென்மை அரித்துவிடப்போகிறது. வார்த்தைகளை ஒடுக்குங்கள்.

நீங்கள் இலங்கைத் தமிழர் என்பது மாத்திரம் தெரிகிறது. அதனால்தான் அந்த வீரமும் கவிதையில் கலந்து இருக்கிறது.
:)
எழுத்தாக்கத்தில்


வானம் கிழிந்தது!
பூமிப்பந்தின் தமிழ் மூச்செழுந்து எரிகிறது!
-----
தமிழ்வாழ தேசமன்றோ வேண்டும்.

வரிகளின் வழி வேதனையும், வெப்பமும், ஏக்கமும் தென்படுவதினை புரியலாம். இது உலகு வாழ் தமிழரின் ஏக்கம் என்பது என் எண்ணம்.
வீரம் உண்மைத்தமிழனுக்குண்டு.

இங்கே புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்களின்
தமிழின் இயல்பைக் தரலாம் என எண்ணியதால்..

'தமிழழுக்கும் அமுதென்று பேர்...

தமிழ் எங்கள் இளமைக்கும் பால்...
..புலவர்க்கு வேல்....
...அசதிக்குத் தேன்...
...அறிவுக்குத் தோள்..
.....கவிதைக்கு ...வாள்.
..பிறவிக்குத் தாய்.
...உளமுற்ற தீ
தமிழ் எப்போது? எதற்கு? எப்படி இருக்கவேண்டுமோ இருக்கும்.
தேனாகும்..அதேவேளை..தீயுமாகும்.
எங்கு அடங்குமோ அங்கு அடங்கும், எங்கு வெகுண்டெழ வேண்டுமோ அங்கு எழும்.உங்கள் அவதார் ஓவியம் அருமை :)
மிக்க மகிழ்ச்சி எனது வரைதலின் பதிவுக்கு.

உங்கள் போன்றவர்களின் பின்னூட்டங்களே என் போன்றவர்களுக்கு படைப்பாக்க விழிப்பூடடுதல்களை ஏற்படுத்தும். தொடருங்கள்.

அடுத்து மகாகவி பாரதியின் வரிகள் பற்றி என் பார்வை.
அதற்கு முன்.மெல்லத் தமிழினி சாகும் என்றான் பாரதி. அப்படித்தான் தோன்றுகிறதோ என்கிற மாயை ஏற்படலாம். :)
என்று நீங்கள் குறித்தீர்கள். பின்


யாரோ சொன்னார்களாம்... தமிழ் செத்து மேற்கு மொழிகள் ஆதிக்கம் செலுத்தும் என்று..... பாரதி இல்லை சாகாது என்று அடம் பிடிக்கவில்லை...தமிழ் சாகக் கூடாது என்றால் எல்லா கலைச் செல்வங்களையெல்லாம் தமிழுக்குக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இடுகிறார் கீழைநாடான்.

அதையேத்தான் நானும் சொல்கிறேன். தமிழ் சாகாது என்று உறுதியாக பாரதியால் சொல்லமுடியவில்லை... ஏனெனில் அப்பொழுது அழிந்துகொண்டிருந்தது..என்றுள்ளீர்களே?

மகாகவியின் சிந்தை, ஏக்கம், மற்றம் புதிய சாத்திரம் படையுங்கள் என்பதை

"தமிழ்த்தாய்" என்ற தலைப்பில்
ஆதிசிவன் பெற்று விட்டான் - என்ற பாடலில்
.........
இன்றொரு சொல்லினை கேட்டேன்! - இனி
ஏது செய்வேன் என் தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்!

என்று விட்டு கூறத்தகாதவன், பேதை கூறியதை எமக்குச் சொல்லி
ஏங்கி,

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்ககளின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"


என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசை யெனக் கெய்திட லாமோ![/COLOR]
சென்றி டுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

தந்தை அருள்வலியாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

என்று இறுதியுலகத் தமிழனிடமும் கேட்கிறார்.

ஆகவே
யாரோ சொன்னதாகத்தான் சொல்லுகிறார்.
அதனை தமிழர் நாம் பாரதி சொன்னார் என்கிறோம். இது தவறு.
அதுவும் தமிழரின் குணம் அறிந்துதான் பாரதி சொன்னார் போலும்.
ஏனென்றால் யாரோ சொன்னான் என்றால்தான் நம்மவர் 'யாரடா அவன் எங்களுக்குச்சொல்ல' என வேகம் கொண்டெழுவார் என என்னாரோ தெரியவில்லை என்பது என் நினைப்பு.

ஆதவா
24-11-2008, 04:52 AM
உங்களின் ஆழமான மறுபதிவுக்கு நன்றி தமிழ்தாசன் ஐயா.

பாரதி குறித்த அவ்வரிகள் எனக்கான தடுமாற்றம் கொண்டவையே என்றாலும் நான் சொன்னதிலும் அர்த்தம் மாறவில்லை.

பாரதி சாகாது என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னவர்களுக்குத் தன்னை உணர்த்தும் வண்ணம், இலக்கியச் செல்வங்களைக் கொண்டு வந்து சேருங்கள் (பிறகே சாகாது) என்ற அர்த்தத்தில் கூறியிருந்தார்..

மெல்லத் தமிழினி சாகும் என்று அவர் சொல்லாமல் சொல்கிறார்... எப்படி என்றா? அதே பாடலின் இந்த வரிகளைக் காணுங்கள்.

ஆதிசிவன் பெற்றுவிட்டான் - என்னை
...............................
..................................
ஆன்ற மொழிகளினுள்ளே - உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

ஏன்? தமிழுக்கு நிகராக வாழவில்லையோ??? (இன்னும் பல ஆதாரங்கள் உண்டு.) நிற்க. இப்பதிவு பாரதியை விமர்சிக்கும் வகையில் செல்வது தவறு...
அடுத்து...

உங்கள் கவிதையை முழுக்க தவறான நோக்கில் விமர்சிக்கவில்லை.

வார்த்தைகள் ஒடுக்குங்கள் என்று சொன்னது, மிக நீளமாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை ஒடுக்கி எழுதுங்கள் என்றேன்..

பாவேந்தர் தமிழின் குணத்தை வேல் வாள் தீ என்று சொல்லியிருந்தாலும் அதில் மென்மை தெரிகிறது. கோபம் தெரியவில்லை.. நீங்கள் அந்தக் கவிதையினை மேலும் மேலும் படித்தால் இது விளங்கலாம்.

நீங்கள் தமிழை தமிழனின் ஞாபகமறதியை கோபமாகச் சுட்டுகிறீர்கள்.. அந்தக் கோபத்தில் தமிழின் மென்மை அரித்துவிடப்போகிறது என்றேன்.. அதாவது அக்கோபத்தில் உங்கள் கவிதையில் காண்பிக்கப்பட்டிருக்கும் தமிழ் கோபத்தமிழாக மாறிவிடப்போகிறது என்றேன்..

தமிழ்தாசன்
24-11-2008, 01:26 PM
மிக்க மகிழ்ச்சி
உங்கள் பதில் ஆர்வத்திற்கு.உங்களின் ஆழமான மறுபதிவுக்கு நன்றி தமிழ்தாசன் ஐயா.

1.பாரதி குறித்த அவ்வரிகள் எனக்கான தடுமாற்றம் கொண்டவையே என்றாலும் நான் சொன்னதிலும் அர்த்தம் மாறவில்லை.
--------

பாரதி சாகாது என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னவர்களுக்குத் தன்னை உணர்த்தும் வண்ணம், இலக்கியச் செல்வங்களைக் கொண்டு வந்து சேருங்கள் (பிறகே சாகாது) என்ற அர்த்தத்தில் கூறியிருந்தார்..
நிற்க. 2.இப்பதிவு பாரதியை விமர்சிக்கும் வகையில் செல்வது தவறு... அடுத்து...

உங்கள் கவிதையை 3.முழுக்க தவறான நோக்கில் விமர்சிக்கவில்லை.
வார்த்தைகள் ஒடுக்குங்கள் என்று சொன்னது, மிக நீளமாக எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளை ஒடுக்கி எழுதுங்கள் என்றேன்..

பாவேந்தர் தமிழின் குணத்தை வேல் வாள் 4.தீ என்று சொல்லியிருந்தாலும் அதில் 5.மென்மை தெரிகிறது. கோபம் தெரியவில்லை.. நீங்கள் அந்தக் கவிதையினை மேலும் மேலும் படித்தால் இது விளங்கலாம்.

நீங்கள் தமிழை தமிழனின் ஞாபகமறதியை கோபமாகச் சுட்டுகிறீர்கள்.. அந்தக் கோபத்தில் 6.தமிழின் மென்மை அரித்துவிடப்போகிறது என்றேன்.. அதாவது அக்கோபத்தில் உங்கள் கவிதையில் காண்பிக்கப்பட்டிருக்கும் தமிழ் கோபத்தமிழாக மாறிவிடப்போகிறது என்றேன்..

நல்லது ஆதவா.

மீண்டும் இணைந்து உங்கள் நேசமான பதில் கிடைத்தமை எனக்கு மகிழ்வே!

வார்த்தை அடுக்குகளே கவிதை எனப் பெயர் பெற்று விட்டால் தமிழ்ச் ஆழச்சுவை என்னாவது.

இங்கே கவிஞர் வைரமுத்து அவர்கள் குறிப்பிட்ட விடயத்தை கூறலாம் என புரிந்தமையால் ...
'இலக்கணமும், வார்த்தைகளுமே ஒருவனைக் கவிஞனாக்கி விடவோ, ஓரு படைப்பைக் கவிதையாக்கி விடவோ, இயலாது.'என்று குறிப்பிடுகிறார்.
ஆகவே என் படைப்பாக்கங்களும் கவிதைப் பகுதியில் என்னால் இடப்பட்டாலும் அதை காலம்தான் நிச்சயிக்கும்.

அடுத்து
1. தடுமாற்றத்துடன் யாரையும், படைப்பையும் எப்படி எடுத்தாளலாம்.
ஐயம் திரிபுரிதல், ஆழப்பார்த்தல் அவசியமன்றோ?
2. அதுதான் சரி.
3. முழுக்க ளுமில்லை என்றால்?
4. தீ அதற்குள் இருப்பது என்ன?
5. அவரின் அக் கவியினை சுட்டவில்லை - தமிழின் தன்மை சொன்னார் அதையே சுட்டினேன்.
6. தமிழை எதுவும் அரிக்காது இல்லையா?

இலக்கங்கள் போட்டு சுட்டி எழுதியதை குறை விளங்க வேண்டாம்.
ஐயா என்று சொல்வதுதான்....

என் படைப்புகள் கவிதை என்ற அந்த உச்சத்தை தொட இவை போன்ற கருத்தாடல்களே அவசியம்.

இந்த மன்றத்தில் என் படைப்புகள் வலம் வருதலும்,
உங்கள், மற்றும் பலரின் பார்வைகள் என்பனதான் எனது ஆக்கங்களும் பலம் பெறுவதற்கு வழி செய்யும்.
மன்றத்திற்கும், நிர்வாக பீடத்தினருக்கும் ,
படைப்பாக்க கர்த்தாக்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்வு.

Keelai Naadaan
24-11-2008, 02:36 PM
என் படைப்புகள் கவிதை என்ற அந்த உச்சத்தை தொட இவை போன்ற கருத்தாடல்களே அவசியம்.

இந்த மன்றத்தில் என் படைப்புகள் வலம் வருதலும்,
உங்கள், மற்றும் பலரின் பார்வைகள் என்பனதான் எனது ஆக்கங்களும் பலம் பெறுவதற்கு வழி செய்யும்.
மன்றத்திற்கும், நிர்வாக பீடத்தினருக்கும் ,
படைப்பாக்க கர்த்தாக்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்வு.
இந்த வரிகள் தங்களின் மன முதிர்ச்சியை காட்டுகிறது.
வாழ்த்துக்கள் தமிழ்தாசன் அவர்களே.

Keelai Naadaan
24-11-2008, 03:00 PM
பாரதி குறித்த அவ்வரிகள் எனக்கான தடுமாற்றம் கொண்டவையே என்றாலும் நான் சொன்னதிலும் அர்த்தம் மாறவில்லை.

பாரதி சாகாது என்று சொல்லவில்லை. அப்படிச் சொன்னவர்களுக்குத் தன்னை உணர்த்தும் வண்ணம், இலக்கியச் செல்வங்களைக் கொண்டு வந்து சேருங்கள் (பிறகே சாகாது) என்ற அர்த்தத்தில் கூறியிருந்தார்..

உங்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ஆதவன்.
இப்படியும் பொருள் கொள்ளலாம் என்ற வகையில் தான் இருக்கிறது அந்த பாடல் வரிகள்.

தமிழ்தாசன்
24-11-2008, 03:48 PM
இந்த வரிகள் தங்களின் மன முதிர்ச்சியை காட்டுகிறது.
வாழ்த்துக்கள் தமிழ்தாசன் அவர்களே.

மிக்க மகிழ்ச்சி நேசமான உங்களின் வாழ்த்தும்.
வரிகளின் மன வயதைக் குறித்த உங்கள் புரிதலும்.
மதிக்கிறேன். வணங்குகிறேன்.