PDA

View Full Version : உன் வாசம் மாறவில்லைரங்கராஜன்
20-11-2008, 06:31 AM
உன் வாசம் மாறவில்லை


மாலை 6.00 மணி, பேருந்து நிலையத்தில் கிருஷ்ணசுவாமி தன் மகனுடன் பைக்கில் வந்து இறக்கினார். இருவரும் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு மதுரை பஸ்சை நோக்கி நடந்தனர். மகனுக்கு வயது 15 இருக்கும், தன்னுடைய அப்பாவின் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்தான். இதை அனைத்தையும் பஸ்ஸில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜானகிதேவிக்கு தூக்கிவாரிப் போட்டது. இவர்கள் பஸ்சை நோக்கி வருவதை பார்த்து, ஜானகி பஸ்சை விட்டு இறங்கி விடலாமா?, என்று கூட யோசித்தாள். ஆனால் அதற்குள் கிருஷ்ணசுவாமி பஸ்சை நெருங்கியதால், ஜானகிதேவியின் தயக்கம் தோல்வியில் முடிந்தது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, தன்னுடைய சேலையால் முகத்தை மூடிக் கொண்டாள்.

"சரிப்பா, மதுரைக்கு போனதும் மறக்காம போன் பண்ணுங்கப்பா, பாத்து நைட்ல எங்கையும் தனியா இறங்காதீங்க" என்றான் மகன்.

கிருஷ்ணசுவாமி சிரித்துக் கொண்டே "சரிங்க தாத்தா, நான் பத்தரமா போறேன், நீங்க வண்டியை ஸ்பீடா ஓட்டி போலீஸ் கிட்ட மாட்டீக்காம போங்க. லைசன்ஸ் வேற இல்லை உங்கிட்ட" என்றார்.

"அதெல்லாம் நான் பாத்துகிறேன் டாடி, பாய் டாடி" என்று அப்பாவின் தோளை கட்டிபிடித்தான் அவர் உயரத்தில் இருந்த மகன். பஸ் கிளம்ப போகிறது என்பதற்கு சைகையாக ஹாரன் அடிக்கப்பட்டது.

"ஒ.கேடா பாய், அக்காவையும், வீட்டையும் பத்திரமா பார்த்துக்கோ நைனா" என்று பஸ்ஸில் ஏறினார் கிருஷ்னசுவாமி. ஏசி பஸ் என்பதால், உள்ளே வந்ததும் குளிர்ச்சியும், மக்கின நாற்றமும்
அவரின் முகத்தில் அறைந்தது.

தன்னுடைய சீட் நம்பரை தேடினார். (நிற்க அவரின் சீட்டு நம்பர் எதாவதாக இருந்தால் கதை இத்துடன் முடிந்து விடும், அதனால் அவரின் இருக்கை ஜானகிதேவியின் பக்கத்தில் இருக்கட்டும்). . அவர் சீட்டை தேடிச் சென்றார் பக்கத்து சீட்டில் ஏதோ ஒரு பெண் உக்கார்ந்து இருப்பது அவருக்கு அசெளகர்யமாக இருந்தது. நடத்துனரை தேடினார், இருட்டில் சரியாக தெரியவில்லை. அவர் வந்தவுடன் வேறு சீட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அமர்ந்தார். ஜானகிதேவிக்கு பதட்டம் அதிகமானது, அவள் முகத்தை மறைத்து தூங்குவது போல நடித்தாள். இவரும் அவளின் பக்கம் திருப்பவில்லை. பஸ் புறப்பட்டது. அந்த ஏசியிலும் ஜானகி வியர்வையில் குளித்தாள், ஆண்டவா இன்னும் 12 மணி நேரத்தை நான் எப்படி கடத்த போகிறேன் என்று நினைத்தாள். நடத்துனர் ஒவ்வொரு சீட்டாக டிக்கெட் பரிசோதனை செய்துக் கொண்டு வந்தார். கிருஷ்ணசுவாமி தன்னுடைய பர்ஸை எடுத்து டிக்கெட்டை தேடினார் இருட்டாக இருந்ததால் தன்னுடைய சீட்டுக்கு மேல் இருந்த சின்ன விளக்கை போட்டு அதன் வெளிச்சத்தின் அடியில் பர்ஸை வைத்து தேடினார். ஜானகிதேவி அதை ஒற்றைக் கண்ணால் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சி, ஆச்சர்யம், அழுகை எல்லாம் ஒரே சமையத்தில் பீறிட்டு வந்தது. கிருஷ்ணசுவாமிக்கு டிக்கேட் கிடைத்தது. அவளுக்கு அழுகை முட்டியது.

"எப்படி இருக்குற கிருஷ்ணா" என்றாள் ஜானகி. இருட்டில் ஜானகியின் முகம் அவருக்கு சரியாக தெரியவில்லை, தோராயமாக

"ஆ செளக்கியம், நீங்க யாருன்னு ....தெரிய...லையே.". என்றார் தயக்கத்துடன். ஜானகி அவளுக்கு மேல் இருந்த விளக்கை போட்டாள்.

இவருக்கு நெஞ்சு படபடத்தது, இந்த சிறிய பல்பின் வெளிச்சத்தில் ஜானகி தெரிந்தாள்.

"ஜா....ஜா...ஜானகி நீ நீயா"

அவள் ஆம் என்பது போல அழுகையுடன் உதட்டை கடித்துக் கொண்டு தலையை ஆட்டினாள்.

"என்ன ஜானகி எப்படி இருக்க, என்...என்னால நம்ப முடியல" என்று ஆச்சர்யமாக புன்னகை செய்தார்.

அவள் ஒன்றுமே சொல்லாமல் அப்படியே கிருஷ்ணாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

" என்ன ஜானகி, என்ன ஆச்சி எதாவது பேசு"

பெருமூச்சுடன் "ஹம்... என்ன ஒரு இருபது வருஷம் இருக்குமா?" என்றாள், அதற்குள் நடத்துனர் வந்து டிக்கெட்டை பரிசோதனை செய்து முடித்து விட்டு போனார்.

கிருஷ்ணா உடனே ஜானகியின் கண்களை பார்த்து "20 வருடம் 8 மாசம் 16 வது நாள் முடிந்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் 17 வது நாள் தொடங்கப்போகுது" என்று வெறுமையாக சிரித்தார்.

ஜானகியின் கண்களில் இருந்து, அவளின் அனுமதியின்றி கண்ணீர் வழிந்தது "உன்கூட நான் இருந்த நாட்கள் என் வாழ்க்கையின் வசந்தமான நாட்கள், நீ என்ன எப்படி பார்த்துப்ப தெரியுமா?"

"உனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கா" கிருஷ்ணாவின் கண்கள் பிரகாசமாகின.

"இதை மறந்துட்டு பின்ன எதை ஞாபகத்தில் வைக்க சொல்ற. உன் அன்பை எப்படி நான் மறப்பேன், என்னை நீ தங்கதட்டில் தாங்கியதை எப்படி நான்...(அவளுக்கு தொண்டை அடைக்கிறது)....... மறப்பேன். காலேஜ் பஸ்ல நீ எனக்காக ஜன்னலோர சீட்டு பிடிச்சி வைப்பியே அதை சொல்லவா, இல்ல எனக்கு வயித்து வலி என்று தெரிந்தவுடன் எப்படியாவது மோரும், ஒரு கைபிடி வெந்தையமும் கொண்டு வருவீயே அதை சொல்லவா....." என்று மேலே பேச முடியாமல் அழுதாள்.

கிருஷ்ணாவுக்கும் அழுகை வந்தது, ஆனால் கண்களை விட்டு கண்ணீர் இறங்கவில்லை. அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்டு

"ச்சீ என்ன இது சின்ன புள்ள மாதிரி அதெல்லாம் நாம எதோ சின்ன வயசுல பண்ணினது, இப்போ நமக்கு அந்த வயசுல பசங்க இருக்காங்க. நான் அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன், நீ இன்னும் அதை ஞாபகத்தில் வச்சி இருப்பதை பார்த்த எனக்கு சிரிப்பா இருக்கு ஜானகி"

"ஓ குட், அப்புறம் எதுக்கு நான் கொடுத்த டாலரை இன்னும் உன் பர்ஸ்ல பத்திரமா கவரில் சுத்தி வச்சி இருக்க கிருஷ்ணா"

கிருஷ்ணாவுக்கு சுளீர் என்றது, ஜானகியின் முகத்தை பார்க்க முடியவில்லை, தலையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டார். ஜானகி, கிருஷ்ணாவின் கன்னத்தை பிடித்து அவள் பக்கமாக இழுத்து திருப்பினாள்.

"சொல்லு கிருஷ்ணா" என்றாள்.

அவர் ஜானகியின் கண்களை பார்த்து

" உன்னுடைய வாசனை இன்னும் மாறவே இல்லை". என்றார்.

இவரும் நெருங்கி உக்கார்ந்தனர். ஜானகி அவளை அறியாமல் அந்த வயதிலும் வெட்கப்பட்டாள். கிருஷ்ணாவின் கன்னத்தில் இருந்த அவளின் விரல்கள் பொறுமையாக கீழே இருக்கும் உதடுகளை நோக்கி இறங்கின, கிருஷ்ணாவின் உதடும் அதை தான் எதிர்பார்த்தது. தீடீர் என்று பஸ் குலுங்க இருவரும் சுயநினைவுக்கு திரும்பினார்கள், சுதாரித்துக் கொண்டனர், இருவரும் சீட்டிலும் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தனர். கிருஷ்ணா, கிருஷ்ணசுவாமியாகவும், ஜானகி ஜானகிதேவியாகவும் மாறினார்கள். கொஞ்ச நேரம் கனத்த மெளனம், இருவரும் வேறு வேறு பக்கம் தர்மசங்கடத்தால் முகத்தை திருப்பிக் கொண்டனர். பிறகு ஜானகிதேவி ஆரம்பித்தாள்.

"ஆமா உங்களை டிராப் பண்ணது யாரு, உங்க பையனா"

"ஆமா நீங்க பார்த்தீங்களா?"

"ஆ....பையன் உங்கள மாதிரியே அழ..கா...(நிறுத்தியவள்), உங்கள மாதிரியே இருக்கான், என்ன வயசு"

"15 வயசு ஆவுது, ஓரே பையன் தான், நேத்து தான் பொறந்த மாதிரி இருக்கு. இன்னைக்கு என்ன வச்சி வண்டி ஓட்டுறான், நான் பஸ்ஸுல எங்க இறங்கனும், எங்க ஏறனும் என்று எனக்கே சொல்லி கொடுக்குறான்" என்று வாய் விட்டு சிரித்தார், ஜானகிதேவியும் சிரித்தாள்.

"என்னுடைய பையனும் தான் போன மாசம் என்னை அப்படியே தூக்கி சுத்தறான், அவங்க அப்பாவே என்ன தூக்கினா கீழே விழுந்துடுவாரு" என்று சிரித்தாள். இவரும் ரசித்து சிரித்தார்.

"ஆமா சார் எப்படி, உங்கள நல்லா பார்த்துக்கறாரா?"

"அவர் ரொம்ப நல்ல டைப், அதிர்ந்து கூட பேச மாட்டார். நான்-னா அவருக்கு உயிரு"

"குட் ரொம்ப சந்தோஷமா இருக்கு". இருவரும் அந்த இரவு முழுக்க குழந்தைகளை பற்றி பேசும், பழைய நண்பர்களை பற்றி பேசியும் கடத்தினர்.

காலையில் பேருந்து மதுரையை அடைந்தது. இருவரும் உதட்டில் மட்டும் சிரித்துக் கொண்டு, உள்ளத்தை அதே இருக்கைகளில் விட்டு விட்டு, பிரியா விடைப் பெற்றபடி வண்டியில் இருந்து இறங்கினார்கள். எதிரில் ஜானகியின் கணவர் காரில் காத்துக் கொண்டு இருந்தார்.

"யாரீ அவன், பார்த்து சிரிச்சினே வர"

"யாருனு தெரியாதுங்க, என் பெட்டியை எடுக்க உதவி செஞ்சாரு, அதான் தாங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன்". என்றாள் ஜானகிதேவி.

வீட்டிற்கு வந்த கிருஷ்ணசுவாமி குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது, குளியலறை கதவை லேசாக திறந்து தன் மனைவியை பார்த்து,

"ஜானகி அந்த டவலை கொஞ்சம் எடுத்து கூடுமா" என்றார். சமையல் அறையில் இருந்து வந்த அவரின் மனைவி மீனாட்சி

"என்னது ஜானகியா, அது யாருங்க ஜா...னகி..கீ..கீ" என்று ஒரு இழு இழுத்தாள்.

குளியறை கதவு படார் என்று மூடிக் கொண்டது, உள்ளே மயான அமைதி நிலவியது.
__________________

மதி
20-11-2008, 06:52 AM
வலி கொண்ட கதை... :)
கதையாயினும் சில சந்தேகங்கள்...
ஏதோ காரணத்தால் இருவரும் கல்லூரி காலத்திலேயே பிரிந்துவிட்டனர். ஆனாலும் கிருஷ்ணா இன்னமும் அவள் புகைப்படத்தை வைத்திருப்பது அழகல்லவே.. மேலும் அப்படி வைத்திருந்தாலும் இத்தனை வருஷமாக அந்த விஷயம் அவர் பொண்டாட்டிக்கு தெரியாமலா போயிருக்கும்...??

ரங்கராஜன்
20-11-2008, 07:05 AM
வலி கொண்ட கதை... :)
கதையாயினும் சில சந்தேகங்கள்...
ஏதோ காரணத்தால் இருவரும் கல்லூரி காலத்திலேயே பிரிந்துவிட்டனர். ஆனாலும் கிருஷ்ணா இன்னமும் அவள் புகைப்படத்தை வைத்திருப்பது அழகல்லவே.. மேலும் அப்படி வைத்திருந்தாலும் இத்தனை வருஷமாக அந்த விஷயம் அவர் பொண்டாட்டிக்கு தெரியாமலா போயிருக்கும்...??

அழகா? தர்மமா? என்பதெல்லாம் நம் மனசாட்சிக்கு இல்லை, மனசாட்சி சரின்னு சொன்னா சரி, தப்புனு சொன்னா தப்பு அவ்வளவு தான். கிருஷ்னசுவாமிக்கு அது சரின்னு பட்டு இருக்கு.

மனைவி ஒரு இழு இழுத்தாள் என்ற வார்த்தையிலே அவளுக்கு இந்த விஷயம் பற்றி ஏற்கனவே சந்தேகம் இருக்கு என்பது புலப்படுகிறது.

நன்றி மதி

geminisenthil
20-11-2008, 08:22 AM
கதை மிகவும் அருமை.....
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், காதல் வாசம் மாறவில்லை........

ரங்கராஜன்
21-11-2008, 05:56 AM
கதை மிகவும் அருமை.....
சுருக்கமாக சொல்லவேண்டுமானால், காதல் வாசம் மாறவில்லை........

நன்றி நண்பரே
காதலின் வாசம் மாறிவிட்டது, ஆனால் மறக்கபடவில்லை. இதான் கதையின் கரு.

geminisenthil
21-11-2008, 08:21 AM
சரியாக சொன்னீர்கள்

MURALINITHISH
22-11-2008, 09:01 AM
காதலின் வாசங்கள் மாறினாலும் காதலியின் வாசங்கள் மாறினாலும் நம் ஆழ்மனதில் அந்த எண்ணங்களின் வாசங்கள் மாறாது அது அழியவும் அழியாது
என்னது மனைவிக்கு தெரியுமா தெரிந்தும் புகைபடத்தை எடுக்கமல் இருக்கிறார்களா பரவாயில்லை அவருக்கு நல்ல வரத்தைதான் இறைவன் கொடுத்து இருக்கிறார் (மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்)

ரங்கராஜன்
01-12-2008, 05:06 PM
காதலின் வாசங்கள் மாறினாலும் காதலியின் வாசங்கள் மாறினாலும் நம் ஆழ்மனதில் அந்த எண்ணங்களின் வாசங்கள் மாறாது அது அழியவும் அழியாது
என்னது மனைவிக்கு தெரியுமா தெரிந்தும் புகைபடத்தை எடுக்கமல் இருக்கிறார்களா பரவாயில்லை அவருக்கு நல்ல வரத்தைதான் இறைவன் கொடுத்து இருக்கிறார் (மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்)

நன்றி முரளி
உங்களின் வித்தியாசமான விமர்சனத்தை பதித்து இருக்கீங்க.

Narathar
14-12-2008, 01:39 PM
முதல் காதல்
முதல் முத்தம்
முதல் ஸ்பரிசம்

இவை வாழ்வில் மறக்க முடியாதவைதான்....... அருமை மூர்த்தி.

samuthraselvam
28-02-2009, 09:06 AM
அண்ணா இது நீங்கள் சொன்னதுபோல் ஜனகியாகவும் கிருஷ்ணாவாகவும் நம்மை உணர்ந்தால் மட்டுமே இது நியாயமாகப்படும். முதல் காதலை மறைத்துக்கொண்டு மறந்ததுபோல் வாழ்ந்தாலும் அது ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். அது அவர்களுடைய நினைவுகளுக்கு ஒரு புத்துணர்வு அளித்து மன இறுக்கத்தை அகற்றும். அது அவர்களுக்கு மட்டும் புரியும். அந்த நினைவுகள் மற்றவரின் பார்வைக்கு தப்பு தான்.

இளசு
09-03-2009, 09:25 PM
புகைப்படம் வைத்திருப்பது வெகு அரிது நிஜத்தில்...

''அவர் பெட்டி இறக்க உதவிய ஆள்'' - இது மிக சாத்தியம்..!

அதிகாலைக் கனவுகளில் மட்டும் வரும்வரை முதல் காதலியால் சங்கடமில்லை!

மற்றபடி மீள வந்தால், ''அழகி'' படக்கதைதான் !

பாராட்டுகள் தக்ஸ்!

ரங்கராஜன்
10-03-2009, 04:40 AM
புகைப்படம் வைத்திருப்பது வெகு அரிது நிஜத்தில்...

''அவர் பெட்டி இறக்க உதவிய ஆள்'' - இது மிக சாத்தியம்..!

அதிகாலைக் கனவுகளில் மட்டும் வரும்வரை முதல் காதலியால் சங்கடமில்லை!

மற்றபடி மீள வந்தால், ''அழகி'' படக்கதைதான் !

பாராட்டுகள் தக்ஸ்!

நன்றி அண்ணா
ஆமா இல்ல அழகி மாதிரி தான் கொஞ்சம் இருக்கு, நீங்கள் சொன்னவுடன் தான் கவனித்தேன்.

மதுரை மைந்தன்
10-03-2009, 12:11 PM
புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தைகளுடன் சித்து விளையாட்டு விளையாடி புத்தம் புது கதை என்று மார் தட்டிக் கொள்ளும் கதாசிரியர்களுக்கு நடுவில் உங்கள் எழுத்தக்கள் ஓர் தனி ஆவர்த்தனம். வாழ்த்துக்கள் நண்பர் தக்ஸ்.

ரங்கராஜன்
10-03-2009, 01:08 PM
புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தைகளுடன் சித்து விளையாட்டு விளையாடி புத்தம் புது கதை என்று மார் தட்டிக் கொள்ளும் கதாசிரியர்களுக்கு நடுவில் உங்கள் எழுத்தக்கள் ஓர் தனி ஆவர்த்தனம். வாழ்த்துக்கள் நண்பர் தக்ஸ்.

நன்றி மதுரை சார்
உங்களின் வாழ்த்துக்கு

இளசு
10-03-2009, 07:13 PM
நன்றி அண்ணா
ஆமா இல்ல அழகி மாதிரி தான் கொஞ்சம் இருக்கு, நீங்கள் சொன்னவுடன் தான் கவனித்தேன்.

இல்லை தக்ஸ்

இந்தக் கதை அழகி கதைபோல் இல்லை..

ஆனாலும் இந்தக் கதையின் நாயகி போல் வெட்டிக்கொண்டு போவதே நடப்பு வாழ்வுக்கு உசிதம்..

ஒட்டினால் என்னாகும் என்பதை அழகி கதை மூலம் சுட்ட வந்தேன்..