PDA

View Full Version : அன்பில்லாத அப்பாவுக்குரங்கராஜன்
19-11-2008, 04:25 PM
அன்பில்லாத அப்பாவுக்கு

ராமசாமி நிதானமாக சட்டை பாக்கெட்டில் தேடினார், பின்பு டிராயர் பாக்கெட்டில் தேடினார், இடது, வலது, ஆ.... பேப்பர் இருந்தது.

"சார் தோ பேப்பர் இருக்கு"

"யோவ் கீழிச்சிடாம பிரிச்சி படியா"

ஒரு கசங்கிய பேப்பரை பிரித்து படிக்க ஆரம்பித்தார் ராமசாமி.

அன்பில்லாத அப்பாவுக்கு
என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியில, இருந்தாலும் சொல்கிறேன். என் பெயர் மதன், வயசு 15 ஆவுது. என்னை எல்லோரும் உங்களுக்கு பிறந்தவன்னு சொல்றாங்க ஆனால் அதுக்கான அறிகுறிகள் எதுவும் உங்களிடம், என்னிடமும் இல்லை, நல்ல வேலை இல்லை. என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பதுனு தெரியல, சரி நேராவே ஆரம்பிக்கிறேன். என்னை உங்களுக்கு ஏன் பிடிக்கல?, நான் கருப்பா இருக்கேன்னா இல்ல, குள்ளமா இருக்கேன்னா. ஆனா நான் இப்ப தானே இப்படி இருக்கேன், நீங்க என்ன குழந்தையாக இருக்கும் போதே விட்டுட்டு போய்டீகன்னு பாட்டி சொன்னாங்களே. நான் என் சின்ன வயசு போட்டோவை பார்த்தேன் நல்ல கலரா தான் இருக்கேன், அப்புறம் எதுக்கு என்ன விட்டுட்டு போய்டீங்க. நீங்க போனதும் அம்மா ரயில்ல விழுந்து செத்துட்டாங்கலாம் பாட்டி சொன்னாங்க. பாட்டி தான் கஷ்டப்பட்டு என்ன பாத்துக்குது. சரி என்ன ஏன் உங்களுக்கு பிடிக்கல. நான் சின்ன வயசுல ஸ்கூல் போகும் போது என்னுடைய ஸ்கூல் பசங்களின் அப்பாவை பார்ப்பேன் அவங்க எவ்வளவு நல்லா என்கிட்ட பேசுவாங்க தெரியுமா. ஆனா நான் அவங்கிட்ட பேச மாட்டேன். ஏன் தெரியுமா, பேசினா அவங்க கேக்குற இரண்டாவது வார்த்தை "உன் அப்பா என்ன செய்றாருனு தான்" எனக்கு அழுகை வந்துடும் அதனால் அவங்க கூட பேசமாட்டேன். ஆனா ஒளிஞ்சி இருந்து அவர்களை பார்ப்பேன். எல்லாரும் அழகா இருப்பாங்க, அளவான மீசை, பெரிய கண்ணு, பைக் எல்லாம் வச்சினு ரொம்ப அழகா இருப்பாங்க. ஆமா நீங்க எப்படி இருப்பீங்க, பைக்கு வச்சி இருக்கீங்கலா?. என் ஃப்ரேஸ் அவங்க அப்பாவோட தோளை கட்டிபிடிச்சினு தான் பைக்குல போவாங்க, என்னையும் நீங்க ஓரே ஓரு முறை அப்படி கூட்டினு
போறீங்கலா ப்ளீஸ், ஓரே ஒரு முறை போதும். போன மாதம் நடந்த பரீச்சையில நான் பெயில் ஆயிடேன். பாட்டி தான் ரொம்ப அழுதுச்சி, ஆனா திட்டல பாவம் அது தாத்தா இல்லாம தனியா எனக்காக மட்டும் தான் உயிரோட இருக்கேன்னு சொல்லுச்சி. எனக்கு அழுகையா வந்தது. நான் எவ்வளவு முயற்சி செஞ்சாலும் என்னால நல்லா படிக்க முடியில, அம்மா நியாபகமும், அவங்க இறந்ததுக்கு காரணமான உங்க நியாபகமாவே இருக்கு. என்னுடைய மிஸ்ஸு கூட சொல்லுவாங்க

"டேய் மதன் நீ நல்ல படிக்கனும் டா, உன் நிலைமையில் இருக்கறவங்க எல்லாம் நல்ல படிச்சி பெரிய வேலையில் இருக்காங்க. நீயும் அந்த மாதிரி வரனும்" சொல்லுவாங்க.

அவங்களுக்கு என்ன சொல்லிட்டு ஜாலியா போய்டுவாங்க ஏன்னா அவங்களுக்கு அப்பா, அம்மா எல்லாரும் இருக்காங்க. என் கஷ்டம் அவங்களுக்கு புரியாது. எனக்கு உங்களுடைய முகம் கூட நினைவு இல்லை, நான் ஆறுமாச குழந்தையா இருக்கும் போது நீங்க போய்டீங்களா, அதனால் தான் எனக்கு நியாபகம் இல்லை. உங்கள என் வாழ்க்கையில் ஒரே ஒரு வாட்டி பார்த்தால் போதும், உங்க கிட்ட ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லனும். சரி எனக்கு படிப்பு தான் வரலை பாட்டிய வேலை செஞ்சியாவது காப்பாத்தலாம்னு நினைக்கும் போது பாட்டி நேத்து செத்து போச்சி. என் கையில சல்லிகாசு இல்ல பக்கத்து வீட்டு முனுசாமி அண்ணணும் நானும் தான் சைக்கிள் ரிக்ஷால தூக்கினு போய் பாட்டியை பொதச்சோம். எனக்கு என்ன செய்றதுனே தெரியிலை, பசிக்குது, அழுவையா வருது. நீங்க ஏன் என்ன விட்டுட்டு போனீங்க. உங்கள பார்த்தா ஒன்னு கேக்கனும்னு சொன்னேன் இல்ல, அது என்ன தெரியுமா

"தயவு செய்து அடுத்த ஜென்மத்தில் யாருக்கு அப்பனா இருக்காதே"

கடிதத்தின் பின்னாடி : ஒருவேலை யாராவது அப்பானு தேடினு வந்தா இந்த கடிதத்தை அவரிடம் கொடுக்கவும் என்று எழுதி இருந்தது.


ராமசாமி கண்களில் மில்லி மீட்டர் அளவுக்கு கண்ணீர் இருந்தது

"சார் பாவம் சார் பையன்"

இன்ஸ்பேக்டர் "ஆமாயா சின்ன வயசு பையன்" என்றார். அதற்க்குள் இன்னொறு காவலாளி கத்தியுடன் வந்தான்

இன்ஸ்பேக்டர் "யோவ் கத்தி வாயினு வர இவ்வளவு நேரமா, போயா போய் கயிற அறுத்து பாடிய கீழே இறக்கு"

மதி
19-11-2008, 04:36 PM
முதலில் படிக்க ஆரம்பிக்கும் போது சற்று நெருடியது... பின் தான் உறைத்தது. சில விஷயங்கள் வாழ்வின் போக்கையே மாற்றிவிடும். பாட்டி இறந்தபின் மதன் எடுத்த முடிவு மனதை கனத்தது.

நல்ல கதை மூர்த்தி

arun
19-11-2008, 06:38 PM
ரொம்பவும் நெகிழ்ச்சியான கதை

ரங்கராஜன்
20-11-2008, 09:00 AM
நன்றி மதி, அருண்
உங்களின் விமர்சனத்துக்கு நன்றி

சிவா.ஜி
20-11-2008, 11:19 AM
நெகிழ வைத்த கதை. யாருமில்லாத உலகில் ஒரு 15 வயது பையன் வாழ்வது உண்மையாகவே ஒரு போராட்டமாகத்தானிருக்கும். அவன் முடிவை நினைத்து வேதனையாக இருக்கிறது. பாராட்டுக்கள் மூர்த்தி.

அருள்
20-11-2008, 11:59 AM
கண் கலங்கியது

அன்பே சிவம்
பானு.அருள்குமரன்,
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

செல்வா
20-11-2008, 12:46 PM
ரொம்ப நல்லாருக்கு மூர்த்தி வாழ்த்துக்கள். ஆனா இடையில எழுத்துப்பிழைகள் இடறுகிறது. நல்ல சாப்பாட்ட ருசிச்சு சாப்பிடும் போது கல் கடிபட்டா எப்படியிருக்கும் அப்படி தெரிகிறது. கொஞ்சம் எழுத்துப்பிழை களையுங்கள்.

"தயவு செய்து அடுத்த ஜென்மத்தில் யாருக்கு அப்பனா இருக்காதே"
கடிதத்தில் அதுவரை இருந்த நடைபோய் சற்று மேதாவித்தனமாக எழுதியது போல் பட்டது. அதே நடையில் இருந்தால் நன்றாக இருக்கும் இது எனக்குத் தோன்றியது.
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

தீபா
20-11-2008, 01:33 PM
:traurig001::traurig001::traurig001::traurig001:

ரங்கராஜன்
20-11-2008, 02:13 PM
ரொம்ப நல்லாருக்கு மூர்த்தி வாழ்த்துக்கள். ஆனா இடையில எழுத்துப்பிழைகள் இடறுகிறது. நல்ல சாப்பாட்ட ருசிச்சு சாப்பிடும் போது கல் கடிபட்டா எப்படியிருக்கும் அப்படி தெரிகிறது. கொஞ்சம் எழுத்துப்பிழை களையுங்கள்.

கடிதத்தில் அதுவரை இருந்த நடைபோய் சற்று மேதாவித்தனமாக எழுதியது போல் பட்டது. அதே நடையில் இருந்தால் நன்றாக இருக்கும் இது எனக்குத் தோன்றியது.
வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி செல்வா
எழுத்து பிழைகளை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன். நீங்கள் கூறுவது உண்மை தான் மதன் அதுவரை மரியாதையாக தான் பேசி வந்தான். அந்த கடைசி வரி அவனின் எல்லா கோபங்களும் வெளிப்படுது, சாகும் ஒருவன், அந்த சாவுக்கு காரணமாக இருப்பவனுக்கு ஏன் மரியாதை தர வேண்டும். அதுவும் 15 வயது பையன். இது என்னுடைய கருத்து மட்டுமே. நன்றி

செல்வா
20-11-2008, 02:23 PM
எழுத்து பிழைகளை இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன்.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் கேளுங்கள் மன்றில் அனைவரும் உதவுவர்.


நீங்கள் கூறுவது உண்மை தான் மதன் அதுவரை மரியாதையாக தான் பேசி வந்தான். அந்த கடைசி வரி அவனின் எல்லா கோபங்களும் வெளிப்படுது, சாகும் ஒருவன், அந்த சாவுக்கு காரணமாக இருப்பவனுக்கு ஏன் மரியாதை தர வேண்டும். அதுவும் 15 வயது பையன். இது என்னுடைய கருத்து மட்டுமே. நன்றி
ஓ... காரணத்தோடு தான் அவ்வாறு இருக்கிறது என்றால் சரி. நான் நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்களோ என நினைத்தேன்.

MURALINITHISH
22-11-2008, 09:03 AM
இது போல் எத்தனையோ தகப்பன்கள் உலகில் உண்டு ஒரு குழந்தையின் வலியில் வந்த வார்த்தை அது வலியின் உச்சம்

சுகந்தப்ரீதன்
24-11-2008, 11:53 AM
ஏனோ தெரியலை மூர்த்தி.. இதுவரை படிச்ச உங்க கதையில இந்த கதை ரொம்பவே வலியை கொடுக்குது..!! பக்குவபட்ட மனிதன் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுவதற்க்கும் குழந்தைகள் வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதற்க்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது.. அதில் அவர்களுக்கு இருக்கும் வலி, இயலாமை, ஏக்கம் என்று எல்லாவற்றையும் கடிதத்தில் அப்படியே வெளிபடுத்தி இருகிறீர்கள்..!! தற்கொலை என்பது அத்தனை எளிதான விசயமல்ல.. அதையே அவன் செய்கிறான் என்றால் எந்த அளவுக்கு அந்த உள்ளம் உடைந்து போயிருக்கும் என்பதை உணரமுடிகிறது..!! கடமை தவறும் கயவர்களுக்கு நல்லதொரு சவுக்கடியாய் கடிதத்தின் கடைசி வரிகள்..!!

வாழ்த்துக்கள் மூர்த்தி..!!

minmini
24-11-2008, 12:41 PM
வாசித்து முடிந்ததும் மனதுக்கு ரொம்பவும் ரனமாக இருந்தது.......
கதை கதையாகவே இருக்கட்டும்....................
நிஜத்தில் நடக்கக்கூடாதென்று பிரார்த்திக்கிரேன்............

ரங்கராஜன்
24-11-2008, 01:28 PM
நன்றி மின்மினி & ப்ரீதன்
உங்களின் விமர்சனங்களுக்கு, நீங்கள் கூறுவது போல கதைகள் கதைகளாகவே இருந்தால் அதைவிட எனக்கு வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்.

Narathar
25-11-2008, 07:09 AM
உண்மையாகவே அழவைத்துவிட்டீர்கள் மூர்த்தி....
அவன் கடித்தத்தை வாசிக்கும்போது வராத கண்ணீரை, அவனது முடிவினில் வரவழைத்துவிட்டீர்கள்......

என்னவென்று உங்களை பாராட்ட?
எனக்கு ஏற்றாப்போல அதிகமா எழுதாம சுருக்கமா சுருக்கென்று ஒரு கதை தந்திருக்கீங்க.............

வாழ்த்துக்கள்..... நேரில் சந்திக்கும் போது இந்த கதைக்கு சன்மாணமுண்டு.... அதனால் இ பணம் இல்லை!!!!!

ரங்கராஜன்
25-11-2008, 07:14 AM
உண்மையாகவே அழவைத்துவிட்டீர்கள் மூர்த்தி....
அவன் கடித்தத்தை வாசிக்கும்போது வராத கண்ணீரை, அவனது முடிவினில் வரவழைத்துவிட்டீர்கள்......

என்னவென்று உங்களை பாராட்ட?
எனக்கு ஏற்றாப்போல அதிகமா எழுதாம சுருக்கமா சுருக்கென்று ஒரு கதை தந்திருக்கீங்க.............

வாழ்த்துக்கள்..... நேரில் சந்திக்கும் போது இந்த கதைக்கு சன்மாணமுண்டு.... அதனால் இ பணம் இல்லை!!!!!


வாங்க தலைவா
ரொம்ப நாளா ஆளையே காணவில்லையே, சிவாஜி போட்டிக்கு மட்டும் தலை காட்டி விட்டு போறீங்களே நியாயமா?, அடிக்கடி என்னையும் கண்டுக்கோங்க தலைவா. உங்களின் வாழ்த்துக்கு நன்றி, என் முன்னேற்றத்தில் உங்கள் பங்கு மிக
முக்கியம் .......உரிமையுடன்.

Narathar
25-11-2008, 07:23 AM
இப்படி சிறு கதையா எழுதினா வாசிக்க வசதியா இருக்கும்..........
சில கதைகளை திறந்து பார்த்த உடனேயே பதறிப்போகின்றேன்.......... இவ்வளவையும் வாசிக்கனுமா? இப்ப டைம் இல்லையே ஆறுதலா வாசிக்கலாமென்று விட்டுவிடுவேன்....... ஆனால் அது எப்பவுமே நடக்காது! அதுதான் உண்மை!

இது Fast food உலகமில்லையா?

நாராயணா!!!

அமரன்
27-11-2008, 07:33 AM
கவனத்தை இழுத்து புருவத்தை வளைத்த கதை கடைசியில் காயத்தை பரிசாக்கியது. பஞ்சுக் குவியல்களை மூட்டை மூட்டையாக ஏற்றினால் பாரம் தாங்காது வண்டி குடைசாயும் என்பது போல் இந்தச் சிறுவன் மீது எத்தனை பாரங்கள். தற்கொலை முடிவு பிழையென சொல்ல நினைத்தாலும் முடியவில்லை. இத்தைகைய கதைகள் கதைகளாகவே இருந்துவிட்டால் உங்களைப் போல் எனக்கும் சந்தோசம் மூர்த்தி. பாராட்டுகள்.

samuthraselvam
16-02-2009, 06:42 AM
அண்ணா..!
இதுபோல் உண்மையில் நடந்திருந்தால்(!!??) ஐயோ! பாவம் அந்த சிறுவன். அந்த சிறுவனின் வேதனைகளை படிப்பவரே அனுபவித்த மாதிரி இருக்கிறது.. இந்தக்கதையின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.. மனதை நெகிழ் வைக்கும் கதை..

aren
16-02-2009, 07:18 AM
அருமையான கதை. அழகான வர்ணனையுடன் எழுதியிருக்கிறீர்கள். கடைசி முடிவு இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் 15 வயதுவரை வாழ்ந்தவன் இன்னும் கொஞ்சம் வாழ்ந்து சாதித்திருக்கலாமே?

அன்புரசிகன்
16-02-2009, 08:04 AM
மிகவும் கனமான கதை... இறுதி வரி கலங்கடித்துவிட்டது.... இந்த சிறுவயதிலேயே அசாதாரண முடிவு எடுத்திருக்கிறானே........

ரங்கராஜன்
16-02-2009, 09:33 AM
இந்த கதையை எழுதி ரொம்ப நாள் கழித்து வந்த விமர்சனங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், நன்றி அரென் அண்ணா, நன்றி பாசமலரே, நன்றி அன்பு.

விகடன்
23-02-2009, 07:29 AM
மன உழைச்சலும் பாசத்தின் ஏக்கமும் ஓர் மனிதனின் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டிகள். அவன் சிந்தனையை மந்தமாக்கும் ஊக்கிகள் என்பதை சொல்லிச்சென்ற கதை.

சொல்லப்பட்ட விதம் அழகாக உள்ளது.

பாராட்டுக்கள் தக்ஸ்

samuthraselvam
20-03-2009, 11:36 AM
மன உழைச்சலும் பாசத்தின் ஏக்கமும் ஓர் மனிதனின் முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டிகள். அவன் சிந்தனையை மந்தமாக்கும் ஊக்கிகள் என்பதை சொல்லிச்சென்ற கதை.

சொல்லப்பட்ட விதம் அழகாக உள்ளது.

பாராட்டுக்கள் தக்ஸ்

விராடன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை...

மன்மதன்
20-03-2009, 03:26 PM
சிறுகதை..சிறு முடிவு..

கண்ணீரை துடைக்க தொடும் கைக்குட்டையின் டச்சிங்
இந்த கதையில்..

பாராட்டுகள் தக்ஸ்..

பா.ராஜேஷ்
21-03-2009, 10:10 AM
சமுதாயத்தின் அவல நிலையை விளக்கும் மற்றுமொரு மைல் கல்!

பூமகள்
21-03-2009, 11:30 AM
முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு இவ்வகை முட்டுக் கட்டைகள் பெரிய புயல் தான்.. ஆயினும்.. சாதிக்கத் துடிப்பும் தன் முனைப்பும் கிரியா ஊக்கியாக ஒருவரும் உடன் இல்லாததே இவ்வகை முடிவுகளுக்கு காரணமாகிறது..

தாய், தந்தையின் பிரிவினால் ஒரு குழந்தையின் எதிர்காலம் எவ்வகையில் அழிந்து போகுமென்பதைப் பறைசாற்றும் பதிவு..

தீபங்கள் என்றும் பிரகாசிக்க தூண்டுகோல்கள் எப்போதும் தேவை... அவ்வகை தூண்டுகோலாக நாம் இருக்க வேண்டுமென்பதை உணர்த்தும் கதை..

சிறு புன்னகை, கொஞ்சம் அக்கறை, தட்டுக் கொடுத்தல், பாராட்டி ஊக்குவித்தல் இவ்வகையில் நாம் இருந்தோமேயானால் நிச்சயம் இன்னொரு சிறுவனின் மரணம் நேராது..

நெஞ்சு பொறுக்கவில்லை இறுதி வரிகள் படிக்கையில்..

கதையின் வித்தியாசமான போக்கு கலக்கல்..

என்னை நெருடியவை..

செல்வா அண்ணா சொன்ன இடம்..

ஒரு 15 வயது விடலைப் பையன், ஒரு 10 வயது சிறுவனைப் போல கடிதத்தில் சொன்ன செய்திகள்.. விசயங்கள்.. ஏதோ மிஸ்ஸிங் தக்ஸ்..

15 வயது பையன் நிச்சயம் குழந்தைத் தன்மையுடன் இவ்வகையில் பேச வாய்ப்பில்லையென நம்புகிறேன்.. மீது ஆண்களுக்கே வெளிச்சம்...

வித்தியாசமான கதை.. பாராட்டுகள் தக்ஸ்...

ரங்கராஜன்
21-03-2009, 11:45 AM
..

என்னை நெருடியவை..

செல்வா அண்ணா சொன்ன இடம்..

ஒரு 15 வயது விடலைப் பையன், ஒரு 10 வயது சிறுவனைப் போல கடிதத்தில் சொன்ன செய்திகள்.. விசயங்கள்.. ஏதோ மிஸ்ஸிங் தக்ஸ்..

15 வயது பையன் நிச்சயம் குழந்தைத் தன்மையுடன் இவ்வகையில் பேச வாய்ப்பில்லையென நம்புகிறேன்.. ..

நன்றி பூமகள்

உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும். உங்களிடம் ஒரு சிறு கேள்வி, நீங்கள் அந்த 15 வயது பையன் இடத்தில் இருந்தால், என்ன செய்து இருப்பீர்கள். வாழ்க்கையை போராடி வெற்றி பெறுவேன் என்று கூறிகிறீர்களா. வெரி குட்.

ஆனால் நானாக இருந்தால் இந்த பையன் மாதிரி தான் எழுதி இருப்பேன். காரணம் தன்னுடைய ஏக்கத்தை அனைவரும் குழந்தையாக தான் மாறி விடுவார்கள், இதில் வயது எங்கு இருந்து வந்தது.

உங்கள் அழுகையை நிறுத்த கூடியவர் தான், உங்கள் அழுகைக்கு காரணமாக இருக்கும் பொழுது, அவரிடம் நீங்கள் எப்படி பேசுவீர்கள் பூமகள்.

இந்த கதையின் தாக்கம் உங்களுக்கு முழுமையாக புரியவேண்டும் என்றால் ஒன்று அந்த 15 வயது பையனின் மனநிலையில் இந்த கதையை நீங்கள் படிக்க வேண்டும் அல்லது கடைசியாக வந்து அந்த கடிதத்தை தப்பு செய்த அப்பாவாக படிக்க வேண்டும் அப்பொழுது தான் இந்த கதையின் முழு தாக்கமும் புரியும்.

போலீஸ்காரரின் நிலையில் இருந்து படித்தால் பத்தோடு இதுவும் பதினொன்னாவது தற்கொலை தான்.

நீங்கள் மகனா??? தந்தையா??? அல்லது போலீஸ்காரரா?? முடிவு உங்கள் கையில்.

நன்றி உங்கள் விமர்சனத்திற்கு பூமகள்