PDA

View Full Version : முதியோர் இல்லம்



ரங்கராஜன்
19-11-2008, 03:48 AM
முதியோர் இல்லம்


தாமு முதியோர் இல்லம், சென்னையில் புறநகர் பகுதியில் இருந்தது. அந்த இல்லத்தை சுற்றி மரங்கள், பூச்செடிகள், பறவைகள் என்று அழகாக இருக்கும். அதன் உள்ளே சென்றால் அது சென்னை என்று நமக்கு தோனாது. இன்று அந்த இல்லம் இன்னும் அலங்காரமாக இருந்தது, இல்லத்தின் 25-வது ஆண்டு விழா அதாவது வெள்ளி விழா. இல்லத்தில் இருக்கும் அனைவரும் அவர்களின் குடும்பமும் வந்து இருந்தார்கள். அனைவருக்கும் உணவு கொடுக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தாத்தா பாட்டிகள் நடனம், பாட்டு, உடை அலங்காரம் என்று தூள் பண்ணினார்கள். பாட்டிகள் ஆடை அலங்கார அணி வகுப்பில் வெட்கப்பட்டு நடந்து வர, தாத்தாக்களும் பேரன்களும் விசில் அடித்தார்
நிகழ்ச்சி அருமையாக நடந்து முடிந்தது. இறுதி நிகழ்ச்சியாக கலந்துரையாடல் வைத்தார்கள், அனைவரும் சிற்றுண்டி முடித்து விட்டு பேச வந்தார்கள். முதலில் இல்ல நிர்வாகி ராஜலட்சுமி அம்மாள் பேசினார்கள்.

"அனைவருக்கும் வணக்கம் இந்த இல்லம் கட்டி இன்றுடன் 25 வருடம் ஆகிறது, இது என்னுடைய கணவரின் ஆசை அவர் இப்போது உயிருடன் இல்லை மேலே இருந்து சந்தோஷபடுவார் என்று நம்புகிறேன்" என்று மேலே பார்த்து அழுதாள் 75 வயதான பாட்டி, கண்களை துடைத்துக் கொண்டு " இந்த வெற்றிக்கு இங்கு இருக்கும் இல்லத்தின் உறுப்பினர்கள் தான் காரணம் அவர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துகளை சொல்லும் படி கேட்டு கொள்கிறேன்" என்று கூறிவிட்டு சென்றார். முதலில் வந்தது திரு.சேகர்

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என் மனைவியும் என்கூட தான் இருக்கா. அதனால் இரட்டிப்பு சந்தோஷம். நன்றி" என்றார் சேகர்.

"வணக்கம் என் பேர் சீனு, ரீடையர்டு கஸ்டம் ஆபிஸர் இங்கு எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குது சந்தோஷமா இருக்கேன்.என் மனைவி போய்டா 10 வருஷம் முன்னாடி......... நன்றிகெட்ட என் மகன் வீட்டில் எச்ச சாதம் சாப்பிட்டு இருந்தேன், மகராசி மருமகளை நான் தேடி தேடி பிடித்து என் மகனுக்கு கட்டி வச்சேன். அவ தான் என்ன இங்க அனுப்பிச்சிட்டா. எண்டா இப்படி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க
என் மகன் இன்னுக்கும் வரலை, அவன் எனக்கு செய்ததுக்கு அவன் பிள்ளை அவனுக்கு பதில் சொல்வான்.... ஆனா நீங்க எல்லோரும் வந்து இருக்கீங்க சந்தோஷம், என் வார்த்தைகள் வழியா உங்க பெத்தவங்களின் ஆசைகளை புரிஞ்சிக்கோங்க" என்று முடித்தார்.

"வணக்கம் என் பெயர் மேரி, என்னுடைய பொண்ணு அமெரிக்காவுல இருக்கா, என்னையும் அங்கே அழைச்சிட்டு போறதா சொல்லினு இருக்கா.......6 வருஷமா (அவரின் குரல் தழுதழுத்தது). மத்தபடி நான் சந்தோஷமா தான் இருக்கேன்"

"வணக்கம் என் பெயர் வாசுதேவ், நான் இங்கயே தான் கடைசிவரை இருப்பேன். நான் யாரையும் நம்பி இல்லை, நான் பார்த்து வளர்த்தவர்களிடம் நான் போய் கையை கட்டி நிக்க முடியாது, என் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவன், நான் சந்தோஷமா இருக்கேன், ஆண்டவன் பார்த்துப்பான். நான் யாரையும் நம்பி இல்லை............... என்ன என் பேரக்குழந்தைகளை தான் பார்க்கனும் போல மனசு அடிச்சிக்குது" என்று கண்கலங்கினார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த சுந்தரேஸ்வரன் தன் மனைவியை கைத்தாங்கலாக முன் வரிசைக்கு அழைத்து வந்து உக்காரவைத்தார். அவர் இல்லத்தின் மூத்த உறுப்பினர் இருபது வருடங்களாக இந்த இல்லத்தில் இருக்கிறார், வயது 80. அவர் தன் பேச்சை ஆரம்பித்தார்.

"எல்லாருக்கும் என்னுடைய சார்பாவும் என் மனைவியின் சார்பாவும் வணக்கம், நான் பேசுவதை தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நான் அறிவுரை கூற போவது பிள்ளைகளுக்கு இல்லை உங்களுக்கு தான். வயதானவர்கள் எல்லொரும் அவர்களின் கெளரவத்தை தூக்கி எறிந்துவிட்டு நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. நீங்க
ஏன் உங்களையே இப்படி ஏமாத்திக் கொள்கிறீர்கள் உங்கள் பிள்ளைகள் கெட்டவர்கள் என்று. நாம் ஜென்மம் எடுத்து ஓடி ஓடி சம்பாதித்தது எல்லாம் அவர்களுக்கு தானே. அதை அவர்களிடம் கொடுத்து விட்டு ஏன் இப்படி அவர்களை சாபம் இடுறீங்க. அனைவருக்கும் அந்த அந்த வயதில் வர வேண்டிய முதிர்ச்சி வந்துடும். குழந்தையா இருக்கும் பொழுது தாய்பால் தான் உலகம்னு இருந்தோம், அப்புறம் பொம்மைகள், அப்புறம் விளையாட்டு, நண்பர்கள், பெண்கள், மனைவி, குழந்தைகள்ன்னு நம்மளுடைய ஆசைகள் லட்சியங்கள் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கு. இது என்னமோ உங்க பிள்ளைகள் மட்டும் தான் செய்றத நினைக்கறீங்க, நாம எல்லோரும் வாலிப வயதில் அப்படி தான் இருந்தோம் நம் பெற்றவர்களை கேட்ட தான் நம்ம யோகியம் தெரியும். உங்கள் கடமை அவ்வளவு தான் முடிந்து விட்டதுனு நினைத்த பின் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இருக்காதீங்க. தனியாக மனைவியுடன் வீடு எடுத்து வந்துடுங்க, இல்ல இந்த மாதிரி இல்லங்களில் வந்து தந்கிடுங்க, உங்களிடம் அதற்க்கான பணம் இல்லையா உங்கள் பிள்ளைகளிடம் வாங்கிக் கொண்டு தங்குங்க. இந்த மாதிரி நான் சொல்வது
பிள்ளைகளை நிர்கதியாக விட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அவர்களை அவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள், சந்தோஷமோ சோகமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.."

"அப்ப பேரபிள்ளைகளை எல்லாம் பார்க்கறது தப்பு சொல்றீங்களா?" என்றார் ஒருவர்.

"பார்கறது தப்புனு சொல்லல, பிள்ளைங்க வீட்டுலே இருந்துனு அவங்கள பார்த்துகறது தப்புனு தான் சொல்றேன்"

"அப்படியே விட்ட தாத்தா பாட்டி என்ற பாசம் இல்லாம போய்டுமே"

"பாசம் என்பது பக்கத்துலே இருந்த தான் வரும்னு இல்லை, பாசத்துக்கு தூர கணக்கு எல்லாம் இல்லை. நாம நடந்துகறதுல தான் இருக்கு"

"அப்போ பிள்ளைங்கல கல்யாணம் செய்து கொடுத்தாச்சினா அவ்வளவு தான் நாங்க காசி களம்பனும் சொல்றீங்க"

"காசிக்கு சொல்லல, உங்க வாழ்க்கையை இன்னொறு ஹனிமூன்ல இருந்து தொடங்குக சொல்றேன், (கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்) ஆமா வாழ்க்கையில் இனிமேல் உங்க மனைவிக்காக மட்டும் செலவு பண்ணுங்க, மனைவி இல்லாதவங்க மேட்ரிமோனியில் பதிவு பண்ணுங்க" (மறுபடியும் கூட்டத்தினர் சிரிப்பு ஒலி கசிந்தார்கள்). பிள்ளைகளுக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நாம் ஏன் அவர்களை சபிகவோ இல்லை திட்டிக் கொண்டோ இருக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள். நான் இந்த இல்லத்துக்கு வந்த கதையை நீங்கள் கேட்டீங்கனா சிரிப்பு வரும்.(என்று தன் மனைவியை திரும்பி பார்த்தார், அவர் சொல்ல வேண்டாம் என்பது போல சிரித்த படி கையை ஆட்டினார், இவரும் சிரித்துக் கொண்டு) நாங்கள் என்னுடைய மகன் வீட்டில் தான் தங்கி இருந்தோம். என் மகன் மருமகளுக்கு பட்டு படவை வாங்கி தரும் போதெல்லாம் எனக்கு இங்கே ஒவ்வொரு பல்லாக உதிரும், தனக்கும் அதே மாதிரி வேண்டும் என்பாள், வாங்கி கொடுத்தால் அதை கட்டமாட்டாள், அது அப்படியே பீரோவில் தூங்கும் . இதே என் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு வாங்கி கொடுத்தாள், இவள் அவ்வளவு சந்தோஷமாக இருப்பாள். அதான் பெண்களின் மனது. அப்ப முடிவு எடுத்தேன் இங்க வரவேண்டும் என்று இது உங்களுக்கு சிரிப்பா கூட இருக்கலாம். ஆனால் உளவியல் ரீதியா பார்த்தீங்கனா, அந்த மனோபாவம் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். இப்போ வாரம் ஆனா என் மகன் குடும்பம் இங்கே இல்லத்துக்கு வந்துடுவாங்க நாங்க எல்லாரும் அவுட்டீங் போவோம், என் மருமகள் எங்களுக்கு பிடிக்குமேனு ஆசை ஆசையா சமச்சி எடுத்துனு வரா. இங்க நாங்களும் சந்தோஷமா இருக்கோம், காரணம் இங்கே இருக்கறவங்க எல்லாம் என்ன மாதிரி வயதானவர்கள், என்னை மாதிரி கூன் விழந்தவர்கள்,
கண் பார்வை மங்கியவர்கள், சத்தமாக பேச முடியாதவர்கள், இது என் இனம். எனக்கு பிள்ளை வீட்டில் இருக்கும் போது கஷ்டமாக இருக்கும் எல்லாரும் ஓடி ஆடி வேலை செய்வார்கள் என்னால் அப்படி செய்ய முடியாது, அவமானமாக இருக்கும், இந்த மூப்பு மேல் கோபமாக வரும் அதை எல்லோரிடமும் காட்ட ஆரம்பித்தேன். ஆனால் இங்கு
என்னை போல தான் எல்லாரும், உண்மை புரிய ஆரம்பித்தது. அதனால் முதியவர்களே உங்களின் இறுதி வாழ்க்கை தன்மானத்துடன் கழிக்க இந்த மாதிரி நல்ல இல்லங்களில் சேருங்கள். பிள்ளைகளே உங்களின் பிற்கால வாழ்க்கைகு இப்பவே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள், நன்றி " என்று அமர்ந்தார். அனைவரும் எழுந்து நின்று கையை தட்டினார்கள்.

இல்லவிழா நன்றாக முடிந்தது. அந்த இல்லத்தில் ஒரு மாதத்தில் பல பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். பலரின் பெற்றோர்கள் இல்லத்தில் வந்து சேர்ந்தார்கள்.

சிவா.ஜி
19-11-2008, 06:12 AM
சுந்தரேஸ்வரன் சொன்னது அவர் பார்வையில் நியாயமாகத் தோன்றினாலும், பொதுப்பார்வைக்கு சரியாகாது. முதியோர் இல்லங்களே இல்லாத நிலை வேண்டுமென்பவரும் உண்டு.

இதைப்போன்ற இல்லங்கள் தோன்றி ஒரு 30, 40 வருடங்கள் ஆகியிருக்குமா? அதுவும் நகரத்தில்தான் தோன்றியது. ஆனால் அதற்கு முன்னால்...???,

மேலும் இப்போதும் கிராமங்களில் 70 வயதான மகன் 90 வயதான அப்பாவின் சம்மதம் வாங்க கைகட்டி நிற்கும் காட்சியைக் காணமுடியும். அப்படியென்றால் அந்த மகன் தன் வாழ்க்கையை வாழவேயில்லையா?

பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழவிட்டுவிட்டு விட்டேத்தியாய் இல்லம் வந்து அமர்ந்து கொள்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்?

இப்படியான இல்லங்கள் வெள்ளிவிழா கொண்டாடுவது பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் சுயநலத்தால்தான். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?

சிந்திக்க வைத்த சிறுகதை. உங்கள் பார்வையும் யோசிக்க வைத்தது மூர்த்தி. பாராட்டுக்கள்.

ரங்கராஜன்
19-11-2008, 06:48 AM
இதைப்போன்ற இல்லங்கள் தோன்றி ஒரு 30, 40 வருடங்கள் ஆகியிருக்குமா? அதுவும் நகரத்தில்தான் தோன்றியது. ஆனால் அதற்கு முன்னால்...???,

மேலும் இப்போதும் கிராமங்களில் 70 வயதான மகன் 90 வயதான அப்பாவின் சம்மதம் வாங்க கைகட்டி நிற்கும் காட்சியைக் காணமுடியும். அப்படியென்றால் அந்த மகன் தன் வாழ்க்கையை வாழவேயில்லையா?

பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை அவர்களே வாழவிட்டுவிட்டு விட்டேத்தியாய் இல்லம் வந்து அமர்ந்து கொள்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்?



நன்றி திரு.சிவா

1. இந்த கதை 40, 50 வருடத்திற்க்கு முன்னால் எழுதியது இல்லை, இப்போ இருக்கும் கால கட்டத்துக்காக எழுதியது. வேறு வழியில்லாமல் சகித்து கொண்டு போவது வேறு, ஆசைபட்ட வாழ்க்கையை வாழ்வது என்பது வேறு. அந்த காலத்தில் போன் கிடையாது ஆனால் இப்போ இருக்கு, அதனால் அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்ற கேள்வி எப்படி அபத்தமோ அப்படி தான் இதுவும். அது மனிதர்களுக்கான டெக்னாலஜீ என்றால் இதுவும் உற்சாகமான ஒரு மனதுக்கான வழி தான். எப்படி குழந்தைகள் அவர்கள் வயதுள்ளவர்களை விரும்புவார்களோ அதுபோல தான் முதியவர்களும் (அவர்களும் குழந்தைதானே).

2. கையை கட்டி வாய் போத்தி நிற்கிறான் என்றால் மகன் அது அப்பாக்களுக்கு செய்யும் மரியாதை. அதனால் அது மகனின் இஷ்டப்பட்ட வாழ்க்கை ஆகிவிடுமா?

3. உண்மையான அக்கறையுள்ள பெற்றோற்கள் பிள்ளைகளிடம் பொறுப்புகளை கொடுத்து விட்டு, அவர்களை வாழ்க்கையை எதிர்நோக்க தயார்படுத்துவார்கள்

நன்றி

அமரன்
19-11-2008, 08:49 AM
சுந்தரேசனுக்கு இரு பிள்ளைகள். மற்றவர்களுக்கு ஒத்தைப் பிள்ளை. இன்னும் பலருக்கு பல பிள்ளைகள். அதனால்தான் இல்லத்தில் ஒலிவாங்கிய உணர்ச்சிகள் வேறுபட்டிருக்கின்றன.

வெட்ட வெளியில் தனிமரமாக நிற்பதை விட தோப்புக்குள் தனிமரங்களாக நிற்பது சிறந்தது.

பாராட்டுகள் மூர்த்தி.

poornima
19-11-2008, 12:54 PM
சொல்லப்பட்ட தீர்வில் முழு உடன்பாடு இல்லை என்றாலும்
சாத்தியக்கூறுகளின் நிகழ்தகவு பெரிதாக வித்தியாசத்தை
கொண்டு வந்து விட முடியாது.

காலம்தான் இதற்கான பதிலை தீர்மானிக்க வேண்டும்.

நல்ல சிறுகதை மூர்த்தி அவர்களே.. கொஞ்சம் சிந்திக்க வைத்தமைக்கும்
நன்றி

ரங்கராஜன்
19-11-2008, 01:10 PM
சொல்லப்பட்ட தீர்வில் முழு உடன்பாடு இல்லை என்றாலும்
சாத்தியக்கூறுகளின் நிகழ்தகவு பெரிதாக வித்தியாசத்தை
கொண்டு வந்து விட முடியாது.

காலம்தான் இதற்கான பதிலை தீர்மானிக்க வேண்டும்.

நல்ல சிறுகதை மூர்த்தி அவர்களே.. கொஞ்சம் சிந்திக்க வைத்தமைக்கும்
நன்றி

நன்றி
இதில் அனைவருக்கும் உடன்பாடு ஏற்படாது அதனால் தான் இந்த கதையின் முடிவில் பாதி பிள்ளைகள் தங்கள் தவறை உணர்ந்து தங்களின் பெற்றோர்களை அழைத்து சென்றதாகவும். விழாவுக்கு வந்த மீதி பிள்ளைகள் அவர்களின் பெற்றோரின் உணர்வை மதித்து அவர்களை இல்லத்தில் வந்து சேர்த்தார்கள் என்று.

இதை நீங்கள் சிறுகதையாக அங்கிகரித்ததுக்கு நன்றி, (ஒருவேளை எழுத்து பிழையில் போட்டுடீங்களோ, ஹா ஹா ஹா)

தாமரை
19-11-2008, 01:32 PM
இந்தச் சிந்தனை உங்களுக்கு மட்டுமல்ல மூர்த்தி எனக்கும் உண்டு.

உணர்ச்சிகளை ஒற்றி வைத்து விட்டு மனதில் எழுப்பி வைத்துவிட்ட சுவர்களை உடைத்துவிட்டு அமைதியாகச் சிந்தித்தால்..

நாம் எல்லோர் மீதும் பல கடமைகளை வலியத் திணிக்கிறோம் என்பதை எளிதில் அறியலாம். அந்தத் கடமைகளைத் திணித்தலை ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்ந்தாலே பல ஈகோச் சுவர்கள் உடைந்துவிடும்.

இது ஒரு பட்டைத்தீட்டப்படாத கச்சா வைரத்தனமான சிந்தனை.

புரிந்து கொள்ளச் சற்று அனுபவம் தேவைப்படும்.

தீர்வில் அனைவருக்கும் உடன்பாடு வருவது சிரமம்தான்,

வளர்க்க முடியாதவன் ஏன் பெற்றாய் என்றும்

உன்னை வளர்த்தவனை கடைசி காலம் வரை வச்சிருந்து காப்பத்தணும் என்றும் திணிக்கப்படும் கடமைகள். (அன்பால் ஏற்றுக் கொள்ளும் கடமைகள் கனப்பதில்லை)

உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா? இப்ப இப்படிச் செய்யறியே இது ஞாயமா? என்பது நம்முடைய பழைய உழைப்பின் மீது சுயநலச்சாயம் பூசி விடுகிறது.

நாம் பாரமாக இருக்க விரும்புகிறோமா இல்லை பாசமாக இருக்க விரும்புகிறோமா என்பது நம் உறவுகளின் பிறவிக் கடமை என்பதை வலியுறுத்தாதில் இருக்கிறது.

இயலாமை வரக் கூடியதுதான். அறிந்ததுதான். அதற்கான திட்டமிடல் வேண்டாமோ? ஒரேநாளிலா தள்ளாமை சொல்லாமல் கொள்ளாமல் வந்து விடுகிறது.

நமக்கு நாம் செய்து கொள்ளவேண்டிய கடமைகளை செய்து கொள்ளாமல் பிறரை நிந்தித்தலில் பயனென்ன?

இதில் விதிவிலக்காக நிற்கிறவர்கள் வறிய குடும்பத்தில் பிறந்து / வளர்ந்து தன் குழந்தைகளின் வளத்திற்காக தன் வாழ்வை இழந்தவர்கள் மட்டுமே. அவர்களும் எதிர்பார்ப்புகளைச் சுருக்கினால் ஆனந்தம் தான்,

ஆதவா
19-11-2008, 02:07 PM
நல்ல கதைதான்... கருத்தில் உடன்பாடில்லை.

இன்று முதியவர் இல்லம் இருக்கிறது.. இந்நிலை நீடிக்கவும், காலமாற்றத்திலும்
நாளை குழந்தைகள் இல்லம் வர்லாம்.. கடமைகள் என்ற பெயரில் எதையும்
திணிக்கவிரும்பவில்லை என்று பெற்றோர்கள் கொண்டு வந்து விடுவதும்
பார்ப்பதுமாக இருந்தால்????

தன்னைக் உலகுக்கு அறிவித்த அப்பா - மகனுக்கான கடமை
நல்லபடியாக மகனை வளர்க்கவேண்டும் - அப்பாவுக்கான கடமை.

கடமைகள் இல்லாமல் இந்த சுழற்சி இல்லை.... இன்று மகனாக இருப்பவன் நாளை அப்பாவாகிறான் இல்லையா?

சரி இவையெல்லாவற்றிற்கும் என்ன காரணம்? சரியான புரிதல் இல்லாமை..

எனக்குத் திருமணமாக இன்னமும் சில வருடங்கள் ஆகும்... ஆனால் என் அம்மா இன்றும் சொல்லிவருகிறார்.. திருமணமான மறுநாளே என்னையும் என் மனைவியையும் தனிக்குடித்தனத்திற்கு அனுப்பிவிடவேண்டுமாம்... நான் அவர்களை அனுப்புவதற்கு முன்னர் என்னை அவர்கள் அனுப்பிவிடுகிறார்கள்..

இந்த புரிதல்தானே அவசியம்...

தாமரை அண்ணா....

கடமைகள் என்பது உணராத வரையிலும் திணிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும்.. நான் நன்றாக படிக்கவில்லை என்றதும் என்னை நன்றாக படிக்க வைக்க என் அப்பா தன் கடமையென என்னி எனக்குச் சொல்லித்தரவில்லையா..... அதுகூட திணிக்கப்பட்ட கடமைதான்... ஏன்,?? சுயநலம் கூட.....

சுயநலம் இல்லாமல் யாருமில்லை... ஏன்? பதிவுகள் கூட சுயநலம் தானே!!

ரங்கராஜன்
19-11-2008, 02:59 PM
நன்றி இங்கு பதிவுகளை பதித்த அனைவருக்கும்
இங்கு சிலர் இதை ஒத்துக்கொண்டார்கள், பலர் ஒத்துக்கொள்ளவில்லை, சிலர் என்ன சொல்லி இருக்காங்கனு புரியவில்லை. எதுவாக இருந்தாலும் யாரையும் நான் வற்புறுத்த(வில்லை.)வும் முடியாது. இது முதியவர்களின் அவலக்குரல் அவ்வளவே, நாம் எப்படி ஒரு குழந்தைக்கு பிடிக்கும் நினைத்துக் கொண்டு பிடிக்காததே திணிக்கிறோமோ அதைப்போல தான் இயலாத முதியவர்களின் மீதும் திணிக்கிறோம் என்பது என்னுடைய கருத்து மட்டுமே.

தாமரை
20-11-2008, 05:44 AM
தன்னைக் உலகுக்கு அறிவித்த அப்பா - மகனுக்கான கடமை
நல்லபடியாக மகனை வளர்க்கவேண்டும் - அப்பாவுக்கான கடமை.

கடமைகள் இல்லாமல் இந்த சுழற்சி இல்லை.... இன்று மகனாக இருப்பவன் நாளை அப்பாவாகிறான் இல்லையா?

சரி இவையெல்லாவற்றிற்கும் என்ன காரணம்? சரியான புரிதல் இல்லாமை..

எனக்குத் திருமணமாக இன்னமும் சில வருடங்கள் ஆகும்... ஆனால் என் அம்மா இன்றும் சொல்லிவருகிறார்.. திருமணமான மறுநாளே என்னையும் என் மனைவியையும் தனிக்குடித்தனத்திற்கு அனுப்பிவிடவேண்டுமாம்... நான் அவர்களை அனுப்புவதற்கு முன்னர் என்னை அவர்கள் அனுப்பிவிடுகிறார்கள்..

இந்த புரிதல்தானே அவசியம்...

தாமரை அண்ணா....

கடமைகள் என்பது உணராத வரையிலும் திணிக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும்.. நான் நன்றாக படிக்கவில்லை என்றதும் என்னை நன்றாக படிக்க வைக்க என் அப்பா தன் கடமையென என்னி எனக்குச் சொல்லித்தரவில்லையா..... அதுகூட திணிக்கப்பட்ட கடமைதான்... ஏன்,?? சுயநலம் கூட.....

சுயநலம் இல்லாமல் யாருமில்லை... ஏன்? பதிவுகள் கூட சுயநலம் தானே!!

வாழ்க்கையை மூன்று காலங்களாகப் பார்க்கவேண்டும் ஆதவா,

1. பிறந்தது முதல் பெற்றோர் தேவைப்படும் இளமைக் காலம் வரை.

2. தன்னிச்சையாய் வாழ உகந்த காலம்

3. முதுமைக் காலம்

முதல் இளமைக் காலத்தில் படிப்பைத் திணிப்பதாக சொல்கிறீர்கள். ஆனால் அதை விட வழிகாட்டுதல்தானே உயர்ந்தது. இன்று தம் ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. அவர்கள் என்னவாக வரவேண்டும் என்பதை அவர்களின் ஆர்வம், திறமை இதைக் கொண்டு அறிந்து அதற்கு வழிகாட்ட வேண்டுமென்ற கோட்பாடு வளர்ந்து வருகிறது. பென்ஸ் இதை இன்னும் அழகாக விளக்கக் கூடும்


நாம் பொருளீட்டி வாழும் காலத்தில் அன்றைய வரவை அன்றே செலவு செய்வதில்லையே. வருங்காலத்திற்கு என்று சேமித்தும் வைக்கிறோம் அல்லவா. 40 வயதான நான் இன்னும் ஒரு 40 ஐம்பது வருடங்கள் வாழலாம். அதற்கும் சற்று வருமானத்தைச் சேமிக்க வேண்டாமா?ஓய்வு பெற்ற பின் பையன் பார்த்துக் கொள்வான் என்று விட்டு விடலாமா?

வருமானத்திற்கேற்ப வாழ்வது மட்டுமல்ல, வாழ்நாள் வரைக்கும் தேவையான வருமானத்தை ஈட்டுவதும் நம் கடமை அல்லவா? நம்முடைய கடமையை நாம் செய்தால் திணிக்க வேண்டிய அவசியம் கிடையாதல்லவா?

தன்னால் இயன்ற வரை தன் வாழ்நாள் முழுவதிற்குமான பாதுகாப்பை ஒருவர் ஏற்படுத்திக் கொள்வது என்பது எந்த விதத்தில் தவறு?

25 வயதில் உலகம் சுற்றவேண்டிய இளைஞர்களை, கைவிலங்கு போட்டு வைப்பது ஞாயமா?

இன்று வீட்டுக்கு ஒருவரோ இருவரோ குழந்தைகள், 50 வருடங்கள் அவர்கள் நம்முடன் மற்றும் நமக்காகச் செலவழித்தால் எப்போதுதான் அவர்கள் தேவைகளை அவர்கள் சம்பாதிப்பது, அவர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பாரமாகி விடலாம் இல்லையா?

குழந்தைகள் ஒன்றுமில்லாமல் இருந்து வந்தவர்கள். அவர்களை வளர்ப்பது அவசியமாகிறது.

முதியவர்கள் இளைஞர்களாக இருந்து வருமானம் ஈட்டி வாழ்க்கையை அறிந்தவர்கள். அவர்களுடைய தேவைகள் அவர்களுக்குத் தெரியும் அல்லவா? அதைப் பற்றி ஏன் இளமையில் யோசிக்கக் கூடாது. ஒரு 40 வயதாகும்பொழுது முதுமையைப் பற்றிச் சிந்திக்கலாமே!

தனக்கான கல்லறையைக் கூடக் கட்டி வைத்தார் கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்கள். பேரர்களுடன் அங்கே சென்று வரவும் செய்தார்.

இறுதிச் சடங்குகளுக்கும், நமக்கு பின்னரான நம் குடும்பத்தின் வாழ்விற்கும் ஆயுள் காப்பீடு செய்கிறோம்.

அப்புறம் நமது முதுமைக் காலத்திற்காக ஏற்பாடு செய்வது ஏன் தவறாகும்.

மூர்த்தி தொட்டிருப்பது அடிப்படையான உணர்வு.

குழந்தைகள் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டே இருக்காதீர்கள். அவர்களைச் சுதந்திரமாக விடுங்கள். அவர்கள் உங்களிடம் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள்.

நட்புகள் நீண்டும் விரும்பத்தக்கதாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

அதையேதான் இங்கு உறவுகளுக்கிடையேயும் நாம் செய்ய வேண்டும்.

நம்முடைய கடமைகளைச் செவ்வனே செய்ய மறக்கக் கூடாது. அதே சமயம் இது உன்கடமை. இதை எனக்கு நீ செய்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தவும் கூடாது...

ரங்கராஜன்
21-11-2008, 06:04 AM
நன்றி தாமரை
நீங்கள் ஆணா, பெண்னா?, இளையவரா? முதியவரா?, திருமணம் ஆனவரா? ஆகாதவரா?, என்று எனக்கு தெரியாது. ஆனால் உங்களின் அறிவு பூர்வமான பதில்களும் வக்காளத்தும் நீங்கள் வாழ்க்கையை விரும்பி வாழ்கிறீர்கள், வாழவிடுகிறீர்கள் என்று தெரிகிறது. நன்றி

ஆதவா
22-11-2008, 03:47 AM
எத்தனை பேருக்கு அண்ணா விருப்பப்பட்ட படிப்பு இருந்திருக்கிறது.?? எத்தனை பேர் 25 வயதில் உலகம் சுற்றுகிறார்கள்???

நான் 10 ஆம் வகுப்பு முடித்தவுடன் என்னை வேலைக்கு அனுப்பினார்கள். அது கூட திணிப்புதான். பதினைந்து வயதிலேயே என் ஊர் சுற்றும் கால்களுக்கு விலங்கு மாட்டிவிட்டார்கள்.. ஏன்? சூழ்நிலை... என்னைப் போல எத்தனை பேர்... நீங்கள் பெங்களூரில் இருக்கிறீர்கள். கொஞ்சம் திருப்பூருக்கு வந்து பாருங்கள். எத்தனை பேர் பதினைந்து வயதில் வேலைக்குச் செல்லுகிறார்கள் என்று நான் காட்டுகிறேன்... இவர்கள் வீடு வாங்கி செட்டில் ஆகவே நாற்பது வருடங்கள் ஆகி கிழடு ஆகிவிடுவார்கள். பிறகெப்படி முதுமைக்கு தன்னைக் காத்துக் கொள்வது?

என் அப்பா எங்களை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார். அவருக்கு நாற்பத்தைந்து தாண்டி விட்டது. இன்னமும் செட்டில் ஆகவில்லை. அவர் முதுமை பற்றி யோசிப்பதற்குள் வேலை போய்விட்டது. இன்று அவர் என்/எங்களை நம்பி இருக்கவேண்டிய சூழ்நிலை.. நாளை அவரையோ அல்லது என் அம்மாவையோ நான் முதியோர் இல்லத்திற்குத் துரத்தினேன் என்றால் அது யார் தவறு?

அதே சமயம் அவர்களாக விருப்பப்பட்டார்கள் என்றால் வழிவிடவும் தயங்கமாட்டேன்..

ஒரு தகப்பன் தாய் எதற்காக முதியோர் இல்லத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.. தன் சொந்த வீட்டில் வாழ முடியாமை.. அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.... அப்படி சொந்த வீட்டில் வாழமுடியாமைக்கு தன் மகன்/மருமக்ள் காரணமாக இருக்கவேண்டும்..

நாற்பது வயதில் முதுமை பற்றி சிந்திக்க சிலருக்கு சாத்தியமாகலாம்.. ஆனால் பெரும்பாலோர் அன்றைய வாழ்வையே சிந்திக்க நேரமில்லாமல்தான் இருக்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது... எத்தனை பேர் ஆயுள் காப்பீடு செய்திருக்கிறார்கள்... ???

கடமைகள் என்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு சுமந்து கொள்வது. அல்லது திணிக்கப்படவேண்டும். இது என் கருத்து.. எல்லாரும் தத்தம் குடும்ப சூழ்நிலை காரணமாக திணிக்கப்பட்ட கடமைகளை ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

நட்புகள் நீளவும் சரி, விரும்பத்தக்கதாக ஆக்வும் சரி,, அது அவரவர் நடத்தையில் இருக்கிறது....

கடமையை செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால் அதை மறந்துவிட்டால் பிறகு அந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை..

தன்னைக் காப்பாற்றிய தாய்,
தான் காப்பாற்றிய தாய்.... இப்படி ஒரு சுழற்சி நமக்குள் இருக்கவேண்டும்.. இது பிரதி பலன் அல்ல.. இன்றியமையாத கடமை........

அவரவர் தத்தம் வாழ்வைத் தேர்ந்தெடுத்து, ஏற்படுத்திக் கொடுத்தவர்களை உதறினால்....????

நன்றி மறப்பது நன்றன்று.

இந்த விவாதங்களால் உங்கள் கதை பாதிக்கப்பட்டிருந்தால் எங்களை மன்னியுங்கள் மூர்த்தி...

ரங்கராஜன்
22-11-2008, 04:43 AM
நன்றி ஆதவா

அதே சமயம் அவர்களாக விருப்பப்பட்டார்கள் என்றால் வழிவிடவும் தயங்கமாட்டேன்..

இதை தான் நான் கதையில் சொல்ல முயற்ச்சிக்கிறேன். நீங்கள் கூறிய உங்களின் வாழ்க்கையின் நிலைமை கஷ்டம் தான். ஆனால் மனதில் கை வைத்து சொல்லுங்கள், எத்தனை பேர் அவர்களின் பெற்றோரின் சந்தோஷத்துக்கு முக்கியதுவம் தருகிறீர்கள். ஏன் தரனே,

வாரம் மருத்துவமனைக்கு அழைச்சு செல்கிறேன்
மருந்து வாங்கி தரேன்
சீரியல் பார்க்க விடுகிறேன்
புது துணி எடுத்து தரேன்

அப்புறம் என்ன செய்ய முடியும், இது போதாதா?

நீங்கள் எத்தனைப் பேர் பெற்றோருடன் மனதார கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசுகிறீர்கள்?

தாமரை
22-11-2008, 04:48 AM
சில நல்ல விஷயங்கள் வெளிப்படலாம் என்ற காரணத்தினாலேயே விவாதததை தொடர்கிறேன். மூர்த்தி அவர்களின் அனுமதி இருக்கும் என்ற நம்பிக்கையில்..

நம்முடைய கடமைகளைச் செவ்வனே செய்ய மறக்கக் கூடாது. அதே சமயம் இது உன்கடமை. இதை எனக்கு நீ செய்துதான் ஆக வேண்டும் என வற்புறுத்தக் கூடாது..

எத்தனை பேருக்கு அண்ணா விருப்பப்பட்ட படிப்பு இருந்திருக்கிறது.?? எத்தனை பேர் 25 வயதில் உலகம் சுற்றுகிறார்கள்???

வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒருபுறம் ஆதவா.. வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம் என்னும் பொழுது வாய்ப்புக் கிடைத்தவர்களை நாம் கடமை என்னும் சங்கிலியில் பிணைத்து கட்டிப் போடலாமா? இதைத்தான் யோசிக்கச் சொல்கிறேன்.




நீங்கள் பெங்களூரில் இருக்கிறீர்கள். கொஞ்சம் திருப்பூருக்கு வந்து பாருங்கள். எத்தனை பேர் பதினைந்து வயதில் வேலைக்குச் செல்லுகிறார்கள் என்று நான் காட்டுகிறேன்... இவர்கள் வீடு வாங்கி செட்டில் ஆகவே நாற்பது வருடங்கள் ஆகி கிழடு ஆகிவிடுவார்கள். பிறகெப்படி முதுமைக்கு தன்னைக் காத்துக் கொள்வது?

இதில் விதிவிலக்காக நிற்கிறவர்கள் வறிய குடும்பத்தில் பிறந்து / வளர்ந்து தன் குழந்தைகளின் வளத்திற்காக தன் வாழ்வை இழந்தவர்கள் மட்டுமே. அவர்களும் எதிர்பார்ப்புகளைச் சுருக்கினால் ஆனந்தம் தான், - இந்த வரிகளை மறந்து விட்டீர்களா? இவர்களுக்காகத் தானே இந்த வரிகளே எழுதினேன். பையன் சம்பாதிக்க ஆரம்பித்த உடனே ஊதாரித்தனமாக செலவழிக்க ஆரம்பிக்கும் குடும்பத்தினரைக் கண்டதில்லையா ஆதவா..?



என் அப்பா எங்களை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டார். அவருக்கு நாற்பத்தைந்து தாண்டி விட்டது. இன்னமும் செட்டில் ஆகவில்லை. அவர் முதுமை பற்றி யோசிப்பதற்குள் வேலை போய்விட்டது. இன்று அவர் என்/எங்களை நம்பி இருக்கவேண்டிய சூழ்நிலை.. நாளை அவரையோ அல்லது என் அம்மாவையோ நான் முதியோர் இல்லத்திற்குத் துரத்தினேன் என்றால் அது யார் தவறு?

முதியோர் இல்லத்தில்தான் வாழவேண்டும் என்பதை நான் வலியுறுத்தவில்லை. அவருடைய கடமையை அவர் செய்தார். ஆனால் எதிர்காலத்திற்குச் சேமிக்க இயலவில்லை. இன்று அவர் எனக்கு என் மகன் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்யவேண்டும்.. என்று வலியுறுத்தக் கூடாது என்பதைத் தான் வலியுறுத்துகிறேன். வீட்டிற்கு பால் வாங்கி வந்து, குழந்தைகளுக்கு பாடமோ கதையோ சொல்லிக் கொடுத்து சின்னச் சின்ன வேலைகளை தாமாக விரும்பி ஏற்றுக் கொண்டு தன்னுடைய வாழ்வை அவர் வாழலாம். இயலாத காலத்தில் மகனுக்கு அவரைத் தாங்க வேண்டிய கடமை வரலாம். கட்டாயம் வரக்கூடாது.


நாற்பது வயதில் முதுமை பற்றி சிந்திக்க சிலருக்கு சாத்தியமாகலாம்.. ஆனால் பெரும்பாலோர் அன்றைய வாழ்வையே சிந்திக்க நேரமில்லாமல்தான் இருக்கிறார்கள்.

இந்திய மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டிவிட்டது... எத்தனை பேர் ஆயுள் காப்பீடு செய்திருக்கிறார்கள்... ???

இயலாததற்கும் முயலாததற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது அல்லவா ஆதவா, இயலாதவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும். முயலாதவர்கள் சிந்திக்க ஆரம்பிக்கலாம் அல்லவா?

எல்லோராலும் முடியக் கூடிய விஷயம் அல்லதான் இது. ஆனால் சிந்திக்கவே ஆரம்பிக்கா விட்டால் கொஞ்சமாவது நடத்த ஆரம்பிப்பது எப்படி.. எல்லோரையும் விடுங்கள்.. உங்களைப் பற்றி மட்டும் எண்ணிப்பாருங்கள். உங்கள் வருமானம் என்ன? அதில் இன்றையச் செலவுகள் என்ன? குறுகிய காலத் தேவைக்கானச் சேமிப்புகள் என்ன? பிற்காலத் தேவைக்கென தேவைப்படுவது என்ன? இப்படி ஒரு முறை சிந்தித்து இருக்கிறீர்களா? அப்படிச் சிந்தித்து இருந்தால் உங்கள் வாழ்க்கைத் திட்டம் உங்கள் கையில் இருக்கும். அடுத்த வருடம் எனது வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும். அதற்கான திட்டம் இது.. இவ்வளவு சேமிப்புகள் என தெளிவான இலக்கு இருக்கும். உழைப்பை, ஆக்கத்தை பெருக்க எண்ணமிடுவீர்கள் அல்லவா.. அதுதான் தொடக்கம். மெதுவாக இது பரவட்டும். ஒன்றும் அவசரமில்லை. இயலாதது என்பதற்காக முயலாமல் இருக்கக் கூடாது. நல்ல விஷயம்.. கொஞ்சம் கொஞ்சமாக முயன்றால் நிலைமை படு மோசமாவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஆதவா
22-11-2008, 05:28 AM
வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒருபுறம் ஆதவா.. வாய்ப்பு கிடைப்பதே கஷ்டம் என்னும் பொழுது வாய்ப்புக் கிடைத்தவர்களை நாம் கடமை என்னும் சங்கிலியில் பிணைத்து கட்டிப் போடலாமா? இதைத்தான் யோசிக்கச் சொல்கிறேன்.


இந்த விவாதத்தில் நான் எடுத்துக் கொண்டது ஒட்டுமொத்தமாக அனைவரையும்தான்.. வாய்ப்பு கிடைக்காதவர்கள், கிடைத்தவர்கள் என்று பேதம் பிரிக்கவில்லை. அப்படி பிரித்துக் கொண்டு போனால் நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் பாருங்கள், இந்தியாவில் இன்னமும் வாய்ப்பு கிடைக்காதவர்கள்தான் அதிகம்.. நான் கண்ட வரையிலும்.. புள்ளிவிபரங்கள் அறிந்திலேன்.



இதில் விதிவிலக்காக நிற்கிறவர்கள் வறிய குடும்பத்தில் பிறந்து / வளர்ந்து தன் குழந்தைகளின் வளத்திற்காக தன் வாழ்வை இழந்தவர்கள் மட்டுமே. அவர்களும் எதிர்பார்ப்புகளைச் சுருக்கினால் ஆனந்தம் தான், - இந்த வரிகளை மறந்து விட்டீர்களா? இவர்களுக்காகத் தானே இந்த வரிகளே எழுதினேன். பையன் சம்பாதிக்க ஆரம்பித்த உடனே ஊதாரித்தனமாக செலவழிக்க ஆரம்பிக்கும் குடும்பத்தினரைக் கண்டதில்லையா ஆதவா..?

கண்டிருக்கிறேன்.. ஊதாரித்தனமாக செலவழிப்பதையும்.... நீங்கள் வரிகளை மறந்துவிட்டீர்களா என்று கேட்டிருப்பது எந்த வரிகள் என்பது தெரியவில்லை... நீங்கள் சொன்னீர்களே, வாழ்வை இழந்தவர்கள்.... அவர்கள் பெரும்பான்மையோர்... நான் சொல்லிவருவதும் அவர்களைப் பற்றியதுதான்....



முதியோர் இல்லத்தில்தான் வாழவேண்டும் என்பதை நான் வலியுறுத்தவில்லை. அவருடைய கடமையை அவர் செய்தார். ஆனால் எதிர்காலத்திற்குச் சேமிக்க இயலவில்லை. இன்று அவர் எனக்கு என் மகன் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்யவேண்டும்.. என்று வலியுறுத்தக் கூடாது என்பதைத் தான் வலியுறுத்துகிறேன். வீட்டிற்கு பால் வாங்கி வந்து, குழந்தைகளுக்கு பாடமோ கதையோ சொல்லிக் கொடுத்து சின்னச் சின்ன வேலைகளை தாமாக விரும்பி ஏற்றுக் கொண்டு தன்னுடைய வாழ்வை அவர் வாழலாம். இயலாத காலத்தில் மகனுக்கு அவரைத் தாங்க வேண்டிய கடமை வரலாம். கட்டாயம் வரக்கூடாது.



சரிதான்.... அதையே நானும் சொல்கிறேன்.. அவர்களுக்கு அந்த நிலைமை வந்தால் அவர்கள் என்னை விட்டு தனியே வாழவேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் வழிவிடுவேன். ஆனால் அதற்கு முன் புரிதல் வேண்டும்... பரஸ்பர புரிதல் எங்களுக்குள் அமைத்துக் கொள்வோம்... அல்லது கொள்ளவேண்டும்... தவறு தகப்பன் செய்தால் என்ன, மகன் செய்தால் என்ன, தண்டனை ஒன்றல்லவா...



இயலாததற்கும் முயலாததற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது அல்லவா ஆதவா, இயலாதவர்கள் ஒருபக்கம் இருக்கட்டும். முயலாதவர்கள் சிந்திக்க ஆரம்பிக்கலாம் அல்லவா?



திரும்பவும் சொல்கிறேன்.. நான் இயலாதவர்களை மையமாக வைத்து பேசுகிறேன்.. நீங்கள் முயல்பவர்களை வைத்து பேசுகிறீர்கள்.... முயல்பவர்களைப் பொருத்தவரையில் நீங்கள் சொல்வதை என்னால் ஒத்துக் கொள்ள இயலுகிறது... ஆனால் என் விவாதம் அவர்களைப் பற்றியது அல்ல..



எல்லோராலும் முடியக் கூடிய விஷயம் அல்லதான் இது. ஆனால் சிந்திக்கவே ஆரம்பிக்கா விட்டால் கொஞ்சமாவது நடத்த ஆரம்பிப்பது எப்படி.. எல்லோரையும் விடுங்கள்.. உங்களைப் பற்றி மட்டும் எண்ணிப்பாருங்கள். உங்கள் வருமானம் என்ன? அதில் இன்றையச் செலவுகள் என்ன? குறுகிய காலத் தேவைக்கானச் சேமிப்புகள் என்ன? பிற்காலத் தேவைக்கென தேவைப்படுவது என்ன? இப்படி ஒரு முறை சிந்தித்து இருக்கிறீர்களா? அப்படிச் சிந்தித்து இருந்தால் உங்கள் வாழ்க்கைத் திட்டம் உங்கள் கையில் இருக்கும். அடுத்த வருடம் எனது வருமானம் இவ்வளவு இருக்க வேண்டும். அதற்கான திட்டம் இது.. இவ்வளவு சேமிப்புகள் என தெளிவான இலக்கு இருக்கும். உழைப்பை, ஆக்கத்தை பெருக்க எண்ணமிடுவீர்கள் அல்லவா.. அதுதான் தொடக்கம். மெதுவாக இது பரவட்டும். ஒன்றும் அவசரமில்லை. இயலாதது என்பதற்காக முயலாமல் இருக்கக் கூடாது. நல்ல விஷயம்.. கொஞ்சம் கொஞ்சமாக முயன்றால் நிலைமை படு மோசமாவதில் இருந்து தப்பிக்கலாம்.

மன்னிக்கவும், உங்கள் அனுபவம் வேறு, என் அனுபவம் வேறு... ஒருவேளை இரண்டையும் இரண்டுபேருமே அனுபவித்திருக்க இயலாது. நான் எப்படிப்பட்ட நிலையில் சம்பாதிக்க தள்ளப்பட்டேன் என்பதையும் இப்பொழுது எப்படி இருக்கிறேன் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறேன். எனது வளர்ச்சிக்கான சதவிகிதம் மிகக்குறைவாகவே இருந்தாலும் வீழ்ந்து விடவில்லையே!

தாமரை அண்ணா... உங்கள் சம்பாத்தியத்திற்கும் மேலே கடன் இருந்து அதைக் கட்ட இயலாமல் தவித்து, யாருடைய உதவியும் பெறாமல், குடும்பத்தையும் நன்கு கவனித்து, முழுமையான தொழில் வசதி இல்லாமல் போட்டி உலகில் நின்று, உங்கள் வாடிக்கையாளர்களின் ஏமாற்றுதலையும், பணவரவின் தள்ளிப்போடுதலையும் சமாளித்துப் பாருங்கள்....... ஒவ்வொருநாளும் திட்டம் போடுவீர்கள்.... என்னைப் போன்றே...

ரங்கராஜன்
22-11-2008, 05:38 AM
நன்றி ஆதவா, தாமரை
உங்களின் விவாதத்திற்க்குள் அழைப்பு இல்லாமல் நுழைவதற்க்கு மன்னிக்கவும், வாழ்க்கை என்னும் கடலில் ஆதவனாகிய நீங்கள் தானாக குதித்து உயிரை காத்துக் கொள்ள நீச்சல் கற்றுக் கொண்டவர், தாமரை அதே நீச்சலை முறையாக கற்று பயின்றவர். இருவரும் அருமையாக நீச்சல் அடித்து முன்னேறுகிறீர்கள், அதுதான் முக்கியம். எப்படி கத்துக்கிட்டேன், எந்த சூழ்நிலையில் கத்துக்கிட்டேன் என்பது முக்கியம் இல்லை. நன்றி

ஆதவா
22-11-2008, 05:44 AM
நன்றி ஆதவா

அதே சமயம் அவர்களாக விருப்பப்பட்டார்கள் என்றால் வழிவிடவும் தயங்கமாட்டேன்..

இதை தான் நான் கதையில் சொல்ல முயற்ச்சிக்கிறேன். நீங்கள் கூறிய உங்களின் வாழ்க்கையின் நிலைமை கஷ்டம் தான். ஆனால் மனதில் கை வைத்து சொல்லுங்கள், எத்தனை பேர் அவர்களின் பெற்றோரின் சந்தோஷத்துக்கு முக்கியதுவம் தருகிறீர்கள். ஏன் தரனே,

வாரம் மருத்துவமனைக்கு அழைச்சு செல்கிறேன்
மருந்து வாங்கி தரேன்
சீரியல் பார்க்க விடுகிறேன்
புது துணி எடுத்து தரேன்

அப்புறம் என்ன செய்ய முடியும், இது போதாதா?

நீங்கள் எத்தனைப் பேர் பெற்றோருடன் மனதார கொஞ்ச நேரம் உக்கார்ந்து பேசுகிறீர்கள்?

நிச்சயமாய்.... அவர்களாக விருப்பப்படும் தருணம் எப்படிப்பட்டது?

நானோ என் மனைவியோ அவர்களின் நடத்தையில் திருப்தியின்மை படும்பொழுது... இல்லையா??? எல்லாமே சரியென்றால் முதியோர் இல்லம் என்ற பேச்செதற்கு?

நான் முன்பே சொன்னது போல, புரிதல் இல்லாமைதான் இப்படிப்பட்ட விசயங்களுக்கு வழி வகுக்கிறது..

மகனுக்காக அப்பாவும், அப்பாவுக்காக மகனும் பரஸ்பர புரிதல் இருந்தால் இந்த பிரச்சனை எதற்கு??

புரிதல் எப்படி வளரும்??? சிறிது நேரம் அமர்ந்து பேசவேண்டும்.. இல்லையா..

நான் இதுநாள் வரையிலும் அப்படி பேசியதாக நினைவில்லை.. ஆனால் புரிதல் உண்டு. இத்தனைக்கும் நானும் அம்மாவும், அப்பாவும் எத்தனையோ சண்டைகள் போட்டிருக்கிறோம். இன்னும் சொல்லக்கூடாதவைகள் எல்லாம் உண்டு.

மூர்த்தி சார்.... நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்களே,, இந்த விவாதங்கள் எல்லாம் வேஸ்ட்..

மனதார கொஞ்சநேரம் பேசுங்கள்...... சரியான கருத்து...

ஆதவா
22-11-2008, 05:57 AM
நன்றி ஆதவா, தாமரை
உங்களின் விவாதத்திற்க்குள் அழைப்பு இல்லாமல் நுழைவதற்க்கு மன்னிக்கவும், வாழ்க்கை என்னும் கடலில் ஆதவனாகிய நீங்கள் தானாக குதித்து உயிரை காத்துக் கொள்ள நீச்சல் கற்றுக் கொண்டவர், தாமரை அதே நீச்சலை முறையாக கற்று பயின்றவர். இருவரும் அருமையாக நீச்சல் அடித்து முன்னேறுகிறீர்கள், அதுதான் முக்கியம். எப்படி கத்துக்கிட்டேன், எந்த சூழ்நிலையில் கத்துக்கிட்டேன் என்பது முக்கியம் இல்லை. நன்றி

எனக்கு உண்மையிலேயே நீச்சல் தெரியாது.... :D:D:D:D

MURALINITHISH
22-11-2008, 08:58 AM
முதியோர் இல்லத்தின் ஆண்டு விழா இதுவே நம் நாட்டின் அவமானம்தான் இதில் பெற்றோர்கள் தனியாக வாழ்வது என்பது எப்படி சரியாகும்
என்னை சேர்ந்தவர்கள் இருப்பார்கள் அதனால் எனக்கு மகிழ்ச்சி
அப்படி பார்த்தால் குடும்பத்தில் நான் மட்டுமே ஆண் என் கூடவே பெண்தானே இருக்கிறாள் அவளுக்கு என்று சில செளகரியங்களை நான் ஏற்படுத்தி தர வேண்டும் இதனால் அவளை ஒதுக்க முடியுமா
சிறு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் வேலையை அவர்களால் செய்ய முடியாது ஆனால் அவர்கள் விளையாடும் விளையாட்டை அவர்களின் வேகத்துக்கு நம்மால் விளையாட முடியாது அதனால் நம் குழந்தைகளை எல்லாம் அதே மாதிரி குழந்தைகள் இருக்கும் இல்லத்தில் விட முடியுமா
முதியோருக்கு ஏற்றவாறு வெளியிடங்களுக்கு நம் சக்திக்கு ஏற்றவாறு அனுப்பி வைக்கலாம் ஆனால் மொத்தமாக அனுப்புவது என்பது சரியல்ல

ரங்கராஜன்
22-11-2008, 09:07 AM
நன்றி முரளி
உங்களின் கருத்தை சொன்னதுக்கு, நீங்கள் நிறைய கேள்வி கேட்டு இருக்கீங்க, இதில் என்ன விஷயம் என்றால், இந்த கூறிப்பிட்ட வயது வந்ததும் அவர்களை போய் இல்லத்தில் தள்ளுங்கள் என்று நான் குறிப்பிட்டால் உங்களின் வாதம் சரி. ஆனால் நான் அப்படி குறிப்பிடவில்லை. நான் நினைக்கிறேன் நீங்கள் கதையை படிக்கவில்லை என்று வேறும் கீழே இருக்கும் பின்னூட்டங்களை படித்துவிட்டு பதில் பதித்து இருக்கீங்கனு. இல்லை நான் படித்தேன் என்றால், தயவு செய்து இன்னொறு முறை படிங்க , அப்படியும் உடன்பாடு ஏற்படவில்லையா?, முடிவு உங்கள் கையில்

MURALINITHISH
22-11-2008, 09:10 AM
நீங்கள் கதையை படிக்கவில்லை என்று வேறும்

என்ன நண்பா இப்படி சொல்லி விட்டீர்கள் உண்மையில் நான் பின்னூட்டங்களை படிக்க வில்லை
ஒரு வேளை உங்கள் கருத்து எனக்கு புரியவில்லையோ
முதியோருக்கு விருப்பம் எனில் எதுவும் சரியே இருந்தாலும் யோசியுங்கள் அவர்களே அங்கு விரும்பி செல்வார்களா நம்மால் நம் குழந்தைகளை பிரிந்து இருக்க முடியுமா அப்படி இருக்க நம் குழந்தையின் குழந்தைகளின் மழலையை விட்டு இருக்க அவர்களால் முடியுமா

ரங்கராஜன்
22-11-2008, 09:17 AM
நன்றி நண்பரே
தப்பாக நினைக்காதீர்கள், இந்த முடிவு பிள்ளைகள் கையில் இல்லை பெற்றவர்கள் கையில் தான் இருக்கு. நான் சந்தோஷமாக வாழும் குடும்பத்தை பற்றி எழுதவில்லை. நான் சொன்னது முதியோர் இல்லம் மட்டும் இல்ல, தனியாக வாழ முடிந்தாலும் வாழட்டும். இந்த கதையின் கரு தன்மானத்தோடு வாழ்ந்தவர்கள், தங்களுடைய இறுதி வாழ்க்கையையும் தன்மானத்தோடு வாழவேண்டும் என்பதே. அதுக்கு இழுக்கு வரும் பொழுது தான் இந்த முடிவு. அதுவும் பெரியவர்களின் முடிவு தான்.

MURALINITHISH
22-11-2008, 09:23 AM
தன்மானத்தோடு வாழ்ந்தவர்கள்,
தவறாக நினைக்கதே நண்பா
தன்மானம் என்பது எது
தான் பெற்ற பிள்ளையிடன் சண்டையிட்டு தன் பேர குழந்தையின் மழலையை விட்டு செல்வதா
என் குழந்தை இன்று என்னிடம் டேய் இங்கே வாடா என்னும் போது இருக்கும் சந்தோஷம் ஏன் வயதான பிறகு வருவதில்லை இதற்கு பெயர் தன்மானம் இல்லை வீண் பிடிவாதம்

தாமரை
22-11-2008, 09:52 AM
முதியோர் இல்லத்தின் ஆண்டு விழா இதுவே நம் நாட்டின் அவமானம்தான் இதில் பெற்றோர்கள் தனியாக வாழ்வது என்பது எப்படி சரியாகும்
என்னை சேர்ந்தவர்கள் இருப்பார்கள் அதனால் எனக்கு மகிழ்ச்சி
அப்படி பார்த்தால் குடும்பத்தில் நான் மட்டுமே ஆண் என் கூடவே பெண்தானே இருக்கிறாள் அவளுக்கு என்று சில செளகரியங்களை நான் ஏற்படுத்தி தர வேண்டும் இதனால் அவளை ஒதுக்க முடியுமா
சிறு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் வேலையை அவர்களால் செய்ய முடியாது ஆனால் அவர்கள் விளையாடும் விளையாட்டை அவர்களின் வேகத்துக்கு நம்மால் விளையாட முடியாது அதனால் நம் குழந்தைகளை எல்லாம் அதே மாதிரி குழந்தைகள் இருக்கும் இல்லத்தில் விட முடியுமா
முதியோருக்கு ஏற்றவாறு வெளியிடங்களுக்கு நம் சக்திக்கு ஏற்றவாறு அனுப்பி வைக்கலாம் ஆனால் மொத்தமாக அனுப்புவது என்பது சரியல்ல

உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என நினைக்கிறேன். அனுப்பப்படுவதை விட போவது நல்லது என்று ஏன் பெரியவர்கள் சிந்திக்கக்கூடாது? பெரியவர்கள் சிந்திக்கத் தெரியாத குழந்தைகள் அல்ல.

நீங்கள் சில உணர்வுக் கோர்ப்புகளையும் தர்ம நியாயங்களையும் சரி தவறு என்று கட்டப்பட்ட மாயக்கோட்டைகளையும் பார்ப்பதால் இது ஏற்படுகிறது. நீங்கள் உங்களில் இருந்து மற்றவர்களைப் பார்க்கிறீர்கள். அதனால் ஏற்படும் மாய உணர்வு இது.

உங்களை எடுத்துக் கொண்டு உங்களையேக் கேட்டுக் கொள்ளுங்கள். 65 வயதிற்கு மேலான உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும். மகன் சம்பாதிக்க வேண்டும். மருமகள் என்னை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். பேரப்பிள்ளைகள் அன்புடன் பழக வேண்டும்.. என்கிறீர்களா

தவறு நீங்கள் மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள், உங்களைப் பற்றியல்ல. உங்களைப் பற்றி, நீங்கள் என்ன செய்வீர்கள் எனச் சொல்லுங்கள்.

ம்ம்ம் யோசிக்க வேண்டும் என்கிறீர்களல்லவா? எதாவது சிறிய சிறிய வேலைகளைச் செய்து கொண்டு.. மற்றவர்களுக்கு அதிக உபத்திரவம் தராமல்.. ம்ம்ம் மாலையில் வாக்கிங்.. கோவில்.. இரவு பால்.. குழந்தைகளுடன் கதை...

அதுசரி,,, அப்படியானால் தினசரி செலவுக்கு... ம்ம் மகன் சம்பாதித்துத் கொடுப்பான் என்கிறீர்களா? இதற்குப் பெயர்தான் கடமைத் திணிப்பு. அவனாக விருப்பப்பட்டுக் கொடுக்க வேண்டும். மதி சொன்னது போல் அப்பா, நீங்க ஓய்வு எடுங்க இனி நான் பார்த்துக் கொள்கிறோம் என அவனாகச் சொல்லவேண்டுமே தவிர நாம் எதிர்பார்ப்பது தவறு. பணம் தேவைப்படும் என்று தெரியும்.. மாதம் ஒரு 100 ரூபாய் இன்றைய நிலையில் சேர்த்தால் கூட வருடம் 1200, 10 வருடங்களில் 12000. ஒரு சின்னப் பெட்டிக் கடை.. நம் எண்ணம் இப்படி நம் உழைப்பை பற்றியதாக இருக்க வேண்டும்.. மகன் நன்கு சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படவேண்டும். ஆனால் மகன் சம்பாதித்து தரவேண்டும் என்ற ஆசையைக் குறைத்துக் கொள்ளவேண்டும்..

இப்படி அவரவர் கடமை மேல் அவரவர் கவனம் செலுத்தினால் போதும். உறவுகள் வலுப்பெறும். மகனோ மருமகளோ ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்..

குழந்தைகளை வளர்ப்பது எப்படி நமது கடமையோ அப்படி முதியோர்களை அரவணைப்பது பிள்ளைகளின் கடமை என பிள்ளைகள்தான் நினைக்க வேண்டும்.,

நம்மிடம் இருக்கும் கெட்ட குணம் அடுத்தவர் கடமையைப் பற்றி ஆயிரம் பேசுவோம். நமது கடமையைத் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம்.

கடமையைச் செய்ய இயலாதது தவறல்ல. கடமையை செய்ய மறுப்பதும் முயற்சிக்காததும் மறப்பதும் குற்றம்.

நாம் நம் முழுவாழ்விற்கும் உண்டான வருமானம் ஈட்ட வேண்டும் என்பது நமது கடமை. நம்மை பெற்றவர்களை, நாம் பெற்றவர்களை வாழவைப்பது நமது கடமை.

ஆனால் நம் குழந்தைகள் நம்மை காப்பாற்ற வேண்டும் என்பது நமது கடமையல்ல. அவர்களது கடமை. அவர்களது கடமையைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். நம் பிற்கால வாழ்விற்கும் சிறிது சேர்த்து வைக்க வேண்டும் என்ற நமது கடமையைப் பற்றி மட்டும் நாம் சிந்தித்தால் போதும்.

நம்ம கடமையையே நாம ஒழுங்காகச் செய்யாத போது அடுத்தவங்க கடமையைச் செய்யணும்னு சொல்லலாமா?

நண்பர்கள் கூடி ஹாஸ்டலில் / தனி வீடு எடுத்து தங்கி படிக்கலாம், வேலைதேடலாம்.. அதெல்லாம் தவறில்லை. என் மகன் அமெரிக்கா சென்றால் நான் அதுபோல இன்னொரு ஹாஸ்டலில் போய்த் தங்குவது தவறா?


யார் எங்கு இருக்கிறார்கள் யாரோடு இருக்கிறார்கள் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்து எடுக்கப்படும் முடிவுகள். என் நண்பர்களும் நானும் இறுதிக் காலங்களில் ஒரு இடத்தில் வாழ வேண்டும் என்பது என் ஆசை. இது தவறா? அதற்காக நாங்கள் ஒரு ஆசிரமம் அமைக்கலாம் என எண்ணுவது தவறா? இது சுயநலமா?

என் மகன் என் இந்த ஆசைக்கஉ வழி விடுவது என் மகனின் கடமையா இல்லை வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று மன்றாடுவது அவன் கடமையா?


ஹி ஹி .. நாங்க இல்லாதவங்களைப் பத்திதான் கவலைப்படுகிறோம் என்பீர்கள். அந்த முதியவர்களுக்கு சம்பாதிக்க இயலவில்லை என்பீர்கள். நான் சொல்வது அவர்களுக்கல்ல,, இன்னும் சம்பாதிக்கும் வயதில் உள்ளவர்களுக்கு.. இப்படியும் ஒரு செலவு இருக்கிறது, அதையும் மனதில் கொண்டு இன்னும் கொஞ்சம் அதிகம் உழையுங்கள்

இயலாதே என்கிறீர்களா? முயற்சிக்காமலேயே முடியாது என்றால் என்ன அர்த்தம். நான் சொன்ன மாதிரி ஒரு 20000 ரூபாய் சேர்த்தால் பெட்டிக் கடையாவது வைக்கலாம். பையனுக்கு உதவியாய் இருக்கலாம்.. அவனாலும் சம்பாதிக்க இயலாவிட்டால். அவன் நன்கு சம்பாதிப்பவனாக இருந்தால் அதே இருபதாயிரம் நமது பேரக்குழந்தைகளுக்கு எதையாவது வாங்கிக் கொடுக்க உதவுமே!


நம் எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்து கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க முயல்வது தவறா?

நம்முடைய இறுதிக் கால வாழ்க்கையை நம் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள விழைவது தவறா?

இவை மட்டும்தான் நானும் மூர்த்தியும் கேட்கும் கேள்விகள். மகன்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியல்ல.

சிவா.ஜி
22-11-2008, 10:15 AM
தாமரையின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவைதான். என்னைப்பொறுத்தவரை கடைசிகாலத்தில் மகன் ஆதரவில் வாழ நினைப்பதே தவறு என்பேன். இறக்கும் வரை நாம் நம் சுயத்திலிருந்து இறங்கவே கூடாது. அதற்காக உன் தயவு எனக்குத் தேவையில்லை போடா என்று வீராப்பு பேசாமல், நமது எண்ணங்களுக்கு மரியாதைக் கிடைக்குமாறு வாழ்வதுதான் சிறந்தது.

எதிர்கால முதுமை வாழ்வுக்குத் தேவையான பணவசதியை ஒவ்வொரு பெற்றோரும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தாமரை சொன்னதைப் போல கடைசிகாலங்களில் தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழவிரும்பும் பெற்றோரை பிள்ளைகள் தடை செய்யக் கூடாது.

இவையெல்லாமே சுயவிருப்பத்தில் அமைந்ததாக இருக்கவேண்டும். ஆனால் மூர்த்தியின் கதையில் சொல்லப்பட்டிருப்பது பொதுவானதாக உள்ளது. உங்க பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை வாழட்டும் அதனால் அவர்களை விட்டுவிட்டு நீங்கள் தனியாக வந்துவிடுங்கள் என்று சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள சற்றே தயக்கமாக இருக்கிறது.

முதியோர் இல்லத்துக்கு வந்து சேர்ந்த பெற்றோர்களில் இரு வகையினர் இருக்கிறார்கள். கட்டாயமாக தள்ளப்பட்டவர்கள், தாமாக விரும்பி வந்து அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொண்டவர்கள். அந்த வயதான காலத்தில் தங்களை நன்றாக கவனித்துக்கொள்ள இப்படிப்பட்ட இல்லங்களில்தான் நல்ல வசதி இருக்கிறது என்று நன்றாக புரிந்து கொண்டு அதைத் தேடிவந்தவர்கள் அந்த வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பார்கள்.

இதை செய்தே ஆகவேண்டிய கட்டாயம் என்று நினைத்து செய்யும் எந்த செயலிலுமே ஆத்மார்த்தம் இருக்காது. பாசமும் அப்படித்தான். ஆனால் இயல்பாய் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருந்தால் பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் வீட்டிலேயே தங்குவதுதான் நல்லது.


நம் எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்து கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க முயல்வது தவறா?

நம்முடைய இறுதிக் கால வாழ்க்கையை நம் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள விழைவது தவறா?


தாமரை கேட்டிருக்கும் கேள்வி தவறே இல்லை.

சுகந்தப்ரீதன்
24-11-2008, 08:23 AM
நல்லதொரு கதையை தந்து கருத்து பரிமாற்றத்தை ஊக்குவித்த மூர்த்திக்கு என் நன்றி..!! இருக்கும் இடத்தை பொறுத்தே எதுவும் ஏற்றுக்கொள்ளப் படும்.. இயலாதவர்கள் எந்தநிலையிலும் இந்த இல்லங்களை பற்றி சிந்திக்க வாய்ப்பில்லை.. கஸ்டமோ நஸ்டமோ ஏற்றுக்கொண்டுவிடுவார்கள்.. அது ஒருவகை திணிப்பு என்றாலும் ஏற்றுக்கொள்வதால் இனிப்பாகத்தான் இருக்கும் அவர்களுக்கு..!! அடுத்து இயன்றவர்கள் இந்த சிக்கலில் சிக்குவதே இல்லை.. இயன்றும் முயலாதவர்கள்தான் மாட்டிக்கொண்டு குறையொன்றுமில்ல மறைமூர்த்தி கண்ணா என்று குறைக்கூறிக் கொண்டிருக்கிறார்கள்.. கொண்டிருப்பார்கள்... கதையில் வரும் பாத்திரங்கள் போல..!! ஆக முதியோர் இல்லம் தவறல்ல.. முயலாததே அவர்களது தவறு..!!

Narathar
25-11-2008, 07:38 AM
பின்னூட்டங்கள் பந்தி பந்தியாகவும் சிவப்பு கறுப்பு என்று தடித்த எழுத்துக்களிலுமுள்ளதால், அவற்றைப்படித்துவிட்டு நான் சொல்லவந்ததை சொல்லமுடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் முந்தைய பின்னூட்டங்களை வாசிக்காமலே இக்கதைக்கு எனது பின்னூட்டத்தை தருகின்றேன்!

மூர்த்தியோடு நான் 99% ஒத்துப்போகின்றேன்..
சத்தியமாக நான் எனது வாழ்க்கையையும் இப்படித்தான் கழிக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். இதை இங்கு வார்த்தைக்காக சொல்லவில்லை, அடி மனதிலிருந்து சொல்கின்றேன். அதை நான் எனது பிள்ளைகளிடமும் சொல்லித்தான் வளர்க்கின்றேன்.

கடவுள் ஏற்பாடு எதுவாக இருக்குமென்று எனக்குத்தெரியாது! ஆனால் எனது ஆசை இது! முடிந்தால் என் வயதை ஒத்தவர்களுக்காக ஒரு இல்லத்தை இங்கு இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ நடத்த ஆசைப்படுகின்றேன். இது என் கனவுகளில் ஒன்று!

நான் தற்போது எனது அம்மா, அப்பா, மாமா, மாமி என்று கூட்டுக்குடும்பமாக சந்தோஷமாகத்தான் இருக்கின்றேன். எங்களது பெற்றோரும் சந்தோஷமாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் ஏதோ ஒரு சில உளவியல் காரணங்களால் என் மனது இந்த முடிவை நாடுகின்றது..........

உண்மையிலேயே மூர்த்தி நாங்கள் ஒன்றாகவே யோசிக்கின்றோம்... உங்களுக்கு அதை கோர்வையாக எழுத வருகின்றது எனக்கு வரவில்லை அவ்வளவே.....

உங்கள் கதை ஒரு விவரணச்சித்திரம் பார்த்த உணர்வை தந்தது அதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்....... ஆனால் அதுவும் கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கின்றது.

வாழ்த்துக்கள்........

என்ன நம்ம இல்லத்துக்கு முன் பதிவை ஆரம்பிப்போமா?

நாராயணா!!!!

தமிழ்தாசன்
25-11-2008, 09:22 AM
முதலில் இந்த விடயத்தை முன்வைத்த உங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள்.
கதை வடிவம் என்பதைக் காட்டிலும் கருக்கொள் வடிவம் மிக முக்கியம்.

இதற்கு முன்? - பிறப்பு -மழலை - இளமை - முதுமை -இறப்பு இதற்குப்பின்?
அதற்கிடையில்,
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு அதற்கிடையிலும் சாவு
தெரிந்தும் சாவு (தற்கொடை),தெரியாமலும் சாவு, கொள்கைச் சாவு,
அநியாயச்சாவு,கோழைச்சாவு....
இதுவே மனித வாழ்வின், மனிதஅறிநிலை வட்டம்.


இதில் இதற்கு முன், பிறப்பு என்பது நம்கைகளில் இல்லை.
மழலை இதில் பெற்றோர் பங்கு அதிகம்.
இளமை இதில் அவரரவர் பங்கும் - பெற்றோர், பெரியோர் வழிகாட்டலும்(மற்றும் அனைத்தும் அடக்கம்.)
முதுமை எதிர்பார்ப்பது, எதிர்பார்த்தது -இதில் அவரரவர் பங்கும், பிள்ளைகள் பங்கும் (மற்றும் அனைத்தும் அடக்கம்.)

இறப்பு, அதற்குப் பின் நம்கையிலில்லை.





முதியோர் இல்லம்


1.25-வது ஆண்டு விழா அதாவது வெள்ளி விழா.

2.இல்ல நிர்வாகி ராஜலட்சுமி அம்மாள்

2.அ.கணவரின் ஆசை அவர் இப்போது உயிருடன் இல்லை மேலே இருந்து சந்தோஷபடுவார் என்று நம்புகிறேன்" என்று மேலே பார்த்து அழுதாள் 2.ஆ.75 வயதான பாட்டி,

3.
"ரொம்ப சந்தோஷமா இருக்கேன், என் மனைவியும் என்கூட தான் இருக்கா. அதனால் இரட்டிப்பு சந்தோஷம். நன்றி" என்றார் சேகர்.

4."வணக்கம் என் பேர் சீனு, ரீடையர்டு கஸ்டம் ஆபிஸர் இங்கு எனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குது சந்தோஷமா இருக்கேன்.என் மனைவி போய்டா 10 வருஷம் முன்னாடி.........
4.அ.நன்றிகெட்ட என் மகன் வீட்டில் எச்ச சாதம் சாப்பிட்டு இருந்தேன், மகராசி மருமகளை நான் தேடி தேடி பிடித்து என் மகனுக்கு கட்டி வச்சேன். அவ தான் என்ன இங்க அனுப்பிச்சிட்டா. எண்டா இப்படி பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க
என் மகன் இன்னுக்கும் வரலை, அவன் எனக்கு செய்ததுக்கு அவன் பிள்ளை அவனுக்கு பதில் சொல்வான்....
4.ஆ.என் வார்த்தைகள் வழியா உங்க பெத்தவங்களின் ஆசைகளை புரிஞ்சிக்கோங்க" என்று முடித்தார்.

5.
"வணக்கம் என் பெயர் மேரி, என்னுடைய பொண்ணு அமெரிக்காவுல இருக்கா, என்னையும் அங்கே அழைச்சிட்டு போறதா சொல்லினு இருக்கா.......6 வருஷமா (அவரின் குரல் தழுதழுத்தது). மத்தபடி நான் சந்தோஷமா தான் இருக்கேன்"

6.நான் இங்கயே தான் கடைசிவரை இருப்பேன். நான் யாரையும் நம்பி இல்லை, 6.அ.நான் பார்த்து வளர்த்தவர்களிடம் நான் போய் கையை கட்டி நிக்க முடியாது, என் சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவன், நான் சந்தோஷமா இருக்கேன், ஆண்டவன் பார்த்துப்பான். நான் யாரையும் நம்பி இல்லை............... 6.ஆ.என்ன என் பேரக்குழந்தைகளை தான் பார்க்கனும் போல மனசு அடிச்சிக்குது" என்று கண்கலங்கினார்.

7.சுந்தரேஸ்வரன் , வயது 80.
அறிவுரை கூற போவது பிள்ளைகளுக்கு இல்லை உங்களுக்கு தான்.
நீங்க ஏன் உங்களையே இப்படி ஏமாத்திக் கொள்கிறீர்கள் உங்கள் பிள்ளைகள் கெட்டவர்கள் என்று. நாம் ஜென்மம் எடுத்து ஓடி ஓடி சம்பாதித்தது எல்லாம் அவர்களுக்கு தானே. அதை அவர்களிடம் கொடுத்து விட்டு ஏன் இப்படி அவர்களை சாபம் இடுறீங்க.

அனைவருக்கும் அந்த அந்த வயதில் வர வேண்டிய முதிர்ச்சி வந்துடும். குழந்தையா இருக்கும் பொழுது தாய்பால் தான் உலகம்னு இருந்தோம், அப்புறம் பொம்மைகள், அப்புறம் விளையாட்டு, நண்பர்கள், பெண்கள், மனைவி, குழந்தைகள்ன்னு நம்மளுடைய ஆசைகள் லட்சியங்கள் எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கு. இது என்னமோ உங்க பிள்ளைகள் மட்டும் தான் செய்றத நினைக்கறீங்க, நாம எல்லோரும் வாலிப வயதில் அப்படி தான் இருந்தோம் நம் பெற்றவர்களை கேட்ட தான் நம்ம யோகியம் தெரியும்.

உங்கள் கடமை அவ்வளவு தான் முடிந்து விட்டதுனு நினைத்த பின் நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் இருக்காதீங்க.

தனியாக மனைவியுடன் வீடு எடுத்து வந்துடுங்க,

பிள்ளைகளை நிர்கதியாக விட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அவர்களை அவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள், சந்தோஷமோ சோகமோ அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.."
பிள்ளைகளுக்காக வாழ்க்கையே தியாகம் செய்த நாம் ஏன் அவர்களை சபிகவோ இல்லை திட்டிக் கொண்டோ இருக்கவேண்டும். அவர்கள் வாழ்க்கையை அவர்களை வாழ விடுங்கள்.

மனோபாவம் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்.

எல்லாரும் ஓடி ஆடி வேலை செய்வார்கள் என்னால் அப்படி செய்ய முடியாது, அவமானமாக இருக்கும், இந்த மூப்பு மேல் கோபமாக வரும் அதை எல்லோரிடமும் காட்ட ஆரம்பித்தேன்.

பிள்ளைகளே உங்களின் பிற்கால வாழ்க்கைகு இப்பவே பணம் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்,



பல பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

பலரின் பெற்றோர்கள் இல்லத்தில் வந்து சேர்ந்தார்கள்.


1. எந்த ஒரு தொடக்க விடயத்துக்கும் ஆண்டு நினைவு நிகழ்வுண்டு.
2.- 2.அ. -2.ஆ. நிர்வாகி பெண் - இந்த வயதிலும் கணவரின் ஆசையைப்பூர்த்தி செய்யும் மனைவி.
3.சேகர் என்பவர் அவ்வாழ்வில் மனைவியுடன் இருப்பபதால் மகிழ்வாகவே இருக்கிறார்.
4. சீனு (கல்விப் பட்டறிவு கொண்டவர்)என்பவர் மனைவியை இழந்து வாழ்கிறார். அந்த தாக்கம் அவரை இன்னும் வேதனைக்குள் இட்டுள்ளது.
4.அ. 4.ஆ. மகனை, மருமகளை திட்டி , சாபமிடுகிறார். இப்போ செய்த நிலையை அவன் பிள்ளையூடாக அனுபவிப்பான் என்று கூறி உணருங்கள் என்கிறார்.
5.மேரி -மகள் அமெரிக்காவில், அவளிடம் செல்ல வேண்டுமென்ற ஏக்கம்.
6. இவருக்கு ஏதோ உள்ளாக இருக்கிறது, வெளியாக வேறொன்று வருகிறது.
7.படைப்பின் நாயகமாக சுந்தரேஸ்வரன்...
பிள்ளைகளுக்காக வாழ்ந்த முழுத் திருப்தி தெரியாவிட்டாலும். பிள்ளைப்பாச உறவையும், அவர் வாழ்வின் மகிழ்விற்கு என வழிவிட்ட நினைப்புண்டு. பிள்ளை பிறந்தபோது அணைத்தெடுத்த ஆழப்பாசம் நிழலாடுகிறது.

வாழ்க்கையின் இயல்பை நன்குணர்ந்துள்ளார். இயற்கையின் வாழ்வோட்டத்தில் கலந்துள்ளார்.

அவரவர் வாழ்க்கையை உணர விடுங்கள் என்கிறார்.

மனோபாவம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பதை அழகாகத் தொடுகிறார்.

தனியே மனைவியுடன் வாழந்து விடுங்கள் என்பது பொருத்தமாகத் தெரிகிறது.

இப்போது தன் நிலை ஏனையோருக்கு வரமுன் பணத்தைசேருங்கள் உங்களுக்காக என்று தான் வாழும் இவ்வாழ்வின் உள் விருப்பின்றிய தன்மையை சொல்வது புரிகிறது.

இது நல்ல சேதி சொல்கிறது.

இது வேதனைகளுடன் தொடர்கிறது.

முதியோர் ஒன்று கூடும் மன்றம் இருப்பது நல்லம் ஆனால் இல்லங்கள் எந்தளவுக்கு நல்லது என்று புரியவில்லை. ஆனால் அனைத் உறவுகளை இழந்த உறவுகளைக்காக்கும் கரங்கள் போற்றுதற்குரியன.

குப்பைத் தொட்டிக்குள் வீசப்படும் குழந்தை நிலை கொடிது, கருக்கொலை வேதனைக்குரியது.

என்னைப் பொருத்தவரையில் அம்மா, அப்பா இருவரின் கடைசிக்காலத்தில் எங்களின், பிள்ளைகளின், உறவுகளின் அண்மையான அரவணைப்பு நிச்சயம் தேவை.
அதிக பிள்ளைகளைப் பெற்றவர்கள் இவ்வில்லங்களிலிருப்பது கொடுமை,
பிள்ளைப் பாக்கியமில்லாதவர்கள், தவிர்த்தவர்கள், தனி வாழ்கைப்பிரியர்கள், வாழ்வை வெறுத்து தனிமை விரும்பிகள்..இவர்கள் நிலைக்கு இதுபோன் உறவு கூடங்கள் தேவை என்பது உண்மை.

கடமையைச் செய் பலன் எதிர்பாராதே! என்பது இவ்விடயத்தில் முக்கியம் பெறுகிறது..

சொந்த அனுபவங்கள் அவரவர் வாழ்வை இனிமையாக்கும், வெறுமைக்குள்ளும் இட்டுவிடும்.

மற்றவருக்காக வாழ்வில். நல்ல வழியில் ஒரு சில நேரம் கொடுப்பதே மனித வாழ்வின் இன்பம். அது அவரவர் மனதையும், வாழ்நிலையையும் பொருத்தது.

'பூத்தகொடி பூக்களின்றி தவிக்கிறது....' என்ற தாயக கவியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

எது எப்படியோ அவரர் வாழ்வின் வடிவங்களை தேர்வு செய்வது அவரவர் உரிமை. திணிப்புகள் பின் திகட்டும். விருப்புகளே வாழ்வை இனிமையாக்கும்.

படைப்புக் கருப்பொருள் இக்கால வட்டத்தை சுற்றியுள்ளது. இனி வரும் காலம் என்னாகும் என்பதை எதிர்கால உலகு வாழ்நிலை வடிவங்களே தீர்மானிக்கும்.

MURALINITHISH
29-12-2008, 09:27 AM
உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என நினைக்கிறேன்.


வாழ்க்கையை தள்ளி வைத்து பார்ப்பவன் உணர்ச்சி வசப்படுவான் ஆனால் வாழ்க்கையை வாழ்க்கையின் பாதையில் பார்ப்பவன் உணர்ச்சி வசப்படமாட்டான்



நம் எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்து கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்க முயல்வது தவறா?

நம்முடைய இறுதிக் கால வாழ்க்கையை நம் இஷ்டப்படி அமைத்துக் கொள்ள விழைவது தவறா?


இதுதான் தோழியே உணர்ச்சிவசப்படுபவர்களின் அதிகபடியான வெளிபாடு

எதிர்கால வாழ்க்கைக்கும் சேர்த்து வைக்கதாவன் முட்டாள் அவனை பற்றி இங்கே பேச்சே இல்லை

இறுதிகால வாழ்க்கை என்று நீங்களே சொல்லி விட்டீர்கள் அதை நம் குழந்தைகளை விட்டுவிட்டு தனியாக வாழ்வதா????


மகன்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியல்ல.

மகன்கள் என்ன செய்ய வேண்டும் என்பது இந்த கதையின் நோக்கமல்ல பெரியவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே


என்னைப்பொறுத்தவரை கடைசிகாலத்தில் மகன் ஆதரவில் வாழ நினைப்பதே தவறு என்பேன்.

அப்படி இல்லை தோழா நாம் இப்போது இருப்பது போலவே நோய் நொடி இல்லாமல் இருப்போம் என்பது நிச்சயமில்லை

நீங்கள் சொல்வது எல்லாம் ரத்த துடிப்போடு இருக்கும் போது நான் சொல்வது எல்லாம் நாடி நரம்பும் அடங்கும் போது



உங்க பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை வாழட்டும் அதனால் அவர்களை விட்டுவிட்டு நீங்கள் தனியாக வந்துவிடுங்கள் என்று சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள சற்றே தயக்கமாக இருக்கிறது.


இதைதான் நானும் சொன்னேன்

அவரவர் அவரவர் வாழ்க்கையை வாழ சொன்னால் குழந்தையை கீரிச்சில் விடுவதும் மனைவியை பெண்களுக்கான சங்கத்திலே வாழ்வதும் தவறில்லை என்று ஆகி விடும்

தன் எதிர்காலத்துக்கும் சேர்த்து வைத்து கொள்ளுதல் என்பது பாதுகாப்பு ஆனால் தன் விருப்பம் போல் வாழ இது வெளிநாடும் அல்ல நாம் அனைவரும் சொந்தங்களை மறந்த வெளிநாட்டினரும் அல்ல