PDA

View Full Version : பார்வைகள் பலவிதம்



சிவா.ஜி
18-11-2008, 05:47 AM
தம்பியின் கல்லூரிக்கட்டணம் கட்ட வேண்டும். இங்கிருந்து இரண்டரை மணி நேர பேருந்து பயணம். வீட்டுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம். அதிகம் காக்க வைக்காமல் பேருந்தும் வந்துவிட்டது, அந்த வெயிலுக்கு ஆறுதலாக இருந்தது.

வேறு யாரும் அந்த நிறுத்தத்தில் ஏறாதது, எப்படியும் இருக்கை கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்படுத்தியது. எதிர்பார்த்ததை போல இருக்கை கிடைத்தாலும், அந்த ஒரு இருக்கை மட்டுமே இருந்தது. ஜன்னலோரம் ஒருவர் அமர்ந்திருக்க, மற்ற இருக்கை காலியாக இருந்தது.

சென்று அமர்ந்தேன். பக்கத்திலிருந்தவனின் பார்வையே சரியில்லை. பார்க்கவும் நாகரீகமில்லாதவனாக இருந்தான். கைப்பையில் வைத்திருந்த ஐம்பதாயிரத்தை இறுக்கமாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, அவன் பக்கம் முகம் திருப்பாமல் அமர்ந்துகொண்டேன். அவனோ என்னையே முறைத்துக்கொண்டிருந்தான்.

சாதாரணமாக பேருந்தில் அமர்ந்த சற்று நேரத்துக்கெல்லாம் தூங்கிவிடும் பழக்கமுள்ளவன் கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்தேன். அவன் அடிக்கடி சட்டைக்குள் கையை நுழைப்பதும், எடுப்பதுமாய் இருந்தான். அடிக்கொருமுறை பின்னால் திரும்பிப்பார்த்து யாருக்கோ சைகை செய்து கொண்டிருந்தான்.

கைப்பையைக் கவனமாக இறுக்கிப் பிடித்துக்கொண்டேன். ஒருவழியாய் கடைசி நிறுத்தம் வந்தது. நான் எழுவதற்குள் அவசரமாய் எழுந்து என்னைத் தாண்டிக் கொண்டு அவன் இறங்கியதும் திடுக்கென்றிருந்தது. அச்சத்தோடு கைப்பையைப் பார்த்தேன். தோலிருக்க சுளை முழுங்குவதைப்போல பிளேட் போட்டு உள்ளிருக்கும் பணம் உருவப்படுவதை அறிந்திருக்கிறேன்.

ஆனால் பணம் பத்திரமாக இருந்தது. இறங்கி நடந்தவன் சற்று தூரத்தில் என் பக்கத்து இருக்கைக்காரன், தன் நன்பனிடம்,

“டே சொடல...இன்னிக்கு நான் பயந்தே போயிட்டேண்டா. என் பக்கத்துல உக்காந்தவன் முளிச்ச முளியே சரியில்ல. பணத்தை சட்டைக்குள்ல வெச்சுக்கிட்டேன். இப்பல்லாம் களவாணிப் பசங்க டிப் டாப்பா வரானுங்க. நல்ல வேளை நான் அடிக்கடி உன்னை திரும்பிப்பாத்து சைகை செஞ்சதுல நான் தனியா இல்லன்னு தெரிஞ்சிக்கிட்டு ஒன்னும் செய்யல. இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது. நாமதான் சாக்கிரதையா இருந்துக்கனும்...”

சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.

ரங்கராஜன்
18-11-2008, 06:01 AM
மனிதர்களின் ஜாக்கிரதை காரணமாக எழும் சந்தேகத்தை தூக்கிப்பிடித்துள்ளீர்கள்....... பாராட்டுகள்

சிவா.ஜி
18-11-2008, 06:04 AM
நன்றி மூர்த்தி. இன்றைய சூழலில் எந்த புது மனிதரையும் இப்படியான கண்ணோட்டத்தில்தான் நிறையபேர் பார்க்கிறார்கள்.

மதி
18-11-2008, 07:03 AM
ஹா..ஹா.. நல்ல கதை..
இதே சந்தேகம் தான் எனக்கும்.. சிலரை நாம் சந்தேகப்படறோம். ஆனா அவங்க நம்மளையும் சந்தேகப்படலாமில்லையானு..? அதை கதை வடிவில் சொன்ன சிவா அண்ணனுக்கு பாராட்டுக்கள்.

சிவா.ஜி
18-11-2008, 07:21 AM
சும்மா இன்னைக்கு, எங்க அலுவலக பஸ்ல வந்தப்ப, திடீர்ன்னு தோணுச்சி. சரின்னு எழுதிட்டேன். ஆனா...ஊர்ல எனக்கும் கிட்டத்தட்ட இந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கு.

நன்றி மதி.

அமரன்
18-11-2008, 07:57 AM
இது சாதாரணமாக எல்லாருக்கும் நடப்பதுதான்.
தினமும் எமை அடையும் களவுச் செய்திகளால் நாம் கலவரப்பட, எமது கலவரம் மற்றவருக்கு கலவரத்தைக் கொடுக்க..

எனக்கு முன்னுக்கு மூணு பேரு.. கதையிலும் மூணு பேரு..

சிவா.ஜி
18-11-2008, 09:15 AM
எனக்கு முன்னுக்கு மூணு பேரு.. கதையிலும் மூணு பேரு..

முன்னுக்கு மூணு பேருக்கும் இதே பிரச்சனையா...??அங்கும் உண்டா அமரன் இந்தவகை சந்தேகப் பார்வைகள்?

ஓவியன்
18-11-2008, 11:17 AM
எதனையும் நம்பி விடுவது எத்துணை தவறோ
எல்லாவற்றையும் சந்தேகப் படுவதும் அத்துணை தவறே..!!

நம்பவேண்டியவற்றை நம்பவும்,
சந்தேகமானவற்றைச் சந்தேகிக்கவும்
பட்டறிந்த அனுபவ அறிவு முக்கியம்..!!

அந்த அனுபவ அறிவு இல்லையெனின்
இந்தக் கதை போன்ற பல நிகழ்வுகள் அரங்கேறும்..!!

நல்லதோர் கதைக்கு என் மனதார்ந்த வாழ்த்துக்கள் சிவா..!! :)

சிவா.ஜி
18-11-2008, 11:35 AM
எதனையும் நம்பி விடுவது எத்துணை தவறோ
எல்லாவற்றையும் சந்தேகப் படுவதும் அத்துணை தவறே..!!
:)

மிக மிக உண்மையான கருத்து ஓவியன். அருமையான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

poornima
18-11-2008, 11:48 AM
எல்லோரும் பணம் வைத்திருந்ததே இதற்கு காரணம் :-)

மடியில் கனமிருப்பதாலேயே இந்த 'வழிப்பறிப்' பயம் வந்திருக்க வேண்டும்.

பாராட்டுகள் சிவா..சின்ன மையக்கருத்து வைத்து ஒரு சிறுகதை தந்தமைக்கு..

தாமரை
18-11-2008, 11:53 AM
ரொம்ப ரொம்ப வருஷத்துக்கு முன்னால...

மின்னுவதெல்லாம் பொன்னல்ல அப்படிங்கற பழமொழியை

பொன்னும் மின்னும் அப்படின்னு ஒரு கதையில சாடி இருந்தேன். இதே மாதிரி பஸ். ஒரு மாணவன். ஒரு டிப் டாப் மனிதர்.. மாணவனின் பயம்.. இப்படி கதை போகும்..

கடைசியா இந்தப் பயத்தில் மாணவன் சர்டிஃபிகேட்ஸைத் தொலைச்சிட்டு பணத்தை மட்டும் இறுகப்பிடிச்சுகிட்டு கல்லூரி வந்து உள்ளே போகும்போது

அந்த டிப்டாப் மனிதர் புரஃபஸர்னு தெரியும்.. அவர் சர்டிஃபிகேட்டை கூப்பிட்டுக் கொடுப்பார்.

ம்ம் இத்தனை வருஷம் கழிச்சு அதை ஞாபகப் படுத்திட்டீங்க..

மின்னுவதெல்லாம் பொன்னல்லதான்.. ஆனால் பொன்னும் வைரமும் மின்னத்தானேச் செய்யும் (அந்தக் கதை முடிவு வார்த்தைகள்)


நமக்குள் இருக்கும் அந்த பய உணர்வு விழிப்பதில்தான் நாம் தூங்கி விடுகிறோம்..

இறைநேசன்
19-11-2008, 02:58 AM
மிகவும் அருமையான கருத்துள்ள சிறுகதை!

ஒவ்வொருவரும் தாம் பிறரை பற்றி என்ன நினைக்கிறோம் என்பதோடு பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சற்று அறிந்துகொள்வது நல்லது!

பகிர்ந்தமைக்கு நன்றி!
அன்புடன்
இறைநேசன்

சிவா.ஜி
19-11-2008, 03:05 AM
மடியில் கனமிருப்பதாலேயே இந்த 'வழிப்பறிப்' பயம் வந்திருக்க வேண்டும்.


சரியாகச் சொன்னீர்கள் பூர்ணிமா. கணமில்லையேல் பயமில்லை....

மிக்க நன்றி.

சிவா.ஜி
19-11-2008, 03:09 AM
மின்னுவதெல்லாம் பொன்னல்ல அப்படிங்கற பழமொழியை

பொன்னும் மின்னும் அப்படின்னு ஒரு கதையில சாடி இருந்தேன்.

ம்ம் இத்தனை வருஷம் கழிச்சு அதை ஞாபகப் படுத்திட்டீங்க..

மின்னுவதெல்லாம் பொன்னல்லதான்.. ஆனால் பொன்னும் வைரமும் மின்னத்தானேச் செய்யும் (அந்தக் கதை முடிவு வார்த்தைகள்)

நமக்குள் இருக்கும் அந்த பய உணர்வு விழிப்பதில்தான் நாம் தூங்கி விடுகிறோம்..

சிந்திக்க வைக்கும் கருத்து. சரிதானே....பொன்னும் வைரமும் மின்னத்தானே செய்யும்.

இத்தனை வருஷம் கழித்து உங்கள் கதையை நினைவுபடுத்த உதவிய கதைக்கு, உங்கள் பின்னூட்டம் தந்து ஊக்கப் படுத்தியதற்கு நன்றி தாமரை.

சிவா.ஜி
19-11-2008, 03:10 AM
ஒவ்வொருவரும் தாம் பிறரை பற்றி என்ன நினைக்கிறோம் என்பதோடு பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையும் சற்று அறிந்துகொள்வது நல்லது!



மிக சத்தியமான வார்த்தைகள். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி இறைநேசன்.

பாரதி
19-11-2008, 01:53 PM
நல்ல கதை சிவா. எந்த ஒரு சிறு நிகழ்வும் உங்கள் கை வண்ணத்தில் கதையாக மின்னுவது கண்டு வியப்புடன் மகிழ்கிறேன்;பாராட்டுகிறேன்.

இருவருமே மற்றவரை திருடரோ என சந்தேகிப்பதால் -பார்வை ஒரே விதமோ...?!!!

ஆதவா
19-11-2008, 02:16 PM
பல வருடங்களுக்கு முன்னர் விகடனில் ஒரு கதை படித்தேன்... அதே பஸ் ஸ்டாப்... ஒரு பெண்ணை ஒரு வாலிபன் பின் தொடர்வான். அவளும் சந்தேகத்தோடு போவாள்.. பின்னர் அவனே அவளிடம் வலியப் போய் நீங்கள் என் இறந்து போன அன்னையைப் போன்று இருக்கிறீர்கள் என்று சொல்வான்.... கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை உங்களிடமிருந்து...

சுருக்'கென முடித்த உங்கள் பாணி அலாதியானது...

சிவா.ஜி
20-11-2008, 06:33 AM
இருவருமே மற்றவரை திருடரோ என சந்தேகிப்பதால் -பார்வை ஒரே விதமோ...?!!!

அட...உங்கப் பார்வையும் வித்தியாசமாய் இருக்கு பாரதி. நான் இதை யோசிக்கவேயில்லை. மிக்க நன்றி.

சிவா.ஜி
20-11-2008, 06:36 AM
பல வருடங்களுக்கு முன்னர் விகடனில் ஒரு கதை படித்தேன்... அதே பஸ் ஸ்டாப்... ஒரு பெண்ணை ஒரு வாலிபன் பின் தொடர்வான். அவளும் சந்தேகத்தோடு போவாள்.. பின்னர் அவனே அவளிடம் வலியப் போய் நீங்கள் என் இறந்து போன அன்னையைப் போன்று இருக்கிறீர்கள் என்று சொல்வான்.... கிட்டத்தட்ட அதே மாதிரியான கதை உங்களிடமிருந்து...

சுருக்'கென முடித்த உங்கள் பாணி அலாதியானது...

நானும் படித்ததாய் நினைவிருக்கிறது ஆதவா.

இந்தக் கதையின் நிகழ்ச்சியைப் போன்றே எனக்கும் நேர்ந்தது. சில மாற்றங்களுடன் கதையாக்கினேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றி ஆதவா.

MURALINITHISH
22-11-2008, 09:04 AM
இப்படிதானுங்க நாம நிறைய இடத்திலே நம்மளை பெரிசா நினைப்போம் ஆனா அடுத்தவன் என்ன நினைக்கறன் நமக்கு தெரியாது

சிவா.ஜி
22-11-2008, 09:08 AM
அதேதானுங்க முரளி. ரொம்ப நன்றி.

(அது சரி எங்க ரொம்பநாளா காணலையே...வேலை அதிகமோ..?)

MURALINITHISH
22-11-2008, 09:26 AM
(அது சரி எங்க ரொம்பநாளா காணலையே...வேலை அதிகமோ..?)
வேலை அதிகம்தான் அதான் வர முடியவில்லை நண்றி நண்பரே என்னை நினைவில் வைப்பதற்க்கு

சுகந்தப்ரீதன்
24-11-2008, 08:59 AM
அவனவன் கவலை அவனவனுக்கு.. அப்புறம் எதுக்கு அவனுக்கு மயக்கம் வரணுமாம்..?? காலம் மாறிப்போச்சு கவலையும் மாறிபோச்சு... அன்னிக்கு நாகரிகமில்லாம திருடுனாங்க... இன்னிக்கு நாகரிகமாவும் திருடுறாங்களே.. அதனால நாகரிகமானவன் பின்னோக்கி சிந்திச்சா.. நாகரிகமில்லாதவன் முன்னோக்கி சிந்திக்கிறான்.. அவ்வளவுதான்..!!

பாரதி அண்ணா சொன்ன மாதிரி எல்லாமே ஒருவிதமா இருக்கறதால பார்வைகள் பலகோணம்ன்னு சொன்னா சரியாயிருக்கும்ன்னு நினைக்கிறேன் சிவா அண்ணா..!!

வாழ்த்துக்கள்..!!

சிவா.ஜி
24-11-2008, 10:46 AM
அதேதான் சுபி, அவனவன் கவலை அவனவனுக்கு...டிப்டாப் ஆசாமிகளும் சந்தேகப்படப்படுகிறார்கள் என்பதை சொல்ல வந்தேன். கண்ணால் காண்பதும் பொய்....என்பதைப்போல.

பார்வைகள் ஒருவிதம் மனிதர்கள் பலவிதம்.

மிக்க நன்றி சுபி.