PDA

View Full Version : என் தந்தை நினைவாகஇலக்கியன்
15-11-2008, 03:23 PM
அன்பைக்குழைத்து அமுதூட்டி
அறிவைப்பெற்று வாழ்ந்திடவே
கண் இமைபோல் இருந்து காத்தவரே என்
கருவுக்குயிர் தந்த தந்தையரே

பண்பாய் உலகில் வாழ்ந்திடவே
பகர்ந்த வார்த்தை நான் அறிவேன்
எண்பது ஆண்டுகள் வாழ்வீர் என
இருந்தேன் நானும் எண்ணமுடன்

புலம் பெயரும் வேளைதனில் உம்
உடல் நிலை கண்டு தளம்பலுற்றேன்
உள்ளமதில் உறுதி விதை விதைத்து
வளமாய் வாழ அனுப்பி வைத்தீர்

என் எண்ணம் எல்லாம் நிறைவேறி
தலை நிமிரும் வேளையிலே
நெஞ்சில் இடியாய் துயர்வந்து
எந்தன் இதயம் இங்கு அழுகிறது

சட்டம் என்கின்ற வரையறைக்கு
தந்தை மகன் உறவு புரியாது
கடசியாய் ஒருமுறை உம் பூமுகம் பாராது
ஏங்கித்தவிக்கிறேன் உமக்கு புரியாதோ?

தவிக்கும் அன்னை தலை வருடி
ஆறுதல் கூற நானும் அருகில் இல்லை
புரிந்தும் உமக்கு ஏன் இந்த அவசரமோ
கடவுள் வகுத்த விதிதான் இதுவோ

நீர்பட்ட கஸ்ரம் அத்தனைவும்
எனது வாழ்வின் உரம் காணீர்
பொங்கும் கடலின் ஓசையிலே
புரிவோம் உங்கள் ஆசியினை

mukilan
15-11-2008, 10:21 PM
தந்தைகள் எப்பொழுதும் இரண்டாம் கட்ட நிலையிலேயே வைக்கப்பட்டு வருகின்றனர். அதை கொஞ்சமேனும் அசைத்துக் காட்டுகிறது உங்கள் கவிதை. சபாஷ். தந்தை-மகன் உறவும் அலாதியானதுதான்.

ஓவியன்
16-11-2008, 02:28 AM
இழப்புக்கள் கொடுமையானது,
அதிலும் இந்த இழப்பு ஈடு செய்யவே முடியாதது....

உங்கள் வருத்தத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன் அகத்தியன்..!!

Narathar
16-11-2008, 02:40 AM
தவிக்கும் அன்னை தலை வருடி
ஆறுதல் கூற நானும் அருகில் இல்லை
புரிந்தும் உமக்கு ஏன் இந்த அவசரமோ
கடவுள் வகுத்த விதிதான் இதுவோ

கண்களை பனிக்கச்செய்து விட்டீர்கள் இலக்கியரே....
உண்மையில் நம்மவர் துயர் எப்போதுதான் தீர்ந்து,
இவ்வாரான பிரிவுத்துயர்கள் தீருமோ????

இளசு
13-12-2008, 04:23 PM
அன்பு இலக்கியன்,

உங்கள் துயரத்தில் எங்களையும் பங்கெடுக்கவைத்த கவிதை..

பிள்ளைகளை உள்நெஞ்சில் சுமக்கும் தந்தையர்க்கு இக்கவிதை அர்ப்பணம்..

தமிழ்தாசன்
13-12-2008, 05:21 PM
தந்தையர் உள்ளம் அவரவருக்குத்தான் தெரியும்.
அவர் கஸ்டங்களை உள்ளத்தில் பூட்டிவைப்பார்.
பனிக்கும் அவர் கண்கள் பார்க்கும் போதும் முழுவதும் தெரியாது அதன் உள் அர்த்தம்.

இழப்புக்கள் ஈடு செய்ய முடியாததே!

ஆனாலும் அதை எண்ணி வருந்தும் தொடர் நிலையில் உள்ளம் சோராது அவர் விட்ட நற்பாதைப் பயணம் தொடருவோம் உறதின் வழியில்.

நல்ல தந்தையர்க்கு சமர்பித்த கவிதை, மனதில் அப்பா! என்ற ஏக்கத்தை விதைக்குது.
அம்மா, அப்பா அவர்களின் பாதம் முத்தமிடும் உயிர்ப்பாசம் உலகில் எங்கும் கிடைக்காதது.
வயது முதிர்ந்ததும் அவர்களும் குழந்தைகளே! அவர்களை முன் நாம் எப்படியோ எல்லாம் கஸ்டப்படுத்தியிருந்தாலும். இப்போ குழந்தைகளான அவர்களை உச்சிமோர்ந்து முத்தமிட்டு பணிசெய்வோம். அது கிடைத்தற்கரியது. கிடைத்தும் செய்யாதிருப்பது வேதனைக்குரியது.

உங்கள் கவிதைக்கு பாராட்டுதலும்,
உங்கள் ஏக்கத்திற்கு ஆறுதலும், கூறும் அதேவேளை
உங்கள் பகிர்வும், மன்றம் தந்த பங்கும்,
மனதில் மறக்க முடியாதது.

அம்மா, அப்பா வாழும் காலத்தில், அவர்க்கான நம் பணிகளை, அதிமுயற்சித்து கூடியவரை செய்வோம்.

சூழல்களின் தடுப்புக்கள் வேதனைக்குரியது.
இன்னும் எழுத மனம் தூண்டுகிறது.

அனைவர்க்கும் உள்ளத்தில் உள்ளதை ஏன் எழுதுவான்.
அவரவர் அதைச் சரியாகவே செய்வோம் என நம்புகிறேன்.

அக்னி
13-12-2008, 05:42 PM
புலம்பெயர்ந்த அகதிநிலை வாழ்வின் கட்டுகள்,
இழப்புக்களானாலும் அவிழ்வதில்லை.

இன்பநிகழ்வுகளில் நம்மை நாமே தேற்றிக்கொண்டாலும்,
துன்பநிகழ்வுகள் நம்மைத் தேற விடுவதில்லை.

நாடுமற்று, நாட்டுரிமையுமற்று
வாழும் எம், அவதி நிலை என்றுதான் தீருமோ...

உங்கள் தந்தையின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு,
உங்களுக்கு என் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தந்தையின் கனவுகளுக்கு உயிர்கொடுத்து,
அவர் ஆத்மாவை மகிழ்வியுங்கள்.