PDA

View Full Version : பெண்மையின் கோபம்ஆதவா
14-11-2008, 08:40 AM
சாரல் தூறிய பொழுதொன்றில்
சருகோசை இசைத்து
கொலுசுகள் பாட
விரைந்தோடுகிறாள்
மலங்கழிக்க

சொட்டுத் துளிகள்
ஒன்றையொன்று உதைக்க
இலைநுனிகளை ரசிக்க நேரமின்றி
கரமறுந்த மரத்திடுக்கில்
மறைகிறாள்

புலமை நிறைந்த மரக்காடு
சப்தக் கவியெழுத
அவளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த
அச்சத் தன்மை ரசிக்கத் துவங்குகிறது

சேறு விழுங்கிய சொட்டொலி
காது படலத்தை கிழித்தெறிகிறது
மிரட்சியால் கண்கள்
கதவு பூட்டிக் கொள்கிறது

இயற்கை அவளை
அந்நேரத்திலும் ரசிக்கிறது
அங்குல அங்குலமாய்
அவள் அங்கங்களைத்
தொட்டு நுகர்ந்து ருசிக்கிறது.

காடுவழி உட்துளைந்து
மரமெய் விட்டிறங்கி
கதிர்களோ துளிகளோ
அவளை அணைத்து முத்தமிட,

கோபத் தாக்கத்தின் வெட்கச்சிதறலில்
மெய்சிலிர்த்து முகம் சிலுப்பி
ஓடுகிறாள்..
வேற்றொருவன் காண்பதாக.

அமரன்
14-11-2008, 09:36 AM
"காட்டுக்குப்போகும்" பெண்கள் தனியாகப் போகும் சூழ்நிலையெனில் விரும்பித் தேர்ந்தெடுப்பது கருக்கல் பொழுதை. கூட்டமாகப் பொவதென்றால் நன்றாக இருட்டிய நேரம். கவிதை சொல்லுவதை போல் மழைத்தருணமும் காட்டுக்குப் போவார்கள். அதுவரை இயற்கை உபாதையை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் வருத்தத்தை கவிதையின் முதல் பகுதியில் உருக்கமாக வடிக்கப்பட்டுள்ளது.

தொடரும் அடுத்த பகுதியில் கவிநாயகிக்குப் புலப்படாத, அவள் போகும் வழியெங்கும் சிதறிக் கிடக்கும் மழை வரைந்த, வரைந்து கொண்டிருக்கிற அழகோவியங்களை வாசகனுக்குக் காட்சிப்படுத்தும் கவிதை தனது மூன்றாவது அங்கத்தில் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திய பின்னர் இயற்கையுடன் ஒன்றுவதை அந்த உணர்வை தத்ரூபமாக படம் பிடிக்கிறது.

பெண்மையின் மேன்மை என்று காலங்காலமாக புகழப்படுகிற நாற்குணங்களின் ஒன்றான அச்சம் நாய்த்தூக்கம் கொண்டதை மிரட்சியால் கதவை பூட்டிய கண்கள் தாங்கிநிற்க உடலில் படரும் காற்று தன்னை நுகர்வதை அவள் உணரும் பொழுதில் ஒரு சில பெண்களின் மெய்மறந்த யதார்த்த நிலையை என்னால் உணரமுடிகிறது. அதே நேரம் பயிர்ப்பு என்னும் பெண்மையை விழிகளில் ஏந்த கூடியதாக உள்ளது.

அகமும் புறமும் சின்னதாக ஒரு வெளிப்பு ஏற்பட்டு இடம்மாறி செயல்மாற்றாத இடத்தில் நாணம் துலங்க அதன் தூண்டலாக மடமை என்னும் மென்மையான பென்மையை வண்மையாக்கி கோபமாக சித்தரித்த இடத்தில் பொருந்துகிறது தலைப்பு. வெளிப்படுகிறது கவிஞரின் சிறப்பு.

பெண்மை சினங்கொள்வதில் "இயற்கை உபாதை"கள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன என்னும் உண்மையை கவிதையினூடு கூர்மையாகச் சொன்னதிலும் கவிஞரின் புலமை பளிச்சிடுகிறது. கோபத்தின் விளைவு சமுதாயச் சீர்கேடா.. பெண்மைக்கே உரித்தான சாபக்கேடா என்ற கேள்வியையும் எழுப்புகிறது கவிதை. பாராட்டுகள் ஆதவா.

உங்கள் கவிதைகள் பன்முகம் காட்டுபவை. என்னால் அது சிதைக்கப்பட்டிருக்குமானால் மன்னியுங்கள்.

ஆதவா
17-11-2008, 12:20 PM
இக்கவிதை எழுதிய பெருந்தன்மையைக் காட்டிலும் அதற்குக் கிடைத்த உங்கள் பின்னூட்டமே திகைக்கவைக்கிறது. ஆனால் உங்கள் பின்னூட்டம் பார்த்த பின்னர்தான் தோன்றுகிறது நாம் கவிதையை ஒழுங்காக அதாவது நான் என்ன நினைத்தேனோ அதற்கு ஏற்ப எழுதவில்லை என்பது. உண்மையில் நான் சொல்லவந்த விசயம், ஒரு பெண் தான் நிர்வாணமாக இருப்பது தன்னைத் தவிர, அல்லது மணமாகியிருந்தால் கணவன் தவிர வேறு எவரும் பார்க்கக் கூடாது.. அது இயற்கையே ஆனாலும்.. இயற்கை அவளைத் தழுவக்கூடாது, முத்தமிடக்கூடாது என்ற கற்பனையில்... ஆனால் நீங்கள் இக்கவிதையின் கோணம் மாற்றி என்னையும் மாற்றிவிட்டீர்கள்.. விமர்சனம் என்பது நடுநிலைக் கத்தி. பாராட்டும், குறைகூறுதலுமாகும். நீங்கள் என்னைப் பாராட்டினீர்கள்.... நான் குறைகண்டுவிட்டேன்.

நம் மன்றத்தினர் மன்றத்துக் கவிஞர்களைச் செதுக்குவதில் வல்லவர்கள்.. அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர்..

உங்கள் பின்னூட்டம் சிதைக்கவில்லை இக்கவிதையை.. மாறாக செதுக்கியது...

நன்றிகலந்த வணக்கங்களுடன்
ஆதவன்.

அமரன்
17-11-2008, 01:13 PM
அடடே..
கடிவாளம் பூட்டிய போர்க்குதிரை லாவகத்தில் சிந்தித்து என் கருத்தை சிந்தி விட்டேன். இப்போது கவிதை சிந்திய மெல்லிழை உணர்வின் தித்திப்பை நுகர்ந்து சொக்கினேன். உங்கள் பெருந்தன்மையை மெச்சினேன்.

ஆதவா
17-11-2008, 01:32 PM
அடடே..
கடிவாளம் பூட்டிய போர்க்குதிரை லாவகத்தில் சிந்தித்து என் கருத்தை சிந்தி விட்டேன். இப்போது கவிதை சிந்திய மெல்லிழை உணர்வின் தித்திப்பை நுகர்ந்து சொக்கினேன். உங்கள் பெருந்தன்மையை மெச்சினேன்.

அட போங்க..... இப்படியெல்லாம் எழுதி என்னைப் பொறாமைப்படவே வைக்கிறீங்க்க....

பொறாமையில்
ஆதவன்.. :)

Keelai Naadaan
17-11-2008, 02:43 PM
பொது இடங்களில் இயற்கை உபாதைகளை தீர்ப்பதில் ஆணின் அவஸ்தையை விட பெண்ணின் அவஸ்தைகள் அதீத கனமுடையவை.
அது குறித்த தங்கள் கவிதை பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள் ஆதவன்.

அமரனின் விமர்சனம் கவிதையை போலவே இனிமை. வாழ்த்துக்கள் அமரன்.

ஷீ-நிசி
24-11-2008, 01:15 PM
நீண்ட நாள் கழித்து ஆதவாவின் கவிதையை காண்கிறேன்... மரமெய் என்ற வார்த்தையை முதன் முதலாய் அறிகிறேன் (விளக்கம் அறியேன்) ம்ம்ம்... இன்னமும் ஆதவாவின் கவிதையை புரிந்துகொள்வதில் ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் போகிறேன்!

ஆதி
24-11-2008, 01:27 PM
கவிதையை மேலெழுப்பியமைக்கு நன்றி ஷீ.. பின்னூட்டம் போட நினைத்திருந்தேன் மறந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதவா..

வித்யாசமான கரு இதற்கு முன்னெவரும் முயன்றதாக அறியவில்லை..

கோலத்தை கண்டுவிடக் கூடாதென குருவியையும் விரட்டுவாள் குளிக்கும் முன்.. பெண்மைக்கே உரிய சிறப்பு குணத்தை அழகாய் கையாண்டிருக்குறீர்கள் ஆதவா..

//புலமை நிறைந்த மரக்காடு
மரமெய்//

வார்த்தையாடல்கள் மிக அருமை..

பாராட்குக்கள் ஆதவா.. பருக கொடுங்கள் இன்னும் பல..

ஆதவா
25-11-2008, 04:02 AM
பொது இடங்களில் இயற்கை உபாதைகளை தீர்ப்பதில் ஆணின் அவஸ்தையை விட பெண்ணின் அவஸ்தைகள் அதீத கனமுடையவை.
அது குறித்த தங்கள் கவிதை பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள் ஆதவன்.

அமரனின் விமர்சனம் கவிதையை போலவே இனிமை. வாழ்த்துக்கள் அமரன்.

மிக்க நன்றி கீழைநாடான்.. நீங்கள் சொல்வது போல அமரனின் விமர்சனமே கவிதையின் தரத்தை நிர்ணயிக்கிறது.
நீண்ட நாள் கழித்து ஆதவாவின் கவிதையை காண்கிறேன்... மரமெய் என்ற வார்த்தையை முதன் முதலாய் அறிகிறேன் (விளக்கம் அறியேன்) ம்ம்ம்... இன்னமும் ஆதவாவின் கவிதையை புரிந்துகொள்வதில் ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் போகிறேன்!

வாங்க கபாலி..... கவிதை எனும் பெருங்காட்டில் உங்கள் இடம் மட்டும் வெற்றிடமாகவே இருக்கிறது.. எப்போ அடுத்த கவிதை தரப்போகறீங்க??

கவிதை புரியலீங்களா? அய்யோ,,,, உண்மையிலேயே அதிர்ச்சிதான் எனக்கு..

நன்றி ஷீ!!!
கவிதையை மேலெழுப்பியமைக்கு நன்றி ஷீ.. பின்னூட்டம் போட நினைத்திருந்தேன் மறந்துவிட்டேன், மன்னிக்கவும் ஆதவா..

வித்யாசமான கரு இதற்கு முன்னெவரும் முயன்றதாக அறியவில்லை..

கோலத்தை கண்டுவிடக் கூடாதென குருவியையும் விரட்டுவாள் குளிக்கும் முன்.. பெண்மைக்கே உரிய சிறப்பு குணத்தை அழகாய் கையாண்டிருக்குறீர்கள் ஆதவா..

//புலமை நிறைந்த மரக்காடு
மரமெய்//

வார்த்தையாடல்கள் மிக அருமை..

பாராட்குக்கள் ஆதவா.. பருக கொடுங்கள் இன்னும் பல..

நன்றி ஆதி.

என்னைப் பொறுத்த மட்டில் படிப்பதற்கு ஆளிருந்தால் அதுவே போதும்.. இக்கவிதையை இதுவரை இருபது பேர் படித்திருக்கிறார்கள். அந்த இருபது பேருக்கு என் கவிதை சென்றடைந்தது.. அதுவே என் மகிழ்ச்சி.. இதில் மன்னிப்பு எல்லாம் எதற்கு ஆதி?