PDA

View Full Version : நேரு பிறந்தநாள் கவியரங்கம் - உலக சமாதானம்



சிவா.ஜி
13-11-2008, 04:42 PM
அன்பு உறவுகளே, பண்டித நேருவின் பிறந்த தினத்தையொட்டி நம் மன்றத்தில் ஒரு கவியரங்கம் துவங்க விருப்பம் கொண்டோம். இதோ அதற்கான சாளரம். நேரு என்றாலே சமாதானப்புறா நினைவுக்கு வரும். இன்றைய சூழலில் அனைவரின் விருப்பம் "உலக சமாதானம்." இந்த தலைப்பில் கவியரங்கம் ஒன்றை நம் மன்றில் தொடங்குகிறேன்.இந்தக் கவியரங்கத்தில் பங்குபெற விரும்பும் கவிகள், என்னைத் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள். நாளை மறுநாள் முதல் கவிஞர்களின் கவி மழையில் அனைவரும் நனையலாம்.

அமரன்
14-11-2008, 12:22 PM
நல்லதொரு முயற்சி.
தூண்டிய ஆதிக்கும் ஊன்றிய சிவாவுக்கும் நன்றி.
வெற்றித்திரியாய் நீள முன்வாழ்த்து.

செல்வா
16-11-2008, 08:09 AM
அடடா.... உலக சமாதானத்தைப் போலவே இந்தத் திரியும் கவனிப்பாரற்றுக்கிடக்கிறதே..?
கவிஞர்கள் எல்லாரும் எங்க போயிட்டீங்க..?

poornima
16-11-2008, 08:30 AM
உலக சமாதான
ஒன்றிணைப்பு கூட்டத்தில்
பரிமாறப்பட்டது
சமாதானத்துக்கென
கொண்டு வந்திருந்த
புறாக்களின் மாமிசங்கள்..

ச்ச்ச்ச்சும்ம்ம்மாஆஆஆஆ நான்
அப்புறமா வாரேன்

சிவா.ஜி
16-11-2008, 08:58 AM
கவியரங்குக்குள் முதலாய் வருகை தந்த கவிதாயினிக்கு வரவேற்புகள். சீக்கிரமே உங்கள் அசத்தல் கவியுடன் வாருங்கள் பூர்ணிமா.

ஆதி
16-11-2008, 11:54 AM
அரங்க தலைவர் அழைக்கலாமே முதல் கவிஞரை..

Keelai Naadaan
16-11-2008, 02:23 PM
உலக சமாதான
ஒன்றிணைப்பு கூட்டத்தில்
பரிமாறப்பட்டது
சமாதானத்துக்கென
கொண்டு வந்திருந்த
புறாக்களின் மாமிசங்கள்..

ச்ச்ச்ச்சும்ம்ம்மாஆஆஆஆ நான்
அப்புறமா வாரேன்

அடடா ச்ச்ச்ச்சும்ம்ம்மாஆஆஆஆ....வே இத்தனை சூடான கவிதையா...

உங்கள் கவிதையை படித்ததும்,

"விருந்துக்கு வந்தவனே மரணத்தின் மேஜைமேல் பரிமாறப்பட்ட இரவு"

என்ற கவியரசு வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள்

மற்ற கவிதைகளையும் காண ஆவலாய்.....

சிவா.ஜி
17-11-2008, 06:44 AM
எண்ணங்களைக் கருவாக்கி
பாடல் பிள்ளைகளை உருவாக்கி
பெருமையுடன் பெற்றெடுக்கும்
கவிகளே..........

அக்கிள்ளைகள் செம்மொழி கேட்க
ஆவல் மிகக் காத்திருக்கும் எங்கள்
செவிகளே....

அரங்கமொன்று அமைத்தோம் அவை துள்ளி விளையாட..
ஆதரவு தந்து வாழ்த்துவோம் அவை வெற்றி நடைபோட...


பரந்து விரிந்த இந்த பார்...
நிறைந்து நிகழும் எங்கும் எதிலும் போர்...
எல்லைக்கும் எல்லைக்கும் போர்
வெள்ளைக்கும் கறுப்புக்கும் போர்
வறுமைக்கும் வளமைக்கும் போர்
உயிருக்கும் உரிமைக்கும் போர்

இவையாவுமில்லா பாரை பார்
எனச் சொல்ல தேவையொரு சொல்
சமாதானமென்ற ஒரு சொல்
அதைக் கொண்டு அனைத்தையும் வெல்..!!


சமாதான நாயகன்
பண்டித நேருவின்
பிறந்த நந்நாளில்
துவங்கிய இவ்வரங்கத்தில்
முதல் தலைப்பாய் நம்
முன்னுள்ளது “உலக சமாதானம்”
***************************

பழைய தமிழில் பண் பாடி..
இளைய தமிழில் மண் பாடி
பழகு தமிழில் காதல் பாடி
அழகு தமிழில் அனைத்தையும் பாடும்

ஆதியெனும் அருமைக்கவியை
ஆதிக்கவியாய் அழைக்கிறேன்
மீதிக் கவிகள் முன்னமருவோம்
ஆதி சொல்லும் சேதியை
சேர்ந்தே சுவைப்போம்.



வாருங்கள் ஆதி...தாருங்கள் தங்கள் தங்க வரிகளை.....!!!

ஆதி
17-11-2008, 11:03 AM
தேன்முற்றும் நித்திலம்பூ செங்கொடியே தேவர்தம்
வான்முற்றும் தண்புகழும் வார்ந்தவளே - ஊன்முற்றும்
ஊறினாலும் ஓங்காத சக்கரையே என்பாட்டில்
வாரிப்பெய் வார்த்தை மழை!

உமைக்கு ஒருபகுதி
இமயத்தான் ஈந்துவைத்தான்
"உமை"முழு பகுதியும்
செந்தமிழுக்கு ஈந்துவைத்தோய்
நெருப்புவிழி திறந்தாலும்
நிலவாக குளிர்வோய்
பொறுப்பாற்றும் பூந்தலைவோய்
உமக்கு என் வணக்கம்..

சபைக்கு அடங்கி
சபையை அடக்கும்
பேரறிவாளர்காள்
பெரும்வணக்கம்..

நேரு எனசொன்னால்
மேரு தாழ்ந்துநிற்கும்
வெண்பனி புன்னகையில்
கண்பனி மறைந்துவிடும்..

சீன பெருஞ்சுவரை
சில்லுசில்லாய் உடைத்தெறிந்த
மானவீரன் போர்த்திறனை
வளர்த்துகதை வையம்பேசும்

சந்திரயான் எய்திந்த
ஜகவிழிகளை திரும்பவைத்தோம்
இந்தியாவின் மூத்தவனுக்கு
இன்னொரு பெருமை சேர்த்துவைத்தோம்..

உள்ளங்கையில் இருந்து
ஒருபுறா பறப்பாதாய்
உன்சிலைகள் செதுகிவைத்தோம்
இருந்தாலும்..
வகுப்பு வாதத்திற்கு ஊக்கியானோம்..

முரண்களாய்தான் வாழ்கிறோம்..
நேரு மாமா
முரண்களாய்தான் வாழ்கிறோம்..

கடையேழு வள்ளல்பற்றி
கதைபேசுவோம்
எடைகுறைத்தே நியாயவிலை
கடைகளில் பொருள் விற்போம்..

சமாதான கற்பித்த கர்த்தனையும்
சமாதானமாய் ஒன்று கூடி கொன்றோம்...

கரப்போர் மறுதலித்து
அறப்போர் செய்த அன்னலையும்
ஆயுதத்தால்தான் கொலை செய்தோம்..

நீதிசாத்திர கூடங்களில்
சாதிசாத்திரங்கள் விதைத்தோம்
தேதிபார்த்திருந்து பிறரை
மோதிசாய்த்து உதைத்தோம்..

முரண்களாய் தான் வாழ்கிறோம்..
நேரு மாமா
முரண்களாய்தான் வாழ்கிறோம்..

ஆயுத தொழிலை
அகரமாய் கொண்டவர்கள்
அரைகூவும் அமைதியும்
கணிகைக்கு கொடுக்கப்பட்ட
கண்ணகிவிருதும் ஒன்றுதான்..

அடுத்த வீட்டுடன் சமாதானமில்லை
அகில சமாதானம் பேச வந்தோம்..
ஊருக்குள்ளே அமைதியில்லை
உலக அமைதி எப்படி காப்போம் ?

வரப்புக்கு சண்டையிட்டு
இறப்புக்கு உள்ளாகும்
தரப்புக்குள் சமாதானம்
உறப்புகு செய்வோம்..

அத்வைதம் அறிய வேண்டாம்
பரிநிர்வாணம் புரிய வேண்டாம்..

நம்மிடம் கெட்டதையும்
பிறரிடம் நல்லதையும்
காண கற்போம்..

அண்டத்தில் உள்ளோரை
அண்டி பிழைப்போம்
கண்டம்விட்டு கண்டம்
பிள்ளைகள் எடுப்போம்..

நாட்டுக்கு நாடல்ல
வீட்டுக்கு வீடுமல்ல
மனதிற்கு மனம்
சமாதான தீபம் ஏற்றுவோம்..
உலக அமைதி போற்றுவோம்..

சிவா.ஜி
18-11-2008, 06:55 AM
ஆழியின் ஆழத்தில்
ஆரவாரமின்றி
அடங்கியிருந்தாலும்
சிப்பித் திறப்பில் வெளிப்படும்
மதிப்பிலா முத்தைப்போல...

தலைப்பொன்றைத் தந்ததும்
ஆதியின் ஆழத்தின்
நித்திலக் கருத்துகள்
வித்தாய் விழுந்தனவே...

சமாதானம் பேசினாலும்
சனாதான தர்மமறியாமல்
வீணாய் தினம்
நானாவித குற்றமிழைக்கும்
நாமாகத் திருந்துவோமென
நயமாக உரைத்த கவியே வாழ்க...!

நம்மிடம் கெட்டதையும்
பிறரிடம் நல்லதையும்
பார்க்கச் சொன்ன ஆதியே...
என்னே உந்தன் நீதியே...

உலக அமைதிக் காண
கலகம் தவிரென்று சொல்லி
காணும் அத்தனைப் புறாக்களின்
அலகிலும் சமாதான இலை செருகாமல்..
உலகில் உள்ளோரனைவரும்
சமாதான மரம் வளர்ப்போம்
அதன் சகோதர நிழல்
அனைவருக்கும் கொடுப்போம்

என சத்து மிகுந்த வித்தாய்
வீரிய வரிகளை விதைத்த
ஆதிக்கு அன்பான வாழ்த்துகள்!!

*****************

ஆதிக்கு அடுத்த கவியாய்
அரங்கத்துக்கழைக்கபடுபவர்.......

பாறையைப் பிளக்கும்
பாரையின் ஒலியிலும்
பண்பாடும் பைந்தமிழ் வித்தகர்..

வென்பாவெனும் நன்பாவை
விரல் நுனியில் விதைப்பவர்
குறள் போல இரு வரியில் தன்
குரல் பதித்த சிந்தனையாளர்

கவி பாடுதல்லாமல்
கவிகள் பாட, கவிதை
கற்றுக்கொடுக்கும் கலைஞன்...

ஆதவாவெனும் அற்புதக் கவிஞனை
பாடவாவென அன்புடன் அழைக்கிறேன்
கவியரங்க மேடையில் கவிபாட வா ஆதவா...!!!

ஆதவா
18-11-2008, 11:43 AM
அவையோருக்கு
வணக்கம்

சமாதானம் என்பது
இயற்கை, ஊமையாக அலையும்
அமைதி அல்ல
போர்க்கரங்கள் ஒன்றையொன்று
தழுவிக் கொள்வது
முதல்நாள் மனைவி போல
முழுநாளும் பிணைந்திருப்பது.

இங்கு சமாதானக் குழந்தைகள்
குறைபிரசவத்திலேயே பிறக்கின்றன
சில கருவிலேயே கலைக்கப்படுகின்றன.

மீறி பிறப்பவைகளுக்கு
யாரோ சிலர்
சமாதானக் கல்வி கற்பிக்கிறார்கள்
அதற்காக தண்டனையும் பெறுகிறார்கள்.

சமாதானம் ஒவ்வொரு நாட்டிற்கும்
வாரிசு

சிலநாடுகளுக்குப் பாவம்
இனவெறி வறுமை போலும்
ஒவ்வொரு ஆயுத விற்பனையிலும்
விலைபேசப்படுகிறது

மிகச் சில நாடுகளுக்கு
மதம் மேல் காமம் போலும்
ஒவ்வொரு குருதிபடுக்கையிலும்
கற்பழிக்கப்படுகிறது

தெருவினில் வீசப்பட்ட சமாதானத்தை
புறாக்கள் எடுத்துச் செல்லுகிறது
அந்தோ பரிதாபம்
நரமாமிசம் திண்ணும் குண்டுகளால்
முட்டையோடு கருகுகிறது புறாக்கள்

உலகம் சமாதானத்தில்
உலவும் வாய்ப்புண்டு ; அப்பொழுது
அதைத் தழுவிக்கொள்ள
கரங்கள் இருக்காது.