PDA

View Full Version : என்னோடு நான்..



ஆதி
12-11-2008, 06:37 PM
மனக்கரிச் சுவர்களில்
உன்னை வெள்ளையடித்தே
மீட்டுக்கொள்கிறேன்
என்னை..

கடந்து செல்லும் ஒவ்வொரு
காலத்துளியிலும்
உதிர்ந்து விழுகின்றன
வெவ்வேறு முகமூடிகள்..

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..

ஆதவா
13-11-2008, 05:01 AM
எல்லோருடைய வாழ்க்கையும் இப்படித்தான். (அப்படி என்று நானாக சொல்லி திருப்திபட்டுக்கொள்வதுண்டு.)

நீ வெள்ளையடித்த அதே கணத்திலிருந்து என் சுவர்கள் கரிபூச ஆரம்பித்துக் கொள்கின்றன. வேறு வழியில்லை. வாழவேண்டுமே!! ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பல்வேறு முகமூடிகள். (சட்டை என்ற பெயரில் நான் ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன்.. இதைப் போன்றே) சில உதிராமலும்... (முகம் உரிந்து மறுமுகம் பெறுவதாலேயே அவன் மனிதனுமாகிறான்.. )

என்னுடைய என்னை எங்கே தேடுவதென்ற தேடலிலேயே பாதி வாழ்வும் போய்விட்டது. தெரியாத முகமூடிகள்தான் என்னையே கைகாட்டுகிறார்கள்..

எத்தனை முறைதான் முகமூடியை உதிர்த்தாலும் முகம் மட்டும் தெரிவதே இல்லை..

வாழ்த்துக்களுடன்
ஆதவன்

ஓவியன்
06-10-2009, 07:37 AM
டார்வின் சொன்ன "தக்கன பிழைக்கும்" வாழ்க்கையில் நாம் அறிந்தோ, அறியாமலோ பல முக மூடிகளை அணிய வேண்டித்தான் உள்ளது ஆதி,
சிலவற்றை விரும்பியும்...
சிலவற்றை விரும்பாமலும்...

"உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்" என்ற பாடல் வரிகள் உங்கள் கவிதையின் இறுதிப் பந்தியைப் படிக்கையில் என் மனதினுள் நிழலாடுகிறது ஆதி, நம்மை நாமே அறிந்து, நம்மை எல்லோரும் அறியச் செய்து வாழ்க்கையில் ஜெயிப்போம் வாங்க.

கா.ரமேஷ்
06-10-2009, 08:20 AM
யாரென்று தெரியாவிட்டாலும் நாமென்ற நம்மை மேலும் மெலும் புதுப்பிக்க தினம் தினம் மாறிக்கொண்டுதான் இருக்கிறோம்.வேறுவழியில்லை வாழ்க்கையோடு நாம் இணைந்து வெற்றியாளனாகவே பெறும்பாலும் முயற்சிக்கிறோம்... முயற்சிப்போம்...

வாழ்த்துக்கள் ஆதி...

சிவா.ஜி
10-10-2009, 05:31 PM
நாம் என்ற நாம் வாழ்ந்துகொண்டிருப்பதே எவரோ உருவாக்கிய உடலில்தானே. தேடல் இருக்கும்வரை வாழ்வில் சுகமிருக்கும். வழியில் கழன்றுவிழும் முகமூடிகளின் எண்ணிக்கை வாழும் மனிதர்களைவிட ஆயிரம் மடங்கு அதிகம்.

சிந்திக்க வைக்கும் வரிகளுக்கு வாழ்த்துகள் ஆதி.

சுகந்தப்ரீதன்
11-10-2009, 02:06 PM
என் முகமூடியை நான்
கழற்றி எறிந்த கணத்தில்
எனக்கு மாட்டப்பட்டது
அவர்களின் புதிய முகமூடி....!!

-இதுதான் நிதர்சனம் ஆதி..!!



வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
எவரோ எழுப்பிய வீட்டில்
யாரென்று தெரியாத என்னோடு..
அருமையான அர்த்தம் கொண்ட வரிகள்..!!