PDA

View Full Version : விடநிறை விசாரம் விடு...!!



சிவா.ஜி
11-11-2008, 04:47 AM
மதமதை பிழைந்து
மதநீர் பெருகிய
மதநிறை மானிடா....
மதவெறி விடு...

சகமதம் சம்மதித்து
சகமனிதம் நேசித்து
சகமிதில் வசித்து
சகமது ருசித்து
இகமதில் இரு...!

முட மனிதர் மனம்போல
நடவெனவே மத மதம் சொல்லும்
மடபோதனை அதுவெனவே
நடபோதும் நீ வெல்வாய்..!

உள்நோக்கி உனைப்பார்
நல்லோனை நீயறிவாய்
வல்லோனாய் இருப்பின்
இல்லோனையும் உள்ளோனையும்
வெல்வோனாய் இருப்பாயா?

எல்லோர்க்கும் நல்லவனை
வல்லோரும் அஞ்சுவர்
சொல் உனது கேட்க
கல்லாரும் கெஞ்சுவர்...!

நேசிக்கும் இதயமாய் இரு
வாசிக்கும் ஒருவனாய் இரு
விடநிறை விசாரம் விடு
உடனுறை உண்மைதனை
ஓரோரு செயலிலுமிடு!

ஆதவா
11-11-2008, 05:17 AM
முன்பொரு காலத்தில் குடுமிச் சண்டை இருந்தது. கைத்தடி வைத்திருந்தவன் சண்டைக்காரன் அதைக் கவனிப்பவன் இறைவனாக இருந்தார்கள். சைவம், வைணவம்,. பின்னர் அமைதியாக புத்தம், ஆக்ரோஷமாக இசுலாமியமும் கிறிஸ்துவமும் நம் நாட்டைத் துவம்சம் செய்தன... உண்மையிலேயே மதச்சண்டைகளும் இனச்சண்டைகளும் தான் போர்களுக்கான காரணமாக இருக்கிறது.

மதம் விடு.. நான் எம்மதம்? பிறக்கையிலா? முன்பா? தழுவிய பின்னரா? எம் மதத்திற்கான கொள்கைகள் யாது?

கொஞ்சம் கேள்விகள். எம்மதமும் சண்டை விரும்புவதில்லை.. மதம் பிடித்தவர்கள் தான் அம்மதம் எனும் பெயரில் வதம் செய்கிறார்கள். மத நீர் பெருகி, மதம் நிறையும்... பெருகிய திரவம் கனலாய் வழியும்.. அது வெறியைச் சுண்டி, வெறியைப் பெறும்.

முதல் முப்பத்திகள் புள்ளியில்லா எதுகை. ரெளத்திரம் பெருக்கும் அழகு பதுமைகள். படிக்கும்பொழுது ஒரு நொடி பாரதி என் கண்ணில் வந்து சென்றதை மறக்க இயலாது. சகமதம் சம்மதிக்க இயலாது. அது யதார்த்ததிற்கும் ஒவ்வாது. மதமழிந்த மதமொன்று இருக்க வேண்டும், அது சகமத மனிதர்களைச் சுண்டி தன்னுள் இருத்த வேண்டும்.


நடவெனவே மத மதம் சொல்லும்

மத மதம் என்பது... மதத்திற்குப் பிடித்த மதம்.. (யானைக்குப் பிடிக்குமே அம்மதமே!)


மடபோதனை அதுவெனவே
நடபோதும் நீ வெல்வாய்..!

கடகடவென எழுதித் தள்ளினீரோ? உங்கள் தாள் சூடேறியிருக்கும்... அத்தனை பவர்..


உள்நோக்கி உனைப்பார்

யார் பார்க்கிறார்கள்..??? யாரும் பார்ப்பதில்லை. முதலில் நமது செயல்களை கவனிக்கிறோமா? நாம் செய்வது சரியா தவறா? எதாவது சிந்திக்கிறோமா? மனம் பேசும் பேச்சை நம்பி வாழ்பவன் மனிதன். மனம் அம்மணமாக இருத்தல் வேண்டும். ஆடைகட்டி அழகு பார்க்க அது மதத்தானுக்குத்தான் வரும்.



எல்லோர்க்கும் நல்லவனை
வல்லோரும் அஞ்சுவர்
சொல் உனது கேட்க
கல்லாரும் கெஞ்சுவர்...!

இந்த வரிகளுக்கு என் எழுத்துக்கள் கெஞ்சுகின்றன.... வாழ்த்த வயதில்லை சிவாஜி அண்ணா..


வாசிக்கும் ஒருவனாய் இரு

தோன்றின் புகழொடு தோன்றுக.... அவ்வாறே ஆகாதெனினும் இகழொடு தோன்றற்க.

எனக்கு என்னவோ வேற்று மதக்காரனைப் பார்த்தால் அப்படியொரு வேற்றுமையும் தெரிவதில்லை. பிறருக்கு எப்படித் தெரிகிறது??

அவருக்குள் நுழை என்கிறது என் மனம் :)

நிறைகுடம் தளும்புவதில்லை ; நிறைகவி, தள்ளாடுவதில்லை... வாழ்த்துக்கள் அண்ணா...

அன்புடன்
ஆதவன்.

ஓவியன்
11-11-2008, 05:55 AM
வார்த்தைகளைக் கோர்த்து
உள் மனக் குமுறல்களைச்
சேர்த்து
உறைக்கும் படி, கவி வடித்த
சிவாவுக்கு என் வாழ்த்துக்களும்...

சிவா.ஜி
11-11-2008, 06:00 AM
இப்போதெல்லாம் ஆதவாவின் அந்த நீண்ட அலசல்களுடன் கூடிய மயக்கும், எழுத்துக்களைக் காணமுடிவது கண்டு மனம் ஆனந்திக்கிறது.

வரிகளைத் தரம் பிரித்து வடித்தவனை தரமுயர்த்தும் உயர்ந்த விமர்சனம்.

மதமிகு மனிதர்கள் உங்கள் வரிகளை வாசிப்பார்களேயானால், உங்களைப் போலவே மாற்று மதத்துக்காரர்களையும் எந்தவித பேதமுமின்றி நோக்க முடியும்.

மனம் நிறைந்த நன்றிகள் ஆதவா.

சிவா.ஜி
11-11-2008, 06:02 AM
உரைத்ததைப் படித்தால் உறைக்கவேண்டுமென்பதே அவா ஓவியன். உறைத்தால் நலம். இல்லையேல் என்றாவது ஒருநாள் அவருக்கது உறைக்குமென்ற நம்பிக்கையில் சொல்ல வேண்டியதை சொல்லிச் செல்ல வேண்டுமென்பதே என் ஆசை.

மிக்க நன்றி ஓவியன்.

ஆதி
11-11-2008, 06:10 AM
வேகமாய் கோவிலைவிட்டு
வெளியேறிக் கொண்டிருந்தான்
இறைவன்..
எங்கென கேட்டேன் ?
என் கோவிலை இடிக்க
யாத்திரை புரப்பட்டவன்
விபத்துக்குள்ளாகிவிட்டான்
அவனை காப்பாற்ற என்றான்..

-------

வேண்டுதல் வேண்டாமை இலான்
வேண்ட தன்னை வேண்டுவதுமில்லை
வேண்டாதார் அவனுக்கு
வேண்டாமையுமில்லை..

மதத்தால் மனிதனை பார்க்காதே
மனத்தால் மனிதனை பார்..
சமயம் உன்னை சமைக்கத்தான்
சகமனிதனை உணவாக்க அல்ல..

நல்ல கருத்துக்கள் அண்ணா..
நயமான வார்த்தைகளை
நளினமாய் கோர்த்தது
மற்றொரு அழகு
பாராட்டுக்கள் அண்ணா..

செல்வா
11-11-2008, 07:39 AM
விடநிறை விசாரம் விடு - இந்தத் தலைப்பப் பாத்ததுமே என்னாச்சு நம்ம சிவா அண்ணாவும் அமரன், ஆதவா, சாம்பவி, தாமரை கோஷ்டியோட சேந்துட்டாராங்கிற சந்தேகத்துல தான் வராம இருந்தேன்.
அப்புறமா இருந்த தைரியத்தை எல்லாம் சேர்த்துட்டு மெதுவா எட்டிப்பார்த்தேன்...
ம்... கலக்குறீங்க அண்ணா.....
கவிதையைப் பற்றி ஆதாவா விமர்சனம் பண்ணியாச்சு .. அதுக்கு மேல நான் என்னத்தைச் சொல்ல...
இன்று உலகிற்கு மிக மிகத் தேவையான விடயம் நீங்கள் சொல்வது. இன்னும் நிறைய எழுதுங்கள். தமிழ் அழகாக அதோடு ஆக்ரோஷமாக இருக்கிறது.

சிவா.ஜி
11-11-2008, 08:45 AM
மதத்தால் மனிதனை பார்க்காதே
மனத்தால் மனிதனை பார்..
சமயம் உன்னை சமைக்கத்தான்
சகமனிதனை உணவாக்க அல்ல..


அருமையான வரிகள். நான் விளக்க முயற்சித்ததை நீங்கள் வெகு அழகாய் சொல்லியே விட்டீர்கள்.

மிக அழகான பின்னூட்டக்கவிதைக்கு மிக்க நன்றி ஆதி.

சிவா.ஜி
11-11-2008, 08:47 AM
செல்வா, நீங்க பட்டியலிட்டவர்களெல்லாம் தமிழாசான்கள். அவர்கள் நிழலில் சுட்ட பழமும், சுடாத பழமும் பொறுக்கும் சிறுவன் நான்(தமிழைப் பொறுத்தவரைதான்...ஹி..ஹி..)

பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி செல்வா.(தமிழில் எனக்கு மற்றுமொரு ஆசானே)

ஆதவா
11-11-2008, 09:03 AM
செல்வா, நீங்க பட்டியலிட்டவர்களெல்லாம் தமிழாசான்கள். அவர்கள் நிழலில் சுட்ட பழமும், சுடாத பழமும் பொறுக்கும் சிறுவன் நான்(தமிழைப் பொறுத்தவரைதான்...ஹி..ஹி..)

பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி செல்வா.(தமிழில் எனக்கு மற்றுமொரு ஆசானே)

இதுதான் தமிழ்மன்றமே!. ஒருவருக்கொருவர் ஆசான்களாய்...

நீங்கள் சிறுவர் என்றால் நாங்கள் பாப்பாக்கள்.. (வயசும் குறையுதுல்ல:D)

சுகந்தப்ரீதன்
11-11-2008, 09:48 AM
வார்த்தைகள் வசப்படாவிட்டால் வாக்கியங்கள் வலிமையிழந்து விடும்.. அதை சற்று ஆழமாக நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் அண்ணா..!! இந்த விடயத்தில் நானும் செல்வாவைப்போல் வறியவனாகத்தான் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்..!!

காலத்திற்க்கேற்ற கோரிக்கையை கவிதையில் வைத்திருக்கிறீர்கள்.. எல்லோரும் அதை ஏற்று நடந்தால் மனிதம் என்ற மதம் மண்ணில் மலரும்..!! வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!!

செல்வா
11-11-2008, 10:19 AM
விட நிறை விசாரம் விடு
விட - விடம் - விஷம்
நிறை - நிறைந்த
விசாரம்-??
விசாரம்னா என்ன?

ஆதி
11-11-2008, 10:27 AM
விசாரம் - கவலை, மனச்சஞ்சலம்

விசாரம் > விசாரித்தல் > வினாவுதல், ஆராய்தல்

சிவா.ஜி
11-11-2008, 10:48 AM
விசாரம் - கவலை, மனச்சஞ்சலம்

விசாரம் > விசாரித்தல் > வினாவுதல், ஆராய்தல்

இதைத்தான் ஆதி நான் எடுத்துக்கொண்டேன். மிக்க நன்றி.

ஆதவா முந்தைய பதிவில் சொன்னதைப் போல மன்றத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விடயத்தில் ஆசான்கள். பார்த்தீர்களா இங்கே பாப்பா பாடம் சொல்ல தாத்தா கற்றுக்கொள்கிறார்.

சிவா.ஜி
11-11-2008, 10:49 AM
சுபி வலியவன் தன்னை வறியவன் எனச் சொல்லிக்கொள்வதில் இன்னும் உயர்கிறான். நீங்களும் செல்வாவும் உயர்ந்தவர்கள். உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சுபி.

மன்மதன்
11-11-2008, 12:29 PM
வலிமை மிகுந்த கவிதை..

பாராட்டுகள் சிவா.ஜி

ஆதவா
11-11-2008, 12:36 PM
விட நிறை விசாரம் விடு
விட - விடம் - விஷம்
நிறை - நிறைந்த
விசாரம்-??
விசாரம்னா என்ன?

இன்னொரு அர்த்தமும் உண்டு செல்வா..

விடநிறை விசாரம் விடு (விடம் - விஷம் ; விசாரம் - ஆராய்தல்)

விஷம் நிறை , ஆராய்தலை விடு.

எடக்குமுடக்காக யோசிக்கும்
ஆதவன் :D