PDA

View Full Version : காலை 9.31 முதல் 10.00 வரைஆதவா
11-11-2008, 05:04 AM
சிறிதுநாட்களுக்கு முன்னர் கவிதை வடிப்பதுவும், அதை எரிப்பதுவுமாக சென்றுகொண்டிருக்க, பலமுறை தோன்றிய கருக்கள் தோன்றிய நொடியில் மரணமடைந்து போக,, தலையைப் பிய்த்துக் கொண்டு செய்வதறியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்.

காணும் இடமெல்லாம் நின்றன் கரியநிறம் தோன்றுதடா என்பதைப் போன்று கண்டதெல்லாம் கவிதையாகத் தோன்ற.. எனக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான். அவ்வளவுக்கும் காரணமான கவிதையைத் தீயிட்டு கொளுத்திவிட முடிவு செய்த பிறகும், அது நம்மை சும்மா விடுவதாக இல்லை. குரங்குக்கு வாக்கப்பட்டா வாலைப் புடிச்சிதான் ஆகணும் என்று ஒரு சொலவடை உண்டு. அதைப் போன்று இது கட்டுப்படுத்த இயலா போதை என்று உணர்ந்த பிறகு ஆங்காங்கே துளிர் விட்டுக் கொண்டிருந்த கற்பனைகளைத் தூசு தட்ட ஆரம்பித்தேன்.

சரி இதெல்லாம் நான் எதற்காக சொல்லவேண்டும்?

முன்பை விட இப்பொழுது கவிதைகளுக்காக உழைக்க வேண்டியிருக்கிறது. அந்த சலிப்பில் தூக்கியெறிந்துவிடலாம் போல நினைப்பு அடிக்கடி நம்மை துரத்துகிறது. இருபக்க வாத்தியமாக அடிவாங்கிக் கொண்டு எதாவது எண்ணினால்.... கவிதைகளே தாறுமாறாகத் தோன்றுகின்றன. அந்த கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்க வேண்டுமல்லவா... யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்.

நேற்று (என்று வைத்துக் கொள்ளுவோம்) அதிகாலை எழுந்ததும் முதன்முதலாய் செய்த காரியம் கனவு என்ன கண்டோம் என்பதுதான்.. கொடியதோ நெடியதோ, மென்மையானதோ உண்மையானதோ எதாகிலும் அதன் கற்பனையை கவிதைக்குள் புகுத்தலாம் என்ற நப்பாசைதான். ஆனால் அதன் பிறகு வந்த எண்ணங்கள் என்னால் மறக்க இயலவில்லை. தொடர்ந்தாற்போல கவிதையெழுதத் தூண்டிக்கொண்டிருக்க, அதை மறுத்து ஒவ்வொருமுறையும் தண்டனை கொடுத்தேன். சரி என்னென்ன எண்ணங்கள்?

காலை 6.00 முதல் 7.30 வரை

காலை எழுந்து பனிபடர்ந்த சாலையில் நடைப்பயிற்சிக்காக செல்ல ஆயத்தமானேன்.

"பனிமூடிய சாலை,
கிழிக்கிறது
என் கால்களின் ஓசை"

இப்படியாகத் தொடங்கியது கவிதை. பின்னர் எனது வீட்டுக்கு அருகே உள்ள பூந்தோட்டத்தைக் கடக்கையில்

"கமழும் சுகந்தத்தை
நுகர்புலனால் புணர்ந்திழுக்க
திட்டித் தீர்த்தது பூக்கள்"

என்று அடுத்த வரி மனதினுள் எழுதினேன்.. இதென்ன, இன்றைக்கு ஒரே கவிதை மயம் தானா என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அடுத்த தெரு வந்துவிட்டது.

" இருதெருக்கள்
முத்தமிடும் மூலை.
மெல்ல அழுதது
பாதை"

சரி சரி.. நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்கு என்ன அர்த்தம் என்றுதானே!!! இவை எனக்குள் உண்டான எண்ணம்.. என்ன வகையான எண்ணம் என்பதே தெரியவில்லை.
ஆனால் அர்த்தமுண்டல்லவா? தெருக்களும் பாதையும் குறியீடுகள். பொருத்துவன பொருத்தினால் பொருத்தமாக பொருள் வரும்..இல்லையா?

அடுத்த தெரு தாண்டி செல்கிறேன். இரவு பெய்த மழையால் சகதியாகியிருந்தது பாதை..

"யாரோ அழுதார்கள்
என் உடல்
கற்பழிக்கப்பட்டிருக்கிறது"

இப்படியான எண்ணங்கள் தோன்றுகின்றன. பாதைக்கும் பாட்டுப்படி என்பது போல... சகதி நிறைந்த தெருவை என்னால் இப்படி மாற்றுக்கோணத்தில் பார்க்க முடிந்தது. அதென்ன மாற்றுக் கோணம்.. கற்பழிக்கப்பட்டபிறகே கண்ணீர் வரும்.. இங்கே கண்ணீருக்குப் பின் கற்பழிப்பு... அதிலும் கண்ணீர் விட்டவரே கற்பழித்தார்.... இந்திரன்.. நோட் திஸ் பாயிண்ட்.

என்னால் முடியவில்லை. தொட்டதற்கெல்லாம் இன்றேனோ கவிதை வருகிறதே என்று நொந்து, பாதிவழியிலேயே வீடு திரும்பினேன். அட அப்பொழுதாவது என்னை விட்டுவைத்ததா இக்கவிதை?

"எனக்குள் அடங்காத கவிதை
பாதி வழியில் திறந்துகொண்டது
வெள்ளமாய்"

ஒரே மயக்கம்தான். எதற்காகவென்றா? இப்பொழுது இக்கவிதைக்கு என்ன அர்த்தம்? எனக்கு முதலில் அர்த்தம் கொண்டு கவிதை வருகிறதா அல்லது கவிதை பிறந்த பின் அர்த்தம் தேடுவதா? என்ற குழப்பம். ஆனால் இக்கவிதைக்கு அர்த்தம் இல்லாமல் இல்லை.. ஒரு முழுமை பெற்ற கவிஞனின் குறைப்பிரசவம் தான் இதன் அர்த்தம்.. அப்பாடா.. அந்த பாதிவழிக்கு எனது நன்றி.

இப்பொழுது எதையும் எண்ணக்கூடாது. எண்ணினால் என் மனத்திற்கே கேடு என்று எண்ணிக் கொண்டிருக்கையில்

"எண்ணமில்லாத எண்ணம்
எதுவரையிலும் எண்ணும்? "

அய்யோ அம்மா.... என்னால் தாங்க முடியவில்லை..

தொடரும்...

ஓவியன்
11-11-2008, 05:11 AM
எண்ணங்கள்தான் ஒரு மனிதனின் போக்கைத் தீர்மானிக்கின்றன ஆதவா,
நல்ல எண்ணங்கள் நன்மையாகவும், தீய எண்ணங்கள் தீமையாகவும்
விளைவுகளைத் தருவது நாம் அறிந்ததுதானே..!!

வியாபாரியின் எண்ணங்கள் வியாபரத்தையே சுற்றிச் சுழலும்,
நல்ல கவிஞனின் எண்ணங்கள்
என்றும் கவித்துவமாகவே இருக்கும்,
மீண்டும் அதை நிரூபணம் செய்கிறது உங்களது இந்த எண்ணங்கள்..!!

வாழ்த்துக்கள் ஆதவா,
தொடரட்டும்
உங்கள் எண்ணங்கள்,
அவை படைக்கட்டும் பல
கவிதைச் சாலைகள்...!!

சிவா.ஜி
11-11-2008, 05:33 AM
நல்ல படைப்பாளிகளுக்கு அடிக்கடி நேரும் அவஸ்தை இது. சோகத்திலும் இரு வரிகள் வந்து இதயத்தில் முட்டும். சில நேரம், அது ஆசுவாசப்படுத்தும், சில நேரங்களில் தூண்டிவிட்டு சிரிக்கும்.

எண்ணங்களை கோர்வைப் படுத்தி வரிகள் வந்து விழுந்த தருணங்களை சுவையாக தரத் தொடங்கிய உங்களுடனும், உங்கள் எண்ணங்களுடனும் நாங்களும் பயனிக்கிறோம். அவற்றை சுவைத்து மகிழ்கிறோம். தொடருங்கள் ஆதவா.

Narathar
11-11-2008, 06:12 AM
இப்படி எழுத வரவில்லியே.........
என்று நம்மை நாமே நொந்துகொள்ளவைக்கிறது
உங்கள் வரிகள்..
தொடருங்கள் ஆதவரே.......
அப்படியே கொஞ்சம் நிழலுக்கு உயிர் பகுதியையும்
கொஞ்சம் எட்டிப்பாருங்கள்.......

ஆதவா
11-11-2008, 12:35 PM
அனைவருக்கும் எனது நன்றி......

அன்பு நாரதரே, என் ஆதரவு நிச்சயம் உண்டு.... :)
-------------------------------

காலை 7.31 முதல் 8.03 வரை

ஒவ்வொரு நொடிகளும் என்னை இப்படி கவிதை என்ற அரக்கனுக்குப் பலியிட, என் தலைக்கு வெளியே ஏதோ சுற்றிக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் முதன்முறையாக கவிதைகளை வெறுத்தேன். நான் உருவாக்கிய பாணம் என்னையே தாக்கியதைப் போன்று உணர்ந்தேன். சோர்வில் சற்று நேரம் இளைப்பாறிவிட்டு மெல்ல எழுந்து பல் துலக்கும் பொழுது,

"எனக்கு முன்னே
நீண்டு பயமுறுத்தியது கறைகள்,
அதன் இதழோரம்
என் ஆயுட்கால நொடிகள்
தொங்கிக் கொண்டிருந்தன.
அது வீழ்ச்சிக்குப் பயந்து கதறியழுதது
நான் சோர்வில் விலக்கினேன்
அக்காட்சிகளை."

இந்த எண்ணம் எப்படிப்பட்ட வகையானது? எனக்கும் புரியவில்லை. கறைகளை காட்சிப்படுத்தி எனக்கு வெளியே உலாவ விட்டேன்... ஆனால் எதற்காக விலக்கினேன்? அது சோர்வில்லை. சோம்பேறித்தனம்.. காட்சிப்படுத்தும் பொழுது வார்த்தைகளையும் நாம் மாற்றித்தானே ஆகவேண்டும்.. இக்கவிதையோடு முந்தைய கவிதைகளையும் எழுதி பத்திரப்படுத்திக் கொண்டேன்

பற்கள் துலக்கவில்லை என்பதை கவிதை படுத்திய என்னை துலக்கிய பின்னராவது விட்டதா கவிதை?

"எனக்குள் குதித்தாடியது
சுத்தமெனும் அரக்கன்
அசுத்தம் பூசிக்கொண்டு"

அதெப்படி சுத்தம் அசுத்தம் பூசும்? இக்கவிதைக்கு நேரடியாக கர்வம் என்று பெயரிடலாம்தான். ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள். அசுத்தம் என்பது பொய்யாக இருக்கட்டும், சுத்தம் மெய்யாக இருக்கட்டும்.. பொய் பூசி வந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் துள்ளுகிறதா இல்லையா? சரி இத்தோடு என்னை விட்டதா? கழிவறை செல்லவேண்டும் என்று வயிறு கட்டளை இட, அய்யயோ, அவ்விடத்தில்தானே வேண்டாத எண்ணங்கள் வரும்.??? கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கையில்.....

என் வீட்டு கழிவறை
சுத்தமாகத்தான் இருக்கிறது
கரியெடுத்து வரைந்திட
மனம் வருவதில்லை.

நேர்மாறாக
அரசு கழிவறையில் நான்..

இப்படி முன்னமே ஒரு கவிதை எழுதியிருந்த ஞாபகம் வந்தது. ஆனால் அதற்கும் இதற்கும் சற்றேனும் வித்தியாசம் இருக்கவேண்டும் அல்லவா? நம் வீடு நமக்குச் சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம்... காரணம் என்ன? பயம்.. நம்மை தவறாக நினைப்பார்களோ என்றோ, வீட்டிலுள்ளவர்கள் நம்மை ஏசுவார்கள் என்றோ ஒருவித பயம்... அப்பயம் அரசு கழிவறைகளில் என்னாகிறது???.... ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிவறை இருப்பதால் இந்த பிரச்சனையோ என்னவோ? நேராக குளியலுக்குச் சென்றேன்.

குளிப்பதற்காக தண்ணீர் மொண்டெடுக்க, தொட்டியை நாடுகையில் எனது பிம்பம் தொட்டியில் பிரதிபலித்தது.. ஆங்.... நீங்கள் யூகித்தது சரிதான்.. அடுத்த கவிதை என்னைத் துரத்தியது.

"என் பிம்பங்கள் உடைந்து
கதறி அழுதன.
கலைத்த சிரிப்பில்
அவள்"

அடச்சே என்று என்னையே நொந்துகொண்டு அம்மாவை அழைத்து குளிப்பதற்கு தண்ணீர் எடுத்து வைக்கச் சொன்னேன்... நேராக குளியலறைக்குச் சென்று உடைமைகளை கலைத்துப் போட்ட பின்னர் என்னை அடுத்த அம்பு பதம் பார்த்தது.

"நிர்வாணம் எனும் ஆடை
எப்படி நான் கலைக்க?"

ஆமாம்ல... நிர்வாணம் எனும் ஆடையை எப்படி கலைக்க முடியும் ஓவியர்கள் ஏன் நிர்வாணத்தை வரைகிறார்கள்.. அதில் ஒளிவுமறைவு இல்லை. அங்க சுழிவுகள் நெளிவுகள் அனைத்தும் துல்லியம் காட்டலாம். மேலும் அது ஒரு தியான நிலை.
குளியல் முடித்து அறைவிட்டு நீங்கிய பின்னர் என் குளியல் நீரோடு கவிதைகள் பயணித்திருக்கவேண்டும்.. ஆனால்? ஆனால்??

"கலைத்துப் போட்ட நிர்வாணம்
காண்பவரின்றி மிதிக்கப்பட்டது"

சற்றே வாய்விட்டு திட்டியேவிட்டேன்.. அம்மா எனது முணகலைக் கண்டு "ஏமிரா" என்று அதட்ட, "ஒகுட்டி லேது" என்று சமாளித்தேன்.. அய்யய்யோ...

"எங்கேயோ குற்றுயிராய்
குலைந்து போய் கிடந்தது
என் பால்ய பருவத்தில்
நான் கண்ட மொழி"

என்னால் சற்று கூட முடியவில்லை. தியானம் செய்தால் ஒருவேளை எண்ணங்கள் ஒருங்கிணையுமோ என்னவோ என்று சற்று நேரம் தியானித்தேன்.. என்னை அம்மா கூட வித்தியாசமாகப் பார்த்தார். இந்த நேரத்தில் தியானிக்கிறானே என்று..

மெல்ல நெற்றிப் பொட்டில் எண்ண அலைகளை ஒருங்கிணைக்க, சில நொடிகள் என்னை நான் மறந்தேன். வேறொரு உலகம் சென்று சற்றே இளைப்பாறும் நேரம் மீண்டும் கத்திவெட்டு விழுந்தது. தியானம் கதறி இறந்தது.

"என் புலன்களையெல்லாம்
நெருக்கி ஒருங்கிணைக்கையில்
தனிமையில் அழுதது
தியானம்"

எப்படி? தியானத்தின் பக்கத்தில் இருந்து யோசித்தால் இது நிச்சயம் புலப்படும். நாம் ஒன்றை வதைக்காமல் மற்றொன்றோடு ஒன்றிணைய முடியாதல்லவா? ஐம்புலன்களை அடக்கி ஒடுக்கி தியானம் எனும் மனிதனுக்குள் நுழைக்கும்பொழுது, வலி தாங்க முடியாமல் அது அழும் இல்லையா? அதென்ன தனிமையில் அழுவது? தியானம் என்பது ஒரு உலகம். அது ஒரே ஒரு உலகம் மட்டுமே. அங்கே தியானம் என்ற மனிதனைத் தவிர வேறொருவர் இல்லை.. அது சரி.. இக்கவிதை நியாயமாகப்படுமா? தியானம் எங்காவது அழுமா என்று கேள்வி கேட்பவருக்கு என்னிடம் நிச்சயம் பதிலில்லை. அதது அக்கோணத்தில் யோசித்தால் நிச்சயம் அதன் அழுகைக்கான நியாயம் தென்படும்...

சரி இன்னும் நான் என் வீட்டை விட்டே வெளியேறவில்லை.. (அட அலுவலகத்திற்குத்தாங்க.:))

//////////////////////////////தொடரும்...///////////////////////

ஆதவா
12-11-2008, 04:22 AM
காலை 8.04 முதல் 9.30 வரை

தியானத்தில் ஒருங்கிணையா மனது சிறிது நேரம் தொலைக்காட்சி கண்டாலாவது எண்ணங்கள் திசை திருப்பப்படலாம் என்பது என் கருத்தாக இருந்தது. அப்பொழுது கலைஞர் டிவியில் மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் விளம்பரம் வந்தது.. அடக்கடவுளே... என்னைத் தொலைக்காட்சியும் பார்க்கவிடாமல் கவிதை புரட்டிப் போட்டது.

"ஆடை அணிவதில்
ஆச்சாரம் பார்க்கிறாள்
கிழவி
மறக்காமல் இரவுதோறும்
பேத்தியோடு காண்கிறாள்
மானாட மயிலாட."

இது ஒன்றும் அவ்வளவு சிறப்பான கவிதையில்லை.. தூக்கியெறிந்தேன். வேறொரு தொலைக்காட்சி மாற்றினேன்.. இம்முறை ஆங்கிலத்திற்கு மாற்றினேன்.. அழகான படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.. படம் "Citizen Ruth" அதன் கதாநாயகி ஒரு அடங்காதவள், போதை அடிமை. இது போதாதா கவிதைக்கான கரு கிடைக்க?

"போதைகள் என் அடிமைகள்
என் கட்டளைக் கிறங்கி
அடிபணிவன.
என்றாவது ஒருநாள்
அதன் சேவகனாக நான்"

இதென்ன காலையில் ஓரளவு நல்ல கவிதைகள் விளைந்தனவே இப்போது சரியில்லையே என்று எண்ணிக் கொண்டிருக்கையிலேயே அடுத்த கவிதையும் பொக்கையாகவே கிடைத்தது. :(

"என் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்த
போதைப் பாம்புகள் விலக மறுத்தன
அதன் இறுக்கத்தில் முகம் சிவந்து
கண்கள் பிதுங்கின.
எச்சில் ஒழுகி பாம்பின் மீது உமிழ்ந்தன என் நா.
உமிழ்ந்த அறுவறுப்பில் தளர்ந்தது பாம்பு
போதையை உமிழ்ந்துவிட்டு.

உமிழ்ந்த ருசிப்பில் மீண்டும் இறுக்கச் சொல்லுகிறேன்.
அறுவறுப்பில் இறந்து போயிருந்தது பாம்பு."


இறுதி வரிகள் வரையிலும் ஓகே... பாம்பு எப்படி இறந்து போயிருக்கும் என்று யோசிக்க வைக்கிறது மனம்... சொல்கிறேனே.. திகட்டத் திகட்ட போதையில் இருக்கும் மனிதன் அதை வேண்டாம் (அல்லது போதும்) என்று ஒதுக்கும் போது எப்பொழுது? போதை தீர்ந்து இருக்கும் பொழுது.. இதை ஒரு சிகரெட்டுக்கு ஒப்பிடுங்களேன். அப்படியெனில் உமிழ்ந்தது ஏன்? இப்படியும் கேட்கலாம் இல்லையா? போதை நம்மை கட்டியிறுக்குகிறது ; போதும் என்று சொல்ல நினைப்பது உமிழ்வதாக..... அட இன்னொரு கேள்வியும் உண்டு. பாம்பு இறந்ததால்தானே உமிழவும் செய்கிறோம்? ஒவ்வொருவருக்கும் போதையின் முடிவில் தான் பாம்பு இறந்திருக்கும்...நன்கு யோசித்தால் இந்த விசயம் சரிவரும். சரி சரி. நல்ல நேரத்தில் பாம்பு பல்லி என்று ஏன் சொல்லி அறுவறுக்க செய்யவேண்டும்... எல்லாம் இந்த citizen ruth படத்தோட விளைவுகள்...

தொலைக்காட்சியை அணைத்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன்.. இரு முற்களின் ஓட்டத்தில் நேரம் காலை 9.15 என்று சொன்னது.

"ஒவ்வொரு நொடிப்பொழுதும்
ரகசியமாகவே பிறக்கின்றன
இறந்த நொடிகள்
ரகசியத்தைக் கசியவிடுகின்றன."

கடிகாரத்தை நொறுக்கிவிடலாம் போன்று இருந்தது.

//////////////////////////////தொடரும்...///////////////////////

சுகந்தப்ரீதன்
12-11-2008, 10:11 AM
ஆதவா அருமையாக இருக்கிறது இத்தொடர்...

கவிஞனின் அவஸ்தயை மற்றவர்க்கு சொல்வதுபோல் அழகாக எல்லோரும் பாடம் கற்றுத்தருவது..!!

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உம் தொடர்...!!:icon_b:

சிவா.ஜி
12-11-2008, 10:20 AM
எண்ணங்களை வாசிக்க, வாசிக்க என்னென்னவோ தோன்றுகிறது. பலதரப்பட்ட யோசனைகள், எதைப்பார்த்தாலும் அதையொட்டிக் கவிதை வரிகள் 'கொட்டி' விடுவதன் அவஸ்தை கவிஞனுக்கு சகித்துக் கொண்டே ஆக வேண்டிய ஒன்று.

இங்கு விரவிக்கிடக்கும் எண்ணங்களிலிருந்து தெரிந்து கொள்ள பலதும் உண்டு, பழுதும் உண்டு. தொடரட்டும் ஆதவா உங்கள் எண்ணங்களின் இந்த அமர்க்கள அணிவகுப்பு

ஆதவா
12-11-2008, 10:41 AM
ஆதவா அருமையாக இருக்கிறது இத்தொடர்...

கவிஞனின் அவஸ்தயை மற்றவர்க்கு சொல்வதுபோல் அழகாக எல்லோரும் பாடம் கற்றுத்தருவது..!!

வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உம் தொடர்...!!:icon_b:

உண்மையிலேயே அந்த அவஸ்தை இருந்தது. தொடர்ந்து ஒரே நாளில் வரவில்லை அவ்வப்போது விட்டுவிட்டு... தொடர்ந்தாற்போல மூன்று மாதங்களுக்கும் மேலாக கவிதை ஏதும் எழுதவில்லை.. வைராக்கியம். எழுதவே கூடாது என்ற வைராக்கியம்..

அது முட்டி, மோதி.... எத்தனையோ விட்டுவிட்டேன்.. திடீரென்று யோசித்தால்.. அடடா!!! விட்டுவிட்டோமே என்று தோன்றும்.

பாடமா?? ஹா ஹா. புரியாமல் போய்விடுமோ என்ற அச்சம்... புதிதாக இருக்கட்டுமே என்ற எண்ணம்.... அவ்வளவுதான்.


எண்ணங்களை வாசிக்க, வாசிக்க என்னென்னவோ தோன்றுகிறது. பலதரப்பட்ட யோசனைகள், எதைப்பார்த்தாலும் அதையொட்டிக் கவிதை வரிகள் 'கொட்டி' விடுவதன் அவஸ்தை கவிஞனுக்கு சகித்துக் கொண்டே ஆக வேண்டிய ஒன்று.

இங்கு விரவிக்கிடக்கும் எண்ணங்களிலிருந்து தெரிந்து கொள்ள பலதும் உண்டு, பழுதும் உண்டு. தொடரட்டும் ஆதவா உங்கள் எண்ணங்களின் இந்த அமர்க்கள அணிவகுப்பு

அண்ணா. இது சிலசமயங்களில் வரண்ட பாலைவனம் போன்று நீராதாரம் இன்றி இருக்கும்.. அச்சமயங்களில் எண்ணங்கள் நம்மை ஏதும் தூண்டவில்லையே என்று மனம் கொதிக்கும்... இப்படி ஒரே வெள்ளமாய் கொட்டும்போதும் கூட அப்படித்தான்....

பழுதைச் சொன்னால் நான் சரிபார்க்கப்படுவேன் அல்லவா?

சிறுபிள்ளை
12-11-2008, 11:04 AM
எம்.எஸ் உதயமூர்த்தி எழுதிய எண்ணங்கள் என்ற புத்தகம்தான் எனக்கு நினைவு வருகிறது. எங்கு தேடியும் எனக்கு கிடைக்கவில்லை. காணபெற்றவர்கள் அல்லது கிடைக்குப்பெற்றவர்கள் எனக்கு உதவுங்களேன்..

நண்பர் ஆதவாவின் எண்ணங்கள் மிக அருமையாக கவிதை நடையோடு நகர்கிறது.. முதல் பதிப்பை படித்துவிட்டேன்..அடுத்த பதிப்பை விரைவில் படிக்கிறேன்

சிவா.ஜி
12-11-2008, 12:17 PM
பழுதைச் சொன்னால் நான் சரிபார்க்கப்படுவேன் அல்லவா?

பழுது என்று நான் சொன்னது எழுத்தை அல்ல ஆதவா. இப்படியான தொட்டதற்கெல்லாம் கவிதை வரிகள் வந்து முட்டுவது சில நேரங்களில் ஆயாசத்தைக் கொடுக்கும். அதைத்தான் சொன்னேன்.

அனுபவித்தவன் நான்.

ஆதவா
22-11-2008, 08:16 AM
காலை 9.31 முதல் 10.00 வரை

இந்த வேதனைகளை என்னோடு அனுபவித்துவரும் காரணிகளைப் பற்றியும் நான் சொல்லியே ஆகவேண்டும் இல்லையா? நாம் காணும் நொடிகள் அனைத்திலும் கவிதை மறைந்திருக்கிறது. அந்நொடிகளில் மாறும் நமது பார்வைக்குள்ளும் கவிதை இருக்கிறது. சிலசமயம் இது பலருக்கு வரம்.. என்னைப் போன்றவர்களுக்கு சாபம். இந்தக் காரணிகளும் கரு தரும் பெண்மைகளும் என்ன நினைக்கிறார்கள்? ஒரு மெளனத்தின் மனசாட்சி எப்படி இருக்கும்? மெளனம், தான் பேசாமல் சப்தம் எழுப்பாமல் ஊமையாக இருப்பதால் தன்னைத் தாழ்வாக எண்ணுகிறதா? அல்லது தலைகுனிந்து மண்ணுகிறதா? உணர்ச்சிகள், ஏற்றத்தாழ்வாக அடிக்கடி மாறிவருவதால் தன்னைத் தானே ஏமாளியாக நினைக்கிறதா? அல்லது கண்ணீர் விட்டு நனைக்கிறதா?

காரணிகளின் மனம் புரிந்தவனுக்குக் கவிதைகள் கொட்டும்.. அந்த சூழ்நிலையில்தான் நானும் இருந்தேன்.

எனக்கு குளித்தவுடனே சாப்பாடு சாப்பிடும் பழக்கம் என்பதால் உடனடியாக பரிமாறச் சொல்லி திட்டினேன்..
அம்மா எனக்கு சாதம் பரிமாறினாள். முதலில் சாதம், பின் பருப்பு, உருளைக்கிழங்கும் முட்டைக்கோசும் இணைந்த கூட்டு, பின்னர் எனக்கே எனக்காக ஒரு கோப்பையில் மோர்.

எனது சாப்பாட்டுத் தட்டு பழமை வாய்ந்தது. எனது தாத்தாவின் அப்பா வாங்கியதாம்.. இன்னமும் புதிய தட்டாக ஜொலித்தது.

"என் சாப்பாட்டுக்கும்
எனக்குமான இடைவெளியை
பரப்பி நிற்கிறது
பசி"

அன்று உண்மையிலேயே சாப்பாடு குறைவாகவே சாப்பிட்டேன். சாப்பிட்டு முடித்தபின்னர் வயிறு அழுதது.. அடே மடையா, இன்னும் கொஞ்சம் சாப்பிடடா என்று கனத்தது. நானென்ன வேண்டாமென்றா சொன்னேன். சாப்பாடு கவிதைகளில் பசி தான் வலி'ய கவிதை ; இப்பொழுது அதுவும் பேசியது.

"ஒவ்வொரு பசிக்கும்
உயிர் பிச்சை போடுவதே
என் வேலையாக போயிற்று.
சில சமயங்கள்
அதனை காயப்படுத்துகிறேன்.

பசி என்னைப் பற்றி என்ன நினைக்கும்?"

ஒவ்வொரு பசி என்றால் நமக்குள் அத்தனை பசி'கள் அடங்கியிருக்கிறதா என்ன? காலைப்பசி, மதியப்பசி, மாலைப்பசி, இரவுப்பசி... அட, காமப்பசி, உணர்வுப்பசி, கவிதைப் பசி... பசி என்பது எத்தனை எத்தனை... ஒருவேளை அதனை நான் காயப்படுத்தினால்??? என்னைத் தவறாக நினைக்குமோ என்ற பச்சாதாபம். இல்லையில்லை.. பயம்.

ஒருவாறாக எழுந்து சட்டை, பாண்ட் போட்டுக் கொள்ள பீரோவைத் திறந்தேன். மெல்லிய வாசனை என் மூக்கைக் காயப்படுத்தியது... எனக்கு மூக்கில் நுகர்தலில் பிரச்சனை இருப்பதால் மூச்சடக்கிக் கொண்டு, என்னுடைய பேண்ட் சர்ட் மட்டும் எடுக்கும்பொழுது அடுக்கி வைக்கப்பட்டிருந்தவை கலைந்து போனது. அய்யோ, அம்மா பார்த்தால் திட்டுவாளே!??

"ஒவ்வொரு பொருளும்
அதன் நிறை வாயிலாகவோ
எண்ணம் வாயிலாகவோ
துறை வாயிலாகவோ
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
இடைத்தரகர்கள் அவ்வாறில்லை"

அவர்கள் யார் இடைத்தரகர்கள்? அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருள், அல்லது அடுக்கிய நிலையில் சென்று கொண்டிருக்கும் ஒரு செயலின் இடையில் நுழைந்து கெடுப்பவர்கள்.. அவர்கள் முறையாக அடுக்கி வைக்கப்பட்டவர்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் இடையிலேயே நுழைய மறுப்பார்கள்... இதை பல விசயங்களுக்குப் பொருத்தலாம். சரி.. இத்தோடு முடிந்ததா? இல்லையே

"பொருத்தமில்லாத சட்டைக்குள்
நான் நுழைகிறேன்..
வலியால் துடித்தது சட்டை."

உண்மையிலேயே இது கவிதைதானா? இல்லை உளறுகிறோமா? ஆடை உடுத்திய பின் எனக்கு எடுத்து வைக்கப்பட்ட சாப்பாட்டுக் கூடையை கரும் பூணூல் போல அணிந்துகொண்டு, எனது வாகனத்தை உசுப்பினேன்.. வாகனம் புகை கக்கி எனது வீட்டை விட்டு வெளியேறியது.

"வாந்தியெடுக்கும் வாகனங்கள்
இறந்து போகும்
இயற்கை."

முன்பு சொன்னேனே.. யாரோ ஒருவர் அழ, இன்னொருவர் கற்பழிக்கப்பட்டார் என்பது.. அதைப் போன்றதொரு கவிதை.
சரி சரி... அப்படியென்றால் இன்று விடியல் சரியில்லை.. சனியன் பிடித்துவிட்டது என்று எண்ணிக் கொண்டு.... நேரே கிளம்பினேன் அலுவலகத்திற்கு.