PDA

View Full Version : மிச்சமுள்ள கனவுகள்...

தீபன்
08-11-2008, 02:25 AM
அன்புள்ள அண்ணா...

எட்டாத தொலைவிருந்து
எழுதுகிறேன்,
எட்டிவிடும் உன் கரத்தை
கிட்டாத என் ஆசைகளென..!

சோலைக் குயில்களாய் தானிருந்தோம்
சோகமறியா வாழ்ந்திருந்தோம்…
சொந்தங்களின் சோகமே தாகமாக
தேசத்தின் மீட்சியே நோக்கமாக
வீட்டுக்காய் உனைவிட்டு
நாட்டுக்காய் நான் புகுந்தேன்...!

ஆண்டுகள் ஆக ஆக
என் வட்டம் பெரிதானது...
ஒரு தாயோடிருந்தவன்
ஓராயிரம் தாய்களுக்கு மகனானேன்...!
சின்ன குடும்பத்துள் சிறகடித்தவன்
சிந்திடும் கண்ணீருக்கு மருந்தானேன்..!

நேரம் வந்துவிட்டது...
கலங்கடிக்கும் காலனை
கலங்கடிக்க போகிறோம்...
விலங்கான எம்மவரின்
விலங்கொடிக்கப் புறப்பட்டோம்...
பிரியமான உறவுகளின்
பிரிவின் வலியை விட
பிரியமானவர்களுக்கு பிரியமான
உரிமைக்காய் பிரியும் சுகமதிகம்...!

அண்ணா..
தேசத்தின் கடமையை நான் செய்வேன்
என்-
தேகத்தை பிரசவித்தவளை
பார்த்துக் கொள்...

கருவறையில் சுமந்தவளை
ஒருமுறை
விமானத்தில் சுமந்து செல்...

தோள்மீது சுமந்த தந்தையை
சொகுசு
கார்மீது ஏற்றி பவனி வா...

கூடப்பிறந்தவளின் குழந்தை தூக்கி
குள்ளமாமனிவன் பேர்சொல்லி
முத்தமிடு...

காத்திருக்கும் என்னவளுக்கு சொல்-
மீண்டு வந்தால்
கட்டிக் கொள்வேன்,
மாண்டுபோனால்
வாழ்த்திசைப்பேன் - வாழச் சொல்...!

கூடவே கூத்தடித்த கூட்டாளிகளை
கவனித்துக் கொள்,
வாழ்ந்த காலத்தை வசந்தமாக்கியவர்கள்
அவர்கள்...

இவை என் ஆணைகளல்ல-
மிச்சமுள்ள கனவுகள்...!

போகிறேன் தேசத்தின் கனவுக்காய்…
என் கனவை-
நீ சுமப்பாயென்ற நம்பிக்கையுடன்.

-அன்புடன் தம்பி

(கவிதைப் போட்டி - 15 ற்காக எழுதி ஏற்கனவே மன்றில் இடம்பெற்ற என் ஆக்கம்தான் இது... என் பதிவாக இருக்க வேண்டியும் என்னுடைய ஆக்கங்களிற்கான இணைப்பை கொடுப்பதற்கும் பிரத்தியேகமாக ஒப்பீடில்லாத விமர்சனக்களை எதிர்பார்த்தும்... கவிதைப்பகுதியில் இடுகிறேன். - நன்றி.)

தீபா
08-11-2008, 03:52 AM

ஒவ்வொரு போட்டி கவிஞரும் இந்த முறையை பின்தொடர்ந்தால் நன்று. முன்பெல்லாம் கவிதைப்போட்டி கவிதைகளை விமர்சித்தார்கள்.. இப்போது இல்லை. போட்டியாளர்கள், நடுவர்கள் இதை மனதில் கொண்டு, கவிதையை தனித்தனியே பதிக்க ஏற்பாடு செய்யவும்.

தீபன் சார்.. ஏற்கனவே படித்திருந்தாலும் நேரமில்லாத காரணத்தால் என்னால் விமர்சனம் செய்ய முடியவில்லை. கவிதை அருமையாக இருக்கிறது. கனவுகள் கூட வலியை சுமந்து வருகிறது....

தொடர்ந்து வெற்றிநடை போடுங்க...

பாபு
08-11-2008, 04:07 AM
கவிதைப் போட்டிக்காக வந்த எல்லாக் கவிதைகளையும் நான் படித்தேன். இந்தக் கவிதை என்னை நிஜமாய் மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது. ஒரு தேசியப் பார்வை, பாசப் பிணைப்புகள் இவற்றின் வலிகளை மிக அற்புதமாக சொல்லியிருந்தீர்கள்.

என் மனமார்ந்த பாராட்டுக்கள், மறுபடியும்.

வாழ்த்துக்கள் !!

சிவா.ஜி
08-11-2008, 04:11 AM
அபாரமான வரிகள். பாசப்பிணைப்பையும், மண்மீதான நேசப்பிணைப்பையும் ஒருங்கே உணர்த்தும் கவிதை. மனம் நிறைந்த பாராட்டுக்கள் தீபன்.

வசீகரன்
08-11-2008, 06:13 AM
அன்புள்ள அண்ணா...

கூடப்பிறந்தவளின் குழந்தை தூக்கி
குள்ளமாமனிவன் பேர்சொல்லி
முத்தமிடு...

காத்திருக்கும் என்னவளுக்கு சொல்-
மீண்டு வந்தால்
கட்டிக் கொள்வேன்,
மாண்டுபோனால்
வாழ்த்திசைப்பேன் - வாழச் சொல்...!

கூடவே கூத்தடித்த கூட்டாளிகளை
கவனித்துக் கொள்,
வாழ்ந்த காலத்தை வசந்தமாக்கியவர்கள்
அவர்கள்...

இவை என் ஆணைகளல்ல-
மிச்சமுள்ள கனவுகள்...!

போகிறேன் தேசத்தின் கனவுக்காய்…
என் கனவை-
நீ சுமப்பாயென்ற நம்பிக்கையுடன்.

-அன்புடன் தம்பி

கண்களை கலங்க வைத்த கவிதை இது.. உணர்வு மிகுந்த ஒருவனை மனகண்ணிலே நிறுத்துகிறது...

பாராட்டுக்கள் தீபன் அண்ணா...

இளசு
08-11-2008, 10:27 AM
கடமை ...

அது தேசம், மொழி, இனம், கொள்கை, குடும்பநலம், சாதனை வேள்வி --
இப்படி எதற்காயினும்....

விலைகளாய் இப்படி விலையற்ற பலவற்றை ஈடு கொடுத்துத் தீர வேண்டிய சூழல்..

கொடுப்பது ஈரமனமாயும்..
அதில் புதைந்திருப்பவை இப்படி பாசமரங்களாகவும் இருந்தால்...

மனரணப் பள்ளங்களில் இப்படி கவிநீர் கசியும்..

பாராட்டுகள் தீபன்..

-----------------------------

கவிதைப்போட்டிகளில் வந்த படைப்புகளை விமர்சிக்காதவர் பட்டியலில் நானும் இருக்கிறேன் நண்பர்களே..

துரிதமாய் வந்து ஒவ்வொன்றை ரசித்துவிட்டுப் போகும் நிலை - பணிச்சூழலால்..

தொகுத்த பெருவிருந்துகளை சுவைக்க நாள் ஒதுக்க விழைந்து... விழைந்து
காலம் கரைந்து... விருந்தாறிப்போகும் அவலம்..

படைத்த கரங்களிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்..

Keelai Naadaan
08-11-2008, 11:36 AM
வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி மனதை நெருடும் கவிதை.
பணி நிமித்தமாக வெளிநாடு சென்று பணிபுரிபவரின் மனதை வெளிப்படுத்த்துகிறது.
கூடவே தாய் நாட்டு மக்களுக்கு ஆற்ற வேன்டிய கடமை உணர்வைவையும் மனதில் பதிக்கிறது.
வாழ்த்துக்கள் தீபன்

தீபன்
14-11-2008, 04:11 PM
தீபன் சார்.. ஏற்கனவே படித்திருந்தாலும் நேரமில்லாத காரணத்தால் என்னால் விமர்சனம் செய்ய முடியவில்லை. கவிதை அருமையாக இருக்கிறது. கனவுகள் கூட வலியை சுமந்து வருகிறது....

நன்றி தென்றல் மேடம்... விமர்சிக்க நேரமில்லாட்டாலும் படித்து பாராட்டியமைக்கு..!

கவிதைப் போட்டிக்காக வந்த எல்லாக் கவிதைகளையும் நான் படித்தேன். இந்தக் கவிதை என்னை நிஜமாய் மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது. ஒரு தேசியப் பார்வை, பாசப் பிணைப்புகள் இவற்றின் வலிகளை மிக அற்புதமாக சொல்லியிருந்தீர்கள்.

என் மனமார்ந்த பாராட்டுக்கள், மறுபடியும்.

வாழ்த்துக்கள் !!
வலிகள் வலிகளாய் வரிகளில் தெரிய காரணமும் சில வரிகள்தான்....
நன்றி பாபு..!

அபாரமான வரிகள். பாசப்பிணைப்பையும், மண்மீதான நேசப்பிணைப்பையும் ஒருங்கே உணர்த்தும் கவிதை. மனம் நிறைந்த பாராட்டுக்கள் தீபன்.
நன்றி சிவாண்ணா...

கண்களை கலங்க வைத்த கவிதை இது.. உணர்வு மிகுந்த ஒருவனை மனகண்ணிலே நிறுத்துகிறது...

பாராட்டுக்கள் தீபன் அண்ணா...
நன்றி வசீ..

கடமை ...

அது தேசம், மொழி, இனம், கொள்கை, குடும்பநலம், சாதனை வேள்வி --
இப்படி எதற்காயினும்....

விலைகளாய் இப்படி விலையற்ற பலவற்றை ஈடு கொடுத்துத் தீர வேண்டிய சூழல்..

கொடுப்பது ஈரமனமாயும்..
அதில் புதைந்திருப்பவை இப்படி பாசமரங்களாகவும் இருந்தால்...

மனரணப் பள்ளங்களில் இப்படி கவிநீர் கசியும்..

பாராட்டுகள் தீபன்..

நன்றி இளசண்ணா.. விமர்சனமே விமரிசையாய்...!

வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி மனதை நெருடும் கவிதை.
பணி நிமித்தமாக வெளிநாடு சென்று பணிபுரிபவரின் மனதை வெளிப்படுத்த்துகிறது.
கூடவே தாய் நாட்டு மக்களுக்கு ஆற்ற வேன்டிய கடமை உணர்வைவையும் மனதில் பதிக்கிறது.
வாழ்த்துக்கள் தீபன்
நன்றி கீளைநாடான்.....

பொதுவாக அனைவரின் பார்வையிலும் இப் படைப்பு உருக்கமானதாக உணர்வு பூர்வமானதாக பட்டிருக்கிறது... ஆம், நிஜங்களின் வலி அப்படித்தானிருக்குமென்பதற்கு என் படைப்பே எடுத்துக்காட்டாயிருப்பதில் எனக்கு திருப்தி!!!

இப்படைப்பில் எண்ணங்கள் எனதல்ல... கருவுக்கு உரு கொடுத்த பணி மட்டுமே என் பங்கு...!

என் இளவலின் எண்ணங்களை வார்த்தையில் சிறைப்பிடிக்க முயன்றது மட்டுமே என் பணி...!

அதில், வெற்றியும் பெற்றிருக்கிறேன் என்பது போட்டியில் பெற்ற வெற்றியின்மூலமும் இங்கு பெற்ற விமர்சனங்கள் மூலமும் நிதர்சனமாகிறது...!

இன்றைய தினம் அவனில்லாமல் அனுஷ்டிக்கும் அவனின் முதலாவது பிறந்ததினம்...! அதன் நினைவாய் சிலதினங்கள் முன்பாக இப்படைப்பை பதிவிட்டேன்... இன்று பதிலிடுகிறேன்...!

நன்றி நண்பர்களே!

அருள்
15-11-2008, 02:54 AM
படித்து பரவசம் அடைந்தேன்
அன்பே சிவம்
பானு.அருள்குமரன்,
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,
பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

poornima
15-11-2008, 06:40 AM
இந்த கனவுகள் நிறைவேற உங்களுடன் சேர்த்து நானும் பிரார்த்திக்கிறேன்

நெகிழ வைத்த வரிகள்..நன்றிகள் உங்களுக்கு

vasantha
06-01-2009, 05:38 AM
கண்களை பனிக்க வைத்த கவிதை. அவனின் மிச்சமுள்ள கனவுகள் நிறைவேறுமா?

சசிதரன்
06-01-2009, 11:17 AM
மிக மிக சிறப்பான ஒரு கவிதை... கடித வரிகளாய் கவிதை வரிகள் தந்தது... கவிதையை ஆழ்ந்து படித்து நம்முள் உணர ஓர் வாய்ப்பை தந்தது. அருமை தீபன்... :)

கா.ரமேஷ்
06-01-2009, 11:27 AM
பாராட்டுவதற்க்கு வார்த்தைகள் இல்லை நண்பரே...!
அருமையான வரிகளால் உணர்வுபூர்வமாயிருக்கிறது...!
வாழ்த்துக்கள்..!!

nanthini
31-01-2009, 10:14 PM
வணக்கம் தீபன் !
உங்களின் இந்த கவிதையை வாசிப்பதற்கு இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது .உண்மையிலேயே அற்புதமான வரிகள் . வாசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது . உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள் நண்பரே.............