PDA

View Full Version : ஐந்து மணி ரயில்ரங்கராஜன்
04-11-2008, 07:23 AM
ஐந்து மணி ரயில்


மதியம் மூன்று மணி மின்சார ரயிலில் கூட்டம் நிறைய இல்லை காலியாக இருந்தது. வயதானவர்கள்,குழந்தைகள், பெண்கள் என்று அனைவரும்
இருந்தனர்.ரயிலின் குலுக்கல் தாலாட்டை போல இருந்ததினால், அனைவருக்கும் கண்கள் இழுதுக் கொண்டு சென்றது. அப்பொழுது அசெளகர்யமான ஒரு குரலில் பாடல் ஒலித்தது

"இறைவனிடம் கை ஏந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டு பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கை எ..........."

அனைவரும் "ப்ச்ச்ச்" என்று ஒத்த குரலில் எதிர்த்தார்கள், ஆனால் அந்த குருட்டு பாடகன் அதை பற்றி கவலைப்படாமல் பாடிக்கொண்டு இருந்தான். ஓட்ட வெட்டப்பட்ட தலைமுடி, சரியாக ஒதுக்கப்படாத மீசை, அவன் பின்னாடி அவன் தோளை பிடித்து பின் தொடரும் அவன் மனைவி. இவர்கள் இருவரையும் அழைத்துச் செல்லும் நான்கே வயதான பிஞ்சு பெண் குழந்தை. நல்லா வெள்ளையா, ஒல்லியாக இருந்தது, சட்டையில் பட்டன்கள் தப்பு தப்பாக போடப்பட்டு இருந்தது. தொப்பை மட்டும் கொஞ்சம் சட்டைக்கு வெளியில் இருந்தது, மூடி ஆண்பிள்ளை போல செய்யப்பட்டு இருந்தது. பாடலை முடித்தது அந்த சிறுமி அவர்கள் இருவரையும் ஒரு கம்பி பிடித்து நிற்கவைத்து விட்டு, அனைவரிடனும் தன்னுடைய பிஞ்சு விரல்களால் பிச்சை கேட்டாள். குழந்தை நெருங்க அனைவரும் தூங்குவதுப் போல நடித்தார்கள்.

"சார், அம்மா காசு தாங்க" என்று கெஞ்சினால் குழந்தை, பிறந்ததில் இருந்து அவளுக்கு பழக்கப்பட்ட வார்த்தை தான். பெண்கள் பாவப்பட்டு காசு போட்டனர். ஆண்கள்

" ஏன் இந்த ஆளு எதாவது லாட்டரி டிக்கெட்டு விக்க வேண்டியது தானே, வீ மஸ்ட் நாட் என்கரேஜ் திஸ் கய்ஸ் " என்று வியாக்ஞானம் பேசினார்கள்.

அந்த பிச்சை எடுக்கும் குழந்தை, அங்கு பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு குழந்தையை வைத்தக் கண்வாங்காமல் பார்த்தாள். ரயில் நின்றது.

"திவ்யா கண்ணு" என்று குருடனின் குரல்

"தொ ப்பா" என்று குடுகுடுன்னு ஓடினாள், இருவரையும் பத்திரமாக இறக்கினாள். மறுபடியும் வேறு ஒரு ரயில் வேறு ஒரு பாட்டு

"ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப் போல் மாயக்கண்னன்
தூங்குகின்றான் தாலேலோ......."

மறுபடியும் அதே பிச்சை, மறுபடியும் அதே பொய் தூக்கம், அதே காலி டப்பா. மதியம் 4.30 மணி மூவரும் ஒரு மர நிழல் அடியில் உணவுக்காக உக்கார்ந்தனர். அந்த சிறுமி பையில் இருந்த பாக்ஸில் இருக்கும் உணவை அப்பாவுக்கு அம்மாவுக்கு கையில் உருண்டை பண்ணி கொடுத்தாள். இவளும் தன்னுடைய முறை வரும் பொழுது சாப்பிட்டுக் கொண்டாள். அவர்களுக்கு கைக் கழுவ தண்ணீர் ஊற்றினாள்.

"ராஜாத்தி இன்னைக்கு எவ்வளவு வந்து இருக்குமா"

அவள் தன்னுடைய பிஞ்சு விரல்களால் எண்ணி "பத்து ஒரு ரூபா, மூணு ஐஞ்சி ரூபா, அம்மது காசு எட்டு ப்பா"

"அய்யோ 29 ரூபா தானா, என்னங்க இது நம்ம நைட்டு சாப்பாட்டுக்கே பத்தாதே"

அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.

"இல்ல வாசுகி இன்னைக்கு 5.00 மணி ரயில்ல காலேஜ் பசங்க நிறை வருவாங்க, அதுல நிறைய கிடைக்கும் கவலைப்படாதே"

ஐந்து மணி ஆனது, ரயில் தூரத்தில் வரும் சத்தம் கேட்டுது, மூவரும் தயார் ஆனார்கள்.

ரயில் நெருங்க நெருங்க மூவருக்குள்ளும் சந்தோஷம் அதிகமாகியது.

அந்த ஆண் மனதுக்குள் "இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்"

அந்த பெண் மனதுக்குள் "குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்"

அந்த குழந்தை " ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்"

ஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.

Narathar
04-11-2008, 07:28 AM
மனதை தொடும் கதை.....
அவாரவர் கவலை அவரவர்க்கு என்று வைத்து,
கடைசியில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்று சொல்லி எம்மை கவலையில் ஆழ்த்திவிட்டீர்கள்

தொடரட்டும் உங்கள் பயணம்!

ரங்கராஜன்
04-11-2008, 07:30 AM
உடனடி பதிலுக்கு நன்றி நாரதரே

மதி
04-11-2008, 03:10 PM
அட.. போட வைக்கும் முடிவு... மனதை பாரமாக்கி விட்டீர்கள்....
நாரதர் சொன்னது போல் அவரவர் கவலை அவரவர்க்கு
வாழ்த்துகள் மூர்த்தி

சாம்பவி
04-11-2008, 04:00 PM
தாயுமானவள்

அந்த ஆண் மனதுக்குள் "இன்னைக்கு பசங்களை தேவுடா தேவுடா பாட்டு பாடி அசத்திடனும், சாமி இன்னைக்கு அந்த காலேஜ் பசங்க நிறைய காசு போடணும்"

அந்த பெண் மனதுக்குள் "குழந்தைக்கு நல்ல சட்டை துணி எடுக்கனும், இன்னைக்கு காசு வந்ததும்"

அந்த குழந்தை " ப்பா கிட்ட சொல்லி அதே மாதிரி ஒரு பொம்ம வாங்கனும்"

[B]ஆனால் பாவம் மூவரும் மறந்து விட்டார்கள் இன்று ஞாயிற்றுக்கழமை என்று.

யாரிதில் கதாநாயகி / கதாநாயகன் / வில்லன்.. ?

யாரிதில் தாயுமானவள்.. ??
குழந்தையெனில்
அவளின் எதிர்ப்பார்ப்பில்
தாய்மையைக் காட்ட வேண்டாமோ......

அவர்களின்
எதிர்ப்பார்ப்புகளைப்
பொய்ப்பிக்கும் வில்லனாய்
ஞாயிற்றுக் கிழமையெனின்...
தலைப்பில் மாற்றம் வேண்டாமோ... !!!

தலைப்பும் முடிப்பும்
தாமரை இலை தண்ணீராய்... !!

பாரதி
04-11-2008, 04:12 PM
நன்றாக கதை சொல்லும் திறன் உங்களுக்கு இருக்கிறது மூர்த்தி. இக்கதைக்கு இனிய வாழ்த்து. இன்னும் இன்னும் எழுதுங்கள்.

சாம்பவி கூறியது போல தலைப்பும் கதைக்கு பொருத்தமானதாக அமைந்தால் அருமையாக இருக்கும்.

(ஓரிரு இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் நீக்கி விடுங்கள். லாட்டரி சீட்டு விற்பது பற்றிய உரையாடல் நிகழ்காலத்துக்கு சரியானதாக இல்லை மூர்த்தி.)

ரங்கராஜன்
04-11-2008, 04:17 PM
[QUOTE=சாம்பவி;389308]யாரிதில் கதாநாயகி / கதாநாயகன் / வில்லன்.. ?

யாரிதில் தாயுமானவள்.. ??
குழந்தையெனில்
அவளின் எதிர்ப்பார்ப்பில்
தாய்மையைக் காட்ட வேண்டாமோ......

அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.

இதைவிட ஒரு நான்கு வயது குழந்தை என்ன தாய்மையை காட்ட முடியும். அந்த பொம்மையை பற்றி சொல்ல வந்தவள், நிலைமையை புரிந்துக்கொண்டு அமைதியாகிறாள்.


அவர்களின்
எதிர்ப்பார்ப்புகளைப்
பொய்ப்பிக்கும் வில்லனாய்
ஞாயிற்றுக் கிழமையெனின்...
தலைப்பில் மாற்றம் வேண்டாமோ... !!!

தலைப்பை பற்றி தான் முழுக்கதையும் செல்கிறது, முடிவின் ஒத்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என்றால் பாதி கதைகளுக்கு சுபம் என்ற தலைப்பும் மீதி கதைகளுக்கு சோகம் என்ற தலைப்பும் தான் வைக்கமுடியும்

சகோதரி தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பதில் அளித்தேன்

ரங்கராஜன்
04-11-2008, 04:19 PM
நன்றாக கதை சொல்லும் திறன் உங்களுக்கு இருக்கிறது மூர்த்தி. இக்கதைக்கு இனிய வாழ்த்து. இன்னும் இன்னும் எழுதுங்கள்.

சாம்பவி கூறியது போல தலைப்பும் கதைக்கு பொருத்தமானதாக அமைந்தால் அருமையாக இருக்கும்.

(ஓரிரு இடங்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் நீக்கி விடுங்கள். லாட்டரி சீட்டு விற்பது பற்றிய உரையாடல் நிகழ்காலத்துக்கு சரியானதாக இல்லை மூர்த்தி.)

நன்றி
கண்டிப்பாக அடுத்த முறை அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்

சாம்பவி
04-11-2008, 04:49 PM
அந்த குழந்தை எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டது.

இதைவிட ஒரு நான்கு வயது குழந்தை என்ன தாய்மையை காட்ட முடியும். அந்த பொம்மையை பற்றி சொல்ல வந்தவள், நிலைமையை புரிந்துக்கொண்டு அமைதியாகிறாள்.


அவர்களின்
எதிர்ப்பார்ப்புகளைப்
பொய்ப்பிக்கும் வில்லனாய்
ஞாயிற்றுக் கிழமையெனின்...
தலைப்பில் மாற்றம் வேண்டாமோ... !!!

தலைப்பை பற்றி தான் முழுக்கதையும் செல்கிறது, முடிவின் ஒத்த தலைப்பை தான் வைக்க வேண்டும் என்றால் பாதி கதைகளுக்கு சுபம் என்ற தலைப்பும் மீதி கதைகளுக்கு சோகம் என்ற தலைப்பும் தான் வைக்கமுடியும்

சகோதரி தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் பதில் அளித்தேன்

சுபமும் சோகமும்.
கதையின் முடிவில்...
தலைப்பு மட்டும்
கதையின் முடிப்பில் (knot) ....... !!!!

பெண்ணுள் தாயுள்ளம் சுயம்பு.,
அவள் தாய்...
அது ஆணுக்கும் வருமேயாயின்
அவன் "தாயும்" ஆனவன்... !

குழந்தையின் தாய் உள்ளத்தை மட்டுமே
உங்களின் கதை முன்னிறுத்துமேயாயின்.,
நான்கு வரிக்கு முன்பே முடித்திருக்கலாமே..
இச்சிறுகதையின் முடிச்சே
கடைசி வரியில் தானே..... !!

மனித "எதிர்ப்பார்ப்புகளை"
காலம் எள்ளி நகையாடுகிறது... !

தாமரையில் குற்றமில்லை...
தண்ணீரிலும் மாசில்லை......
தாமரையின் மீது தண்ணீர் மட்டும் ஒட்டவில்லை... !!

"எதிர்ப்பார்ப்பு"களோடு
படிக்கும் போது ஒட்டும் பாருங்கள்... !

...

ரங்கராஜன்
04-11-2008, 04:56 PM
அடேங்கப்பா திட்டுவதை (அல்லது) அதிருப்தியை கூட எவ்வளவு அழகாக சொல்கிறீர்கள், நல்ல திறமை, விமர்சனத்திற்க்கு நன்றி, என்னுடைய மற்ற கதைகளையும் படியுங்கள், உங்களின் திட்டுகளை (அல்லது) அதிருப்தியையும் அதிலும் பதியுங்கள், சந்தோஷப்படுவேன், நன்றி

பாபு
05-11-2008, 03:22 AM
நல்ல அருமையான கதை ! டைட்டில் தான் கொஞ்சம் நெருடுகிறது.

ரங்கராஜன்
05-11-2008, 04:43 AM
நன்றி நண்பர்களே
உங்களின் விமர்சனங்களை பதிந்தமைக்கு, உங்கள் அனைவரின் அறிவுரையை ஏற்று, கதையின் தலைப்பை மாற்றியுள்ளேன். ஏனென்றால் கதை சொல்லியைவிட கதை கேட்பவரின் கருத்து மிக முக்கியம்.......................நன்றி

அமரன்
05-11-2008, 08:16 AM
யாசகர்களைக் கண்டால் கோபம், கசிவு, இயலாமை என பலதரப்பட்ட உணர்வலைகள் என்னுள் தோன்றும். அதுவும் சிறார்களெனில் அவை அதிகமாகும். உயிர்வாழ யாசகம் என்பது ஆழமாகப் பதிந்திருப்பதால் மற்றவை எதுவும் உடனடியாக மேலெழுவதில்லை. அவர்களைக் கடந்த பின்னும் அவர்களை நொருக்கி விட்டேன் என்று வேதனைப்படுவதில்லை. சமுதாயம் தந்த சூட்டில் கொந்தளித்துக்கொண்டு இருப்பதால் அந்த நிலையோ அல்லது நான் ஆணாக இருப்பதால் இந்த நிலையோ தெரியவில்லை.

நிமிர வைக்கும் முடிவுக்காக இக்கதையிலும் அவை முதலிருந்து மறைக்கப்பட்டு இருந்ததால் பச்சாபம் மிஞ்சவில்லை. கதாசிரியர் ஆட்சி செய்கிறார். பாராட்டுகள்

சிவா.ஜி
05-11-2008, 08:24 AM
எல்லோரும் சொன்னதைப்போல முடிவுதான் இந்தக்கதையின் சிறப்பு. சொன்னவிதம் அருமை. தலைப்பு மாற்றத்துக்குப் பிறகு பொருத்தமாய் இருக்கிறது. ஆரம்பத்திலேயே வாசித்தேன். தலைப்பு நெருடியது. நான்கு வயது சிறுமி கேட்க வந்ததைக் கேட்காமல் நிறுத்திக்கொண்டதில் என்ன தாய்மை இருக்க முடியும்?

ஆனால் இப்போது மிகப் பொருத்தம். வாழ்த்துகள் மூர்த்தி.

ராஜா
05-11-2008, 08:36 AM
வழமையான பிச்சைக்காரர்களுக்கு, அலுவலகநாள் கூட்டத்துக்கும், ஞாயிறு கூட்டத்துக்கும் வேறுபாடு தெரியும் என்ற அம்சத்தை நினைவில் கொள்ளாமல் படித்தால் சிறந்த சிறுகதைதான்..!

வாழ்த்துகள் மூர்த்தி..!

ரங்கராஜன்
05-11-2008, 09:13 AM
வழமையான பிச்சைக்காரர்களுக்கு, அலுவலகநாள் கூட்டத்துக்கும், ஞாயிறு கூட்டத்துக்கும் வேறுபாடு தெரியும் என்ற அம்சத்தை நினைவில் கொள்ளாமல் படித்தால் சிறந்த சிறுகதைதான்..!

வாழ்த்துகள் மூர்த்தி..!

நன்றி நண்பரே
உங்களின் விமர்சனத்துக்கு, நீங்கள் கூறியது போல இரண்டு கூட்டத்திற்க்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும் தான், ஆனால் அவர்களுக்கு நியாபகம் இல்லை, இன்று வருமானம் போதவில்லை என்று மனைவி கூறியது, அவனுக்கு தற்காலிகமாக ஒரு வழியை உண்டு பண்ணினான், அவனை அறியாமல், அன்று ஞாயிற்றுக் கழமை என்று மறந்து, இது நம் மனிதர்களுக்கு உள்ள ஒரு பொதுவான ஞாபக மறதி, நம்மில் சிலர் மூக்கு கண்ணாடியை நாள் முழுவதும் தேடுவார்கள், மூக்கில் மாட்டிக் கொண்டு அதுபோல.

ராஜா
05-11-2008, 09:20 AM
சரி மூர்த்தி..!

தவறாக எடுத்துக்கொள்ளாமல் பதில் தந்தமைக்கு நன்றி..!

உங்கள் கதைக்கு நான் ஒரு முடிவு நினைத்தேன்.. அது எப்படி என்று கருத்து சொல்லுங்களேன்..

"பாவம்.. அவர்களுக்குத் தெரியாது.. இன்னும் சற்று நேரத்தில் சோதனை அதிகாரிகள் வந்து கொத்தோடு அள்ளி வீசப்போகிறார்களென்று.."

நல்லாருக்கா..? அதிகப்படியென்றால் பொறுத்தருள்க.

ரங்கராஜன்
05-11-2008, 12:51 PM
அன்பு ராஜா
உங்களுடைய முடிவும் நல்ல இருக்கு, ஆனா கொஞ்சம் பாவமா இருக்கு, பாவம் கண்ணு தெரியாதவர்கள் மாட்டிவிட வேண்டாம். தொடரந்து உங்கள் விமர்சனங்களை தாருங்கள்

பி.கு : இப்பொழுது ரயிலில் பிச்சையடுப்பவர்கள், வியாபாரிகள், கடலை விற்பவர்கள் அனைவரும் மாதம் பாஸ் வைத்து இருக்கிறார்கள்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
06-11-2008, 12:28 PM
ஐந்து மணி ரயில் கதையில் நிஜங்களின் பிரதிபலிப்பும், ரயில் வண்டிகளில் நிகழும் யதார்த்தமும் அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. முடிவை ஏமாற்றத்துடன் முடித்திருப்பது நல்ல நயம். அந்த பிஞ்சு மழலையின் ஏக்கம் நெஞ்சை தொட்டுச்சென்றது. பாராட்டுக்கள்

MURALINITHISH
22-11-2008, 10:35 AM
பிஞ்சு கைகளுக்கு ஒரு பொம்மை கூட இல்லை ஏனிந்த அவல நிலை அதை எதிர்பார்க்கும் நாளிலும் ஞாயிற்று கிழமை

சுகந்தப்ரீதன்
24-11-2008, 06:43 AM
மூர்த்தி எதேச்சையாகத்தான் இந்த கதைக்குள் நுழைந்தேன்.. நல்ல எழுத்துதிறமை இருக்கிறது உங்களிடம்.. தொடர்ந்து உங்கள் கதைகளை படிக்க தூண்டும் வகையில் கதையை அமைந்திருக்கிறீர்கள்..!! தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!

கதைக்கு இது நல்ல முடிவுதான்.. ஆனால் நிஜத்துக்கு எப்போது விடிவு..??