PDA

View Full Version : லொள்ளிக்கொல்லும் இரவுகள்..!!-நிறைவடைந்தது



சிவா.ஜி
03-11-2008, 03:13 AM
அத்தியாயம்-1


“சமரசம் உலாவும் இடமே.....
நாம் வாழ்வில் காணா...
சமரசம் உலாவும் இடமே”

இரண்டு இடத்தில் மட்டுமே இந்த பாடல் மிகப் பொருத்தமாய் பொருந்தும். ஒன்று சுடுகாடு மற்றொன்று டாஸ்மாக்.

இப்போது இந்த பாடல் ஒலித்துக்கொண்டிருக்குமிடம் டாஸ்மாக்.

"தலைவரு என்னாவெல்லாமோ இலவசமா தராறு....சரக்குக்கு சைட் டிஷ் இலவசமாத் தந்தா எவ்ளோ நல்லாருக்கும்...குடிமகனுங்க எல்லாம் சேந்து ஒரு மனு குடுக்கனும்ப்பா...”

“மொதல்ல உன் பேரை எலுதறதுக்கு கத்துக்க...அப்பறமா மனு குடுக்கலாம். மனு குடுக்கற மூஞ்சியைப்பாரு...மூதேவி...ஒழுங்கா டவுசரைப் போட்றா பரதேசி..”

“மருந்தடிக்கறதுக்குன்னு முன்ஸிபால்டியில டவுசர்தான் போடனும். அத்த கிண்டல் பண்ணாதன்னா..” அவனுக்கு மட்டுமே கேட்கக் கூடிய சத்தத்தில் மெல்ல முனுமுனுத்தான் அந்த மனு கொடுக்கலாமென்று சொன்னவன்.

“என்னாடா மொன மொனன்னு...சத்தமா சொல்லுடா..”

அந்தக்கூட்டத்தில் இருந்தவர்களின் சற்றே உயர்ந்த ஸ்தானத்திலிருப்பவன் போலிருக்கிறது. அதனால்தான் இவனது மூதேவிக்கும், பரதேசிக்கும் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை.

குடிமகன்களின் கூட்டத்திலிருந்த அந்த பூப்போட்ட பச்சை சட்டைக்காரனை மட்டும் தனியே அழைத்துக்கொண்டு வெளியே வருவோம். அவன்தான் இந்தக் கதையை தொடங்கிவைக்கப் போகிறான்.

35 வயது மதிக்கத்தக்க உருவம். லேசான தொப்பை. அது டாஸ்மாக் சரக்கால் விளைவிக்கப்பட்ட ஒன்று. இரண்டு பிள்ளைகள். ஹொசூரில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகனத் தொழிற்சாலையில் ஃபோர்மென் ஆக வேலை செய்கிறான். நித்தியக் கர்மமான இந்த தாக சாந்தியை முடித்துக்கொண்டு, வீடு திரும்பும் நேரம். சாலையில் யாருமில்லை. இன்றைக்கு கொஞ்சம் லேட்டாகிவிட்டது. வீட்டில் மனைவி வாய் நிறைய வசைச் சொல்லுடன் மணாளனுக்காகக் காத்திருப்பாள்.

மனைவியைப் பற்றி நினைத்ததும் அவனுக்குள் சிரித்துக்கொண்டான்.

“கலுத, கோவமாப் பேசினாலும் சாப்புடாமப் படுக்க விடமாட்டா. அவளாட்டம் ஒருத்தி பொண்டாட்டியா வர்றதுக்கு நான் குடுத்து வெச்சிருக்கனும். மகதான் என் கிட்டயே வரமாட்டேங்கறா. சின்னப்பொண்ணு பாவம் பயந்துக்குது. பயப்படாம என்னா செய்யும்...தெனமும் இப்படிக் குடிச்சிட்டுப் போனா...தூக்கத்துலருந்து எந்திரிச்சி முலிச்சி முலிச்சி பாக்குது. ஒரு நாளைக்காவது அத கூட்டிக்கிட்டு மார்கெட்டுக்குப் போவனும்”

என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவன்...சற்று நின்றான்.

“இவ்ளோ தெளிவா யோசிக்கறனே போட்ட சரக்குப் பத்தலையா....”

இப்படி நினைத்ததும் திரும்பிப்பார்த்தான். கடையை விட்டு வெகுதூரம் வந்துவிட்டது தெரிந்ததும் திரும்பப்போய் இன்னொரு ரவுண்டு ஏற்றிக்கொள்ளும் யோசனையைக் கைவிட்டுவிட்டு தொடர்ந்து நடந்தான்.

நடந்து வந்துகொண்டிருந்த சாலையின் இடது பக்கத்தில் ஏரியைக் கண்டதும் அவனுக்குள் டி.எம்.எஸ் உருவாகினார். சத்தமாக ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே' என பாடிக்கொண்டு வந்தான். இந்த அர்த்த ராத்திரியில் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியம்தான்.

சாலையின் முனை திரும்பியதும், அவனுக்கு உள்ளே சென்ற திரவத்தின் காரணத்தால் அவசரமாய் ஒதுங்கவேண்டியிருந்தது. முடித்துக்கொண்டு நிமிர்ந்தவன், புதருக்குள்ளிருந்து ஏதோ உறுமும் சத்தம் கேட்டதும் நின்றான். போதையில் இருந்தவனுக்கு அதைப் பற்றி அதிகம் யோசிக்க திராணியில்லாமல் அவன் போக்கில் நடந்தான். நான்கு அடிதான் நடந்திருப்பான் அவனை மறித்துக்கொண்டு ஒரு ஜோடி ஒளிரும் கண்கள் தெரிந்தது.

அதிர்ந்தான். கூர்ந்து நோக்கினான். கண்களுக்குப் பின்னாலிருந்த முகம் தெரிந்தது. ஒரு தெருநாய். ஆனால் அந்தக் கண்களில் தெரிந்த வெறி....அவனது மயிர்க்கால்களை சில்லிட வைத்தது. வெகுவாக பயந்தான். ஏற்றியிருந்த சரக்கின் வீரியம் சட்டென வடிந்தது. இருந்தாலும் வலுக்கட்டாயமாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

“ ஏ....சூ....போ....என குனிந்து கல்லை எடுப்பதைப்போல நடித்து விரட்டினான்.

ஒரு அங்குலம் கூட நகராமல் இவனையே முறைத்துப்பார்த்துக்கொண்டிருந்த அந்த முகத்தையும், அதன் விகார வாய் திறப்பில் தெரிந்த கோரைப்பற்களையும், சவ்வு போல வாயிலிருந்த வழிந்த திரவத்தில் தெரிந்த கோரத்தையும் பார்த்ததும் மிகப் பயந்து பின் வாங்கி திரும்பி ஓட எத்தனித்ததும், கல் தடுக்கி மல்லாந்து விழுந்தான்.

ஒற்றை ஜோடிக் கண்கள் இப்போது எட்டு ஜோடிக்கண்களாகியிருந்தது. பின்னாலிருந்து வந்து சேர்ந்து கொண்ட பாக்கி நாய்களும் சேர்ந்து ஒரே சமயத்தில்...

“லொள்” என்ற வயிற்றைப் பிராண்டும் சத்தத்துடன் அவன் மீது பாய்ந்தன. அதில் ஒரு நாய் சரியாக அவனதுக் குரல்வளையைக் குறி வைத்து தன் கோரைப்பற்களை பதித்ததில் சத்தம் போடாமல் செத்துப்போனான்.


விடியற்காலையில் ஒரு சொம்பைத்தூக்கிக்கொண்டு, ஏரிக்கரைக்கு ஒதுங்க வந்த முனுசாமி, பிய்த்துப்போட்ட மாமிச துண்டங்களாகக்கிடந்த, ஃபோர்மேனைப் பார்த்ததும், அடிவயிறு மேலும் கலங்கி, அய்யோ என அலறிக்கொண்டு ஓடினான்.


தொடரும்

Narathar
03-11-2008, 03:40 AM
என்ன சிவா..........
காமெடியா ஆரம்பிச்சு டெரரா முடிச்சிருக்கீங்க?

தொடருங்கள் பார்க்கலாம்........

சிவா.ஜி
03-11-2008, 04:03 AM
உடனடிப் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றி நாரதரே. தொடர்ந்து வாருங்கள். எல்லாம் கலந்திருக்கும்.

ரங்கராஜன்
03-11-2008, 04:22 AM
அந்த ஃபோர்மேன் தான் கதையின் நாயகன் என்று நினைத்தேன், அவனையே தொடர் கதையின் ஆரம்பத்திலே சாவடிச்சீட்டீங்களே, இனிமே எப்படி இந்த கதையை நகர்த்த போறீங்கனு ஆவலா காத்து இருக்கேன்.

அமரன்
03-11-2008, 08:01 AM
நவரசம் ததும்பும் முதற்பாகம். நகைச்சுவை முலாம் பூசிய இலவசங்களில் இளக்காரத்தில் உழைப்பின் முக்கியத்துவம் நிழலாக தெரிகிறது. எலுத்துப் பிலைகள் பாத்திரத்தை ஏந்துகின்றன. கட்டாக்காலி வெறிநாய்கள் எந்தவகைக் கதை என்று ஊகிக்க தடை விதிக்கின்றன .

தொடருங்கள் சிவா.:icon_b:

மதுரை மைந்தன்
03-11-2008, 08:27 AM
கதயை பிராமதமாக துவக்கி இருக்கிறீர்கள். மேற்கொண்டு எப்படி கதை போகப் போகிறது என்று ஆவலாய் காத்திருக்கிறேன்.

( டாஸ்மாரக் கடையில் குடிகாரரகளின் பேச்சைப் படித்ததும் கடந்த அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நிகழ்த்திய அருமையான காமெடி நினைவுக்கு வருகிறது.)

சிவா.ஜி
04-11-2008, 03:52 AM
முதல் போனியே அந்த ஃபோர்மென்தான் மூர்த்தி. இனி வரும் அத்தியாயங்களில் லொள்ளர்கள் செய்யப்போவது என்ன என்பதை சொல்ல இருக்கிறேன். நன்றி மூர்த்தி.

‘கட்டாக்காலி வெறிநாய்கள்' புதிய பதம் இது எனக்கு. அப்படியென்றால் என்ன அமரன்?(தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்...) உடன் வருவதற்கு மிக நன்றிகள் அமரன்.

தங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி மதுரை மைந்தன்(இனி இப்படித்தானே மன்றில் உலா வருவீர்கள்?)

வீட்டில் தொலைக்காட்சியில்லை. அந்த நிகழ்ச்சியைப் பார்க்க முடியவில்லை. இணையத்திலிருந்து இறக்குமதி செய்துதான் பார்க்க வேண்டும்.

Narathar
04-11-2008, 03:59 AM
‘கட்டாக்காலி வெறிநாய்கள்' புதிய பதம் இது எனக்கு. அப்படியென்றால் என்ன அமரன்?(தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்...) .

அப்படியென்றால் தெருவில் சுற்றித்திரியும்
அநாதரவான நாய்கள் என்றுதானே அர்த்தம் அமரா???

சிவா.ஜி
04-11-2008, 05:58 AM
அப்படியென்றால் தெருவில் சுற்றித்திரியும்
அநாதரவான நாய்கள் என்றுதானே அர்த்தம் அமரா???

ஈழத்தமிழ் வழக்கா இது நாரதரே...? எப்படியோ புது தமிழ்ச் சொல்லைத் தெரிந்துகொண்டேன். நன்றி நாரதர்.

தாமரை
04-11-2008, 10:47 AM
கால்கட்டுப் போடாத இளைஞர்களை (நம்ம மதி மாதிரி ...ஹி ஹி) கட்டாக்காலி என அழைக்கலாமா?

அமரன்
04-11-2008, 11:33 AM
கால்கட்டுப் போடாத இளைஞர்களை (நம்ம மதி மாதிரி ...ஹி ஹி) கட்டாக்காலி என அழைக்கலாமா?
ஹி...ஹி...
அடிக்"கடி" நான் திட்டு வாங்குவது இப்"பிடி"த்தாங்கோவ்..

சிவா.ஜி
06-11-2008, 03:07 AM
அத்தியாயம்-2
மோடி மஸ்தான் வித்தையிலிருந்து மூலிகை மருந்து விற்பவர்கள் வரை கூட்டம் கூடி பார்க்க இன்னும் நிறையபேர் இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாக ஃபோர்மெனின் சிதைக்கப்பட்ட உடலையும் காண ஒரு கூட்டம் கூடியிருந்தது. ”அய்யோ பாக்கவே கோரமா இருக்கே” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் மீண்டும் அந்த உடலைப் பார்த்துக்கொண்டுதானிருந்தனர்.

பேருந்துப் பயணத்தின் இடையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், சற்று தூரத்தில் ஏதேனும் விபத்து நிகழ்ந்திருக்குமென யூகித்து, சிதறிக்கிடக்கும் உடலை அல்லது உடல்களைக் காண ஆவலுடன் ஜன்னல் வழி வெளிநீளும் மனித வக்கிரம், இங்கே கூடியிருந்தவர்கள் முகத்திலும் தெரிந்தது.

விஷயம் சொல்லப்பட்டு காவல்துறை அதிகாரிகள் வந்து சேர்ந்துவிட்டனர். உடலைப் பார்த்ததும், முதல் செய்தியாக அவர்கள் மனதில் பட்டது, ஒரு அதிகாரியின் வார்த்தைகளில் வெளிவந்தது.

“சிறுத்தை அடிச்சிருக்கும்”

தளி, அனேக்கல் பக்கமிருந்த காடுகளிலிருந்து இப்படி அடிக்கடி சிறுத்தைகள் வந்து யாரையாவது அடித்துவிட்டுப் போவது சகஜமாய் நிகழும் ஒன்று என்பதால், அவர்களின் வழக்கமான வழிமுறைகளைப் பின் பற்றினார்கள்.

அலறிக்கொண்டு வந்த ஃபோர்மெனின் மனைவியும், உடன் வேலை செய்பவர்களும் வந்து சேர்வதற்குள் பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டுபோய் விட்டார்கள்.

கோரைப் பற்களால் கடிக்கப்பட்டு, மிகுதியான ரத்தப்போக்கால் மரணம் என்ற, ஸ்மால் அடித்துவிட்டு பிணப்பரிசோதனை செய்த அரசாங்க மருத்துவரின் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, ஃபோர்மெனின் மனைவியிடமிருந்து வாங்கிகொண்ட 1500 ரூபாய்க்கு அந்த சான்றிதழைக் கொடுத்துவிட்டு தன் கடமை முடிந்ததென போலீஸும் போய்விட்டது.



விகாஸ் நகர் என்பது, நகரத்தைவிட்டு சற்றே....அல்ல சற்று அதிக தூரம் தள்ளி புதிதாய் வளர்ந்துவரும் குடியிருப்பு பகுதி. 90 களில் ஒரு மனையை சல்லிசாக இருபதாயிரத்துக்கு வாங்கி, இரண்டு லட்சத்தில் வீடு கட்டியிருந்தார்கள். தற்போது 20 லட்சம் பெறும்.

வீடுகட்ட வசதியில்லாதவர்கள், அப்போதைக்கு ஒரு முதலீடாக வாங்கிப்போட்டவர்கள் தங்கள் மனைகளை காலியாக வைத்திருந்தனர். மற்ற வீடுகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானமாக அந்த காலி மனைகள் உதவிவந்தன.

அன்று முன் மாலையில் தொடங்கிய கிரிக்கெட் ஆட்டம் அக்டோபர் மாத 6 மணி முன்னிருட்டில் பந்து தொலைந்ததில் முடிந்தது. பந்துக்கு சொந்தக்காரன் எட்டாவது படிக்கும் சதீஷ். இரண்டு பேரை துணைக்கு வைத்துக்கொண்டு, புதராக வளர்ந்திருந்த முட் செடிகளுக்குள் சென்று தேடினான். அரை மணிநேர தேடலில் அந்த பந்து கிடைத்தது.

பந்துடன் வீட்டுக்குப்போனவனை அம்மாவும் அப்பாவும் ஒரு சேர வரவேற்றார்கள். முதலில் அம்மா....

“வாங்க சார்....வெளையாட்டெல்லாம் முடிஞ்சுதுங்களா...ஸ்கூல்ல இந்த ஹோம்வொர்க்குன்னு என்னவோ சொல்றாங்களே அதெல்லாம் செய்யனுன்னு ஏதாவது நெனப்பிருக்குங்களா...?”

அம்மாவின் கிண்டலை உணர்ந்துகொண்டு எதுவும் பேசாமல் சும்மா இருந்தவனைப் பார்த்து, அவனுடைய அப்பா...

“சரி போடா. போய் கைக்காலைக் கழுவிட்டு ஹோம்வொர்க் பண்ணு”

அவனிடம் சொன்னதும் பாத்ரூமுக்கு ஓடினான்.
ஓடினவனை நிறுத்தியது அம்மாவின் குரல்....

“நில்லுடா...எங்க உன் வாட்ச்...?”

அம்மா கேட்டதும்தான் அவன் கையைப் பார்த்தான். போன வாரம்தான் துபாயிலிருந்து வந்த மாமா கொடுத்த வாட்ச். அப்போதே அம்மா சொன்னார்... “ ஸ்ட்ராப் வெச்ச வாட்ச்தான் இவனுக்கு லாயக்கு. செயின் இருக்குற வாட்ச்சுன்னா எங்கயாவது தொலைச்சிடுவான்ன்னு”.....அய்யோ எங்க போச்சு....!!!

“என்னடா முழிக்கிற...எங்க தொலைச்சே...?”

“இல்லம்மா...வெளையாடும்போது எங்கியாவது......”

“வுழுந்திருக்குமா...? தொரைக்கு அதுகூட தெரியல இல்ல...?”

“ சரி விடும்மா...வேணுன்னா தொலைச்சான். வெளையாடும்போது எங்கயாவது விழுந்திருக்கும்...”

அப்பாவின் பரிவான பேச்சைக் கேட்டதும், குற்ற உணர்ச்சி மேலோங்க உடனே அம்மாவிடம்,

“ இரும்மா போய் பாத்துட்டு வரேன். அங்கதான் எங்கயாவது வுழுந்திருக்கும்..”

“ இந்த இருட்டுல தேடப்போறியா...? ஒன்னும் வேணாம்...போ போய் முகம் கைகால் கழுவிட்டு ஹோம்வொர்க் பண்ணு. காலையில பாத்துக்கலாம்.”

அம்மா சொன்னதைக் கேட்டாலும் அவனுக்குள் உறுத்தல் அதிகமாக இருந்தது. அந்த வாட்ச் அவனை அவனது வகுப்பில் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியிருந்தது.

“டே...இந்த வாட்சுல டெம்பரேச்சர் எல்லாம் தெரியுதுடா....”

“ஆமாடா...அதோட...நார்த் சௌத் எல்லாம் காமிக்குதுடா...”

“டிஜிடலும் இருக்குடா...”

இப்படி வகுப்புத்தோழர்களின் வாயைப் பிளக்க வைத்த வாட்ச்சைக் காணாதது அவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

பக்கத்து டெஸ்க் ஸ்டெல்லாக்கூட ஓரப்பார்வையால் அதைப் பார்த்ததைக் கவனித்து விட்டு கையை நன்றாகத் திருப்பிக் காட்டியதை நினைத்து நினைத்து.......ஒரு முடிவுக்கு வந்தான். யாரும் எடுத்துக் கொண்டு போவதற்குள் போய் அதை எடுத்து வந்துவிட வேண்டும்.

ஒரே பிள்ளையாய் இருப்பதால், அவனுக்கென்று தனியறை. எல்லா வசதிகளுடனும். அம்மா அப்பாவின்மேல் கால் போட்டு தூங்கும் சுகம் தவிர்த்து. கைக்கடிகாரத்தின் நினைவில் தூங்காமல் விழித்திருந்தான். காலை எழுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த அலாரத்தில் நேரம் நள்ளிரவு ஒருமணியைக் காட்டியது.

எழுந்தான். சத்தமில்லாமல் நடந்து கூடத்தைக் கடந்து கதவைத் திறந்தான். வெளியேறினான். தனது கைக்கடிகாரத்தைத்தேடி புதர் இருந்த திசை நோக்கி நடந்தான்.

கையோடு கொண்டு வந்த டார்ச் லைட்டின் ஒளி உமிழலில் தன் கைக்கடிகாரத்தைத் தேடிக்கொண்டிருக்கும்போது சலசலப்பை உணர்ந்தான்.அலட்சியம் செய்துவிட்டு மீண்டும் தேடினான். டார்ச் வெளிச்சத்தில் மினுக்கிய கைக்கடிகாரத்தைக் கண்டதும் குபீரென்று சந்தோஷம் மனதில் ஏற்பட்டது. எடுத்துக் கட்டிக்கொண்டான்.புதரை விலக்கிக் கொண்டு திரும்ப வரும்போது மீண்டும் சலசலப்பு. நின்று உற்று நோக்கினான். புதருக்கு அப்பாலிருந்து ஒளிர்ந்த அந்தக் கண்களைக்கண்டதும் விதிர்த்து நின்றான்.


தொடரும்.

மதுரை மைந்தன்
07-11-2008, 12:10 AM
ரொம்ப விறு விறுப்பாக போயக் கொண்டிருக்கிறது கதை. இன்னும் எத்தனை பேர்களை கொல்லப் போகிறதோ இநத வெறி நாய்கள்.

செல்வா
07-11-2008, 04:25 AM
ஹ்ம்ம்.... எதாவது தப்பு பண்ணுவீங்க சுட்டி காட்டலாம்னு நெனச்சு பின்னூட்டம் போடுறத தள்ளிப்போட்டுட்டே வந்தா.........
வாய்ப்பே இல்ல.... உண்மையிலே ரொம்ப நல்லா இருக்கு.... எந்தப் பிழையும் இல்லாம ஒரு மர்மநாவல்..... ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் மனம் பதறுகிறது. முதல் அத்தியாய முடிவில் கொலையைச் சொல்லி இரண்டாம் அத்தியாய இறுதியில் அதைச் சொல்லாமல் முடித்தவிதம் அடுத்து என்ன நடக்க இருக்கிறதோ என்ற பரிதவிப்பை கூட்டுகிறது....
உண்மையிலேயெ கலக்கல் அண்ணா.....

கண்மணி
07-11-2008, 04:36 AM
ஏனுங்கண்ணா! இதுவரைக்கும் குத்து மதிப்பா எத்தனைக் கொலைங்க பண்ணியிருப்பீங்க? கதைங்கள்ளதான் கேட்கிறேன். நிஜத்தில இல்லை..

அமரன்
07-11-2008, 07:16 AM
எதிர்ப்பார்ப்பைத் தூண்டும் விதத்தில் உள்ளது. தொடருங்கள் சிவா. அந்த சிறுவனுமா கொலையுணப் போகிறான்??

மதி
08-11-2008, 03:07 AM
அண்ணே...அழகா கொண்டு போறீங்க....
லொள்ளிக்கொல்லும் இரவுகள்.... திகில் கதை மன்னன் சிவா.ஜி னு பட்டமே குடுத்துடலாம்.

அடுத்து என்னன்னு ஆவலோடு..

சிவா.ஜி
08-11-2008, 03:07 AM
உங்களின் தொடர்ந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி மதுரைவீரன்.

சிவா.ஜி
08-11-2008, 03:12 AM
ஹ்ம்ம்.... எதாவது தப்பு பண்ணுவீங்க சுட்டி காட்டலாம்னு நெனச்சு பின்னூட்டம் போடுறத தள்ளிப்போட்டுட்டே வந்தா.........


வாங்க நக்கீரரே.....உங்களைப்போன்றவர்களாலத்தானே நல்ல எழுத்தாளர்கள் உருவாகிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்லும் ஆரோக்கியமான பின்னூட்டங்கள்தான் எழுத்தை வளர்க்கும். அந்த வகையில் மன்ற உறவுகளின் பின்னூட்டங்கள் மனம்நிறைந்து பாராட்டப்படவேண்டியவை.

நன்றி செல்வா.

சிவா.ஜி
08-11-2008, 03:18 AM
ஏனுங்கண்ணா! இதுவரைக்கும் குத்து மதிப்பா எத்தனைக் கொலைங்க பண்ணியிருப்பீங்க? கதைங்கள்ளதான் கேட்கிறேன். நிஜத்தில இல்லை..

குத்துமதிப்பாவா.....ஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்பு...? சரி விடுங்க....எத்தனை கொலைன்னு எனக்கு சரியாத்தெரியல.....(கதையிலத்தான்.)

நிஜத்துல பெரியக் கொலைன்னா....நான் கதை எழுதறதுதான். :lachen001:

சிவா.ஜி
08-11-2008, 03:21 AM
நன்றி அமரன்.

நன்றி மதி.

தொடர்ந்து நீங்களனைவரும் அளிக்கும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

இளசு
08-11-2008, 06:59 AM
முற்றிலும் புதிய களம்..

சரளமான இயல்பான நடை..

சிவாவின் கதைகள் - சொல்லி அடிக்கும் வெற்றிக் கதைகள்..

இத்தொடரும் அவ்வகையே!

வாழ்த்துகள் சிவா!

கில்லியாய் அடிச்சு ஆடுங்க!

சிவா.ஜி
08-11-2008, 07:11 AM
ஆஹா...இளசுவின் வார்த்தைகள் ஒரு லட்சம் ஊக்க மாத்திரை சாப்பிட்ட உற்சாகத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி இளசு. மன்ற உறவுகளுக்குப் பிடிக்கும் வகையில் எழுதுவது நிஜமாகவே ஒரு சவால்தான். அந்த முயற்சியில் தொடருகிறேன். தட்டிக்கொடுப்பதும், குட்டிச் சொல்லுவதும் உங்களைப் பொறுத்தது.

சிவா.ஜி
09-11-2008, 05:02 AM
அத்தியாயம்-3


லண்டனின் ஒரு பரபரப்பான சாலையோர நடைபாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோதுதான் கீர்த்திவாசனுக்கு அந்த தலைசுற்றல் ஏற்பட்டது.அறுபத்தி ஐந்து வயது என்றாலும், இந்த தள்ளாட்டத்துக்கு வயது காரணமல்ல. அருகிலிருந்த ஒரு மரத்தூணை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.

கீர்த்திவாசன் லண்டன் வந்த கதை பெரிய கதை. காதல் கதை. ஹோசூருக்கும் தளிக்கும் இடையில் ஒரு கிராமத்துக் கோவிலின் குருக்களாய் இருந்த காலத்தில் ஏற்பட்ட பிரணயக்கதை.நல்ல செக்கச் சிவந்த உடல். ஆரோக்கியமான மரக்கறி உணவால் அம்சமான உடற்கட்டு.அதோடு அவர் அட்சரசுத்தமாய் உச்சரிக்கும் சமஸ்க்ருத மந்திரங்கள் கேட்பவர்களை மெய்மறக்கவைக்கும்.

அப்படி மெய்மறந்தவர்களில் ஒருத்திதான் மார்க்ரெட். லண்டனிலிருந்து தன் தோழனுடன் ஊர் சுற்றிப்பார்க்க இந்தியாவுக்கு வந்தவள்,எப்படி அந்த இத்துனூண்டு கிராமத்துக்கு வந்தாள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் வந்தவள், அந்த சிறியக் கோவிலுக்கு வெளியில் நின்று கீர்த்திவாசனின் மந்திரத்தைக் கேட்டு மயங்கினாள். ஆளைப் பார்த்ததும் மேலும் மயங்கினாள்.

அங்கேயே சில நாட்கள் தங்குவதாய் அவள் சொன்னதும் அவளது தோழன் திருவண்ணாமலைக்குப் போய்விட்டு வருவதாய் சொல்லிச் சென்றுவிட்டான். அங்கு தங்கியிருந்த ஒரு வாரகாலத்தில் காலையும் மாலையும் தவறாமல் கோவிலில் ஆஜராகிவிடுவாள்.தொடர்ந்து அவளைக் கவனித்து வந்த கீர்த்திவாசன் கோவில் பிரசாதத்தை வெளியில் கொண்டுவந்து கொடுப்பான்.

ஒருநாள் அவள் தன் எண்ணத்தை அவனிடம் சொன்னதும் அவனுக்கு திகீரென்றது. ஆச்சாரமான குடும்பம். வேற்று மதத்துக்காரி, அதுவுமில்லாமல் மேலை நாட்டுக்காரி தன்னை திருமணம் செய்துகொள்வதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் மறுப்புத் தெரிவித்தான். அவள் கேட்பதாயில்லை. உனக்காக நான் எந்த அளவுக்கும் என்னை மாற்றிக்கொள்ளத்தயார் என்று உறுதியாக சொன்னாள். யோசிக்க அவகாசம் கேட்டான். காத்திருப்பதாக சொல்லிவிட்டு சென்றாள்.

அவனுக்கும் அவள் மேல் ஒரு ஈடுபாடு இருந்தது. ஆனால் அவளைக் கல்யாணம் செய்துகொண்டு அங்கேயே குடும்பம் நடத்துவது சர்வ நிச்சயமாய் சாத்தியமில்லை என்பதும் அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அதற்கும் அவள் ஒரு வழியைச் சொன்னாள். அவனையும் தன்னுடன் லண்டன் அழைத்துச் செல்வதாக. அவள் காதலையும், உறுதியையும் பார்த்து, அவளது விருப்பப்படி அவளுக்கு அந்தக் கோவிலிலேயேத் தாலி கட்டினான்.

அடுத்த நாளே அவள் புறப்பட்டுச் சென்றுவிட்டாள். கூடிய சீக்கிரம் அவனை அங்கு அழைத்துக்கொள்வதாக உறுதியளித்துவிட்டு, அவனை இறுகத் தழுவி விடைபெற்றாள்.சொன்னபடியே அவளிடமிருந்து பணமும், அனுமதியும் அவனை வந்தடைந்தது. லண்டன் வந்து விட்டான்.

இதுதான் கீர்த்திவாசன் லண்டன் வந்தக் கதை. அவன் குடும்பத்தார் அவனுக்கு சிரார்த்தமே செய்துவிட்டனர். இத்தனை வருடங்களாக எந்தவித தொடர்புகளும் தன் குடும்பத்தாருடன் வைத்துக்கொள்ளாத கீர்த்திவாசனுக்கு இப்போதெல்லாம் அவர்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவனுடைய அப்பாவுக்கு இப்போது 90 வயதாகிறது. மார்க்ரெட் இறந்தபிறகு குழந்தைகள் ஏதுமில்லாத தனிமை அவரை சோர்வடைய வைத்தது.

போதாதற்கு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பண்ணை வீட்டுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது நாய் ஒன்று அவரது காலின் பின்புறத்தில் அழுத்தமாய்க் கடித்ததிலிருந்து இப்படி அடிக்கடி தள்ளாட்டம் வந்துகொண்டிருந்தது.இறந்தால் நம் மண்ணில்தான் இறக்கவேண்டுமென்ற எண்ணத்தில்,எப்படியும் ஊருக்குப் போகவேண்டுமென்று உறுதிசெய்துகொண்டு, தன் எல்லா சொத்துக்களையும் விற்றுவிட்டு அடுத்த வாரமே இந்தியா கிளம்பிவிட்டார்.


அவரது கிராமத்துக்கு வந்தபோது ஊரேக் கூடிநின்று வேடிக்கைப் பார்த்தது.அக்டோபர் மாதத்தின் முதல் வாரம். அந்தக் கிராமமே குளிராய் இருந்தது. ஆனால் கீர்த்திவாசனின் வீடு மட்டும் உஷ்ணத்தில் தகித்தது. கிழவர் தன் மகனைப் பார்க்கக்கூட விரும்பவில்லை. பெற்றவளும் தன் கணவனின் கொள்கைக்குக் கட்டுப்பட்டு அமைதியாய் இருந்தாள்.

கால்கடுக்க பல மணிநேரம் அங்கே நின்றுகொண்டிருந்தார் கீர்த்திவாசன். கிழவரின் மனது கொஞ்சமும் இளகவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க கால்போன போக்கில் நடக்கத் தொடங்கினார். நடந்து நடந்து அவர் வந்து சேர்ந்த இடம் ஒரு காடு. ஹோசூர் நகரிலிருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இருட்டிவிட்டது. சோர்வாய் அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.


தொடரும்

இளசு
09-11-2008, 06:44 AM
மார்கரெட் என்ற பெயருக்கு முத்து என பொருள்.. முத்தானவள்தான் இந்த மார்கரெட்..

கதைக் களம் விரிந்து மீண்டும் குவிந்து - கவனம் ஈர்க்கிறது.
காட்சி விவரிப்புகள் கண் முன் விரிகிறது..

உங்கள் எழுத்துகள் வசீகரிக்கின்றன சிவா..

பாராட்டுகள்..

-------------------------

90 வயதாகியும் 65 வயது மகனைப் பார்க்காமல் தண்டிக்கும் கிழவர்..
அந்த வயதிலும் அவருக்குக் கட்டுப்பட்டு, கட்டுண்ட கிழவி..

மனக்கிணறுகளின் ஆழங்கள் மாயமானவை..

சிவா.ஜி
09-11-2008, 08:28 AM
மார்கரெட் என்ற பெயருக்கு முத்து என பொருள்..
-------------------------

90 வயதாகியும் 65 வயது மகனைப் பார்க்காமல் தண்டிக்கும் கிழவர்..
அந்த வயதிலும் அவருக்குக் கட்டுப்பட்டு, கட்டுண்ட கிழவி..

மனக்கிணறுகளின் ஆழங்கள் மாயமானவை..


ஆம் மனக்கிணறுகளின் ஆழம் மாயைதான். அந்தக் கிழவருக்கு பெற்ற மகனைவிட வைராக்கியம் பெரிது, இல்லக்கிழத்திக்கோ கணவனின் கொள்கை பெரிது.

பாவம் கீர்த்திவாசன்.

மிக்க நன்றி இளசு.

மதி
09-11-2008, 08:30 AM
இரண்டாவது பகுதியின் திகிலை அப்படியே விட்டுவிட்டு வேறொரு இடத்தில் கதை ஆரம்பித்து.. அழகாய் கொண்டு போயிருக்கிறீர்.

மேலும் கதை எவ்வாறு நகரப்போகுதென்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்

மதுரை மைந்தன்
09-11-2008, 08:43 AM
கதையை இந்தியாவிலிருந்து வெகு அற்புதமாக லண்டனுக்கு எடுத்துக் சென்று பிறகு இந்தியாவிற்கே திரும்ப கொண்டு வந்து நல்ல சஸ்பென்ஸில் தொடரும் போடடிருக்கிறீர்கள். ஆங்கிலத்தில் Roald Dahl என்ற ஒரு எளுத்தாளர் பல திகில் கதைகளை எழுதியுள்ளார். நான் அவைகளை விரும்பி படித்திருக்கிறேன். நீங்கள் தமிழில் ஒரு Roald Dahl.

செல்வா
09-11-2008, 09:10 AM
ஆங்கிலத்தில் Roald Dahl என்ற ஒரு எளுத்தாளர் பல திகில் கதைகளை எழுதியுள்ளார். நான் அவைகளை விரும்பி படித்திருக்கிறேன். நீங்கள் தமிழில் ஒரு Roald Dahl.
சரியாச் சொன்னீங்க மதுரைவீரன் அண்ணா......
கதையை மனதுக்குள்ள ரொம்ப அலசிப் பிழிந்து சாறு எடுத்து மன்றத்தில் பதிவதாகத் தோன்றுகிறது. ரொம்ப நல்லாருக்கு கதை நடையும்... கதையின் போக்கும். அந்தக் கைக்கு என்பேர சொல்லி தங்கக் கடிகாரம் வாங்கிப் போட்டுக்கோங்க...:)

சிவா.ஜி
09-11-2008, 09:38 AM
நீங்கள் தமிழில் ஒரு Roald Dahl.

இந்தப் பாராட்டுக்குத் தகுதியானவனா எனத் தெரியவில்லை. நீங்களே ரசித்த ஒரு எழுத்தாளர் அவரென்றால் நல்ல எழுத்தாகத்தானிருக்கும். (நான் வாசித்ததில்லை. உண்மையில் அவர் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். மன்னிக்கவும் மதுரைவீரன். ஆங்கில புதினங்கள் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை.)

உங்களின் இந்தப் பாராட்டு என் பொறுப்பை மேலும் உயர்த்துகிறது. பயமாய் உள்ளது. மிக்க நன்றி மதுரை மைந்தரே.

சிவா.ஜி
09-11-2008, 09:39 AM
மேலும் கதை எவ்வாறு நகரப்போகுதென்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்

இந்த ஆவலும், ஊக்கமும்தானே எனக்கு உந்துசக்தியாக உள்ளது மதி. மிக்க நன்றி.

சிவா.ஜி
09-11-2008, 09:41 AM
அந்தக் கைக்கு என்பேர சொல்லி தங்கக் கடிகாரம் வாங்கிப் போட்டுக்கோங்க...:)

சமத்து.....!!! கிட்டக்க இருக்கும்போது இதை சொல்லலியே சொல்லியிருந்தா நேரா வந்திருப்பேன்....இப்பகூட இன்னும் எனக்கு சவுதி விசா பாக்கியிருக்கு. வந்துடுவேன் ஆமா.

ரொம்ப நன்றி செல்வா.

சிவா.ஜி
10-11-2008, 05:33 AM
அத்தியாயம்-4

ஒளிர்ந்த கண்களைப் பார்த்து பயந்து ஓடிய சதீஷை அந்த கொலைகார நாய்கள் கூட்டமாய்த் தாக்கியது.


காலையில் அந்த விகாஸ்நகரே புதருக்குப் பக்கத்தில் கூடியிருந்தது. அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து செத்துப்போயிருந்தான் சதீஷ். அவனது கைக்கடிகாரத்தை வைத்துதான் அவன் யாரென்று தெரிந்து அவனது அம்மாவும் அப்பாவும் அழுத அழுகையில் மொத்த ஜனமும் அதிர்ந்து அழுதது.

மீண்டும் காவல்துறையினர் வந்தார்கள். ஃபோர்மேன் இறந்து இரண்டு நாட்களில் மற்றுமோர் கோர மரணம். இந்தமுறை சதீஷின் உடலைப் பார்த்த அவர்களுக்கே மிக வருத்தமாய் இருந்தது. இந்த மரணத்துக்கும் அந்த இல்லாத சிறுத்தையையே பொறுப்பாக்கினார்கள். ஆனால் இந்தமுறை கொஞ்சம் சீரியஸாகவே வழக்கை கையாண்டார்கள். வனத்துறையினர் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களின் ஆராய்ச்சியில் சிறுத்தை வந்துபோனதற்கான எந்தவித தடயங்களும் கிடைக்கவில்லை. அதனால் இது நிச்சயமாய் சிறுத்தை அல்ல என்று உறுதியாக சொன்னார்கள்.

போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவரை சற்று கவனமாக ஆராயும்படிக் கேட்டுக்கொண்டார்கள். அவரும் ஸ்மால் அடிக்காமல் பொறுப்புடன் ஆராய்ந்ததில், மரணம் நிகழ்ந்தது சிறுத்தையால் அல்ல என்பது தெரிந்தது. தன் சந்தேகமாய் அவர் குறிப்பிட்டிருந்தது ஒன்றுக்கும் மேற்பட்ட விலங்குகளால் தாக்கப்பட்டு மரணம் ஏற்பட்டிருக்கலாம். அந்த விலங்கு நாயாகக்கூட இருக்கலாம். ரத்தத்தை பரிசோதித்தவர், அதில் கண்ட கிருமிகள் நாயின் உடலில் இருக்கும் ரேபிஸ் கிருமிகளோடு ஒத்துப்போவதாய் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

போலீஸார் அதிர்ந்தனர். கொன்றது நாயாக இருக்குமென்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.இனி எப்படி இந்த வழக்கைத் தொடருவது என்று புரியாமல் விழித்தார்கள். சின்னாபின்னமாக்கப்பட்ட உடல்களைப் பார்த்தால்,தாக்கியவை வெறிபிடித்த நாய்கள் என்பது தெரிந்தது. இப்போது எங்கே அலைந்துகொண்டிருக்கின்றனவோ...? அடுத்த தாக்குதலை எங்கே நிகழ்த்த உள்ளனவோ என அச்சத்துடன் இருந்தார்கள்.


நீண்ட தூர நடைக்குப் பிறகு, காட்டில் சோர்வுடன் அமர்ந்த கீர்த்திவாசனுக்கு திடீரென்று தலை வலித்தது. நெஞ்சையடைத்தது. தலை நரம்புகள் தெறித்து வலித்தது. மூச்சுவிடமுடியாமல் சட்டென்று இறந்தார்.

ஃபோர்மென் வெறிநாய்களால் குதறப்பட்டு இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட கீர்த்திவாசனின் மரணம் தான் இந்தக்கதையின் முதல் மரணம். இரண்டு மரணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. எப்படி என்று கேட்பவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் ஹோசூரில் நடத்தப்பட்ட நாய்வேட்டையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நேரே களத்துக்குப் போவோம்.

சமீபகாலமாக நாய்களின் தொல்லை வீதிகளில் அதிகரித்திருப்பதை திருவாளர் பொதுஜனம் மனுவாக நகராட்சி ஆனையருக்கு கொடுத்திருந்தார்கள். அப்போதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட ஆனையர், அவரது மகனின் ஆடுசதையை நாய்க்கடித்ததும் அவர் சதை ஆடியது. அப்போது வீறுகொண்டு பிறப்பித்த உத்தரவுதான் அந்த நாய்வேட்டை.


மொத்த நகராட்சி கடைநிலை தொழிலாளர்களும் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். அதுவரை இப்படிப்பட்ட ஆவேச நாய் வேட்டையை அந்த நகர மக்கள் பார்த்திருக்கவில்லை. துரத்தி துரத்திப்பிடித்தார்கள். பாசக்கயிறுடன் வாகனத்தில் வரும் எமனை அன்று நேருக்கு நேர் சந்தித்தன தெருநாய்கள். முடிந்த வரை ஓடி ஒளிந்துகொள்ள ஆசைப்பட்டு, உயிர் பயத்தில் வாலை இரண்டு பின்னங்கால்களுக்கிடையில் சொருகிக்கொண்டு அவை ஓடியதைப் பார்க்க பாவமாக இருந்தது.

இருந்தும் அந்த கிங்கரர்கள் விடவில்லை. ஆனையரின் நேரடி ஆனையல்லவா. ஒரு அரசாங்க ஊழியனுக்கு மேலதிகாரிதானே எல்லாம் வல்ல இறைவன். அதுவுமில்லாமல் இவர்கள் கடைநிலை ஊழியர்கள். தன் எஜமானின் ஆனைக்கு அப்படி ஆவேசமாய்க் கட்டுபட்டதில் எந்த வியப்புமில்லை.

ஆயினும் எட்டு நாய்கள் மட்டும் மிக புத்திசாலித்தனமாக அவர்கள் பார்வையிலிருந்து தப்பித்து காட்டுப்பக்கம் ஓடிவிட்டன.உயிர் பிழைக்கும் வேகத்தில் யாருக்குமே ஏற்படும் அந்த நேர அதிபுத்திசாலித்தனம் அவைகளுக்கும் வந்தது. ஹோசூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்தக்காட்டுக்குள் வந்து பதுங்கிக்கொண்டன. உயிர்பயத்தில் பசிகூட உணராமல் இரண்டு நாட்களாகப் பதுங்கியிருந்தன.

அந்த நேரம் அதுவரை உணராத மனித வாடையால் மெள்ள வெளிவந்தன. அகோரப்பசியை இப்போது அவைகள் உணர்ந்தன.
இறந்து விழுந்துகிடந்த கீர்த்திவாசன் அவைகளுக்கு இரவு உணவாகத் தெரிந்தார். ஒரே நேரத்தில் அத்தனை நாய்களும் ஒருசேர வெறியுடன் அந்த உடல்மீது பாய்ந்தன.

இறைவன் சேவை செய்து, காதலில் விழுந்து கடல்தாண்டிப் போனவர், தாய் மண்ணில் இறக்க விரும்பி திரும்பிவந்தார். இறந்தும் போனார். ஆனால் இப்படி அடையாளம் தெரியாத அனாதைப்பிணமாக இறந்தது மிகக் கொடுமை. அவர் கொண்டுவந்த எதையும் கொண்டுபோகவில்லை. அனைத்தையும் இங்கேயே விட்டுப் போய்விட்டார். தன் உடலிலிருந்த வைரஸ் உட்பட.

தொடரும்.

தாமரை
10-11-2008, 05:38 AM
நாய்க்கடி - ரேபிஸ் மனிதன் ஆறு மாதங்கள் தாங்குவானா சிவாஜி?

சிவா.ஜி
10-11-2008, 05:45 AM
நாய்க்கடி - ரேபிஸ் மனிதன் ஆறு மாதங்கள் தாங்குவானா சிவாஜி?

அது ரேபிஸ் இல்லை தாமரை. விளக்கம் பின்னால் வரும் அத்தியாயங்களில் கிடைக்கும்.

அமரன்
10-11-2008, 08:19 AM
கதையின் முடிச்சு அவிழ்க்க முடிகிறது என்றாலும் உங்களை நம்ப முடியாது சிவா. திடீரென ஒடித்து எம் நினைப்பை அடித்து தூக்கி விட்டு சாகசம் காட்டி மகிழ்ச்சிப்படுத்தி விடுவீர்கள். ம்ம்.. காத்திருக்கிறேன் ஆவலுடன்.

மதி
10-11-2008, 08:31 AM
அதே ஆவலுடன்...

சிவா.ஜி
10-11-2008, 09:14 AM
அமரன், மதி உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்ய நிச்சயம் முயலுவேன். ஊக்கத்துக்கு நன்றி தோழமைகளே.

மதுரை மைந்தன்
10-11-2008, 09:41 AM
சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் I am Legend எனற ஆங்கில படத்தை பார்ததேன். அதில் நியூ யார்க நகரம் முழுவதும் ஒரு பயங்கர வைரஸ் அட்டாக்கினால் பாதிக்கப்ட்டு அங்கிருக்கும் மனிதர்களும் நாய்களும் ரத்த வெறி பிடித்த வாம்பையர் கொல்லிகளாக் மாறுகிறார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு டாக்டர் வைரஸ்கான மாற்று மருந்தைக் கண்டு பிடித்து அதன் மூலம் அவரும் அவரது செல்ல நாயும் சாதாரணமாக வாழ்கிறார்கள். அவர் வெளியில் சென்று நிலைமையை ஆராயும்போது இந்த வாமபையர்கள் அவரை அட்டாக் செய்கிறார்கள். அதிலிருந்து அவர் தப்பி விடுகிறார். ஆனால் அவரது நாயை அந்த வாம்பையர்கள் கடித்து கொன்று விடுகின்றன. அவர் அந்த மாற்று மருந்தை தங்களது உயிரைக் காத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் வாழும் மக்களுக்கு அவரைப போல உயிர் தப்பிய ஒரு மகளிரிடம் ஒப்படைத்த பின்னர் வாம்பையரால் கொல்லப் படுகிறார்.

உங்களது கதையும் அததகைய வைரஸ் சம்பந்தமானது என்று நினைக்கிறேன். கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.

சிவா.ஜி
10-11-2008, 11:29 AM
அத்தனை பெரிய அளவில் நான் சிந்திக்கவில்லை மதுரை வீரரே. ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டையாக என் புத்திக்கு எட்டியதையே சிந்திக்க முடிகிறது. இதெல்லாம் சும்மா லோக்கல் நாய்கள். இருந்தாலும் நீங்கள் எழுதியதைப் படித்தபிறகு அந்த படத்தைப் பார்க்கும் ஆவலேற்படுகிறது. ஆனால் இந்தக் கதை முடிந்ததும் தான் பார்க்கவேண்டும்.

ஊக்கப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி மதுரைவீரன்.

சிவா.ஜி
13-11-2008, 05:01 AM
அத்தியாயம்-5


கோவை பொறியியற் கல்லூரி ஒன்றின் பேனரோடு அந்த பேருந்து பெங்களூருவின் பிரதான சாலையில் வந்துகொண்டிருந்தது.தங்களின் தொழிற்சாலை காணல் வைபவத்தை முடித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர். வாழ்க்கையின் சுமைகள் என்னவென்று தெரியாத பருவத்திலிருந்த மாணவ மாணவிகள் அந்த நேரத்து சந்தோஷத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் பாடிய பாடல்களுக்கு ஆட்டம் அதிர்ந்தது.

கேட்டுக்கொண்டே பேருந்தை ஓட்டிய சன்முகத்துக்கு நாற்பது வயதாகிறது. திருச்செங்கோடு சொந்த ஊர். பதினாலு வயதில் ஒரு லாரியில் க்ளீனராக சேர்ந்து 22 வயதில் ஸ்டீயரிங் பிடித்தவர். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வந்தவர். மாணவ மாணவிகளின் சந்தோஷத்தை வெகுவாக ரசித்தார்.

படிப்பு முடிந்ததும் ஒரு சுமையுள்ள உலகம் காத்துக்கொண்டிருப்பது தெரிந்தும் இந்த நேரத்து சந்தோஷத்தை அனுபவிக்கும் அந்த பிள்ளைகளை, அவர்களது கலாட்டாக்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். 'நாக்க மூக்கா' வுக்கு அவர்கள் போட்ட குத்துக்கு, பேருந்தே ஆடியது. ஆடிப்பாடிக் களைத்த அவர்கள் தங்கள் பேராசியரை பசியுடன் பார்த்தார்கள். சிறிய புன்முறுவலுடன் ஓட்டுநரைப்பார்த்து,

“வழியில நல்ல ஓட்டலாப் பாத்து நிறுத்துங்க சன்முகம், பசங்க ரொம்ப பசியா இருக்காங்க” என்று அந்த பேராசியர் சொன்னதும்,

“ சார், மடிவாலாவுல ஒரு நல்ல ஓட்டல் இருக்கு. அங்க நிறுத்தறேன். சாப்பிட்டுட்டு கிளம்பலாம். அதைத் தாண்டிட்டா, எல்லாரும் கொள்ளையடிப்பானுங்க...” உபரித்தகவலை தெரியப்படுத்திக்கொண்டே சொன்ன சன்முகத்தின் சொல்லை ஆமோதித்தார்கள் பேராசியர்களும், பேராசிரியைகளும்.


சாப்பாட்டுக்குப் பிறகு கிளம்பிய அந்தப் பேருந்தில் சற்று நேர சல சலப்பிற்குப் பிறகு அமைதி நிலவியது. களைப்பாக அனைவரும் தூங்கிவிட்ட நிலையில், சன்முகம் சீராக பேருந்தை ஓட்டிக்கொண்டு போனார். தன் பொறுப்பை உணர்ந்தவராக வெகு ஜாக்கிரதையாக அந்தப் பேருந்தை அவர் செலுத்திக்கொண்டிருக்கும் பாங்கைப் பார்த்து நிம்மதியுடன் கண்ணயர்ந்தார்கள் பேராசிரிய பெருமக்கள்.

எலக்ட்ரானிக்ஸ் சிட்டி தாண்டியதும் போக்குவரத்தில் ஒரு தேக்கம். நேரம் பத்து மணி. ஊர்வலமாக நகரத்தொடங்கிய அந்த நேர போகுவரத்தை சன்முகம் எதிர்பார்க்கவில்லை. சற்றே எரிச்சல்படத் தொடங்கினார். மெள்ள ஊர்ந்து, ஊர்ந்து அத்திபெலேவை அடந்தபோது மணி பதினொன்றே முக்கால். இடையில் விழித்துப்பார்த்த பேராசியர் ஒருவர்,

“சன்முகம் இப்ப எங்கப்பா இருக்கோம்” என்று கேட்டதற்கு,

“ஏன் சார் அந்தக் கொடுமையைக் கேக்கறீங்க...? இன்னும் அத்திப்பள்ளியையே தாண்டல. இந்நேரம் கிருஷ்ணகிரி தாண்டி தர்மபுரிக்குப் பக்கத்துல போயிருக்கனும்...என்ன எழவு ட்ராஃபிக்கோ..அசோக் லேலெண்ட் கிட்ட ஏதோ ஆக்ஸிடெண்ட் போலருக்கு. இப்போதைக்கு கிளியர் ஆகாது.நீங்க தூங்குங்க சார், நான் வேற ஏதாவது வழியிருக்கான்னு பாக்கறேன்” என்று சொன்ன சன்முகத்துக்கு தான் லாரி ஓட்டிய காலத்தில், அத்திப்பெலேவிலிருந்து குறுக்கு வழியில் ஹோசூர் போன நினைவு வந்தது.

நத்தையாய் நகர்ந்த போக்குவரத்திலிருந்து பிரிந்து வலப்பக்கம் போன சில கார் களோடு தன் பேருந்தையும் செலுத்தினார். அத்திப்பெலேவிலிருந்து வலப்பக்கம் பிரிந்த அந்த சாலை டி.வி.எஸ் வழியாக ஹோசூர் வந்தடையும். எட்டு கிலோமீட்டர்கள் அதிகம் தானென்றாலும் இத்தனை போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க அதுதான் நல்ல வழி. சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் இருக்கும். இருந்தாலும் பரவாயில்லை,காலை நேரத்தோடு பிள்ளைகளை கோவை கொண்டு சேர்க்கவேண்டுமென நினைத்து அந்தப் பாதையில் தன் பேருந்தை செலுத்தினார் சன்முகம்.

சற்றுதூரம் சென்றவுடன் இடதுபக்கத்தில் ஒரு சாலை பிரிந்தது. அதைப் பார்ப்பதற்குள் நேர் சாலையில் சற்றுதூரம் கடந்துவிட்டார். அந்த பாதையை உபயோகித்து நீண்ட நாட்களாகிவிட்டதால் அவரால் எந்த பிரிவில் செல்ல வேண்டுமென்பதை முடிவு செய்ய முடியவில்லை. ஒரு குத்துமதிப்பாக பேருந்தை செலுத்திக்கொண்டிருந்தார்.

மீண்டும் ஒரு சாலை இடதுபக்கம் பிரிவதை தூரத்திலிருந்தே பார்த்ததும் தன் பேருந்தின் வேகத்தைக் குறைத்தார். சாலையோர பலகை...

அனேக்கல் 1 கி.மீ, ஹோசூர் 13 கி.மீ

என்று காட்டியதும்தான் அவருக்குத் தெரிந்தது தான் தவறானப் பாதையில் வந்துவிட்டது. அவசரமாய் இடதுபக்கம் திருப்பி ஹோசூருக்கு செல்லும் பாதையில் பேருந்தை செலுத்தினார். நேரம் பனிரெண்டரை ஆகிவிட்டிருந்தது.

வாகன நடமாட்டமே இல்லாத அந்த சாலையில், பேருந்து போய்க்கொண்டிருந்தது. பேராசிரியர் ஒருவர் வெகு நேரமாய் பொறுத்துப்பொறுத்துப்பார்த்துவிட்டு இயலாமல்,

“சன்முகம் வண்டியைக் கொஞ்சம் ஓரம் கட்டுப்பா. தாங்க முடியல. முட்டுது.” என்றதும்....

பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார்.

பேராசியர் இறங்குவதைப் பார்த்ததும், தொடர்வினையாக இன்னும் சில மாணவர்களும் இறங்கினார்கள். சில மாணவிகளும் இறங்கி, தூரப் புதர்களுக்கருகே போனார்கள்.


தொடரும்

ரங்கராஜன்
13-11-2008, 06:36 AM
அழகாக ஒவ்வொரு அத்தியாய நிகழ்வுகளையும் சேர்த்து இருக்கிறீர்கள், தொடருங்கள்

சிவா.ஜி
13-11-2008, 07:13 AM
நன்றி மூர்த்தி. ஒரு நல்ல கதாசிரியரின் பாராட்டுக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

சிவா.ஜி
17-11-2008, 07:23 AM
அத்தியாயம்-6


இன்ஸ்பெக்டர் முருகேசன் நல்ல உறக்கத்திலிருந்த இரவு பதினொன்றரைக்கு அந்த அழைப்பு வந்தது. சற்றே எரிச்சலுடன் அலைபேசியை எடுத்து அழைப்பது யாரெனப் பார்த்தார். தங்கையின் பெயரைப் பார்த்ததும் இந்த நேரத்தில் ஏன் அழைக்கிறாள்.....ஏதோ பிரச்சனை என்று உள்ளே ஒரு எண்ணம் தோன்ற, உடனே சம்மதத்தை அழுத்தி அலைபேசியைக் காதுகளுக்குக் கொடுத்தார்.

“அண்ணா....நல்ல தூக்கத்துல இருந்திருப்ப...சாரிண்ணா....வீட்டுக்காரரோட தம்பி விஷம் குடிச்சிட்டான். ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்திருக்கோம்...அங்கருந்துதான் பேசறேன். நீ கொஞ்சம் வரமுடியுமாண்ணா?

“அடக்கடவுளே ப்ளஸ் ட்டூ படிக்கிற பையனுக்கு என்ன பிராப்ளம்மா...எதுக்கு இப்படி செஞ்சான்?”

“தெரியலண்ணா....கண்ணு முழிச்சிப் பாத்தான்னாதான் விவரம் தெரியும். அனேக்கல் போலீஸ் வந்திருக்காங்க. கன்னடத்துல என்னென்னமோ கேக்கறாங்க நீ வந்தா கொஞ்சம் நல்லாருக்கும்...”

“இதோ ஒடனே பொறப்பட்டு வர்றம்மா....பையனுக்கு இப்ப எப்படி இருக்கு?”

“வாந்தி எடுக்க வெச்சுட்டாங்க. பயப்படறதுக்கு ஒன்னுமில்லன்னு சொல்றாங்க. இன்னும் மயக்கத்துலதான் இருக்கான். வர்றதாணன்னா?”

“வர்றம்மா...இன்னும் முக்கா மணி நேரத்துல அங்க இருப்பேன்.

ஸ்டேடியத்துக்குப் பக்கத்திலிருந்த ஒரு புது நகரில் இருக்கும் அந்த வீட்டிலிருந்து தன் ஜீப்பை எடுத்துக்கொண்டு முருகேசன் புறப்பட்ட போது பதின்னொன்று ஐம்பது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவர், மீண்டும் இறங்கி வீட்டுக்குள் சென்று தன் கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டார். சமீபகால வெறிநாய்களின் பிரச்சனையால் இரவு நேரங்களில் வெளியே போக நேர்ந்தால் மறக்காமல் கைத்துப்பாக்கியை உடன் எடுத்து செல்வது நிர்பந்தமாகிவிட்டது.

வாகன நடமாட்டமில்லாத அந்த குறுகிய சாலையில் சற்றே வேகத்துடன் தன் ஜீப்பை செலுத்தினார். ஆனால் சிறிது தூரத்திலேயே வேகத்தைக் குறைக்கவேண்டியிருந்தது. குண்டும் குழியுமான சாலை அந்த வேகத்தை அனுமதிக்கவில்லை. எரிச்சலடைந்தார்.

அனேக்கல் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவருக்கு கட்டிக்கொடுத்த ஒரே தங்கை. அவள்மீது முருகேசனுக்குப் பாசம் அதிகம். அந்தத் தங்கை தன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறாள். இந்த சாலை என்னடாவென்றால் என்னை வேகமாகச் செல்ல விட மாட்டேங்குதே....என்று முடிந்தவரை மேடு பள்ளங்களைத் தவிர்த்து ஓட்டிச் சென்றார்.



இருட்டில் இயற்கை உபாதைக்கு இறங்கிய ஆசிரியர்களும், மாணவர்களும் பாரத்தை குறைத்துக்கொண்டு பேருந்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். சன்முகம் பேருந்துக்கு அப்புறமாக சென்று டார்ச்லைட் வெளிச்சத்தில் டயர்களை சோதித்துக் கொண்டிருந்தார். மற்றவர்களை விட்டு சற்று தூரமாகப் போயிருந்த மூன்று மாணவிகள் திரும்பி வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

புதர்களிலிருந்து அந்த மூவரும் அலறிக்கொண்டு ஓடிவந்தார்கள். திடுக்கிட்டுப்போய் அந்த திசையைப் பார்த்த மற்றவர்கள் அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள். மிகப் பயங்கரமான அந்த வெறி நாய்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தன. பேருந்தை நெருங்குவதற்குள் அவற்றில் ஒன்று ஒரு மாணவியின் மேல் பாய்ந்தது. அலறலைக் கேட்டு ஓடி வந்த சன்முகம் தன் கையில் இருந்த ஒரு அடி நீள உலோக டார்ச்லைட்டுடன் சற்றும் யோசிக்காமல் அந்த இடத்துக்கு விரைந்தார்.

அதற்குள் மற்றொரு நாய் இன்னொரு மாணவியைத் தாக்கியது. வெகு வேகமாகச் சென்ற சன்முகத்தின் பின்னால் மாணவர்களும் ஓடினார்கள். சென்ற வேகத்தில், அந்த மாணவின் மேல் கால்களை வைத்து கடிக்க தயாராக இருந்த நாயை டார்ச்சால் வேகமாக அடித்தார் சன்முகம்.

‘காள்...' என்ற சத்தத்துடன் அந்த நாய் தள்ளிப்போய் விழுந்தது. மீண்டும் சுதாரித்துக்கொண்டு அவரைப் பார்த்து வெறியுடன் பாய்ந்தது. மாணவர்களும் ஓடி வந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் அத்தனை நாய்களை எதிர்பார்க்கவில்லை. வெறியேறிய அந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் அவர்கள் செயலற்று நின்றுவிட்டார்கள்.

சற்று நேரத்தில் அந்த இடமே போர்க்களம் ஆகிவிட்டது. பேருந்தில் இருந்தவர்கள் எதுவும் செய்ய முடியாமல் கண்ணுக்கு முன் நடக்கும் அந்த வெறித்தாக்குதலை வேதனையோடு பார்த்துக்கொண்டு உள்ளேயே அமர்ந்திருந்தார்கள்.

அப்போது ‘டுமீல்' என துப்பாக்கிச் சத்தம் கேட்டதுடன் சக்திவாய்ந்த ஹெட்லைட்டுகளின் வெளிச்சம் அந்த நாய்க்கூட்டத்தின் மேல் பாய்ந்தது. மீண்டும் ஒருமுறை அந்த துப்பாக்கி வெடித்ததும், அந்த வெறிநாய்கள் அங்கிருந்து பின்வாங்கி ஓடிவிட்டன.

ஜீப்பிலிருந்து இறங்கிய முருகேசன் ஓடி வந்து கீழேக் கிடந்தவர்களைப் பார்த்தார். ஒரு மாணவியும், இரண்டு மாணவர்களும் அதிக சேதாரமடைந்திருந்தார்கள். சன்முகத்தின் காது பாதிக் கிழிந்து தொங்கிய நிலையிலிருந்தது. முருகேசன் அவசரமாய் தன் கைக்குட்டையை எடுத்து கிழிந்து தொங்கிய காதை சேர்த்துவைத்துக்கட்டினார்.

அதற்குள் பேருந்திலிருந்தவர்களும் இறங்கிவந்து தாக்கப்பட்டவர்களை கவனிக்கத் தொடங்கினார்கள். ஒரு பேராசியரிடம் வந்த இன்ஸ்பெக்டர்....

“இந்த நேரத்துல இங்க எப்படி வந்தீங்க...? சரி டிரைவர் எங்க?”

“அதோ அவர்தாங்க டிரைவர்” என்று வந்துகொண்டிருந்த சன்முகத்தைக் காட்டினார்.

“நான் தான் சார் தப்பு பண்ணிட்டேன். ட்ராஃபிக்லருந்து தப்பிக்கறதுக்காக இந்த வழியில வந்துட்டேன். அய்யோ புள்ளைங்களுக்கு இப்படி ஆயிடிச்சே....அந்த சனியன் பிடிச்ச நாய்ங்க இப்படி கொதறிப்போட்டுட்டு போய்டிச்சீங்களே....”

தலையில் அடித்துக்கொண்டு அழுத சன்முகத்தை தோளில் அணைத்தவாறே....

“சரி விடுங்க. இப்ப உங்களால வண்டி ஓட்ட முடியுங்களா?”

“தாராளமாங்க.....சார்...நீங்க போலீஸ்ங்களா..?

“ஆமா ஹோசூர் டவுன் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர். ஒரு நிமிஷம் இருங்க”

என்று சொல்லிவிட்டு தன் கைப்பேசியை எடுத்து ஆம்புலன்ஸை விரைவாக வரச் சொன்னார். மீண்டும் தன் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு அந்த இடத்துக்கு சில காவலர்களை வரச் சொன்னார்.

ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்ததும், காயமடைந்த அனைவரையும் அதில் ஏற்றி விரைவாக பெங்களூரு செயிண்ட் ஜான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி சொல்லிவிட்டு தானும் பின் தொடர்வதாக சொல்லி, அங்கிருந்தவர்களிடம்,

”நீங்க எல்லாம் பஸ்ஸுக்குள்ளேயே இருங்க. போலீஸ்காரங்க இப்ப வந்துடுவாங்க. அவங்க வந்ததும் நீங்களும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துடுங்க”

படபடவென்று சொல்லிவிட்டு தன் ஜீப்பில் தாவியேறிக்கொண்டவர் ஆவேசத்துடன் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார்.

தொடரும்

ஆதவா
17-11-2008, 07:32 AM
லொள்ளிக் கொள்ளும் இரவுகள் என்றதும் நான் என்னவோ சிரிப்புக் கதையோ என்று நினைத்து இதுநாள் வரையிலும் படிக்காமல் விட்டுவிட்டேன்..

ஒவ்வொரு அத்தியாயத்தின்போதும் அந்தக் காட்டுக்குள் சென்று கடி வாங்குவதைப் போன்ற உணர்வு இருக்கிறது..

திகில் படங்களைப் பார்க்கும்பொழுது சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க நேரிடுவோம். அதைப் போன்றதொரு உணர்வு இக்கதையைப் படிக்கும்பொழுது ஏற்படுகிறது. வாழ்த்துக்கள் திரியாசிரியர் திகில் சிவா.ஜி அண்ணாவுக்கு..

அந்த லண்டன் கதையை மட்டும் முன்னமே வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அல்லது சொன்ன இடத்தில் அவசரம் இல்லாமல் நிதானம் கையாண்டிருக்கலாம்.. இது என் கருத்து.

முக்கியமாக டயலாக்.. அந்த வாய்ச்சொல்லின் வளைவுக்கு ஏற்ப எழுத்துக்களை வடிவமைத்தது உங்களது ப்ளஸ் பாயிண்ட். சில இடங்களில் ஸ்தம்பித்தேன். சில இடங்களில் காயமும் பட்டேன். (:))

மதுரை மைந்தன்
17-11-2008, 07:57 AM
கதையைப் படிக்கும் போது நேரில் நடப்பது போல் உணர்கிறேன். தேர்ந்த கதாசிரியர்கள் தான் அப்படி எழுத முடியும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
17-11-2008, 08:16 AM
அந்த லண்டன் கதையை மட்டும் முன்னமே வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அல்லது சொன்ன இடத்தில் அவசரம் இல்லாமல் நிதானம் கையாண்டிருக்கலாம்.. இது என் கருத்து.

முக்கியமாக டயலாக்.. அந்த வாய்ச்சொல்லின் வளைவுக்கு ஏற்ப எழுத்துக்களை வடிவமைத்தது உங்களது ப்ளஸ் பாயிண்ட். சில இடங்களில் ஸ்தம்பித்தேன். சில இடங்களில் காயமும் பட்டேன். (:))
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் ஆதவா. லண்டனுக்கு எப்படி வந்தார், ஏன் திரும்ப இந்தியா வந்தார் என்று மட்டுமே சொல்ல நினைத்தேன். அதனால் சுருக்கத்தைக் கையாண்டேன். அதே போல மூன்றாவது அத்தியாயமாகத் தானே வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாக என்றால் முதலிலேயே தாக்குதல் எதனால் என்று தெரிந்துவிடுமே.

முக்கியமாய் ஆதவாவைக் காயப்படுத்தியது எது எனத் தெரிந்தால் உடனடியாக மாற்றிவிடுவேன். தயவு செய்து சொல்லுங்கள் ஆதவா.

இப்படியானதொரு பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்.

சிவா.ஜி
17-11-2008, 08:17 AM
கதையைப் படிக்கும் போது நேரில் நடப்பது போல் உணர்கிறேன். தேர்ந்த கதாசிரியர்கள் தான் அப்படி எழுத முடியும். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

உங்களின் தொடர் ஊக்கம் மனதுக்கு மிக நிறைவாக இருக்கிறது. மிக்க நன்றிகள் மதுரைவீரரே.

தாமரை
17-11-2008, 08:20 AM
முக்கியமாய் ஆதவாவைக் காயப்படுத்தியது எது எனத் தெரிந்தால் உடனடியாக மாற்றிவிடுவேன். தயவு செய்து சொல்லுங்கள் ஆதவா.

இப்படியானதொரு பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்.

அது அவங்க தெரு நாய் சிவாஜி. ஏற்கனவே டூ வீலர்களில் போனாலும் நாயை மட்டும் கண்டால் நடுக்கம் கிடையாதுன்னு உதறுகிற உடம்போட வருகிறவங்களை ஏன்தான் இப்படி நடுங்க வைக்கிறீங்களோ!

சிவா.ஜி
17-11-2008, 08:23 AM
அது அவங்க தெரு நாய் சிவாஜி. ஏற்கனவே டூ வீலர்களில் போனாலும் நாயை மட்டும் கண்டால் நடுக்கம் கிடையாதுன்னு உதறுகிற உடம்போட வருகிறவங்களை ஏன்தான் இப்படி நடுங்க வைக்கிறீங்களோ!

எல்லாரும் பயப்படலாம் ஆனா ஆதவா எதுக்கு தெருநாய்களுக்கு அஞ்சனும்? அவரைக் கடித்தாலும் அவைகளுக்கு சிற்றுண்டி கூட கிடைக்காது. (மனுஷன் அத்தனை ஸ்லிம்மா உடம்பை மெயிண்டெய்ன் பண்றார்)

மதி
17-11-2008, 08:54 AM
அத்தியாயம்-5

“ சார், மடிவாலாவுல ஒரு நல்ல ஓட்டல் இருக்கு. அங்க நிறுத்தறேன். சாப்பிட்டுட்டு கிளம்பலாம். அதைத் தாண்டிட்டா, எல்லாரும் கொள்ளையடிப்பானுங்க...” உபரித்தகவலை தெரியப்படுத்திக்கொண்டே சொன்ன சன்முகத்தின் சொல்லை ஆமோதித்தார்கள் பேராசியர்களும், பேராசிரியர்களும்.

மடிவாலாவில் நல்ல ஓட்டலா...????
எந்த ஹோட்டல்னு சொன்னீங்கன்னா.... நீங்க நல்லாருப்பீங்க.. :D:D

மதி
17-11-2008, 09:00 AM
அட்டகாசமாக நகர்கிறது கதை...பெங்களூர்..அனேக்கல்.. ஹோசூர்.. என தெரிந்த இடங்கள் வருவதால் அந்த பாதையை கற்பனை செய்ய முடிகிறது...
ஓவ்வொரு அத்தியாயத்திலும் சஸ்'பென்ஸ்' வைக்கும் சிவாண்ணா...க்கு ஒரு சபாஷ்.

தொடருங்க.

சிவா.ஜி
17-11-2008, 09:34 AM
மடிவாலாவில் நல்ல ஓட்டலா...????
எந்த ஹோட்டல்னு சொன்னீங்கன்னா.... நீங்க நல்லாருப்பீங்க.. :D:D

ஹி...ஹி...நான் சாப்பிட்ட ஒரே ஹோட்டல் அந்த ஆந்திரா ஹோட்டல் தாங்க. அன்னைக்கு சாப்பாடு நல்லாருந்தது.

தாமரை
17-11-2008, 09:38 AM
எல்லாரும் பயப்படலாம் ஆனா ஆதவா எதுக்கு தெருநாய்களுக்கு அஞ்சனும்? அவரைக் கடித்தாலும் அவைகளுக்கு சிற்றுண்டி கூட கிடைக்காது. (மனுஷன் அத்தனை ஸ்லிம்மா உடம்பை மெயிண்டெய்ன் பண்றார்)

ஊறுகாய் என்பது சிற்றுண்டி அளவு கூடத் தேவையில்லை.. ஆனால் அதைத்தானே வெறியில (போதையில) பல் பேர் தேடறாங்க..

ஏற்கனவே நாயினால் குதறப்பட்ட குழந்தைகளைப் பற்றி பேப்பர்ல படிச்சு அவனவன் பயந்து கிடக்கான்.நல்லாக் கிளப்பறாங்கய்யா பீதியை...

சிவா.ஜி
17-11-2008, 09:51 AM
ஊறுகாய் என்பது சிற்றுண்டி அளவு கூடத் தேவையில்லை.. ஆனால் அதைத்தானே வெறியில (போதையில) பல பேர் தேடறாங்க..


அசத்தல்...:icon_b::icon_b::icon_b:

ரங்கராஜன்
17-11-2008, 10:20 AM
நண்பர்களே
நீங்கள் இந்த வெறி நாய்களை பற்றி பேசும் பொழுது, எனக்கு சில விஷயங்கள் சொல்ல தோணுது எனக்கு தெரிந்த பல பேர் நாய்கள்னா அப்படி பயப்படுவாங்க. என் நண்பன் இப்ராஹம். அவன் பார்க்க நல்லா காட்டு எருமை மாதிரி இருப்பான், அவன் தூரத்தில் நாய்யை பார்த்துவிட்டால் அது போகும் வரை காத்திருந்து விட்டு தான் போவான். வண்டியில் போகும் பொழுது அந்த தெருவை விட்டு வேறு வழியாக தான் போவான். எனக்கு ஓரே சிரிப்பாக இருக்கும். ஏனென்றால் எனக்கு நாயினா பயம் இல்லை. கோழினா இரண்டு கிலோ மீட்டர் ஓடுவேன், அவ்வளவு பயம் (சாப்பிட இல்லை, பிடிக்க)

கண்மணி
02-12-2008, 09:22 AM
எவ்ரி டாக் ஹாஸ் இட்ஸ் ஓன் டே அப்படின்னு சொல்வாங்க..

இந்த லொள்ளிக் கொள்ளும் நாய்களுக்கு அந்த நாட்கள் எப்ப வருமோ?

சிவா.ஜி
02-12-2008, 09:27 AM
அத்தியாயம்-7

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பரபரப்பானது. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்கள். முதலுதவி முடிந்ததும் அவர்களை வார்டுக்கு மாற்றினார்கள்.அந்தப்பிரிவின் தலைமை மருத்துவர் பசவப்பாவின் ஆலோசனைப் படி அவர்களை இன்னும் சில நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்க முடிவெடுக்கப்பட்டது. வெறிநாய்க் கடி என்பதால் அவர்களது இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.பசவப்பா தானே நேரில் சென்று இரத்தத்தைப் பரிசோதித்தார்.

சோதனையின் இடையில் அவர் முகம் குழப்பத்துக்குப் போனது. நெற்றியைச் சுருக்கிக்கொண்டு யோசித்தவர், சோதனையை தொடரும்படி ஒருவரிடம் சொல்லிவிட்டுத் தன் அறைக்கு வந்தவர், அங்கு அவருக்காக காத்துக்கொண்டிருந்த இரண்டு தமிழக காவலதிகாரிகளைப் பார்த்து வரவேற்றார்.

“சார் ஐயம் பன்னீர்செல்வம் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. இவரை உங்களுக்கு முன்னமேத் தெரியும், இன்ஸ்பெக்டர் முருகேசன்.”

“நைஸ் ட்டூ மீட் யு சார். இவர்தான் அந்த ஸ்டூடெண்ட்ஸை அழைச்சிக்கிட்டு வந்தார். இப்பதான் அவங்க ரத்தத்தைப் பரிசோதனைப் பண்ணிட்டு வந்தேன்...”

“வெறிபிடிச்ச நாய்ங்க கடிச்சிருக்கு சார். ரேபீஸ் அட்டாக் ஆகுமா..?”

என்று பதட்டத்தோடு கேட்ட பன்னீர்செல்வத்தைப் பார்த்து,

“அதைப் பத்திதான் இவர்கிட்ட பேசலான்னு வந்தேன்...நீங்களும் இருக்கீங்க. சொல்றேன்”

என்று முருகேசனைக் காட்டி சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டு சற்று நேரம் அமைதியாய் இருந்தார். பிறகு,

“சார், நீங்க நினைக்கிறமாதிரி இது ரேபீஸ் இல்லை. அவங்க ரத்தத்துல இப்ப இருக்கிற கிருமிகள் ரேபீஸ் கிருமிகள் கிடையாது. அது எந்த வகைக் கிருமிகள்ன்னு இப்ப என்னால உறுதியா சொல்லமுடியல. எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு. அந்த சந்தேகம் சரின்னா...இந்த ரத்தத்தை லண்டனுக்கு அனுப்பனும்.அங்கதான் அந்தவகை பரிசோதனை செய்ய முடியும்.” அவர் சொன்னதைக் கேட்டதும், பன்னீர்செல்வமும், முருகேசனும் அதிர்ச்சியானார்கள்.

“சார் அது ரேபீஸ் இல்லையா...ஆனா இதுக்கு முன்னாடி இதே நாய்ங்க கடிச்சதால இறந்துபோன ஒரு பையனோட ரத்தத்தை சோதனைப் பண்ண டாக்டர் அது ரேபீஸ்ன்னு போஸ்மார்ட்டம் ரிப்போர்ட்ல எழுதியிருக்காரே...”

“ஆமா சார். சாதாரண சோதனையில இந்தக் கிருமிகள் ஏறக்குறைய ரேபீஸ் கிருமிகளை ஒத்திருக்கும். அதான் அவர் அப்படி எழுதியிருக்கனும். நான் போன மாசம்தான் லண்டனுக்கு ஒரு செமினார் அட்டெண்ட் பண்ண போயிருந்தேன். அங்கே ஒரு லாப்ல ரேபீஸ் கிருமிக்கும், இப்ப நான் அந்தப் பசங்க ரத்தத்துல பாத்தக் கிருமிக்கும் உள்ள வித்தியாசத்தை எனக்குக் காட்டினாங்க. அங்கேருந்து வந்தபிறகு நானும் நிறைய அதைப்பத்தி படிச்சேன். அதனாலத்தான் என்னால இது ரேபீஸ் கிருமி இல்லைங்கறதை உறுதியா சொல்லமுடியுது”

“அப்ப நீங்க அங்கே பாத்த கிருமியும் இதுவும் ஒண்ணுன்னா அது எந்தக் கிருமின்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே டாக்டர்..”

பன்னீர்செல்வத்தின் கேள்வியை காதில் வாங்கிக்கொண்ட பசவப்பா...

“ஒரு அனுமானத்துல அதை என்னால சொல்லமுடியாது சார். அதான் என் சந்தேகத்தை உறுதி படுத்திக்கறதுக்காக இந்த ரத்தத்தை லண்டனுக்கு என்னுடைய மருத்துவ நன்பருக்கு அனுப்பி சோதனை செஞ்சிப் பாக்கச் சொல்லப்போறேன்.அதுக்குப் பிறகுதான் உறுதியா சொல்ல முடியும்.”

“ஓ அப்ப இந்த கிருமி ரேபீஸைவிட தீவிரமானதா சார்?”

“அதுதான் இதுன்னு உறுதியாகிட்டா....எஸ்....ரொம்ப தீவிரமானதுதான். ஆனா உடனடியா உயிருக்கு ஆபத்தில்ல. ரேபீஸ்மாதிரி பரிதாப சாவு நிகழாது. இப்போதைக்கு பாதிக்கப்பட்டவங்க எங்க கண்காணிப்புலேயே கொஞ்சநாள் இருக்கட்டும்”

“ஓக்கே சார். பரிசோதனை முடிவு தெரிஞ்சதும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்க. இது என்னோட கார்ட். தேங்யூ வெரிமச் சார்”


மருத்துவமனையிலிருந்து திரும்ப வந்ததும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக வரச் சொன்னதாய் தகவல் கிடைத்தது. போனார். மாவட்ட ஆட்சியரின் கலந்துரையாடல் கூடத்தில் அந்த அவசரக் கூட்டம் நடந்தது. நாய்களின் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியத்தைப் பற்றி பேசினார்கள். பன்னீர் செல்வமும் டாக்டர் பசவப்பா சொன்னதை சொன்னார். மாவட்ட ஆட்சியர் அதிர்ந்தார்.

“அப்ப இதை நாம இன்னும் தீவிரமா அனுகனும். மிஸ்டர் பன்னீர்செல்வம், உடனடியா ஒரு தனிப்படை அமைக்கனும். சீப் செக்ரட்டரிக்கிட்ட சொல்லி ஆறு பவர்ஃபுல் ஃபோர்வீல் டிரைவ் ஜீப்புகளை இங்கே வரவைக்கிறேன். அந்த நாய்ங்க ராத்திரியிலத்தான் வெளியே வருதுங்க. அதனால ரொம்ப பவர்ஃபுல்லான விளக்குகளை அந்த ஜீப்புகள்ல பொருத்தி ஆறு டீமா அனேக்கல் ரோடு, ஏரிக்கரை, தளி ரோடு, டி.வி.எஸ் ரோடு, சந்திரசூடேஸ்வரர் மலைப்பகுதி, ஸ்டேடியம் பகுதின்னு ரோந்து போக ஏற்பாடு பண்ணுங்க”

“ஓக்கே சார்.அதோட அதுங்க பதுங்கியிருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சாகனுமே...அதுக்கான தேடுதல் வேட்டையையும் தொடங்கனும்..”

“சார் குறுக்கிடறதுக்கு மன்னிச்சுடுங்க சார்..” என்ற முகவுரையோடு,

“நேர்ல அந்த மிருகங்களைப் பாத்தவங்கறதால சொல்றேன்...அதுங்க சாதாரண வெறிபிடிச்ச நாய்ங்க மாதிரி தெரியல சார். அபாரமான வேகம், அசுரத்தனமான பலம், அதோட ரொம்ப புத்திசாலித்தனம் எல்லாமும் இருக்கறதால அதுங்களை துரத்திப் பிடிக்கறது ரொம்ப கஷ்டம் சார்”

என்று முருகேசன் சொன்னதும்,

“ஓ ஐ ஸீ...என்ன செய்யலாம் பன்னீர்செல்வம்?”

மாவட்ட ஆட்சியரின் கேள்வி விழுந்ததும், சற்று யோசித்துவிட்டு,

“சார் இதுவரைக்கும் அப்ஸர்வ் பண்ணதுல அதுங்க ஒரேக் கூட்டமாத்தான் வந்து அட்டாக் பண்ணுதுங்க. அப்ப எல்லா நாய்ங்களும் ஒரே இடத்துலத்தான் பதுங்கியிருக்கனும். ஸோ ஒரு நாயை உயிரோட பிடிச்சி ஒரு ட்ரான்ஸ்மீட்டரை அது உடம்புல பொருத்தி விரட்டி விட்டுட்டோம்ன்னா...அந்தக் கூட்டம் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சிடலாம் சார்.”

“வெரிகுட் நல்ல யோசனை. ஆனா எப்படி உயிரோட பிடிக்கறது பன்னீர்?”

“அதுக்கும் வழியிருக்கு சார். ஃபாரஸ்ட் காரங்கக்கிட்ட மிருகங்களை மயக்கமடைய வைக்க,தூரத்துலருந்து மருந்து செலுத்துற துப்பாக்கியிருக்கு. அதை உபயோகிச்சு ஒரு நாயை சாச்சுடலாம் சார்”

“வெல்டன்..அப்ப ஆறு துப்பாக்கிக்கு ஏற்பாடு பண்ணுங்க...ஆறு டீம்ல இருக்கறவங்களுக்கு கிளியரா இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துடுங்க...இனி ஒரு தாக்குதல் நடக்கக்கூடாது. மரணங்கள் சம்பவிக்கக்கூடாது”

“எஸ் ஸார்”

விரைப்பான சல்யூட்டுக்குப் பிறகு வெளியே வந்த காவலதிகாரிகளுக்கு மளமளவென்று உத்தரவுகளைப் போட்டுவிட்டு தன் வீட்டுக்கு திரும்பினார் பன்னீர்செல்வம். வழியில் கைப்பேசி எம்ஜியார் பாட்டுடன் அழைத்தது.

“ஹலோ...டி.எஸ்.பி பன்னீர்செல்வம் ஸ்பீக்கிங்..”

மறுமுனையில் டாக்டர் பசவப்பா...

“ஐயம் ஸாரி சார். ஒரு பையன் இறந்துட்டான்..”

“ஓ மை காட்...உடனே யாரையாவது அனுப்பி வெக்கறேன் சார். அவங்க பேரண்ட்ஸ் வந்துட்டாங்கதானே...”

“ எஸ் மிஸ்டர் பன்னீர்செல்வம். அந்த ரத்த சாம்பிளை டி.எச்.எல் -ல் அனுப்பிட்டேன். நாளைக்கே ரிஸல்ட் தெரிஞ்சிடும்.”

“ரொம்ப நல்லது டாக்டர். அது தெரிஞ்சா உடனே சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க வசதியா இருக்குமில்லையா..?”

“யு ஆர் ரைட். இனியும் யாரையும் நாம இழக்கக்கூடாது. இந்தப்பையன் இறந்ததுகூட உள்ளுறுப்புகளின் அதிகப்படியான சேதாரத்தாலத்தான்.
ஓக்கே மிஸ்டர் பன்னீர்செல்வம் ரிசல்ட் வந்ததும் சொல்றேன்.”

மாணவனின் மரணம் அவருக்கு மிகுந்தக் கோபத்தை உண்டாக்கியது. உடம்பெல்லாம் சூடாக...”நாய்களே...உங்களை அழிக்கவேண்டும்..”

மனதுக்குள் ஆத்திரத்துடன் கூறிக்கொண்டே வண்டியை வேகமாக ஓட்டும்படி சொன்னார்.

தொடரும்

மதி
02-12-2008, 11:35 AM
ஒரு இடைவெளிக்குப் பிறகு பரபரன்னு போகுது... அடுத்து என்ன என்ற ஆவலுடன்..

தாமரை
02-12-2008, 11:38 AM
மாணவனின் மரணம் அவருக்கு மிகுந்தக் கோபத்தை உண்டாக்கியது. உடம்பெல்லாம் சூடாக...”நாய்களே...உங்களை அழிக்கவேண்டும்..”

மனதுக்குள் ஆத்திரத்துடன் கூறிக்கொண்டே வண்டியை வேகமாக ஓட்டும்படி சொன்னார்.

தொடரும்

படிச்சிட்டு சிரிச்சுட்ட்டேன்,

மனுஷங்களைத்தான் கோபத்தில நாய்களேன்னு திட்டுவாங்க... நாய்களை என்னன்னு திட்டுவாங்க அப்படின்னு தாமரை பதில்களில் யாராச்சும் கேட்டா, இந்தச் சுட்டியைத்தான் கொடுக்கப் போறேன்.:lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
03-12-2008, 02:52 AM
ஆமா மதி கொஞ்சம் பெரிய இடைவெளிதான்...இனி சீக்கிரம் பதிக்கிறேன். ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
03-12-2008, 02:54 AM
உங்க பின்னூட்டத்தைப் பாத்து நானும் சிரிச்சிட்டேன். அதானே நாய்ங்களை எப்படி திட்டறது? தாமரைக்கு மட்டுமே இதுமாதிரியெல்லாம் தோணும்...:lachen001:

செல்வா
03-12-2008, 04:00 AM
இடைவெளி விட்டதேத் தெரியவில்லை அண்ணா.... வாசிக்க ஆரம்பித்ததுமே பழைய பாகங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்து விடகிறது. அந்தளவிற்கு என்னைக் கவர்ந்து விட்டது இந்தக்கதை.
அது சரி அடுத்த பாகம் எங்க..... :)

சிவா.ஜி
03-12-2008, 08:53 AM
ரொம்ப நன்றி செல்வா. அடுத்தபகுதியா....இது ட்டூ மச். இப்பத்தான் கஷ்டப்பட்டு ஏழாவது பகுதியை தட்டச்சியிருக்கேன்...அதுக்குள்ள அடுத்ததா? கை வலிக்குதுப்பா....

ஆதவா
03-12-2008, 09:21 AM
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் ஆதவா. லண்டனுக்கு எப்படி வந்தார், ஏன் திரும்ப இந்தியா வந்தார் என்று மட்டுமே சொல்ல நினைத்தேன். அதனால் சுருக்கத்தைக் கையாண்டேன். அதே போல மூன்றாவது அத்தியாயமாகத் தானே வைத்திருக்கிறேன். அதற்கு முன்பாக என்றால் முதலிலேயே தாக்குதல் எதனால் என்று தெரிந்துவிடுமே.

முக்கியமாய் ஆதவாவைக் காயப்படுத்தியது எது எனத் தெரிந்தால் உடனடியாக மாற்றிவிடுவேன். தயவு செய்து சொல்லுங்கள் ஆதவா.

இப்படியானதொரு பின்னூட்டத்துக்கு மிக்க நன்றிகள்.

அத்தியாயம் விட்டு விட்டு படித்ததால் மூன்றாவது அத்தியாயம் ரொம்ப நேரம் கழித்து வந்ததைப் போன்றதொரு உணர்வு ஏற்பட்டதோ என்னவோ??

ஆனா இதுவரைக்கும் நாய் கடி வாங்கனதில்லீங்க.. (நம்மாளுங்க கடிக்கிறத விடவா:D)

கடிபட்டேன்னு சொன்னது அந்த கதைக்குள்ளயே போய் கடிபட்ட உணர்வைப் பற்றிச் சொன்னேன்.. நானே கேட்கலாம்னு இருந்தேன் ஏன் அடுத்த அத்தியாயத்திற்கு இத்தனை லேட் என்று.. அதற்குள் நீங்கள் கொடுத்துவிட்டீர்கள்.. படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்..

அன்புடன்
ஆதவன்

ஆதவா
03-12-2008, 09:26 AM
அடுத்து யார் பலி?

ஆளா? நாயா?

ஆவலுடன்
ஆதவன்

சிவா.ஜி
03-12-2008, 11:12 AM
கடிபட்டேன்னு சொன்னது அந்த கதைக்குள்ளயே போய் கடிபட்ட உணர்வைப் பற்றிச் சொன்னேன்..
அன்புடன்
ஆதவன்

ரொம்ப நன்றி ஆதவா. நான்கூட என்னவோ ஏதோன்னு நினைச்சிட்டேன்.
கொஞ்சம் லேட்டாயிடிச்சி....இனி சீக்கிரம் பதியறேன்.

யவனிகா
03-12-2008, 01:28 PM
சிவாண்ணா...தலைப்பைப் பாத்துட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா? சிவா அண்ணாவா?அப்படின்னு ஆச்சர்யத்தோடவே உள்ள வந்தேன்.நாய் வால்ல கதைய ஆரம்பிச்சிட்டிடீங்க...
அப்புறம் பாலகுமாரனோட கதை ஒன்றில் படித்திருக்கேன்...கொஞ்சூன்டு தப்பு மட்டும் செய்து அடுத்த பிறவி கதிமோட்சம் அப்படிங்கற போது கடைசிப்பிறவி தெரு நாயாத்தான் பிறப்பாங்க அப்படின்னு...ஏன்னா தெருநாய்ப் பிறவிங்கறது அவ்வளவு புண்ணியமாம்...எந்த கமிட்மெண்டும் இல்லை...அப்படீனு படிச்சு தெருநாய்க மேல பயங்கர இமேஜ் வெச்சிருந்தேன்...உங்க கதை காலி பண்ணுதே அதை...இப்பத்தான் முதல் அத்யாயம் படிச்சேன்...இன்னும் லொள்ளுங்கள்...சாரி சொல்லுங்கள்...இந்தக்கதை யாருக்கு டெடிகேட் செய்யப்போரீங்க???

சிவா.ஜி
04-12-2008, 03:13 AM
ஆஹா....யவனிகாவோட அதே குறும்பு பின்னூட்டம். ரொம்ப சந்தோஷம்மா. எனக்கு கூட தெருநாய்ங்க மேல ரொம்ப நல்ல இமேஜ்தாம்மா....ஆனா இது மாறிப்போன நாய்ங்க. நாட்டைக் காக்கும் வீரர்களே நாட்டுக்கு எதிரா மாறினால் அவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள்தானே...அப்படித்தான் இவைகளும்.

அப்புறம் இந்தக் கதையை நல்ல தெருநாய்களுக்கு டெடிகேட் பண்றேன்...ஹி...ஹி..

ரொம்ப நன்றிம்மா.

கண்மணி
04-12-2008, 03:18 AM
அப்புறம் இந்தக் கதையை நல்ல தெரு நாய்களுக்கு டெடிகேட் பண்றேன்...ஹி...ஹி..

ரொம்ப நன்றிம்மா.

தெருவை ஒண்ணு நல்ல பக்கம் சேர்த்திருக்கணும்.. இல்லை நாய்கள் பக்கம் சேர்த்திருக்கணும் அதாவது

நல்லதெரு நாய்கள்:icon_p:
நல்ல தெருநாய்கள்:icon_b:

கதையிலதான் இடைவெளி விட்டுட்டீங்க. இதிலுமா?:eek::eek::eek:

ஆனால் கடைசி வார்த்தை யார் நல்லவங்கன்னு காட்டிடுது. :icon_rollout::D:D

சிவா.ஜி
04-12-2008, 03:21 AM
அடடா...கண்மணி உலாவும் நேரத்துல ரொம்ப எச்சரிக்கையா பதிவிடனுங்கறதை மறந்துட்டேனே....மாத்திடறேன்...நன்றி கண்மணி.

சிவா.ஜி
06-12-2008, 08:17 AM
அத்தியாயம்-8


மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தபடி ஆறு வாகனங்களும் வந்துவிட்டது. மிகப்பிரகாசமான விளக்குகள் பொருத்தப்பட்ட அந்த வாகனங்கள் அன்று இரவே ரோந்துக்கு பயண்படுத்தப்பட்டது. அனேக்கல் சாலையில் மிக மெதுவாக ஒளிஉமிழலுடன் நகர்ந்து கொண்டிருந்த அந்த வாகனத்தின் மேல் ஒரு திடீர்த்தாக்குதல் நடைபெற்றது. வெறிநாய்களில் இரண்டு குறிபார்த்து அந்த விளக்குகள் மீது பாய்ந்து அவற்றை உடைத்தன.

உடனடியாக கதவின் கண்ணாடிகளை மேலேற்றிய காவலர்கள் தங்கள் கையிலிருந்த ஒலிபரப்புக் கருவியில் அடுத்த ரோந்து வாகனங்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். அனைவரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார்கள். நாய்களின் தாக்குதல் மிக ஆவேசமாக இருந்தது. எங்க ஏரியாவுல உங்களுக்கு என்ன வேலை என்று கேட்பதைப்போல இருந்தது ஜீப்புக்கு முன்னால் வழிமறித்து நின்றுகொண்டிருந்த நாய்களின் வெறிப்பார்வை.

மேலே பொருத்தப்பட்டிருந்த விளக்குகள் மொத்தமாய் சேதமடைந்துவிட்ட நிலையில் ஹெட்லைட்டுகளின் வெளிச்சத்தில் மறித்துக்கொண்டு நின்றிருந்த நாய்களை பார்த்த காவலர்களுக்கு சர்வ நிச்சயமாய் கிலி ஏற்பட்டது.இதுவரை இப்படி ஒரு வெறி பிடித்த நாய்களை அவர்கள் கண்டதில்லை. பயத்தில் இருந்தாலும், அவைகளின் மேல் ஏற்பட்ட ஆத்திரத்தில் வண்டியை ஏற்றிக் கொன்றுவிட நினைத்து ஓட்டுநர் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தினார். கிரீச்சென்ற சத்தத்தோடு முன்னோக்கி சீறிப்பாய்ந்த வண்டி மோதுவதற்குள் அந்த நாய்கள் சடுதியில் விலகின.

ஒரு உடனடி பிரேக் இட்டு வண்டியை நிறுத்தினார். நின்றவுடனேயே ஒரு நாய் வண்டியின் முன்புற பானட்டுக்கு மேலே ஏறி நின்று முன் கண்ணாடியில் முகத்தை வைத்து மிக அருகில் தன் சலைவா வழியும் வாயால் கண்ணாடியை சுரண்டியது. அத்தனை அருகாமையில் அந்த முகத்தைப் பார்த்து வெலவெலத்துவிட்டார்கள் உள்ளே அமர்ந்திருந்தவர்கள். மற்ற நாய்கள் வாகனத்தை சுற்றி வளைத்துக்கொண்டன. என்ன செய்வது என்று யோசிக்கக்கூட திராணியில்லாமல் விதிர்த்து அமர்ந்திருந்தார்கள் காவலர்கள். கண்ணுக்கெதிரே குற்றம் நிகழுகையில் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது அவர்களுக்கு வழக்கம் தானே.

நல்ல வேளையாக மற்ற வாகனங்கள் வந்துவிட்டன. அந்த வாகனத்தில் இருந்த ஒரு காவலர் குறிபார்த்து சுட்டதில் ஒரு நாயின் மீது மிகச் சரியாக அந்த மயக்க மருந்து ஊசி குத்தியது. எல்லா நாய்களும் அந்த பிரகாசமான வெளிச்சங்களைப்பார்த்து மீண்டும் புதர்களுக்கிடையில் ஓடி மறைந்துவிட்டன. ஊசியேற்றிக்கொண்ட நாயும் ஓடியது. ஆனால் சில அடி தூரத்திலேயே சுருண்டு விழுந்தது.

உடனடியாக அதன் பின்னங்காலில் அந்த டிரான்ஸ்மீட்டரைப் பொருத்தினார்கள். தங்கள் கையில் வைத்திருந்த கருவியில் அதன் ஒலிபரப்பு தெரிகிறதா என சோதித்துப் பார்த்து திருப்தியடைந்தார்கள். பன்னீர் செல்வத்தை தொடர்புகொண்டு அனைத்தையும் தெரிவித்தார்கள். அவரின் பாராட்டுக் கிடைத்ததும் கொஞ்சமாய் சந்தோஷப்பட்டார்கள்.

அடுத்தநாள் காலையிலேயே பன்னீர் செல்வத்துக்கு டாக்டர் பசவப்பாவிடமிருந்து அழைப்பு வந்தது. சந்திக்க முடியுமா எனக் கேட்டார்.

சம்மதித்து உடனே பெங்களூருவிற்குப் பயணப்பட்டார் பன்னீர்செல்வம். உடன் இன்ஸ்பெக்டர் முருகேசனும் இருந்தார். அவர்களை வரவேற்று அமரச் சொன்ன பசவப்பா...

“லண்டன்லருந்து ரிசல்ட் வந்துடுடிச்சி. இந்தக் கிருமிகள் MAD COW நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் இருப்பவை. ஆனால் இந்த நாய்களின் உடலுக்கு எப்படி வந்தது என்றுதான் புரியவில்லை. ஏனென்றால் இன்னும் நமது நாட்டுக்கு அந்த நோய் பரவவில்லை. யாரோ ஒருவரோ அல்லது எந்த உயிரினமோதான் அந்த நோய்க் கிருமிகளை இங்கே கொண்டுவந்திருக்க வேண்டும். அதை தின்ற நாய்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன”

“மைகாட்...அப்போ அந்த நாய்கடிக்கு ஆளானவர்களுக்கும் அந்த வியாதிவர வாய்ப்பிருக்கிறதல்லவா டாக்டர்?”

பன்னீர் செல்வத்தின் கேள்விக்கு சற்றே தாமதித்து,

“யெஸ் நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தக்கிருமி ரேபீஸ்போல உடனடியாக தன் வேலையைக் காட்டாது. ஆறு மாசமானாலும் உள்ளுக்குள் இருந்துவிட்டு திடீரென்று தன் வேலையைக் காட்டும். முக்கியமாய் மூளையை பாதிக்கும். நினைவுகள் பாதிக்கப்படும். இதயம் இயக்கத்தை தொடர சிரமப்படும். வயதானவர்களென்றால் உடனடி மரணமும் சம்பவிக்கும்....”

என்று சொல்லிக்கொண்டு வந்த பசவப்பாவை இடையில் நிறுத்தி,

“சாரி டாக்டர், இடையில் பேசுவதற்கு மன்னிக்கவும். சில நாட்களுக்கு முன் ஒரு பெரியவர் தளிக்கும், ஹோசூருக்கும் இடையிலிருக்கும் காட்டில் விலங்குகளால் குதறப்பட்டு இறந்திருந்தார். ஆனால் மருத்துவரின் பிரேதபரிசோதனை விலங்குகள் கடிப்பதற்கு முன்னமே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தது. அவரது சட்டைப்பையிலிருந்து கிடைத்த பாஸ்போர்ட்படி அவர் ஒரு இங்கிலாந்து பிரஜை என்று தெரிய வந்தது. அவருடைய பூர்வீக கிராமத்துக்கு வந்தவர், ஏதோ மன வருத்தத்தில் அந்தக் காட்டுப்பகுதிக்கு வந்திருக்கிறார். அங்கேயே இறந்துமிருக்கிறார்.

ஒருவேளை அவரால் அந்தக் கிருமிகள் இந்த நாய்களுக்கு வந்திருக்குமோ...”

என்று தன் சந்தேகத்தை பன்னீர்செல்வம் சொன்னதும்,

“இருக்கலாம். அவரது ரத்தத்தைப் பரிசோதித்தால் நிச்சயம் தெரியும். ஆனால் அதற்கு இப்போது வாய்ப்பில்லையே.”

என்று பசவப்பா சொன்னதும்,

“வாய்ப்பிருக்கு டாக்டர். அவரது ரத்தத்தில் ஏதோ சந்தேகப்படும்படியான கிருமிகள் இருந்ததால், அந்த ரத்த சாம்பிளை இன்னும் வைத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு வருகிறேன். நீங்கள் சோதித்துப் பாருங்கள்”

“வெரிகுட்...நிச்சயம் கொண்டு வாருங்கள். மாணவ்ர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். என் நன்பர் அங்கிருந்து இந்த நோய்க்கான

மருந்துகளையும் அனுப்பியிருக்கிறார். அவர்களைக் காப்பாற்றிவிடலாம்.”

“ரொம்ப நன்றி டாக்டர். நான் அந்த ரத்த சாம்பிளை யாரிடமாவது கொடுத்து அனுப்புகிறேன்.”


ஹோசூருக்கு திரும்பிவந்தவுடன் காவலர்களால் பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டரின் உதவியால் அந்த நாய்கள் பதுங்கியிருக்கும் இடம் தெரிந்துவிட்டது. ஹோசூர் அனேக்கல் சாலையில் இயங்காத நிலையிலிருக்கும் சின்னச் சின்ன தொழிற்சாலைகளின் ஒரு கிடங்கில்தான்

அவைகள் பதுங்கியிருக்கின்றன. இடம் தெரிந்துவிட்டாலும் அவற்ரை அங்கேயே அழிக்கமுடியாது. அந்தக் கிடங்குக்கு எத்தனை வாசல்கள். எங்கெங்கே திறப்புகள் இருக்கின்றன என்று தெரியாத நிலையில் தாக்குதலை நடத்தினால் சில நாய்கள் தப்பிபித்துவிட வாய்ப்பிருக்கிறது.

இதையெல்லாம் யோசித்த பன்னீர்செல்வம் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

“மணிமாறனை அழைக்கவேண்டும்.”


தொடரும்

சிவா.ஜி
11-12-2008, 02:53 AM
அத்தியாயம்-9


பசவப்பாவின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க வந்த பன்னீர்செல்வத்திடம்,

“ நீங்க சொன்ன அந்த பெரியவரை ஆறு மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு நாய் கடித்திருக்கிறது. அது உங்கள் விசாரனையில் தெரிய வந்திருக்கிறது. அதுவரைதான் உங்களுக்குத் தெரியும்....ஆனால்...”

லேசாக இழுத்து நிறுத்திய பசவப்பாவை பதட்டத்துடன் பார்த்த பன்னீர்,

“ஆனா என்ன டாக்டர்...உங்களுக்கு தெரிஞ்சதை தயவுசெஞ்சு சொல்லுங்க...ப்ளீஸ்”

ஏறக்குறைய தான் அமர்ந்திருந்த இருக்கையின் நுனிக்கு வந்து படபடப்போடு கேட்ட பன்னீரை அமைதியாகப் பார்த்து,

“கூல் டவுன் மிஸ்டர் பன்னீர்செல்வம். இப்ப நீங்க எதிர்க்கப்போற நாய்ங்க மூணாம் தலைமுறை வைரஸ்களை உடம்பில தாங்கிகிட்டு திரியுற அதிபுத்திசாலி மற்றும் அதி சக்திசாலி மிருகங்கள்.”

“என்ன டாக்டர் சொல்றீங்க...?”

“யெஸ்....மிக பயங்கரமான மிருகங்கள் அவை. விளக்கமா சொல்றேன். இந்த கீர்த்திவாசனைக் கடித்த நாய், இவரைக் கடிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னால்தான் MADCOW நோயால் இறந்த ஒரு மாட்டின் இறைச்சியை சாப்பிட்டிருக்கிறது. அப்போது அந்தக் கிருமிஅதனுடலில் புகுந்தது. அந்த நாய் இவரைக்கடித்ததும் இவர் உடலில் புகுந்தது. இந்த நாய்கள் இவரைக்கடித்ததும் இவைகள் உடலில் மூன்றாம் முறையாகப் புகுந்தது....”

சற்று இடைவெளிவிட்டு...

“எங்க பாஷையில சொல்லனுன்னா கீர்த்திவாசனைத் தாக்கிய இந்த நோய்க்கு பேர் Variant Creutzfeldt-Jakob disease (vCJD), மனிதர்கள் உடலில் புகுந்த அந்த வைரஸ்கள் உண்டாக்கும் பாதகங்கள்....இந்த மருத்துவக் குறிப்பைப் பாருங்கள்..”

என்று அந்த தடித்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்திலிருந்த அடிக்கோடிடப்பட்ட வாக்கியங்களை அவருக்குக் காட்டினார்.

Since Creutzfeldt-Jakob disease affects the brain, the symptoms it produces are neurological. It may start out subtly with insomnia, depression, confusion, personality and behavioral changes, and problems with memory, coordination, and sight. As it progresses, the person rapidly develops dementia and involuntary, irregular jerking movements called myoclonus.
In the final stage of the disease, the patient loses all mental and physical functions, lapses into a coma, and eventually dies. The course of the disease usually takes one year. The disease generally affects people between the ages of 50 to 75 years.

வாசித்து தலை நிமிர்ந்த பன்னீரைப் பார்த்து,

”இதுதான் அந்த கீர்த்திவாசனுக்கு நிகழ்ந்திருக்கு. அந்தக் கிருமியால பாதிக்கப்பட்டவர் தன்நிலை தடுமாறியிருக்கார். ஞாபகக்கோளாறும், குழப்பநிலையும், பார்வையை ஒருநிலைப் படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு, தன் சொந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்திருக்கார். அங்கு ஏற்பட்ட அதீத மன உளைச்சலால், வெகு சீக்கிரமே கோமா நிலைக்குப் போய் சட்டென்று இறந்திருக்கிறார். அந்த நேரத்தில் அந்தக் கிருமிகளின் வீரியம் மிக அதிக அளவில் இருந்திருக்கலாம். அவரது உடலை தின்ற நாய்களின் உடலுக்கு அந்த வீரியமுள்ள கிருமிகள் நுழைந்துள்ளன...மீண்டும் மிருக உடல் கிடைத்ததும், அதி தீவிரமாகியிருக்கின்றன”

அவர் சொல்லச் சொல்ல பன்னீர்செல்வம் பலவிதமாக மாறிய தன் முகபாவத்தோடு வெகு சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பசவப்பா தொடர்ந்து.........

“ஸோ...ஒவ்வொரு முறை ஒரு உடலுக்குள் புகும்போதும் தனது சக்தியைக்கூட்டிக்கொண்டன அந்த கிருமிகள். அதாவது கிட்டத்தட்ட ம்யூட்டேஷன் போல. தற்சமயம் இந்த நாய்களின் உடலிலுள்ள கிருமிகளை விட இன்னும் வீரியமாக இருக்கும் அந்த மாணவர்களின் உடலிலுள்ள கிருமிகள். ஆனால் இதில் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால்....மிருக உடலுக்குள் இருக்கும் கிருமிக்கும், மனித உடலுக்குள் இருக்கும் கிருமிக்கும் வித்தியாசமிருப்பதுதான். அதாவது, மனித உடலின் கிருமிகளுக்கு அத்தனை புத்திசாலித்தனமில்லை. அதனால் அவற்றை தாக்கி அழித்துவிட முடியும். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலகட்டத்தில் இந்தவித நோயைக் கண்டறிய இயலாத நிலையிருந்தது. ஆனால் இப்போது வளர்ந்துவிட்ட மருத்துவத்தில்,பாதிக்கப்பட்டவரின் ரத்தத்திலுள்ள prions-ஐக் கண்டறிந்து குணப்படுத்த முடியும். அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்....ஆனால் அந்த நாய்களை உடனடியாகக் கொல்வது உங்கள் பொறுப்பு.”

அதுவரை ஒரு கதை கேட்பதைப்போல கேட்டுக்கொண்டிருந்த பன்னீர்செல்வம், டாக்டர் இறுதியாக சொன்னதைக் கேட்டதும் நரம்பு புடைக்க, மேசையில் ஓங்கிக் குத்தி....

“யெஸ் டாக்டர்...வீ வில் கில் தோஸ் டாக்ஸ். கூடியவிரைவிலேயே அந்த நாய்களை அழிப்போம்”

பன்னீர் சொன்னதைக் கேட்டதும், லேசாகச் சிரித்த டாக்டர் பசவப்பா,

‘ஒவ்வொருமுறை தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கும்போதும் போலீஸ் சொல்லும் அதே வார்த்தைகளை, நிஜமான நாய்களுக்கும் நீங்கள் உபயோகப்படுத்தியதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் சீரியஸாக சொன்னால்....இந்த நாய்களை ஒட்டுமொத்தமாக உங்களால் அழித்துவிடமுடியும்.....ஆனால் அந்த நாய்களை....சரி விடுங்கள்...அது இந்தியனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் தலைக்குமேல் தொங்கும் கத்தி.”



அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வந்ததும் முதல் வேலையாக மணிமாறனைத் தொடர்புகொண்டார்.

மணிமாறன் தேசிய அளவில் நடக்கும் தடகளப்போட்டிகளில் முதலாவதாக வரும் ஓட்டப்பந்தயவீரன். போலீஸ்காரன். பன்னீர்செல்வத்திடம் போலீஸ்பயிற்சி பெற்றவன். அப்போதே அவனை தயார்படுத்தி தங்கம் வாங்க வைத்தவர் பன்னீர்செல்வம். அந்த நன்றிக்கடன் எப்போதும் அவனிடத்தில் உள்ளது.

இந்தமுறை அவர் கூப்பிட்டதும், அதுவும் அரசாங்க வேலையாய் கூப்பிட்டதும் உடனே புறப்பட்டு வந்திருந்தான். அவனையும் அழைத்துக்கொண்டு தன் சக அதிகாரிகளோடு தன் அலுவலக கலந்துரையாடல் கூடத்துக்கு வந்தார் பன்னீர் செல்வம்.

அனைவரும் அமர்ந்ததும், பன்னீர் செல்வம் மணிமாறனைப் பார்த்து,

“உன்னுடைய வேகம் எவ்வளவு?”

என்று கேட்டதும், புரியாமல்,

“எதில் சார்?”

“ஓட்டத்தில்”

அவன் சொல்ல வாயெடுப்பதற்குள், அந்தக் கூடத்துக்குள் அவசரமாய் வந்த இன்ஸ்பெக்டர் முருகேசன்,

“சார் இன்னொரு தாக்குதல். ஆனா இந்தமுறை வழக்கத்துக்கு மாறா நட்ட நடுப்பகல்ல....தளி ரோட்டுல பைக்குல வந்துகிட்டிருந்த ஒரு இளம்ஜோடிகளை தாக்கியிருக்கு. இளம் மனைவி இறந்துட்டா...புருஷன்காரன் கதறிக்கிட்டு வந்து ஸ்டேஷன்ல கம்ளெயிண்ட் குடுத்திருக்கான்”

அமர்ந்திருந்த அனைவரும் பதறிக்கொண்டு நாற்காலியைவிட்டு எழுந்தார்கள்.

“ஓ மை காட்....அவைகள் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறிவிட்டன...அவைகளுக்குமுன் நாம் முந்திக்கொள்ளவேண்டும்....அவற்றைக் கொல்லவேண்டும்”

ஆவேசமாய் சொன்ன பன்னீர் செல்வத்தை ஆச்சர்யமாய் பார்த்தார்கள் அவர்கள்....அந்த அடுத்தக் கட்டம் என்ன என்பது விளங்காமல்........

தொடரும்

மதி
11-12-2008, 01:24 PM
அட.. அடுத்த கட்டத்தை சொல்லுங்கண்ணா...
அதே.. விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல்...

தொடருங்க

சிவா.ஜி
12-12-2008, 06:59 AM
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி மதி. நீங்கள் ஒருவராவது இந்தப்பக்கம் எட்டிப்பார்த்திருக்கிறீர்களே...சந்தோஷம். விரைவில் அடுத்ததைக் கொடுக்கிறேன்.

பாரதி
12-12-2008, 07:08 AM
அடடா....!! அப்படியெல்லாம் இல்லை சிவா. நானும் படித்து வருகிறேன். பிற நண்பர்களும் படித்து வருகிறார்கள் என்றுதான் எண்ணுகிறேன். அவ்வப்போது பின்னூட்டம் இடாத என் பிழையை உணர்கிறேன். இதைக் களைவதற்கு நான் எடுக்கும் முயற்சிகள் அடிக்கடி தோல்வியடைந்து விடுகின்றன. மன்னிக்கவும்.

சோர்வின்றி தொடர்ந்து எழுதுங்கள் சிவா.

சிவா.ஜி
12-12-2008, 07:14 AM
ஆஹா...நிச்சயமாய் வருத்தமொன்றுமில்லை பாரதி. சும்மா மதிகிட்ட அப்படி சொன்னேன். கண்டிப்பா தொடங்கியதை தொடர்ந்து முடிப்பேன். உங்கள் ஊக்கத்துக்கு நன்றி பாரதி.

என்னுடைய பழைய தொடர்களில் பார்த்தீர்களானால், பாராட்டுவதோடு குறையிருந்தால் சொல்வார்கள். உடனே அதை நான் திருத்திக்கொள்வேன். அந்த வகையான பின்னூட்டங்கள் எதுவும் இங்கு கிடைக்காததால் குழம்பிவிட்டேன்.

நிஜமாகவே நன்றாகத்தான் போகிறதா...இல்லை.....குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை குறையிருக்கிறதா என்று ஒரு பயம். அதுதான்.

நாட்டாமை
12-12-2008, 07:52 AM
முழு கதையையும் ஒரே மூச்சாக படித்து முடித்தாயிற்று..
ஒவ்வொரு பாகமும் கொஞ்சமும் விறுவிறுப்பு குரையாமல் கொண்டு போயிருக்கீங்க...
பாராட்டுக்கள்... சிவா.ஜி....D:D

சிவா.ஜி
13-12-2008, 01:21 PM
முழு கதையையும் ஒரே மூச்சாக படித்து முடித்தாயிற்று..
ஒவ்வொரு பாகமும் கொஞ்சமும் விறுவிறுப்பு குரையாமல் கொண்டு போயிருக்கீங்க...
பாராட்டுக்கள்... சிவா.ஜி....D:D

முதல் முறையா என் கதைக்குள்ள வந்திருக்கீங்க...அப்படியே பாராட்டையும் தெரிவிச்சதுக்கு நாட்டாமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்கோவ்......

சிவா.ஜி
15-12-2008, 04:07 AM
அத்தியாயம்-10


அன்று மாலை பன்னீர் செல்வம் ஹோசூர் தலைமைக் காவல் நிலையத்தில் கூட்டியக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவரும் கலந்துகொண்டார். பன்னீர் செல்வத்தின் திட்டத்தைக் கேட்க அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.

பன்னீர் செல்வம் தன் திட்டத்தை விளக்கத்தொடங்கினார்.....

“அவைகள் அடுத்தக் கட்டத்தை அடைந்துவிட்டன என்று சொன்னது அவைகளின் பகல் நேர தாக்குதல் தொடங்கிவிட்டதைத்தான். அவை மேலும் தன் குணங்களை மாற்றிக்கொள்ளுமுன் அவற்றை அழிக்க வேண்டும். ஆம்...அவைகளுக்கு நாள் குறித்துவிட்டேன். அந்த நாய்கள் பதுங்கியிருக்குமிடம் தெரிந்துவிட்டது. ஆனால் அவைகளை அங்கேயே வைத்து அழிக்க முடியாது. நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி, அந்த இடத்துக்கு எத்தனை திறப்புகள் இருக்கின்றன என்று தெரியாத நிலையில், அவற்றைத் தாக்கினால், ஒன்றிரண்டு தப்பிவிடும் சாத்தியக்கூறு இருப்பதால் நாம் புதிதான வேறு இடத்துக்கு அவற்றை வரவழைக்க வேண்டும்...”

சொல்லிக்கொண்டிருந்தவரை இடைமறித்த ஒரு காவலதிகாரி,

“அதாவது முற்றிலும் புதிய ஒரு இடத்துக்கு அவைகளை வரவழைக்கவேண்டுமென்கிறீர்கள்....பொறிவைத்துப் பிடிப்பதைப்போல, அல்லவா”

“யெஸ் யு ஆர் ரைட். நான் அதற்குத் தகுந்த ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டேன். இப்போது அவைகள் பதுங்கியிருக்கும் கிடங்கிலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கிடங்கு. ஆனால் இந்தக் கிடங்கில் இரண்டு வாசலைத்தவிர மற்றவை அடைக்கப்பட்டிருக்கும். அந்தக் கிடங்குக்குள் அந்த வெறி நாய்களைக் கொண்டு வர வேண்டும்...”

மாவட்ட ஆட்சியர் பன்னீர் செல்வத்தைப் பார்த்து,

“ எப்படி கொண்டு வரப் போகிறீர்கள் டி.எஸ்.பி? ஏதாவது திட்டமிருக்கிறதா?”

“ யெஸ் சார். இங்குதான் நான் வரவழைத்த ஓட்டப்பந்தய வீரர் மணிமாறனின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. கடந்த நாட்களில் நாங்கள் கண்காணித்ததை வைத்துப்பார்க்கும்போது அந்த நாய்களின் ஓட்ட வேகம் அதிக பட்சமாக மணிக்கு 45 கிலோமீட்டர்கள் என்று தெரிய வந்துள்ளது. மணிமாறனின் ட்ராக் ரெக்கார்ட் படி அவரது வேகம் இவற்றை விட அதிகம்.இந்த மாதிரி சூழலில் இன்னும் வேகம் அதிகரிக்க சான்ஸ் இருக்கிறது”

சற்றே நிறுத்திய பன்னீர்செல்வத்தின் முகத்தைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டவராக...

“சொல்லுங்க பன்னீர்” என்றார்

“அவைகளின் பதுங்கு இடத்திலிருந்தான வெளியேற்றம் மிகச் சீராக இருக்கிறது. ஒருநாள் பகல் பனிரெண்டு மணி, மறுநாள் இரவு பனிரெண்டு மணி. இந்த சீரமைப்பை அவை மீண்டும் மாற்றிக்கொள்வதற்குள் அவைகளை நாம் ஒழித்துவிடவேண்டும்”

“நிச்சயமாக...அதற்கு உங்கள் திட்டமென்ன?”

மாவட்ட ஆட்சியரின் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லாமல் மணிமாறனை ஒரு ஆழப் பார்வைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தார் பன்னீர் செல்வம்.

“நாளை மிகச் சரியாக நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அவை வெளியேறும். அதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாக மணிமாறன் அந்த வாசலுக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பார். நாய்கள் வெளியே வந்ததும் அவை முதலில் பார்ப்பது மணிமாறனைத்தான். உடனடியாக அவர் மீது பாயும். அப்போது மணிமாறன் வேகமெடுத்து ஓடுவார். இவருக்கும் அவைகளுக்கும் இடையில் பத்தடி தூரம்தான் இருக்கும். அனைத்து நாய்களும் இவரை அதாவது அவைகளின் இரையை பின்தொடரும். நேராக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் கிடங்குக்குள் நுழையும் மணிமாறன் மற்றொரு பக்கத்தில் திறந்திருக்கும் இன்னொரு வாசல் வழியாக வெளியேறுவார். அவர் வெளியேறிய அரை வினாடியில் அந்தக் கதவு அடைக்கப்படும். பின்னால் துரத்திக்கொண்டு வந்த நாய்கள் கிடங்குக்குள் முழுவதுமாக நுழைந்ததும், நுழைந்தக் கதவும் அடைக்கப்படும். பிறகு அவை கூட்டத்தோடு மோட்சம்தான். நாம் ஏற்கனவே அங்கு வைக்கப்போகும் வெடி அதைப் பார்த்துக்கொள்ளும்”

நீளமாக சொல்லி முடித்த பன்னீர்செல்வத்தை எழுந்து நின்று கைகுலுக்கிப் பாராட்டினார் மாவட்ட ஆட்சியர்.

“ஃபெண்டாஸ்டிக்....அருமையான திட்டம். ஆனால்...”

“சார் உங்க ஆனால்-இன் அர்த்தம் புரியுது. திட்டமிட்டபடி இது நடக்குமா...மணிமாறனின் வேகம் அவைகளை ஜெயிக்குமா என்பதுதானே உங்கள் சந்தேகம்?”

“யெஸ் அதேதான். முருகேசன் சொன்னதைப் போல அவை மிக சக்தி வாய்ந்தவை மற்றும் மிக புத்திசாலித்தனமானவை...அவைகளின் வேகத்துக்கு இவரால் ஈடு கொடுக்க முடியுமா?”

இப்போது மணிமாறன் எழுந்து,

“நிச்சயமாக முடியும் சார். என்னுடைய 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் முந்தைய ரெக்கார்ட் 105 செக்கண்ட். அந்த நாய்களைவிட என்னால் வேகமாக ஓட முடியும். அதுவுமில்லாமல்...ட்ராக்கில் ஓடுவதற்கும், வெறிநாய்த் துரத்தலுக்கு தப்பித்து ஓடுவதற்கும் வித்தியாசமிருக்கிறது. வேகம் இன்னும் கூடுமேத் தவிரக் குறையாது. என்னால் முடியும் சார்.”

“வெரிகுட். உங்களைப்போல டெடிக்கேட்டட் போலீஸ்மேன் இருக்கிறவரை நாம் யாரையும் ஜெயித்துவிடலாம். கோ அஹெட் பன்னீர். என்னுடைய முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் இந்த ஆபரேஷனில் நாம் வெற்றியடைவோம்”

கட்டை விரலை உயர்த்திக்காட்டி உற்சாகத்தோடு சொன்னவரைப் பார்த்து மிகுந்த சந்தோஷத்தோடு,

“தேங்யூ வெரிமச் சார். இந்த ஆபரேஷனுக்கு நான் வைத்திருக்கும் பெயர் 'ஆபரேஷன் பைரவ்' இந்த ஆபரேஷனில் யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்”

என்று சொன்ன பன்னீர் செல்வத்தை நோக்கி தனது முதல் சந்தேகத்தை வீசினார் இன்ஸ்பெக்டர் கருப்பையா.

“ சார், துரத்திக்கொண்டு வரும் எல்லா நாய்களும் கிடங்குக்குள் நுழைந்துவிட்டன என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது?”

“வெரிகுட் நல்ல கேள்வி. அவை ஓடி வரும் பாதையில் இரண்டு கண்காணிப்புக் கோபுரங்களை நிறுவுகிறோம். மிக சக்தி வாய்ந்த விளக்குகள் பொருத்தப்பட்டவை.ஆனால் நாய்கள் ஓடிவரும் நேரத்தில் அவை அணைக்கப்பட்டிருக்கும்.அனைத்து நாய்களும் கிடங்குக்குள் நுழைந்ததும் அவை மிகப்பிரகாசமான வெளிச்சத்தை உமிழும். அந்த வெளிச்சம் பரவலாக இருக்குமாதலால், அப்படி ஏதேனும் நாய்கள் கிடங்குக்குள் நுழையாமல் பின்தங்கிவிட்டாலோ,அல்லது தப்பி ஓடினாலோ அந்த நாய்களை கோபுரத்திலிருந்தே சுட்டுக்கொல்ல முடியும். அடைபட்டவைகளின் கதி என்ன என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா...ஹா..ஹா..”

தனது திட்டத்தின் மேல் பூரண நம்பிக்கை வைத்திருந்த பன்னீர்செல்வம் இப்போதே வெற்றியடைந்துவிட்ட சந்தோஷத்தில் தன்னை மறந்து சிரித்தார்.

“ஓக்கே பாய்ஸ்...நாளை பகலும், இரவும் பரபரப்பானவையாக இருக்கப்போகிறது. இன்றிரவு நிம்மதியாய் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். இன்று பகலிலேயே வந்துவிட்டுப் போன அந்த நாய்கள் இனி நாளை இரவுதான் வெளிவரும். நாளை சந்திப்போம்.”

“யெஸ் சார்...ஆபரேஷன் பைரவ் வெற்றியடைய வாழ்த்துகள்”

“தேங்யூ சார். உங்கள் ஒத்துழைப்புடன் நாளை இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிப்போம்”

மாவட்ட ஆட்சியரை நோக்கிப் புன்னகையுடன் சொல்லிவிட்டு சந்தோஷமாக மணிமாறனின் தோள்மீது கையைப் போட்டவாறே தன் ஜீப்பில் ஏறினார் பன்னீர்செல்வம்.


தொடரும்

பாரதி
15-12-2008, 05:26 AM
ம்ம்...! புதிய முயற்சிதான். விலங்குகளைப் பிடிக்க மனிதப்பொறி!!!
தொடருங்கள் சிவா.

சிவா.ஜி
15-12-2008, 05:59 AM
ஏதோ என்னால முடிந்த முயற்சி பாரதி. எப்படி வருகிறது எனப் பார்ப்போம். ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

நாட்டாமை
15-12-2008, 07:14 AM
மணிமாறனின் வேகத்தை விட
கதை வேகமா போகுதே... :):)

தொடருங்கள் சிவா.ஜி.....
ஆவலோடு...

சிவா.ஜி
15-12-2008, 08:28 AM
ரொம்ப நன்றி நாட்டாமை அய்யா. இன்னும் ஒரு அத்தியாயம்தான். முடிச்சிடுவேன்.

மதி
15-12-2008, 03:37 PM
அசுர வேகத்தில் பயணிக்கிறது... திட்டம் ரெடி.. அடுத்தது என்ன? ஒழுங்காக செயல்படுத்தினார்களா..??

ஆவலில்..

சிவா.ஜி
15-12-2008, 04:34 PM
செயல்படுத்தினார்களா என்றால்....பொறுத்திருந்துதான் பார்க்க வேன்டும் மதி. அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். விடை கிடைக்கும். நன்றி மதி

சிவா.ஜி
18-12-2008, 06:38 AM
அத்தியாயம்-11(நிறைவுப்பகுதி)


திட்டமிட்டபடிநாய்கள் துரத்த மணிமாறன் ஓடத்தொங்கினார். ஆனால் சற்று நேரத்திலேயே...சற்று தூரத்திலேயே நாய்கள் அவரை சமீபித்துவிட்டன. அத்தனை நாய்களும் அவர்மீது பாய்ந்து...

திடுக்கிட்டு விழித்து எழுந்தார் பன்னீர்செல்வம். ரேடியம் வைத்த கடிகாரம் இரவு ஒன்றரையை பச்சையில் காட்டியது. அதே சிந்தனைகளுடன் தூங்கிப்போனதால இப்படிப்பட்டக் கனவு வந்திருக்கிறது. ஆனால்...இப்போது அவருக்கு குழப்பமாக இருந்தது. கனவில் நிகழ்ந்தது நிஜத்திலும் நிகழ வாய்ப்புகள் உள்ளன.

ஆபத்தான முயற்சியில் ஈடுபடுகிறோமோ....நாய்களின் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோமோ...என நினைத்துக்கொண்டே, தூக்கம் போய்விட்ட நிலையில் படுக்கையைவிட்டு எழுந்து கணினி இருக்கும் அறைக்கு வந்தார். கணினியை உயிர்ப்பித்தார். கூகுளம்மனை எழுப்பினார். நாய்களின் அதிக பட்ச ஓட்டவேகம் என தட்டச்சினார்.திறந்த பக்கங்களிலிருந்து அவருக்குக் கிடைத்த தகவல்களின் சாராம்சம்...

நாய்களின் சராசரி அதிகபட்ச வேகம் மணிக்கு 40 கிலோமீட்டர்கள். ஆனால் அதிலேயே குறிப்பிட்ட வகை நாய்கள் இன்னும் அதிக வேகமாய் ஓடும் திறனுள்ளவை.

அதேசமயம் ஒரு தொழில்முறை ஓட்டப்பந்தயவீரனின் அதிகபட்ச வேகம் மணிக்கு 43 கிலோமீட்டர்கள்.

சரி எப்படி பார்த்தாலும் இந்த நாய்களின் வேகத்தை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. இவைகள் அதிக வெறிபிடித்த நாய்கள்...மிகுந்த யோசனையில் இருந்த பன்னீர்செல்வம் தனது கையிலிருந்த எலியின் முதுகை தடவிக்கொடுத்ததும் அவர் திறந்திருந்த இணையப்பக்கம் மேலும் கீழிறங்கியது.

யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர் அந்த வரிகளைப் படித்ததும் நிமிர்ந்து அமர்ந்தார்.

அதாவது குறைந்த பட்ச தூரத்தை மிக வேகமாக கடப்பதில் நாயுடன் மனிதன் போட்டி போடமுடியாது. ஒரு நாய் 650 மீட்டரை 40 வினாடிகளில் கடந்துவிடும். ஆனால் மனிதனுக்கு 400 மீட்டர் தாண்டவே 50 வினாடிகள் தேவைப்படும்.

ஒரு முடிவுக்கு வந்தார். மணிமாறனை ஆபத்தில் விடவேண்டாம். வேறு திட்டத்தை யோசிக்க வேண்டும்.

எழுந்து உலாத்தினார். சமையலறைக்குப் போய் ஒரு கறுப்புத் தேநீர் உண்டாக்கி அருந்தினார். லேசாக மாற்றுத்திட்டம் அவரது மூளையில் உருவாகத் தொடங்கியது. ஆனாலும் அவருக்குள் பல சந்தேகங்கள் முளைத்தன. தீர்மானமாக முடிவு செய்ய இயலவில்லை. காலையில் ஒரு கலந்தாலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

காலை ஏழு மணிக்கு பன்னீரின் அலைபேசி 'அதோ அந்த பறவை போல...' என்று பாடி அவரை அழைத்தது.

மறுமுனையில் மாவட்ட ஆட்சியர்,

‘குட்மார்னிங் சார்..”

“குட்மார்னிங் பன்னீர். உங்கள் திட்டத்தைப் பற்றி...”

“சாரி சார்...குறுக்கே பேசுவதற்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்ல வருவது என்ன என்று எனக்குத் தெரியும். நான் திட்டத்தை மாற்றிவிட்டேன். மணிமாறனை ஆபத்தில் சிக்க வைக்க முடியாது. அதனால் மாற்றுத் திட்டம் குறித்து யோசிக்க வேண்டும்.”

“வெரிகுட் நான் சொல்ல வந்ததும் அதுதான். அதைக் குறித்து பேச வேண்டுமே..”

“9 மணிக்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணியிருக்கேன். அங்கு பேசுவோம் சார்.”

“குட். வீ வில் மீட் தேர். பை”

கலந்துரையாடல் கூடம். நேற்று கலந்துகொண்டவர்களே இன்றும் இருந்தனர். மணிமாறன் முகத்தில் மட்டும் லேசான வாட்டம். ஒரு சாதனை செய்யும் சந்தர்ப்பம் தவறிவிட்டது அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

பன்னீரின் கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். இருந்தாலும் ஒரு ஆபத்தான திட்டத்தை முன் வைத்ததற்கு அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்...

“நோ...பன்னீர்செல்வம். மன்னிப்பு எதற்கு? நல்ல திட்டம்தான் ஆனால் ஒரு மனித உயிரைப் பணயம் வைக்க முடியாது. அதனால் அதைக் கைவிட்டோம். இப்போது உங்கள் மாற்று திட்டத்தை சொல்லுங்கள்.”

“தேங்யூ சார். இந்தமுறை என்னிடம் தீர்மானமாக ஒரு முழுமையான திட்டம் இல்லை. சில திட்டங்களைப் பற்றி ஆலோசித்தேன். ஆனால் அவற்றின் சாத்தியங்களைப் பற்றி எல்லோரும் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். பிறகு திட்டத்தை முடிவு செய்யலாம்”

“சரி சொல்லுங்கள் பன்னீர்”

“ அந்த நாய்கள் பதுங்கியிருக்கும் கிடங்கையே தாக்குவது என்னுடைய முதல் திட்டம். அதாவது அதன் திறப்புக்களை வெளியிலிருந்தே அவைகளுக்குத் தெரியாமல் அடைத்துவிடவேண்டும்”

“சாதாரனமாகவே நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம். அதிலும் இவை புத்திசாலித்தனமான நாய்கள். அவைகள் நமது நடமாட்டத்தை மோப்பம் பிடித்துவிடுமே?”

இன்ஸ்பெக்டர் அறிவழகனின் கேள்வியை காதில் வாங்கிக்கொண்ட பன்னீர் யோசித்துக்கொண்டே....

“சரிதான் அறிவழகன். அதனால் அவை வெளியே போயிருக்கும் நேரத்தில்தான் நாம் அந்தக் காரியத்தை செய்ய வேண்டும். ஆனாலும் அவை திரும்பி வந்ததும் வேற்று வாசனையை அறிந்துகொள்ளும். அங்கு தங்காமல் உடனே வெளியேறிவிடக்கூடிய சாத்தியமிருக்கிறது”

“சரி அப்படியானால் இது சரியாக வருமென்று தோன்றவில்லை. அடுத்த திட்டத்தைப் பற்றி சொல்லுங்கள்”

மாவட்ட ஆட்சியரின் பேச்சைத் தொடர்ந்து...

“ சிறியரக ஏவுகனையை தூரத்திலிருந்தே அந்த கிடங்கின்மேல் செலுத்தி அவற்றை கூண்டோடு அழிப்பது”

பன்னீர்செல்வம் சொன்னதும்...அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“செய்யலாம். ஆனால் அதற்கு இராணுவத்தினரின் உதவி தேவைப்படும். மத்திய அரசின் அனுமதி தேவைப்படும். இவையெல்லாமே கிடைக்கும். ஆனால் காலதாமதமாகும். அதற்குள் இந்த வெறிநாய்களின் அட்டகாசம் அதிகரித்துவிட்டால் இன்னும் எத்தனை உயிர்களை இழக்கவேண்டி வருமோ..”

மாவட்ட ஆட்சியர் சொன்னதும்,

“வேறு வழியில்லை சார். எப்படியாவது அனுமதி வாங்கி, இராணுவத்தினரின் உதவியுடன் அவற்றை அழித்துத்தான் ஆகவேண்டும். அதுவரை நமது கண்காணிப்பை தீவிரப்படுத்துவோம். மேலும்காவலர்களை ரோந்துப்பணியில் அதிகரிப்போம்”

மாவட்ட ஆட்சியர் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போதே...கூடத்தின் கதவு தட்டப்பட்டது. அனைவரின் பார்வையும் வாசலுக்குத் திரும்பியது. கதவு திறந்ததும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்து விறைப்பான சல்யூட்டுக்குப் பிறகு,

“சார் ஒரு முக்கியமான செய்தி. அதனால்தால் உங்களை உடனடியாக சந்தித்து அதை சொல்ல வந்தேன்.”

“ பரவாயில்லை சொல்லுங்கள் சன்முகம்..”

பன்னீர்செல்வம் அனுமதியளித்ததும்,

“15 நிமிடங்களுக்குமுன் அந்த நாய்கள் பதுங்கியிருந்த கிடங்கு வெடித்து சிதறி அத்தனை நாய்களும் இறந்துவிட்டன.”

இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றுவிட்டனர்.

மாவட்ட ஆட்சியர்,

“என்ன....என்ன சொல்றீங்க? கிடங்கு வெடித்து சிதறிடிச்சா...யார் செஞ்சது இதை?”

“இந்தக் கடிதம் சம்பவ இடத்தில் கிடைத்தது.”

என்று சொல்லிக்கொண்டே அந்தக் கடிதம் வைக்கப்பட்டிருந்த உறையை பன்னீர் செல்வத்திடம் கொடுத்தார்.

உறையின் மேல் காவல்துறை என்று எழுதியிருந்தது. பிரித்தார். உள்லேயிருந்த கடிதத்தைப் பிரித்து உரக்க வாசித்தார்...

“ காவல்துறை அதிகாரிகளுக்கு, இந்த வெறிபிடித்த நாய்களால் குதறியெடுக்கப்பட்டு இறந்துபோன ஒரேமகனின் தந்தை நான். மகன் இறந்த அதிர்ச்சியில் என் மனைவி சித்தம் கலங்கி சுயநினைவுகளை இழந்து நடைப்பிணமாக மாறிவிட்டாள். சின்னஞ்சிறு குடும்பமாக எங்களுக்கென்று ஒரு உலகத்தில் ஆனந்தமாக இருந்தோம். இன்று என்னிடம் என் ம்கனும் இல்லை, மனைவியும் இருந்தும் இல்லாதிருக்கிறாள்.

இதைப் போன்ற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது. என் சேமிப்பையெல்லாம் இந்த மூன்று கிலோ ஆர்.டி.எக்ஸ் வாங்க செலவிட்டுவிட்டேன். என்னையே நடமாடும் வெடிகுண்டாக மாற்றிக்கொண்டுள்ளேன்.

அந்த அரக்க நாய்களின் இருப்பிடத்துக்குப் போகிறேன். இந்தக் கடிதம் உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் நானும் இருக்க மாட்டேன், அந்த நாய்களும் இருக்காது. எனக்கு இந்த நாய்கள் பதுங்கியிருக்கும் கிடங்கு இருக்குமிடம் எப்படி தெரிந்தது என்று பார்க்கிறீர்களா? கண்காணித்தேன் கண்டுபிடித்தேன். என்மகன் சதீஷுடன் இணையப்போகிறேன். இனி இந்த ஊரில் எந்த உயிரும் இந்த நாய்களால் பறிபோகக்கூடாது.

வணக்கம்”

“விகாஸ் நகரில் இறந்த சிறுவனின் தந்தை....”...அந்த வழக்கை கையாண்ட காவலதிகாரி சொன்னார்.

“தன் உயிரைக்கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கும் இவரின் ஆன்மா சாந்தியடைய அவருக்காக பிரார்த்திப்போம்”

பன்னீர் செல்வத்துடன் அனைவரும் அமைதியாய் நின்றார்கள்.


நிறைவடைந்தது.

(நல்ல குறிப்புகள் கொடுத்து உதவிய தாமரை அவர்களுக்கு என் நன்றிகள்)

ராஜா
18-12-2008, 06:48 AM
ஒவ்வொரு அத்தியாயமும் திகிலில் "தள்ளிக் கொல்லும் பதிவுகள்" ஆக இருந்தன சிவா..!

இறுதியில் எதிர்பாரா முடிவாக ஒரு தந்தையின் தியாகம் உருக வைக்கிறது.

காலத்தைக் கடந்து நிற்கும் கற்பூரப் பதிவு..!

வாழ்த்துகள் சிவா..!

நாட்டாமை
18-12-2008, 07:09 AM
எப்பிடி எல்லா நாய்களையும் ஒரே நேரத்தில் .......
எதிர்பாராத .....
வித்தியாசமான முடிவு...
ஒவ்வொரு பாகவும் பரபரப்பு... + விறுவிறுப்பு...
பாராட்டுக்கள்...... வாஜி....... சிவாஜி
---------
ஆனால் சகோதரரே.. ஒரு சிறு சந்தேகம்..
தன் மகனின் உயிருக்காக பழிவாங்கிய தந்தை..
மனைவியை மறந்து விட்டாரா...
மனநிலை பாதிக்கப்பட்ட மனைவிக்கு இனி யார் துணை...

சிவா.ஜி
18-12-2008, 07:14 AM
மிக்க நன்றி ராஜா சார். உங்கள் அனைவரின் ஊக்கமும், உற்சாகமும் என்னை மேலும் எழுதவைக்கும்.

சிவா.ஜி
18-12-2008, 07:16 AM
ஆனால் சகோதரரே.. ஒரு சிறு சந்தேகம்..
தன் மகனின் உயிருக்காக பழிவாங்கிய தந்தை..
மனைவியை மறந்து விட்டாரா...
மனநிலை பாதிக்கப்பட்ட மனைவிக்கு இனி யார் துணை...

அதுதான் சகோதரா மனித மனமென்பது. ஒரே மகன் இறந்ததும், அன்பு மனைவி சித்தம் கலங்கிய நிலக்கு ஆளானதும் அவரை பாதிக்க வைத்த அளவுக்கு விளைவுகளை யோசிக்க வைக்கவில்லை.

உங்களின் ஊக்கத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி நாட்டாமை.

நாட்டாமை
18-12-2008, 07:20 AM
அவரை பாதிக்க வைத்த அளவுக்கு விளைவுகளை யோசிக்க வைக்கவில்லை.
அதுவும் கரெக்ட் தான்....
தெளிய வைத்தமைக்கு நன்றி...

பாரதி
18-12-2008, 11:21 AM
எதிர்பாராத முடிவு சிவா!இனிய வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகட்டும்.தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை தாருங்கள். நன்றி.

ஆதவா
18-12-2008, 11:34 AM
அபாரமாக ஒரு கதையை முடித்துவிட்டீர்கள் அண்ணா.. எடுத்த கதையின் முடிச்சு போட்டு அவிழ்ப்பதெல்லாம் உங்களுக்கு சுலபம் என்றாலும் எடுத்துக்கொண்ட கருவைப் பற்றி பலவிபரங்கள் தெரிந்துகொண்டு பின்னர் எழுதுவது என்பது கல்லூரியில் தேர்வு எழுதுவதைப் போன்றதாகும்..

இப்பொழுது உங்கள் ரிசல்ட்...

vCJD எனும் நோய் பற்றி அறிந்து கொள்வதற்கு ஏதுவாக கதை இருந்தது.. ஆரம்பத்தில் இந்நோய் ஏதோ உங்கள் கற்பனைதான் என்று நினைத்தாலும் ஆதாரங்களும், கதை செல்லும் பொழுதே பயணித்த விவரங்களும் அப்படியொரு நோய் இருப்பதை உணர்த்தியது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் திருப்பங்கள், அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகள், வெறிநாய்களை விவரித்த விதம், ஆகியவை கண்ணுக்குள் கொண்டு சென்றது கதை. ஓசூர், தளி, என்றாலே மனதில் புளி கரையுமளவுக்கு எழுத்து நடை இருந்திருக்கிறது.

ஆரம்பத்தில் சரியான வேகத்தில் சென்றுகொண்டிருந்த உங்கள் கதை, போகப்போக வேகம் அதிகரித்து இறுதியில் ஜெட் வேகம் ஆகிவிட்டது. மணிமாறன் அத்தியாயம் படிக்கும்பொழுதே மனதில் உதித்தது, நாய்களை அந்தக் கூடாரத்திலேயே வைத்துக் கொல்லலாம் என்பது.. எதற்காக இன்னொரு கூடாரம் என்று தோன்றியது.. பின்னர் அதை இறுதி அத்தியாயத்தில் நீங்களே சொல்லிவிட்டீர்கள்... இது பன்னீர்செல்வத்தின் திட்டக்கோளாறைக் குறிக்கிறது.

எதிர்பாராத திடீர் தற்கொலைத் தாக்குதல்... திருப்பம்தான் என்றாலும் சப்பென்று இருக்கிறது.. (சென்ற கதையிலும் இறுதிபாகம் கொஞ்சம் திகில் குறைந்தபாகமாக இருந்தது.) அதற்குப் பதில், வாசகர்களுக்குப் பிடிப்பதைப் போன்று மாற்று திட்டங்கள் யோசித்து பின்னர் கொன்றிருக்கலாம்.

அழகு தமிழ், பழகிய ஊர்கள், கொடூர பயணம், இரத்த நெடி, திறமை மிகுந்த காவலர்கள், தியாகம் செய்த அப்பா, என்று அப்படியே ஒரு வலம் வந்த இக்கதை.... நிச்சயம் உங்கள் உழைப்பின் பரிசு......

வாழ்த்துக்கள் சிவா.ஜி அண்ணா...

(இடையிடையே படிக்காததற்கு மன்னிக்கவும், ஆண்டாளை லவ்விக் கொண்டிருந்ததாலும், சற்று வேலையிருந்ததாலும் படிக்க இயலவில்லை )

மதி
18-12-2008, 04:40 PM
அசத்திட்டீங்கண்ணே...
எதிர்பார்க்கவே இல்லை இந்த முடிவை... வழக்கம் போல கலக்கல் தான்.. :)

அக்னி
18-12-2008, 06:24 PM
ஆரம்பத்திலேயே,
கொலையாளிகளை வெளிப்படுத்திவிட்டு,
அதனைச் சுற்றி விறுவிறுப்பாகக் கதையைப் பின்னுவது என்பது,
மிக மிகக் கடினமானது.
விறுவிறுப்புக் குன்றித் தொய்வு ஏற்படும் நிலை தோன்றச் சாத்தியங்கள் அதிகம்.
ஆனால்,
அந்நிலை இக்கதையில் ஏற்படவில்லை.
சிறப்பான திட்டமிடலில் இறுதிவரை விறுவிறுப்பாக அமையப்பெற்றுள்ளது.
அதற்கு என்னுடைய விசேட பாராட்டுக்கள்.

சிவா.ஜியின் கதைகள் என்றாலே,
புதுமையான, உண்மையான விடயங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிட்டது.
அது இங்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அத்தியாயத்திலும்,
இவர்தான் கதாநாயகனோ என்று நினைக்கவைத்து, ஏமாற்றி,
இறுதிவரை கதாநாயகன் என்று ஒருவருமில்லாமல்,
மனித வில்லன்களுமில்லாமல்,
ஒரு வெற்றிக்கதையை அமைப்பது சாத்தியமா என்றால்,
துணிந்து இந்தக் கதையைக் கைகாட்டலாம்.

நேர்த்தியான இந்தக் கதையில்,
அத்தியாயம் மூன்று மட்டும் அவசரத் திணிப்பாகத் தோன்றுகின்றது.
ஆதவாவும் அதனைக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குரிய விளக்கம் உங்களால் தரப்பட்டிருந்தும், அவ்வாறு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தவிர்த்திருக்கலாம். அத்தியாயத்தை அல்ல, அந்தத் தோற்றத்தை.

அத்தியாயம் ஒவ்வொன்றும் திருப்பங்களுடன் இருந்தது.
என்னால், அத்தியாயம் ஒன்பதின் திருப்பத்தை மட்டும் ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தது.
மற்றனைத்துமே எதிர்பாராதவை.
முடிவு, நிச்சயமாக எதிர்பார்க்காத ஒரு திடீர்த் திருப்பம்.

மணிமாறனைக் கனவில் ஓடவைத்த நிகழ்வை நிஜப்படுத்தி,
காவற்துறையும், மற்றோரும் செயலற்று நிற்கும் நிலையில்,
இம்முடிவை இன்னோரு அத்தியாயமாகத் தந்திருக்கலாம் என்பது,
எனது தனிப்பட்ட கருத்து.

எனக்குப் பிடிக்காத ஒன்றும் இந்தக் கதையில் உள்ளது.
அது,

நிறைவடைந்தது.

இதுதான்.

அதனால், அடுத்த தொடர்கதையை விரைவாகத் தொடங்குங்கள்.

உங்களுடன் தொடர்ந்து வந்து, பின்னூட்டங்களிட, ஏதுவான நிலை எனக்கிருக்கவில்லை.
ஆனாலும் தொடர்ந்து வாசித்து வந்தேன்.

மிகுந்த பாராட்டுக்கள் சிவா.ஜி...

மதுரை மைந்தன்
18-12-2008, 06:32 PM
ஒரு நல்ல திகில் கதையை மிக விறு விறுப்பாகயும் என்னை இருக்கையின் விளிம்பிற்கு வந்து படிக்க வைத்ததற்கும் பாராட்டுக்கள். உங்களுடய இந்த ரசிகன் இக்கதைக்குப் பின் தீவிர ரசிகனாகிறேன்.

சிவா.ஜி
19-12-2008, 04:00 AM
ஆரம்பம் முதல் உடன் பயணித்து ஊக்கமளித்துவந்த உறவுகளுக்கு மனம் நிறைந்த நன்றி. பாரதியின் பாராட்டும், பரிசும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

மதியின் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சிவா.ஜி
19-12-2008, 04:06 AM
ஆதவாவின் அலசல் என்னை ஆனந்தப்படவைக்கிறது. மிக உன்னிப்பான பார்வையில் குறை நிறைகளை சொன்ன விதம் மிக மிக கவர்கிறது.

நிச்சயமாக உங்கள் கருத்து சரிதான் ஆதவா. சில நாட்களாக ஒரு மனச்சோர்வில் இருக்கிறேன். உங்களுக்கே தெரியும் ஒரு அத்தியாயத்திற்கும் அடுத்ததற்குமிடையில் இத்தனை இடைவெளி விடுபவனல்ல நான். நன்றாக எழுத நினைத்தேன். முடிவை இன்னும் நன்றாக மனதில் வடிவமைத்திருந்தேன். ஆனால் இப்போதே முடித்துவிட வேண்டுமென்று ஏனோ தோன்றிவிட்டது. அதனால் தான் அந்த சப்பென்ற முடிவு. மன்னிக்கவும் ஆதவா. இன்னும் சிறிது நாட்களுக்கு எந்த தொடரும் எழுதுவதில்லை என்றிருக்கிறேன்.

மனச்சோர்வு நீங்கி மீண்டும் புத்துணர்ச்சியடைந்ததும் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ரவாறு ஒரு தொடரைத் தருகிறேன்.

மிக்க நன்றி ஆதவா.

சிவா.ஜி
19-12-2008, 04:10 AM
அக்னியின் பின்னூட்டம்...ஆஹா...எனக்குப் பெருமையாக இருக்கிறது. உங்களைப்போன்ற முதல்தர விமர்சகர்களின் திருப்திக்கு கதை எழுத எனக்கும் கொஞ்சம் வருகிறது என்று நினைப்பதால் அந்த பெருமை.

ஆனால்.....இன்று என்னால் நன்றாக எழுத முடிகிறது என்றால் அது நிச்சயமாய் இப்படிப்பட்ட பின்னூட்டங்களால்தான். அதற்காக எத்தனைமுறை நன்றி சொன்னாலும் தகும். மனம் நிறைந்த நன்றி அக்னி.

(அடுத்த தொடர் இப்போது இல்லை அக்னி. ஆதவாவுக்குச் சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். கொஞ்ச நாள் பொறு தலைவா......)

சிவா.ஜி
19-12-2008, 04:11 AM
ஒரு நல்ல திகில் கதையை மிக விறு விறுப்பாகயும் என்னை இருக்கையின் விளிம்பிற்கு வந்து படிக்க வைத்ததற்கும் பாராட்டுக்கள். உங்களுடய இந்த ரசிகன் இக்கதைக்குப் பின் தீவிர ரசிகனாகிறேன்.

மிக நல்ல ஒரு எழுத்தாளரின் பாராட்டைப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி மதுரை மைந்தரே...மிக்க நன்றி.