PDA

View Full Version : பஸ் வேகமாக சென்றதுரங்கராஜன்
02-11-2008, 12:16 PM
மு.கு : நம்முடைய நண்பர் திரு. மதி அவர்கள், கதை களன்களை பற்றி எனக்கு சில அறிவுரைகளை கூறினார். திடீர் மாற்றம், எதிர்ப்பார்க்காத டீவிஸ்டுகள் இல்லாமல், மென்மையான அதே சமயம் மனதை கணக்கவைக்கும் கதை வேண்டும் என்றார். நண்பனின் அறிவுரையை ஏற்று. இதோ அதற்க்கான முயற்சி


பஸ் வேகமாக சென்றது


பஸ் வேகமாக சென்றது, அதன் பின்னாடியே அந்த ஊனமுற்ற சிறுவன் ஓடி வந்துக் கொண்டு இருந்தான்

"ப்ளீஸ் பஸ்சை நிறுத்துங்க ........, என் கிட்ட வேறு காசு இல்லை, நிறுத்துங்க ப்ளீஸ்"

பஸ் வேகமாக மதிக்காமல் சென்றது. ஜகன் அவனை பாவமாக பார்த்தான்.

சென்னை நகர லோக்கல் பஸ்கள், இப்படி நடப்பது சகஜம் தான்.பஸ்சில் கண்டக்டர் பயணிகளிடம் டிக்கெட்டை விற்றுக்கொண்டு இருந்தார். ஓரத்தில் பயந்தபடி ஜகன் உக்கார்ந்து இருந்தான், கண்டக்டர் அவனிடம் வந்து

"காசா பாஸா, சீக்கிரம் சொல்லுடா?"

"பாஸுணா"

"சரி காட்டு பாக்கலாம்,(அதற்க்குள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு இருக்கும் இளைஞர்களை பார்த்து) தம்பிங்களா, பரீட்சை எழுத கை வேணும் ஓழுங்கா மேல ஏறி வாங்க, சீக்கிரம் எடுடா?"

ஜகன் தன்னுடைய பையில் கைவிட்டு பாஸைத் தேடிக் கொண்டு இருந்தான், அதற்க்குள் கண்டக்டர்

"சரி விடுடா, இருக்குதானே" என்று அடுத்த சீட்டுக்குச் சென்றார்.

ஜகன் மனதுக்குள் "அப்பாடா, பிள்ளையாருக்கு இன்னிக்கு ஒரு தேங்காய் உடைக்கனும்"

பஸ் மெரினா பீச்சு ஸ்டாப்பில் பயணிகளை கக்கிவிட்டு, முக்கிக் கொண்டே புறப்பட்டது. கக்கப்பட்ட கூட்டத்தில் ஜகனும் இருந்தான். இறங்கியவுடன் ஜாலியாக கடலைப் பார்த்து ஓடினான். ஜகன் எக்ஸாமில் பாஸாகவில்லை, பெற்றவர்களின் திட்டுக்கு பயந்து வீட்டைவிட்டு ஒடிவந்துள்ளான், பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு, வயது 12. பள்ளி சீருடையுடன் கடலுக்கு ஓடிவந்து விட்டான். காலை 9.00 மணி கடற்கரையே காலியாக இருந்தது, இவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை ஏன்னென்றால் இவன் கடலை இதுவரை காலியாக பார்த்ததே கிடையாது. சில ஞாயிறுகளில் அப்பா அம்மாவுடன் வரும் பொழுது கடல் மணல்களை விட மக்கள் அதிகமாக இருப்பார்கள் ஒருவர் கால் மீது இன்னொறுவர் நிக்க வேண்டும், அவ்வளவு கூட்டம். அதனால் கடலை காலியாக பார்த்தவுடன் அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, அவன் ஓடிச்சென்று ஒரு படகு அடியில் தன்னுடைய துணிகளை களைந்துவிட்டு, தன்னுடைய ஸ்கூல் பேகையும் வைத்து விட்டு, கடலில் போய் சந்தோஷத்துடன் விழுந்தான்.

ஜகன் மனதுக்குள் "ச்ச என்ன ஜாலியா இருக்கு, இந்த மாதிரி நேரத்துல வந்தா எவ்வளவு காலியா இருக்கு, இனிமே ஜாலிதான்" என்று நினைத்துக் கொண்டு கடலில் வரும் அலைகளில் குதித்து ரசித்தான்.

கடற்கரையில் ஒரு ஈக்கூட இல்லை,ஆனால் சில காக்கைகள்
இருந்தது. அந்த மொத்த கடற்கரையும் அவனுக்கு மட்டும் சொந்தம் என்று எண்ணினான்.அடிக்கடி படகுக்கு அடியில் இருக்கும் பையை எழுந்து பார்த்துக் கொண்டான்

"இனிமே அது எதுக்கு, எங்கயாவது ஒரு வேலைக்கு சேர்ந்துடலாம், நிறைய சம்பளம் கிடைக்கும், இந்த பீச்சிலே தங்கிடலாம், அடிக்கடி
திமிங்கலம் எல்லாம் வரும் ஜாலியா பார்க்கலாம்,சாப்பாடு இங்கயெங்கையாவது, யாராவது விப்பாங்க. கடலும் பக்கத்துல அதனால தினமும் மீன் குழம்பு கிடைக்கும் ஜாலி தான்" என்று மனதுக்குள் பல திட்டங்கள் போட்டான். நேரம் ஆக ஆக அவனுக்கு தனியாக விளையாட
அலுப்பாக இருந்தது.

தூரத்தில் இரண்டு சிறுவர்கள் கடற்கறையை நோக்கி நடந்து வந்தார்கள். ஜகனுக்கு அவர்களை பார்த்தவுடன் சந்தோஷமாக ஆகிவிட்டது
விளையாட ஆள் கிடைத்துவிட்டார்கள் அதனால். அவர்கள் இருவரும் பொறுமையாக நடந்து வந்தார்கள், மணி 11.00 ஆனது ஜகன் அவர்களையே பார்த்தான் கானல்நீரில் இவர்கள் வளைந்து வளைந்து வந்தார்கள். இவனுடைய சட்டை காற்றில் அடித்துக் கொண்டு சென்றது, ஜகனும் அதன் பின்னாடியே ஓடினான். அதை தூரத்தில் இருந்து வந்த கொண்டு இருந்த பையன் பிடித்தான். ஜகன் அவனிடம் போய்

"தாங்கஸ்டா, என் பேரு ஜகன்"

"என் பேரு வருண், இவன் என் தம்பி, பேரு தயாளன்". வருணுக்கு 12 வயது இருக்கும் சிகப்பாக இருந்தான், தயாவுக்கு 9 வயசு இருக்கும்
அவனுக்கு இரண்டு கால்களும் வளைந்து இருந்தது.

ஜகன் "என் ஆச்சி தயா காலுக்கு"

"அவனுக்கு சின்ன வயசுல போலியோ அட்டாக ஆச்சுனு எங்க அப்பா சொன்னார்"

"யாரவது அட்டாக் அட்டாக் போட்டா இப்படி ஆயிடுமா" புரியாமல் கேட்டான் ஜகன்.

"ஊசி போடலைனா இப்படி ஆயிடும்" புரிய வைக்க முயற்சித்தான் தயா.

மூவரும் பேசிக்கொண்டு படகுக்கு அடியில் போனார்கள். ஜகன் டிபன் பாக்ஸை எடுத்தான்

"காலையில் இருந்து நான் சாப்பிடவே இல்லை, நீங்க"

"நாங்களும் தான்" வருண்

"இல்ல நாங்க சாப்டோம்" தயா

"இந்தாங்க கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொங்க". வருணுக்கு தக்காளி சாதத்தை பார்த்தவுடன் நாக்கு ஊறியது. அவன் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு தன்னுடைய தம்பிக்கு ஒரு வாய் ஊட்டினான்.

"இன்னைக்கு உங்க ஸ்கூல் லீவா" என்றான் ஜகன்

"ஆமா நாங்க லீவு போட்டோம், எங்க அப்பா பாரின்ல இருந்து வந்து இருக்கார் அதனால"

"அப்புறம் எதுக்கு அவரை விட்டு நீங்க பீச்சுக்கு தனிய வந்தீங்க" ஜகன்

"இல்ல எங்க சித்திதான் போக சொன்னாங்க, எங்க அப்பாவும் முதல்ல வேண்டாம்னு சொன்னாரு, அப்புறம் எங்க சித்தி எதோ உள்ள கூட்டுனு போய் பேசினாங்க. அவரும் எங்களை போக சொல்லிட்டாரு. எங்கல பீச்சுக்கு போய் விளையாட சொல்லிட்டாரு, வீட்டுல இருந்து பஸ்ல வந்தோம் மதியானத்துக்கு மேல வரச் சொன்னாங்க. சரி உங்க ஸ்கூல் லீவா"

"இல்ல நான் வீட்டை விட்டு வந்துட்டேன், நான் இனிமே ஜாலியா பீச்சுல தான் இருக்க போறேன். இந்த போட்டு ஓனர் அங்கில் என் ஃப்ரன்டு தான் என்ன கடலுக்கு உள்ள கூட்டினு போறேன் சொல்லி இருக்காரே, நாளைக்கு"

வருணுக்கும், தயாவும் வாயை திறந்த படி கேட்டு கொண்டு இருந்தார்கள், ஜகனின் வார்த்தைகள் அவர்களுக்குள் ஆவலை ஏற்றியது.

"டேய் எங்களையும் கூட்டுனு போக சொல்றீயா, ப்ளிஸ்" வருண்

"அவரு என் ஃப்ரன்டு என்னை மட்டும் தான் கூட்டினு போவாருன்னு நினைக்கிறேன், சரி வேணும்னா சொல்லி பார்குறேன். ஆனா நான் சொன்னபடி தான் நீங்க கேட்கனும்"

மூவரும் திரும்பவும் தண்ணியில் விளையாடினார்கள். மதியம் சாப்பாட்டுக்கு மீதி இருந்த சாப்பாடை பத்தாமல் மூவரும் சாப்பிட்டனர்.

"நான் கூட வீட்டைவிட்டு வந்துடலாம்னு பார்க்குறேன், என் சித்தி என்னையும் என் தம்பியையும் அடிச்சுக்குனே இருப்பாங்க, பிடிக்கவே இல்ல"

"உன் அப்பா உன் சித்தியை அடிக்கமாட்டாரா"

"அவரு நாலு வருஷத்துக்கு ஒரு தடவைதான் வருவாரு, அவரு எங்க சித்தியை அடிச்சு நான் பார்த்தது இல்லை"

"எங்க அப்பா எங்க அம்மாவ செம அடி அடிப்பார், ரஜினி மாதிரி கையை முறிக்கினு அடிப்பார். அப்ப சரி இனிமேல் நாம மூணு பேரும் ஒண்ணா தங்கலாம்"

"சரி நாங்களும் உன்கூடவே இருந்துடறோம், எப்படி நீ வேலைக்கு போவ" தயா

"அதோ தெரியுது பாத்தியா கப்பல், அந்த கப்பல் ஓனரு என் அப்பாவுக்கு தெரிஞ்சவர் தான், அதுல ஓட்டல் இருக்கு அங்க தான் எனக்கு வேலைதர தா சொல்லி இருக்கார், ஜாலியா வேலை செஞ்சிக்கிட்டு, அங்க இருக்குற எதையும் சாப்பிடலாம்"

"அப்படியா, பிரியாணி இருக்குமா?" வருண்

"ம்ம்ம்ம்"

"மட்டன், சிக்கன்" தயா

"எல்லாம்"

"அப்ப ஜாலிதான், ஆனா என் தம்பிக்கு கால் சரியில்லையே அவனால வேலை செய்யமுடியாதே"

"பரவாயில்லை நம்ம இரண்டு பேரும் வேலைக்கு போலாம். தம்பி நம் ரூம்-ல டீவி பாத்துனு இருக்கட்டும், அப்புறம் அந்த கப்பல்-ல ஆஸ்பிடல் எல்லாம் இருக்கு, அதனால தயா கால சரி பண்ணிடலாம்"

"நிஜமாவா!!!!!!!, அப்புறம் நானும் உங்ககூட வேலைக்கு வருவேன்" தயா.

மூவரும் திரும்பவும் தண்ணியில் விளையாடினார்கள். சுண்டல் விற்பவன் வந்தான் முவரும் இருந்த காசுக்கு சுண்டல் வாங்கினார்கள். ஆனால் சுண்டகாரன் தயாவிடம் மட்டும் காசை வாங்கவில்லை, சுண்டலை மட்டும் கொடுத்து விட்டு விந்தி விந்தி நடந்து சென்றார். திரும்பவும் ஆட்டம், மாலை இருள் சூழ ஆரம்பித்தது. முவருக்குள்ளும் பயம் தொத்திக் கொண்டது, பசி வயிற்றை கிள்ளியது

"டேய் எவ்வளவு காசுடா இருக்கு, என்கிட்ட பஸ்சுக்கு கூட காசு இல்லை" ஜகன்

"எதுக்கு பஸ்க்கு நாம இங்க தானே இருக்க போறோம்"

"இல்ல இல்ல, ஒரு டீ வாங்கி வந்தால் நாம மூணு பேரும் சாப்பிடலாம், அதான்"

"என்கிட்ட இரண்டு ரூபாய் தான் இருக்கு"

"சரி அது போதும், தயா நீ இங்கயே நம்ம படக பார்த்துக்கோ, நானும் அருணும் போய் டீ வாங்கிட்டு வரோம்"

"இல்ல நான் இங்க இருக்கேன், தம்பிக்கு இருட்டுனா பயம், நீயும் தம்பியும் போய்டு வாங்க"

ஜகனும் தயாவும் பஸ் ஸ்டாப்பில் இருக்கு டீ கடைக்கு வந்தனர். டீயை ஆர்டர் செய்தனர். முதல் டீ வந்தது

"இந்த தயா நீ குடி, நீ தான் சின்னவன்" தயா பசியில் வாங்கி சந்தோஷமாக குடித்தான். பஸ் சத்தத்துடன் வந்து நின்றது. பயணிகளை உதிர்த்து விட்டு புறப்பட்டது, கண் இமைகும் நேரத்தில் ஓடிய ஜகன் அதில் ஏறிக் கொண்டான்.

கதையின் முடிவு தான், கதையின் ஆரம்பத்தில் இருக்கும் மூன்று வரிகள்.

மதி
02-11-2008, 12:28 PM
அன்றாடம் மெரினாவில் வந்து நிற்கும் சிறுவர்களின் உரையாடல்களையும் அவரின் மனஓட்டங்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நான் கேட்டுக் கொண்ட காரணத்திற்காக நீங்கள் முயற்சி செய்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.

வாழ்த்துகள் மூர்த்தி

இளசு
02-11-2008, 01:13 PM
வாழ்த்துகள் மூர்த்தி..

மிக இலகுவாக மிகக்கடினமான கருவை எழுதும் கலை உங்களுக்கு..

பாராட்டுகள்..

சிறுவர்கள் உலகம் தனி.. அதன் பார்வையில் எண்ணங்கள்..உரையாடல்கள்..
பெரியவர்கள் உலகை சன்னல் வழி பார்த்ததன் வெளிச்ச-இருட்டுக்க்கீற்றுகள்...

பலவீனனும் தன்னைவிடப் பலவீனனைப் பயன்படுத்திக்கொள்வான்
எனும் உலகியல் பாடம்..

முயற்சியில் வெற்றி கண்டமைக்கு மீண்டும் வாழ்த்துகள்..

அமரன்
05-11-2008, 08:05 AM
எங்கெங்கோ அழைத்துச் சென்றாலும் எங்கும் அலுப்புத் தட்டவில்லை. எதையோ மிச்சம் வைச்சுட்டு சென்றது பஸ்.

படகோனர் என் ஃபிரண்டு, கப்பலோனர் அப்பா ஃபிரண்டு என்ற அளப்புகளில் சுற்றிய சிறுவர் உலகத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் எதுவென்று சொல்ல முடியாமல் செய்தது மெச்சத்தக்கது.

நெகிழ்ந்த பாராட்டுகள்.

Narathar
15-11-2008, 12:55 PM
உண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாஇ இருந்த உணர்வு... மிக அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள்!

வாழ்த்துக்கள்! உங்கள் கதைகளெல்லாம் நாளுக்கு நாள் மெருகேரிக்கொண்டே வருகின்றது...

பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை

ரங்கராஜன்
15-11-2008, 04:09 PM
உண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாக இருந்த உணர்வு...

நன்றி தலைவா
இந்த வார்த்தைகள் வர வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினான், மிக்க நன்றி தலைவா

SivaS
16-11-2008, 07:47 AM
மு.கு : நம்முடைய நண்பர் திரு. மதி அவர்கள், கதை களன்களை பற்றி எனக்கு சில அறிவுரைகளை கூறினார். திடீர் மாற்றம், எதிர்ப்பார்க்காத டீவிஸ்டுகள் இல்லாமல், மென்மையான அதே சமயம் மனதை கணக்கவைக்கும் கதை வேண்டும் என்றார். நண்பனின் அறிவுரையை ஏற்று. இதோ அதற்க்கான முயற்சி


சொன்னதை செய்திருக்கிறீர்கள்:icon_b:

Keelai Naadaan
16-11-2008, 12:14 PM
நண்பர்கள் குறிப்பிட்டுள்ளது போல, இளம் பிராய காலத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள்.
அருமை...அருமை..:icon_b:
வாழ்த்துக்கள் மூர்த்தி.

MURALINITHISH
22-11-2008, 09:12 AM
சிறுவர்கள் மட்டுமல்ல சில நேரங்களில் மனிதர்களின் மனநிலையும் இதுதான்

சுகந்தப்ரீதன்
24-11-2008, 10:41 AM
பட்ட காலிலேயே படும்ங்கிறதை சரியா சொல்லியிருக்கீங்க மூர்த்தி..!!
பிஞ்சு மனதில் நஞ்சு.. அந்த நஞ்சால் நஞ்சிப்போன பிஞ்சு..!!
நீங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது நண்பரே...!! வாழ்த்துக்கள்..!!

ரங்கராஜன்
04-10-2012, 05:41 AM
எல்லாருக்கும் சில சென்டிமென்ட் இருக்கும்...... எனக்கும் இருக்கு, நான் எந்த சிறுகதை எழுதுவதற்கு முன்பு, இரண்டு விஷயங்களை செய்வேன்....... மழை வருமா, என்று ஜன்னல் வழியாக இருந்து வானத்தை பார்ப்பேன்.......(இரவாக இருந்தாலும் கூட)...... மற்றொன்று இரண்டு பேரின் பழைய பின்னூட்டங்களை தேடிச் சென்று படிப்பேன்......... அவர்கள் யார் தெரியுமா நம்ம இளசு அண்ணாவும், மனோஜி அண்ணாவும் தான்........ இருவரும் தற்போது மன்றத்திற்கு பழையபடி வருவதில்லை...... இருந்தாலும் அவர்கள் அளித்த பின்னூட்டங்கள் எனக்கு தரும் போதை இருக்கிறதே...... சான்ஸே இல்லை........ மன்றத்தில் நான் சேர்ந்த புதிதில் எனக்கு இவர்களின் பின்னூட்டம் தரும் போதை இருக்கிறதே...வார்த்தைகளால் சொல்லி மாளாது.. அந்த உற்சாகத்தில் தினமும் ஒரு கதை எழுதி இருக்கேன்......... மனது சோர்வாக இருந்தது, பின்னூட்டங்களை தேடி அலைந்த போது, இந்த கதை கண்ணில் பட்டது............மிக்க நன்றி உறவுகளே......நேரம் இருந்தால் படியுங்கள்........

ஜானகி
04-10-2012, 09:46 AM
மீண்டும் அந்தச் சிறுவன் கடற்கரைக்கு வந்தானா...?

எது எப்படியோ...பரந்த கடற்கரைப் பரப்பு, எத்தனை பேர்களுக்குத் தங்கள் பிரச்சனைகளிலிருந்து சிலமணிநேர அடைக்கலம் தருகிறதோ ? அதற்காகவே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பிறர் மனதை ஊடுறுவும் எக்ஸ்ரே கண்களோ உனக்கு....?

அடிக்கடி ஜன்னலை எட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கட்டும் ! சுயநலம் தான்...எங்களுக்கு நல்ல கதை கிடைக்கும் !

A Thainis
05-10-2012, 06:31 PM
கதையின் அமைப்பு சிறப்பு, சிறுவர்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த கதையின் ஒவ்வொரு வரியும் தெளிவாக உள்ளது. வாசிப்பில் உறைந்து போனேன். சிறுவர்களின் எதார்த்தத்தை ஆசிரியர் எதார்த்தமாக கொடுத்துள்ளார் வாழ்த்துக்கள்.

கீதம்
06-10-2012, 09:56 AM
மனம் பிசையும் கதை. இளசு அவர்கள் சொன்னதுபோல் பலவீனன் தன்னை விடவும் பலவீனனை எத்திப் பிழைக்கிறான். ஜகனுக்குப் பிழைக்கத் தெரிந்திருக்கிறது. பாவம் தயாவும் வருணும் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. ஜகனின் தயவால் அவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும்.இல்லையேல் நாதியற்றலையும் அவர்களின் கதி?

கடற்கரை வெயிலின் கானலில் தூர வரும் சிறுவர்களின் உருவம் நெளிந்து நெளிந்து வந்தது என்னும் வரிகளால் ஒரு ஒளிப்படத்தையே கண்முன் காட்டிவிட்டாய். உன்னுடைய பல கதைகளில் இதுபோன்று உயிரோட்டமாய் ஒரு மெல்லிய உணர்வோட்டம் ஓடக் கண்டிருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் இதுதான் முன்னோடியோ? மனம் நிறைந்த பாராட்டுகள் தக்ஸ்.

jayanth
07-10-2012, 02:52 AM
முடிவே ஆரம்பம்...
சிறுவர்களின் கற்பனை உலகம்...
அலைபாயும் மனம்...
இதனிடையே சுயநலவாத மனிதர்கள்...
கதை நன்றாக இருந்தது ரங்கராஜன்...

மயூ
15-10-2012, 09:13 AM
மென்மையான கருவைச் சுற்றி அருமையான கதை. மெரீனா அப்படியே அருகில் வந்து நின்றது.