PDA

View Full Version : தீயில் ஒரு பனித்துளிரங்கராஜன்
31-10-2008, 09:09 PM
தீயில் ஒரு பனித்துளி

பகல் மூன்று மணிதான் இருக்கும், பாதையோர கடைகளில் மண்ணெண்னை விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன, மேகங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் தான் சென்று கொண்டு இருந்தன, காற்றில் முழுவதுமாக ஈரபசை கலந்து இருந்தது. ஒரு அடிக்கு முன்னால் யார், எது, என்ன? என்று பார்க்க முடியவில்லை. இது போல அதிசய காட்சிகள் எல்லாம் கொடைகானலில் சகஜம். எப்பொழுதும், எங்கேயும், எதிலும் குளிர், குளிர், கடுமையான குளிர் மட்டும் தான். சாஸ்திரத்திற்கு சூரியன் காலை பத்து நிமிடம் வந்து முகம் காட்டி விட்டு செல்லும். இது ஒரு வித்தியாசமான உலகம்?, ஆம் குளிரிலும் பிச்சையடுக்கும் பெரியவர், காசை எப்படியாவது கரக்க துடிக்கும் கைடு, தண்ணீரில் பாலை சேர்க்கும் டீக்கடைகாரர், பழங்களை பாலைவன விலைவாசிக்கு ஏற்றி விற்கும் பழக்கடைகாரர் இவர்கள் அனைவரையும் தவிர்த்து விட்டால், ஆம் கொடைகானல் ஒரு தனி உலகம் தான்!. கொடைகானலில் இருந்து சற்று ஓதுக்குப்புரமான இடத்தில் இருந்தது ரகுவின் விருந்தினர் வீடு. அந்த இடத்தை சூழ்ந்த மரங்களும், எலும்புகளிள் ஊடுறுவும் குளிரும், பறவைகளின் சத்தமும், அந்த வீட்டை மட்டும் சுழ்ந்து இருக்கும் மேகங்களும், மிகவும் ரம்மியமான இடம், அதை பார்பதற்க்கு, மிகச்சிறந்த ஒவியன் வரைந்த சித்திரம் போல இருக்கும். ரகு காலை என்று நினைத்து கொண்டு மதியம் மூன்று மணிக்கு தான் படுக்கையை விட்டு எழுந்தான். தாமஸ் ரெடியாக காபியை வைத்துக்கொண்டு நின்றிருந்தான், ரகு நேராக வந்து காபியை எடுத்துக்கொண்டு

“தாமஸ் அண்ணா இங்கே என்ன டையம் போறதே தெரியிலையே, எப்படி தான் நீங்க இங்கேயே வருஷ கணக்கா இருக்கிறீங்களோ!” என்றான் காபியை உருஞ்சியபடியே.

உடனே தாமஸ் “எனக்கேன்ன தம்பி சமயமா கிடைக்குது........., தோட்ட வேலை, சமையல் வேலை, வீட்டை சுத்தம் செய்வது, என்று வேலை கரெக்டா இருக்கும் தம்பி, சரி சாப்பாடு எடுத்து வரட்டுமா, நேத்து ராத்திரி சாப்டீங்க, இன்னைக்கு ராத்திரியே வர போவுது” என்று தாமஸ் சமயலறை நோக்கி நடந்தான்.

உடனே ரகு “இல்லண்ணே இப்ப தானே காபி குடிச்சேன், கொஞ்ச நேரம் ஆகட்டும், சரி அவர் சாப்பிட்டாறா, கண்களில் மருந்து போட்டாச்சா?” என்றான்

உடனே தாமஸ் “பெரிய ஐயா சாப்பிட்டாச்சுங்க, மருந்து எல்லாம் போட்டாச்சு, இவ்வுளவு நேரம் இங்க தான் இருந்தார், நீங்க வருவதற்க்கு இரண்டு நிமிஷம் முன்னாடி தான் போய் படுத்தார்” என்றான்.

ரகு இதை ஆர்வம் இல்லாதவனாக கேட்டு கொண்டு இருந்தான். சற்றென்று பேச்சை மாற்றுவதற்கு

“சரி பீட்டர் எப்படி இருக்கான்?, நல்லா இருக்கானா?, அவன் கிட்ட பேசி வருஷ கணக்காச்சு, ஏன் அவனை பார்த்தே நான்கு வருஷமாச்சு, எங்கே பெங்களூர் போன மனுஷனுக்கு இயந்திர வாழ்க்கை தான், எங்க டைம் கிடைக்குது. சரி அவனாவது போன் செய்ய கூடாதா?” என்றான் ரகு.

“ரொம்ப நல்லா இருகான் தம்பி, எப்பவுமே உங்களை பத்தி தான் பேசுவான், உங்களுக்கு இருக்கும் ஒரே நண்பன் என்று பெருமையா சொல்லிக்கொள்வான், இன்னைக்கு வரான், இந்நேரம் வந்து கொண்டு இருப்பான்” என்றான் தாமஸ் தன் மகனை பார்க்க போகும் சந்தோஷத்தில்.

“என்னது இன்னைக்கு வரானா, எப்படி அவன் அலுவகத்தில் லீவு கிடைச்சுது, நாளைக்கு பொது விடுமுறையும் இல்ல, பின்ன எப்படி, எதற்காக லீவு போட்டான்” என்று தாமஸை பார்த்து கேட்டான் ரகு.

தாமஸ் தயங்கிய படியே நின்று கொண்டு இருந்தான், ஏதோ சொல்லவந்தவன் ரகுவை பார்க்காமல் சுவரில் அலங்கரிக்க பட்ட புகைப்படத்தை பார்த்து,

“நான் தான் அவனை லீவு போட்டு வரச்சொன்னேன், நாளைக்கு அம்மாவோட முதல் வருஷ தெவசம், அம்மா இறந்த அப்போகூட அவனால பெங்களூர்க்கு வர முடியல எங்கோ பூனேக்கு டீரைனிங் போய் இருந்தான், உங்க அம்மாவுடைய இறுதி அஞ்சலிக்கு கலந்துக்க முடியலைன்னு ரொம்ப வருத்தப்பட்டன், அதான் நாளைக்கு வரச் சொன்னேன்” என்றார் தாம்ஸ்.

அம்மா..........................அம்மா........................ரகுவின் காதில் இந்த வார்த்தை ஏதிரொலித்து கொண்டே இருந்தது. ரகுவுக்கு கண்கள் இருண்டன, உடல் நடுங்க ஆரம்பித்தது, மூளைக்குள் குரல்கள் ஏதிரொலித்தன. தன் அம்மாவின் வார்த்தைகள்,

“கண்ணா கீழே ஊழுந்துட்டியா”
“அம்மா அந்த கல்லை அடிச்சுடுறேன்”
“என் மகன் எப்பவுமே முதல் ரேங்கு தான்”
“அப்பாவை சாப்பிட கூப்பிடு செல்லம்”

ரகுவுக்கு கண்களில் நீர் பொங்கியது, ஏங்கே தாமஸ் பார்த்துவிடபோறான் என்று கண்ணீர் கண்களை தாண்டவில்லை. ரகு சுதாரித்து கொண்டு

“சரிண்னே நாளைக்கு எல்ல ஏற்பாடும் பார்த்துகொங்க, பூ, பழம், அம்மாவுக்கு புடிச்சு பதார்த்தம் எதாவது செய்யுங்க” என்று கூறிவிட்டு

அந்த இடத்தை விட்டு வெளியே வந்தான் கதவை திறந்து கொண்டு. இருள் நன்றாக பரவி இருந்தது, குளிர்.......கடும் குளிர் முகத்தில் அறைந்தது, ரகு கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உறைந்தது, அந்த குளிரில் கண்ணீர் கூட சுரக்க மறுத்தது.

“அம்மா என் அம்மா, எனக்காக மட்டும் வாழ்ந்த ஒரே ஜீவனே, நீ எதற்க்காக பிறந்தாய், எதற்காக வாழ்ந்தாய், எதற்காக இறந்தாய், எனக்காகவா எனக்காக மட்டுமா?, என்ன வாழ்க்கை வாழ்ந்தாய், முப்பது வருஷமா ஒரு வார்த்தை இந்த ஆள் கூட பேசாமல். எப்போழுதும் சோகம், எப்போழுதும் அன்பு, இது தானே நீ. இந்த ஆள் உன் வாழ்க்கையே கெடுத்துவிட்டான், நீ வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு இருந்தால், உன்னை தங்கத்தட்டில் தாங்கியிருப்பார்களே, நான் தூங்கிட்டேன்னு நினைத்து கொண்டு நீ வடித்த கண்ணீர் துளிகள் எல்லாம் ஆணியாக மாறி என் மனம் என்னும் பசுமரத்தில் இறங்கி ஆழமாக பதிந்து விட்டது. இவ்வளவுக்கும் காரணமான ஆளை பார் இன்னும் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார், நான் உலகத்திலே அதிகமாக வெறுக்கும் ஓர் மனிதனிடம் என்னை விட்டு விட்டு சென்றுவிட்டாய். அந்த ஆளைப்போய் எல்லோரும் பெரிய ஐயா என்று மரியாதையாக அழைக்கிறார்கள், ச்சே எல்லாம் ஊருக்காக வேஷம்” என்று தனக்குள் ஆயிரம் எண்ணங்களை ரகு கோபத்தொடு அசைப்போட்டன்.

தன்னை அறியாமலே நடந்து வீட்டை விட்டு வந்தான் ரகு. குளிர் இன்னும் கடுமையாக ஊடுருவியது, அப்பொழுது தான் அவன் சகஜ நிலைக்கு வந்தான், அவனை அறியாமல் கைகளும், பற்களும் தந்தியடித்தது.

“அடடா சகரெட்டை வீட்டிலேயே வைத்து விட்டோமே” என்று தனக்குள் முனவினான்.

திரும்பி வீட்டை பார்த்தான் சிறிது தூரம் இருந்தது. போய் எடுத்து வந்திடலாமா இல்லை இந்த பக்கம் நடந்தால் எதாவது கடையில் வாங்கி கொள்ளலாமா? என்று யோசித்து கொண்டு இருக்கையில் சிறிது தூரத்தில் யாரோ வருவது போல இருந்தது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் சரியாக தெரியவில்லை ஏனென்றால், பனி தெரு விளக்கின் வெளிச்சத்தை விழுங்கி கொண்டு இருந்தது. அதுவும் மஞ்சளாக இருந்த தெரு விளக்கை பார்த்தால், அஸ்தமனமாகும் சூரியன் போல அந்த இடமே மஞ்சளாக இருந்தன, செடிகள், பாறைகள், பூச்சிகள் அனைத்துமே ஒரு மரகத மஞ்சள் நிறத்தில் ஜொலித்தன. அதை தாண்டி ஒரு உருவம் கையில் பெட்டியுடன் ரகுவை நெருங்கியது.

ரகு சந்தேகத்துடன் “பீட்டர் நீயா?” என்று கேள்வி எழுப்பினான்.

“நீயா படம் ஸ்ரீப்ரியாது” என்று சிரித்தது ஒரு குரல்.

ரகுவும் சிரித்து கொண்டே “இன்னும் மாறவே இல்லடா நீ” என்று கட்டி அனைத்தான் பீட்டரை.

“எப்படி இருக்க டா, வேலை எல்லாம் எப்படி இருக்கு, சரி சரி போய் பெட்டியை வீட்டுல வச்சிட்டு வா, ஒரு வாக் போலாம், நாம தனியா பேசி ரொம்ப நாள் ஆச்சு, வரும் போது அங்கே சிகரெட் பாக்கெட் என்னுடைய சட்டை பாக்கெட்டில் இருக்கும் மறக்காமல் எடுத்துகொண்டு வா” என்றான் ரகு உடல் நடுங்கி கொண்டே.

பீட்டரும் “நல்லா இருக்கேன் ரகு, நான் போய் பெரிய ஐயாவை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வரேன், அப்புறம்!............... சாரி ரகு, அம்மா இறந்ததுக்கு வர முடியவில்லை, மன்னிச்சுடு டா” என்று பீட்டர் வீட்டை நோக்கி அவசரமாக நடந்தான்.

“அம்மா....................”

ரகுவுக்கு கண்கள் இருண்டன, மின்னல்கள் போல பல எண்ண அலைகள் பளிச்சிட்டு சென்றன. தன் அம்மாவின் குரல் மூளைக்குள் எதிரொலித்தது.

“கண்ணா சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்..........”
“அப்பாவை வெறுக்காதடா, அவர் ரொம்ப நல்லவர்...........”
“அப்பாவை நல்லபடியா பார்த்துக்கோ, அவர் நீ நினைப்பது போல....................”

ரகுவுக்கு தலை வெடித்துவிடும் போல இருந்தது. இந்த ஆளை போய் நல்லவர்னு சொன்னாளே, இவளை போய் எப்படி இந்த ஆளுக்கு பிடிக்காமல் போச்சு, எதாவது அந்த காலத்தில் காதல் தோல்வி இருக்குமோ இந்த ஆளுக்கு?, சரி இருந்துட்டு போகட்டும், ஏன் கல்யாணம் பண்ணிக்கணும், அம்மா வாழ்க்கையையும், என் வாழ்க்கையையும், ஏன் அழிக்கணும், ச்சே என்ன ஜென்மம் இந்த ஆள், ஆனா ஊர் உலகத்திற்கு ரொம்ப நல்லவன், சுத்த வேஷதாரி என்று தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தான் ரகு. அப்பொழுது பீட்டர் ஓடிவந்தான். இதை கவனித்து ரகு தன்னை சுதாரித்து கொண்டு பீட்டரை பார்த்தான். பீட்டர் முகம் சற்று சோகமான ஆச்சரியத்துடன் இருந்தது.

“என்ன ரகு பெரிய ஐயாவுக்கு சுத்தமா கண் பார்வை போய் விட்டதாமே, லேசாக பார்வை கோளாறுன்னு அப்பா முன்பு சொன்னாரே, இது எப்படா நடந்தது?” என்றான் கவலையாக.

ரகுவை பீட்டரின் கவலை பாதிக்கவில்லை மாறாக பீட்டரிடம் “சிகரெட் எடுத்து வந்தியா, குளிர் தாங்க முடியவில்லை” என்று தானே பீட்டரின் சட்டை பாக்கெட்டில் இருந்து எடுத்து கொண்டான்.

பீட்டர் அடிபட்டு இருக்க வேண்டும். “என்ன ரகு நான் எவ்வளவு சீரியஸ் மேட்டர் கேட்கிறேன், நீ என்னடான்னா சிகரெட் பத்தி பேசற” என்றான் ரகுவின் கண்களை நோக்கி.

உடனே ரகு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டு “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்றான் மேலே நோக்கி. பீட்டருக்கு சற்றென்று கோபம் வந்தது
“ என்ன ரகு பேசற, அவர் உன்னுடைய அப்பா, உன்னை எப்படியெல்லாம் வளர்த்தார், அம்மா வேற இல்லாமல் தனி மரமா அவர் கஷ்டப்படும் பொழுது, நீ இப்படியெல்லாம் பேசலாமா?” என்றான்.

“அம்மா................”

ரகுவுக்கு கோபம் தலைக்கு ஏறியது “ என்னடா தெரியும் உனக்கு, இந்த ஆளை பத்தி அவன் ஊருக்கு தான் நல்லவன் ஆனா எங்களுக்கு எமன், என்ன சொன்ன “அம்மா இல்லாம தனி ஆளா?”, டேய் எங்க அம்மா செத்ததே இந்த ஆளாளதான், எப்படியெல்லாம் வளர்த்தாரா? அவர் எனக்காக இதுவரை எதுவுமே செய்தது இல்லை, எல்லாம் என் அம்மா தான், இந்த மூப்பது வருஷம் அவர் என் கூட பேசிய வார்த்தைகளை ஒரு பஸ் டிச்கெட் பின்னாடி எழுதிடலாம், சும்மா எதுவுமே தெரியாம பேசாதே” என்றான் ரகு சிகரேட்டை வேகமாக இழுத்துக் கொண்டே.

இதை சற்றும் எதிர்பார்காத பீட்டர் ரகுவின் தோளை பிடித்து “என்னா ரகு ஏன் இவ்வுளவு கோபம், யார் மீது கோபம். இதற்க்கு முன் நான் உன்னை இவ்வுளவு கோபமா பார்த்ததே இல்லையே, உன் மனதை கஷ்டப்படுத்தி இருந்தா சாரி” என்றான், திரும்பி கொண்டு இருந்த ரகுவை பார்த்து.

பீட்டர் ரகுவை திருப்பினான், ரகுவின் கண்கள் கலங்கி இருந்தது

“என் ரகு இது, சாரி” என்றான் பீட்டர் அதிர்ந்தவாறு.

“இல்ல பீட்டர் உங்களுக்கு யாருக்கும் தெரியாது நானும் என் அம்மாவும், பட்ட கஷ்டங்கள், முப்பது வருஷமா நான் யாருடனும் இதை பகிர்ந்து கொண்டது கிடையாது. ஏன் உனக்கே இப்பதானே தெரிய போவுது” என்றான் ரகு கண்களை துடைத்து கொண்டு.

பீட்டர் உடனே “இல்ல ரகு நாம் நாளைக்கு பேசலாம், இன்று உன் மூடு சரியில்லை” என்றான்.

ரகு “இல்ல பீட்டர் ஆரம்பிச்சாசு நான் சொல்லி விடுகிறேன், அதுவும் இந்த ரம்மியமான சூழ்நிலையில், எலும்பை நொறுக்கு குளிரில் பேச வேண்டும் போல இருக்கு, நிறைய பேச வேண்டும் போல இருக்கு, உண்மையை மட்டும் பேச வேண்டும் போல இருக்கு, நான் முந்தா நேத்து பெங்களுரில் இருந்து வந்ததில் இருந்து பேச ஆள் இல்லாமல் தவித்து கொண்டு இருந்தேன், தெய்வம் பார் உன்னையே அனுப்பி விட்டது” என்றான் ரகு சிகரெட்டை புகைத்து கொண்டே .

பீட்டர் “சரி ரகு சொல்” என்று ரகுவை பார்த்தான்.

“நீங்கள் எல்லோரும் நினைப்பது போல் நாங்கள் சந்தோஷமான குடும்பமாக வாழவில்லை. எங்கள் மூவரில் நானும் அம்மாவும் பேசிக்கொள்வோம்... உங்கள் பெரியய்யா என்னுடனோ, என் அம்மாவுடனோ பேச மாட்டார். அவரின் வேலைகளை அவரே கவனித்துக் கொள்வார். என் அம்மா அழாத நாட்களே இல்லை, நான் பார்க்க கூடாது என்று நான் இல்லாத பொழுது, தூங்கு பொழுது அழுவால். அந்த ஆள் ஒரு சாடிஸ்ட் என் அம்மாவை அடிக்காமல், திட்டாமல், பேசாமல், பார்க்காமல், நேசிக்காமல் கஷ்டப்படுத்தினான். ஒரு நாள் இரண்டு நாள் இல்லை முப்பது வருஷமா இதே கதை தான்” என்று பெருமூச்சு விட்டான் ரகு.

இருவரும் தெருவிளக்கின் எதிரில் போடப்பட்டிருந்த சிமெண்ட் பலகையில் ஈரத்தை துடைத்துவிட்டு அமர்ந்தார்கள். ரகு எதிரே தெருவிளக்கில் சுற்றிக் கொண்டிருந்த பூச்சிக்களையே பார்த்து கொண்டிருந்தான். பீட்டரை நோக்கி

“ இந்த ஈசல் பூச்சிகளாக பிறந்திருந்தாலாவது நிம்மதியாக வாழ்ந்துவிட்டு இரண்டு நாட்களில் இறந்திருக்கலாம்..” என்றான்.

உடனே பீட்டர் சிரித்து கொண்டே “ அந்த இரண்டு நாட்களும் பல்லியுடனும், ஓணானுடனும் போராட வேண்டும்.” என்றான் தெரு விளக்கின் கீழ் இருந்த பல்லியை நோக்கி.

ரகு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. ரகு சற்று நேரம் யோசித்து பீட்டரை நோக்கி “சரிடா, என் அம்மா மீது தான் ஏதோ கோபம்... அதனால் பேசவில்லை என்று விடு, ஆனால் நான் என்ன செய்தேன்... பள்ளியில் இருந்து காலேஜ் வரை அனைத்திலும் முதல் இடம். நான் காலேஜ், மேற்படிப்பு எல்லாம் உதவித்தொகையில் தான் படித்தேன்... இவர்களுக்கு ஒரு செலவு கூட வைக்கவில்லை... ஏன்.. கல்லூரி முடித்ததும் வேலையில் சேர்ந்து விட்டேன். நீயே மனசில் கைவைத்து சொல்... உலகத்தில் எந்த பிள்ளையாவது இப்படி எல்.கே.ஜி முதல் வேலை வரை ஒரே சீராக முன்னேறி நல்ல பெயர் வாங்கியிருக்கானா... வேலை வாங்கிய விஷயத்தை அம்மாவிடம் சொல்லியவுடன் அவள் சொன்ன முதல் வார்த்தை.. “போய் அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கு” என்றாள் சந்தோஷமாக. சரி என்று நானும் அவரிடம் சென்று சொன்னேன் அதற்க்கு அவர் “ம்ம்ம்..” என்று அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். நான் அப்படியே நொறுங்கி போனேன். அவ்வுளவு வெறுக்கும் அளவுக்கு நாங்கள் என்ன செய்தோம், சரி அவ்வுளவு வெறுக்கும் ஆள் ஏன் பிள்ளை மட்டும் பெற்று கொள்ள வேண்டும் சொல்” என்றான் ரகு.

பீட்டர் உடனே “அப்படியெல்லாம் பேசாதே அவர் உன் அப்பா” என்றான்.

“பிறக்க காரணமா இருந்தான் என்ற ஒரு தகுதி மட்டும் ஒருவனை அப்பா ஆக்கிட முடியாது, என் அம்மா சொன்னா கடைசி வார்த்தைகளுக்காக தான் இந்த ஆளை இன்னும் பக்கத்தில் வைத்திருக்கிறேன், என்ன ஒரு அழுத்தம், ஈகோ தெரியுமா, அம்மா இறந்த ஒரு வாரத்திலே இவர் ரூமில் மயங்கி கிடந்தார், அப்புறம் தான் டாக்டர் சொன்னார் இவருக்கு ஹைய் டயாபட்டீஸ் அதனால் கண் பார்வை கொஞ்ச கொஞ்சமாக மங்கி இப்போ சுத்தமா தெரியலை, இது இவருக்கு முன்னாடியே தெரியும் ஆனால் எங்களிடம் மறச்சிட்டார்,அப்படி என்ன அழுத்தம், இப்பகூட பார் இந்த குளிர்காலத்தில் இங்கு கொடைகானல் வரவேண்டும் என்று தொல்லை, நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. நான் அபீஸ்க்கு லீவு போட்டு இந்த ஆளை கூடி வந்திருக்கேன், இது எல்லாம் என் அம்மாவுக்காக”

“அப்பாவை நல்லபடியா பார்த்துகோ கண்ணா, அவர் நீ நினைப்பது ...........” தன் அம்மா கடைசியாக பேசிய வார்த்தகளை அவன் மூளையில் ஏதிரொலித்தது.

பீட்டர் பொறுமையாக அனைத்தையும் கேட்டு விட்டு “பெரிய ஐயாவிடம் மனம்விட்டு பேசி பார்க்க வேண்டியது தானே” என்றான்.

ரகு “யார் நானா?, சின்னதில் அவர் வந்தால் நான் அந்த இடத்தில் இருக்க மாட்டேன், பெரியவன் ஆனதும் நான் இருக்கும் இடத்தில் அவர் இருக்க மாட்டார், எங்கே இரண்டு பேரும் மனம் விட்டு பேசுவது” என்றான் வெறுமையாக.

பீட்டர் ஒரு முடிவுக்கு வந்தவனாக “ரகு எனக்கு தெரிஞ்ச வரைக்கும் மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சனையே கிடையாது, நாளை அவரிடம் பேசி பார்”.

இருவரும் பேசி கொண்டே விட்டை அடைந்தனர். இரவு ரகு ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு பெரியவரிடம் பேசுவது என்று முடிவு செய்தான். காலையில் ரகு சீக்கிரம் எழுந்து குளித்தான், தன்னுடைய அம்மாவின் முன் கண்ணீர் மல்க நின்றான், பின்னாடி காபியுடன் நின்று கொண்டு இருந்தான் தாமஸ்

“தம்பி உங்களை பெரிய ஐயா கூப்பிட்டார், வெளியே உங்களுக்காக காத்து இருக்காங்க” என்றார்.

ரகு அமைதியாக “என்னையா? எதுக்கு” என்றான். “எதுக்குன்னு தெரியாது தம்பி, ஆனா காலையில் இருந்து நாலு முறைக்கு மேல் நீங்க எழுந்தாச்சான்னு கேட்டார், நான் எழுப்பட்டுமான்னு கேட்டேன், அவர் “வேண்டாம் வேண்டாம், அவனா எழுந்தா விஷயத்தை சொல்” என்று கூறி விட்டு லான்ல உக்கார்ந்த்து கொண்டு இருக்கார்” என்றான் தாமஸ்.

உடனே ரகு வெளியே பார்த்தான், புல்வெளியில் அறுபது வயது மதிக்கதக்க பெரியவர் கண்களில் கருப்பு கண்ணடியுடன் உக்கார்ந்து இருந்தார். தாமஸ்

“தம்பி நீங்க டிபன் சாப்பிடிங்கனா எனக்கு ஒரு வேலை வெளியே போனும்” என்றான்.

உடனே ரகு “இல்லண்னே நீங்க கிளம்புங்க, நான் இன்னைக்கு ஒரு பொழுது” என்று உடைகளை மாற்றி கொண்டு புல்வெளியை நோக்கி குழம்பியவாரே நடந்தான். அங்கே பெரியவர் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருந்தார், ரகு அவரின் பின்னாடி சென்று கொஞ்ச நேரம் நின்று அவரையே பார்த்து கொண்டு இருந்தான். அந்த வீட்டை சுற்றி வானை முட்டும் அளவிற்க்கு மரங்கள் வளர்ந்து இருந்தன. அதில் அனைத்திலும் பல விதமான பறவைகள் இருந்தன, இவைகள் காலை பொழுதில் சப்தங்கள் எழுப்பின. சப்தம் வந்த திசைகளில் பெரியவர் தலையை திரும்பி கொண்டு இருந்தார். அந்த பறவைகளும் போதிய இடைவேளை விட்டு அழகாக கூவிகொண்டு இருந்தன. பெரியவர் தலையை சத்தம் வந்த திசையில் அசைத்து ரசித்தார். இதை பார்த்த ரகுவுக்கு அதே போல செய்ய வேண்டும் போல இருந்தது, ஏனென்றால் பெரியவர் சிரித்து இவன் பார்த்ததே இல்லை, அப்படி ரசிக்கும் படியாக என்ன இருக்கிறது என்று எதிரில் இருந்து நாற்காலியில் சத்தம் போடாமல், உக்காந்து இவர் செய்வது போல இவனும் சத்தம் வரும் திசையில் கண்ணை மூடிக்கொண்டு, காதை செலுத்தினான், அவனுக்கு அது பிடித்திருந்தது, பறவைகள் பேசுவது, அவைகளின் பாஷை சற்று அர்த்தம் புரிவது போல தோன்றியது. ரகு, அவனை அறியாமல் அவன் உதடு சிரித்தது. இன்னும் கண்களை அழுத்தி மூடி தன்னுடைய மனதை அந்த சத்ததில் ஒருநிலை படுத்தினான். அப்பொழுது ஒரு குரல்

“என்ன புது உலகத்தில் நுழைந்த மாதிரி இருக்கா” என்றது. ரகு திடுக்கிடு கண் வழித்தான். பெரியவரை தவிர யாரும் இல்லை, அப்போ அந்த பெரியவர் திரும்பவும் கேட்டார்

"சொல்லு ரகு, புது உலகத்தில் நுழைந்த மாதிரி இருக்கா” என்றார் புன்சிரிப்புடன்.
ரகு “ம்ம், நான் வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்” என்றான் ஆச்சரியத்துடன்.
பெரியவர் சிரித்து கொண்டே “பிள்ளையோட வாசனை அப்பாவுக்கு தெரியாதா?” என்றார்.

ரகு உடனே “ஆனால் உங்க வாசனையே எனக்கு தெரியாது!” என்றான் யோசிக்காமல்,
பெரியவரின் முகம் சட்டென்று மாறியது. ரகு உடனே கோபத்தொட
“நாங்கள் என்ன பாவம் செய்தோம், எங்களை நீங்கள் எப்படியெல்லாம் துடிக்க வச்சிங்க தெரியுமா, நீங்க...................” என்று முடிப்பதற்குள்,

பெரியவர் குறிக்கிட்டு “என்னை மன்னிச்சுடு ரகு, தயவு செய்து பழசை எல்லாம் பேசி என்னை வருத்தாதே”என்றார் சோகத்துடன்.

ரகுவுக்கு இன்னும் கோபம் அதிகமாகியது “தயவு செய்து மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையால் முப்பது வருஷ துன்பத்தை, சோகத்தை, சந்தோஷத்தை மறைக்காதீர்கள்” என்றான்.

பெரியவர் சட்டென்று எழுந்து “சரி என்ன இப்போ, உனக்கு என்ன தெரியவேண்டும்” என்றார் ரகு இருந்த திசையை நோக்கி.

ரகுவும் உடனே எழுந்து “நான் எதை கேட்பேன் என்று உங்களுக்கு தெரியாதா?” என்றான்.

பெரியவர் தன்னுடைய கண்ணடியை சரி செய்து கொண்டு “சரி வா எல்லாத்தையும் பேசலாம், நானே இந்த நாளுக்காக தான் எதிர்பார்த்தேன், வா நடந்து கொண்டே பேசலாம், நீ என் தோளை பிடித்து கொண்டு நட, எதாவது பள்ளம் வந்தால் மட்டும் சொல்” என்று தன் கையால் ரகு இருந்த திசையை நோக்கி தேடினார்.

ரகு உடனே “உங்க ஸ்டிக்கை கொடுங்க முனையை பிடித்து கொண்டு வழி சொல்கிறேன்” என்றான்.

பெரியவர் அடிபட்டவராக கையை இறக்கி கொண்டு “என்னை தொட உனக்கு பிடிக்கவில்லை அதானே, பரவாயில்லை” என்று சிரித்து கொண்டு ஸ்டிக்கை நீட்டினார்.

இருவரும் நடக்க தொடங்கினார்கள். பெரியவர் பெருமூச்சுடன் பேச்சை ஆரம்பித்தார் “உங்க அம்மா எனக்கு யார் தெரியுமா?, என் சொந்த அக்கா மகள், நான் பார்த்து பார்த்து வளர்த்த பொண்ணு, எனக்கும் அவளுக்கும் பத்து வருஷ வித்தியாசம், என் அக்கா ரொம்ப கஷ்டப்பட்டு என்னை வளத்துச்சு, அது நேரம் அதை கட்டினவன் ஒரு வருஷத்துல செத்துட்டான். அப்புறம் கூலி வேலை செஞ்சு என்னையும் உன் அம்மாவையும் காப்பாத்துச்சு. நான் படிச்சி வேலைக்கு பெங்களூர் போய்விட்டேன், உன் அம்மா ஸ்கூல் படிச்சின்னு இருந்துச்சு, அதனால படிப்பு முடிந்தவுடன் எல்லொரும் பெங்களூர் போவதாக முடிவு செய்தோம். நான் மட்டும் வாரம் ஒரு முறை கொடைகானல் வந்து அக்காவையும், உன் அம்மாவையும் பார்பேன். திடீருனு ஒரு நாள் ஒரு செய்தி, என் அக்கா இறந்து விட்டதாக, உடனே ஊருக்கு ஓடி வந்தேன், வந்தால் இன்னும் ஒரு அதிர்ச்சி அக்கா தூக்கு மாட்டி கொண்டாள் என்பது, உன் அம்மா அழுது அழுது சோர்ந்து இருந்தாள், என்னை பார்த்தவுடன் அவளுக்கு அழுவதுக்கு கூட சக்தி இல்லை, என் காலில் வந்துவிழுந்து விட்டால், மயங்கி விட்டால். சரி அனைத்து காரியத்தையும் முடித்து விட்டேன். என் மனதில் ஒரு விஷயம் மட்டும் உறுத்தி கொண்டே இருந்தது “வாரக்கணக்கில் பட்டினி கிடந்து, வறுமையில் வாழ்ந்த போது கூட தற்கொலை செய்யாத அக்கா, இப்பொழுது நல்லா இருக்கும் பொழுது ஏன் இந்த முடிவை எடுத்தாள். இரண்டு நாளுக்கு அப்புறமும் உன் அம்மா அழுது கொண்டே இருந்தாள், சரி அவளையும் பெங்களூர் கூட்டிச்சென்று விடலாம் என்று முடிவு எடுத்து, அடுத்த நாள் எல்லாத்தையும் தயார் படுத்தினோம் நானும் உன் அம்மாவும், ஆனால்” என்று பெரியவர் நடக்க முடியாமல் நின்றார்.

இதை அனைத்தையும் பொறுமையாக கேட்டு கொண்டு இருந்த ரகு “ஆனால் என்ன, என்ன ஆச்சு” என்றான். பெரியவர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு “உன் அம்மா அன்று இரவே தன் காதலனுடன் ஓடிவிட்டாள்” என்றார் பெரியவர். இதை எதிர்பார்காத ரகு தடுமாறினான். பெரியவரின் பக்கம் அவனால் திருப்பமுடியவில்லை. இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்,

பெரியவர் மறுபடியும் ஆரம்பித்தார். “நான் அப்பொழுது அப்படியே நொறுங்கி போய் விட்டேன். என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் பெங்களூர் வந்துவிட்டேன். மூன்று மாதம் பிறகு என்னுடைய நண்பன் போன் செய்து “உன் அக்கா மகள் கொடைகானல் விட்டிற்க்கு முன்புறம் மயக்க நிலையில் இருக்க” என்று சொன்னான். உடனே புறப்பட்டு வந்து பார்த்தேன். நான் வளர்த்த குழந்தை மெலிந்து போய் கிடந்தால், அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்தேன், அவளுக்கு மருத்துவ உதவிகள் செய்து குணப்படுதினார்கள், மேலும் ஒரு இடி அவள் கற்பமாக இருக்கிறாள்....................” என்று பெரியவர் முடிப்பதற்க்குள் ரகு குறுக்கிட்டவனாக.

“வேண்டாம் வேண்டாம் இதற்க்கு மேல் சொல்லாதீர்கள், எனக்கு புரிந்து விட்டது என்றான்.

உடனே பெரியவர் “இல்ல ரகு உனக்கு புரிந்திருக்காது” என்றார் பொறுமையாக, உடனே ரகுவுக்கு கோபம், தாழ்வு மனப்பான்மை, அவமானம் எல்லா உணர்ச்சியும் கண்ணீராக வந்தது,

உடனே அவன் பெரியவரின் பக்கம் திரும்பி “புரிஞ்சது நான் அந்தாளுக்கு பிறந்தவன், எங்க அம்மாவை அவன் கெடுத்து விட்டு ஓடிடான், என் அம்மாவின் நிலையை பார்த்து பரிதாப்பட்டு கல்யாணம் செஞ்சிகிட்டிங்க, இன்னொறுத்தன் கெடுத்த பெண்னை உங்களால எற்று கொள்ள முடியவில்லை, அதனால் எங்கள் இருவரையும் வெறுத்தீர்கள் அதானே” என்றான் கண்ணீருடன் கோபமாக.

இதை கேட்டு கொண்டு இருந்த பெரியவர் ரகுவின் நிலையை அறிந்து “கோபப்படாதே ரகு கோபத்தில் ஒண்ணும் புரியாது, அமைதியாக இரு, நான் சொல்வதை கேள்.............” என்று முடிப்பதற்க்குள் ரகு குறுக்கிட்டவனாக

“இதோ பாருங்கள், உங்களை பற்றி நான் தப்பாக நினைத்து இருந்தேன், ஆனால் இப்போ தப்பு யார் மீது என்று தெரிந்து விட்டது, அதனால் இதையே பேசி என்னை அவமானம் படுத்தாதீர்கள்” என்றான் கண்ணீருடன்.

உடனே பெரியவர் “சரி ரகு விடு, சரி நாம் போகும் தெருவில் தாமஸ் எங்காவது நிற்கிறானா பார் இருந்தால் அங்கே என்னை அழைத்து கொண்டு போ” என்றார் பெரியவர்.

ரகு கலங்கிய கண்களை துடைத்து விட்டு பார்த்தான், தாமஸ் சற்று துரத்தில் நின்று கொண்டு இருந்தான், அவனை நோக்கி இருவரும் நடந்தார்கள். நடக்கும் பொழுதே ரகு பெரியவரின் கையை பிடித்து கொண்டு அழைத்து சென்றான். பெரியவருக்கு லேசாக புன்சிரிப்பு வந்தது, மகிழ்ச்சியில் உடனே ரகுவை பார்த்து

“ரகு கண்களை துடைத்து கொள், தாமஸ் பார்த்து விட போகிறான், என்றார். உடனே ரகு கண்களை துடைத்து கொண்டான். இருவரும் தாமஸை நெருங்க, அவன் உடனே அருகில் ஒரு புதர் நடுவில் உள்ள வழியில் நுழைந்தான். இவர்கள் இருவரும் பின் தொடர்ந்து சென்றனர். அந்த இடம் ஒரு இடுகாடு, தாமஸ் ஒரு சமாதியை அலங்கரித்து வைத்து இருந்தான். ரகுவுக்கு குழப்பமாக இருந்தது ஏனென்றால் ரகுவின் அம்மாவை பெங்களுரில் அடக்கம் செய்தனர், அப்படி இருக்க இது யாரருடைய சமாதி? என்று குழப்பத்துடன் சமாதியை நோக்கி நடந்தான், பெரியவர்

“ரகு போய் வணங்கி விட்டு வா, தாமஸை இங்கு அனுப்பு” என்று வெளியே நின்று கொண்டார். ரகு தயக்கத்துடன் சமாதியை நெருங்கினான், அந்த மண்சமாதி மாலை, பூக்களாள் அலங்கரிக்க பட்டு இருந்தது. குழப்பத்துடன் வணங்கும் பொழுது தான் தன் அம்மாவின் அம்மா நினைவு வந்தது

“ஒ பாட்டியின் சமாதியா..” என்று மனதுக்குள் நினைத்து கொண்டு முழு மனதுடன் சமாதியை வணங்கினான். பெரியவர் அமைதியாக தூரத்தில் நின்று கொண்டு இருந்தார். ரகு அவரிடம் வந்து

“ஏன் பாட்டியை நீங்க வணங்க வரவில்லை” என்றான்.

“வா போலாம்” என்றார்.

“இல்ல நான் பத்திரமா உங்களை அழைத்து செல்கிறேன் வாங்க” என்று கையை பிடித்தான்.

ஆனால் பெரியவர் “வா ரகு போலாம்” என்று நகர அரம்பித்தார். ரகுவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

“சரி பாட்டியும் அம்மாவும் ஒரே நாளில தான் இறந்தார்களா?, எனக்கு தெரியும் உங்களுக்கு கஷ்டமா இருக்கும், பாட்டியின் ஞாபகமா இருக்கா?” என்றான் பெரியவரை பார்த்து. உடனே அவர் ரகு நின்ற எதிர் திசையை நோக்கி முகத்தை திருப்பி கொண்டு

“இந்த முறையும் நீ தப்பா தான் புரிந்து கொண்டாய், அந்த சமாதி உன் அப்பாவுடையது” என்றார். ரகு பெரியவரின் கையை உதறினான், கண்கள் சிவந்தது, மார் அடைத்தது, அந்த இடத்தில் நிற்பதையே அருவெறுப்பாக நினைத்தான்.

“இப்ப யார் உங்களை இங்க கூப்பிட்டு வரச்சொல்லி அழுதா, இருக்கும் போதே இந்த ஆள் அப்பனா இல்லை, செத்த பின்.........” என்று முடிப்பதற்க்குள் பெரியவர்

“கோபடாமல் நான் சொல்வதை பொறுமையா கேள்” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தார் ரகுவும் அவர் பின்னாடியே சென்றான்.

“இருவரும் வீட்டை விட்டு ஓடி போய் ஓசூர் அருகே வீடு எடுத்து வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள், இவனும் ஒரு வேலையில் சேர்ந்து ஜீவனம் ஒடி கொண்டு இருக்கும் பொழுது, ஒரு நாள் ஆபீஸ் விஷயமா இவன் மட்டும் வெளியூர் போய் இருக்கான், போனவன் வரவேயில்லை உன் அம்மாவும் ஒரு வாரம் காத்து இருந்து, சரி இவன் ஏமாற்றி விட்டு ஓடி விட்டான் என்று முடிவு செய்து இவள் இங்கு கனத்த அவமானத்துடன் வந்து சேர்ந்தால் என்று பெரு மூச்சுடன் பெரியவர் தொடர்ந்தார். “ஆனால் இவன் போன இடத்தில் ஒரு விபத்தில் சிக்கி ஒரு கையையும் காலையும் இழந்த நிலையில் பல வருடங்கள் சுயநினைவு இல்லாமல் அரசு மருத்துவமனையில் இருந்து இருக்கான், அதுவும் பீகாரில் ஒரு கிராமத்தில், அப்புறம் அவனுக்கு நினைவு வந்து உன் அம்மாவை தேடி அந்த வீட்டுக்கு போய் அவள் இல்லை என்றதும், பக்கத்தில் உள்ள ஊர்களில் எல்லாம் வருடகனக்கில் தேடி அவனுடைய கடைசி காலத்தில் கொடைகானல் வந்து சேர்ந்து இருக்கான், இங்கு ஒரு சர்ச்சில் சின்ன வேலைகள் செய்து காலத்தை கடத்தி, உடல் நலமில்லாமல் போன வருடம் போய் சேர்ந்து விட்டான், ஆனால் கடைசி வரை உன் அம்மாவை தேடி இருக்கான், இது முதல் தெவசம், ஆம் இரண்டு பேர் உயிரும் ஒரே நாளில் பிரிந்து விட்டது” என்று வருத்தமாக சொன்னார் பெரியவர். ரகுவுக்கும் கண்கள் கலங்கி இருந்தது,வார்த்தையே வரவில்லை.


“ரகு மனிதர்கள் எல்லோரும் நல்லவங்க தான் ஆனால் யாரிடம், எப்பொழுது, எதற்காக நல்லவர்களாக இருப்பார்கள் என்பது மனிதருக்கு மனிதர் வித்தியாச படும்” என்றார் அமைதியாக.

உடனே ரகு “இவ்வளவு நல்லவர்களாக இருக்கும் நீங்கள், அம்மாவை காப்பாற்றிய நீங்கள், ஏன் அம்மாவை ஏற்றுகொள்ளவில்லை” என்றான்.

சற்று நேரம் அமைதியாக இருந்த பெரியவர் “இல்ல ரகு, நான் எல்லாத்தையும் மறந்து மன்னித்து உன் அம்மாவுக்கு புது வாழ்க்கை அமைத்து கொடுக்கனும், என்று தான் பெங்களூர் கூட்டிச் சென்றேன், ஆனால் அவளால உன் அப்பாவை மறக்க முடியவில்லை, அழுது கொண்டே இருந்தாள், எனக்கு கோபம் வந்து விட்டது, ஒரு நாள் “ஏன் இப்படி வாழ்க்கையை கெடுத்து கொண்டாய், எங்களிடம் சொல்லி இருந்தால் நாங்கள் உனக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்து வைத்திருப்போமே” என்று கத்தினேன்

உடனே அவள் அழுது கொண்டே “ம்ம் சொன்னதுக்கு தான், என் தம்பிக்கு என்னால் துரோகம் செய்ய முடியாதுன்னு, தொங்கிட்டாலே” என்றாள் ஆத்திரமாக.

எனக்கு நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது, உன் அம்மாவிடம் நான் பேசிய கடைசி வார்த்தைகள் “ச்சீ பெத்த தாய சாவடிச்சீட்டு, செத்து இரண்டு நாளுக்குள் காதல் தான் முக்கியம்னு ஓடிய நீ ஒரு மனிஷியா”.

உன் அம்மாவும் பாவம், உன் அப்பா துரோகம் செய்து விட்டார் என்று நிலைகுலைந்து போய் இருந்தாள், நீ பிறந்த பிறகு கூட ஒவ்வொரு வருடம் கொடைகானல் வருவோமே சுற்றுலகா?, இல்லை, உன் அப்பா வந்து பார்ப்பார் என்று கடைசி வரை நம்பிக் கொண்டு இருந்தாள் உன் அம்மா, நானும் அதை தடுக்கவில்லை. ஆனால் பாவம் இரண்டு பேரும் சாகும் வரை பார்த்து கொள்ளவே இல்லை. எனக்கு கூட உன் அப்பா மீது கோபம் இருந்துச்சு, ஆனால் அவரை பற்றி உண்மையெல்லாம் கொஞ்ச நாள் முன்னாடி தான் எனக்கு தாமஸ் மூலியமாக தெரிய வந்தது. அதன்பின் தான் எனக்கே தெளிவு பிறந்தது, மனிதர்கள் யாரும் கெட்டவர்கள் கிடையாது, அப்படி சித்தரிக்கபடுகிறோம்” என்றார் பெரியவர்.

ரகு கண்களில் நீர் பொங்கிட “உண்மையில் நீங்க தெய்வம்,உங்க வாழ்க்கையே கொடுத்து என் அம்மாவையும் என்னையும் காப்பாற்றி இருக்கிறீர்கள்” என்றான்.

உடனே பெரியவர் “காப்பாற்றினேன் அவ்வளவு தான், ஆனால் நீ நினைப்பது போல வாழ்க்கை யெல்லாம் தரவில்லை,அதாவது கல்யாணம் எல்லாம் செய்து கொள்ளவில்லை, இருவருக்கும் அந்த எண்ணமும் இல்லை, உன் அம்மா கடைசி வரை மூன்று மாதம் வாழ்ந்து விட்டு போன உன் அப்பாவுக்கு தர்மபத்தினியாகவே வாழ்ந்தாள், இங்கே தான் அவர்களை விதி சேர விடவில்லை, மேலேயாவது அவர்கள் சேர்ந்து வாழட்டும், உன்னையும் வாழ்த்தட்டும்” என்று கண் பார்வையில்லாத கண்களில் இருந்து கண்ணீர் வந்தது பெரியவருக்கு.

பெரியவர் கண்களை துடைத்து கொண்டு “சொல்லு ரகு இப்போ யார் மீது உனக்கு கோபம் சொல்” என்றார் நிதானமாக.

ரகுவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, அமைதியாக நின்றான்.

“சொல் கணவனுக்காவும், பிள்ளைகாவும் வாழ்ந்தாலே உன் அம்மா அவள் மீதா?, அல்லது கை காலை இழந்தும் கூட சாகும் வரை உன் அம்மாவை தேடினானே உன் அப்பன், அவன் மீதா?, அல்லது ஒரு தப்பும் செய்யாமல் என் வாழ்க்கையை உங்களுக்காக கொடுத்தேனே, என் மீதா?” என்றார் பெரியவர்.

உடனே ரகு “உங்கள் யார் மீதும் இல்லை, கடவுள் மீது” என்றான்.

உடனே சத்தமாக சிரித்த பெரியவர் “உங்க தலைமுறை பசங்களுக்கு இதுதான் பிரச்சனை, தோல்வியாகட்டும், கோபமாகட்டும், எரிச்சலாகட்டும், காரணம் காட்ட பழிப்போட ஒரு ஆள் தேவை உங்களுக்கு. பெற்றோர், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கடவுள் என்று உங்கள் டார்கேட் வயதுக்கு ஏத்த மாதிரி மாறி கொண்டே போகும், எதையும் முழுமையாக சிந்திப்பது இல்லை. இன்று காலை வரை என்னை கண்டாலே உனக்கு பிடிக்காது, என் மேல் அவ்வளவு கோபம், உன் அப்பாவை பற்றி சொன்னவுடன் அவன் மீது கோபம், நான் நல்லவனாகிவிட்டேன். உன் அம்மாவை பற்றி சொன்னவுடம், நானும், உன் அப்பாவும் நல்லவர்கள் ஆகிவிட்டோம். அவள் கெட்டவள் ஆகிவிட்டாள். எங்கள் மூவரையும் பற்றி நன்றாக தெரிந்தவுடன் கடவுள் கெட்டவன் ஆகி விட்டாரா?, நாளைக்கு எவனாவது இந்த கிழவன் சொல்வது பொய்,அவனை நம்பாதே என்று சொன்னால் அதையும் நீ நம்புவாய், திரும்பவும் நான் கெட்டவன். முதலில் நீங்க ஒரு விஷயத்தை முழுமையாக தெரியாமல் ஒரு முடிவுக்கு வராதீர்கள். இந்த எல்ல விஷயங்களையும் உன் அம்மா இருக்கும் போதே சொல்லி இருப்பேன், ஆனால் நீ உன் அவசர புத்தியால் அவளை வெறுத்து இருப்பாய், அவளுடைய ஒரே ஆதரவு நீ தான், அதனால் நான் இதை எதையும் நான் முப்பது வருஷமா உன்னிடம் சொல்லவில்லை. இப்ப கூட நீ ஆரம்பித்தாய் என்று தான் சொன்னேன். இல்லையென்றால் கடைசி வரை சொல்லியிருக்கவே மாட்டேன். நான் வளர்த்த குழந்தை உன் அம்மா, அதனால் தான் அவளை நான் கடைசிவரை அவள் இஷ்டப்பட்ட மாதிரி விட்டு விட்டேன், அவள் முப்பது வருஷமா அழுதது நான் பேசவில்லை என்று இல்லை, உன் அப்பாவை நினைத்து அவர் செய்த துரோகத்தை நினைத்து, ஆனால் பாவம் அவளுக்கு சாகும் வரை தெரியாது, உன் அப்பாவின் நிலைமை” என்றார் பெரியவர்.

ரகுவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவமானத்தால் தலை குனிந்து

“அப்பா............என்னை மன்னிச்சிடுங்க, நான் எப்படி உங்களுக்கு கைமாறு செய்ய போறேனோ?” என்று அவரின் தோளில் முகம் புதைத்தான் ரகு.

உடனே பெரியவர் “நான் சொல்லட்டுமா, ஒரே ஒரு சிகரெட் இருந்தா கொடு, ரொம்ப குளிருது. அந்த பழக்கம் எனக்கு இல்லை என்று டபாய்க்காதே, நீ என்னைக்கு இந்த பழக்கத்தை ஆரம்பித்தாய் என்று எனக்கு தெரியும், சரி சரி சீக்கிரம் கொடு” என்றார் சிரித்து கொண்டு.

ரகு அசடு வழிந்து புன்னைகத்த வாரே அவரின் வாயில் வைத்து பற்ற வைத்தான்.

“நீயும் ஒன்னு எடுத்துக்கோ, முழுக்க நனைந்த பின் எதுக்கு முக்காடு” என்று சிரித்தார் பெரியவர். அப்பாவும் மகனும் தோளில் மீது கையை போட்டு கொண்டு கொடைகானலை தங்கள் புகையினால் இன்னும் மறைத்தார்கள். மெல்லமாக சூரியனும் மறைய தொடங்கியது.

**********************************முற்றும்**********************************

மதி
01-11-2008, 04:35 AM
கையை குடுங்க மூர்த்தி... கடைசி பத்தி நச்... "எல்லோருக்கும் காரணம் சொல்ல யாராவது வேணும்.." ஆனா பாருங்க.. அம்மாவுக்கு காதல் இருந்திருக்கலாம்னு அந்த பத்தியை படிக்கறதுக்கு முன்பே தோன்றிவிட்டது. :)

முன்பே சொன்ன மாதிரி.. தினம் ஒரு கதை எழுதறீங்க.... வாழ்த்துகள்.. மேலும் தொடரட்டும் உங்கள் படைப்புகள்..

ரங்கராஜன்
01-11-2008, 04:45 AM
நண்பரே
இந்த கதையை பொறுத்த மட்டில் எந்த ஒரு சஸ்பன்ஸும் கிடையாது, ரகு பெரியவரை வெறுக்கும் பொழுதே பெரியவர் நல்லவர் என்பது புலப்படுகிறது. அதேப் போல தான் அம்மாவின் காதல் விவகாரமும், அதையும் நாம் முன் கூட்டியே யூகித்து விடலாம், ஆனால் அம்மாவின் உண்மையான காதலை யூகிக்க முடியுதா?. இந்த கதையின் கரு அனைத்து மனிதர்களும் நல்லவர்கள் தான், அவர்கள் பார்வையில் இருந்து

பாபு
01-11-2008, 04:56 AM
கதை மிக அருமை. அதுவும் அந்த அட்வைஸ் ரொம்ப நல்லா இருக்கு !!

அன்புரசிகன்
01-11-2008, 06:34 AM
அவசரப்புத்திக்காரர்களுக்கு சாட்டையடியடிக்கும் கதை. அழகாக நகர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...

Narathar
16-11-2008, 05:41 PM
மனிதர்கள் யாரும் கெட்டவர்கள் கிடையாது, அப்படி சித்தரிக்கபடுகிறோம்................

நீங்கள் சொல்லவந்த கருத்தை அழகாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் மூர்த்தி......

கதையோட்டத்தை பார்க்கும் போதே.. அம்மாவுக்கு வேறு தொடர்பிருந்திருக்குமென்று ஊகிக்க முடிந்தாலும், முடிவில் அவர்கள் காதலை சொன்ன விதமும், சொல்லியிருந்தால் செய்துவைத்துருப்போமெ என்று சொன்னதற்கு, சொன்னதற்காகத்தான் உங்கக்கா தூக்கிலேயே தொங்கினா என்ற இடமும் நச்! என்று மனதை கவர்ந்தது..............

ஆனால் கதையின் இறுதிப்பாகத்தை கொஞ்சம் இழுத்திட்டீங்கன்னு எண்ணத்தோனுது...... கதைமுடிவு தெரிஞ்சதுக்கப்புரம் அப்பா அட்வைஸ் எல்லாம் பன்றது ஏதோ டிராமா தனமா பட்டது... ஒரு வேளை அவர் அம்மா கதையை சொல்ல முன்னாலே பீடிகையாய் இந்த அட்வைஸை சொல்றமாதிரியும், அதை மகன் சுவரஸ்யமற்ரு கேட்பதுபோலவும் எழுதியிருக்கலாமோ என்று எனக்கு தோணுது! இது என் பார்வை மட்டுமே......

மொத்தத்தில் கதை அருமை... வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
16-11-2008, 06:17 PM
நன்றி நாரதரே
ஆம் நீங்கள் கூறியது போல கொஞ்சம் பெருசா தான் இருக்கு, ஆனால் இதற்கு மேல் குறைத்தால் கதையில் ஒரு திருப்தி இருக்காது. இந்த கதையை நான் வேறு மாதிரி நாவலாய் எழுத யோசித்து இருந்தேன், சரி நம் மன்றத்துக்காக சிறுகதையாக வெளியிட்டேன். ஆனால் படிக்க கொஞ்ச அலுப்பு தட்ட தான் செய்யும், எழுது போது எனக்கே தட்டியது.

Narathar
16-11-2008, 06:28 PM
ஓ...............
இப்ப நாலலெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா?
சொல்லவேயில்ல?

நாராயணா!!!!

MURALINITHISH
22-11-2008, 10:06 AM
இப்படிதான் அவரவருக்கு ஒரு கதை இருக்கும் அதை அவரிடம் கேட்டால்தான் தெரியும் உலகில் அனைவருமே நல்லவர்கள்தான் அவரவர் விருப்பங்களும் சந்தர்ப்பங்களும்தான் மனிதனை சில செயல்கல் செய்ய தூண்டுகின்றன

minmini
24-11-2008, 01:19 PM
கதை நல்லா இருக்கு
இன்னும் எழுதுங்க :icon_b:

samuthraselvam
02-04-2009, 08:08 AM
ஆழமான உணர்வுகள், அழுத்தமான கதைக் கரு, அதற்கேற்ற களம் அருமை அண்ணா....!

தோல்வியாகட்டும், கோபமாகட்டும், எரிச்சலாகட்டும், காரணம் காட்ட பழிப்போட ஒரு ஆள் தேவை உங்களுக்கு
இந்த வரிகளில்தான் எத்தனை உண்மைகள்....

மனைவிமீது எத்தனை நேசம் வைத்திருந்தால், தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் அவளுக்கு ஒரு வாழ்க்கையும் கொடுத்து, தன் வாழ்க்கையும் வீணடித்து....... என்ன சொல்லவதென்றே தெரியவில்லை அண்ணா...
உண்மையில் இப்படி ஒரு அப்பா கிடைக்க காலங்கள் போனபின் அப்பாவின் பாசத்தை புரிந்தவனான ரகு கொடுத்துவைத்தவன்.

வரிகள் ஒவ்வொன்றும் ஒரு தேர்ந்த எழுத்தாளரைக் காட்டுகிறது... சபாஷ்.....

ரங்கராஜன்
02-04-2009, 01:15 PM
நன்றி பாசமலரே

ரொம்ப நாள் கழித்து இந்த கதைக்கு பின்னூட்டம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கு, நான் எழுதியதிலே பெரிய சிறுகதை இது தான், அதனாலே பலருக்கு இதை முழுமையாக படிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. உன்னுடைய விமர்சனத்திற்கு நன்றி

samuthraselvam
03-04-2009, 11:53 AM
நன்றி பாசமலரே

ரொம்ப நாள் கழித்து இந்த கதைக்கு பின்னூட்டம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கு, நான் எழுதியதிலே பெரிய சிறுகதை இது தான், அதனாலே பலருக்கு இதை முழுமையாக படிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. உன்னுடைய விமர்சனத்திற்கு நன்றி

கண்டிப்பாக அனைவரும் படிப்பார்கள் அண்ணா... அருமையான கதை..

அமரன்
07-05-2009, 11:39 AM
போட்டதும் படித்த கதை. படித்ததும் பதிலிட முடியாத நிலை. காரணம் கதையேதான்.

நான் தவழும் வயதில் என் தந்தை தவறினார். இயற்கை எய்தினார் என்று எழுத இயலாத மறைவு அது. மறக்கமுடியாத நிகழ்வும் கூட.

அப்பா பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் நெகட்டிவ் ஆனவை. நெகடிவ்வை பிரின்ட் போட்டுப் பார்க்கும் என் முற்சியை சூடாக்கி பல தெளிவுகளைத் தந்தது இந்தக் கதை. நன்றி மூர்த்தி.

ரங்கராஜன்
07-05-2009, 11:49 AM
போட்டதும் படித்த கதை. படித்ததும் பதிலிட முடியாத நிலை. காரணம் கதையேதான்.

நான் தவழும் வயதில் என் தந்தை தவறினார். இயற்கை எய்தினார் என்று எழுத இயலாத மறைவு அது. மறக்கமுடியாத நிகழ்வும் கூட.

அப்பா பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் நெகட்டிவ் ஆனவை. நெகடிவ்வை பிரின்ட் போட்டுப் பார்க்கும் என் முற்சியை சூடாக்கி பல தெளிவுகளைத் தந்தது இந்தக் கதை. நன்றி மூர்த்தி.

உண்மையில் என் மனம் நெகிழ்ந்து விட்டது அமரன், வார்த்தைகள் இல்லை.

நேசம்
07-05-2009, 01:18 PM
ரகுவின் தாய்க்கு முன்பே காதல் இருந்து இருக்கும், அந்த பெரியவர் தனது அக்கா மகளுக்கு தியாகம் செய்து இருப்பார் என்று முன்பே உணரமுடிந்தாலும்,கதையின் கரு எதையும் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது என்பதை அழகாக சொல்லி இருந்தது.தொடர் எழுவதைவிட சிறுகதை எழுவதில் தான் அதிக திறமை தேவைப்படும் என்று நினைக்கிறென்.அது உங்களிடம் அதிகம் இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

கலைவேந்தன்
17-04-2012, 05:48 AM
மனதில் நிறைந்த கதை. கதையின் தொடக்கத்திலேயே ரகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு பின்னணி கதை இருக்கும் என்பது புலப்பட்டாலும் எதிர்பார்த்த சஸ்பென்ஸுடனேயே கதை மிக அருமையாக நகர்ந்து அசத்தலாக முடிந்துவிட்டது.

எந்த ஒரு சிறுகதை முடிந்தபின்னும் தொடர்வதுபோல் நம் மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறதோ அந்த சிறுகதை மிகச்சிறந்த கதைதானென்பது என் கருத்து.

மிகச்சிறந்த கதையினைத் தந்த நண்பருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..!