PDA

View Full Version : புல்லாங்குழல்ஆதி
31-10-2008, 10:18 AM
துளை துளையாய் கசிந்து
இழை இழையாய் எமது
இறுக்கத்தை களைய
எங்கு கற்றாய் ?

வறுமை சூரியன்
வயிற்றை சுடுகையிலும்
குளுமையை இதழ்களில்
குழுமிட வைக்க
உனக்கே இயல்கிறது..

கண்ணீர் முட்டி
கரையுடைகிற கண்களில்
உறக்கத்தை ஊட்டி
இமைகளை பூட்ட
உனக்கே தெரிகிறது..

உடைப்பை திறந்து
உனது வெள்ளம் பாய்கையில்
இழப்பே நிவாரணமாகிறது..

உன் துளை திரியில்
இசைதீ ஏற்றபடுகையில்
மெழுகாய் உருகி கரைகிறது
மென்மையற்ற இதயங்களும்..

காதலன் விரல் தொடும் போது
கண்மூடும் பெண்ணை போல
நீ வருடும் போது
மூடிவிடுகின்றன எம்
புலன்களின் இமைகள்..

உன்னை
தடுப்பு போட்டு
தனிமையில் தேங்கையில்
விடுப்பு போட்டு
வெளியேறுகிறது விரக்தி..

பெண்ணோடு உதடு ஒட்டையில்
பேரின்ப சுவர்கள் திறந்திடும்
உன்னோடு உதடு ஒட்டையில்
உறைந்த நாளங்கள் எழுந்திடும்..

MURALINITHISH
31-10-2008, 10:40 AM
அருமையான கவிதை
புல்லாங்குழலில் உள்ள பெருமையும் அதன் அருமையும்

வசீகரன்
31-10-2008, 11:39 AM
ஆஹா... ஆஹா.. அருமை அருமை... கவிஞர் ஆதியின் கவிதைகளை
படித்து எத்தனை நாட்களாகிறது...]
ஒவ்வொரு உவமைகளும் இதயத்தை இசைந்து செல்கிறதே..
இவ்வளவு நாட்கள் எங்கே போனீர்கள் ஆதி...!!

ஆதி
31-10-2008, 11:58 AM
அருமையான கவிதை
புல்லாங்குழலில் உள்ள பெருமையும் அதன் அருமையும்

உங்களின் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றிகள் பல முரளி..
ஆஹா... ஆஹா.. அருமை அருமை... கவிஞர் ஆதியின் கவிதைகளை
படித்து எத்தனை நாட்களாகிறது...
ஒவ்வொரு உவமைகளும் இதயத்தை இசைந்து செல்கிறதே..
இவ்வளவு நாட்கள் எங்கே போனீர்கள் ஆதி...!!

வெகு நாளைக்கு பின் கவிதை கிடைத்த உங்களின் உற்சாக பின்னூட்ட உருக வைத்துவிட்ட வசீகரன்.. பணி பளு காரணமாய் முன்பு போல் மன்றத்திற்கு வரயிலவில்லை வசீகரன்.. இன்னும் சிறிது நாட்களில் எல்லாம் சரியாகும் என்று நம்புகிறேன்..

உருக வைத்த பின்னூட்டத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் வசீகரன்..

பென்ஸ்
02-11-2008, 11:04 PM
கவிஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்...
அப்படி இருப்பானாகில் , இப்படி நல்ல கவிதைகள் கிடைக்கும்.

துளை வழி வளி
இதயவழி ஒழுகும் இளி
நுழையும் சிறு மூச்சு
கழையும் என் துயர்.

நல்ல கவி ஆதி...

கவிதை ஒரு நல்ல இசையாய் என் உள் சென்று வந்தது. பாராட்டுகள்.

பிச்சி
03-11-2008, 04:18 AM
பிரமாதம் ஆதியண்ணா. வருடிச்சென்றது போல இருக்கிறது. இதைப் போல புல்லாங்குழல் கவிதையில் ப்ரியனின் கவிதை நன்றாக இருக்கும்..

ஆதி
04-11-2008, 11:00 AM
கவிஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்...
அப்படி இருப்பானாகில் , இப்படி நல்ல கவிதைகள் கிடைக்கும்.

துளை வழி வளி
இதயவழி ஒழுகும் இளி
நுழையும் சிறு மூச்சு
கழையும் என் துயர்.

நல்ல கவி ஆதி...

கவிதை ஒரு நல்ல இசையாய் என் உள் சென்று வந்தது. பாராட்டுகள்.


உண்மைதான் பென்ஸண்ணா, காற்றிசை கருவிகளுக்கும், நரம்பிசை கருவிகளுக்கும் பெரும்சுவைஞன் நான்.. அதலும் புல்லாங்குழல் என்றால் ஒரு தனி பெருமீர்ப்பு எனக்கு..

எங்கு குழலிசை கேட்டாலும் நரம்பு பாம்புகள் படமெடுத்தாடும்.. நாளங்கள் எல்லாம் மொட்டு மொட்டாய் பூக்கும்.. மனப்பூ சொட்டு சொட்டாய் உருகி தானே பனிதுளியாகிவிடும்..

உங்கள் நான்கு வரி கவிதை இன்னும் அசத்தல் அண்ணா, வார்த்தையாடல்கள் அருமை.. பாராட்டுக்கள் அண்ணா..

ஆதவா
04-11-2008, 11:23 AM
கவிஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்...
அப்படி இருப்பானாகில் , இப்படி நல்ல கவிதைகள் கிடைக்கும்.

துளை வழி வளி
இதயவழி ஒழுகும் இளி
நுழையும் சிறு மூச்சு
கழையும் என் துயர்.

நல்ல கவி ஆதி...

கவிதை ஒரு நல்ல இசையாய் என் உள் சென்று வந்தது. பாராட்டுகள்.

கவிஞன் ரசிகனாக இருத்தல் அழகா? ரசிப்பதற்கு அப்பாற்பட்டு இருத்தல் அழகா?

ரசித்தல் என்ற சொல்வட்டத்தில் சுழன்று வட்டத்தை விட்டு வெளியேறாதவன் எங்ஙனம் கவிஞன் எனப்படும்? சற்று முன் இளசு அண்ணாவின் கவிதையும் படித்தேன். எங்கே நுட்பமாக ஒரு பார்வை நுழைக்கப்படுகிறதோ அங்கே வாழ்க்கை தொடங்குகிறது.

புல்லாங்குழல்கள் இசைக்கப்படுவதைக் காட்டிலும் இம்சிக்கப்படுவது நுட்பமாக கவனிப்பவனுக்குத் தெரியலாம். இது ஒரு வகை. சிலர் இன்னும் பைத்தியப்படுவார்கள். குழல் துளைகள் காற்றுக் குருதியை சிந்துகின்றன என்று நொந்தவர்கள்.

இசை நுழையும் போது அதன் ஒலியளவே நம்மை ரசிக்க செய்யும். புல்லாங்குழலோ, இதர தாள வாத்தியங்களோ அளவு மீறிட, அமுதமும் நஞ்செனத் திணிக்கப்படும்.

பென்ஸ் அண்ணா,,, எல்லா சூழ்நிலைகளிலும் இசை நம்மை ரசிக்க வைக்காது. இறந்தவன் வீட்டு குழலிசை போன்று. சில சுளிக்கவும் செய்யும்.

ஆதி, இசையை இசையாக இசைந்து கவிதை இசைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எங்கே நீங்கள் நுண்ணியமாக ரசிக்க ஆரம்பித்தீர்களோ அங்கேயோ உங்களுக்கான விதை விதைக்கப்படுகிறது. நீங்கள் அதிலிருந்தே கவிதைக் காட்டை வளர்த்தெடுக்கலாம். சிறப்பான வார்த்தைகள், கட்டுக்கோப்பான கவிதை நடை துள்ளல் மிகுந்த பொருள் என்று மாறிமாறி ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கிறது உங்கள் கவிதை.

பார்வைக்கோணங்களில் எதிர்முறை பார்வையும் உண்டு... அது உங்களுக்கு வாய்க்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

வாழ்த்துக்கள்.
ஆதவன்..

ஆதி
04-11-2008, 11:48 AM
பிரமாதம் ஆதியண்ணா. வருடிச்சென்றது போல இருக்கிறது. இதைப் போல புல்லாங்குழல் கவிதையில் ப்ரியனின் கவிதை நன்றாக இருக்கும்..

நன்றி தங்காய்.. ப்ரியனின் புல்லாங்குழல் கவிதையின் சுட்டி இங்கு தந்தால் நானும் சுவைத்து மகிழ்வேன்..

பின்னூட்டத்திற்கு மீண்டும் என் நன்றிகள் தங்காய்..

shibly591
05-11-2008, 04:34 AM
சொக்கவைக்கும் வரிகள் புல்லாங்குழல் இசை ரம்யமாய் காதுகளை துளைக்கின்றன

பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

அமரன்
05-11-2008, 07:40 AM
புல்லாங்குழலிசை
காதில்பாயும் தருணங்களில்
வெட்டிக் குடைந்த பொழுது
மூங்கில் விட்டு
சுவரில் உறைந்த கண்ணீர்
உயிர் பெற்றது போலிருக்கும்.
ஆனாலும் மனம் இலயிக்கும்.
பிளாஸ்டிக் குழல்கள்-அந்த
நாத இனிமை தந்ததில்லை.


சாவுக்குத்து இசையிலும்
சந்தோசம் உள்ளது
சாவைப் பார்க்காதவரை.

பாராட்டுகள் ஆதி.

ஆதி
06-11-2008, 11:12 AM
புல்லாங்குழல்கள் இசைக்கப்படுவதைக் காட்டிலும் இம்சிக்கப்படுவது நுட்பமாக கவனிப்பவனுக்குத் தெரியலாம். இது ஒரு வகை. சிலர் இன்னும் பைத்தியப்படுவார்கள். குழல் துளைகள் காற்றுக் குருதியை சிந்துகின்றன என்று நொந்தவர்கள்.

இந்த பார்வை எண்ணுள் இல்லாமல் போகவில்லை ஆதவா..
இவ்வாறும் எழுதியிருந்தேன்..

அடுப்புக்குள் சிறைசென்று
அன்றைய சோறாவதும்
சூடிட்ட செவிகளுக்கு
சுந்தர மொழியாவதும்
உனக்கே சாத்தியம்..

சுடுப்பட்டும் துளைப்பட்டும்
சுகராகம் இசைக்கிறாய்..
சுடுப்பட்ட விழியெல்லம் - உன்
சோகத்தை வடிக்கிறாய்..

இந்த வரிகளை எல்லாம் நீக்கிவிட்டேன் ஆதவா..ஆதி, இசையை இசையாக இசைந்து கவிதை இசைத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள். எங்கே நீங்கள் நுண்ணியமாக ரசிக்க ஆரம்பித்தீர்களோ அங்கேயோ உங்களுக்கான விதை விதைக்கப்படுகிறது. நீங்கள் அதிலிருந்தே கவிதைக் காட்டை வளர்த்தெடுக்கலாம். சிறப்பான வார்த்தைகள், கட்டுக்கோப்பான கவிதை நடை துள்ளல் மிகுந்த பொருள் என்று மாறிமாறி ஆறு பந்துகளில் சிக்ஸர் அடிக்கிறது உங்கள் கவிதை.

வாழ்த்துக்கள்.
ஆதவன்..

வெகு நாளைக்கு பின் வந்த பதிந்த கவிதைக்கு உங்களின் பின்னூட்டமும் வாழ்த்தும் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி கலந்த நன்றிகள் ஆதவா..

பென்ஸ்
06-11-2008, 04:23 PM
கவிஞன் ரசிகனாக இருத்தல் அழகா? ரசிப்பதற்கு அப்பாற்பட்டு இருத்தல் அழகா?
............
...........
பார்வைக்கோணங்களில் எதிர்முறை பார்வையும் உண்டு... அது உங்களுக்கு வாய்க்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.

வாழ்த்துக்கள்.
ஆதவன்..

என்னிடம் வம்பிளுப்பதே உங்களுக்கு பிடித்த விடயம் தானே...
இந்த முறை நான் எஸ்கேப் ஆகலை சரியா...:D

ஆதவா..
நாம் இருக்கும் மனநிலையே நம் பார்வைகளை தீர்மானிக்கிறது....

மழை..
அதன்மீது மட்டுமன்று அந்த வார்த்தை மீதே எனக்கு காதல் உண்டு...
இது பொழியும் ஒரு பொழுதில் நடக்கும் சில சம்பவங்களும் அது எவ்வாறு பார்க்கபடும் என்பதையும் பார்ப்போம்...

காதல் எற்றுகொள்ள பட்ட நொடியில் , மழையில் வருபவன்...
அதை உணர்கிறான் என்றால் (இதை ரசனை எனலாம் தானே..??)
பெரும் பாலையில் தவறிப்
பெய்துவிட்ட
மழை நீ
எனக்கு!


அவள் அழகில் லயிக்கும் பொழுதில்
மழையில் நனைந்த உன் முகம்
ஒரு நிலவில்
சில நட்சத்திரங்கள்!

இதுவே அவளோடு நெருங்கிய நாட்க்களில்
சுகம்!
மழையில் நனைந்து கரைதலும்!
உன் பிடியில்
கரைந்து தொலைதலும்!


இதுவே, தன் காதலியிடம் கோபம் காட்டும் நொடியில்...
நீ கோபம் காட்டும் நாட்களில்
என் மனமெங்கும் பெய்யும்
வலிக்க வலிக்கக்
கல் அடி மழை!
ஆலங்கட்டி மழை!


நன்றி: ப்ரியன் (கல்யாணத்துக்கு அப்புறம் கவிதையே எழுதலை போலிருக்கு)

கவிஞன் ஒன்று,
பொருளும் ஒன்று..
பார்வைகள்.. வித்தியாசம்..
எதனால் என்றால் கவிதை எழுதிய பொழுதின் மனநிலை என்பேன்....

உணர்வுகளின் வேளிப்பாடு தானே கவிதை...
நமக்கு இனிக்கும் உணர்வுகள் ரசனையாகிற்து,
வலிக்கு உணர்வுகள் முள்ளாகிறது....
கவிஞன் கவிஞனாகவே இருக்கட்டும்....
அவன் ரசிக்கும் போது இனிக்கும் கவிதைகள் வருகிறது...
அவனே வலியில் இருக்கும் போது முள்ளாய் கவிதைகள் வருகிறது...
சமூக கவிதைகள் இதில் "முள்" வகைதானே...

பூவை பூன்னகையால் வருடவும்
முள்ளை முள்ளால் எடுக்கவும்...
கவிஞன் கவிஞனாகவே இருக்கட்டும்...

இளசு
08-11-2008, 08:30 AM
இயல்பாய் மனிதன் முதலில் கண்ட காற்றிசைக் கருவி இதுவாகத்தான் இருக்கவேண்டும்..

இதம் = குழலிசை!

உலகெங்கும் பொது இசை!

மெழுகுவர்த்தி பற்றி வைரமுத்து பல பார்வைகளில் வடித்த கவிதையை
ராஜா அவர்கள் மன்றத்தில் தந்திருக்கிறார்..

அந்த தரத்தில் இங்கே குழல் பற்றி ஆதி..

கூடவே யாழிசையாய் இணைந்த இனிய பென்ஸின் சுவையார்ந்த பின்னூட்டம்..

மனம் லேசாக்கிய திரி..

பாராட்டுகள் ஆதி, நன்றி பென்ஸ்!

ஆதி
11-11-2008, 06:38 AM
நெஞ்சார்ந்த நன்றிகள் இளசண்ணா, அமரன் மற்றும் சிப்லி

சுகந்தப்ரீதன்
11-11-2008, 02:36 PM
இளசு அண்ணா சொன்னது போலவே குழலிசையாய் இதமாய் மனதை வருடி செல்கிறது கவிதையும்.. அதை தொடர்ந்த பின்னூட்டங்களும்...!!

உன்னை
தடுப்பு போட்டு
தனிமையில் தேங்கையில்
விடுப்பு போட்டு
வெளியேறுகிறது விரக்தி..மிகவும் ரசித்தேன் ஆதி..!! ஆனால் முன்போல் இப்போதெல்லாம் நீங்கள் அதிகம் கவிதை எழுதாமல் ஏகாந்தத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று சொல்கிறது இவ்வரிகள்..!! ரசியுங்கள்.. ரசியுங்கள்... கூடவே அதை கவியாக்கி எங்களிடம் இசைக்கவும் மறக்காதீர்கள்.. சரியா..??

வாழ்த்துக்கள்.. வசீகரித்த வரிகளுக்கு..!!