PDA

View Full Version : 30 ரூபாlenram80
30-10-2008, 09:32 PM
இரவு 2 மணி இருக்கும். ஒரு ஆள் கூட இறங்கவில்லை. ஒருவரும் ப்ளாட்பாரத்திலும் இல்லை. தலைக்கு மேலே எரிந்த சின்ன குண்டு பல்பை சுற்றி வந்த விட்டில் பூச்சிகளை தவிர வேறு எதுவும் அங்கே அசைவதாய் தெரியவில்லை. தனி ஆளாய் இறங்கி நான்கு அடி வைத்தவனை ஜனவரி குளிரில் படுத்திருந்த நாய் கூட தலை தூக்கிப் பார்த்து விட்டு, மீண்டும் அந்த சினிமா போஸ்டரில் சுருட்டிக் கொண்டு படுத்து விட்டது.இப்படி வேலைக்கு இண்டர்வியூக்கு போய்விட்டு தனிஆளாய் விரக்தியோடு வந்து இறங்குவது இவனுக்கு ஒன்றும் புதிதில்லை. "என்ன நாடுப்பா இது? படிச்சா வேலை கிடைக்க மாட்டேங்குது...எதுவுமே சாதகமா அமைய மாட்டேங்குது. இந்த ப்ளாட்பாரம் மாதிரி நம்ம வாழ்க்கையும் வெறிச்சோடி போயிடுமோ?"

வெள்ளைக் காரன் காலத்து ரயில் நிலையம் போலும். பெரிய வெள்ளை நிற தூண்களோடு அழுக்காய் இருந்தது மொத்த ரயில் நிலையமும். "பன்னிப் பயலுங்க" தூணில் துப்பிக் கிடந்த சிவப்பு நிற எச்சில்களைப் பார்த்ததும் குளிரிலும் கோவ வார்த்தை அவன் வாயிலிருந்து வந்தது.பின் புறத்திலிருந்து சின்னதாய் ஒரு பெண்ணின் சத்தம். "சும்மா கிட....". நடந்தவன் நின்று பின்னாலேயே திரும்பி பார்த்தான். பிளாட்பாரத்தின் அடுத்த பக்கத்தில் 2 பேர் படுத்திருப்பது போல இருந்தது. "அதானே பாத்தேன்...நடைபாதை மனிதன் இல்லாமல் அணு ஆயுத இந்தியாவா?" நினைத்தவன் அவள் சொன்னதை மீண்டும் நினைத்து விட்டு "குளுருக்கு வேற என்ன கேப்பான் உன்கிட்டே?" என்று தனக்கு தானே முனங்கினான்.

"இந்த குளிருக்கு ஒரு கையில் சிகரெட். மறு கையில் டீ க்லாஸ். இது தான் சொர்க்கம்." கல்லூரி நாட்களில் இவன் நண்பன் ஒருவன் சொன்னது இந்த மூடிக் கிடக்கும் டீ கடையை பார்த்ததும் ஞாபகத்துக்கு வந்தது. இவனுக்கு சிகரெட், பான் பராக், காட் ட்ரிங்ஸ் மீது ஏனோ வெறுப்பு. "நல்லா இருந்தா குடிக்கலாம். எப்படிடா இந்த கருமத்தை குடிக்கிறீங்களோ?" முன்பு ஒருமுறை சிகரெட் பிடிக்க முயற்சித்து இருமல் வந்து ஆட்டி படைத்ததையும், காட் ட்ரிங்ஸ் குடிக்க முயற்சித்து வாமிட் வந்ததும் ஞாபகம் வந்தது. தனிமை நிறைய யோசிக்க வைத்தது. அதுவும், எந்த ஒன்றை பார்த்தாலும் அதற்கு சம்பந்தமான பழைய நினைவுகளை அசைபோடுவது பிடித்து இருந்தது அவனுக்கு.

வாசலுக்கு வந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே இருட்டு. திடீரென்று பக்கத்தில் ஒரு ஆள் வந்து "எங்க சார் போகணும்?" என்று கேட்டவனை பார்த்தான். இப்போது தான் ரயில் சத்தம் கேட்டு முளித்து இருக்கவேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரால் முகம் கழுவி தூக்கத்தை விரட்டி விட்டவன் போல இருந்தான். "பஸ் ஸ்டாண்டு போக ஏதாவது வண்டி இருக்கா?"என்று கேட்டான். "ஆட்டோவுல ஏறுங்க சார். 30 ரூபா" மறுப்பேதும் பேசாமல் ஏறினான். பணத்திற்காக இரவு பார்க்காமல், குளிர் பார்க்காமல் குடும்பத்தை காப்பாற்ற ஒரு சராசரி இந்தியன் சிரமப் படுவது மாதிரி உலகின் வேறு எங்கும் சிரமப்பட மாட்டானோ?

சே.. இவனை இந்தியன்? என்று யோசிக்கிறேன். இந்தியாவைப் பற்றி இவனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது? இவன் கவலைப் பட நாடு இவனுக்கு என்ன செய்து விட்டது? ஏதோ பிறந்து விட்டதால், நம்மைப் போல படிக்காமல் வேறும் எதுவும் தொழில் தெரியாததால் இப்படி ஆட்டோ ஓட்டுகிறான். வீட்டில் இவனை நம்பி ஒரு பொண்டாட்டியும், ரெண்டு பிள்ளைகளும் இருக்கும். அவர்களை காப்பாற்ற தன் சொந்த விருப்பங்களை தூக்கி போட்டு விட்டு தாடி முகத்தோடே இப்படி வாழ்க்கையை தள்ள வேண்டியது தான்.

"சார்.. பஸ் காலையிலே 5 மணிக்கு தான். இங்கே எறங்கிக்குங்க.அப்பாடா... இன்னைக்கு முதல் போலி 30 ரூபா. சாமிக்கு வேண்டிகிட்டேன் சார். நம்ம ராக்கெட்டு நிலவுக்கு போனா 30 ரூபா உண்டியல் போடுறேன்னு. ரொம்ப நன்றி சார்!....என்னடா இப்படி மூடனா இருக்குறானேன்னு பாக்குறீங்களா? நம்ம நாட்டோட பெரிய சந்தோஷத்துலே சின்னதா எனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டாமா சார்? " இறக்கிவிட்டு அவன் போய் கொண்டிருந்தான். இவன் தான் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

அமரன்
30-10-2008, 10:58 PM
நிலவைத்தொட்டு விட்டோம் என்ற சந்தோசம் ஒவ்வொரு நாட்டுப்பிரஜைக்கும் இருக்கவேண்டியது அவசியம். கடுகளாவவது தன் பங்கு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மெச்சத்தக்கது. அதுக்காக சாமி உண்டியலில் காசு போடுவது அநியாயம். பாமரன் ஒருவன் இப்படித்தான் நேர்ந்திருப்பான் என்ற உண்மை உறைத்து முடிவுடன் உடன்பட வைத்தாலும் வேறு மாதிரி முடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். போகிற போக்கில் பலதை எள்ளியும், கிள்ளியும் போட்டிருப்பது கதைக்குச் சுவைதருகிறது. பாராட்டுகள் லெனின்.

mukilan
31-10-2008, 12:29 AM
காதல் கவிஞரிடம் இருந்து "சுருக்" என ஏற்றும் சிறுகதை. இந்தியனா இவன். இவன் இந்தியன் என நினைக்க இந்தியா இவனுக்கு என்ன செய்து விட்டது என்ற கேள்விக்குப் பதிலாக நாடு உனக்கென்ன செய்தது என்பதைவிட நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என கென்னடியின் வாக்கியங்களை செயலாக்கியிருக்கிறார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.வேலை கிடைக்காத இளைஞனின் மனதின் பிரதிபலிப்பு அருமையாக இருக்கிறது.

மதி
31-10-2008, 03:24 AM
வேலை தேடும் இளைஞனின் மன ஓட்டங்களைத் தெளிவாக படம் பிடித்துள்ளீர்.. படித்தோர் தனக்கு மட்டும் நாட்டு நலனில் அக்கறை இருக்கு என்பதாய் இறுமாந்திருக்க இறுதி வரி நெத்தியடியாய் இருந்தது.

வாழ்த்துகள் லெனின்.

ரங்கராஜன்
31-10-2008, 04:56 AM
வாழ்த்துக்கள் லெனின்
நடைபாதை மனிதன் இல்லாமல் அணு ஆயுத இந்தியாவா. இந்த வரி கனகச்சிதம்.

Narathar
31-10-2008, 05:07 AM
பாராட்டுக்கள் லெனின்....

ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் கதையின் நாயகனும்,
அடுத்த சவாரி தேடி போய்க்கொண்டே இருக்கும் கதையின் நிஜ நாயகனும்
பலதரப்பட்ட தத்துவங்களை உணர்த்தி நிற்கின்றார்கள்.......

இன்னுமின்னும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்

lenram80
03-11-2008, 08:33 PM
மிக்க நன்றி அமரன், முகிலன், மதி, மூர்த்தி & நாரதர். நான் திகில் கதை எழுத ஆரம்பித்து, எதற்கு முதல் கதையிலேயே ரத்தத்தையெல்லாம் எழுத வேண்டும்? என நினைத்து கதையே மாற்றி இப்படி முடித்து விட்டேன்! :-)

இளசு
03-11-2008, 09:17 PM
பாராட்டுகள் லெனின்..

வர்ணனைகள்.. எண்ணவோட்டங்கள்.. காட்சிப்பதிவுகள்...

நல்லபடி எழுத வருகிறது உங்களுக்கு...

மிகச் சிறந்த சிறுகதைகள் உங்கள் வசம் வரும் என்பதற்கு அச்சாரங்கள் தெரிகின்றன..

இறுதி முடிச்சு - சுவையானதே!


நாரதரின் விமர்சனம் - அருமை!

---------------------------

30 ரூபா - முதல் போணிதானே! ''போலி''யில்லைதானே?:)

ராஜா
04-11-2008, 04:08 AM
நாயகனின் எண்ணவோட்டத்தை ஒட்டியே நம் கருத்தும் சென்றுகொண்டிருக்கும்போது, கதையின் இறுதிப்பத்தியில் வரும் திடீர் திருப்பம் 'அட' போடவைக்கிறது..!

வாழ்த்துகள் லெனின்..!!

சிவா.ஜி
04-11-2008, 05:08 AM
முதல் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் லெனின். தடைபடாத கதையோட்டமும், எண்ணங்களில் தெரிந்த உண்மைகளும் ரசிக்க வைக்கின்றன. பாராட்டுக்கள்.

poornima
04-11-2008, 05:52 AM
நல்ல கா.நி.க.. நன்றி லெனின்..

படித்த குப்பைகள் தான் இன்றைக்கு தெளிவாய் சிந்திப்பதில்லை. ஓரளவு விவரம்
அறிந்த பாமரனின் எண்ண ஓட்டங்கள் கூட அவனுக்கு இல்லை..