PDA

View Full Version : ஒரு துளி பால் (சிறுகதை)ரங்கராஜன்
30-10-2008, 07:57 PM
ஒரு துளி பால்

அஸ்தமனமாகும் சூரியன், வானம் முழுவது புதுசா திருமணம் ஆன பெண்ணின் முகம் போல மஞ்சளாக இருந்தது.மிகப்பெரிய ஆலமரம், விழுதுகள் அனைத்து ஆலமரத்தின் மூல தண்டை போல பெரியதாக இருந்தது, அவ்வளவு வயதான மரம். அந்த மரத்தின் கீழே உக்கார்ந்து குப்புசாமி டீ குடித்துக் கொண்டு இருந்தார். வயது 57, சற்று குண்டாக இருப்பார் இன்னும் கொஞ்ச நாளில் ஓய்வு பெற்று விடுவார். உடலும் ஒத்துழைக்கவில்லை. அவர் இருந்த இடத்தை நோக்கி கணேசன் நடந்து வந்தான்.அவர் அவனை ஒரு முறைப் பார்த்து விட்டு, அவன் இவரை கடந்து போகப் போகிறான் என்று நினைத்த குப்புசாமி
டீக் குடிப்பதில் கவனமாக இருந்தார்.

“ ஐயா என் பேரு கணேசன், நான் ..........................”

குப்புசாமிக்கு ஒரே ஆச்சர்யம், கணேசன் வந்து பேசுவது, காரணம்?. கணேசன் வயது 36, நல்ல திடகாத்திரமான உடல், சுருள் சுருள் முடி, மாநிறம், ஐந்து அடி இருப்பான், அவன் உண்டு, அவன் வேலை உண்டுனு இருப்பான். யாரிடனும் தேவையில்லாமல் பேச மாட்டான், ஏன் தேவையானாலும் பேச மாட்டான். குப்புசாமிக்கு பத்து வருடமாக அவனை தெரியும், ஆனால் இவரிடம் அவன் ஒரு வார்த்தைக் கூட பேசியது இல்லை. அப்படி இருக்கையில் திடீர்ன்னு வந்து பேசினான்
குப்புசாமி ஆச்சர்யத்துடன்,

“வாய்யா கணேசா, தெரியும்பா உன்ன என்ன திடீர்ன்னு உன் தவத்தை கலச்சிட்ட” என்றார் சிரித்துக் கொண்டு.

முதல் முறையாக கணேசனும் சிரித்தான் “அதெல்லாம் ஒண்ணு இல்லைங்க சார்”

“யோவ் உனக்கு சிரிக்க கூட வருமா, பரவாயில்லையே” என்றார்.

“சார் உங்க கூட பேசனும் ரொம்ப நாளா நனச்சுனு இருந்தேன் சார், ஆனா பேசல” என்றான் தயங்கிய படி.

“நனச்சா உடனே செஞ்சிடனும் அதான் எனக்கு பிடிக்கும், ஆமா இங்க நிறை பேர் இருக்கும் போது எதுக்கு என் கிட்ட பேச நனச்ச”

“ஆயிரம் கணக்குல ஊமத்தம் பூ இருந்தாலும், ஒரு குண்டு மல்லிக்கு ஈடாகுமா?”

“யோவ் நல்லா கவிதையா பேசறயா,................ஆமா என்னுடைய ஸைச வச்சிதான, குண்டு மல்லி சொன்ன?”

“அய்யோ சாமி சத்தியமா இல்ல சார்” என்றான் பதட்டத்துடன்.

“சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், டீ குடிக்கிறீயா, உக்காரு”

அவன் தன்னுடைய வலது கையை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டே குப்புசாமிக்கு எதிரில் கீழே உக்கார்ந்தான்.

“சார் எனக்கு டீ வானா, கொஞ்சம் பால் மட்டும்..........”

“யோவ் ஒரு டம்பளர் பாலுக்காயா, மல்லி, ரோஜான்னு வர்ணிச்ச, யோவ் கந்தசாமி ஒரு டம்பளர் பால் எடுத்துன்னு வாயா”
என்றார் கணேசன் தன் வலது கையை பாக்கெட்டுக்குள்ளே வைத்திருப்பதை கவனித்தார்.

“ரொம்ப தாங்க்ஸ் சார், பத்து வருஷமா உங்கள நான் பார்த்துனு இருக்கேன், எல்லாரும் உங்கள பத்தி நல்லதா தான் சொல்றாங்க,
பெரிய ஆபிஸர்ல இருந்து எல்லாரும். அதனால தான் உங்ககிட்ட பேசாமலே உங்கள் பிடிச்சி போச்சு”

டீ வந்தது இருவருக்கும் மத்தியில் வைக்கப்பட்டது.

“எடுத்துக்கோயா உனக்கு தான் டீ” என்றார் குப்புசாமி. கணேசன் இடது கையால் டம்பளரை தொட்டு விட்டு

“ஆ ரொம்ப சூடா இருக்கு சார், கொஞ்சம் ஆறட்டும் சார்”

“இது வேறயா,............(இழுத்து பெருமூச்சி விட்டு) ஆமாயா நீ சொல்லறது சரிதான், என் முப்பது வருஷ சர்வீஸ்ல நான் இதுவரை ஒரு மெமோ வாங்கினது கிடையாது, பெரியஆபிஸர்ங்க கிட்ட திட்டுவாங்கினது கிடையாது,யார்கிட்டையும் சண்ட போட்டது கிடையாதுயா, அப்படியே வாழ்க்கை ஓடிடுச்சு, பாரு இன்னும் மூணு மாசத்துல ரீட்டையர் ஆவ போறேன். என்ன வாழ்க்கையா?,இந்த முப்பது வருஷத்துல என் குடும்பத்துகூட செலவு செஞ்ச நாட்கள்னு பார்த்தா, ஒரு வாரம் கூட இருக்காது. (சுவாரஸ்யத்துடன்) என் பொண்டாட்டிக்கு கமலஹாசன் படம்னா உயிரு, நாங்க இரண்டு ஓண்ணா படம் பார்க்கனும் அவளுக்கு ஆசை, ஆனா இந்த வேலையில இருந்துக்குனு நா எங்க கூட போறது, பாவம் ராஜப்பார்வை படத்துல இருந்து இப்ப வந்த தசாவதாரம் படம் வரையும் ஓயாம கேட்டுனே இருக்கா, ரீட்டயர் ஆன அப்புறம் தினமும் அவளை கமல் படத்துக்கு கூட்டினு போணும் அதான் என் ஆசை” என்று சின்ன குழந்தைப் போல சிரித்தார்.

கணேசனும் அவர் சொல்வதை மிகுந்த சுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டு இருந்தான்.

“சரி கணேசா, உனக்கு வாழ்க்கையில ஆசையெல்லாம் இருக்கா” என்றார். அவ்வளவு தான் கணேசன் உற்ச்சாகமானான், யாராவது இந்த கேள்வியை
கேட்க மாட்டாங்களா என்று இருந்தான், கேட்ட உடனே மடை திறந்து வரும் வெள்ளம் போல பேசினான்.

“எனக்கா சார், நறைய விஷயம் புடிக்கும் சார், காலையில் எழுப்பும் என் குழந்தையின் பிஞ்சி விரல்கள், என்னுடைய அம்மா வைக்கும் கறிக் குழம்பு, என் மனைவியோட வேர்வை வாசம், கமல்ஹாசன் படம், கூட்டமா இருக்கும் பஸ்ல நான் உக்கார்ந்துன்னு போறது, இளையராஜா பாட்டு, மார்கழி மாசத்துல 10 மணி வரை தூங்கறது, என் குழந்தையின் எச்சில் பட்ட பதார்த்தம். என்னிடம் சண்டை போட்டு பிறகு என் மனைவி பேசும் முதல் வார்த்தை, குளிரில் சிகரேட் அடிப்பது அப்புறம் ..........” என்ற சொல்லும் போதே

“யோவ் யோவ் தெரியாம கேட்டுடேன், நீ பாட்டுக்குனு சொல்ற. பாலை குடிச்சிட்டு எடத்த காலி பண்ணு, இருட்டாவது” என்றார் குப்புசாமி.

கணேசன் பாலை விராலால் தொட்டு பார்த்தான், நன்றாக ஆறி இருந்தது. அப்பொழுது தான், தன்னுடைய பாக்கெட்டில் வைத்திருந்த வலது கையை வெளியே எடுத்தான். அந்த கையில் பஞ்சு இருந்தது, குப்புசாமி உத்துப் பார்த்தார் விரல் அளவில் ஒரு அணில் குஞ்சு இருந்தது, கண்களை கூட திறக்காமல் தூங்கிக் கொண்டு இருந்தது, மேலே முடிகள் கூட இன்னும் முளைக்காத நிலையில்.

“யோவ் என்யா இது எலியா”

“இல்ல சார் அணில் குஞ்சு, பொறந்து பத்து நாள் தான் இருக்கும். போன வாரம் அந்த புங்கா மரத்துக்கு கீழே உக்காந்துனு இருந்தேனா, அப்போ தொமால்னு என் முதுகுல இவரு வழுந்தாரு, (விவரிக்கும் பொழுது அவன் முகத்தில் அளவு கடந்த சந்தோஷம்) காக்கா கொத்தவந்தது, அப்புறம் நான் தான் இவர காப்பாத்தி வளக்குறேன், இன்னிக்கிப் பார்த்து வாடன் பால் தர மாட்டேன்னு சொல்லிட்டார், அதான் உங்ககிட்ட.....”என்று கூறியபடி தன்னுடைய சட்டையின் நுனியை பாலில் தொட்டு அந்த அணில் குஞ்சின் வாயில் வைத்தான், அது தன்னுடைய மில்லி மீட்டர் வாயால், கண்களைக் கூட திறக்காமல் பாலை குடித்தது. இதைப் பார்த்த ஏட்டு குப்புசாமி

“யோவ் உன்ன பார்த்தா யாராவது குடும்பத்தையே கொலை செஞ்சவன்னு சொல்லுவாங்கலயா” என்றார் ஆச்சிர்யமாக.

கணேசன் அர்த்தமாக சிரித்தான், ஒரு வாரம் கடந்தது, குப்புசாமி பெரிய ஆப்பிஸர் கூப்பிட்டார்ன்னு விட்டில் இருந்து புறப்பட்டு காலையில் 8.00 மணிக்கு சென்ரல் ஜெயிலுக்கு வந்தார், ஜெயிலர் அறைக்கு சென்றார். ஜெயிலர் அவரிடம் ஒரு காகிதத்தை கொடுத்து,

”இன்னைக்கு காலையில் கணேசனை தூக்குல போடறதுக்கு முன்னாடி இத உன் கிட்ட குடுக்க சொன்னான்”

காகிதம் ஒட்டப்பட்டு இருந்தது, குப்புசாமி அவசரமாகவும் குழப்பத்துடனும் பிரித்தார்.

வணக்கம் ஐயா
நான் கணேசன் எழுதிக் கொள்வது, ஐயா என்னுடைய அறையின் வலது சுவற்றின் மேல் இருக்கு ஓட்டையில் நான் என்னுடைய சபரியை வைத்துள்ளேன். அதை தயவு செய்து இன்னும் கொஞ்ச நாள் பாதுகாப்பாக நீங்கள் உங்கள் வீட்டில் வளர்த்து, சரியாக ஒரு மாசம் ஆனது, எதாவது ஒரு பூங்காவில் இருக்கும் மரத்தில் விட்டு விடுமாரு கேட்டுக் கொள்கிறேன். என் சபரி அதற்க்குள் வளர்ந்து விடுவான். இதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

பி.கு : இத்துடன் ரூபாய் ஐநூறை இந்த கவரில் வைத்துள்ளேன், சபரியின் பால் செலவுக்கு.

குப்புசாமி கண்ணீருடன் சென்று, கணேசன் அறையில் இருந்த கூண்டை எடுத்துப் பார்த்தார். தன்னுடைய பிஞ்சு கண்களை திறந்து சபரி, கணேசன் அப்பாவை தேடிக் கொண்டு இருந்தது.

அடுத்த நாள் நாளிதழ்களில் செய்தி

பழிக்கு பழியாக எதிரியின் குடும்பத்தினரை கொன்ற கணேசனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மதி
30-10-2008, 08:12 PM
கல்லுக்குள் ஈரம்னு இதைத் தான் சொல்லுவாங்களோ...! நல்லாருக்கு கதை.

மூர்த்தி உங்களோட கதை சொல்லும் யுக்தி பிடிச்சிருக்கு.. நீங்கள் தினம் ஒரு கதை எழுதி வருகிறீர்கள்.. அநேகமாக எல்லா கதைகளிலும் சின்ன சஸ்பென்ஸோடு தான் ஆரம்பித்து இறுதியில் வேறு விதமாக முடிக்கிறீர்கள். வாசகரைக் கவரும் யுக்தி. ஆனாலும் நீங்கள் ஏன் வேறு யுக்திகளை முயற்சித்துப் பார்த்தல் கூடாது. வேறு பாணியில் உங்கள் கதைகளைப் படிக்கும் ஆவலில் கேட்கிறேன். தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ரங்கராஜன்
31-10-2008, 04:39 AM
நன்றி மதி
கண்டிப்பாக தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டேன், நீங்கள் கூறியது படி நான் முயர்சிக்கிறேன் மதி.

அமரன்
31-10-2008, 09:01 AM
ஈரத்தை உறிஞ்சி இதயத்தை இறுகவைக்கும் தீயசக்தி பழிவாங்கும் உணர்ச்சி. மனித மிருகங்களால் பாதிக்கப்பட்டவன் மிருகங்களுடன் கனிவாக இருப்பதாகக் காட்டும் பாத்திரப்படைப்புகள் சைக்கோ (தமிழ்?) என்ற வரையறையை உடைத்தமைக்கு சிறப்பான பாராட்டுகள் மூர்த்தி. மதி சொல்வதில் அர்த்தம் இருந்தாலும் தொடக்கம் முதல் முடிவு வரை வாசகனைக் கதையுடன் கட்டிப்போடுவது மட்டுமல்லாமல் சில நிமிடங்களாவது கதையலைகளை மனதில் மோத விடுகின்றீர்கள். வாழ்த்துக்கள்.

இளசு
08-11-2008, 11:21 AM
கதைக்களனை பின்னாடி வெளிச்சமிட்டு
கதை மாந்தர் மனதை முன்னாடி பரிச்சயமாக்கி
இறுதியில் வாழ்வின் இடையறா முரண்களில் ஒன்றை முடிச்சாக்கி..

நல்ல கதையாசிரியர் நம் மூர்த்தி..

பாராட்டுகள்..

ரங்கராஜன்
09-11-2008, 05:43 AM
கதைக்களனை பின்னாடி வெளிச்சமிட்டு
கதை மாந்தர் மனதை முன்னாடி பரிச்சயமாக்கி
இறுதியில் வாழ்வின் இடையறா முரண்களில் ஒன்றை முடிச்சாக்கி..

நல்ல கதையாசிரியர் நம் மூர்த்தி..

பாராட்டுகள்..

மிக்க நன்றி நண்பரே

ஐரேனிபுரம் பால்ராசய்யா
11-11-2008, 01:40 PM
தூக்குத்தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனை வழங்கும் இந்த காலகட்டத்தில் நல்ல கலைநயமான பெயருடன் அசத்தலான ஆரம்பத்துடன் இருந்தது ஒரு துளி பால் சிறுகதை.

ஆலமரத்தடியில் துவங்கிய கதை பின்பு பயணமாகி சிறைக்கைதியின் தூக்குதண்டனையில் முடிந்திருந்தது. கதையின் போக்கில் டீக்கடையும் அதில் டீக்கடை வைத்திருக்கும் கந்தசாமியும் வந்து போவதும், அதை சிறைக்கூடத்தில் நடக்கும் நிகழ்வுகளாக சித்தரித்திருப்பது சற்று நெருடலாக உள்ளது.

ஒரு சிறு அணிலின் பசி போக்கிட உதவுவதும் அதை காப்பாற்றி பூங்காவில் விட வேண்டுகோள்வைப்பதும் மனிதாபிமானத்தை மையப்படுத்தும் ஆழமான கதை.

கதையை அவசரப்பட்டு எழுதியிருந்த உணர்வு ஓரிரு இடங்களில் தெரிந்தது. உ.தா. ஐந்து அடி இருப்பான் என்று எதிர்காலத்தை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது.

இவைகளை தவித்து பார்த்தால் இந்த கதை படிப்பவர்களுக்கு நல்ல மனநிறைவைத்தரும்.

பாராட்டுக்கள்.

ரங்கராஜன்
11-11-2008, 01:52 PM
.

. கதையின் போக்கில் டீக்கடையும் அதில் டீக்கடை வைத்திருக்கும் கந்தசாமியும் வந்து போவதும், அதை சிறைக்கூடத்தில் நடக்கும் நிகழ்வுகளாக சித்தரித்திருப்பது சற்று நெருடலாக உள்ளது.

ஐயா கந்தசாமி என்பவர் சிறைச்சாலை வாடன், அவர் டீயும், பாலும் தருவது சிறைச்சாலை சமையல் அறையில் இருந்து, சிறைச்சாலையில் கைதிகளுக்கும், ஏட்டுகளுக்கும் டீ, பால் எல்லாம் உண்டு. நான் அதை டீக்கடை என்று என்று குறிப்பிடவில்லையேகதையை அவசரப்பட்டு எழுதியிருந்த உணர்வு ஓரிரு இடங்களில் தெரிந்தது. உ.தா. ஐந்து அடி இருப்பான் என்று எதிர்காலத்தை குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது.

இருப்பான் என்பது எதிர்கால அர்த்ததில் நான் குறிப்பிட வில்லை. அவன் அவ்வளவு உயர இருக்கலாம் என்னும் சந்தேகச் சொல்லை இருப்பான் என்று குறிப்பிட்டு இருந்தேன், ஆனால் நீங்கள் கூறியபடி நான் அவசரமாக தான் இந்த கதையை எழுதினேன்,

Narathar
12-11-2008, 11:32 AM
மிக அருமையான கருத்தை.....
அருமையாக ஒரு சிறுகதையில்
சொல்லியிருக்கின்றீர்கள்.......

நாளுக்கு நாள் உங்கள் கதைகள்
மெருகேறிக்கொண்டே வருகின்றன..
வாழ்த்துக்கள் மூர்த்தி!

MURALINITHISH
22-11-2008, 10:30 AM
ஆத்திரத்திலும் அவசரத்திலும் பல தவறுகள் செய்தாலும் இயல்மான மனித குணம் மாறுமா இறந்தும் வாழ வைக்கிறான் சபரியை எனில் அவனுக்குள் இருந்த மிருகத்தை எவ்வளவு கஷடப்பட்டு தூண்டி இருப்பார்கள்

சுகந்தப்ரீதன்
24-11-2008, 08:20 AM
சுவைப்பட கதை சொல்கிறீர்கள்..மூர்த்தி..!!

கடவுள் பாதி மிருகம் பாதிங்கற கமலஹாசனோட பாட்டு கணேசனுக்கு பிடிச்சிருக்கோ இல்லியோ கண்டிப்பா உங்களுக்கு பிடிச்சிருக்கும்ன்னு உறுதியா நம்பலாம் போலிருக்கு உங்க கதையிலிருந்து...!! வாழ்த்துக்கள் மூர்த்தி..!!

சிறுபிள்ளை
24-11-2008, 09:05 AM
அழகான கதை,
ஆழமான சிந்தனை,
அழ வைக்கும் முடிவு.

அன்பான வாழ்த்துக்கள்.
சிறுபிள்ளை

மதுரை மைந்தன்
24-11-2008, 10:11 AM
கதை சுவையாக இருந்தது. பலரும் சொல்வது போல கதையின் இறுதியில் ஒரு சஸ்பென்ஸை வைத்து அழகாக முடிக்கிறீர்கள். நீங்களும் கமல ஹாஸன் ரசிகர் என்று அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள்.

ரங்கராஜன்
24-11-2008, 02:30 PM
நன்றி மதுரை மைந்தரே
என்னுடைய கதையில் முதல் முறை பின்னூட்டம் இட்டு என்னை உற்சாக படுத்தியுள்ளீர்கள், தொடருங்கள். நன்றி

ரங்கராஜன்
25-03-2009, 08:42 AM
நன்றி உறவுகளே இந்த கதையின் ஆழத்தை புரிந்துக் கொண்டு பின்னூட்டம் தந்து என்னை சிறப்பித்தற்க்கு................ தொடருங்கள்

பூமகள்
25-03-2009, 09:24 AM
ரொம்ப நெகிழ்வான கதை.... எனக்கு தூக்கு தண்டனைக் கைதியினால் அழுகை வரவில்லை.... அணில் குஞ்சின் நிலை நினைத்தே கண்கள் பனித்தது...

தண்ணீர் தேசத்தில் வைரமுத்துவுக்கு கிட்டிய எலிக்குட்டியைப் போலவே இக்கதையில் அணில் குஞ்சு... அதனைத் தகுந்த இடத்தில் இந்நேரம் விட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மனம் அமைதியடைகிறேன்..

கதையின் போக்கு சஸ்பென்ஸாகவே இருந்தாலும் இறுதியில் சில வரிகளில் பின்புலத்தை உணர்த்திய விதம் அருமை..

மர்ம முடிச்சினை அழகாக அவிழ்த்து அணில் குஞ்சுக்கு புது பாதுகாவலரை நியமித்து சிறப்பான உணர்வை கதை ஏற்படுத்தியது...

கலக்கல் கதை தக்ஸ்... பாராட்டுகள். :)

மதுரை மைந்தன்
25-03-2009, 10:35 AM
கதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். என் வாழ்த்துக்கள்.

விகடன்
25-03-2009, 11:35 AM
சிறைச்சாலை என்னும் உப உலகத்தினுள் வாழும் மனிதர்களிலும் ஈரமனம் படைத்தோரும் இருக்கின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.


இறுதிவரை அவர்கள் வாழ்க்கையைச் சுற்றி சிறைச்சாலை என்ற வேலி இருப்பது தெரியாமல் எழுதப்பட்டது கதையின் ஓர் சிறப்பு.

பாராட்டுக்கள்.

samuthraselvam
25-03-2009, 11:56 AM
தக்ஸ் அண்ணா.... அருமையான கதை..! அணில் குஞ்சிடம் காட்டும் பரிவைப் பார்த்தால் அவர் மனத்தில் உள்ள பாசம் தெரிகிறது. ஒரு துளி பாலில் உயிர் உள்ளது.