PDA

View Full Version : நகரத்தில் புதுமனைவி (சிறுகதை)ரங்கராஜன்
30-10-2008, 07:50 AM
நகரத்தில் புதுமனைவி

அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது. வெளிச்சம் சுத்தமாக இல்லை, காற்று உள்ளே வரவும் வழியில்லை, வெளியே போகவும் வழியில்லை. பெரிய கட்டிலில் நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தாள் மலர்விழி. அப்பொழது

“ஏய். . . ஏய். . . .எந்திரி, எந்திரி, எனக்கு பசிக்குது ”

மலர்விழி அலறி பிடித்து எழுந்தாள். அறையே இருட்டாக இருப்பதை பார்த்து

“இன்னும் விடியவே இல்லை, அதுக்குள்ள என்ன பசி உங்களுக்கு”

“உன் மூஞ்சி, பகல் பதினொரு மணி ஆவுது. . . . . . . .”

மலர்விழி ஆச்சர்யத்துடன்

“சாரி சாரி, நல்லா துங்கிட்டேன், எங்க ராத்திரி என்ன தூங்கவிட்டாதானே? எந்த சைடு படுக்கா விடாம.....” என்று சலித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்து பாத்ரூமுக்குள் சென்றாள்.

மலர்விழி, பெயருக்கு ஏற்றார் போல அழகான மென்னையான கண்கள், நல்ல உயரம், மாதுளை பழ நிறம். ஆளை அசத்தும் அழகு
இல்லை என்றாலும் ஆர்பாட்டம் இல்லாத அழகு. சொந்த ஊர் சூலத்தூர் கிராமம், பல கனவுகளுடன் திருமண வாழ்க்கையை எதிர்பார்த்து
இருந்தாள். அவளுக்கு காதலித்து திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை, காதலை பற்றி தெரிந்ததினால் அல்ல, நிறைய சினிமா
பார்ப்பதினால். மாப்பிள்ளை என்று யாரோ ஒருவன் வந்ததும் கண்னை மூடிக்கொண்டு கல்யாணம் ஏற்பாடு ஆரம்பித்தார் அவளின் அப்பா. ஸ்கூல் படிக்கும் பொழுது யாரோ ஒருவன் பின்னாடி வந்தான் என்பதற்காக அவனை துரத்தி துரத்தி அடித்து உதைத்த அப்பாவா இப்படி ஊர் பேர் தெரியாத ஒருத்தனுக்கு என்னை கல்யாணம் செய்ய துடிக்கிறார் என்று மலர்விழி ஆச்சர்யப்பட்டாள். பையன் சென்னையில் கை நிறைய சம்பாதிக்கிறான், அதனால் பொண்னை தங்கம் மாதிரி பத்திரமா பார்த்துப்பான் பையனை விட்டுடக் கூடாது, இது தான் திருமண அவசரத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. அனைத்து பெண்களை போல இவள் வாழ்க்கையும் கல்யாணத்திற்கு பிறகு அடியோடு மாறியது, மாப்பிள்ளையிடம் எந்த கெட்ட பழக்கமும் இல்லை வெத்தலை கூட போடமாட்டார், ஆனால் சந்தேகபிராணி, பையன் நல்ல மை நிறத்தில் இருப்பான் அதான் ஆதர்சன காரணம். மலர் ஜன்னல் வழியே வெளியே பார்க்க கூடாது, பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட கூடாது குறிப்பாக ஆண் குழந்தைகளுடன், சத்தம் இல்லாமல் சிரிக்க வேண்டும், தேவையில்லாமல் சிரிக்க கூடாது, பல் தெரியர மாதிரி சிரிக்க கூடாது, மொத்தத்தில் சிரிக்க கூடாது. இந்த சட்டங்களை மீறினால்
திட்டுகள், வார்த்தைகளில் விஷம் தடவிய திட்டுகள், ஆனால் பணம் மட்டும் கொண்டு வந்து கொட்டுவான். மலர்விழிக்கு கல்யாண வாழ்க்கையே மூன்று மாசத்தில் அலுத்து விட்டது, பாசத்திற்க்கு ஏங்கினாள். சென்னை அவளுக்கு புதிராக இருந்தது, உயிரே போனாலும் திறக்காத பக்கத்து வீட்டுக் கதவுகள், கணவனை பெயர் சொல்லி அழைக்கும் மனைவிகள், ஒரு வாரம் ஆகும் வீட்டு செலவின் காசை விழுங்கும் ஒரு துண்டு பீஸா என்ற கெளரவ உணவு, கருமம் நல்ல இருந்தாலும் பரவாயில்லை! கெட்டுப் போன சப்பாத்தி மாதிரி இருக்கும். கிராமத்தில் வளர்ந்த மலர்விழிக்கு இது எல்லாம் ஆச்சர்யங்கள்!, ஒன்பது மாசம் கடந்து போனது. ஆனால் மலர்விழி கடவுளை வேண்டியது
வீண் போகவில்லை, அவள் எதிர்ப்பார்த்த சந்தோஷங்கள் கிடைக்க துடங்கியது.

மலர்விழி பாத்ரூமில் இருந்து வந்தாள். சமையல் அறைக்கு சென்றாள், அங்கு இருந்த இட்லியும், தக்காளி சட்னியையும் எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள், இட்லியை எடுத்து வாயில் போட்டு மென்றாள். சற்று கோபமாக இருந்தாள்

“ தூங்கும் பொழுது எழுப்பிட்டா போதுமே கோபம் பொத்துக்குனு வருமே”

“ஆமா சும்மாவா தூங்கினே, எல்லா வேலையும் செஞ்சிட்டு தானே தூங்குறேன், பேசாம சாப்பிடுங்க” என்றாள் மலர்விழி.

“.............”

“சரி சரி கோச்சிக்காதீங்க, இனிமேல் அப்படி கோபமா பேசமாட்டேன், சாப்பிடுங்க” என்றாள் மலர்விழி.

சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்து கழுவப் போட்டாள். பாலை அடுப்பில் வைத்து சூடு செய்தாள், அதை ஒரு தம்பளரில் எடுத்துக் கொண்டாள்.

“சக்கரை சரியா இருக்கா பருங்க” என்று வாயில் ஊற்றினாள்.

“ஆ.......ஆ........எவ்வுளவு சூடு தெரியுமா என் உடம்பே எரியுது, எத்தன வாட்டி சொல்றது உனக்கு ஆத்தி கொடுன்னு”

“சாரி சாரி, மன்னிச்சுடுங்க எனக்கு அவ்வுளவு சூடு தெரியில, இருங்க நல்லா ஆத்தி தரேன்”

என்று பாலை நன்றாக ஆத்தி குடுத்தாள். மதியம் மலர்விழி தொலைக்காட்சியில் எதோ ஒரு காமெடி படத்தை, சத்தமாக வைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள், அவளுக்கு சிரித்து சிரித்து வயிறே வலித்தது.

“எதுக்கு இப்படி சிரிக்கிற, நீ குலுங்குற குலுங்குல என்னுடைய வீடே ஆடுது, மெதுவா சிரிச்சித் தொல”

“இல்லப்பா இந்த வடிவேலு பண்ற காமெடி தாங்க முடியிலப்பா” என்று சிரித்தாள்.

“என்னாலையும் தாங்க முடியில தூக்கமா வருது, வா படுக்க போலாம்”

“உங்களுக்கு வேணும்னா நீங்க தூங்குங்க, நான் படம் பார்க்கனும்” என்றாள் தீர்மானமாக.

“இந்த சத்தத்தில் எனக்கு தூக்கம் வாராது, நீயும் தூங்க வா”

“அதான உனக்கு பொறுக்காதே” என்ற மலர்விழி படுக்கை அறைக்கு சென்று படுத்தாள்.

இருவரும் நன்றாக தூங்கினார்கள். மாலை மணி 6.00 ஆனது மலர்விழி மெல்லமாக கண் விழித்தாள், மணியை பார்த்தாள், எழுப்பினாள்

“செல்லம் எழுந்துடுங்க மணி ஆறாகுது எழுந்துடுங்க”

“ம்..ம்ம்ம்...........ம்ம்.........ம்ம், இன்னும் கொஞ்ச நேரம்”

“அதெல்லாம் முடியாது, அவர் இப்போ வந்துடுவார், சீக்கிரம் எழுந்துடுங்க”

“யாரு .....அந்த ஹிட்லரா, அவருக்கு நீ வேணா பயந்துக்கோ நான் எதுக்கு பயப்படனும்” தூங்கியாவரே

“ஏய் அப்பாவ அப்படியெல்லாம் பேசக்கூடாது, முதல்ல எழுந்துரு நீ சீக்கிரம்.....ம்ம்ம்ம்” என்றாள் மலர்விழி. வாசலில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

“சொன்னல்ல டாடி வந்துட்டார் பாருங்க, வாங்க டாடியை பார்க்கலாம், எழுந்துடுங்க எழுந்துடுங்க டாடி, டாடி, டாடி” என்று தன்னுடைய நிறைமாத வயிற்றை தடவிக் கொண்டு கதவை திறக்க வாசலை நோக்கி நடந்தாள் மலர்விழி.

மதி
30-10-2008, 08:00 AM
அழகான கற்பனை... நடுவில் வித்தியாசமாக சென்ற மாதிரி தோன்றினாலும் முடிவு ஓரளவு யூகிக்க முடிந்தது.. ஒருவேளை உங்க கதைகளை ஆழ படிப்பதனால் இருக்கலாம்.. :)

நல்ல கதை. பாராட்டுக்கள்.

poornima
30-10-2008, 08:05 AM
உங்கள் தலைப்பை பார்த்தவுடன் சுஜாதாவின் சுசீலா காத்திருக்கிறாள் சிறுகதை போல்
பரபரப்பு நிறைந்ததோ என்று எண்ணி வந்தேன்.. ஆனால் மென்மையான குடும்பக் கதையை தந்திருக்கிறீர்கள்.. ஒரு சின்ன கருத்தை சொல்கிறேன்..

ஒரு பக்கச் சிறுகதை வகை எழுதும்போது ஒரு யுக்தி இருக்கிறது.. அது ஆரம்பத்தையும் முடிவையும் அழகாக முடிச்சிடும் வண்ணம் இருக்க வேண்டும்.குறிப்பாய் முடிவு யூகிக்கப் படவே இயலாததாக இருக்க வேண்டும்..

நண்பர் மதி கூறியது போல் என்னாலும் இதன் முடிவை யூகிக்க முடிந்தது.. இதை குறையாக எண்ணாதீர்கள்.. உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது..இதையும் சரி செய்ய இயன்றால் இன்னும் பரிணமிக்க இயலும்.

வாழ்த்துகள்

சிவா.ஜி
30-10-2008, 08:10 AM
“ஏய். . . ஏய். . . .எந்திரி, எந்திரி, எனக்கு பசிக்குது ” அவளுடைய வயிற்றில் ஓங்கி குத்தப்பட்டது.

இந்த வரியைப் படித்ததுமே எனக்கு விளங்கிவிட்டது. பின்னர் வந்த அனைத்து உரையாடல்களையும் அம்மாவும் குழந்தையுமே பேசுவதாகத்தான் என்னால் நினைக்க முடிந்தது. உண்மையாகவே தான் மூர்த்தி.

இருந்தாலும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

ரங்கராஜன்
30-10-2008, 08:23 AM
நீங்கள் அனைவரும் என்ன உணர்ந்தீர்களோ அதை அப்படியே, தங்களின் கருத்துகளாக கூறியதற்கு நன்றிகள்

அமரன்
30-10-2008, 09:21 AM
பலருடைய மணவாழ்க்கையை குறிப்பாக மங்கையர் பலரின் மணவாழ்க்கையை யதார்த்தமாக தந்துள்ளீர்கள். பாராட்டுகள்.

shibly591
30-10-2008, 09:51 AM
தொடருங்கள்

பாராட்டுக்கள்

MURALINITHISH
30-10-2008, 10:42 AM
அழகான கற்பனை தொடருங்கள் உங்கள் கதைகளை

Narathar
30-10-2008, 12:24 PM
நீங்கள் அனைவரும் என்ன உணர்ந்தீர்களோ அதை அப்படியே, தங்களின் கருத்துகளாக கூறியதற்கு நன்றிகள்

இந்த தன்னடக்கம் போதும் உங்களை
ஒரு தலை சிறந்த எழுத்தாளனாக்க......

வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்...
இங்கு வரும் விமர்சனங்களால்
உங்களை இன்னுமின்னும்
செம்மைப்படுத்திக்கொள்ளுங்கள்