PDA

View Full Version : தினச்செய்தி (சிறுகதை)



ரங்கராஜன்
29-10-2008, 02:46 PM
தினச்செய்தி (சிறுகதை)

தினச்செய்தி தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலே மிகவும் பிரபலமான தமிழ் நாளிதழ். நகரம், கிராமம்,குக்கிராமம், மலைகிராமம், சந்து,இண்டு,இடுக்கு என்று அனைத்து இடங்களிளும் தினச்செய்தி நாளிதழ் தான். எந்த டீக்கடையாக இருந்தாலும் பால், பாய்லர், டீ மாஸ்டர் இருப்பதுப் போல கண்டிப்பாக தினச்செய்தி நாளிதழும் இருக்கும். மழையாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, தினச்செய்தி கண்டிப்பாக மக்களை சேரும். மக்களும் தினச்செய்தியை காலையில் படித்தால் தான் அன்றைய தினம் அவங்களுக்கு தொடங்கும். அந்த அளவிற்க்கு தினச்செய்தி மக்களுடன் பல வருடங்களாக ஒன்றி விட்டது.

08/08/08 காலை 7.00 மணி

முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.

தினச்செய்தி
08/08/08

காதலி உல்லாசத்திற்கு மறுத்ததால், கள்ளக்காதலன் தற்கொலை

கைக்குழந்தையுடன் இருக்கும் காதலியிடமும், கணவனிடமும் போலீஸ் விசாரனை.

சென்னை 08’

நேற்று மதியம் பல்லாவரம், தினகரன் நகர்-ஐ சேர்ந்த குமாரசாமி (வயது 55) என்பவருடைய மகன், வேல்(வயது 28), என்னும் வாலிபர், தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துக் கொண்டார். போலீஸாருக்கு தகவல் சொல்லி, அவர்கள் வந்து பிணத்தை அப்புறபடுத்தினார்கள், போலீஸார் இறந்தவரின் பிரேதத்தை சோதனை செய்ததில், அவரின் சட்டை பாக்கெட்டில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அந்த பெண்ணைப் பற்றி விசாரித்ததில், அவள் பெயர் கங்கா என்றும் திருமணம் ஆனவர் என்றும், மீனம்பாக்கத்தை சேர்த்தவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்து இருக்கும் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. அந்த கங்காவையும் அவரது கணவரையும், போலீஸ் விசாரனைக்கு உட்படுத்தியுள்ளனர். இன்னும் தற்கொலை பற்றிய திடிக்கிடும் காரணங்கள்
போலீஸ் விசாரனைக்கு பிறகு தெரியவரும். கங்காவுக்கு கைகுழந்தை? இருப்பது குறிப்பிடத்தக்கது.

முகுந்தன் “ச்சீ என்ன பொம்பளப்பா இது”, ரம்யா கண்ணா குளிக்க தண்ணி ரெடியா” என்று பேப்பரை வைத்து குளிக்கச்சென்றான்.


08/08/08 மாலை 6.00 மணி

கங்காவும் அவரது கணவனும் வீட்டுக்குள் நுழைந்தனர். கங்காவின் மாமியார் கதவை திறந்து விட்டாள். வீட்டில் மயான அமைதி, வீடே இருட்டாக இருந்தது. குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டு இருந்தது, விஷ்வா அமைதியாக கீழே உக்கார்ந்தான், கங்கா சுவரின் மூளையில் உக்கார்ந்தாள். மாமியார் மெல்ல பேச்சை எடுத்தாள்,

“டேய் விசுவா என்னடா ஆச்சு” என்றாள் கண்ணீருடன்.

“என்ன ஆச்சு மானம் போச்சு, இன்னும் என் உயிர் தான் பாக்கி” என்றான் கலங்கி கண்களுடன்.

“அய்யோ விசுவா அப்படி சொல்லாதடா, நீ இல்லனா நாங்க என்னடா பண்ணுவோம், விசுவா.....” என்றாள் தாய். ஓரத்தில் கங்கா நொறுங்கிப் போய் உக்கார்ந்து இருந்தாள்.

“என்ன ஆச்சு விசுவா யார்ரா அந்த பாழாப் போனவன், போலீஸல சொன்னாங்களா டா”

முகத்தை துடைத்துக் கொண்டு விஷ்வா பேச ஆரம்பித்தான்.

“அம்மா அவன் நம்ம கங்கா கூட காலேஜ்-ல படிச்சி இருக்கான், அப்போ இவளை காதலிக்கிறேன்னு பின்னாடியே சுத்தி இருக்கான், காலேஜ் முடிஞ்சது, அதுக்கப்புறம் அவனை காணவில்லை, ஆனால் இப்போ அவன் செத்து எல்லோரையும் சாவடிக்கிறான், பேப்பர்ல அசிங்கமா கள்ளக்காதல்ன்னு எழுதி இருக்காங்க, நாளைக்கு போட்டோ வேற வருமா, ..............பசங்க மனசாட்சியில்லாம எழுதறாங்க” என்று அழுதான்.

“விசுவா அழாதடா, அவனுங்களுக்கு நல்ல சாவே வராதுடா” என்று தாயும் அழுதாள்.

“இல்லமா பேப்பர்ல கங்காவுக்கு ஒரு கை குழந்தைன்னு போட்டு அது பக்கத்துல கேள்விக்குறி போட்டு இருக்காங்கமா, அதான் என்னால தாங்க முடியிலமா” என்று மேலும் அழுதான்.

“ஏண்டா விசுவா, அப்படி போட்டா என்னடா அர்த்தம்”

“ ...........அ........அந்த குழ....குழந்தை எனக்கு பிறந்ததா இல்ல, கள்ளகாத......பிறந்........” என்று மேலே சொல்ல முடியாமல் அழுதான்.

“பாவிங்களா ஏண்டா இப்படி ஏழைங்கள சாவடிக்கிறீங்க, பெருமாளே, இது பத்தாதுனு நாளைக்கு போட்டோ வேற போடப் போறாங்களாமே, அய்யோ......” என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த கங்கா வீறுட்டுனு எழுந்தாள் தூளியில் அழுதுக் கொண்டு இருந்த குழந்தையை எடுத்தாள், தன்னுடைய
ரவிக்கையை தளர்த்திக் கொண்டு குழந்தைக்கு பால் கொடுத்தாள், பிறகு குழந்தையை தூளியில் போட்டாள், அறைக்கு போய் கதவை சாத்திக் கொண்டாள்.


09/08/08 காலை 7.00 மணி

முகுந்தன் காலையில் எழுந்து காபியுடன் தினச்செய்தியை படிக்க துடங்கினான்.

தினச்செய்தி
09/08/08


கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல், காதலியும் தற்கொலை
அதே நாளில், அதே வழியில் இவளும் இறந்தாள்.

சென்னை 09,

”கள்ளக்காதலன் இறந்த துக்கம் தாளாமல்...........................”


முகுந்தன் “ச்சீசீ இப்படியும் ஒரு ஜென்மம் இருப்பாளா, சாவட்டும் சனியன்”, ஏய் ரம்யா குளிக்க தண்ணி வச்சாச்சா, டையம் ஆகுது எனக்கு”

Narathar
29-10-2008, 02:55 PM
ஒரு படத்தைப்பார்த்தாலோ அல்லது ஒரு கதையை வாசித்தாலோ
அந்த கதையின் அல்லது படத்தின் தாக்கம் அந்த நாள் முளுதும்...
ஏன் அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடரனும், அபோதுதான்
அது சிறந்த கதையாக இருக்குமென்று சொல்ல கேட்டுள்ளேன்...

அதைப்போல இந்தக்கதையும் இருக்கும் என்று தெரிகின்றது...
உண்மையாகவே மனதை கணக்க வைத்த கதை....

அதை நீங்கள் சொன்ன விதம் மிக்க அருமை

தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்துக்கள் நாளுக்கு நாள் வலம் பெருகின்றது.

மன்றத்துக்கு சமீபத்தில் கிடைத்த சிறந்த கதாசிரியர் நீங்கள்....

ரங்கராஜன்
29-10-2008, 03:28 PM
நன்றி நாரதரே
உங்கள் அனைவரின் நடுநிலையான விமர்சனங்கள் தான் காரணம் நண்பரே, மீண்டும் நன்றி

மதி
29-10-2008, 03:44 PM
அசத்திட்டீங்க மூர்த்தி....
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் திரித்து தருவது பல செய்தி ஊடகங்களுக்கு பழக்கமாகிவிட்டது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைத்துப் பார்ப்பார்களா தெரியவில்லை..!

நல்ல கதையமைப்பு.. சிறந்த நடை..
தினமும் ஒரு கதை எழுதறீங்க.. எப்படி தான் புதுசு புதுசா எழுதத் தோன்றுகிறதோ?

ரங்கராஜன்
29-10-2008, 04:14 PM
அசத்திட்டீங்க மூர்த்தி....
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் திரித்து தருவது பல செய்தி ஊடகங்களுக்கு பழக்கமாகிவிட்டது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை நினைத்துப் பார்ப்பார்களா தெரியவில்லை..!

நல்ல கதையமைப்பு.. சிறந்த நடை..
தினமும் ஒரு கதை எழுதறீங்க.. எப்படி தான் புதுசு புதுசா எழுதத் தோன்றுகிறதோ?

நன்றி மதி
அப்பா பயந்துக் கொண்டே இருந்தேன் என்ன சொல்லப் போறீங்களோன்னு, நன்றி

சிவா.ஜி
30-10-2008, 06:53 AM
கதை சொன்ன விதம் புதுமை. கதையில் கையாண்ட கருவும் அருமை. எழுத்தும் கருத்தும் கதைசொல்லிக்கு சேர்க்கிறது பெருமை.

வாழ்த்துகள் மூர்த்தி.

ரங்கராஜன்
30-10-2008, 06:58 AM
கதை சொன்ன விதம் புதுமை. கதையில் கையாண்ட கருவும் அருமை. எழுத்தும் கருத்தும் கதைசொல்லிக்கு சேர்க்கிறது பெருமை.

வாழ்த்துகள் மூர்த்தி.

கவிதையான பாராட்டுக்கு நன்றி திரு.சிவா

அமரன்
30-10-2008, 08:13 AM
காவல்துறை, பத்திரிக்கைதுறை போன்றவற்றில் காணப்படும் களையப்படவேண்டிய குறைகளை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது கதை.

ரம்யாக் கண்ணு, ஏய் ரம்யா என்றானது இன்னொரு செய்தியை உருவாக்கும் கருவாக இருக்கலாம்.

ஆண்களில்தான் எத்தனை வகை என்பதுக்கு முகுந்தன் விசுவா உதாரணம்.

பாராட்டுகள் மூர்த்தி - கீர்த்தி பெரிதான கதையை தந்தமைக்கு

shibly591
30-10-2008, 08:16 AM
புதுமைகளுடன் அழகான கதை..

வலிகள் மட்டும் இன்னும் நெஞ:சோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது..

தொடருங்கள்...வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
30-10-2008, 08:28 AM
ரம்யாக் கண்ணு, ஏய் ரம்யா என்றானது இன்னொரு செய்தியை உருவாக்கும் கருவாக இருக்கலாம்.



நன்றி அமரன்
நீங்கள் கதையை முழுமையாக படித்தீர்கள், புரிந்துக் கொண்டீர்கள் என்பதுக்கு உங்களின் இந்த வார்த்தைகளே உதாரணம், ஒரு வாசகர் கதையின் கருவை முழுமையாக புரிந்து கொண்டால், அந்த கதை சொல்லிக்கு அதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது, எனக்கு அந்த சந்தோஷத்தை தந்தமைக்கு நன்றி திரு.அமரன்

ரங்கராஜன்
30-10-2008, 08:31 AM
புதுமைகளுடன் அழகான கதை..

வலிகள் மட்டும் இன்னும் நெஞ:சோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது..

தொடருங்கள்...வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே
என் கதைகளை படித்தவுடனே ஊக்கவிக்கும் ஆச்சர்யம் நீங்கள்

MURALINITHISH
30-10-2008, 11:29 AM
என்னடா இது ஒரு பத்திரிக்கை பற்றி இவ்வளவு பெருமையாக எதற்காக ஆரம்பித்து எழுதியிருக்கிறார்கள் என்று படித்தால் கடைசியில் புரிந்தது இப்படிதான் எருதுடைய வலி குத்தி எடுக்கும் காக்கை தெரியாது

ரங்கராஜன்
03-03-2009, 06:54 AM
என்னடா இது ஒரு பத்திரிக்கை பற்றி இவ்வளவு பெருமையாக எதற்காக ஆரம்பித்து எழுதியிருக்கிறார்கள் என்று படித்தால் கடைசியில் புரிந்தது இப்படிதான் எருதுடைய வலி குத்தி எடுக்கும் காக்கை தெரியாது

எருதுடைய வலி குத்தி எடுக்கும் காக்கை தெரியாது

அருமையான வாக்கியம் முரளி, நன்றி

samuthraselvam
03-03-2009, 07:19 AM
அண்ணா இந்தனை திறமையா உங்களுக்குள்!!!

இதுபோல் சிறப்பான கதைகளை புதிய பதிவுக்கு கொண்டுவாருங்கள். இந்தக்கதையில் வருவதுபோல் பொய்யான செய்தியால் எதனை குடும்பங்கள் சிதைந்ததோ.....

மனதை பாதிக்கும் கதை இது...

ரங்கராஜன்
03-03-2009, 05:43 PM
நன்றி பாசமலரே

அறிஞர்
03-03-2009, 07:54 PM
பார்க்கும் சம்பவங்களை தீர விசாரிக்காமல்... தங்கள் எண்ணம்போல் எழுதி.. பலரின் வாழ்வை வீணடிப்பது.. பத்திரிக்கை எழுத்தாளர்களுக்கு வழக்கம்.

அதை மையமாக வைத்து புனைந்த கதை அருமை அன்பரே..

பா.ராஜேஷ்
07-03-2009, 06:10 AM
உண்மைதான். நாளிதழ்கள் உண்மை சம்பவத்தை விட சுவையான(!!??) மிகை படுத்தப் பட்ட தகவல்களை வெளியிடுவதில் பேரார்வம் காட்டுகின்றன. அதனால் ஏற்படும் பதிப்புகளை யாரும் கவனிப்பதில்லை. இந்த கதை அந்த அவல நிலையை அருமையாக எடுத்துரைக்கிறது. பாராட்டுக்கள்!

பூமகள்
19-03-2009, 04:26 AM
நிறைய நாளிதழ்களில் ஏறக்குறைய பக்கத்திற்கு ஒன்றிரண்டு செய்துயாவது இப்படி வந்தே தீரும்.. இதற்கு பயந்தே பல தினசரிகளைக் கண்டாலே ஓட்டமெடுத்துவிடுவேன்..

நல்ல செய்திகள்.. தரமான தமிழில் தரும் நாளிதழாக தினமணியை சிறுவயது முதல் கண்டு படித்து வருகிறேன்..

மற்ற நாளிதழ்களுக்கும் கல்கண்டு, குமுதம், ராணிமுத்து, நாவல்கள் போன்ற புத்தகங்களுக்கும் என்றுமே தடா தான் வீட்டில்..

ஒருவருடைய சிந்தனைத் தரமும் அவர் எவ்வகை பத்திரிக்கைகள் விரும்பிப் படிக்கிறார் என்பதிலிருந்து ஓரளவு புரிந்து கொள்ள முடியும்..

---

பத்திரிக்கைச் சுதந்திரம்.. சரியாகப் பயன்படுத்தப் படாததும்.. மனிதனின் உயிரினும் மேலாக மதிக்கப்படும் மானம் பற்றிய கவலை இன்றி பணம் பற்றிய வியாபார நோக்கு பெருகுவதுமே இவ்வகை செய்திகள் அதிகம் புனையப்பட காரணமாகின்றன..

இக்கதை ஊடகத் துறையினருக்கு சரியான பாடமாக அமையும் என்பது திண்ணம்..

சிறந்த கதை... கனக்கிறது மனம் இன்னும்..

பாராட்டுகள் தக்ஸ்..