PDA

View Full Version : +1 இறுதி பாகம் (சற்று பெரிய சிறுகதை)



ரங்கராஜன்
29-10-2008, 07:58 AM
+1 நிறைவு பகுதி


பாலா தூரத்தில் ஓடிக் கொண்டு இருந்தான். சுமார் இருபது மாணவர்கள் பாலாவின் பின்னாடியே ஓடினார்கள், அதில் மூர்த்தி, மதி, குமார் மூன்று பேரும் முன்னாடி ஓடினார்கள். பாலா பார்ப்பதற்க்கு பென்சிலில் கோடு போட்ட மாதிரி ஒல்லியாக இருப்பான், அதனால் காற்றை கிழித்துக் கொண்டு அம்பாக பறந்தான். இவர்கள் அனைவரும் அவன் பின்னாடியே ஓடினார்கள். அந்த கூட்டத்தில் ஓடி வந்த ஒருவன் மற்றொருவனிடம்

"ம்...ம்ம்.......ம்.....டேய் எதுக்காக டா இப்படி பாலா பின்னாடி ஓடுறோம்" என்று மூச்சிரைக்க ஓடிக் கொண்டே கேட்டான்.

"ந.....ந......ந......நம்ம மேடத்தோட பர்ஸை எடுத்துனு ஓடறாண்டா" என்றான் இன்னொருவன். காரணம் என்ன என்று தெரியாமலே பல மாணவர்கள் கூட ஓடிவந்தனர். தெருவில் இருக்கும் மக்களும் பசங்க ரன்னிங் பயிற்சி எடுக்கிறார்கள் என்று நினைத்தனர்.

பாலா நிற்பதாக இல்லை, ஆனால் பின்னாடி ஓடிவந்த கூட்டம் குறைந்து கொண்டே வந்தது, 20...........15...........10 பேர் மட்டும் ஓடிவந்தார்கள். பாலாவுக்கு மூச்சி இரைத்தது, சற்று வேகம் குறைந்தது. அப்பொழுது தான் முதல் முறை திரும்பி பார்த்தான், 10 பேர் அவனை பார்த்து எருமை மாடு மாதிரி ஓடிவந்தார்கள், பாலா அலறிக் கொண்டு மறுபடி ஓட ஆரம்பித்தான்

மூர்த்தி ஓடிக்கொண்டு “பால....அப்பா மூச்சு வாங்குது டா, யாராவது அவன கூப்பிடுங்கடா.....”

“பா......பா.........பா............” என்று திக்கினான் மதி

“டேய் சும்மா இருடா, தெருவுல இருக்குற கோழி-ல பின்னாடி வருது” குமார்

“ டேய் ஓடும் பொழுது சிரிப்பு காட்டாதே ஓடமுடியவில்லை, நான் கூப்பிடுறேன் இரு...............டேய் பாலா கையில மாட்டுன அவ்வளவு தான்...........நில்றா” மூர்த்தி.

பாலா இன்னும் வேகமாக ஓட்டம் பிடித்தான். அதற்க்குள் இங்கே தேவி மேடம் பாலாவின் வீட்டிற்க்கு தகவல் கொடுத்தார். இப்பொழுது பின்னாடி வேறு மூன்று பேர் மட்டும் துரத்தி சென்றார்க்ள்.

“டேய் விஷம் சாப்பிட்டா வேகமா ஓடலாமாடா, இரு அவனை எப்படி பிடிக்கிறதுன்னு எனக்கு தெரியும், திருடன் திருடன், திருடன் பிடிங்க பிடிங்க” என்றான் குமார் மூச்சை இரைத்துக் கொண்டு.

“டேய் சும்மா இருடா, யாராவது அவனை திருடன்னு நனச்சி அடிச்சிட போறாங்க” மூர்த்தி.

பாலாவுக்கு நெஞ்சு அடைத்தது, ஓட முடியவில்லை மூச்சு விட முடியவில்லை, நின்றான், அவன் நின்றதை பார்த்த மூவரும் ஓடிவந்து அவனை பிடித்தனர். மூர்த்தி நேராக வந்து பாலாவின் கன்னத்தில் ஒரு அறை விட்டான்,

பாலா உடனே “...................டேய் என்னடா......அடிக்கிற......நான் விஷம் ...சாப்பிட்டு இருக்கேன்...”

மூர்த்தி “ அதுக்குதான் இப்போ அடிச்சது” என்று இன்னொரு அறைவிட்டான்.

“இது எங்கள ஓடவச்சதுக்கு” என்று குமார் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே பாலா மயக்கத்தில் சரிந்தான்.

மூன்று பேரும் “அய்யய்யோ.............” என்றனர் கொரஸாக.

குமார் உடனே “அதுக்குதான் அடிக்க வேண்டாம்னு சொன்னேன்”

“எ.......எப்....எப்படா சொன்ன” மதி

எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏற்றினார்கள்.

“டேய் என்னடா கொலை கேஸ்ல உள்ள போய்டுவோம் போல இருக்கே” என்றான் குமார் பதறியபடி.

தேவி மேடம் வீட்டுக்கு ஆட்டோ வந்து நின்றது, பாலாவின் அம்மாவும், அப்பாவும் வந்து இறங்கினார்கள். பாலாவின் அம்மா அழுதுக்
கொண்டு ஓடிவந்தார், பின்னாடியே அவரின் அப்பா பொறுமையாக நடந்து வந்தார்.

“அய்யோ என் புள்ளைக்கு என்ன ஆச்சி, ராஜா ராஜா.....” என்று அலறினாள்.

“ஏய் சும்மா இரு, வணக்கம் மா, நான் தான் பாலாவுடைய அப்பா, பையன் எங்க மா” என்றார் பதறாமல்.

தேவி மேடம் விஷயத்தை முழுவதுமாக கூறினார்.

ஆஸ்பிட்டலில் நால்வரும் நுழைந்தனர். டாக்டர் வந்தார்

“என் ஆச்சுபா”

“சார் இவன் வி.....வி.....வி” மதி.

“சும்மா இருடா பரதேசி, சார் இவன் வீக்கா இருக்கான், மயக்கம் அடிச்சி விழுந்துட்டான் சார்” மூர்த்தி.

உடனே டாக்டர் பாலாவை ஒரு அறை உள்ளே அட்மிட் செய்தார். இவர்கள் மூவரும் வெளியே நின்றனர்.

“வாய வச்சின்னு சும்மா இருடா, விஷம் சாப்பிட்டான் சொன்னா போலீஸ் கேஸ்டா, அப்பறம் அட்மிட் பண்ண மாட்டாங்க, நீ தயவு செய்து வாய திறக்காத, நான் போய் மேடத்துக்கு போன் பண்ணிட்டு வரேன், டேய் மதி நீயும் வா இங்க இருந்த எதாவது உளருவா” என்று மூர்த்தி மதியை அழைத்துக் கொண்டு நடந்தான்.

குமார் அங்கு இருந்த பேஞ்சில் அமர்த்தான், இவனுக்குள் பயமாக இருந்தது, பக்கத்தில் யாரோ இரண்டு பேர் அழுதுக் கொண்டு இருந்தனர். எதிரே இருக்கும் டீக்கடையில் வாழ்வே மாயம் பாடல் சத்தமாக ஓலித்துக்கொண்டு இருந்து.


யாரார்க்கு என்ன வேஷமோ இங்கே.....கே...
யாரார்க்கு என்ன வேலையோ...ஓ...ஓ

டாக்டர் அவசரமாக வந்தவர் ”பேஷண்டு கூட வந்தது யாருங்க அவருக்கு அவசரமா A+ve ரத்தம் தேவைப்படுதுங்க”

ஆடும் வரை கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் பேரும்

குமார் அந்த ரத்த குருப் தான், அவனுக்கு ரத்தம் கொடுக்க பயம்,

”உயிர் நண்பன் உயிருக்கு போராடின்னு இருக்கான், குமார் நீ மனிஷன் டா, மிருகம் இல்ல சரின்னு சொல்லு சிரின்னு சொல்லு” என்று அவன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள்.

தாயாலே வந்தது...து தீயாலே வெந்தது...து
மெய் என்று மேனியை யார் சொன்னது.....
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்.

“சார் நான் தரேன் சார்” குமார் உறுதியுடன் எழுந்து நின்றான்.

“தம்பி நீங்க எதுக்கு.........” டாக்டர்

“நாம எல்லாம் மனிஷங்க சார்” குமார் பெரு மிதத்துடன்.

“குட் தட்ஸ் த ஸ்பிரிட், வாங்க”

முர்த்தியும் மதியும் வந்தார்கள் குமார் இல்லாததைப் பார்த்து

“எங்கடா இந்த ஓட்டவாய் நாய காணும், (டாக்டர் வந்தார்) சார் பாலா எப்படி இருக்கான்”

“நார்மல் ஒன்லி, உள்ளே போனவுடன் நல்லா பேசினான், காலையில் இருந்து சாப்பிடலன்னு சொன்னான், குல்கோஸ் ஏத்தி இருக்கேன், இன்னும் பத்து நிமிஷத்துல நீங்க வீட்டுக்கு களம்பலாம்”

“சார் அவன் வி......வி......வி” மதி

“டேய்ய்ய்ய்ய்ய் அவர் தான் சொல்லிட்டார்-ல அவன் வீக்கா இருக்கான்னு அப்புறம் என்ன?” மூர்த்தி.

“ஆமாப்பா, ஆனா உங்க கூட வந்த இன்னொரு பையன் உண்மையில் பெரிய மனிஷன் பா, உள்ளே இன்னொரு பேஷண்டுக்கு ரத்த தானம் செய்துன்னு இருக்கான், குட் பாய்”

“என்னது ரத்த தானமா?, என்ன சார் சொல்றீங்க, எங்கே அவன்”

“ஆமாபா ஒரு தாத்தாவுக்கு ரத்தம் கொடுக்குறான், அந்த ரத்த வங்கியில் இருக்கான் பார்”

இருவரும் ஓடினார்கள் குமார் இவர்களை பார்த்தவுடன் பெருமையாக முகத்தை வைத்துக் கொண்டான்.

“டேய் என்னடா குமாரு, உன்ன பார்த்தா பெருமையா இருக்குடா” மூர்த்தி.

“இதுல என்ன டா இருக்கு, பாலா நம்ம பையன் டா, அவனுக்கு தானே தரேன் சந்தோஷம் தான் டா எனக்கு”

“என்ன து பா....பா.....பாலாவா, என்னடா சொல்ற......ற” மதி

“ஆமாடா பாலா உயிரை காப்பாத்த என் கடைசி சொட்டு ரத்தம் கூட தருவேண்டா” குமார்.

“ஆனா எங்க வீட்டுல பன்னி ரத்தம் எல்லாம் உடம்புல ஏத்தினா திட்டுவாங்கடா” என்றது ஒரு குரல்.

மூவரும் திரும்பிப் பார்த்தார்கள், பாலா சிரித்துக் கொண்டு நின்றான். மூர்த்தியும் மதியும் கூட குமாரை பார்த்து சிரித்தார்கள்.

“டேய் என்னடா இவன் இங்க வந்து நல்லா நீக்குறான், அப்போ யாருக்குடா இந்த ரத்தம்?” அதிர்ந்தவாரே குமார் கேட்டான், ரத்தம் குடுத்தாகி விட்டது.

மூர்த்தி “ஆ.....அதோ பார் அந்த கிழவனுக்கு.........,பாலா உங்க அப்பா அம்மா மேடம் வீட்டுல இருந்து, இங்க வந்துன்னு இருக்காங்கடா”

பாலா உடனே “அடப்பாவிகளா அவங்ககிட்ட ஏண்டா சொன்னீங்க, சரி சரி அவங்க இங்க வருவதற்க்குள்ள நாம மேடம் வீட்டுக்கு போய் அவுங்க புடிச்சுடலாம்”.

மூவரும் குமாரை கை தாங்கலாக வெளியே அழைத்து வந்தனர். அப்பொழுதும் அந்த டீக்கடையில் பாட்டு கேட்டது

“சட்டி சுட்டதடா...அ...அ
கை விட்டதடா...அ
புத்தி கெட்டதாடா
பின்பு சுட்டா........”

குமார் அந்த கடையை முறைத்துக் கொண்டு வந்தான். அடுத்த நாள் காலை பத்து மணிக்கு கேட்டுக்கு வெளியே நால்வரும் தலைமை ஆசிரியர் முன்பு நின்று இருந்தனர்.

“பெரன்ஸ் இல்லாம எதுக்கு வந்தீங்க, போங்க பெரன்ஸோட வாங்க” என்று தன் அறைக்குள் நடந்தார்.

“சார் நேத்திக்கி இவன் வி.......வி.......வி....” மதி.

மூர்த்தி “சும்மா இருடா” என்று தலையில் ஒரு அடி வைத்தான்.

உடனே குமார் பாலாவை நோக்கி

“ எப்பா இப்ப அவரு திட்டினதுக்கு போய் திரும்பவும் விஷம் குடிச்சிடாத, என்னால தினமும் ரத்த தானம் செய்ய முடியாது” என்று சிரித்தான். நால்வரும் சிரித்தார்கள்.

பாலா மனதுக்குள் “ இவர்களிடம் சொல்லி விடலாம், வேண்டாம் வேண்டாம் சொன்னால் பொளந்து விடுவார்கள், அந்த எலி மருந்து பாக்கெட்டில் இருந்தது வேறும் காப்பி பொடி தான்னு”

இவர்களின் கூட்டுக்குள் ஒவ்வொரு நிமிடமும் சொர்கம் தான். நன்றி

மதி
29-10-2008, 08:58 AM
நல்லா கதையை முடிச்சிருக்கீங்க... ஆனாலும் உங்க மற்ற கதைகள்ல இருக்கற மாதிரி நிமிரக் கூடிய முடிவு இல்லாதது வருத்தமே... நண்பன் விஷம் குடிச்சிட்டான்னு தலை தெறிக்க பின் தொடருபவர்கள்.. இப்படியா காமெடி பண்ணுவார்கள்..?

ரங்கராஜன்
29-10-2008, 09:38 AM
நல்லா கதையை முடிச்சிருக்கீங்க... ஆனாலும் உங்க மற்ற கதைகள்ல இருக்கற மாதிரி நிமிரக் கூடிய முடிவு இல்லாதது வருத்தமே... நண்பன் விஷம் குடிச்சிட்டான்னு தலை தெறிக்க பின் தொடருபவர்கள்.. இப்படியா காமெடி பண்ணுவார்கள்..?


நன்றி மதி

நீங்கள் சொல்வது உண்மைதான், நிஜங்கள் எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருப்பது இல்லை தான், நண்பன் விஷம் குடிச்சிட்டான்னு தலை தெறிக்க பின் தொடருபவர்கள்.. இப்படியா காமெடி பண்ணுவார்கள்?, இந்த கேள்விக்கு விடை, ஆம் நாங்கள் அப்படித்தான் செய்தோம், இது நான் +1 படிக்கும் பொழுது நடந்த சம்பவம், அப்பொழுது நாங்கள் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொண்டது கிடையாது, சாவு வீட்டில் கூட போய் சிரித்துக் கொண்டு இருப்போம், ஆனால் அதே சம்பவம் இப்போ நடந்தால் அதை நான் பார்க்கும் கண்ணோட்டமே வேறு, கையாளும் முறையும் வேறு, அதான் முதிர்ச்சி, இப்போ ஒரு காக்கா செத்தால் கூட மனது துடிக்கிறது. அதனால் தான் அந்த காலத்தை சொர்கம் என்று சொன்னேன். நண்பரே

மதி
29-10-2008, 11:05 AM
நன்றி மதி

நீங்கள் சொல்வது உண்மைதான், நிஜங்கள் எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருப்பது இல்லை தான், நண்பன் விஷம் குடிச்சிட்டான்னு தலை தெறிக்க பின் தொடருபவர்கள்.. இப்படியா காமெடி பண்ணுவார்கள்?, இந்த கேள்விக்கு விடை, ஆம் நாங்கள் அப்படித்தான் செய்தோம், இது நான் +1 படிக்கும் பொழுது நடந்த சம்பவம், அப்பொழுது நாங்கள் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொண்டது கிடையாது, சாவு வீட்டில் கூட போய் சிரித்துக் கொண்டு இருப்போம், ஆனால் அதே சம்பவம் இப்போ நடந்தால் அதை நான் பார்க்கும் கண்ணோட்டமே வேறு, கையாளும் முறையும் வேறு, அதான் முதிர்ச்சி, இப்போ ஒரு காக்கா செத்தால் கூட மனது துடிக்கிறது. அதனால் தான் அந்த காலத்தை சொர்கம் என்று சொன்னேன். நண்பரே
நல்லது.. அதனால் தான் சொன்னார்களோ..
உண்மை எப்பவுமே.. வித்தியாசமாயிருக்கும்னு.. :)

MURALINITHISH
31-10-2008, 09:11 AM
]ஆம் நாங்கள் அப்படித்தான் செய்தோம்[/B], இது நான் +1 படிக்கும் பொழுது நடந்த சம்பவம்,

உண்மை சம்பவமா எல்லாம் சரி இதில் தாங்கள் யார் என்று சொல்லவே இல்லையே

ரங்கராஜன்
31-10-2008, 09:25 AM
உண்மை சம்பவமா எல்லாம் சரி இதில் தாங்கள் யார் என்று சொல்லவே இல்லையே


நான் நானே தான்

MURALINITHISH
31-10-2008, 09:26 AM
நான் நானே தான்

அப்ப பாலா மனசுக்குள் நினைச்சு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது

ரங்கராஜன்
31-10-2008, 09:29 AM
அப்ப பாலா மனசுக்குள் நினைச்சு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது

போன வாரம் பார்த்த போது சொன்னான்

MURALINITHISH
31-10-2008, 09:47 AM
போன வாரம் பார்த்த போது சொன்னான்

சும்மா டான் டான்னு பதில் வருது நண்றி நண்பரே

kugan
12-02-2009, 07:39 AM
வித்தியாசமான நண்பர்கள்

samuthraselvam
24-02-2009, 08:26 AM
விளையாட்டுப் பருவத்தில் செய்த குருப்புகளுக்கு அளவே இல்லை போல் இருக்கே.. கதையும் அருமை உங்கள் குறும்புகளும் அருமை அண்ணா..