PDA

View Full Version : கண்ணீர் கனவுகள்சுகந்தப்ரீதன்
28-10-2008, 08:04 AM
ஏதோவொரு சுழற்சி
எதிர்பாராத அதிர்ச்சி..!!

எந்திரத்தின் இறக்கை
ஒன்று பட்டுவிடுகிறது
பஞ்சுவிரல் பாதத்தில்..!!

தாவிப் பறக்கிறது
தன்னிலை மறந்து
தப்பித்த பறவையொன்று..!!

அழுகையாய் வழிகிறது
அதிர்ச்சியின் அதிர்வெண்கள்
சிறகடித்த குருவியின்
சின்னஞ்சிறு விழிகளில்..!!

சிறிதும் சலனமின்றி
சிறப்பாய் தொடர்கிறது
சுற்றியுள்ள.....
சுயநலத்தின் சுழற்சி..!!

கண்ணீருடன்
கடந்து போகிறது..
காயம்பட்ட குழந்தை
தன்கூண்டை நோக்கி..!!

நதி
28-10-2008, 09:00 AM
பறவை, இயந்திரப் பறவை. இரண்டும் ஒரே வானில் பறப்பில். பறவையின் கவனப்பிசகு, இயந்திரப் பறவையின் செலுத்துனரின் கவனக்குறைவு, காலநிலைச் சீர்குலைவு... ஏதோ ஒன்று விபத்துக்குக் காரணம் காண்பர் பார்வையில். இயந்திரப் பறவையல்ல. பறவைக்கு இது பெரு விபத்து. இயந்திரப்பறவைக்கு விபத்தே இல்லை அல்லது சிறு விபத்து.

கூண்டை விட்டுப் பறந்து கூட்டை அடையட்டும் பறவை.

வசீகரன்
28-10-2008, 09:24 AM
நல்லதொரு கவிதை சுகந்தா..
இன்னும் கூட கொஞ்சம் ஆழப்படுத்தி சொல்லி இருக்கலாமேடா..???

சிறு பிராயத்தில் நான் பள்ளிக்கூடம் அழுதுகொண்டே சென்றகாட்சி
எனக்கு நினைவுக்கு வந்தது..!
கண்ணீர் கனவுகள் என்ற தலைப்பு சரிதானாடா..???

shibly591
28-10-2008, 09:29 AM
நல்லதொரு கவிதை..

வார்த்தைகளிலுள்ள தவிப்பை இன்னும் அழுத்தமாகச்சொல்லியிருப்பின் இன்னும் அழகாக இருந்திருக்கும்..

தொடருங்கள்

அமரன்
30-10-2008, 11:08 AM
சுகந்தா!!
எதை நினைத்து இதை நீ எழுதினாயோ அதை நினைத்து இதை நான் எழுதுவதாக நினைத்துக்கொள்.

யாரையும் குற்றம் சொல்ல இயலாது..

kampan
30-10-2008, 01:12 PM
அருமையான கவிதை சுகந்தா? சொல்பதை சுருக்கமாக சுவைநயத்துடன் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

பென்ஸ்
02-11-2008, 11:59 PM
மிக மிக ஆழமான கவிதையாகவே எனக்கு தெரிகிறது சுபி...

உரசி செல்லும் வரை
வலியவனுக்கு வலியில்லை
எழியவனுக்கும் பழியில்லை

மோதனாலோ
வலியவனுக்கு வழியில்லை
எழியவனுக்கு வாழ்வில்லை

புரியுமே...

பிச்சி
03-11-2008, 04:11 AM
அருமையான கவிதை அண்ணா. கலக்கல்ஸ்.

பிச்சி

சுகந்தப்ரீதன்
08-11-2008, 05:31 AM
உணர்வுகளை புரிந்துக்கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..!!

-------------------------------------

அன்புள்ள அமருக்கு....

நான் ஒரு சிங்களவனாகவோ இல்லை தமிழகத்தில் பிறக்காத ஒரு இந்தியனாகவோ இருந்து கூறியிருந்தால் அது மற்றவர்களுக்கு குற்றமாக தெரிந்திருக்காது மாறாக மனிதநேயமாக பட்டிருக்கும். தமிழனாக இருப்பதில்தான் தர்மசங்கடமே. என்ன சொன்னான் என்பதைவிட எவன் சொன்னான் என்பதே முக்கியத்துவம் பெறுவதால் வரும் முரண்பாடு இது. எப்போ விதிகள் விதிவிலக்காகவும் விதிவிலக்குகள் விதிகளாகவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டனவோ அதன்பிறகு அவ்விடயத்தில் நான் குற்றம் கூறுவதற்க்குத்தான் என்ன இருக்கிறது..? எது எப்படியோ நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்.. இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்..!! இதற்குமேல் இதில் சொல்வதற்க்கு என்னிடம் ஒன்றுமில்லை.. எல்லாவற்றிற்க்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..!!

இளசு
08-11-2008, 08:24 AM
அன்பு சுகந்தன்..

வருந்தற்க!

உலங்கூர்தி(ஹெலிகாப்டர்) எனும் இயந்திரப்பறவை -
எத்தகைய அச்ச உணர்வின் குறியீடு என்பதை
ஈழத்தமிழர் இன்னல் அறிந்த எவரும் அறிவர்..

வன்புலப்பெயர்வின் வலியை உய்த்துணரும் ( எம்பதி)
நுட்பமனிதம் உள்ளவரே இங்கே பலரும்..

இலக்கியம் காலத்தை, அதன் சுகதுக்கங்களைப் பதிவு செய்யும் பேழை..

அந்த வகையில் ஈழ இலக்கியங்கள் பெரும் வலிகளைச் சுமந்து வருவது
காலப் பிரதிபலிப்பு என்பதையும் இங்கு அனைவரும் அறிவோம்..

வலிகளைத் தமிழில் பிசைந்து பரிமாறி
கொஞ்ச நேர ஆறுதல் தேடும் அனைத்து நெஞ்சங்களுக்கும்
படிக்கும் இதயங்களின் பதறும் பங்கேற்பால் நல்லுணர்வு விளையும்..

விளைந்திருக்கிறது!

ஓவியன்
10-11-2008, 09:12 AM
இயந்திரத்திற்கு தன் இலக்கு முக்கியம்,
பறவைக்கோ தன் கூடு முக்கியம்...

இரண்டினதும் பாதைகள்
இடைவெட்டியதால் வந்த வில்லங்கம் இது..!!

நடந்ததை நினைத்து அழ நேரமில்லை,
நடத்தி வைக்க நிறைய விடயங்களுண்டு
அவற்றிலே கவனமெடுப்போம்...!!

Keelai Naadaan
10-11-2008, 01:30 PM
தாங்கொண்ணா சோகத்தை சொல்லாமல் சொல்லும் அருமையான கவிதை சுகந்தப்ரீதன்.


நான் ஒரு சிங்களவனாகவோ இல்லை தமிழகத்தில் பிறக்காத ஒரு இந்தியனாகவோ இருந்து கூறியிருந்தால் அது மற்றவர்களுக்கு குற்றமாக தெரிந்திருக்காது மாறாக மனிதநேயமாக பட்டிருக்கும். தமிழனாக இருப்பதில்தான் தர்மசங்கடமே. என்ன சொன்னான் என்பதைவிட எவன் சொன்னான் என்பதே முக்கியத்துவம் பெறுவதால் வரும் முரண்பாடு இது. எப்போ விதிகள் விதிவிலக்காகவும் விதிவிலக்குகள் விதிகளாகவும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டனவோ அதன்பிறகு அவ்விடயத்தில் நான் குற்றம் கூறுவதற்க்குத்தான் என்ன இருக்கிறது..?

கவிதையை விட நீங்கள் குறிப்பிட்டிருப்பது அதிகமாய் பாதித்தது.

மன்மதன்
10-11-2008, 02:07 PM
ஒரு சிறு பறவை மோதி பெரிய விமானமே கதி கலங்கிய பல
சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது..

காலம் கனியும்.. பறவைகள்
சிறகுகளின் ஓசையேயின்றி சுகமாய்
பறக்க..!!

ஆதவா
11-11-2008, 03:53 AM
மிக அழகான காட்சி.. அதேசமயம் வலிமிகுந்த காட்சியும் கூட.

முதலில் எனக்கொரு விளக்கம் தேவை..

எந்திரம் சரியா அல்லது இயந்திரம் சரியா?

இக்கவிதை எப்படியெல்லாம் ஒப்பிடலாம் தெரியுமா? ஒரு பணக்கார முதலையிடம் அடிபட்டு ஏமாந்த ஏழை பரிதாபியை இதனோடு ஒப்பிடலாம். எந்தத் தடையுமின்றி இலக்கை மட்டுமே எதிர்நோக்கிச் செல்லும் ஒருவனால், இடையே அடிபட்டவனோடு ஒப்பிடலாம். நீங்கள் கூறியதைப் போன்ற ஈழ ஒப்பீடுங்களிலும் நேரடியாக அடங்குகிறது.. பொருள் ஆழப்புதைந்திருந்தால் தோண்டத் தோண்ட ஏதாவது ஒன்று கிடைத்துக் கொண்டே இருக்கும். கவிதை செறிவுமிக்கதாக இருக்கிறது.

இது ஒரு (அழகிய) வலி நிறைந்த காட்சிக்கவிதை சுபி. ஒரு இலக்கிற்காக சிலசமயங்கள் சிலரைக் காயப்படுத்த வேண்டியிருக்கிறது. அந்த காயம்பட்டவர்களின் மனநிலையில் அவர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று யோசிக்க வைக்கிறீர்கள். மோதியவனுக்கு என்ன மனநிலை இருக்கும்.. இதன் ஒரு கோணத்தை பென்ஸ்


வலியவனுக்கு வழியில்லை

இப்படிச் சொல்லுகிறார். இதன் காரணமாக ஒப்பீட்டில் நெறிமுறைகள் தோன்றுகின்றன. இங்கே தவறு மோதியவனுக்கில்லை.. காயப்பட்டவனுக்கு அல்லவா... அல்லது இருவரது பாதையும் அல்லவா..

இதை மிக அழகாக ஓவியன்இரண்டினதும் பாதைகள்
இடைவெட்டியதால் வந்த வில்லங்கம் இது..!!

என்கிறார்..எந்திரத்தின் இறக்கை
ஒன்று பட்டுவிடுகிறது
பஞ்சுவிரல் பாதத்தில்..!!

ஒன்று எனும் வார்த்தை இறக்கைக்கு அருகே இட்டிருக்கவேண்டும்... அல்லது அதைத் தூக்கிலிட்டிருக்கவேண்டும்.. இவ்வாறாக..எந்திரத்தின் இறக்கை ஒன்று
பட்டுவிடுகிறது
பஞ்சுவிரல் பாதத்தில்..!!

அதேசமயம் இன்னொரு கேள்வி... அடிபட்டது விரலிலா பாதத்திலா? அல்லது இரண்டு இடத்திலுமா? அடிபட்ட செயல் ஒன்றே முக்கியமானதாக இங்கே கருதப்படும் வேளையில் அதற்கான வார்த்தைகளும் கவிதை சொல்லும் செயலும் துல்லியமாக இருப்பது நன்றல்லவா?

அதேபோல,
கவிதையின் துவக்கத்திலேயே சுழற்சி அதிர்ச்சி என்று குறியீடுகளாகத் துவங்கிய கவிதை, மூன்றாம் பத்தியில் பறவையொன்று என்று விளித்து விரித்துவிடுகிறது. கவிதை செயலாகத் துவங்கி, செய்யப்பட்டவரால் கடந்து செயல்நடந்த இடத்தைக் குறித்து பின்னர் விளைவுகளைச் சொல்லி முடிவிடுகிறது... இந்தமுறையின்படி கவிதை சீராகவில்லை என்பதே எனது கருத்து. தேவை, வார்த்தைகளின் இடமாற்றம்.காயம்பட்ட குழந்தை


குழந்தை எனும் பதத்திற்கு பறவை என்றே கூட கொடுத்திருக்கலாம். வார்த்தை மாறியதால் நமது எண்ணங்கள் வேறு எங்கொ செல்வதற்கு வாய்ப்புண்டு. அந்த குருவியின் மனநிலையில் மனம் கனக்க வைத்த கவிதை.. எனது நீண்ட கால பசிக்கு ஆகாரம். இவையனைத்தும் எனது கருத்து மட்டுமே, எவரும் மறுமொழி கூறலாம்.

வாழ்த்துக்கள் சுகந்தப்ரீதன்..

சுகந்தப்ரீதன்
11-11-2008, 04:23 AM
முதலில் எனக்கொரு விளக்கம் தேவை..
எந்திரம் சரியா அல்லது இயந்திரம் சரியா?.. ஆதவா இதே குழப்பம் எனக்கும் உண்டு.. இதை எதார்த்தம் என்பதா? இல்லை யதார்த்தம் என்பதா என்று.. அண்ணனோ ஆத்தாவோ வந்து இங்கே உதவினால் நன்றாக இருக்கும்..!!
குழந்தை எனும் பதத்திற்கு பறவை என்றே கூட கொடுத்திருக்கலாம். வார்த்தை மாறியதால் நமது எண்ணங்கள் வேறு எங்கொ செல்வதற்கு வாய்ப்புண்டு. உண்மைதான் ஆதவா.. ஆனால் ஊடுபொருளாக வைத்து கவிதை எழுதும்போது சமயத்தில் அது வாசிப்பவனை சென்றடைவதில்லை.. உதாரணம் என்னுடைய "சூழ்நிலை கைதி" என்ற இருமுக கவிதை. அதற்கு பின்னூட்டம் இட்டவர்களில் பூர்ணிமா மட்டுமே புரிந்து இட்டிருப்பார் என்று தோன்றுகிறது.. அதற்கு காரணம் வாசிப்பவனின் மனநிலையும் வடிப்பவன் மனநிலையும் ஒன்றாய் இருப்பதில்லை என்பதுதான்..!! (ஆனால் அதன் நோக்கம் சரியான சமயத்தில் தீபாவளி மின்னிதழில் வந்ததன்மூலம் நிறைவேறி விட்டது.. பரிந்துரைத்தவருக்கு என் நன்றி..)

ஆகையால்தான் இங்கேயும் உணர்வுகள் உணரப்படாமல் போய்விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் கடைசியில் குறியீட்டை மாற்றியமைத்தேன்..!!

குறைவில்லாத உன் விமர்சனம்... என் குறையை போக்கிவிட்டது ஆதவா.. மிக்க நன்றி..!!