PDA

View Full Version : அருட்காட்சியகத்தில் பேனாஎஸ்.எம். சுனைத் ஹஸனீ
26-10-2008, 04:40 PM
புதனுக்கும் புளுட்டோவிற்கும்

நகர விமானங்களில் நசுங்கிச் செல்லும்

முப்பத்தியோ நாப்பத்தியோ ஒரு நூற்றாண்டில்

மனிதங்களை எந்திரங்கள்

கட்டி மேய்த்து நெறிப்படுத்தியனுப்பும்

ஏறிய தலை ஏறியபடியிருக்கும்

எண்ணற்ற ஓர் அடுக்குமாடியொன்றில்

தனியாளாய் தம்பட்டமின்றி

கண்ணாடிப் பெட்டகத்தில்

சாய்ந்த படி நின்றிருக்குமது

மூடியைத் தொலைத்து

மழுங்கிய முனையில்

சீரற்று விரிந்த விரிசல்களுடன்

மூலைத் துணையில் முடங்கியிருக்குமதை

அநேகமாய் அது அந்தக் காலத்தவர்களின்

ஆயுதமாயிருந்திருக்கலாமென்பான்

எல்லாம் தெரிந்தவன் நானெனும்

என்னைப் போல் ஒருவன்

அப்படியெல்லாமில்லை!

அதனடியில் ஏதோ திரவமிட்டு

அவ்வப்போதைய நிகழ்வுகளை இருத்திக் கொள்ள

அறிவியலறியாத இருபத்தியோராம் நூற்றாண்டு

அப்பாவி மக்களின் அழகு படைப்பிது

பதியப்பட்டதை ஒப்பித்துக் கொண்டிருப்பான்

நிரலெழுதப்பட்ட எந்திர மனிதனொருவன்

எத்தனை காவியம் படைத்தும்

எதுவும் மிஞ்சா பயனில்

தன் காவியம் சொல்ல

தனியொரு மனிதன் இல்லையென்று

தன்னந்தனியாய் தனியொரு பாஷையில்

தவித்துப் புலம்பும் அந்த பேனா

அனைத்திற்குமோர் மாதிரியாய்

புள்ளி வைத்துத் துவக்கி விட்டேன் நான்

கணினித் திரையில்

விசைப் பலகை வழி கவிதை எழுத

மன்னிக்கவும்

கவிதை அடிக்க.


எஸ்.எம். சுனைத் ஹஸனீ.

shibly591
26-10-2008, 04:50 PM
அற்புதமோ அற்புதம் நண்பரே...

வார்த்தைகள் அதை கோர்த்த விதம சொல்ல வந்த கருத்துக்கள் எல்லாமே வெகு சிறப்பு...

வாழ்த்துக்கள்..

(உங்கள் கவிதையை படிக்கும்போது சுஜாதாவின் நினைவுகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை)

இளசு
09-11-2008, 07:11 AM
எழுதுகோல் பதித்து
இதயத்தை மடலாக்கி
என் அன்பை மையாக்கி

பெற்றவர்களுக்குக் கடிதம் எழுதிய காலங்கள் போயாச்சு!

தொலைபேசி, அலைபேசி,மின்மடல், குறுஞ்செய்தி என எல்லாமும் மாறியாச்சு..


ஆணியால் ஓலையால் எழுத ஒரு வகை..
பின் மணலில் விரலால்
சிலேட்டில் பலப்பத்தால்
அழித்து எழுத வசதியாய் காகிதத்தில் பென்சிலால்..

பேனாவிலும் மையிட்ட, பால்பாயிண்ட் என...மாறி...

இன்று உமர் உள்ளிட்டோர் புண்ணியத்தில்
ஒருங்குறியாய் விசைப்பலகையில் விரல்வழி என ஆகி..

நமக்காக மாறிவரும் மொழி... தொடர்புகொள்ளும் ஊடகங்கள்..

மாற்றம் மட்டுமே மாறாதது!

தொலைநோக்குக் கவிதைக்குப் பாராட்டுகள் ஜூனைத்!

ஓவியன்
09-11-2008, 08:01 AM
பழையன கழிதல், புதியன புகுதல்
என இலகுவாக நாம் கூறி விடுகிறோம்...
ஆனால் பழையன,
பழையவையாதலால் நன்கு
நம்முடன் பழகியன
நம்மை விட்டு கழிகையில்
ஏற்படும் ஏக்கம்
இங்கே ஒரு தொலை நோக்குக் கவிதையாக....

நன்றாக இருக்கிறது ஜூனைத், மனதார்ந்த வாழ்த்துக்கள்..!!