PDA

View Full Version : பட்டாசு வெடிக்கலாமா...?சிவா.ஜி
26-10-2008, 06:40 AM
வீதியில் வெடி வெடித்தால்
காசைக் கரியாக்குகிறாய்
மாசை உருவாக்குகிறாய் என
பூசை விழுகிறது வீட்டில்....!

வெடித்து சிதறும்
ஒவ்வொரு காகித துணுக்கிலும்
கந்தகபூமியில் வெந்து மடியும்
ஏழையின் வறுமை தெரிகிறது....

நான் சூழலுக்கு அஞ்சி வெடிக்காதிருந்தால்
அவன் உணவுக்கு கஞ்சி வடிக்காதிருப்பான்..
ஒளிர்ந்து சிரிக்கும் மத்தாப்பில்தான் அவன்
வளர்ந்து வருகிறான்.....

ஏதோ ஊரில் யாரோ வெடிக்கும் பட்டாசு
சிவகாசிக் குடும்பத்தின் சோறாகிறது
நியாயங்களின் அர்த்தங்கள்
இங்கு வேறாகிறது....

மாசு படுத்திய காற்றை
மறுபடி சுத்தப்படுத்த
மரக்கன்றுகள் நட்டு
மடியாமல் வளர்ப்போம், நாம்
மறுபடியும் வெடிப்போம்..!

ரங்கராஜன்
26-10-2008, 07:11 AM
ஒரு கவிதையில் எடுத்துக் கொண்ட தலைப்பை பற்றி மட்டும் தான் சொல்ல வேண்டும் என்ற மரபை உடைத்து

சிவகாசி ஏழைகளின் நிலைமை
பட்டாசு வெடிப்பதின் ஆர்வம்
சுற்றுசுழல் பாதுகாப்பு
கற்பனை
இரக்கம்

ஆகிய பல விஷயங்களை வடித்து இருக்கிறீர்கள், ஆச்சர்யமான பாராட்டுகள்

சிவா.ஜி
26-10-2008, 07:17 AM
பட்டாசு வெடிப்பின் மறுபக்கமாய் நான் நினைத்ததை சில வார்த்தைகளில் வடித்தேன். உங்கள் பாராட்டு உற்சாகமூட்டுகிறது. மிக்க நன்றி மூர்த்தி.

வசீகரன்
29-10-2008, 06:03 AM
பட்டாசு வெடிப்பதை முதல் முறையாக நியாயப்படுத்தி வந்திருக்கும் கவிதை...
நியாயப்படுத்தி இருக்கும் காரணங்களும்... உணர்வுகளும் எவ்வளவு
உண்மையானவை...!!! முதல் முறையாக வெடி வெடிப்பதை வித்தியாச கோணத்தில் யோசித்திருக்கும் சிவா அண்ணனுக்கு... எனது பாராட்டுக்கள்...
இந்த வருச தீபாவளிக்கு ரொம்ப பட்டாசு வெடிச்சீங்களோ...!!!

ராஜா
29-10-2008, 06:16 AM
ஒரு விடயத்துக்குத்தான் எத்தனைக் கோணங்கள்..?

குழந்தைத் தொழிலாளரின் இரத்த வியர்வையால் சிவந்த உடலும், அவர்கள் ஒருநாள் அடையப்போகும் முடிவின் நிறத்தை திரியிலும் கொண்டதாக எனக்குத் தெரியும் பட்டாசின் இன்னொரு முகம் கண்டு இரசித்தேன்..!

சிவா.ஜி
29-10-2008, 06:37 AM
இந்த வருச தீபாவளிக்கு ரொம்ப பட்டாசு வெடிச்சீங்களோ...!!!

அந்த குடுப்பினை இந்த வருடம் எனக்கி கிடைக்கவில்லை வசீ. நான் துபாயில். தீபாவளி வெடி வெடிப்பு வீட்டில். ஐயாயிரம் வாலா வெடிக்கும்போது மட்டும் அலைபேசியில் கேட்கச் செய்து வயிற்றெரிச்சலை வாரிக்கட்டிக் கொண்டார் உங்க அண்ணி.

பாராட்டுக்கு நன்றி வசீ.

சிவா.ஜி
29-10-2008, 06:38 AM
ஒரு விடயத்துக்குத்தான் எத்தனைக் கோணங்கள்..?

குழந்தைத் தொழிலாளரின் இரத்த வியர்வையால் சிவந்த உடலும், அவர்கள் ஒருநாள் அடையப்போகும் முடிவின் நிறத்தை திரியிலும் கொண்டதாக எனக்குத் தெரியும் பட்டாசின் இன்னொரு முகம் கண்டு இரசித்தேன்..!

ஆஹா அருமையான உங்கள் பார்வை.....சிவப்பு உடலுக்கும், திரியின் நிறத்துக்கும் உங்கள் விளக்கம் மிக அருமை. உங்கள் ரசிப்புக்கு நன்றி ராஜா சார்.

ஆதி
29-10-2008, 11:38 AM
வெடிக்கு நுகர்வோர் குறையும் பொழுது
படிக்கு குறையும் அளவு..

வெடிப்பை நியாயப்படுத்தும் படைப்புக்கு வாழ்த்துக்கள் சிவா அண்ணா..

சிவா.ஜி
29-10-2008, 12:49 PM
அழகான புதுக்குறளுடன் வந்த ஆதியின் பின்னூட்டம் அருமை. மிக்க நன்றி ஆதி.

Narathar
29-10-2008, 02:46 PM
எந்த ஒரு விடயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு
என்பதை உணர்த்தி நிற்கிறது
உங்கள் கவிதை.

வாழ்த்துக்கள்......

துபாயில் பட்டாசு வெடிக்க கூடாது என்று சட்டம் உள்ளதா???

சிவா.ஜி
30-10-2008, 04:58 AM
மிக்க நன்றி நாரதர். துபாயில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இருந்தாலும் சில இந்தியக் குடும்பங்கள் குறைந்த அளவிலான வெடிகளை வெடித்து கொண்டாடினார்கள்.

அமரன்
30-10-2008, 11:01 AM
மாறுபட்ட கோணம் படைப்பாளிகளுக்கு உரித்தானது. நம் சிவாவுக்கு அது இருப்பதில் எந்த வித வியப்பும் இல்லை.

இந்தக் கவிதை படித்த நொடியில் முண்டாசுக் கவிஞனின் 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' கவிதை நினைவுக்கு வந்தது.

மனமார்ந்த பாராட்டுகள் சிவா.
படைப்பு வேகம் மந்தமானது ஏனோ?

MURALINITHISH
30-10-2008, 11:08 AM
நான் சூழலுக்கு அஞ்சி வெடிக்காதிருந்தால்
அவன் உணவுக்கு கஞ்சி வடிக்காதிருப்பான்..


உண்மைதான் படித்ததும் உண்மை சுடுகிறது உலகில்தான் எத்தனை ஏற்ற தாழ்வுகள் ஒருவனின் களி(அழி)ப்பில் மற்றொருவனின் வாழ்வும்

சிவா.ஜி
30-10-2008, 11:38 AM
அமரனின் முத்திரைப் பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி. மிக்க நன்றி அமரன்.

புதிய வேலையில் சேர்ந்திருப்பதால், நேரம் ஒதுக்குவதில் சிறிது பிரச்சனை இருக்கிறது. வீட்டிலும் இன்னும் இணைய இணைப்பு எடுக்கவில்லை. அதனால்தான் கொஞ்சம் வேகம் குறைந்துவிட்டது.

சிவா.ஜி
30-10-2008, 11:40 AM
உண்மைதான் படித்ததும் உண்மை சுடுகிறது உலகில்தான் எத்தனை ஏற்ற தாழ்வுகள் ஒருவனின் களி(அழி)ப்பில் மற்றொருவனின் வாழ்வும்

ஆம் முரளி. உண்மைகளும் பட்டாசுகளைப்போல சுடத்தான் செய்கிறது. சரி தவறு என்பதற்கான இலக்கணங்கள் சில வேளைகளில் மாறிவிடுகிறது.

பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி.

பென்ஸ்
03-11-2008, 12:15 AM
சிவா..

கவிதை நன்று என்றாலும் கவிதையின் கருத்தை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

உங்கள் காசில் எத்தனை சதவிகிதம் அந்த ஏழைக்கு செல்கிறது... 10% கூட இருக்காது... ஏழைக்கு கொடுப்பதாக இருந்தால் நீங்களே செய்யலாமே,,, இப்படி நியாய படுத்த வேண்டிய தேவையில்லையே....

இந்தியாவின் சிவகாசியில் மட்டும் தான் பட்டாசு தயாரிக்க படுகிறதா...??? உலகின் வேறு பகுதியில் தயாரிக்க படும் பட்டாசு ஏழைகளால் தான் தயாரிக்க படுகிறதா...??? இல்லையே....
சிவா, நீங்கள் காணும் இந்த நிலை இன்னும் 10 வருடங்கள் கூட நீடிக்காது, ஆனாலும் ஏழைகள் இருக்கதான் செய்வார்கள்.... பட்டாசு தொழிலும் இருக்கும்.. ஆனால் அந்த தொழிலை செய்வது ஏழைகளாக இருக்காது....இயந்திரமாக இருக்கலாம் அப்போதும் உங்கள் வீட்டில் திட்டுவார்கள் "ஏன் காசை கரியாக்குகிறாய்" என்று....


ஆனால் நீங்கள் இன்று பட்டாசு வாங்கினால் அது இன்னும் ஒரு சிறுவனை பள்ளியை விட்டு பட்டாசு தொழிலுக்கு கொண்டு வரலாம்.

சிவா.ஜி
03-11-2008, 03:17 AM
உங்களின் இந்தப் பக்கப் பார்வையும் சரிதான் பென்ஸ். பல பார்வைகளுள் என்னுடையதும் ஒன்று. அதைத்தான் இங்கு நியாயங்களின் அர்த்தங்கள் வேறுபடுகின்றன எனச் சொன்னேன்.

ஆனாலும் உங்கள் கருத்து நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது. ஆனால் என்ன செய்வது மூளையால் சிந்திக்காமல், மனதால் சிந்தித்தே பழக்கப்பட்டுவிட்டதால் என்னால் உங்களின் பார்வையைப் முழுதாய் உணர முடியவில்லை.

சிவகாசி தவிர்த்து எத்தனையோ இடங்களில் பட்டாசுகள் தயாரிக்கப்படலாம். அங்கெல்லாம் தமிழன் வேகவில்லையே. நீங்கள் சொல்வதைப்போல பிற்காலத்தில் இவை முழுதும் இயந்திரமயமாக்கப்படலாம். இல்லை இந்தத் தொழிலே கூட இல்லாது போகலாம். அன்று நானும் வெடிக்காமல் இருக்கலாம்.

நான் வெடிக்கும் ஒரு பட்டாசில் கிடைக்கும் காசுக்காக மேலும் ஒரு மாணவன் படிப்பை விடுவான் என்ற நிலை வருமானால், அந்த நிலைக்கு நானோ அல்லது ஏனைய பட்டாசு வெடிப்பவர்களோ காரணமாய் இருக்க மாட்டார்கள்.

பிராணிகளைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி சர்க்கஸ் தொழிலில் இருந்த பல்லாயிரக்கணக்கானவரின் வயிற்றிலடித்தவர்கள், அவர்களின் வாழ்க்கைக்கு மாற்றாக ஏதும் செய்யவில்லையே?

நாளை யாரும் பட்டாசு வெடிக்கக்கூடாது என சட்டம் வந்தால், யாரும் வெடிக்கப் போவதில்லை. ஆனால் அந்த கந்தக பூமியில் இதுவரை வெந்தவர்களின் வருங்காலம் என்ன? அதை பட்டாசு வெடிப்பவர்கள் தீர்மாணிக்க வேண்டுமா அல்லது அவர்களை அந்த நிலைக்குத் தள்ளிய அரசாங்கம் சிந்திக்க வேண்டுமா?

அமரன்
03-11-2008, 06:59 AM
நல்வாய்ப்புச் சீட்டு புழக்கத்தை சட்டம்போட்டு கட்டுப்படுத்தியபோது ஏற்பட்ட நிலைமைலகளை கண்முன் நிறுத்தும் இரு பதிவுகள்.

பென்ஸ்
03-11-2008, 07:58 PM
எங்கள் ஊரில் முன்னாள் கைக்குத்து அவல் இடிப்பது என்று ஒரு இடம் உண்டு... இங்கு இவர்கள் கைக்குத்து அவல் செய்து எல்லா இடமும் சென்று விற்ப்பார்கள்.... திடீரென ஒரு நாள் அவல் இடிக்கும் இயந்திரம் வர...
அனேகர் அங்கு செல்ல துவங்கினர்...
வழக்கம் போல்
"மிசின் அதுல இருக்க சத்தை எல்லாம் உறிஞ்சிருமாம்"
"மிசினு ருசியை உறிஞ்சிருமாம்.." என்று கதைகளும்....
என் அம்மாவோ "பாவம் இவங்க என்ன செய்வாங்க" என்று வருத்த பட்ட நினைவு...
ஆனாலும் இவர்களும் பிறகு மிசினில் கொடுத்து இடித்து விற்க ஆரம்பித்து, பின் அப்பள தொழில் என்று மாறி போனதெல்லாம் வேறு கதை....
சிவா.. எந்த ஒரு மாற்றம் வரும் போதும் ஒரு இறுக்கம் இருக்கும், ஆனால் மனிதனின் தேவைகள் வேறு வழியை கண்டிப்பாக கொடுக்கும்...
என்னை பொறுத்த வரை இன்று "காசு கொடுத்து சுற்றுபுற சூழலை கெடுக்கிறோம்".. முக்கியமாக Dioxin, lead மற்றும் பாதரசம் போன்றவை....

இளசு
03-11-2008, 08:09 PM
ஓர் இளகிய கவிமனப் பார்வை
ஒரு தொலைநோக்கும் அறிவியல் பார்வை..

கை ரிக்-ஷா சைக்கிள் ரிக்-ஷா ஆட்டோ, ஷேர் ஆட்டோ..

மாற்றம் வரும்போதெல்லாம்
முந்தைய கணு ஆட்டம் காணும்..
பின் மாற்று வழியில் தழைத்தே தீரவேண்டும்..

பாதிக்கப்படுவோர் கண்டு இரங்குவது இயல்பு..
பாதிப்பு தீர சிந்திப்பது நம் அறிவு..

இரண்டும் ஒருங்கே கண்டு
என் மனதில் நிறைவு..


வாழ்த்துகள் சிவா..
பாராட்டுகள் பென்ஸ்!

சிவா.ஜி
04-11-2008, 03:06 AM
என் அம்மாவோ "பாவம் இவங்க என்ன செய்வாங்க" என்று வருத்த பட்ட நினைவு...

ஆனாலும் இவர்களும் பிறகு மிசினில் கொடுத்து இடித்து விற்க ஆரம்பித்து, பின் அப்பள தொழில் என்று மாறி போனதெல்லாம் வேறு கதை....

சிவா.. எந்த ஒரு மாற்றம் வரும் போதும் ஒரு இறுக்கம் இருக்கும், ஆனால் மனிதனின் தேவைகள் வேறு வழியை கண்டிப்பாக கொடுக்கும்...
என்னை பொறுத்த வரை இன்று "காசு கொடுத்து சுற்றுபுற சூழலை கெடுக்கிறோம்".. முக்கியமாக Dioxin, lead மற்றும் பாதரசம் போன்றவை....

அன்பு பென்ஸ் உங்கள் அம்மாவின் நிலையில்தான் நான் இப்போது இருக்கிறேன். அடுத்த பத்தியில் நீங்கள் சொன்னதுபோலத்தான் இந்தப் பட்டாசுக்கதையும் நடக்கப்போகிறது.

பட்டாசுத் தொழிலில் மட்டுமல்ல..வேறு எந்த தொழிலிலும் குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என்ற சட்டமிருக்கும் போது எப்படி இந்த ஆபத்தான தொழிலில் அந்த குழந்தைகளை ஈடுபட அனுமதிக்கிறார்கள்?

அவர்களின் வறுமை நிர்பந்திக்கிறது. நாளை இயந்திரமயமாகும்போது, தற்போது பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ள எல்லா குழந்தைகளும் கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்பப்படுவார்கள் என்ற உத்திரவாதம் கிடைக்குமா?

இன்றைய அவர்களின் நிலையை நினைத்தே நான் கவலை கொண்டேன் பென்ஸ். உங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.

சூழலை சற்றே சுத்தமாக்க நிச்சயம் நாலு மரமாவது நட்டு வளர்க்க வேண்டும். இனிமுதல் பட்டாசு வெடிப்பது நிறுத்தப்பட்டாலும், இதுவரை மாசு பட்டதை சிறிதேனும் மீட்டெடுக்க அவை உதவும்.

(அடுத்தமுறை பட்டாசு வெடிக்கும்போது நிச்சயம் பென்ஸ் என் சிந்தனையில் வருவது உறுதி....:))

சிவா.ஜி
04-11-2008, 03:12 AM
பாதிக்கப்படுவோர் கண்டு இரங்குவது இயல்பு..
பாதிப்பு தீர சிந்திப்பது நம் அறிவு..
இரண்டும் ஒருங்கே கண்டு
என் மனதில் நிறைவு..இரண்டுவரியில் எல்லாம் அடக்கிய பின்னூட்டம். இதுதான் இளசு எனச் சொல்ல வைக்கும் எல்லோருக்கும் ஏற்புடைய அருமையான கருத்து. மிக்க நன்றி இளசு.

அமரன்
04-11-2008, 09:05 AM
(அடுத்தமுறை பட்டாசு வெடிக்கும்போது நிச்சயம் பென்ஸ் என் சிந்தனையில் வருவது உறுதி....:))
பட்டாசு வெடிக்க நினைத்ததும் என் நினைவில் பென்சண்ணா வந்துவிடுவார் சிவா.:D

சிவா.ஜி
04-11-2008, 09:40 AM
பட்டாசு வெடிக்க நினைத்ததும் என் நினைவில் பென்சண்ணா வந்துவிடுவார் சிவா.:D

நிச்சயமாக அமரன். அதோடு அந்த வேதியல் பொருட்களும்....:lachen001:

paarthiban
07-11-2008, 11:35 PM
நல்ல கவிதை!
நல்ல அலசல்!