PDA

View Full Version : ஈழத்தாய் சிறுகதை



ரங்கராஜன்
25-10-2008, 01:50 PM
ஈழத்தாய்

மு.கு : இந்த கதையில் வரும் பச்சைநிற வாக்கியங்கள் எல்லாம் நாயகனின் நினைவுகள்.


சவுதி அரேபியா ஒய்யாரமான நாடு, வளமான நாடு, எங்கும் வான் உயர்ந்த கட்டிடம், பூச்செடி வளர்க்க மண்னை இறக்குமதி செய்யும் நாடு. இதற்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்று தான் பெட்ரோல் என்னும் தேவதீர்த்தம். பணத்தை வைக்க இடம் இல்லை என்று வங்கிகள் ஷேக்குகளிடம் சொன்னதினால்,

“எதாவது ஐ.டி கம்பனி கட்டுங்க பாபா”

என்று தன் மூன்று வயது, ஒன்பதாவது மகள் (மகன்கள் கணக்கு தனி, மனைவிகளின் கணக்கு வேண்டாம்) கூறியதால், ஷேக்குகள் நிறைய ஐ.டி கம்பனிகள் கட்டி இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து திறமையை விற்க்கும் இளைஞர்களை பல சோதனைக்கு, கேள்விகளுக்கு பிறகு வேளைகளில் அமர்த்தி அதில் நல்ல லாபம் சம்பாதித்து

“பின்டீ அடுத்து என்ன கம்பனி கட்டலாம்” என்று மகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தார்.

அவரின் கம்பனியின் பெயர் “ஷாம்சத் டெக்னாலஜீஸ்”. அங்கு வேளை செய்யும் ராமபத்திரன் இலங்கை தமிழர், ஒரு மாதிரி ரீச் கறுப்பு நிறம், சற்று பருமனான உருவம், முன் மண்டையில் முடி இல்லை, அந்த சோகத்தில் மீசை வைக்கவில்லை வயது 30, யாரு நம்பமாட்டார்கள் பார்த்தால் 35 போல இருப்பார், சிஸ்டம் அனலிஸ்ட், அதிகம் பேசமாட்டார். அவர் பேசும் ஒரே ஆள் சேஷாத்திரி வேறும் தமிழர், சிஸ்டம் அனலிஸ்ட், வாயை திறந்தால் மூடவே மாட்டார்.

“சேஷு நேத்திக்கு எடுத்த இ.ஒ.டீ கொஞ்சம் எடு” என்றார் ராமபத்ரன்.

“டேய் ராமா வந்த ஆறு வருஷத்துல நன்னா தமிழ் பேச கத்துண்டடா, ச்சீயோ மேன்” என்றார் சேஷு

“என்னோட தமிழ் பேசினாதான் உங்க யாருக்கு புரியிலன்னு நடிக்கீறீங்களே”

“தென் வாட், தமிழ்ல கம்யூனிக்கேட் பண்ணா நீ யாருகிட்ட பேசிறீயோ தெ மஸ்ட் அண்டர்ஸ்டாடு இட், நா பேசறது எப்படி எல்லாருக்கும் புறீயுது பார்” என்றான் சேஷு

“இப்ப நீ பேசின ஒரு வாக்கிய தமிழ்ல, ஏழு ஆங்கில வார்த்தை இருந்தது” என்ற ராமபத்திரன் தன்னுடைய பைலில் முழுகினான்.

தலையில் நூறு வாட்ஸ் பல்பு எரிய சேஷு கொஞ்ச நேரம் ராமனையே பார்த்து கொண்டு இருந்தான். மேஜையில் இருந்த தொலைபேசி மணி அடித்தது, ராமபத்திரன் எடுத்தான்.

“ஹலோ, ராம் இயர்”

“நாந்தாங்க”

“சொல்லுமா ஜான்சி, சாப்டியா”

“செல்லுக்கு கால் பண்னேன் எடுக்கலையே” என்றாள் பதட்டத்துடன்.

“அப்படியா அது என்னுடைய கோட்டு பாக்கட்டுல வச்சிட்டேன், என்ன விஷயம் சொல்லுமா”

“நியூஸ்ல உங்க ஊர்ல பாம். . .”

“சும்மா பெரிசு படுத்துவாங்கமா, நீ அதல்லாம் இப்ப பாக்க கூடாது. . .”

“இல்லங்க ஆன்டி வேளை செய்யுற சென்ரல் ஸ்கூலில் போட்டுடாங் .. .” மேலே பேச முடியாமல் அழுதாள்.

ராமபத்ரன் கண்களில் கண்ணீர் சுரந்தது, கண்ணீர் இமையை தாண்டும் முன் சுதாரித்துக் கொண்டான், அவன் இதற்க்கு எப்பவோ தயாராக இருந்தான். போனை வைத்தான், திரும்பவும் தன்னுடைய பைலை எடுத்தான் வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் தலைக்குள் பல குரல்கள் கேட்டது.

“என்னது அப்பா எங்கன்னு தெரியாதா, என்னடா கதைக்குற” பள்ளி ஆசிரியர்.

“அவங்கெல்லாம் விசுறு, என் ராமு செல்லத்துக்கு, இந்தா புது பொம்மைய். . ” அம்மா

“டாமார் .. .டீமிர். . . ஐய்யய்யோ” இரவில் மக்களின் அலறல் சத்தம்.

“நான் எங்கையும் வரமாட்டேன், இந்த மண்னைவிட்டு, நீ வேணும்னா போ ” அம்மா

அந்த பூமியில் மண்வாசனைவிட ரத்தவாசனை தான் அதிகம் வீசும், ராமு தன்னுடைய மூக்கை துடைத்துக் கொண்டு எழுந்தான். சேஷுவிடம் எதோ பேசினான், பையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். வீட்டை அடைந்தான். இரண்டு மணி நேரம் கழித்து பெட்டியுடன் வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள் ராமுவும், ஜான்சியும். ஜான்சி ராமுவை அமைதியாக பார்த்தாள். அந்த பார்வை அர்த்தம் புரிந்த ராமு

“ஜான்சி, அது ஆர்மி கண்ரோலில் இருக்கும் இடம் அங்க உன்னை அழைச்சிட்டு போக முடியாது, அதுவும் இல்லாமல் வீ ர் எக்ஸ்பேக்டீங் எனி டையம்” என்று நிறை மாதம் கற்பமாக இருக்கும் ஜான்சியின் வயிற்றை தடவிட்டு காரில் ஏறினான்.

“உங்க அப்பா சாய்தரம் வந்துடுவார்,விஷயத்தை சொல்லிட்டேன் அதுவரை பி கேர்ஃப்ல்” என்றான் ராம்,

கார் புகையை கக்கிக் கொண்டு விரைந்தது. ஏர்லங்கா விமானம் மேகத்தை கிழித்துக் கொண்டு நடுவானில் பறந்துக் கொண்டு இருந்தது. ஜன்னல் ஓர இருக்கையில் ராம் யோசித்துக் கொண்டு இருந்தான்

“தொபாருமா என்னால் இனிமேல் இந்த கசாப்கடையில இருக்க முடியாது, என்கூட நீயும் வந்துடு”

“காதலிக்கிறீயே அந்த பொண்ணு சொல்லி, நீ கதைக்கீறீயா”

“அய்யோ என்னால இங்க உயிர கையில புடிச்சிக்குனு ஜீவிக்க முடியாது, ஒரு பாக்கெட் பால் இங்க என்ன விலை? எனக்கு அமைதி வேணும், நீ வரலனாலும் நான் களம்ப போறேன்”

“ராமு பழச நனச்சி பாருடா”.

பழசு.........பழசு...........1980.....ராமுவின் குழந்தை பருவம் கொடுரமான பருவம், பசி பட்டினி, உடம்பில் காயங்கள் அதை சுத்தி மொய்க்கும் ஈக்கள். ராமுவின் அப்பா இவர்களை நிற்கதியாக விட்டு சென்றுவிட்டதில் இருந்து ஆரம்பித்தது இந்த எச்ச வாழ்க்கை. ராமுவின் அம்மா, வண்டி இழுத்து, பிணங்களை சுமக்கும் வேலை செய்து, ஸ்கூலில் ஆயா வேலை செய்து, மானத்தை தவிர மற்ற அனைத்திலும் இறங்கி வேலை செய்து தான் ராமுவை காப்பாற்றினாள்.

பயணிகள் அனைவரும் இறங்கிக் கொண்டு இருந்தனர், ராமுவும் கண்களை துடைத்துக் கொண்டு விமானத்தை விட்டு வெளிப்பட்டான். மெல்லிய காற்று வீசியது, ராமுவுக்கு அதில் இரத்தவாசனையும் கலந்து இருப்பதாக இருந்தது, தன்னுடைய கிராமத்தை நோக்கி ரயிலில் புறப்பட்டான்.

“அம்மா நான் தான்மா...., சவுதியில் இருந்து பேசுறேன் நாங்க கல்யாணம் செய்துக்கிட்டோம், நம்ம முறைப்படி தான்”

“சந்தோஷம்பா, கல்யாண போட்டோ அனுப்பிவை ராமா பாக்கணும் போல இருக்கு”

“அம்மா நீயும் இங்கயே வந்துடுமா”

“சரிப்பா காசு அதிகமாகப்போது ராமா, நீ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறத ஏன் போன்ல போடற, அம்மா வச்சிடேறேன் ராமு”

ரயில் குலுங்கி குலுங்கி சென்றது, முன் சீட்டில் உள்ளவர்கள் பின் சீட்டிலும், பின் சீட்டில் உள்ளவர்கள் முன் சீட்டிலும், அவர்களை அறியாமலே இடம் பெயர்ந்துக் கொண்டு இருந்தனர்.

“ராம் அம்மாக்கு அனுப்பிச்ச மணி ஆர்டர் ரீட்டன் ஆயிடுச்சி, வீடு மாத்திட்டாங்களோ”

“யாரு எங்கம்மாவா, அவங்க வார கணக்குல பட்டினியா இருந்தப்பவே யார் கிட்டயும் கை நீட்ட மாட்டாங்க, நான் அனுப்பிச்ச பணத்தையும் அப்படியே நனச்சிட்டாங்க போல, வைராக்கியமான பொம்பள எங்க அம்மா,நான் அப்பவே சொன்னனே ஜான்சி நீ தான் கேக்கல”

ரயிலில் ராமுவின் கண்களில் தானாக கண்ணீர் வந்து அவன் கல்லூரி படிக்கும் பொழுது அம்மாவிடம் ஒரு முறை பேசியா வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தது

“அம்மா உன்னோட அடுத்த ஜென்மத்து ஆசை என்னமா”

அவனை புன்சிரிப்புடன் பார்த்துவிட்டு “அடுத்த ஜென்மத்திலாவது என் ராமு செல்லத்துக்கு பிடிச்ச மாதிரி மொர மொரப்பா தோசை ஊத்தி தரணும்”

“போமா, என் ஆசை என்ன தெரியுமா”

“சொல்லு வைரம்”

“அடுத்த ஜென்மத்துல நான் உன்ன கல்யாணம் செய்துக்கனும் (ராமுவின் அம்மா புன்சிரிப்புடன் அவனை பாத்தாள், ராமு அவளை பார்க்காமல் கீழே பார்த்துக் கொண்டு) இல்லமா நீ வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்ட வாழ வேண்டிய வயசுல, ஒரு நல்ல புருஷன் எப்படி இருப்பாங்கன்னு உனக்கு தெரியாது, நல்ல சேலை கட்டினது கிடையாது, நீ சிரிச்சிக்கூட நான் அவ்வளவா பார்த்தது கிடையாது, ஒரு பொண்ணுக்கு யாரு என்னதான் செஞ்சாலும் அவன் புருஷன் செஞ்சா அந்த சந்தோஷமே வேற, நான் உனக்கு புள்ளையா இந்த ஜென்மத்துல என் கடமையை செய்றேன், அடுத்த ஜென்மத்துல புருஷனா ஓக்கே”

அவனை அப்படியே உச்சி மொகந்து முத்தம் கொடுத்த அவனுடைய அம்மா


“யப்பா என் புள்ள எப்படி பேசுது பாரேன், ராமு உங்கப்பா பத்தியெல்லாம் எனக்கு எந்த கோபமும் கிடையாது, ஏன்னா (ராமுவின் கண்ணத்தை ஆசையாக கிள்ளி) இந்த வைரம் கடைக்க காரணமா இருந்தது அவர்தான். உன்னவிட எனக்கு வேறு சந்தோஷமே வேண்டாம், உன்ன குழந்தையில் பார்த்துக் கொண்டே பல நாள் சாப்பிடாம இருந்து இருக்கேன், அதானால எனக்கு அடுத்த ஜென்மத்திலும் ராமு வைரம் மகனா தான் வேண்டும்”.

ராமு ரயிலில் எல்லொரும் இருப்பதை மறந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

“அம்மா எதுக்கு இந்த ரத்தக்காற்று நாட்டைவிட்டு வர மறுக்குற, பிறந்த இடத்தை விட்டு வரபிடிக்லையா, இல்ல உன் புருஷன் வருவாருனா,...... உண்மையை சொல்”

“இரண்டும் தான்”

ராமுவின் கிராமத்தில் ரயில் நின்றது. ராமு குற்ற உணர்ச்சியுடன் இறங்கினான், எங்க போவது, யாரை பார்ப்பது ஒன்றும் புரியவில்லை. ஆர்மி ஆட்கள் தடுத்தார்கள், விவரத்தை சொன்னதும் சோதனை செய்து அனுப்பினார்கள். ஆஸ்பிடலுக்கு போகலாம் என்று சென்றான்.
மருத்துவமனை, வழியெங்கிலும் மக்கள் அழுதுக் கொண்டு இருந்தனர், தம்பிகள், தங்கைகள், தகப்பன்கள், அம்மாக்கள் என்று பல பேர் அடிப்பட்டு இருந்தனர். ராமுக்கு அந்த சத்தம், வாசனை, அழுகுரல் அனைத்து மயக்கத்தை உண்டு பண்ணியது, சமாளித்துக் கொண்டு நேராக பிணவறைக்கு சென்றான், அங்கேயும் மக்கள் இன்னும் சத்தமாக அடித்துக் கொண்டு அழுதார்கள். வரிசையாக பிணங்கள், எல்லாம் முகம் சிதைந்த நிலையில் இருக்கும் பிணங்கள். ராமு ஒவ்வொன்றாக போய் கிட்ட பார்த்தான், கையில்லாமல், இடுப்பில்லாமல், தலையில்லாமல், சிதைந்த நிலையில் இருந்தது.

அய்யோ கடவுளே
எது என்னுடைய அம்மா,
இதுவா,
இல்ல இதுவா,
ஆம் இதான் இதேதான்,
அதே நிறம்,
ஆனால் காலில் மெட்டி இருக்கே,
இது இல்லை.

“ஆண்டவா எது என்னுடைய அம்மா”.

ராமுவை போல பல பேர் அடையாளம் தெரியாமல் குத்துமதிப்பாக எல்லா பிணங்களையும் பார்த்து அழுதனர். இரண்டு மணி நேரம் ஆனது அடையாளம் தெரியாத எல்லா பிணங்களையும் அனாதை பிணங்கள் என்று அரசாங்கமே அடக்கம் செய்துக் கொண்டு இருந்தது. அந்த இடத்தில் ராமுவும் ஒரு பிணம் போல நின்றுக்கொண்டு இருந்தான்.

அப்போ அங்கே நின்ற போலீஸிடம் ஒரு பெரியவர்

“சார் என்னுடைய பையன் சார், பொதைக்கறத்துக்கு கொஞ்ச எடம் கோடுக்கோ” என்றார்.

“இந்த நாட்டுல இன்னும் நிறைய இடம் இருக்கு பெரியவரே” போலீஸ்.

“ஆனா வாழறதுக்கு தான் மக்கள் இல்லை” என்றார் பெரியவர் கண்ணீருடன் தன் மகனின் சடலத்தை அனைத்துக் கொண்டு.

ராமு ரயிலில் பயணம் செய்துக் கொண்டு இருந்தான்.

“அம்மா என்ன மன்னிச்சீடு நான் பாவி, நான் பாவி, உன்ன ஒழுங்கா நான் பாத்துக்கள, உன்ன சாவடீச்சுட்ன், என் மன்னீச்சுடுமா, மன்னிப்பியா ” என்று புலப்பிக் கொண்டு மேலே பார்த்தான், அவனின் செல்லில் கால் வந்தது. அதை ஆன் செய்து காதில் வைத்தான்.

“மாப்பிள நான் மாமா பேசுறேன், உங்களுக்கு பெண் குழந்தை பொறந்துருக்கு சுகப்பிறசவ...........................................”

ரங்கராஜன்
26-10-2008, 03:25 AM
நன்றி கிஷோர்

கதையை புரியவில்லை என்று உண்மையை கூறியதற்க்கு முதலில் நன்றி, ஒரு வித்தியாசமான முயற்சி செய்தேன். இப்பொழுது அந்த கதையை இன்னும் எளிமைப்படுத்தி உள்ளேன், இந்த கதையை படித்த நண்பர்கள் அனைவரும் தயவுக்கூர்ந்து மறுமுறை படித்துவிட்டு விமர்சிக்க வேண்டுகிறேன்.

சிவா.ஜி
26-10-2008, 07:36 AM
இறந்த அம்மா..ராமுவின் மகளாக மீண்டும் ஜனித்திருக்கிறாள். மகனாய் இருந்து தன் தாயை நல்லபடியாய்க் காப்பாற்றும் சூழலமையாத ராமபத்திரன் மகளைச் சீராட்டி அந்த மனக்குறையைக் களையட்டும்.

மூர்த்தி, உங்கள் முயற்சி வரவேற்கப்படவேண்டியது. ஆனால் கதையின் ஆரம்பம் சற்றுக் குழப்பமாக இருக்கிறது. சவுதியின் சூழல் நீங்கள் அறிந்திருக்கவில்லையென நினைக்கிறேன். ஐ.டி கம்பெனி ஆரம்பித்தது ஷேக் என்று சொல்லிவிட்டு, ஷா டெக்னாலஜி என்றால், அது இந்தியரா என எண்ண வைக்கிறது. மேலும், ஜான்சியின் அப்பா அங்கேயே இருக்கிறாரா..அல்லது இந்தியாவிலிருந்து அங்கே வருகிறாரா என்பது தெளிவாக இல்லை.

ஆனால் அந்த மருத்துவமனை காட்சியில் விவரிப்பும், அம்மாவுடனான உரையாடல்களும் நன்றாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துகள் மூர்த்தி.

Keelai Naadaan
26-10-2008, 08:08 AM
நல்ல அனுபவம் மிக்க எழுத்தாளர்களைப் போல் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
இன்னும் கொஞ்சம் எளிமையாய் தந்திருக்கலாம்.
"அடுத்த ஜென்மத்தில நான் உன்ன கல்யாணம் செய்துக்கனும்" என்று மகன் கூறுவது போல் வரும் வார்த்தைகள் கதைக்கு சரியாகப்பட்டாலும் ரசிக்க முடியவில்லை.

ரங்கராஜன்
26-10-2008, 08:32 AM
நன்றி சிவா

1. கதையின்படி நாடுகளுக்குள் இருக்கும் வேறுபாடுகள், சுகபோகங்களை உணர்த்துவதே முதல் பத்தி. பின்னாடியில் வரும் இலங்கையில் இருக்கும் அம்மா-மகன் உரையாடளும், முன் பத்தியில் வரும் அப்பா-மகள் உரையாடளையும் சற்று கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் இரு குடும்பங்களின் வாழ்க்கை தரம், கேளிக்கைகள், அத்தியாவச தேவைகள், ஆசைகள் புலப்படும்.

2. ஷேக்கின் கம்பனி பெயர் "ஷா டெக்னாலஜி" என்பதை தப்பாக வைத்து விட்டேன், நீங்கள் சொன்னது உண்மைதான், நான் தமிழ்நாட்டையே தாண்டாதவன், சவுதி பத்தி தெரியாது, ஒரு கற்பனையில் எழுதிவிட்டேன்.

3. ஜான்சியின் அப்பா அங்கேயே தான், சவூதியில் இருக்கார் அதனால் தான் ராமபத்திரன் தன் நிறைமாத கர்ப்பினியை அவளுடைய குடும்பம் பார்த்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் விட்டு செல்கிறான். ஏன் சாயிந்திரம் வரேன் அப்பா சொன்னார், அவருக்கு எதாவது முக்கிய ஆபிஸ் வேலை இருந்து இருக்கும், தெரியவில்லை ராமபத்திரனை கேட்டால் தான் முழு விஷயமும் தெரியும்?

4. என்னுடைய சொந்த கருத்து, கதைகளை எளிமைப்படுத்தினால் சுவாரஸ்யம் போய்விடும் என்பது.
நீங்க என்ன சொல்லவருகிறீகள் என்று தெரியும், முதலில் கதை புரிந்தால் தானே சுவாரஸ்யத்திற்க்கு?, அதான, அதான் தந்திரமே அப்ப தான நீங்க புரியாம மறுபடி படிப்பிங்க

நன்றி

ரங்கராஜன்
26-10-2008, 08:43 AM
நல்ல அனுபவம் மிக்க எழுத்தாளர்களைப் போல் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
இன்னும் கொஞ்சம் எளிமையாய் தந்திருக்கலாம்.
"அடுத்த ஜென்மத்தில நான் உன்ன கல்யாணம் செய்துக்கனும்" என்று மகன் கூறுவது போல் வரும் வார்த்தைகள் கதைக்கு சரியாகப்பட்டாலும் ரசிக்க முடியவில்லை.

நன்றி, இந்த கதையை படிக்கும் வாசகர்கள் அனைவரும் அதில் வரும் அவர்களுக்கு பிடித்த காதபாத்திரத்தின் மனநிலையில் தான் இந்த கதை ரசிக்கிறார்கள். அம்மாவாக, ஜான்சியாக, ரயில் பயணியாக, ஷேக்காக, போலீஸ்காரனாக, பெரியவராக. நீங்கள் என்ன மனநிலையில் ரசித்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் உங்கள் மனநிலை கண்டிப்பாக ராமபத்திரனுடையது இல்லை என்று தெரிகிறது.

Narathar
26-10-2008, 11:06 AM
ஒரு கதாசிரியர் கதைக்களத்தை கற்பனையில் எழுதும்போது இவ்வாறான சறுக்கல்கள் வருவது இயற்க்கை...

ஆனானப்பட்ட மணிரத்தினமே தனது ஈழக்கதையான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஈழத்தின் களத்தை காட்ட தடுமாறினார்.

தமிழ் நாட்டை தாண்டாத நீங்கள் ஈழத்தை வடித்திருப்பது ஈழத்திலிருக்கும் எனக்கு கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது...

ஆனால் நீங்கள் சொல்லவந்த கதையின் கரு மிக அருமை.

வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
26-10-2008, 11:17 AM
நாரதரே
உங்கள் கருத்துக்கு நன்றி, உங்களை நெருடவைத்தது எது என்று விளக்கினால், அடுத்த முறை அந்த தவறு நடக்காமல் பார்த்துக்கொள்வேன்

நன்றி

Narathar
26-10-2008, 11:25 AM
ஈழத்தமிழர்களது மொழி வழக்கு....

ரங்கராஜன்
26-10-2008, 11:39 AM
நினைத்தேன் நண்பரே, உண்மை தான் என்னையும் நெருடிக் கொண்டு இருக்கும் விஷயம் தான், நான் முதலில் மன்ற நண்பர்களை மொழி (இலங்கைத்தமிழ்) உதவிக்கு அழைக்கலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் யாருடனும் நன்றாக பழக்கம் ஏற்படவில்லை, அதுவும் இல்லாமல் யார் யார் இலங்கைச் சகோதரர்கள் என்று தெரியவில்லை, நண்பரே.............மன்னியுங்கள்

பார்த்திபன்
26-10-2008, 01:01 PM
கதை படித்தேன்...பாராட்டுக்கள் மூர்த்தி..



இலங்கைத்தமிழ் பேச பழகிக்கொள்வது ஒன்றும் பெரிய விடயம் அல்ல ....

இங்குள்ள நண்பர்கள் மூலமாக அது தானே வந்துவிடும்.

தொடர்ந்து எழுதுங்கள்......:icon_b:

shibly591
26-10-2008, 04:35 PM
கதையுடன் எனக்கு சில உடன்பாடின்மைகள் இருக்கின்றன..

இருந்தும் கருவும் அதை புதுமையாகச்சொன்ன விதமும் கைதட்ட வைக்கிறது நண்பரே

வாழ்த்துக்கள்

ரங்கராஜன்
26-10-2008, 05:08 PM
[QUOTE=shibly591;388058]கதையுடன் எனக்கு சில உடன்பாடின்மைகள் இருக்கின்றன..

எனக்கும் தான் நண்பரே

Narathar
26-10-2008, 05:42 PM
நினைத்தேன் நண்பரே, உண்மை தான் என்னையும் நெருடிக் கொண்டு இருக்கும் விஷயம் தான், நான் முதலில் மன்ற நண்பர்களை மொழி (இலங்கைத்தமிழ்) உதவிக்கு அழைக்கலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் யாருடனும் நன்றாக பழக்கம் ஏற்படவில்லை, அதுவும் இல்லாமல் யார் யார் இலங்கைச் சகோதரர்கள் என்று தெரியவில்லை, நண்பரே.............மன்னியுங்கள்

இதில் மன்னிப்பெல்லாம் எதற்கு?

ஈழத்தமிழ் வழக்கென்பது சற்று வித்தியாசமானது... இலங்கையை சேர்ந்த அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்களே தெனாலியில் அதை சரியாக சொல்லிக்கொடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதில் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம்? :)

அமரன்
06-01-2009, 05:00 PM
நல்ல முயற்சி. முதிர்ந்த கதாசிரியராக உங்களை பரிணமிக்க வைத்துள்ளது.

திறமையை விற்பவர்கள் என்பதின் ஒருபக்க ஏளனம் மறுபக்கத்தையும் நினைக்க வைத்தது.

கொடிய போரின் முடிவை, விளைவை பாதிக்கப்பட்ட ஒருவரின் வாயிலிருந்து வரும் ஒரு சொல்லில் வெளிபடுத்தி இருப்பது பிரமிக்க வைக்கிறது.

செண்டிமெண்ட் டச் பழக்கப்பட்ட பால் என்றால் புளிக்கவில்லை.
இந்தக் கதை தோற்றும் வலியை விட பாரிய வலியைத் தரும் நிலையும் ஈழத்தாய் மக்களுக்குண்டு.

அண்மையிம் என்னைத் தூக்கிவளர்த்த பாட்டி முறையானவர் காலமானபோது அவரின் கடைசிபயணத்தை, அந்த முகத்தை காணக்கிடைக்கவில்லை. அவருடைய இருமகன்களுக்கும் அதேநிலை. சோறூட்டிய தாய்க்கு அரிசி போடும் அந்த வாய்ப்பை இழந்து அவர்கள் துடித்தது. அப்போது என் கண்கள் வடித்தது.

மீண்டும் ஒருதடவை உருக வைத்து விட்டீர்கள் தக்ஸ்.

v.pitchumani
07-01-2009, 11:04 AM
கண் கலங்க வைத்து விட்டீர்கள் . என்று விடியும் , சுத்தமான காற்று விசும் .......... பிச்சுமணி

ரங்கராஜன்
07-01-2009, 02:54 PM
நன்றி அமரன் மற்றும் பிச்சு
நெடுநாள் கழித்து கிடைத்த ஆறுதலான பாராட்டுக்கள், நெஞ்சம் நெகிழ்ந்தேன். நன்றி

MURALINITHISH
08-01-2009, 07:56 AM
அவனோ அழுதான் தாய் இல்லையெனா
தாயோ அவன் வீட்டில் விழுந்தாள் சேய் என
நல்ல கதை

அமரன்
23-09-2009, 09:34 AM
அண்மைக்காலமாக இந்தக்கதை அடிக்கடி நினைவில் வருகிறது..

மஞ்சுபாஷிணி
23-09-2009, 11:05 AM
கதையை படிக்கும்போதே கண்ணீர் மறைத்தது. மேற்கொண்டு படிக்கவிடாமல் தடுத்தது. தக்ஸ் உண்மையின் தாக்கம் இந்த கதையில் அப்படியே இருக்குப்பா... தன் தாயை காணாது அரற்றும் பிள்ளைக்கு அதே பிள்ளைக்கு தான் மகளாய் போய் பிறந்து அந்த மகனை ஆசுவசப்படுத்தட்டும். மிக மிக அருமை தக்ஸ் கதை...