PDA

View Full Version : எது காதல்?



ரங்கராஜன்
24-10-2008, 09:32 AM
எது காதல்?


தமிழ்நாட்டில் தண்ணி லாரிகளுக்கு அப்புறம் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது பொறியியல் கல்லூரிகள். ஒரு மூன்று ஏக்கர் நிலம், அரசியல் செல்வாக்கு, ஆசிரியர்களாக இதே போல எதோ ஒரு கல்லூரியில் படித்த முன்னால் மாணவர்கள், தப்பாக சம்பாதிக்கப்பட்ட கடந்து காலத்து பணம். இன்னைய தேதிக்கு இந்த தகுதிகள் போதும் ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க. அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு கல்லூரியின் மூன்றாம் ஆண்டு வகுப்பில், உணவு இடைவேளையின் பொழுது

மணி : 1.00

"ஏய் விடுடீ அவனை பத்திதான் முன்னாடியே தெரியும்ல, அப்புறம் என்னதுக்கு அழுவுற, அதுக்குதான் அப்பவே சென்னேன் பாபுவை காதலிக்க வேண்டாம்ன்னு.." என்றாள் அழுதுக் கொண்டு இருந்த ரதியை பார்த்து அவள் தோழி.

"ஏய் நீ வேற சும்மா இருடீ, பாவம் அவளே அழுதுன்னு இருக்கா" என்றாள் மற்றொருவள்.

தேம்பிக் கொண்டு ரதி பேசினாள் "இல்லடீ நான் ஒன்னுமே பண்ணலடீ, (மூக்கை துடைத்துக் கொண்டு) அந்த ரவியே வந்து வந்து என்கிட்ட பேசறான் நான் என்ன செய்ய முடியும், அத பாபு பார்த்துட்டான், நான் தான் ரவிக்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசறேன்னு திட்ரான்" (அழுகை அதிகமாகிறது)

"நான் சொல்லடீ இந்த ஆம்பளங்களே இப்படிதான், இவள் எவ்வுளவு உண்மையா இருக்கா, ஆனால் ஆம்பளங்களே ஸஸ்பிஷியஸ் அண்டு ஈகோயிஸ்ட்டிக் இடியட்ஸ்" என்றாள் தோழி.

"ஷட் அஃப் ரம்யா, அவளே அழுதுன்னு இருக்கா, நீ உன் சொந்த விருப்பு வெறுப்பெல்லாம் இப்ப காட்டாதே" என்றாள் இன்னொருத்தி.

"எனக்கென்னடீ வந்தது, நான் பட்ட கஷ்டத்தை இவள் படக்கூடாதுன்னு சொல்றேன், சந்தேகப்பார்வை உள்ளவன் கூட வாழவே முடியாது, எல்லா ஆம்பளங்களும் ஒன்னு தான்" என்று கூறிவிட்டு கோபமாக எழுந்து போனாள்.

"ஏய் ரதி இங்க பார், அவள் சொல்றதை எல்லாம் போட்டு குழப்பிக்காதே, அவள் அவளுடைய ஆளு ஏமாத்தியதை வச்சி பேசறா, நீ அதையெல்லாம் காதில் கேட்டுக்காதே, பாபுவுக்கு புரியவை"

"இல்ல மலர், அவள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கு, இது முதல் முறை இல்லை, அவனுக்கு எப்பவுமே என்மேல் சந்தேகம் தான், நான் அவனை மறப்பது தான் நல்லதுன்னு நினைக்கிறேன்" (கண்னை துடைத்துக் கொண்டாள்)

"என்னடீ சொல்ற, கொஞ்ச பொறு........"

"இல்லடீ இவ்வளவு சண்டை நடந்து இருக்கு, அவன் பாரு ஜாலியா சினிமாவுக்கு போய்டான் நான் இங்கே அழுதுன்னு இருக்கேன், இனிமேல் நான் அழ மாட்டேன், அவன் எனக்கு வேண்டாம்" என்றாள் முடிவாக.

பாபு வகுப்பறைக்குள் நுழைந்தான், உடல் முழுக்க வியர்த்து இருந்தது, இவனை பார்த்ததும் ரதி முகத்தில் அடித்தற்ப் போல எழுந்து வெளியே சென்றாள், பின்னாடியே மலரும் சென்றாள்.

"ரதி ரதி நான் சொல்ற......................" என்று பாபு சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே அவள் வகுப்பை விட்டு வெளியே சென்று விட்டாள்.

இப்பொழுது வகுப்பறையில் பாபு மட்டும் தனியாக தன்னுடைய பெஞ்சில் தலையை சாய்த்தான். ஞாபகங்கள் பின் நோக்கி சென்றன................

இன்று காலை : 10.00

"ஏண்டீ அவனே சிரிச்சாலும், நீ எதுக்கு பதிலுக்கு சிரிக்குற அவன் சரியான பொம்பள பொறுக்கி" என்றான் பாபு.

"ஆமா உலகத்துல நீ ஒருத்தன் தான் நல்லவன், உனக்கு"

பாபுவுக்கு கோபம் அதிகமாகியது "நீ எவன் கூட வேண்டுமானாலும் போ, அ................" என்று பேசிக் கொண்டு இருக்கும் பொழுது அவனின் நண்பன் வந்தான், வந்து

"மச்சா படத்துக்கு டையம் ஆச்சிடா, சாரு கிளாஸ்க்கு வந்துருவாரு, சீக்கரம் வாடா எதாவது முக்கியமான விஷயமா பேசிறீங்களா?"

"இல்ல டா, இவகிட்ட என்ன முக்கியமான விஷயம், வா போலாம்" என்று பாபு கிளம்பினான், ரதிக்கு சுருக்கென்று இருந்தது.

இரு சக்கர வாகனத்தில் இருவரும் பேசிக் கொண்டு போனார்கள்

"என்ன மச்சா செம சண்ட போல"

"இல்ல டா, அந்த ரவி பையன் என்கிட்ட சவால் விட்டு இருக்கான்டா, ரதியை உஸார் பண்றேன்னு, அவளுடைய நல்லதுக்கு சொன்னா இந்த தத்தி அது தெரியாம அவன்கூட சிரிச்சு சிரிச்சு பேசுது" என்றான் பாபு எரிச்சலாக.

"அட அவன் கடக்குறான் கருங்குரங்கு ஜீன்ல பொறந்த பையன், நானாக்காண்டீ அவனுடைய அப்பனா இருந்தேன் இவன அட்ச்செ கொன்னுட்டு இருப்பேன்" என்றான் அவன் நண்பன்.

சினிமா தியேட்டரை சேர்ந்தனர். படம் ஆரம்பிக்க பத்து நிமிஷம் இருந்தது. வெளியில் டீக்கடைக்கு சென்று டீ சொல்லி விட்டு அமர்ந்தனர். டீக்கடைக்கு எதிரில் கொஞ்சம் காலி இடம். செடிகள், ப்ளாஸ்டிக், குப்பைகள் எல்லாம் இருந்தது. அதை நோக்கி ஒரு தள்ளு வண்டி வந்தது. அந்த தள்ளு வண்டியில் அமர்ந்து இருந்தது ஒரு ஆண் வயதானவர், காதுகள் மடங்கி, மூக்கு மழிந்து, முடிக் கொட்டி, உடல் சிறுத்து, விரல்கள் சுருங்கி, பற்கள் உதடுகள் கறுத்து, கண்கள் மங்கி இருந்தார். தொழுநோய் முற்றி இருந்தது. அவரை வண்டியில் வைத்து தள்ளி கொண்டு வந்த பெண்ணுக்கு நாற்பது வயது இருக்கும் அவள் எந்த வியாதியும் பாதிக்காமல் இருந்தாள், ஆனால் அழுக்காக இருந்தாள் முதுகில் கோணிப்பை சுமந்து இருந்தாள். வண்டி அந்த குப்பை ராஜ்யத்தில் வந்து நின்றது.

டீ வந்தது, பாபுவும் அவன் நண்பனும் வாங்கி குடித்தார்கள். இருவரும் இந்த தம்பதியை பார்த்துக் கொண்டு இருந்தானர். அந்த பெண் வண்டியை ஓரத்தில் நிறுத்திவிட்டு, ப்ளாஸ்டிக் பொறுக்க அந்த குப்பை ராஜ்யத்திற்க்குள் முதுகில் மூட்டையுடன் நுழைந்தாள்.

"டேய் மச்சா பார்த்தியா தலைவருக்கு வாழ்வ, ஜாலியா உக்காந்துனே ஊர் சுத்துறார்"

பாபு உடனே "நாயே எத எத கிண்டல் பண்றதுன்னு அறிவில்ல" என்றான் கோபமாக.

"பின்ன என்ன, பாவம் அந்த பொம்பள இவனை வச்சி தள்ளினு இருக்கு நான காண்டீ அந்த பொம்பளயா இருந்தன்னு வச்சிக்கோ அப்பிடியே இவனை எதாவது ஓடற பஸ் அடியில தள்ளி சாவடிச்சிட்டு இருப்பேன்".

"நீ யாரதான் உயிரோட விட போறியோ" என்று பாபு சிரித்தான்.

அந்த முதியவர் தீடீர் என்று அந்த வண்டியை விட்டு அவசரமாக இறங்க முயன்றார், கீழே விழுந்தார், அப்படியே தேய்துக் கொண்டு நொண்டி நொண்டி அவரின் மனைவி இருந்த இடத்தை நோக்கி நடந்தார். பாபு அதை பார்த்தான், அங்கு குனிந்து பொறுக்கிக் கொண்டு இருந்த பொம்பளையை காணவில்லை. அந்த முதியவர் கொஞ்ச தூரம் சென்று தரையில் உக்கார்ந்து கத்த ஆரம்பித்தார். அப்பொழுது தான் அனைவரும் அந்த இடத்தை நோக்கி ஓடினார்கள், பாபுவும் அவன் நண்பனும் முதலில் ஒடினார்கள். அந்த முதியவர்

"எப்ப்பா காப்பா....து..பா, எப்பாப் ப்பாப்துப்பா" என்றார் அவரால் பேச முடியவில்லை, நாக்கும் பாதித்து இருந்தது.

பாபு பதற்றத்துடன் "என்னங்க சொல்றீங்க ஒன்னு புரியலை, பதட்டபடாம சொல்லுங்க"

"எப்ப்பா காப்பா....து..பா, எப்பாப் ப்பாப்துப்பா"

பாபுவின் நண்பன் "கிழிச்சிது போ, யோவ் எங்களுக்கு ஜப்பான் மொழியெல்லாம் தெரியாது தமிழ்ல பேசு"

உடனே பெரியவர் பக்கத்தில் இருந்த புதரை விளக்கினார். அங்கே செடிகளுக்கு நடுவில் அவரின் மனைவி கீழே குப்புற விழுந்து இருந்தாள்.

கூட்டத்தினர் "ச்ச்சே ச்ச்ச்ச்ச்ச்ச்ச்" என்றார்களே தவிர யாரும் தூக்கவில்லை.

"மச்சா நம்ப எதாவது செய்யுனும்டா" என்றான் பாபு.

"ஆமாடா பெல் அடிச்சிடாண்டா வா சினிமாக்கு போலாம்" பாபுவின் நண்பன்.

"செருப்பால அடி நாயே, மனிஷானாட நீ, நீ போ நான் வரலை"

"சரிடா" என்று அவன் சிரித்துக் கொண்டு சினிமாவை பார்க்க ஓடினான்.

யாரும் தூக்காததை பார்த்த முதியவர் கூட்டத்தினரை கேவலமாக ஒரு பார்வை பார்த்து அவரே தன்னுடைய அரைக்குறை கையுடன் தன் மனைவியை திருப்பினார். அவர் மனைவி கஷ்டப்பட்டு மூச்சு விட்டு கொண்டு இருந்தாள், ஒரு பெரிய உடைந்த பீங்கா ஜாடி அவள் வயிற்றை கிழித்து குத்திக் கொண்டு இருந்ததை முதியவர் பார்த்தார்.

கூட்டத்தினர் இந்த முறை சற்று சத்தமாக "ச்ச்சே ச்ச்ச்ச்ச்ச்ச்ச்" என்றார்கள் நின்ற இடத்தில் நகராமல். முதியவர் அலறியபடி

"ஐய்யோ அஞ்சச்ச்...லா அஞ்சச்ச்...ல" என்று அவள் வயிற்றில் இருந்த அந்த உடைந்த பீங்கா ஜாடியை தன்னுடைய விரல்கள் இல்லாத கைகளால் எடுத்தார் அவர் கையையும் ஜாடி கிழித்தது, மனைவியின் வயிற்றில் நல்ல ஆழமாக வெட்டி இருந்தது, ரத்தம் கொஞ்சமாக வந்தது ஏழை உடம்பு தானே அவ்வுளவு வருவதே அதிசயம். கூட்டத்தை விளக்கிக் கொண்டு வந்த ஒரு ஆட்டோக்காரன் அந்த இருவரையும் தூக்கி ஆட்டோவில் அமர்த்தினான். இதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த பாபு நேராக ஆட்டோகாரனிடம்

"இந்தங்க காசு நல்ல ஆஸ்பிடல்க்கு அழைச்சிட்டு போங்க" என்று காசை நீட்டினான்.

"இவ்வுளவு நேரம் வேடிக்கை பார்த்தல்ல, போ அடுத்து எங்கனா சாவு விழும் போய் வேடிக்கை பார்" என்றான் கோபமாக.

பாபுக்கு அசிங்கத்தால் அடித்தது போல இருந்தது, பின் சீட்டில் அந்த இருவரையும் பார்த்தான். முதியவர் தன்னுடைய விரல்கள் இல்லாத கைகளால் மனைவியின் வயிற்றில் ரத்தம் கசியும் இடத்தை மூடிக்கொண்டு இருந்தார். அவர் மனைவி அரைகுறை நினைவில் தன்னுடைய கணவனின் கையில் கிழிந்த இடத்தில் இருந்து வரும் ரத்தத்தை தன்னுடைய ரத்தம் தோய்ந்த புடவையால் துடைத்துக் கொண்டு இருந்தாள். பாபுவுக்கு மனது கனத்தது.

"பெரியவரே நீங்களாவது இந்த காசை வாங்கி கொங்க" என்றான் கண்ணீர் மல்க.

அதற்க்கு பெரியவர் " எப்ப்பா காப்பா....து..பா, எப்பாப் ப்பாப்துப்பா" என்றார்.

ஆட்டோ காசை வாங்கிக் கொள்ளாமல் விரைந்தது. பாபு கல்லூரியை நோக்கி நடந்தான்.

மணி : 1:20
பக்கத்தில் யாரோ பேசும் சத்தம் கேட்டு பெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டு இருந்த பாபு எழுந்தான்.

"ரவி என்ன கொஞ்ச வீட்டுல ட்ராப் பண்றீயா, ப்ளீஸ்"

"ரதி ப்ளீஸ்ன்னு கேட்டு என்னை கொல்லாதே, இட்ஸ் மை பிளஸர்"

எது காதல்?


********************************************************முற்றும்*********************************

பாரதி
24-10-2008, 11:15 AM
எது மனிதம் என்பதை தானி ஓட்டுனரின் பேச்சு செம்மையாக கூறுகிறது.

எதையும் எதிர்பார்க்காத அன்பைப்போல் வேறொன்றும் இல்லை...

பாராட்டு மூர்த்தி..(தினம் ஒரு கதை வெளியிடும் உங்களைக்கண்டால் வியப்பாக இருக்கிறது நண்பரே.)

அமரன்
24-10-2008, 03:32 PM
காலகண்ணாடியை மாத்தி மாத்தி வைத்துக் காட்சிகளை காட்டிவிட்டீர்கள். பாரதி அண்ணா சொன்னது போல் ஆட்டோ ஓட்டுனர் மனிதாபிமானம் சொன்னார். குருதியில் குளித்தபடி ஒருவரை ஒருவர் நினைத்து பரிதவித்தபடி பயணப்படுவோர் காதலைச் சொன்னார்கள். நட்பின் கற்பை களங்கப் படுத்தும் வதையை ரவி செய்தான். காதலின் வேரான நம்பிக்கையில் பூக்கும் சேந்தேகப் பிரிவை பாபு சொன்னான். இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னாலும் அத்தனையும் மனதில் பதிந்தாலும் ஆட்டோ அங்கத்துவர்கள் அனைவரும் முதன்மை இடம் பிடிக்கின்றனர். நீங்களும் கதையுலகில் முதன்மையாக வருவீர்கள் என்பதுக்கு கட்டியம் கூறிக்கொண்டே போகின்றீர்கள்.

மதி
24-10-2008, 04:25 PM
காதலை தெள்ளத் தெளிவாக புரிய வைத்துவிட்டீர்கள்...
இரண்டு வேறுபட்ட இடங்கள்.. வெவ்வேறு நிலையில் உள்ள மனிதர்கள்.. மனத்தின் அழுக்குகள்... முகத்தில் அறைந்த மாதிரி..

பாராட்டுகள் மூர்த்தி... பாரதியண்ணா கேட்ட சந்தேகம் தான் எனக்கும். எப்படி தினமும் ஒரு கதையா எழுதறீங்க... அசாத்திய திறமை உங்களுக்கு

shibly591
24-10-2008, 05:18 PM
நல்ல கேள்வியுடன் அழகான கதை..

வாழ்த்துக்கள்

சிவா.ஜி
25-10-2008, 06:06 AM
அழுக்கு மனிதர்களைச் சுமந்த ஆட்டோ ஓட்டுநர் உணர்த்திய மனிதாபிமானம், எது நடந்தாலும் எனக்கென்ன என தன் வழி போகும் பாபுவின் நன்பன் காட்டிய அலட்சியப் போக்கு, நல்லவன் யார் கெட்டவன் யார் எனத் தெரிந்துகொள்ளாமல், சர்க்கரை வார்த்தைகளில் தன்னை இழக்கும் இன்றைய இளம்பெண்களின் பிரதிநிதியாய் ரதி....என அனைத்து பாத்திரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கதை சொன்ன விதமும் மிக அருமை. பாராட்டுக்கள் மூர்த்தி.

பாண்டியன்
25-10-2008, 07:52 AM
இது கதையா அல்லது உண்மையா கண்கள் ஏதோ செய்கிறதே?

ரங்கராஜன்
26-10-2008, 03:33 AM
இது கதையா அல்லது உண்மையா கண்கள் ஏதோ செய்கிறதே?


திரு பாண்டியன் அவர்களே

எல்லா கதையிலும் கொஞ்சம் உண்மை இருக்கும், அதே போல எல்லா உண்மையிலும் கொஞ்ச கதை இருக்கும், அது எது என்று தெரிந்தால் சுவாரஸ்யம் போய்விடும். அதானால் வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன், நீங்கள் உண்மை என்றால் உண்மை?, பொய் என்றால் பொய்?

மாதவர்
26-10-2008, 04:21 AM
திரு பாண்டியன் அவர்களே

எல்லா கதையிலும் கொஞ்சம் உண்மை இருக்கும், அதே போல எல்லா உண்மையிலும் கொஞ்ச கதை இருக்கும், அத எது என்று தெரிந்தால் சுவாரஸ்யம் போய்விடும். அதானால் வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன், நீங்கள் உண்மை என்றால் உண்மை?, பொய் என்றால் பொய்?
நல்ல விளக்கம்

Keelai Naadaan
26-10-2008, 06:12 AM
கதை அருமையாய் சொல்லப்பட்டிருக்கிறது.
உரையாடல்கள் யதார்த்தமாயிருக்கிறது.
தொழுநோயாளி பேசமுடியாமல் பேசுவது "எப்ப்பா காப்பா....து..பா, எப்பாப் ப்பாப்துப்பா" அருமை.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் மூர்த்தி.

lolluvathiyar
26-10-2008, 07:32 AM
கல்லூரி காதல் அதாவது இளம் வயது காதல் அல்லது நட்பு இரன்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. நட்பு என்பது காதலுக்கு முன்பு இருக்கும் ஒரே படி. இந்த காதலில் பொசசிவ்னஸ் தான் அதிகமாக இருக்கும் இந்த பொசசிவ்னஸ் தீவிர காதலாக்கும் அல்லது காதலை முறிக்கும் நார்மலாக இருக்க விடாது.
இதை மட்டும் சொன்னதோடு நிற்காமல் பரம ஏழையின் காதல் + மனிதாபிமானத்தை காட்டி எழுதிய விதம் அருமை. வந்தவுடன் நல்ல கதை தந்த உங்களை பாராட்டுகிறேன்

MURALINITHISH
08-01-2009, 08:03 AM
ஒரே கதையில் காதலும் மனிதாபிமானமும் கலந்து கொடுத்து வீட்டிர்கள் எது காதல் அந்த முதியவர்கள் வைத்திருப்பது காதல் இளவயது காதல் முதிர்ச்சி இல்லாத காதல்

இளசு
24-01-2009, 06:13 PM
ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்றில்
மிக அழுக்கான பேச்சுநடை உள்ள இரு சென்னை ஏழைகளின்
உள்ள அழகைக் காட்டுவார்..

இங்கே தக்ஸ்..
அழுகிய சருமமும் அழகான அன்பும் உள்ள பெரியவர்
குப்பை அள்ளும் கையும், மாணிக்க மனமும் கொண்ட் அஞ்சலை
குறைந்த செல்வமும், நிறைந்த மனிதமும் உடைய தானி ஓட்டுனர்

Vs

மணி அடிக்கும்வரை மட்டும் இதை வேடிக்கைப்பார்த்த நண்பன்
ஆரம்பவேலிக்குள் இருக்கும் நாற்றங்காலில் நாட்டம் வைக்கும் பாபு
பகிர்தலுக்கும், பறிமுதலுக்கும் வித்தியாசம் புரியாத ரவி
தூய்மையான நறுமண தெள்ளிய சருமமும், குழம்பிய மனக்குட்டைகளுமாய் பெண்கள்..

இரு களங்களை கலக்கவிட்டு கதையும் சேதியும் கோர்த்த நேர்த்தி-
சபாஷ் தக்ஸ்..

வென்றுவிட்டீர்கள்.

samuthraselvam
18-03-2009, 04:01 AM
மனிதாபி மானமே இல்லாத சில பேருக்காவது புரிந்து இருக்கும். காதல் என்றால் அழகென்று நினைச்சிட்டு இருப்பவர்களுக்கு, அழகில்லை காதல் வயசானாலும் நோய் வந்தாலும் உண்மையாய் தாங்குவதே உண்மைக்காதல்ன்னு. சூப்பரா இருக்கு அண்ணா....

ஐரேனிபுரம் பால்ராசய்யா
18-03-2009, 08:49 AM
கதை இரண்டு காட்சிகளை மையப்படுத்துகிறது. ஒன்று பாபுவின் காதல் தொலைய தயாராகிறது. இரண்டாவது பணத்தை தந்துவிட்டால் மனிதாபிமானம் இருப்பதாய் உணரும் பாபுவின் எண்ணம் துரத்தியடிக்கப்படுகிறது. கதையின் உரையாடல்கள் உண்மைக்கு உரைகல்லாக இருப்பது பெருமைக்குரியது பாராட்டுக்கள்

பூமகள்
18-03-2009, 12:57 PM
தக்ஸ்...

சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.. ஒரு கதை எவ்வகையில் அமைய வேண்டுமென ஆணியடித்தார் போல் எனக்கு உணர வைத்த கதை...

என்னைப் போன்ற கதை எழுதும் மழலைகளுக்கு அமரன் அண்ணா, சிவா அண்ணா வரிசையில் உங்கள் பெயரும் முன்னோடிகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது..

கதை பற்றிய என் கருத்து...

பெரியண்ணா சொன்ன அத்தனையையும் வழிமொழிகிறேன்..

யப்பா.. ஒரு சிறுகதைக்குள் இத்தனை கதாப்பாத்திரங்கள்... இத்தனை சிந்தனை மாற்றங்கள்... அழகான காதல், அதை விட அழகான மனிதம் பேசும் கதை... வாய்ப்பே இல்லை...

பெரியண்ணா சொன்ன படி வென்று விட்டீர்கள்.. நீங்கள் இருக்க வேண்டிய இடம் விரைவில் அடைவீர்கள்..

இ-பணம் கொடுக்க ஆசை.. ஆனால்... கொடுத்து கொடுத்து நான் ஏழையாகிவிட்டேனே... பாருங்கள்.. என்னை விட உங்களுக்கு தான் அதிக பணம் இருக்கிறது... அதனால்...

பாராட்டுகள் வரும் ஆனா இ-பணம் வராது.. :D :D

மனம் நிறைந்த பாராட்டுகள் தக்ஸ்.... கலக்கிட்டீங்க... கீப் கோயிங்.. கீப் இட் அப்..

ரங்கராஜன்
18-03-2009, 01:13 PM
நன்றி பூமகள்

சிவா அண்ணா, அமரன், மாதிரி எல்லாம் இல்லை அவர்கள் எங்கோ இருக்கிறார்கள், நானும் உங்களை போல மழலை தான் (அப்பா.... வயசு குறைந்து விட்டது) என்னுடைய கதைகளை ஆரம்பத்தில் இருந்து படித்து வருகிறார்கள். என்னுடைய கதைகளின் படி படி முன்னேற்றத்திற்கு காரணமானவர்கள் அவர்கள். என்னுடைய சொதப்பல்கள், எழுத்து பிழைகளை பொறுத்துக் கொண்டு என் மீது நம்பிக்கை வைத்து என்னை வளர்த்தவர்கள், மதியை கேளுங்கள் கதை கதையாக சொல்வார்.................. ஹா ஹா ஒரு முறை சிவா அண்ணனுக்கு என்னுடைய கதையில் இருக்கும் எழுத்து பிழைகளை பார்த்து கோபமே வந்து விட்டது ஹா ஹா, அவருக்காவே பயந்து பயந்து எழுதுவேன்..................... இதை தன்னடக்கம் என்று நினைக்காதீர்கள், உண்மை அது தான்.

அப்புறம் பூமகள் உங்களின் வார்த்தைகள் பெரியண்ணாவின் வார்த்தைகளுக்கு நிகராக இருக்கிறது, நன்றிகள் நன்றிகள்,......... இன்னும் 32 கதைகள் உங்களின் விமர்சனத்திற்காக காத்து இருக்கிறது........... நன்றி