PDA

View Full Version : தாய்மாமன் சிறுகதைரங்கராஜன்
23-10-2008, 09:06 AM
தாய்மாமன்

இடம் - திருத்தணிக்கோயில்
நேரம் - மதியம் 1.00
காலம் - உள் நாக்கை காய வைக்கும் வெயில் காலம்

பக்தர்கள் கூட்டம் அலை மோதியது, சத்தம் காதை கிழித்தது ஒரு பக்கம் பக்தர்களின் அரோகரா சத்தம், மறுபக்கம் கடைகளில் முருகன் பக்திப்பாடல் என்ற பெயரில் சினிமா பாட்டின் மெட்டில் கானா உலகநாதன் முருகனை அழைத்துக் கொண்டு இருந்தார் ; ஆறு வீட்டில் எந்த வீட்டில் இருந்தாலும் முருகனின் காதில் இந்த பாடல் ஒலித்து உடனடியாக வர வேண்டும் என்று சத்தமாக பாடலை ஒலிபரப்பிக் கொண்டு இருந்தனர்.

நிறைய கடைகள், ஓட்டல்கள். ஒவ்வொரு ஓட்டலுக்கு வெளியிலும் ஒரு கறும்பலகை இருந்தது, (இங்கு அனைத்து விதமான விசேஷங்களுக்கும் சாப்பாடு ஆர்டர் எடுக்கப்படும், அசைவமும் கிடைக்கும்- அரோகரா) என்று எழுதி இருந்தது.

ஓவ்வொரு ஓட்டலின் வாசலிலும் ஒரு திடகாத்திரமான ஆள் நின்றுக் கொண்டு, அந்த வழியாக செல்லும் மக்களை "சார் எங்க ஓட்டலுக்கு வாங்க சார்" என்று குண்டு கட்டாக ஓட்டலுக்குள் தள்ளினான் அவன்.

பிரபுவும் அவன் மனைவியும் காரில் வந்து இறங்கினார்கள்.

"ஏங்க இப்பவாவது சொல்லுங்க, யார் வீட்டு விசேஷத்திற்கு போறோம், என்ன விசேஷத்திற்கு போறோம்?" என்று கேட்டாள் வனிதா.

"வனி... செருப்பை காரிலே கழட்டி வச்சுட்டு, பழம், மாலை, எல்லாம் எடுத்துக்கோ" என்று அவள் சொன்ன வார்த்தைகளை காதில் விழாதவன் போல சொன்னான் பிரபு.

"ம்ம்ம் . . ." என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு இறங்கினாள் வனிதா.

வெளியில் வெயில் மண்டையைப் பிளந்தது. இருவரும் கோயில் மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். மலைக்கோயில் என்பதால் தரை நெருப்பாக கொதித்தது. பிரபு சூடு தாங்காமல் ஓடிச் சென்று மண்டபத்தை அடைந்தான்.

அவன் மனைவியால் கையில் பழத்தட்டை வைத்துக் கொண்டு ஓட முடியவில்லை, அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது, அனைவருக்கும் முன்பாக ஓட அவளுக்கு வெட்கமாகவும் இருந்தது. தரையின் சூட்டையும் பொறுக்க முடியவில்லை அவளால். ஆனால் இன்னும் கொஞ்ச தூரத்தில் தான் மண்டபம்.

"வனி... வாம்மா, சீக்கிரம் ஓடி வந்துடு" என்று மண்டபத்தில் இருந்து பிரபு கத்தினான்.

வனிதாவுக்கு கோபமாக வந்தது. அவளால் ஒரு அடி கூட நகர முடியவில்லை, அதே சமயம் சூட்டில் நிற்கவும் முடியவில்லை. நரக வேதனை என்பது இதுதானோ என்று நினைத்தாள். மயக்கம் வருவது போல இருந்தது; திரும்பவும் காருயை நோக்கி நடக்கலாமா? என்று யோசித்தால். அதே தூரம் தான் மண்டபமும் எங்கு போவது என்று ஒரு நிமிடம் அவளுக்கு குழப்பமாக இருந்தது. வெயில், அதுவும் அந்த தரை சூட்டில் அவளுக்கு மயக்கம் வருது போல இருந்தது. மயக்கம் போட்டு விழுந்தாலும் இந்த சுடுதரையில்தானே விழ வேண்டும் என்று நினைத்து அப்படியே மயக்கத்தை சமாளித்து நின்றாள்.

இதைக் கவனித்த பிரபுவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, ஓடிப்போய் தூக்கிக் கொண்டு வரவும் முடியாது, பக்கத்தில் யாராவது செருப்பு போட்டு இருந்தால், அதையாவது வாங்கிப் போடலாம் என்று சுற்றி முற்றி பார்த்தான். யாரும் செருப்பு அணிந்தவர்கள் யாரும் அங்கு இல்லை; என்ன செய்வது? என்று பிரபு தவித்துக் கொண்டு இருக்கையில்,

வனிதாவை நோக்கி ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒருவன் கையில் குடத்துடன் சென்றான். அவன் குடத்தில் இருந்த தண்ணீரை வனிதாவின் பாதங்களில் ஊற்றினான். வனிதாவுக்கு அந்த சுகத்தை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. தினமும் பார்க்கும் தண்ணீர்தான், ஆனால் இன்றுதான் அதன் அருமை அவளுக்கு நன்றாக விளங்கியது. அவளை அவன் கைத்தாங்கலாக அழைத்து வந்து மண்டபத்தில் இருந்த ஒரு நாற்காலியில் அமரவைத்தான்.

பிரபு பக்கத்தில் வந்து அவளின் தோளைப்பிடித்து, "வனி... வனி... என்ன ஆச்சும்மா?" என்றான்.

"ஒண்ணும் இல்ல மச்சான், சூடுதாங்காம மயக்கம் வந்து இருக்கும்; கொஞ்சம் நேரம் நல்லா மூச்சுவிடுங்க, சரியாயிடும்" என்றான் வனிதாவை அழைத்து வந்தவன்.

வனிதாவும், பிரபுவும் நிமிர்ந்து அவனைப் பார்த்தனர். பிரபு அவனை பார்த்து கலங்கிய கண்களுடன் கட்டி அணைத்துக்கொண்டான்.

"எப்படி இருக்க ரங்கா?"

"எனக்கென்ன மச்சான்... நல்லா இருக்கேன். பாவம் அக்கா தான் வெயில்ல ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க, சாரிக்கா என்னால தானே உங்களுக்கு கஷ்டம்" என்றான் ரங்கா.

அப்போதுதான் வனிதா சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டு இருந்தாள்.

அவள் ரங்காவைப் பார்த்து "தாங்க்ஸ்" என்றாள்.

"என்னக்கா, நமக்குள் என்ன தாங்க்ஸ் எல்லாம்?" என்றான் உரிமையாக.

மூவரும் பேசிக்கொண்டு நடந்தனர் வழியெங்கும் பல பேர் தங்கள் குழந்தைகளுக்கு காது குத்தும் விழாவை கும்பல் கும்பலாக நடத்தி கொண்டு இருந்தனர். எங்கு பார்த்தாலும் குழந்தைகள் மொட்டை மண்டையுடன் தலையில் சந்தன ஹேல்மெட் போட்டபடி, வாயில் வாழைப்பழத்தை திணித்தபடி வீல் என்று கத்திக் கொண்டு இருந்தார்கள், ஆசாரி அந்த குழந்தைகளின் காதில் கம்பியால் குத்திக் கொண்டு இருந்தார். ரங்கா அதில் ஒரு கும்பலை அடைந்தான்.

அங்கு இருந்த கும்பல்களிலேயே அதிக கூட்டமாக இருந்தது ரங்காவின் குழந்தை காது குத்து விழா தான். வந்து இருந்தவர்கள் அனைவரும் முப்பது வயதிற்குள்தான் இருப்பார்கள். குழந்தையைத் தன் மடியில் வைத்திருந்தாள் ஒருத்தி, பார்க்க ரொம்ப அழகாக இருந்தாள்

"என்ன சச்சு ரொம்ப படுத்திட்டாளா? வாடி செல்லம், அப்பாகிட்ட வாடி" என்றான் ரங்கா.

"சீச்சீ... இல்ல சமத்தா இருந்தா, ஆனா உங்களை தான் தேடிட்டு இருந்தா" என்றாள்.

அதற்குள் அங்கு இருந்த ஐயர் "தாய்மாமன் வந்தாச்சு; ஆக வேண்டியதை சீக்கிரம் பாருங்கோ. குழந்தையை மொட்டை அடிச்சி அழைச்சிண்டு வாங்கோ" என்றார்.

இதை அனைத்தையும் வனிதா அதிசயமாக பார்த்துக் கொண்டு இருந்தாள். விழா நல்லபடியாக நடந்தது. பிரபுவின் மடியில் வைத்து குழந்தைக்கு காது குத்தினார்கள், அனைவரும் புறப்பட ஆரம்பித்தனர். பிரபுவும் ரங்காவை கொஞ்ச நேரம் தனியாக பேசினார்கள், இருவரும் ஒருவருக்கு ஒருவரை பார்த்து கண்ணீர் மல்க விடை பெற்றுக் கொண்டனர். கார் புறப்பட்டது.

"ஏங்க யாருங்க அந்த ரங்கா? இத்தனை வருஷமா பார்த்ததே இல்லையே!"

"ஏன் கேக்குற?"

"இல்ல.. திடீர்ன்னு உங்கள தாய் மாமன் இடத்துல உக்கார வைத்து. . . "

"ஏதோ அவனுக்கு தோனியிருக்கு, செஞ்சிருக்கான்" என்றான் பிரபு.

"இல்ல . . .இத முன்னாடியே சொல்லி இருந்தா, அந்த குழந்தைக்கு மோதிரம் எதாவது வாங்கி வந்து இருக்கலாம்ல?"

"எனக்கே இங்க வந்ததும்தான் தெரியும்."

"என்னங்க சொல்றீங்க நீங்க?.......... உங்களுக்கே தெரியாம எப்படி.................. எதோ மறைக்கிறீங்க, சொல்ல இஷ்டம் இல்லனா வேண்டாம்."

"சரி"

"என்ன சரி? அப்ப எதோ பெரிய விஷயம்னு நினைக்கிறேன், ரொம்ப பர்சனல்னா வேண்டாம்."

"சரி"

"இன்னொரு வாட்டி இதைப்பத்தி நான் கேட்டா என்ன 'ஏண்டீ நாயே'ன்னு கேளுங்க."

"சரி"

". . . . . ." அமைதியாக அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.

"அது வந்து. . . . . ." என்று எதோ சொல்ல வருவது போல நிறுத்தினான் பிரபு கார் ஓட்டிக் கொண்டே.

"என்னது? ஒழுங்கா சொல்லுங்க காதுல சரியா விழல, அந்த டேப்பை கொஞ்ச ஆப் பண்ணுங்க" என்று காரில் இருந்த டேப்பை ஆஃப் செய்து, காதைத் தீட்டிக் கொண்டு பக்கத்தில் வந்தாள் வனிதா.

"இப்ப சொல்லுங்க"

"அந்த தண்ணி பாட்டிலை கொஞ்சம் எடு" என்றான் பிரபு சிரித்து கொண்டு.

"ச்சீ.. ஏங்க இப்படி இரிடேட் பண்றீங்க?"

"நான் என்னடீ பண்ணேன் உன்ன? உனக்குதான் அடுத்தவங்க விஷயம்னா அல்வா மாதிரி இனிக்குது, சோறு தண்ணி இல்லாம வாயை பார்த்துனே கேக்குற"

". . . . . . ."

"சரி சரி கோச்சிக்காத. சொல்றேன் சொல்றேன் (பெருமூச்சுடன் ஆரம்பித்தான்) அவன் படிக்கும் போது ஒரு பெண்னை உயிருக்கு உயிரா காதலிச்சான். ஆனா பெண் வீட்டுல ஒத்துக்கல. என்ன வழக்கம் போல சண்டைதான், பெண்ணோட அண்ணன் வந்து இவனை அடிச்சி, இவன் கை காலை உடைச்சி போட்டுட்டான், இவன் ஆஸ்பிட்டலில் ஆறு மாசம் கிடந்தான். அந்த கேப்ல பொண்ணு வீட்டுல கல்யாணத்த முடிச்சிட்டாங்க, இவன் ஆஸ்பிட்டலில் இருந்து குணமாகி வந்து, பொண்ணு வீட்டுல போய் கேட்டு இருக்கான், விஷயத்தை சொன்னவுடன் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் சண்டை போடாமல் வந்துட்டான். அவ்வளவுதான் எனக்கு தெரியும். அதுக்கு அப்புறம் இப்ப இந்த விழாவுலதான் நான் அவனை பார்க்கிறேன், இந்த விழாவுக்கு கூட என்னை போன்லதான் கூப்பிட்டான்."

"அப்படியானா. . . .?" என்று வனிதா ஏதோ கேட்க வந்தவள், கார் கண்ணாடி வழியாக வெளியே ரங்கா பைக்கில் போவதைப் பார்த்தாள். பேபி கேரியிங் பேகில் தன் குழந்தையை நெஞ்சோடு மாட்டிக் கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டு சென்றான்.

"ஏங்க.. அதோ ரங்கா போறாரு." என்றாள். பிரபுவும் கவனித்தான்.

"ஏங்க.. எங்கங்க அவங்க மனைவிய காணோம்? குழந்தையும் எவ்வளவு அழகா உக்காந்து இருக்கு பாருங்க!" என்று அந்த காட்சியை ரசித்துப் பார்த்தாள், குரங்கு தன்னுடைய குட்டியை அழகாக நெஞ்சோடு அணைத்துக் கொண்டு போவது போல ரங்கா தன்னுடைய குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு போனான், குழந்தையும் தன் உதடை சப்பிக் கொண்டு கண்களை மூடியபடியே சுகமாக தூங்கிக் கொண்டு இருந்தது.

"அவனுக்கு இன்னும் கல்யாணமே ஆவலடீ, யாரோ தெரிஞ்சவங்களோட பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்கிறான்".

"என்னங்க சொல்றீங்க? எவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமா சொல்றீங்க! இந்தக்காலத்துல இப்படி ஒரு காதலா!! அதிசயம்தான் போங்க. நல்ல பையங்க ரங்கா".

வனிதா கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துக் கொண்டு இருந்தாள். பிறகு "சரிங்க... அவரு எதுக்கு உங்கள தாய் மாமன்னு உக்கார வைக்கணும்?" என்றாள் தலையை சொறிந்து கொண்டு.

"இதே கேள்வியைத்தான் இப்ப நானும் அவன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன் சொல்றான், இந்த ஜென்மத்துல என் குழந்தைக்கு தாய் மாமன்னா அது நீங்க மட்டும் தான்; இந்த விசேஷம் மட்டும் இல்ல, என் குழந்தையின் எல்லா விசேஷமும் உங்க தலமையில்தான் நடக்கும், கண்டிப்பா கலந்துக்கணும்னு தாய்மாமன் என்ற முறையில் நு சொல்றான்" என்றான் பிரபு பெருமூச்சுடன்.

"ஐயோ... அதான் ஏன்னு கேக்குறேன்" என்று தலையில் கை வைத்தாள் வனிதா.

"ஏன்னா நான்தான் அவன் காதலிச்ச பொண்ணோட அண்ணன்..." என்றான் பிரபு முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு... அவமானத்தில். அவன் கண்களில் கண்டிப்பாக கண்ணீர் வந்து இருக்கும்

Narathar
23-10-2008, 02:38 PM
நீங்கள் ஆரம்பத்தில் சஸ்பென்ஸ் வைத்து எழுதும் போது வனிதா போல் எங்களுக்கும் "ஏன்" என்ற கேள்வி எழ வைத்திருந்தீர்கள்....

நான் இதைப்போன்ற ஒரு முடிவைத்தான் எதிர்பார்த்தேன்... ஆனால் கதை முடிவில் நீங்கள் சொன்ன முடிவோ நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது

வாழ்த்துக்கள்

மதி
23-10-2008, 04:39 PM
உண்மையிலேயே எதிர்பார்க்காத முடிவு தான்....
வாழ்த்துகள் மூர்த்தி...

rajatemp
23-10-2008, 04:54 PM
அருமையான கதை முடிவு மிகவும் அருமை யாரும் எதிர்பாராத முடிவு
தொடர்ந்து தாருங்கள்.

கொஞ்சம் பிழைகளையும் சரி செய்யவும்.

பாபு
24-10-2008, 03:12 AM
அருமை !! அருமை !!

பாரதி
24-10-2008, 01:20 PM
எதிர்பார்க்காத முடிவு..!
அனைவருக்குள்ளும் எங்காவது ஈரம் இருக்கும்தான்.
பாராட்டு மூர்த்தி.

ரங்கராஜன்
24-10-2008, 02:11 PM
இந்த கதையின் எழுத்துப் பிழைகளை திருத்தி எனக்கு அனுப்பிய திரு.பாரதிக்கு நன்றி.

அமரன்
24-10-2008, 04:05 PM
அட போடவைத்த கதை. தோரணங்களாக்கி கதைகளில் தொங்கவிடுவதன் மூலம் உங்களுக்குள் இருக்கும் நகைச்சுவைi உணர்வு வெளிப்படுகிறது. அரோகராவைப் படித்ததும் முறுவல் பூத்தது.

எல்லாரும் சொல்லுவதைப் போல எதிர்பாராத முடிவு. இணையாத காதலின் பின்னான புதுவாழ்க்கை. பிரபுவுக்கும் ரங்காவுக்கும் இடையான அன்னியோன்யத்தை பார்க்கும்போது பிரபுவின் தங்கையின் கணவன் மறைபொருளாக உயர்ந்துள்ளான். பாராட்டுகள் மூர்த்தி.

MURALINITHISH
08-01-2009, 09:26 AM
முன்னாளில் அவனை அடித்து அவன் கனவுகளை சிதைத்து இருந்தாலும் அவன் (தத்து) எடுக்கும் குழந்தைக்கு காதலியின் அண்ணை தாய்மாமன் ஆகியிருக்கும் அவன் பெருந்தன்மையை என்ன சொல்ல

ரங்கராஜன்
21-04-2009, 12:03 PM
நன்றி விமர்சனம் தந்து ஊக்கம் அளித்த அனைவருக்கும்

தாமரை
21-04-2009, 12:37 PM
கதையில சிமெண்ட் கொஞ்சம் குறைச்சலா இருக்கு, மணல் மணலா உதிரியா நிற்கிறது.