PDA

View Full Version : கடைசி நாள் சிறுகதைரங்கராஜன்
23-10-2008, 05:31 AM
கடைசி நாள்
மூர்த்தி மொட்டை மாடியில் நின்று, சூரியன் வந்து நிலாவை விரட்டும் காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தான். இரவில் தூங்கவில்லை என்பதற்க்கு அவனின் சிவந்த கண்களே சாட்சியாக இருந்தன. அவன் தலை பனியில் நனைந்து இருந்தது.
“இதுதான் என் வாழ்நாளில் கடைசி நாளா”
என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவனுக்கு நெஞ்சமே வெடித்து விடும் போல இருந்தது. கீழே இறங்கி அவனுடைய மேன்ஷன் ரூமுக்குள் நுழைந்தான். நேராக போய் படுக்கையில் விழுந்தான், பக்கத்தில் படுத்து இருக்கும் நண்பர்களின் காதுகளில் விழாத வாரு அவனுக்குள் அழுதான். தேம்பி தேம்பி அழுதான், அவனுக்கு தெரியாமல் தூங்கியும் போனான்.
“டேய் மச்சா.. இன்னைக்கு உங்க ஆபிஸ் லீவா என்ன”
என்றான் தன்னுடைய பிஸ்க்கு புறப்பட்டுக் கொண்டு இருந்த நண்பன். மூர்த்தி பாதி தூக்கத்தில் இருந்தான்
“இ. . .இல்லடா .கொஞ்ச . .வெளியே. . . போணும்” என்றவன், தீடீர் என்று எழுந்து
“டையம் என்னடா” என்றான்.
“9.45 டா”
“அய்யோ” என்று சொல்லிக் கொண்டு எழுந்து, அவசர அவசரமாக குளித்து விட்டு புறப்பட்டான். ரூமைவிட்டு வெளியே வந்தான். கீழே இறங்கினான் அவனுடைய ரூமை ஒரு முறை திருப்பிப் பார்த்தான். கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்தான். அங்கே இருந்த அவனுடைய பைக்கை ஒரு முறை ஆசையாக பார்த்தான், சீட்டை ஒரு முறை தடவி கொடுத்தான். ஏதோ எண்ணங்கள் அவன் மனதில் தோன்றி மறைந்தது,
“ எத்தனையோ நாள் வெயில், மழை, என்று பாராமல் சுமந்து இருப்பாய். . . மறக்க முடியாத நாட்கள். . . . நன்றி நண்பனே. . . நன்றி” என்று தன்னுடைய பைக்கை கைகளால் தொட்டு யாரும் பார்க்காத பொழுது கைகளை உதடுகளில் வைத்து முத்தம் கொடுத்தான். பீச்சுக்கு செல்லும் பஸ்சில் எறினான்.
பீச்சு மணலில் உக்கார்ந்து கடலையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தால் வித்யா. அவள் மனதிலும் பல நினைவுகள் ஓடிக் கொண்டு இருந்தன
“நாம் எடுத்த முடிவு சரியா”
“நம்மை நம்பியவர்களை விட்டு செல்வது சரியா”
“வேண்டாம் முடித்துக் கொள்வோம்”
“இந்த கடைசி நாள் இஷ்டம் போல் வாழ்ந்து முடித்துக் கொள்வோம்”. வித்யா தன்னுடைய செல்லை எடுத்தால் நம்பரை அழுத்தினால்
“ஹலோ”
“ஹலோ சொல்லுடீ, ஆபிஸ் போய் சேர்ந்துட்டியா”
“. . . . . .”
“ஹலோ கேக்குதா, வித்யா வித்யா”
“கேக்குது மா சும்மாதா பண்னேன், உன் குரலை கேக்கனும் போல இருந்துச்சி அதான்”
“என்னது குரல . . . . . .”. அதற்க்குள் வித்யா கண்ணீர் துளிகளுடன் செல்லை கட் செய்தால். செல்லை சுட்ச் ஆப் செய்து பையில் வைத்தால். மூர்த்தி வந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் மயான அமைதியுடன் பார்த்துக் கொண்டனர்.
“ஏண்டா இன்னைக்கூட வா உன்னால் சீக்கிரம் வரமுடியாது, உன்னோட அலட்சிய போக்குனால தான் நாம் இந்த முடிவுக்கு வந்து இருக்கோம், இந்த ஒரு நாள் நாம் நினைச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு, அப்புறம் . . . .” மேலே பேசமுடியாமல் அழுதாள்.
“நான் என்ன காரணம் சொன்னாலும் நீ ஏத்துக்க மாட்ட, நம்ம வாழ்க்கையில் முக்கியமாக போற நாள் இன்று தயவு செய்து அழாதே, கண்ணை துடைத்துக் கொள்” என்று கண்னை துடைத்து விட்டான் மூர்த்தி.
“ஏன் நாமும் மற்றவர்கள் போல வாழ முடியாதா, யார் இந்த ஜாதியை கண்டுபிடிச்சா”
“என்ன வித்யா இது இதை பற்றி பேசி பேசி ஓய்ந்து போய் தானே, இந்த முடிவை எடுத்தோம், சரி வா உனக்கு எங்க போணும் சொல்லு போலாம்” என்று எழுந்தான். இருவரும் பேசிக் கொண்டு நடந்தார்கள்.
“டேய் எங்கடா உன் பைக்கு”
“இனிமேல் அது எதுக்கு”
“என்னடா அதுதானே உன் உயிருன்னு சொல்லுவ”
“உயிரே இல்லன்னு ஆவப்போது”.
வித்யா மூர்த்தியின் கண்களை பார்த்தாள், மூர்த்தியின் கண்களில் கண்ணீர் வெளியேர தயாராக இருந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வேறு திசையில் திரும்பி அழுதுக் கொண்டார்கள். சற்று நேரம் கழித்து ஆட்டோவில் ஏறி சினிமாவுக்கு சென்றனர். படத்தின் பெயர் கூட பார்க்காமல் டிக்கேட்டை எடுத்து, மூன்று மணி நேரம் இருவரும் ஒரு வார்த்தை பேசாமல், ஒரு காட்சியையும் கவனிக்காமல், எதையோ யோசித்துக் கொண்டு கழித்தனர். பின் ஒரு ஓட்டலுக்கு சென்று இருவருக்கும் பிடித்த ஐடங்களை ஆடர் செய்து. ஒரு வாய் கூட சாப்பிடாமல் வேறும் தண்ணியை மட்டும் குடித்துவிட்டு 200 ரூபாய் பில்லை கொடுத்தார்கள். மறுபடியும் ஒரு ஆட்டோவில் ஏறினார்கள்
“ஏன் வித்யா சாப்பிடல”
“பிடிக்கலை”
“உனக்கு பிடிச்ச ஐடம் தான? நீ எப்பவும் அதை தான சாப்பிடுவ”
“ஆமா ஆனா இப்ப பிடிக்கலை”
“அதான எப்பவுமே பிடித்த விஷயம் கடைசி வரை பிடிக்கனும் கட்டாயம் இல்லையே”
“இந்த குத்தல் பேச்செல்லாம் வேண்டாம், நீ என்ன சொல்ல வரன்னு எனக்கு தெரியும்”
“சரி இனிமேல் பேசி என்ன பலன், விடு”
“கடைசி வரை நீ மாறவே மாட்டியா”
“மத்தவர்கள் மாதிரி என்னால் சட்னு மாற முடியவில்லை, அதான் என் பிரச்சனையே”
“நான் எடுத்தது தப்பான முடிவோ என்று பயந்தேன், ஆனால் இப்ப கிளையர் ஆயிடுச்சி” என்று மூர்த்தியை முறைத்தபடி சொன்னால் வித்யா.
இருவரும் மறுபடியும் கடற்கரையை அடைந்தனர். மாலை இருள் சூழ ஆரம்பித்தது, மூர்த்தி தன் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டினான் வித்யாவும் அவள் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டினால், மோதிரத்தை பரிமாரிக் கொண்டார்கள். இருவருக்கும் கண்ணீர் பொங்கியது.
“என்ன மதிச்சி வந்ததுக்கு நன்றி, நாம காதலிக்க ஆரம்பிச்ச இடத்திலேயே பிரிஞ்சிடலாம்னு தான் இங்க வரச் சொன்னேன், இருட்டுல அப்படியே கரைந்து போய்விடுவோம் என்னைக்கும் நீ என் சந்தோஷத்தில் குடி இருப்பாய்” என்று மூர்த்தி கண் கலங்கினான்.
“உனக்கு நல்ல மனைவி கடைக்க நான் தினமும் பிராத்தனை செய்வேன்” என்று வித்யா அழுதாள்.
“இன்னொரு பெண்ணா?, ஒரு முறை அனுபவிச்சதே போதும்”
இருவரும் திருப்பி பார்க்காமல் வெவ்வெறு திசையில் கண்னை துடைத்து கொண்டே போனார்கள்.
சிறிது தூரம் நடந்த வித்யா செல்லை ஆன் செய்தாள், நம்பரை அழுத்தினாள்
“ஏய் எங்கடீ போன காலையில் இருந்து, செல்லு வேற ஆப்ல இருந்தது, பயந்துட்டேன்டீ” என்றது ஒரு ஆணின் குரல்.
“மோபைல்ல பேட்டரி இல்லமா, ஓட்ட செல்மா, கல்யாணத்திற்க்கு அப்புறம் வேற லேட்டஸ்டு மாடல் வாங்கி கொடுக்கனும் ஓக்கேவா” என்று சிரித்தாள்.
“கல்யாணத்திற்க்கு ஒரு மாசம் இருக்கே அதுவரை நீ என்ன பண்ணுவ, நாளைக்கே நான் வாங்கி தரேன், சரி எதுக்கு காலையில தீடீர்னு என் குரலை கேக்கனும் தோனிச்சு” என்று சிரித்தது அந்த ஆணின் குரல்.
மூர்த்தி பஸ்சில் உக்கார்ந்து மோதிரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்
“இத திரும்பி அம்மா கையிலயே போட்டுடனும்” என்று மனதுக்குள் முடிவு செய்தான் மூர்த்தி.
அவன் பக்கத்து சீட்டில் மல்லிகை சென்ட் வாசனையுடன் ஒரு கல்லூரி பெண் வந்து உக்கார்ந்தாள்.
“எக்ஸ் கியுஸ் மீ, ஸ்பேன்சர் பிளாசா போறதுக்கு எங்க எறங்கனும்” என்று கொஞ்சுத் தமிழில் பேசினால் அந்த பெண்.
“படிக்கட்லதான்” என்றான் மூர்த்தி
“ஹா ஹா ஹா, தட் வாஸ் யா, குட் ஓண்”
“ஹா ஹா ஹா, நானும் அங்க தான் போறேன், யு கேன் ஜாயின் மீ இப் யூ வாண்ட்” என்றான் அந்த திசைக்கு ஏதிர்திசையில் போக வேண்டியவன்.
“ச்சோ சுவிட், தாங்யூ”
மோதிரத்திற்க்கு திரும்பவும் வேலை வந்தது.

அமரன்
23-10-2008, 07:02 AM
ஹா:). படிக்கத் தொடங்கிய போது புன்னகை மன்னன் திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் நிழலாடியது. உயிருடன் பிரிவோம் என்ற இடத்தில் "முகத்துவாரம்" திரிக்காக நான் எழுதிய கதை நினைவாடியது. முடிவில் சே! என்ன மனிதர்கள் என்ற வெறுப்பு மிகுந்தது.

உங்கள் கதைகளின் இறுதியில் ஏதோ ஒரு உணர்வை வைத்து நச்சுவது நல்லாருக்கு. இப்படிப் பொழுது போக்குபவர்களும் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்கள் தான் அப்படி பெண்கள் தான் அப்படி என்று அடித்துக் கூறாமல் விட்டு வித்தியாசப்பட்டுள்ளீர்கள்.

பாராட்டுகள் மூர்த்தி.

ரங்கராஜன்
23-10-2008, 08:33 AM
நன்றி, அடுத்தமுறை உங்களுக்கு எந்த ஒரு படத்தின் ஞாபகமும் வாராத வண்ணம் எழுதுகிறேன் திரு.அமரன்:lachen001:

மதி
23-10-2008, 09:12 AM
இத்தனை வேகத்தில் கதைகளை எழுதிக்கொண்டு போறீங்க... வாழ்த்துகள் மூர்த்தி...
கதையும் கதாபாத்திர அமைப்பும்... ஏதோ சோகத்தில் முடிவது போல கொண்டு போனாலும் இறுதியில் நச்... நிறைய பேர் பொழப்பு இப்படி தான் இருக்குது போல.

Narathar
23-10-2008, 02:45 PM
மூர்த்தி நன்றாகைருக்கின்றது இந்தக்கதையும்...
அமரன் சொன்னதுபோல் கதையின் கடைசியில் நீங்கள் வைத்திருக்கும் "டுவிஸ்ட்"தான் உங்கள் கதையின் பலமே

பாபு
24-10-2008, 03:19 AM
உங்களுக்கென்று ஒரு தனி பாணி அமைத்து அருமையாய் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழ் பிழையை தவிர்த்து எழுதினால் இன்னும் சிறப்பாய் இருக்கும்.

இறைநேசன்
24-10-2008, 08:21 AM
நல்ல அருமையான கதை மூர்த்தி அவர்களே!

இன்று இது இல்லை என்றால் எதுவுமே இல்லை என்று ஏங்கும்
மனது, நாளை இதைவிட மேலான ஒற்றை கண்டடைய வரும்போது மாறிவிடும் வாய்ப்புள்ளது!

மனித மனதின் யதார்த்தத்தை படம் பிடித்து கட்டுவதுபோல் அமைந்துள்ளது!

நன்றி!

பாரதி
24-10-2008, 12:28 PM
இயந்திரமயமாகி விட்ட காலத்தில் இதெல்லாம் நடக்கக்கூடியதுதான் போலும்..!

கடைசிநாளில் தொடங்குகிறதோ மீண்டும் ஒரு கடைசிநாள் கதை..?

வாழ்த்து மூர்த்தி.

MURALINITHISH
08-01-2009, 09:20 AM
கடைசி நாள் என்று மற்றவர்கள் கதை எழுதி இருந்தால் நானும் கனத்துடனே படித்திருப்போன் ஆனால் உங்க கதை இல்லையா ஆரம்பத்தில் இருந்தே உஷாரா படிச்சேன் நடுவிலே புரிஞ்சிகிட்டேன் முடிவு என்னவென்று ஆணே அடுத்தவளை இது முடிந்தவுடன் தேடிகிறான் பெண்ணோ முன்னே தேடிவிட்டுதான் கழட்டி விடுகிறாள் கலி முத்தி போச்சி

இளசு
24-01-2009, 07:28 PM
அன்பு தக்ஸ்

முன்னமே இக்கதையை வாசித்திருந்தால் நீண்ட விமர்சனம் தந்திருப்பேன்..

இன்று வாசித்ததால் - என் இதயம் கனத்த மௌனம் மட்டுமே!

எது உண்மை, எது கற்பனை என இனம் காண இயலுவதால்..

ஆனாலும்,

ஒரு கதாசிரியனாய் இங்கும் உன் வெற்றியைக் காண்பதில்
இறுக்கம் மீறி முளைக்கும் முறுவல் என் முகத்தில்!

உச்சிமோந்து வாழ்த்துகிறேன்!

தமிழ்
19-02-2009, 12:29 PM
நானும் ஏமாந்துபோனேன், ஆனா ஹோட்டலுக்குள்ள போயிட்டு சாப்பிடாம வரும்போதே நினைச்சேன் கண்டிப்பா இவங்க சாகமாட்டாங்கன்னு,
அதேமாதிரியே நடந்துடிச்சி..

ரங்கராஜன்
19-02-2009, 02:14 PM
நானும் ஏமாந்துபோனேன், ஆனா ஹோட்டலுக்குள்ள போயிட்டு சாப்பிடாம வரும்போதே நினைச்சேன் கண்டிப்பா இவங்க சாகமாட்டாங்கன்னு,
அதேமாதிரியே நடந்துடிச்சி..


நன்றி தமிழ்

இந்த கதையை நான் மன்றத்தில் சேர்ந்த இரண்டாவது நாள் எழுதியது.. ரொம்ப நாள் கழித்து இந்த கதையின் விமர்சனத்தை பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது.

விகடன்
24-02-2009, 04:57 AM
என்னதான் இரவு இரவாக நித்திரை செய்தாலும் அதிகாலை வரும் நித்திரைக்கு ஈடாகவே மாட்டாது. அதை நினிவுபடுத்தும் முகமாக மூர்த்தியின் 9.45 மணி விழிப்பு என்னை சிரிக்க வைத்துவிட்டது.

ஒரு மோதிரத்தின் வல்லமையினை தெளிவுபடுத்திவிட்டீர்கள் :D

பாராட்டுக்கள்.

ரங்கராஜன்
21-10-2012, 05:36 AM
மறக்க முடியாத கதை...

கீதம்
27-10-2012, 12:06 AM
இரவெல்லாம் அழுது, உருகித் தவித்த மனம், எப்படி இப்படி ஆனது? இறுக்கத்தோடு படித்துக்கொண்டு வந்தால் இறுதியில் இளசு அவர்கள் சொன்னதுபோல் சிறு முறுவல் வெளிப்பட்டது. அட இதுதாம்பா உலகம் என்று சொல்லாமல் சொன்ன கதை. பாராட்டுகள் தக்ஸ்.

kishore1490
27-10-2012, 03:24 PM
ரொம்ப நல்லா இருந்தது நண்பா. இறுதியில் அந்த ஸ்பென்சர் காமெடி சூப்பர்..

நாஞ்சில் த.க.ஜெய்
27-10-2012, 05:52 PM
சோகத்திலிருந்து மகிழ்விற்கு திரும்பும் மனது இது காதலா என் கேட்க வைக்கிறது..ஏதார்த்த உலகிலிருந்து ஓர் மாறுபட்ட கதை...