PDA

View Full Version : வழித்துணைரங்கராஜன்
22-10-2008, 02:44 PM
வழித்துணை

நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிக்கொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்க்கு காரணமாக இருக்கும் குடிசைகள், குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்ன சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட், அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர் பைக்கில் வந்த இருவரும். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே தாயபாஸ் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு கும்பலில் இருந்து இரண்டு பேர் இவர்களை நோக்கி வந்தனர், வேகமாக வண்டியில் வருபவார்களை நிறுத்துவது போல கையை அசைத்தனர்.

“சார் நிறுத்து நிறுத்து உள்ளே யாரும் இல்ல, சீப்பா முடிச்சீத்தரேன்...” என்று ஒருவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே வண்டியில் வந்தவர்கள் மதிக்காமல் அவர்களை தாண்டிச் சென்றனர்.

இருவரும் திரும்ப போய் ஆட்டத்தில் சேர்ந்தனர்.

அங்கு ஒருவன் “என்ன மாமே ஆச்சு” என்றான் தாயத்தை உருட்டிக் கொண்டு.

“எங்க மச்சான் மடக்கலான்னு பார்த்தா, கசுமாலம் போய்க்கினே இருக்குது, சரி இப்ப உய்து பார் தாயம், அடிங்கொப்பன் டாடி” என்று சொல்லிக் கொண்டு தாயபாஸை உருட்டினான்.

பைக்கை நிறுத்தி விட்டு ரங்காவும் அவனுடைய நண்பனும் இறங்கி ஒரத்தில் இருந்த அறையை நோக்கி நடந்தனர். அது ஒரு சிறிய அறை, கூட்டமாக அனைவரும் ஒன்று சேர எதோ கேட்டுக் கொண்டு இருந்தனர். ரங்கா அந்த அறையின் வாசலில் வந்து நின்றான். அந்த இடத்தின் கவுச்சி வாடையும், ரோஜாக்களின் வாசனையும் சேர்ந்து வயிற்றை புறட்டிக் கொண்டு வந்தது ரங்காவின் நண்பனுக்கு அடக்கிக் கொண்டு கூட்டத்திற்க்கு பின் நின்றான். அப்பொழுது ஒரு குரல்

“ஏங்க இப்படி வந்து நின்னா, நான் எப்படி வேலை செய்ய முடியும், அப்புறம் சர்டிபிக்கேட்ல பேர் தப்பா எழுதிட்டா உங்களுக்கு தான் பிரச்சனை, யோவ் முனுசாமி எரிக்கிறவங்க ஒரு சைடு, புதைக்கிறவங்க ஒரு சைடு நிக்கவையா, அதுவும் நானே செய்யுனுமா” என்றது ஒரு குரல்.

முனுசாமி கூட்டத்தினரை நோக்கி “சார் எரிக்கிறவங்க ஒரு சைடு, புதைக்கிறவங்க ஒரு சைடு நில்லுங்க, எல்லாரும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணா சீக்கிரம் வேலை முடிஞ்சிறும்” என்றார்.

அனைவரும் ஒழுங்காக வரிசையில் நின்றார்கள், அப்பொழுது தான் நடுவில் உக்கார்ந்து இருந்த அதிகாரி வெளிப்பட்டார். அறை முழுவதும் மங்களான வெளிச்சம், வெள்ளை நிற சுண்ணாம்பு சுவர்கள் கருப்பு நிறத்தில் மாறி இருந்தது, இரண்டு உடைந்த நாற்காலி, ஒரு உடையப் போகும் மேஜை அதன் மேல் கொஞ்சம் பைல்கள். ரங்காவிற்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை வரிசையில் நின்றான். பதற்றத்துடன் மணியை பார்த்தான், கையில் வடிந்த வேர்வையில் கடிகாரம் நனைந்து இருந்தது, அதை துடைத்து விட்டு பார்த்தான் மணி 1.30.

வெளியில் தப்பான இடத்தில் குயில் அழகாக கூவிக்கொண்டு இருந்தது, ரசிக்க ஆள்தான் இல்லை. சமாதியின் மேல் மதிய உணவு உண்ணும் பெரியவர், பள்ளம் தோண்டி கிடைத்த எலும்புக்காக சண்டையிடும் நாய்கள், சமாதியில் ஒளிந்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகள், அனைவரும் அவர்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள், யார் குயிலின் கூவலை ரசிப்பார்கள். மணி 1.45 ரங்கா கடைசியாளா அதிகாரியின் முன் நின்றான்.

“என்னப்பா எரிக்கனுமா? புதைக்கனுமா?” என்றார் பேப்பரில் எதோ எழுதிக் கொண்டே ரங்காவை பார்க்காமல் கேட்டார்.

“புதைக்கனும் சார்”.

“குடும்ப வழக்கமா புதைக்கிற எடம் எதாவது இருக்கா, இல்ல நல்லதா நானே ஒரு எடம் தரட்டா, கொஞ்சம் செலவு ஆவும் அத பத்தி பொறவு பேசிக்கலாம்” என்றார் அதிகாரி.

“இல்ல சார் நேத்தே வந்து எங்க மாமா எல்லா ப்ரோசிஜர் முடிச்சாச்சு, டாக்டர் சர்டிபிக்கேட் தர வந்தோம்” என்றான் ரங்கா அவசரமாக.

“அப்புறம் எதுக்கு லைன்ல நின்ன, நேரா வர வேண்டியது தானே, சரி எந்த ஏரியா பாடி” என்று அலுத்துக் கொண்டே மேஜையில் இருக்கும் பைல்களை புரட்டினார்.

“பேரு சுகுமார், வயசு 56..” என்று ரங்கா மணி பார்த்துக் கொண்டு சொல்ல.

“யப்பா ஏரியா பேர சொல்லு”

“கா. . .காந்தி நகர்”

“ஓ. . .காந்தி நகர் பாடியா, இரண்டு, மூணு டிடைல் எழுதாம போய்ட்டார் உங்க சித்தப்பா”

“சித்தப்பா இல்லைங்க மாமா” என்றான் ரங்கா.

“ரொம்ப முக்கியம், உக்காந்து சீக்கிரம் எழுது மணி இப்பவே இரண்டு ஆவப்போது ராவுகாலத்துக்கு முன்னாடி பாடி எத்து வந்துருவாங்க (ரங்காவிடம் படபடப்பு அதிகமானது) கடைசி நேரத்துல வந்து மாமா சித்தப்பான்னு தமாஸ் பண்ற,................. என்ன பேனா இல்லையா இந்தா போறப்ப மறக்காம குடுத்துட்டு போ” என்று பேனாவை மேஜை மேல் வைத்தார்.

ரங்கா எதையும் காதில் வாங்காமல் காகிதத்தில் விட்டுப்போன இடத்தை பூர்த்தி செய்தான், வீட்டு விலாசம், வயது, ஆனால் ஒரு இடத்தில் அவனுடைய கையும் பேனாவும் உறைந்து நின்றது, அது இறந்தவரின் பிறந்த தேதி?.

“யப்பா ஏய் எக்ஸாமா எழுதர, இவ்வுளவு நேரமா?, என்ன தேதி தெரியலையா, வீட்டுல போன்ன போட்டு இறந்தவருடைய பையன் இல்ல பொண்ணுக் கிட்ட கேளு” என்றார் அதிகாரி.

ரங்காவின் கண்களில் கண்ணீர் கசிந்தது “நான் தான் அவருடைய பைய. . . ., இல். . . என்னுடைய அப்பா சார் அவரு” என்று மேலே எதுவும் சொல்ல முடியாமல் நிறுத்தினான்.

“அப்பா பிறந்த தேதி உனக்கே தெரியாதா!!!!!!!!!! சுத்தம்! சரி மகன்னு சொல்ற, நீ எதுக்கு வந்த கடைசி நேரத்துல, சாங்கியம் எல்லாம் நீ தான் செய்யுனும், களம்பு களம்பு” என்றார். ரங்கா அந்த அறையை விட்டு புறப்பட்டான்.

“யோவ் முனுசாமி பார்யா இந்த காலத்து பசங்கள, நாம அவுங்களுக்காக தான் பொணத்தோட பொணமா இங்க வேந்து சாவுறோம், ஆனா பார் கடைசியில ஒரு நாள் அழுவையோட நம்ம கதை முடிஞ்சுடுது” என்றார்.

“அத ஏ சார் கேக்குற, என் பையன் நேத்து என்ன செம அடி அடிச்சுட்டான் சார், பொண்டாட்டிய அடிச்சதுக்கு”

“எதுக்குயா, நீ தான் எப்பவும் அவளை அடிப்பியே”

“ஆமா சார், நேத்து குடிச்சுட்டு என் பொண்டாட்டின்னு நன்ச்சீக்குனு, பக்கத்து ஊட்டுக்காரன் பொண்டாட்டியை அடிச்சா உடுவானா அதான் போறட்டிடான்”

“பக்கத்து ஊட்டுக்காரன் பொண்டாட்டியை அடிச்சதுக்கு ஏ பையன் உன்ன அடிச்சான்”

“பக்கத்து ஊட்டுல அவன் தான் கூடியிருக்கான், நா அடிச்சது அவன் பொண்டாட்டியை”

“ச்சீ போய் டீக்கடையில ஒரு வடை வாயினு வா” என்று எழுந்த அதிகாரி தண்ணி பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். நண்பர்கள் இருவரும் வேகமாக வண்டி இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்கள்.

“தம்பிகளா யாராவது ஒருத்தர் குழி தோண்டர இடத்துல இருந்தா நல்லது” என்றார் அதிகாரி கையை கழுவிக் கொண்டு.

புறப்பட தயாராக இருந்த ரங்காவும் அவனது நண்பனும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “மச்சா நான் இருக்கேன், நீ சீக்கரம் களம்பு” என்று ரங்காவை அனுப்பி விட்டு அதிகாரியை நோக்கிச் சென்றான் ரங்காவின் நண்பன்.

“சார் எங்க எங்களுக்கு எடம் ஒதுக்கி இருக்கிங்க” என்றான் அதிகாரியை பார்த்து.

“கடைசியில மாசானம் ஒருத்தன் குழி வெட்டினு இருப்பான் பார் அதான் உங்களுது, எங்க இன்னிக்கு மட்டும் எட்டு பாடி, எடமே இல்ல, பாரு எல்லா வேலையும் முடிச்சிட்டு இப்பதான் சாப்பிட போறேன்” என்று அதிகாரி உள்ளே சென்றார்.

இவனும் அந்த இடத்தை நோக்கி நடந்தான். சுற்றிலும் சமாதி வழியெங்கிளும் சமாதிகள், பளிங்காள் இழைத்த பணக்கார சமாதி பக்கத்திலே பூமியோடு அமுங்கிபோன ஏழையின் சமாதி என்று பல காட்சிகளை கடந்து அதிகாரி சொன்ன இடத்தை அடைந்தான்.

“ஏம்ப்பா நீ தான் மாசானமா” என்றான் அங்கு குழி தோண்டிக் கொண்டு இருந்தாவனை பார்த்து.

“அவன் அங்க தோண்டினு இருக்கான் பார்” என்று திரும்பி பார்க்காமல் தோண்டிக் கொண்டே சொன்னான்.

அதற்க்குள் எதிர் திசையில் இருந்து ஒரு குரல் வந்தது “சாமி இங்க வாங்க தோ இருக்குது நம்ம எடம்”

குரல் வந்த திசையை நோக்கி சென்றான். “ஏம்பா ஆபீஸர் அந்த இடத்திலன்னு சொன்னார், நீ இங்க தோண்ற” என்றான்.

“.. .. .. அவன் சொல்லுவான் நோவாம, தோன்றவனுக்கு தான் கஷ்டம் தெரியும், அதவிட இது நல்ல எடம் சாமி, காத்தோட்டம் சுப்பரா இருக்கும்” என்று சிரித்தான்.

“யோவ் என்ன நக்கலா, எடத்தை மாத்திட்டு சிரிக்கிர இரு நான் போய் ஆபிஸரை பார்த்துட்டு வரேன்” என்றான் கோபமாக.

“சரி சீக்கிரம் போய்டு வா, உனுக்கு தான் டையம் வேஸ்டு, இன்னும் கொஞ்ச நேரத்துல பாடி வந்துடும், ஓரமா எறக்கி வச்சுட்டு தோண்டி முடிக்கிறவடையும் ஒக்கார்ந்துன்னு இரு” என்றான் மாசானம் பீடியை பற்ற வைத்துக்கொண்டு.

இவனுக்கு சங்கடமாகி விட்டது, ரங்காவுக்கு உதவி செய்ய வந்து உபத்திரம் செய்து விடக்கூடாது என்று அமைதியாக பள்ளத்தை நோக்கி வந்தான்.

“என்ன தோண்ட வா வானாமா, சீக்கிரம் சொல்லு நாத்திக் களம சாந்திரம் வந்து பேஜார் பண்ணாத” என்று சலித்துக் கொண்டு புகையை விட்டான்.

“சரி சரி ஒழுங்கா தோண்டு” என்று அமைதியாக நின்றான்.

“சாமி கவல படாத சூப்பரா பண்ணிடலாம்” என்று பீடியை தூக்கி எறிந்தான்.

மாசானம் பள்ளதில் இறங்கி கிடு கிடு என்று தோண்ட ஆரம்பித்தான், தீடீர் என்று நிறுத்தியவன் உள்ளே மண்ணில் இருந்து வந்த புடவையை எடுத்து வெளியில் போட்டான். இதை பார்த்த ரங்காவின் நண்பன் அதிர்ச்சியுடன்

“யோவ் என்னயா இது, புடவ வருது அதுக்குதா இந்த குழி வேண்டா சொன்ன”

“சாமி இதுலயாவது புடவ, அதுல இப்ப தான் எலும்பெல்லாம் எடுத்து அவன் வெளியே போட்டான் நீ கவலபடாம அப்படி போய் நீல்லு சாமி” என்றான்.

வாசலில் தாரை தப்பட்டை சத்தம் கேட்டது ரங்கா தீச்சட்டியை முன்னால் தூக்கிக் கொண்டுவந்தான். சடலத்தை இறக்கினார்கள்.

“சாமி பாடயை திருப்பி போடுங்க, சரி கோழி எங்க சாமி” என்றான் மாசானம். அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

“நான் அப்பவே நனச்சன்பா” என்றார் பெரியவர்.

“நனச்சா சொல்ல வேண்டியது தான” என்றான் ஒரு சிறுசு.

“என்ன சாமி சனி களம செத்தா ஒரு கோழி பாடையில கட்டினு வரணும் தெரியாதா, சனி பொணம் தனியா போவாதுன்னு சொல்லுவாங்க, உங்க வீட்டு ஆளுங்க நல்லதுக்கு தான் சொல்றேன் சாமி, கோழிய அறுக்கும் போதே அந்த தீட்டும் போய்டும், சரி பரவாயில்லை வெளிய நம்ம ஆளு கட இருக்கு போய் யாராவது வாய்யினு வாங்க” என்று அதற்க்குள் குழி தோண்டி முடித்தான்.

கோழியும் வந்தது சாங்கியம் அனைத்தும் செய்து விட்டு, அந்த கோழியை இறந்தவரின் கால் பக்கத்தில் வைத்தான், அப்புறம் எட்டு கட்டையில் அலங்கோலமாக ஒரு பாடலை இறந்தவருக்காக பாடி கோழியின் உயிரையும் வழித்துணையாக அனுப்பினான். கோழியை அறுத்து ரத்ததை குழி சுற்றி தெளித்தான். ரங்கா மண்ணை தூவினான், அனைவரும் கடைசியாக முகத்தை பார்த்தார்கள். மாசானம் மண்னை குழியில் தள்ளிக் கொண்டு கடைசியில் அந்த அறுபட்ட கோழியையும் மேலே புதைத்தான். அனைவரும் கற்பூரம் ஏற்றி விட்டு நகர்ந்து போக ஆரம்பித்தனர்.உடனே மாசானம்

“எல்லாரும் எதாவது காசை அந்த அரிசித்துணில போட்டு, அப்படியே திருப்பி பாக்காம போங்க சாமி” என்றான்.

ரங்கா தேம்பி தேம்பி அழுதுக் கொண்டு சென்றான் அனைவரும் அவனை சமாதானம் செய்துக் கொண்டே சென்றனர். மாசானம் அதையே அவர்கள் போகும் வரை பார்த்துக் கொண்டு நின்றான், பின்பு பெருமூச்சுடன் சமாதியில் சில்லரையுடன் இருந்த அரிசி துணியை எடுத்து தோளிலில் போட்டுக்கொண்டு, மேலாக புதைக்க பட்ட கோழியை தோண்டி எடுத்து மண்னை உதறிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்.

*******************************************முற்றும்*****************************************************

மதி
22-10-2008, 04:25 PM
அழகாக செதுக்கப்பட்ட கதை மூர்த்தி. இதுவரை அதிகம் பழக்கப்படாத களம் மயாணம். காட்சி வர்ணனைகளும்... ஏனைய விவரிப்புகளும் தாங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என காட்டுகிறது...

வாழ்த்துகளும் பாராட்டுக்களும்

இன்னும் பல சிறந்த படைப்புகளைத் தந்து மன்றத்தில் பங்காற்றுங்கள்...

ரங்கராஜன்
22-10-2008, 04:55 PM
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஐயா, நான் எழுதிய முதல் கதை இது. உங்களின் வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தை தருகிறது.

அமரன்
22-10-2008, 06:58 PM
களம், உரையாடல்,கதைமாந்தர் என் எல்லாவற்றிலும் யதார்த்தம் மிகுந்துள்ளது. மதி சொன்னதைப் போல தேர்ந்த கதாசிரியர் ஒருவர் நமக்குக் கிடைத்துள்ளார். மாசாணங்களின் வாழ்க்கை வண்ணத்தை கணமேனும் எண்ணிப் பார்ப்பார்கள் வாசகர்கள். பாராட்டுகள் மூர்த்தி.

Narathar
23-10-2008, 03:29 AM
இது உங்கள் முதல்கதை என்பதை
நம்ப மறுக்கின்றது என் மனது...
என்னவொரு அருமையான கதை....
அதுவும் கதைக்களம் இருக்கின்றதே..
பாலா படம் பார்த்ததைப்போல ஒரு உணர்வு
அச்த்திவிட்டீர்கள்

தொடருங்கள்

சிவா.ஜி
25-10-2008, 06:23 AM
எதார்த்தம் மிகுந்த கதை. அதுவும், அந்த ஆபீஸரின் பாத்திரப்படைப்பு வெகு இயற்கையாக இருக்கிறது. மாசானத்தின் பேச்சும் செய்கையும் கவனிக்க வைக்கிறது. கதைக் களன் புதிது, சொன்னவிதம் அருமை. நல்லதொரு கதைசொல்லி நமக்கு கிடைத்திருக்கிறார். வாழ்த்துகள் மூர்த்தி.

ரங்கராஜன்
30-12-2008, 09:37 AM
வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

MURALINITHISH
30-12-2008, 09:58 AM
நம் மூர்த்தியின் முதல் கதையா முதல் கதையே முடியும் இடத்திலா பேஸ் பேஸ் சபாஸ் உங்கள் துணிச்சலுக்கு கதையின் களம் வித்தியாசம் அதில் கடைசியில் வரும் வரிகள் யதார்த்தாம்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
30-12-2008, 11:10 AM
வழித்துணையாக செல்ல தீர்மானிக்கப்பட்டு புதையுண்ட கோழி, பின்பு மாசாணத்தின் சட்டியில் வெந்துகொண்டிருக்க, நாமோ சனிப்பிணம் தனியா போகாதென்று சம்பிரதாயங்களை உருவாக்கி, பின்பு அதை மாற்ற முடியாமல் தடுமாறுகிறோம். சமுதாயத்துக்கு சாட்டையடி தந்த கதை. எல்லோரையும் கவர்ந்த கதை. பாராட்டுக்கள்.

ரங்கராஜன்
31-12-2008, 08:57 AM
வழித்துணையாக செல்ல தீர்மானிக்கப்பட்டு புதையுண்ட கோழி, பின்பு மாசாணத்தின் சட்டியில் வெந்துகொண்டிருக்க, நாமோ சனிப்பிணம் தனியா போகாதென்று சம்பிரதாயங்களை உருவாக்கி, பின்பு அதை மாற்ற முடியாமல் தடுமாறுகிறோம். சமுதாயத்துக்கு சாட்டையடி தந்த கதை. எல்லோரையும் கவர்ந்த கதை. பாராட்டுக்கள்.

நன்றி நண்பரே
ஆனால் நீங்கள் கூறுவது போல சமுதாயத்திற்க்கு சாட்டை அடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லாம் நான் இந்த கதையை எழுதவில்லை. இந்த கதையின் கரு இடுகாடு என்பது வேறு ஒரு உலகம், வாழ்க்கையில் தெய்வமாக மதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அங்கு வேறு சடலங்களாக பார்கப்படுகிறார்கள், ஒரு சிலரை தவிர கடைசியாக சடலத்தை தூக்கி குழியில் வைக்க கூட சுற்றி இருக்கும் கூட்டத்தினர் யாரும் வருவதில்லை (காரணம் பிணத்தில் இருக்கும் கிருமிகள் நம் உடம்பில் தொத்திக் கொள்ளுமாம்!!!!!!!!!). அப்புறம் அங்கு இருக்கும் வெட்டியான் என்னை மிகவும் கவர்ந்தவர்கள். ஒரு கிராமத்து சொல் இருக்கு

“சுடுகாட்டுல அழுறவனோட வலி
வெட்டியானுக்கு எப்படி புரியும்” ன்னு சொல்லுவாங்க.

அப்படி ஒரு கருவைப்பற்றியது தான் இந்த கதை, நம்முடைய மூடநம்பிக்கைகளால் இல்லாதவன் ஒருவனுக்கு எட்டாத ஒன்று கிடைக்கும் என்றால் என்னை பொறுத்த வரை மூடநம்பிக்கையும் சரி தான்.

நன்றி.

Mathu
05-01-2009, 05:42 PM
எனக்கு தெரிந்து மிகவும் சிக்கலான கதை களம் இது
இதில் இதனை தெளிவாக அத்தனை பாத்திரங்களின்
தன்மையையும் படைத்திருக்கும் மூர்த்தி
நிச்சயம் ஒரு தேர்ந்த எழுத்தாளர்

Mano.G.
06-01-2009, 01:11 AM
நம்ம சமூதாயத்தில் இறப்பிலும் ,
கல்யாணத்திலும் தான் சாங்கியம் சடங்கு
என பேசி நடக்கும் காரியத்தை குழப்பி விடுவார்கள்,
"சனி பொணம் தனியா போவதுன்னு" எதற்கு யார் சொன்னதென்று
தெரியாது ஆனால் மாசானம் வீட்டில் இன்று கோழி கறி.

அருமை தம்பி டாக்ஸ், வாழ்த்துக்கள்
மேலும் உங்கள் சிறுகதைகளை எதிர்பார்க்கிரேன்.


மனோ.ஜி

samuthraselvam
03-03-2009, 11:21 AM
மயானத்தைப் பற்றிய விமர்சிப்பு அப்படியே கண் முன் காட்சிகளாக விரிகிறது..

“சுடுகாட்டுல அழுறவனோட வலி
வெட்டியானுக்கு எப்படி புரியும்” இந்தப் பழமொழிக்கு அர்த்தம் இந்தக் கதை படித்தபின் தான் தெரிகிறது...

பூமகள்
19-03-2009, 07:32 AM
கதையின் பின்புலம்... கதாப்பாத்திரங்கள்... பேச்சு நடை என எல்லாமே கதையில் நம்மை கட்டிப் போடுகிறது..

கண் முன் காட்சிகள் விரிகின்றன...

மிகக் கடினமான களம்... முதற்கதை இதுவெனில்.. தக்ஸ்.. நிச்சயம் சொல்வேன்.. நீங்கள் சிறந்த கதாசிரியர் தான்... விருதுகள் உங்களைத் தேடி வரும் காலம் தூரத்தில் இல்லை..

புத்தகமாக சிறுகதைத் தொகுப்பு ஏதேனும் வெளியிட்டிருக்கிறீர்களா??

வாழ்த்துகள் தக்ஸ்.. தொடர்ந்து எழுதுங்கள்... !! :)

ரங்கராஜன்
19-03-2009, 08:00 AM
கதையின் பின்புலம்... கதாப்பாத்திரங்கள்... பேச்சு நடை என எல்லாமே கதையில் நம்மை கட்டிப் போடுகிறது..

கண் முன் காட்சிகள் விரிகின்றன...

மிகக் கடினமான களம்... முதற்கதை இதுவெனில்.. தக்ஸ்.. நிச்சயம் சொல்வேன்.. நீங்கள் சிறந்த கதாசிரியர் தான்... விருதுகள் உங்களைத் தேடி வரும் காலம் தூரத்தில் இல்லை..

புத்தகமாக சிறுகதைத் தொகுப்பு ஏதேனும் வெளியிட்டிருக்கிறீர்களா??

வாழ்த்துகள் தக்ஸ்.. தொடர்ந்து எழுதுங்கள்... !! :)

நன்றி பூமகள்

என்ன தான் தாய்க்கு எல்லா குழந்தைகள் மீது அன்பு இருந்தாலும் முதல் குழந்தை மீது கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். அப்படி தான் எனக்கும் என்னுடைய முதல் குழந்தை இந்த வழித்துணை. எதோ விளையாட்டு தனமாக எழுதியது இந்த அளவுக்கு பெயர் வாங்கித்தரும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இந்த கதையின் கருவை என்னுடைய நெருங்கிய நண்பன் ஒருவனிடமும், அவன் அண்ணன் ஒருவரிடமும் சொன்னேன், இரவு 12 அல்லது 1 மணி இருக்கும் அப்ப தான் இந்த கதையை சொன்னேன், அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள் எந்த சலனமும் இன்றி, கடைசியில் கதையின் முடிவை சொன்னேன். இருவரின் கண்களிலும் பிரகாசம் தெரிந்தது, கடைசி சூப்பராக இருக்குடா என்றார்கள். இந்த கதையின் நாயகனே கடைசியாக வரும் வெட்டியான் தான் என்றார்கள். என் குழந்தை பிறந்த கதை இது தான்.

நான் இன்னும் சிறுகதை புத்தக எல்லாம் போட்டது இல்லை, நான் கதை எழுத ஆரம்பித்ததே, நான்கு மாசம் முன்பு தான். அதற்குள் எங்கு இருந்து புத்தகம் போடுவது. என் கதைகளை எழுதியவுடன் நம் மன்றத்தில் தான் பதித்து வருகிறேன். அதுவே எனக்கு பெருமையாக தான் இருக்கிறது.

பா.ராஜேஷ்
19-03-2009, 10:01 AM
நண்பா!, முதல் கதையிலே அருமையாக
முத்திரையை பதித்திருக்கிராயே!
பாராட்டுக்கள்! !