PDA

View Full Version : காக்கையில் ஒரு வாழ்க்கை.அமரன்
22-10-2008, 06:54 AM
உடும்பு பிடிக்க
தொடங்காத பருவத்தில்
பப்பாளிப் பாதங்களை
கிள்ளிப் பார்க்கும்.

கையிருக்கும் அப்பளத்தை
வெடுங்கென்று பிடுங்கிச்சென்று
சோறூட்டும் அம்மாவுக்கு
ஒத்தாசை புரியும்.

சாளரத்தில் சாய்ந்திருக்கும்
மரக்கிளை மீதமர்ந்து
கரைந்து
என்னுறக்கம் கலைத்து
பள்ளிக்கு அனுப்பி வைக்கும்.

வீட்டுக்கு வரும்போது
படலையில் காத்திருந்து
சிறகடித்து வரவேற்கும்.

நான் விரதமிருக்கையில்
வழமைக்கு மாறாக
கூரையில் முதற்பந்திக்காய்
தவம் கிடக்கும்.

என் மூக்கடியில் தன்னிறம்
அரும்பத் தொடங்கிய பின்
எட்டி நிற்கும் என்னை
ஓரக்கண்ணால் ரசிக்கும்.

தந்தையை இழந்த நான்
இன்றுவரை நம்புகிறேன்
காகத்துள் கூடு பாய்ந்து
எந்தைதான் வாறாரென்று!

shibly591
22-10-2008, 06:59 AM
வித்தியாசமான தளமொன்றின் வழியாக பாசத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..

வெளிப்படுத்திய விதம் அற்புதம்..

நெஞ்சை நனைக்கும் கருப்பொருளில் கொஞ்ச நேரம் மனசு ஒன்றிப்போகிறது..

வாழ்த்துக்கள்

சிவா.ஜி
22-10-2008, 07:13 AM
முன்னோர்களை காக்கையின் உருவில் காண்பது காலங்காலமாய் நடைபெற்றுவரும் வழக்கம். பாசமான அப்பாவை காக்கைக்குள் பொருத்தி கவி பாடிய வரிகள் அனைத்துமே அழகு. பிரமாதமான சொல்லாடல், சொல்லியக் கருத்தில் நான் காணும் பிரமிப்பு.

என் மூக்கடியில் தன்னிறம்
அரும்பத் தொடங்கிய பின்
எட்டி நிற்கும் என்னை
ஓரக்கண்ணால் ரசிக்கும்.

அழகான வரிகள்..........அப்பாவின் அந்தப் பார்வையை காட்சிப்படுத்திய வரிகள்.


மிக அருமை அமரன். வாழ்த்துகள்.

பாபு
22-10-2008, 09:18 AM
மிக அருமை !!

தீபா
22-10-2008, 09:24 AM
நவீன காக்கைப்பாட்டாரே!!!!

காகங்கள் நமக்கு பல பாடங்கள் கற்றுத்தருகின்றன. அதிலொன்று, ஒற்றுமை...

ஒற்றுமை மட்டும் இருந்தால் இந்நாடு மட்டுமல்ல, இவ்வுலகிற்கே சுதந்திரம் கிட்டுமே!!! வாழ்த்துக்கள் அமரன் சார். அருமையான தளம்...

நதி
22-10-2008, 09:26 AM
கவிதைக் கடை இப்படி இருக்கலாமோ.

உங்கள் தெருவிலும்
ஏதோ ஒரு காக்கையோ
எவனோ ஒருவனோ
இப்படி இருக்கக் கூடும்.
தயவுசெய்து யாரும்
கலைத்து விடாதீர்கள்!

சுகந்தப்ரீதன்
22-10-2008, 10:12 AM
நேச உறவுகளின் நினைவாக பெயர்சூட்டி மகிழ்தல் ஒருவகை என்றால் அவர்களை உருவகப்படுத்தி உற்சாகமடைவது இன்னொரு வகை.. நீங்கள் இரண்டாம் வகையில் இணைந்திருக்கிறீர்கள் அமரண்ணா..!!

நம்பிக்கைத்தானே எப்போதும் மனதுக்கு இதத்தை தருகின்றன.. தங்களின் நம்பிக்கையும் தொடர வாழ்த்துக்கள்..!!

பாரதி
22-10-2008, 10:41 AM
ரொம்ப நல்லா இருக்கு அமரன்!

காக்கையில் ஒரு வாழ்க்கை.
இத்தகைய நிகழ்வுகளை அடை
காக்கையில் ஒரு வாழ்க்கை.

தீபா
22-10-2008, 10:48 AM
கவிதைக் கடை இப்படி இருக்கலாமோ.

உங்கள் தெருவிலும்
ஏதோ ஒரு காக்கையோ
எவனோ ஒருவனோ
இப்படி இருக்கக் கூடும்.
தயவுசெய்து யாரும்
கலைத்து விடாதீர்கள்!

யதார்த்தத்திற்கு ஒத்துவராது..... என்னிடம் இரண்டு சம்பவங்கள் உண்டு..

1. குளிரில் நடுநடுங்கி, ஒரு மரப்பொந்தில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு காக்கைக் குஞ்சை எடுத்து விடச் சென்றதில் என் கையில் ஒரு கொத்து..... தாய் காகம் ஈவிரக்கம் இல்லாமல் கொத்திட்டது... சரி அது அறிவு கம்மி.... விடுங்க.. ஆனா அதிலிருந்து எனக்கு அதைக் கண்டால் பிடிப்பதில்லை..

2. கூட்டமாக எங்கள் வீட்டருகே கூப்பாடு போட்டிருந்த காகங்களை விரட்ட விரட்ட, கொத்து கொத்தாக வந்தன.. காரணம் அறியமுடியவில்லை.. ஆனால் காதில் நாராசம்.. அவை கரைவது எம் செவிகளுக்குப் பிடிக்கவில்லை..

யாருக்கும் காக்கையைப் பிடிக்காது சார்... ஆனால் பித்ருக்கள் என்று மட்டும் சொல்லத் தெரியும்..

இது இரண்டு வகையிலும் பொருந்தும்.. :)

ஓவியன்
22-10-2008, 10:58 AM
அமரா எனக்கு ஒவ்வொரு
காகங்களும் இதுவரை,
அவற்றை ஏமாற்றி, ஏய்த்து
தன் இனம் பெருக்கும் குயில்களையும்,
தினம் கிடைக்கும் நீரிலாவது
குளித்து தன் தூய்மை பேணும் குணத்தையும்,
கரு நிறக் கோழிச் சிறகு
உதிர்ந்துகிடந்தாலும் தன் தோழனென எண்ணிக்
கூடி வந்து ஒப்பாரி வைக்கும் பண்பையும்,
கழிவுகளை உணவாக்கி
சுற்றுப் புறச் சூழலை தூய்மையாக்கும் திறனையும்
ஞாபகமூட்டி வந்தன...

இன்று முதல் அவை உங்களது இந்தக்
கவிதையையும் ஞாபகமூட்டி வரும்..!!

இளசு
24-10-2008, 08:19 PM
அடைகாக்க எத்தனை நினைவுகள்.. நம் வாழ்வில்..

காக்கைக் குறியீடு கிளறிய இந்நினைவு வரிசை...
அமரனின் பார்வைப் பதிவின் சாட்சியாய்..

ஓவியன் சொன்னதுபோல்..எனக்கும்
இனி காக்கைகள் காட்சி
இக்கவிதையை மீட்டுத் தரும்..


அபரிதப் பாராட்டுகள் அமரா..

அமரன்
25-10-2008, 08:40 AM
காக்கையின் கத்தலுக்கு செவிசாய்த்த அனைவருக்கும் நன்றி! எனக்கு நல்ல தீனி கிடைத்தது.

நான் பெரிதும் மதிப்பவர்களில் ஒருவரின் பொற்கிளியைப் பெற்றுத்தந்த இந்தக்கவிதையும் என்னால் அடைகாக்கப்படும் வரிசையில்..