PDA

View Full Version : தேவை சில சுத்திகரிப்பான்கள்..!!!



சிவா.ஜி
21-10-2008, 12:08 PM
சொன்னதை செய்யென நிர்பந்திக்கப்பட்டு
தின்னதை செரித்துக்கொண்டு
பின்னதை யோசிக்கா பெருங்கூட்டம்....
முன்னவன் சொன்னதை ஏற்று
என்ன அவன் சொன்னானெனவும் சிந்திக்காத
மன்னவன் அடிமைகளாய்
மண்னிதன் மேல் அலையும் நடைப்பிணங்கள்....


குஷ்டரோகியின் விரல்களைப்போல
மத ரோகிகளின் குறை இதயங்கள்..
மறை வார்த்தைகளுக்கு
மாற்றுப் பொருள் கற்பித்து,
இறைவெறி கொண்டு, சார்ந்த
இனம் அழிக்கும் ஈனங்கள்......


விளைவித்தவனின் வியர்வையை
விலைபேசி வளம் கொழிக்கும்
இடைத் தரகரைப் போல
இல்லா இறைவனின்
அருள் வாங்கித் தருவதாய் சொல்லி
பொருள் சேர்க்கும்
பொல்லா இறைத்தரகர்கள்.....


இவர்களைப்போல.....
சிதைந்த சடலம் சுமக்கும்
பிணந்தூக்கியாய் அலைவதில் விருப்பமில்லை
மரணித்த மதத்தை முதுகில் சுமக்கும்
மடத்தனத்தில் சம்மதமில்லை


படபடத்து எரியும் சுடலையில் கருகும்
மனிதத்தைக் காண மனமில்லை
விதிர்விதிர்த்து விழிக்கும்
சாமான்ய மக்களின் அன்றாட
அவலம் காண அவகாசமில்லை....

உடனடித் தேவை....

உள்ளுக்குள் சங்கடம் தரும்
மதம் விலக்க...
மதமிளக்கி வில்லைகள்...


கஷ்டப்பட்டேனும் கழுவ வேண்டும் இந்த
கடவுளின் கறைகளை...
அதற்குக் கொஞ்சம்
உள்சுத்தி அமிலமும்....
உற்பத்தி செய்ய வேண்டும் உடனே.....


உலகின் மதம் விரும்பா மனிதர்கள்,
இன பேதமில்லா இதயங்கள்,
இன்றே ஒன்று சேர வேண்டும்
ஒன்றே ஒன்றை செய்யவேண்டும்...

மத நேயர்களால்
மனிதநேயமழியாமல் காக்க வேண்டும்...!!

சுகந்தப்ரீதன்
21-10-2008, 12:41 PM
மத நேயர்களால்
மனிதநேயமழியாமல் காக்க வேண்டும்...!!என்ன கொடுமையண்ணா இது.. மனிதனை நெறிப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட மதத்திடமிருந்தே இன்று மனிதனை காக்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறதே..??

இக்கவிதையில் சொற்களின் ஆளுமை கவிதைக்கு பலம் சேர்க்கிறது.. வாழ்த்துக்கள் சிவா அண்ணா..!!

சிவா.ஜி
21-10-2008, 12:49 PM
அதேக் கொடுமைதான் சுபி என்னை ஆத்திரப்படுத்துகிறது. தேவையற்ற மதத்தை பிணங்களைப் போலத் தூக்கித் திரியும் அவ(ல)ர்களைக் காணும்போது கோபம் வருகிறது. நன்றி சுபி.

poornima
21-10-2008, 01:10 PM
மதம் இருக்கட்டும் - அது அவசியம்
மதம் பிடிக்காது பார்த்துக் கொள்வது மட்டுமே முக்கியம்.

//குஷ்டரோகியின் விரல்களைப்போல
மத ரோகிகளின் குறை இதயங்கள்..
//
இதற்கு மேல் ஒப்புமை தேவையில்லை என்று நினைக்கிறேன்.

//உலகின் மதம் விரும்பா மனிதர்கள்,
இன பேதமில்லா இதயங்கள்,
இன்றே ஒன்று சேர வேண்டும்
ஒன்றே ஒன்றை செய்யவேண்டும்...
//

இன்றைய இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த பிரார்த்தனை இது
மட்டுமாகத் தான் இருக்க முடியும்..

நன்றி சிவா.ஜி.. உங்கள் சுத்திகரிப்பான்களோடு முற்றிலும்
உடன்படுகிறேன்..

பாரதி
21-10-2008, 01:12 PM
ஒன்று மட்டும் உண்மைதான் சிவா...

போலியான அல்லது வெறித்தனமான மத நம்பிக்கை உள்ளவர்களால்தான் மனித நேயத்திற்கு பங்கம் விளைகிறது.

மனிதத்தை நேசிப்பவர்கள் மாற்று மதத்தையும் சரி, மதமில்லாதவரையும் சரி... நிச்சயம் நேசிப்பார்கள்.

ஆங்காங்கே நடந்து வரும் வன்முறைகளைக் கண்டு மனம் சஞ்சலமடைகிறது.

உங்கள் அமில வார்த்தைகளில் 'மதம்' அழிந்து போகட்டும்.

பாராட்டு சிவா.

அறிஞர்
21-10-2008, 01:15 PM
மதம் பிடித்த யானைகளிலிருந்து விடுதலை தேவை....

பாரதி சொல்வது போல் போலித்தனமான, குருட்டுத்தனமான மதமே பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.

பிச்சி
21-10-2008, 01:45 PM
சொற்களால் சுயமிழந்தேன் அண்ணா. கருத்தினால் அதை மீட்டேன். அழகிய கவிதை இது.

@@பிச்சி :)

சிவா.ஜி
22-10-2008, 06:01 AM
[quote=poornima;387285]
இன்றைய இந்திய தேசத்தின் ஒட்டு மொத்த பிரார்த்தனை இது
மட்டுமாகத் தான் இருக்க முடியும்..
quote]

பிரார்த்தனைகளுடன் சில பிரயத்தனங்களும் மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் நாமிருக்கிறோம் சகோதரி. இன்றைய இளம் தலைமுறைகளுக்கு அதில் ஈடுபாடு இருப்பது குறித்து மிக மகிழ்ச்சி.

பின்னூட்ட ஊக்கத்துக்கு மிக்க நன்றி பூர்ணிமா.

சிவா.ஜி
22-10-2008, 06:04 AM
ஒன்று மட்டும் உண்மைதான் சிவா...

போலியான அல்லது வெறித்தனமான மத நம்பிக்கை உள்ளவர்களால்தான் மனித நேயத்திற்கு பங்கம் விளைகிறது.


வெகு சத்தியமான வார்த்தைகள் பாரதி. அந்த வெறிதான் அவர்களை நெறி பிறழச் செய்கிறது. மனிதம் தழைக்க அவர்களையும் மனிதர்களாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது.

உங்களின் ஆழமான பின்னூட்டத்துக்கும், அன்பளிப்புக்கும் மிக்க நன்றி பாரதி.

சிவா.ஜி
22-10-2008, 06:06 AM
மதம் பிடித்த யானைகளிலிருந்து விடுதலை தேவை....

பாரதி சொல்வது போல் போலித்தனமான, குருட்டுத்தனமான மதமே பிரச்சனைக்கு வழி வகுக்கிறது.
ஆம் அறிஞர். அந்தக் குருட்டுத்தனத்துக்கு வைத்தியம் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. குளிகையோ அல்லது அறுவையோ...சிகிச்சை அவசியம்.

மிக்க நன்றி அறிஞர்.

சிவா.ஜி
22-10-2008, 06:07 AM
சொற்களால் சுயமிழந்தேன் அண்ணா. கருத்தினால் அதை மீட்டேன். அழகிய கவிதை இது.

@@பிச்சி :)
மனம் நிறைந்த நன்றி தங்கையே. ஒரு தேர்ந்த கவிதாயினியின் பாராட்டைப் பெற்றதில் மகிழ்ச்சி.

shibly591
22-10-2008, 06:53 AM
அழகான சொல்லாடல்..

ஆழமான கருத்து

சிந்திக்கவைக்கும் கேள்விகள்..

அற்புதமான கவிதைக்கு நன்றிகள் சிவா.ஜி

சிவா.ஜி
22-10-2008, 07:08 AM
நல்லதொரு கவிஞனின் நல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஷிப்லி.

shibly591
22-10-2008, 07:12 AM
நல்லதொரு கவிஞனின் நல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஷிப்லி.

நன்றிகள் சிவா.ஜி

kavitha
31-12-2008, 08:56 AM
மதத்தின் சாரத்தை சரியாக புரிந்துகொள்ளாதவர்களால் தான் பிரச்சனையே. அத்தகையோர் இதை கண்டால் குறுக வேண்டும்.ஆணித்தரமான கவிதை அண்ணா.

சசிதரன்
31-12-2008, 09:10 AM
ஆழ்ந்த கருத்துள்ள வரிகள்... மிக அருமையான சொல்லாடல்... அவசியமான ஓர் தேவையை வலியுறுத்தும் கவிதை... அருமை சிவா அண்ணா...:)

சிவா.ஜி
31-12-2008, 10:00 AM
மதத்தின் சாரத்தை சரியாக புரிந்துகொள்ளாதவர்களால் தான் பிரச்சனையே. அத்தகையோர் இதை கண்டால் குறுக வேண்டும்.ஆணித்தரமான கவிதை அண்ணா.

அதேதாம்மா....என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாமல் வேற்று அர்த்தம் கற்பித்து, மாற்றுமதத்தை வெறுப்பவர்கள் திருந்தவேண்டுமென்பதே நமது விருப்பம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கையைக் காண்பதில் மகிழ்ச்சி. ரொம்ப நன்றிம்மா.

சிவா.ஜி
31-12-2008, 10:02 AM
ஆழ்ந்த கருத்துள்ள வரிகள்... மிக அருமையான சொல்லாடல்... அவசியமான ஓர் தேவையை வலியுறுத்தும் கவிதை... அருமை சிவா அண்ணா...:)

மன்றத்தின் இளங்கவி....திறனில் முதுகவி, சசியின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

நாகரா
31-12-2008, 02:01 PM
மனித விசாலத்திலிருந்து
நீ மனங்குறுகி வெளியேறி
மத வெறியில் சிக்கி
வன்பில் சீரழியும்
மனிதா!
[மனிதம்-னி(நீ குறுகல்)=மதம்]
மன இதமே[மனிதம்=மன+இதம்)
நின் மதமாக
அன்பெனும் இறைக்குள்
நீ
மனந்திரும்பி
மனித விசாலத்தை
மறுபடி சேர்!

மதத் தரகர்களின்
நெற்றியில்
சுத்தியடிகளாய்
விழும் உம் கவி வரிகள்
உறங்கும் மனிதத்தை
எழுப்பும் சுடு கதிர்கள்!

வாழ்த்துக்களும் பாராட்டும் சிவா.ஜி அவர்களே!